ஒரே ஊரில் ரவி மற்றும் குமார் என்ற இரண்டு காப்பீட்டு ஆலோசகர்கள் இருந்தனர். இருவரும் ஒரே வகையான பாலிசிகளையே விற்பனை செய்தனர்.

ரவி, தனது நேரத்தின் பெரும்பகுதியை குமாரின் குறைகளை வாடிக்கையாளர்களிடம் கூறுவதிலேயே செலவிட்டார்.

“அவரிடம் பாலிசி எடுக்காதீர்கள்; அவர் கமிஷனுக்காக மட்டுமே வேலை செய்கிறார்” என்று அடிக்கடி கூறி வந்தார்.”

ஆனால் குமார், ரவியைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவையையும் கவனமாகக் கேட்டு, அவர்களுக்கு ஏற்ற பாலிசியை விளக்கி, பாலிசி எடுத்த பிறகும் தேவையான உதவிகளை தொடர்ந்து செய்து வந்தார்.

ஆரம்பத்தில் சிலர் ரவியின் பேச்சை நம்பினர். ஆனால் காலப்போக்கில் உண்மை வெளிப்பட்டது. குமார் தனது சேவையாலும் நேர்மையாலும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றார். வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அவரையே பரிந்துரைக்கத் தொடங்கினர்.

அப்போதுதான் ரவிக்குப் புரிந்தது. பிறரிடம் குறை தேடுவதில் செலவிட்ட நேரத்தைத் தன் பணியில் செலவிட்டிருந்தால், தானும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கலாம். குமாரின் நேர்மையைக் காலம் வெளிக்காட்டியது. அதற்குச் சாட்சியாக இருந்தவை அவரது செயல்களே.
– நா. பார்வதி
#தமிழ்சிறுகதை #நேர்மையின்வலிமை #செயல்பேசும் #நம்பிக்கையின்மதிப்பு #Maisaaral #pesummai #thigazhyatheatre





 ஒரு சிறிய கிராமத்தில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். அருண் மற்றும் குமார். இருவரும் ஒரே பள்ளியில் படித்தாலும், அருணுக்கு எப்போதும் “நான் தான் சிறந்தவன்” என்ற எண்ணம் இருந்தது.

ஒரு நாள் பள்ளியில் பேச்சுப் போட்டி நடந்தது. குமார் மிக அழகாகவும் தெளிவாகவும் பேசினான். அனைவரும் அவனை பாராட்டினார்கள். இதைப் பார்த்த அருணுக்கு பொறாமை வந்தது.

அடுத்த நாள் வகுப்பில் அருண்,

“குமார் பேசுவது எல்லாம் ஒரு பேச்சா? ஏதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தில் ஜெயித்து விட்டான்” என்று மற்றவர்களிடம் சொல்லத் தொடங்கினான்.

அருண் பேச்சில் மயங்கிய சிலர் அதை நம்பத் தொடங்கினர், ஆனால் பெரும்பாலோர் அருணின் வார்த்தைகளில் உண்மை இல்லை என்பதை உணர்ந்தார்கள்.

ஆசிரியர் இதைக் கவனித்தார். இருவரையும் அழைத்து பேசினார். குமாரிடம், “நீ உன் திறமையால் பேசினாய்” என்று பாராட்டினார்.

பின்னர் அருணிடம், “மற்றவரை குறைத்து பேசுவதால் நீ உயர்ந்தவன் ஆக மாட்டாய். அது உன் குணத்தையே காட்டும்” என்றார்.

அந்த வார்த்தைகள் அருணை சிந்திக்க வைத்தன.  

அதன் பிறகு அருண் புரிந்துகொண்டான்:

ஒருவரை தாழ்த்தி தன்னை உயர்த்த நினைத்தால்,

உயர்வது தன்னுடைய நிலை அல்ல,

தன் தரம் தான் வெளிப்படும்.

அவன் அமைதியாகி, பிறகு குமாரின் திறமையை உண்மையாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கினான்.

-நா. பார்வதி

#மையின்சாரல்கள் #Pesummai #thigazhyatheatre #tamilshortstories #தமிழ்கதைகள்

ஒரு சிறிய விதை மண்ணில் விழுந்தது.

“இது எங்கிருந்து மரமாக வளரப்போகிறது?” என்று சிலர் சிரித்தார்கள்.

“இதற்கு தண்ணீர் ஊற்றினால் என்ன பயன்?” என்று சிலர் விலகிச் சென்றார்கள்.

ஆனால் சூரியன் தினமும் ஒளி கொடுத்தான்.

மழை அமைதியாக நீர் தந்தது.

மண் அந்த விதையைத் தாங்கிக் கொண்டது.

நாட்கள் கடந்தன.

விதை முளைத்தது.

சிறு செடியாக வளர்ந்தது.

அப்போது, முன்பு கவனிக்காத பலர் அச்செடியிடம் வந்து,

“எவ்வளவு அழகான செடி!” என்று பாராட்டத் தொடங்கினர்.

காலம் செல்லச் செல்ல அது பெரிய மரமாகியது. அதன் நிழலில் பலரும் ஓய்வெடுத்தனர். அதன் கனிகளை பலரும் சுவைத்தனர்.

அப்போது அந்த மரம் மனதில் நினைத்தது…

“நான் விதையாக இருந்தபோது என்னை நம்பாதவர்களை நினைத்து நான் வருந்தவும் இல்லை. மரமாக வளர்ந்தபின் நான் பெற்றுவரும் பாராட்டுகளில் மயங்கவும் இல்லை. என்னைத் தாங்கிய மண்ணையும், உயிர் தந்த மழையையும், ஒளி தந்த சூரியனையும் மட்டும் என்றும் நான் மறக்கவில்லை… மறக்கவும் மாட்டேன்.”

-நா. பார்வதி

#மையின்சாரல்கள் #Pesummai #thigazhyatheatre #tamilshortstories #தமிழ்கதை

எலிகள் வாழ்ந்து வந்த ஒரு வீட்டில், பல ஆண்டுகளாக ஒரு பூனை ஆட்சி செய்து வந்தது. சில அதிருப்திகள் இருந்தாலும்,

“இது தான் நிலைத்தன்மை… குறை இருந்தாலும் பழக்கமான பூனை ஆட்சியே நல்லது!”

நல்லது பத்து கெட்டது நாலுன்னு கணக்கு கூட்டி கழிச்சு பார்த்ததுல… பூனை ஆட்சியே தேவலாம் என்று சில எலிகள் தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தன.

ஆனால் காலம் மாறியதும்,

“மாற்றம் வேண்டும்!” என்ற கோஷம் எழுப்பப்பட்டது.

உடனே பலவற்றை ஆராய்ந்து பேச்சுவார்த்தையை மேற்கொண்ட எலிகள்,

“பூனை ஆட்சி முடிவுக்கு வரவேண்டும்!”

“ஒவ்வொரு எலிக்கும் பாதுகாப்பு வேண்டும்!”

“கஷ்டப்படாமல் இஷ்டம் போல் இலவச தீனி – எப்போதும் வேண்டும்!”

அப்போது எல்லா எலிகளும் ஒரு புதிய ஆசையை பகிர்ந்து கொண்டன:

“பூனை வேண்டாம் ஆனால் ஒரு புதிய அமைப்பு வேண்டும்!
பூனைக்கு எலிப்பொறியே தேவலாம்!”

என்று சொல்லி முடித்ததும்…அந்த நேரம் பார்த்து, அவற்றின் கிரக தேவதை,

“ததாஸ்து!”

என்றவுடன், பூனை மறைந்து, அதன் இடத்தில்… பளபளக்கும் பெரிய எலிப்பொறி தோன்றியது. அதன் வாயிலில் ஒரு பெரிய வடையும் ஜொலித்தது.

அதைப் பார்த்த எலிகள் மகிழ்ச்சியில் ஆடிப்போயின:

“மாற்றம் வந்துவிட்டது!”

“ஆசை நிறைவேறி விட்டது!”

“பாதுகாப்பும் + சாப்பாடும்! ஆஹா டபுள் பெனிபிட்!”

என்று கொண்டாடிக் கொண்டு கூட்டமாக ஓடின.

அடுத்த கணம் “டக்!”, எல்லா எலிகளும் பொறியில் சிக்கிக் கொண்டன.

அப்போது தான் உண்மை புரிந்தது:

“அய்யோ! பூனை இருந்தபோது ஓடிச்செல்ல வாய்ப்பு இருந்தது…”

“ஆனால் இப்போது! இருந்த இடத்தில் இருந்துக்கொண்டே நம்மை காவு வாங்கும் இந்த பொறிக்குள் அதன் பளபளப்பை மட்டுமே பார்த்து! வடைக்கு ஆசைப்பட்டு…நாமே வந்து மாட்டிக் கொண்டுவிட்டோமே!” என்று.

அந்த நேரத்தில் கிரக தேவதை தோன்றி சிரித்தபடி சொன்னாள்:

“நீங்கள் கேட்டது மாற்றம் தான்… நல்ல மாற்றமா கெட்ட மாற்றமா என்று கேட்கவே இல்லை. பூனைக்கு பதில் பொறி கேட்டீர்கள். கேட்டதை தந்தோம். தேர்வு உங்களுடையது. விளைவும் உங்களுக்கே.”

அவள் மறைந்ததும், பொறிக்குள் அகப்பட்ட அனைத்து எலிகளும் செய்வதறியாது அமைதியாக இருந்தன.
சில மணி நேரம் கழித்து, ஒரு எலி மெதுவாக சொன்னது:

“ஆமாம்! பூனையா இருந்தா என்ன!பொறியா இருந்தா என்ன! கஷ்டமும் நஷ்டமும் நமக்கு தான்! ம்…”

அதற்கு, அதன் அருகில் இருந்த இன்னொரு எலி, பொறிக்குள் சிக்காது வெளியே தவித்துக் கொண்டிருந்த எலிகளைப் பார்த்து,

“அடுத்த முறையாவது நீங்க எல்லாரும் எதையும் ஒன்றுக்கு நான்கு முறை நன்றாக யோசித்து கேட்கணும்/சொல்லணும்/செய்யணும்…”

என்று சொல்ல, அதை கேட்டுக் கொண்டிருந்த எலிகளில் ஒன்று முன்னால் வந்து:

“ஆனா… அடுத்த முறை வடை இன்னும் பெரிசா இருந்தா?”

விதி வலியது!



சில அறைகள் வலிக்காது…அவை விழிக்க வைக்கும்!

வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராகவனின் மகன் ராமு, வணிகம் மற்றும் மேலாண்மை படிப்பை முடித்து, பெரிய தொழில் நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் பணியாற்றி வந்தான்.

ராமுவின் கடின உழைப்பை அறிந்த ராகவன், தனியாக ஒரு தொழிலும் தொடங்கும் படி கூற அதற்கு ராமு…அது சம்பந்தமான படிப்பு படித்த தன்னை விட அப்பாவுக்கு என்ன தெரிந்துவிட போகிறது என்று அவரின் சொல்லை மதிக்காமல் அலட்சியம் செய்தான்.

ஒரு நாள் ராமு வேலை பார்த்து வந்த நிறுவனம் சில சிக்கல்களால் மூடப்பட்டது. செய்வதறியாது மனக்குழப்பத்துடன் வீடு திரும்பினான்.

அப்பாவின் மகிழ்ச்சி சிரிப்பொலியாக வாசலில் காலணிகளை கழற்றி வைத்துக்  கொண்டிருந்த ராமுவுக்கு கேட்டது.

ராமு வீட்டினுள் நுழைந்ததும், தெருமுனை பெட்டிக்கடை நடேசன் ஒரு சுவீட் டப்பாவை ராமுவிடம் நீட்டி…

“எல்லாம் உங்கப்பா தயவால் நடந்தது தம்பி. அவர் போல் ஒரு சிறந்த பிசினஸ் மேன் இல்லைன்னு கூட நான் சொல்லுவேன். எங்க கடைக்கு தினமும் வந்து பிசினஸ் சம்பந்தமான பல விஷயங்களையும் நுணுக்கங்களையும் பேச்சோடு பேச்சா சொல்லி கொடுத்ததுல… வர வெள்ளிக்கிழமை என்னோட புது சூப்பர் மார்க்கெட் திறப்பு விழாவுக்கு அப்பாவை தலைமை தாங்கி திறந்து வைக்கும்படி அழைக்க வந்திருக்கேன். சுவீட் எடுத்துக்கோங்க தம்பி.”

என்று சொன்னதும்…அனுபவ அறிவில் சிறந்த ராகவனை மதிக்காத மெத்த படிப்பு படித்த ராமுவின் கன்னத்தில் பளாரென்று ஓர் அறை விழுந்தது போல் இருந்தது.


♥️முற்றும்♥️
நா. பார்வதி