எலி, பூனை, பொறி

எலிகள் வாழ்ந்து வந்த ஒரு வீட்டில், பல ஆண்டுகளாக ஒரு பூனை ஆட்சி செய்து வந்தது. சில அதிருப்திகள் இருந்தாலும்,

“இது தான் நிலைத்தன்மை… குறை இருந்தாலும் பழக்கமான பூனை ஆட்சியே நல்லது!”

நல்லது பத்து கெட்டது நாலுன்னு கணக்கு கூட்டி கழிச்சு பார்த்ததுல… பூனை ஆட்சியே தேவலாம் என்று சில எலிகள் தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தன.

ஆனால் காலம் மாறியதும்,

“மாற்றம் வேண்டும்!” என்ற கோஷம் எழுப்பப்பட்டது.

உடனே பலவற்றை ஆராய்ந்து பேச்சுவார்த்தையை மேற்கொண்ட எலிகள்,

“பூனை ஆட்சி முடிவுக்கு வரவேண்டும்!”

“ஒவ்வொரு எலிக்கும் பாதுகாப்பு வேண்டும்!”

“கஷ்டப்படாமல் இஷ்டம் போல் இலவச தீனி – எப்போதும் வேண்டும்!”

அப்போது எல்லா எலிகளும் ஒரு புதிய ஆசையை பகிர்ந்து கொண்டன:

“பூனை வேண்டாம் ஆனால் ஒரு புதிய அமைப்பு வேண்டும்!
பூனைக்கு எலிப்பொறியே தேவலாம்!”

என்று சொல்லி முடித்ததும்…அந்த நேரம் பார்த்து, அவற்றின் கிரக தேவதை,

“ததாஸ்து!”

என்றவுடன், பூனை மறைந்து, அதன் இடத்தில்… பளபளக்கும் பெரிய எலிப்பொறி தோன்றியது. அதன் வாயிலில் ஒரு பெரிய வடையும் ஜொலித்தது.

அதைப் பார்த்த எலிகள் மகிழ்ச்சியில் ஆடிப்போயின:

“மாற்றம் வந்துவிட்டது!”

“ஆசை நிறைவேறி விட்டது!”

“பாதுகாப்பும் + சாப்பாடும்! ஆஹா டபுள் பெனிபிட்!”

என்று கொண்டாடிக் கொண்டு கூட்டமாக ஓடின.

அடுத்த கணம் “டக்!”, எல்லா எலிகளும் பொறியில் சிக்கிக் கொண்டன.

அப்போது தான் உண்மை புரிந்தது:

“அய்யோ! பூனை இருந்தபோது ஓடிச்செல்ல வாய்ப்பு இருந்தது…”

“ஆனால் இப்போது! இருந்த இடத்தில் இருந்துக்கொண்டே நம்மை காவு வாங்கும் இந்த பொறிக்குள் அதன் பளபளப்பை மட்டுமே பார்த்து! வடைக்கு ஆசைப்பட்டு…நாமே வந்து மாட்டிக் கொண்டுவிட்டோமே!” என்று.

அந்த நேரத்தில் கிரக தேவதை தோன்றி சிரித்தபடி சொன்னாள்:

“நீங்கள் கேட்டது மாற்றம் தான்… நல்ல மாற்றமா கெட்ட மாற்றமா என்று கேட்கவே இல்லை. பூனைக்கு பதில் பொறி கேட்டீர்கள். கேட்டதை தந்தோம். தேர்வு உங்களுடையது. விளைவும் உங்களுக்கே.”

அவள் மறைந்ததும், பொறிக்குள் அகப்பட்ட அனைத்து எலிகளும் செய்வதறியாது அமைதியாக இருந்தன.
சில மணி நேரம் கழித்து, ஒரு எலி மெதுவாக சொன்னது:

“ஆமாம்! பூனையா இருந்தா என்ன!பொறியா இருந்தா என்ன! கஷ்டமும் நஷ்டமும் நமக்கு தான்! ம்…”

அதற்கு, அதன் அருகில் இருந்த இன்னொரு எலி, பொறிக்குள் சிக்காது வெளியே தவித்துக் கொண்டிருந்த எலிகளைப் பார்த்து,

“அடுத்த முறையாவது நீங்க எல்லாரும் எதையும் ஒன்றுக்கு நான்கு முறை நன்றாக யோசித்து கேட்கணும்/சொல்லணும்/செய்யணும்…”

என்று சொல்ல, அதை கேட்டுக் கொண்டிருந்த எலிகளில் ஒன்று முன்னால் வந்து:

“ஆனா… அடுத்த முறை வடை இன்னும் பெரிசா இருந்தா?”

விதி வலியது!

Leave a comment