எலிகள் வாழ்ந்து வந்த ஒரு வீட்டில், பல ஆண்டுகளாக ஒரு பூனை ஆட்சி செய்து வந்தது. சில அதிருப்திகள் இருந்தாலும்,

“இது தான் நிலைத்தன்மை… குறை இருந்தாலும் பழக்கமான பூனை ஆட்சியே நல்லது!”

நல்லது பத்து கெட்டது நாலுன்னு கணக்கு கூட்டி கழிச்சு பார்த்ததுல… பூனை ஆட்சியே தேவலாம் என்று சில எலிகள் தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தன.

ஆனால் காலம் மாறியதும்,

“மாற்றம் வேண்டும்!” என்ற கோஷம் எழுப்பப்பட்டது.

உடனே பலவற்றை ஆராய்ந்து பேச்சுவார்த்தையை மேற்கொண்ட எலிகள்,

“பூனை ஆட்சி முடிவுக்கு வரவேண்டும்!”

“ஒவ்வொரு எலிக்கும் பாதுகாப்பு வேண்டும்!”

“கஷ்டப்படாமல் இஷ்டம் போல் இலவச தீனி – எப்போதும் வேண்டும்!”

அப்போது எல்லா எலிகளும் ஒரு புதிய ஆசையை பகிர்ந்து கொண்டன:

“பூனை வேண்டாம் ஆனால் ஒரு புதிய அமைப்பு வேண்டும்!
பூனைக்கு எலிப்பொறியே தேவலாம்!”

என்று சொல்லி முடித்ததும்…அந்த நேரம் பார்த்து, அவற்றின் கிரக தேவதை,

“ததாஸ்து!”

என்றவுடன், பூனை மறைந்து, அதன் இடத்தில்… பளபளக்கும் பெரிய எலிப்பொறி தோன்றியது. அதன் வாயிலில் ஒரு பெரிய வடையும் ஜொலித்தது.

அதைப் பார்த்த எலிகள் மகிழ்ச்சியில் ஆடிப்போயின:

“மாற்றம் வந்துவிட்டது!”

“ஆசை நிறைவேறி விட்டது!”

“பாதுகாப்பும் + சாப்பாடும்! ஆஹா டபுள் பெனிபிட்!”

என்று கொண்டாடிக் கொண்டு கூட்டமாக ஓடின.

அடுத்த கணம் “டக்!”, எல்லா எலிகளும் பொறியில் சிக்கிக் கொண்டன.

அப்போது தான் உண்மை புரிந்தது:

“அய்யோ! பூனை இருந்தபோது ஓடிச்செல்ல வாய்ப்பு இருந்தது…”

“ஆனால் இப்போது! இருந்த இடத்தில் இருந்துக்கொண்டே நம்மை காவு வாங்கும் இந்த பொறிக்குள் அதன் பளபளப்பை மட்டுமே பார்த்து! வடைக்கு ஆசைப்பட்டு…நாமே வந்து மாட்டிக் கொண்டுவிட்டோமே!” என்று.

அந்த நேரத்தில் கிரக தேவதை தோன்றி சிரித்தபடி சொன்னாள்:

“நீங்கள் கேட்டது மாற்றம் தான்… நல்ல மாற்றமா கெட்ட மாற்றமா என்று கேட்கவே இல்லை. பூனைக்கு பதில் பொறி கேட்டீர்கள். கேட்டதை தந்தோம். தேர்வு உங்களுடையது. விளைவும் உங்களுக்கே.”

அவள் மறைந்ததும், பொறிக்குள் அகப்பட்ட அனைத்து எலிகளும் செய்வதறியாது அமைதியாக இருந்தன.
சில மணி நேரம் கழித்து, ஒரு எலி மெதுவாக சொன்னது:

“ஆமாம்! பூனையா இருந்தா என்ன!பொறியா இருந்தா என்ன! கஷ்டமும் நஷ்டமும் நமக்கு தான்! ம்…”

அதற்கு, அதன் அருகில் இருந்த இன்னொரு எலி, பொறிக்குள் சிக்காது வெளியே தவித்துக் கொண்டிருந்த எலிகளைப் பார்த்து,

“அடுத்த முறையாவது நீங்க எல்லாரும் எதையும் ஒன்றுக்கு நான்கு முறை நன்றாக யோசித்து கேட்கணும்/சொல்லணும்/செய்யணும்…”

என்று சொல்ல, அதை கேட்டுக் கொண்டிருந்த எலிகளில் ஒன்று முன்னால் வந்து:

“ஆனா… அடுத்த முறை வடை இன்னும் பெரிசா இருந்தா?”

விதி வலியது!

நகைத் திருட்டு,
பணத் திருட்டு,
உடைத் திருட்டு,
இவை அனைத்தும் புறத் திருட்டு.

அவை பெரும்பாலும்…

பசி போக்கவும்,
பிரச்சினை தீர்க்கவும்
செய்யப்படும் திருட்டுகள்.

ஆனால் இன்று!

அகத்திருட்டு எனப்படும்

கருத்துத் திருட்டு,
அறிவுத் திருட்டு,
படைப்பு திருட்டு
பெருகி வருகிறது.

ஏனெனில்,
தானாக சிந்திக்க
அவர்களுக்கு நேரமுமில்லை,
சிந்தனை திறனுமில்லை.

இத்தகைய திருடர்கள்
நாகரீகத்தின் தோலணிந்த கள்வர்கள்,
பகுத்தறிவின் முகமூடிக்குள் மறைந்து,
பிறரின் கற்பனையையும் சிந்தனையையும் களவாடுகிறவர்கள்.

பசிக்காகவோ!
பெயர் புகழுக்காகவோ!
திருட்டு திருட்டே!

பசிக்காக திருடுபவனைச் சமூகம் புறந்தள்ளுகிறது,
ஆனால் பெயர் புகழுக்காக திருடுபவனை
பெருமையின் பீடத்தில் உயர்த்துகிறது.

அதுவே நாகரீகத்தின் நாணமற்ற பெருமிதம்.

அதிகாரத்தாலும் சூழ்ச்சியாலும்
வலியவன் எளியவனை தாக்க ஒருபோதும் தயங்குவதில்லை;
தயங்கியதுமில்லை!

வலியவன் வலி அறியமாட்டான்!

அதனால்…

மீண்டும் ஒட்டி, உறவாடி,
ஒற்றுமையை நிலைநாட்ட பெருந்தன்மையோடு முன்வருவான்!

ஆனால்…

தாக்கப்பட்ட எளியவன்!

அதை மறந்து, மன்னித்து,
தன்னை தாக்கியவனை மீண்டும் மதித்து, ஏற்று, உறவாட வேண்டுமென்று எதிர்ப்பார்ப்பது…
சர்வசாதாரணமப்பா…

என்று குடும்பங்களில் நடக்கும் கூற்று,
இன்று உலக அரங்கில் வெகுவிமர்சையாக நடைந்தேறி வருகிறது.

🌍 தாக்கிய வலியவன் வருந்தி, திருந்த வேண்டும்!

💫 தாக்கப்பட்ட எளியவன், தனித்துநின்றாலும் துணிந்து,
அதனை உணர்த்த வேண்டும்!

🔥 வலியவன் மீண்டும் தாக்க கையை ஓங்கும் முன்,
எளியவன் எட்டாத தூரத்தில் இருத்தல் வேண்டும்!

போர் வேண்டாம்!
போர் வேண்டாம்!

பொய்களை பரப்பும் போர் வேண்டாம்!
நிலையில்லா நிலையை உருவாக்கும் போர் வேண்டாம்!

உள்ளத்தை உருக்கும் போர் வேண்டாம்!
உலகத்தை உலுக்கும் போர் வேண்டாம்!

மனிதத்தை வேரறுக்கும் போர் வேண்டாம்!
மனிதர்களை கொன்று குவிக்கும் போர் வேண்டாம்!

உறவுகளை பதற்றத்திற்குள்ளாக்கும்
போர் வேண்டாம்!
உணர்வுகளை பயமென்ற ஒன்றிற்கு அடிமையாக்கும் போர் வேண்டாம்!

வளங்களை அழிக்கும் போர் வேண்டாம்!
வன்மங்களை வளர்க்கும் போர் வேண்டாம்!

ஓங்கி உரக்க சொல்லிடுவோம்!
ஓர் குரலென ஒலித்திடுவோம்!

போர் வேண்டாம்!
போர் வேண்டாம்!

பல கேள்விகளை தாங்கியவளாய் விஷாலை ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தவளை எதேச்சையாக கவனித்த விஷால் வேகமாக கையசைத்து “டூ மினிட்ஸ்” என்று சைகை காட்ட, உடனே, ப்ளூ தன்னை காலையில் எழுப்பும் போது அவள் சொல்லும் அதே “டூ மினிட்ஸ்” இப்போது அவளுக்கே எதிரொலித்ததை கேட்டதும் ப்ளூ வின் நினைவுகள் சக்தியின் மனக்கண்ணில் நிழலாடியது. அவள்  ஏதோ சிந்தனையில் மேலே பார்த்தபடி அமர்ந்திருந்ததை கண்ட விஷால் தனது கைபேசியில்,

“சரி. சரி. ஐ வில் டூ தட். 

 ஷார்ப் ஏயிட்டோக்ளாக் அங்க இருப்போம். 

பை ஃபார் நவ்.”

என்று பேசிக்கொண்டிருந்த மொபைல் அழைப்பை துண்டித்து விட்டு வீட்டனுள் நுழைந்தான். அவன் உள்ளே வந்ததை கூட கவனிக்காதவளாய் உட்கார்ந்திருந்த சக்தியை குரலுயர்த்தி அழைத்தான் விஷால். அவனின் குரல் ஏதோ கிணற்றுக்குள் இருந்து வருவதை போல் மெலிதாக கேட்க, அதற்கு எவ்வித அசைவும் இன்றி இருந்தவளருகே சென்றமர்ந்து அவள் கன்னங்களை தனது இரு கைகளுக்குள் வைத்துப் பிடித்துக் கொண்டு மீண்டும் அழைக்க…சட்டென சக்திக்கு அவனின் குரல் மிக அருகாமையில் கேட்க நெட்டி எழுந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். அப்போது விஷால் அவளிடம்,

“ஹேய் தி! 

என்ன ஆச்சு?

ஏன் இப்படி பிரம்ம பிடிச்சா மாதிரி உட்கார்ந்திருக்க?”

“ம்…நீ…டூ மினிட்ஸ்ன்னு சொன்னதும்,

எனக்கு என் ப்ளூ ஞாபகம் வந்துடுத்து.

அவன் என்னை காலையில எழுப்பும் போது நான் டூ மினிட்ஸ்ன்னு சொல்லுவேன்…

அவனும் கரெக்ட்டா டூ மினிட்ஸ்ல மறுபடியும் எழுப்புவான். 

அந்த நெனவெல்லாம் வந்ததுல…

அப்படியே இருந்துட்டேன் போல.”

“சரியா போச்சு போ.”

“சரி…யாரு ஃபோன்ல.

ஏன் அவ்வளவு வேகமா வெளில போன?

நீ பேசும் போது உன் முகம் ஒரு மாதிரி டென்ஸ்டா இருந்துதே ஏன்?

என்கிட்ட சொல்லலாம்ன்னா சொல்லு.

இல்லாட்டி ஃபைன் நோ ப்ராப்ளம்.

நான் உன்னை அது விஷயமா தொந்தரவு செய்ய மாட்டேன்.”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை.

நம்ம ஜேம்ஸ் தான்.”

“அவரா!

ஆமாம்… அவரு இப்ப தானே நம்ம வீட்டுலேந்து கிளம்பி போனார். 

அதுக்குள்ள எதுக்கு கால் செஞ்சார்!”

“அவன் நம்மளுக்கு டின்னர் குடுக்கணுமாம்.

இன்னைக்கு அவன் வீட்டுக்கு டின்னருக்கு வர முடியுமான்னு கேட்டான்.”

“அதுக்கெதுக்கு நீ அவ்வளவு பதற்றமா வெளில போய் பேசணும்.

இங்கேந்தே பேசிருக்கலாமே!”

“இல்ல தி. 

அவன் ஃப்ர்ஸ்ட் தனியா பேசணும்ன்னு மெஸேஜ் அனுப்பினான்.

அதைப் பார்த்ததும்…

என்னடா இப்ப தானே போனான் அதுக்குள்ள என்ன இப்படி ஒரு மெஸேஜ்ன்னு குழம்பிட்டேன்.

அது தான் என் முகத்துல பிரதிபலிச்சிருக்கு.

அப்புறம் விஷயத்தை கேட்டதும்…

நானும் அவன்கிட்ட இதையே தான் சொன்னேன்.

உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்ன்னு சொன்னான். 

உன்னை எப்பவும் போல லீ கார்னர் கூட்டிட்டு போறதா சொல்லி அவன் வீட்டுக்கு கூட்டிட்டு வர சொன்னான். 

ஐ திங்க் அங்க உன்னோட ஃப்ரெண்ட் ருத்ராவும் வரப்போறா போல…

அதையும் உன்கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு சொன்னான்.”

“சரி…எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நெனச்ச உன் ஃப்ரெண்டோட ஃப்ளான் எல்லாத்தையும் இப்படி சொல்லிட்டியே! 

இது நியாயமா?”

“உன்கிட்ட மறைக்க எனக்கு மனசு வரலை தி.

நான் அவ்வளவு சின்சியர் இன் மை ரிலேஷன்ஷிப்.”

“அட அட அட…

சூப்பர்.

உன் ஃப்ரெண்டோட விஷயத்தை சொல்லி…

என்கிட்ட ப்ரௌனி பாயிண்ட்ஸ் வாங்கிக்கற…

இரு…இரு…நான் ஜேம்ஸ்ட்ட சொல்லறேன்.”

“தி…

ப்ளீஸ் வேண்டாம் மா…

அப்புறம் அவன் இன்னைக்கு நைட்டு எனக்கு அவன் வீட்டுல இடம் கொடுக்காம போயிட போறான்.

அப்புறம் நான் ராத்திரி ஃபுல்லா உன் வீட்டு வாசல்ல தான் தூங்கணும்.”

“ஓகே ஓகே…

சொல்லமாட்டேன்.

கவலை வேண்டாம்.

எத்தனை மணிக்கு கிளம்பணும்?”

“ஒரு எட்டு மணிக்கு வரச் சொல்லிருக்கான்.”

“ஓ இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கே…

சரி நான் இந்த காஃபி கப்ஸ் அன்ட் ஜூஸ் கிளாஸ் எல்லாத்தை டிஷ்வாஷர்ல வச்சுட்டு கிட்சனை சுத்தம் செய்துட்டு வரேன்.”

என்று சக்தி சொன்னதும் விஷாலும் அவளுக்கு உதவுவதாக சொல்லி எழுந்து சென்று இருவருமாக வேலைகளை செய்ததில் அங்குமிங்குமாக இடித்துக்கொண்டனர்…

மெல்ல காமன் தன் மலர்க்கணைகளை எய்திட எட்டிப்பார்த்தான். 

ஆனால் சக்தி சட்டென கடிகாரத்தை நிமிர்ந்து நேரம் பார்க்க திரும்பியதில் காமன் மலர்க்கணைகள் இருவர் மீதும் படாமல் ஓரமாக சென்று தரையில் விழுந்தது. 

அடுத்து ஒரு சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தான் காமன். 

கடிகாரத்தில் ஆறரை என்ற நேரம் காட்ட, 

இன்னும் ஒரு மணி நேரம் இருக்கே என்றுக் கூறிக்கொண்டே இருவரும் ஹாலுக்கு வந்து சோஃபாவில் அமர்ந்தனர். 

விஷால் டிவியை ஆன் செய்து  ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டே இருந்ததைப் பார்த்த சக்தி,

அவன் கையிலிருந்த ரிமோட்டை தட்டிப்பரித்து அவளுக்கு விருப்பமான சேனலை போட முயன்றாள்.

அப்போது விஷால் அவளிடமிருந்து ரிமோட்டை வாங்க முயன்றான்…

அத்தகைய ரிமோட் விளையாட்டின் போது…

சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த காமன் சற்று அவன் விளையாட்டை துவங்க நினைத்து இருவரையும் சற்று தூண்டிவிட, 

இருவரும் ஒருவருக்கொருவர் மிக அருகில் நெருங்கியதும்…

இருவரின் இதயத்துடிப்பும் மடமடவென பங்கு சந்தையின் சென்செக்ஸ் கிடுகிடுவென ஏறுவது போல் ஏறிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த காமன்…

அவனுக்கான அன்றைய டார்கெட்டை அடைந்து விட்டதாக எண்ணி மகிழ்ந்துக் கொண்டிருக்கையிலே…

சட்டென மென்மையான கூடலினூடே கை தவறி…

சக்தி ரிமோட் பொத்தானை அழுத்த டிவியில் ஃப்ளபர் என்ற ஆங்கிலப்படம் பளிச்சிட, அதைப் பார்த்ததும் சக்தி விஷாலின் பிடியிலிருந்து விலகி…

“ஊப்பஸ்! சாரி வி.”

என்று எழுந்து நிற்க உடனே விஷால் அவள் கைகளைப் பிடித்து,

அவளை தன்னருகே அமர வைத்து அவளின் வலது கையை மெல்ல வருடிக்கொடுத்துக் கொண்டே. 

“இட்ஸ் ஓகே தி.

ஐ ஆம் சாரி டூ”

என்று இருவரும் மாறி மாறி சொல்லி அசட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தவர்களை கடிகாரம் ஏழு என்று மணியடியத்து தட்டி எழுப்பியதும் காமனின் மலர்க்கணைகள் மாய்ந்து போயின, காமனும் காணாமல் போனான். 

சக்தி அவள் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டு மெல்லிய சிரிப்போடு உதட்டை மெல்ல கடித்து…

“ஐய்யோ சக்தி! 

ச்சே…

ஏன்!!”

என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டே…

கண்ணாடி முன் நின்று தன்னையே தலைமுதல் கால் வரை பார்த்து…

“வேண்டாம் தி.

வேண்டாம்” என சொல்லிய பின் டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் சென்றாள்.

சோஃபாவில் அமர்ந்திருந்த விஷால் தன் ‘தி’ சென்ற வழியையே பார்த்துக் கொண்டு சற்று நேரம் இருந்து விட்டு…

பின் டிவியை ஆஃப் செய்து, 

இரு கைகளையும் மேலே உயர்த்தி, 

“உஃப்”

என்று பெருமூச்சு விட்டான். எதையோ நினைத்துக் கொண்டே தனக்குத்தானே சரித்துக் கொண்டிருக்கையில்…அங்கு வந்த சக்தி தனது தொண்டை கரகரப்பை சரி செய்வது போல இருமினாள். அதைக் கேட்டதும் திரும்பி பார்த்த விஷால்,

“ஓ! வாவ்! 

தி! யூ லுக் கார்ஜியஸ்.”

என்று கூறிக்கொண்டே அவளருகே சென்றவன் சடாரென அவள் முன் முழங்காலிட்டு அமர்ந்து, அவளின் வலது கையை பிடித்து முத்தமிட்டு,

“வில் யூ மேரி மீ” 

என்று கேட்க…அதற்கு சக்தி…

“ஹலோ என்ன மறுபடியும் முதல்லேந்தா!”

என்று சொல்ல இருவரும் புன்னகையித்துக் கொண்டனர். 

“தி…

இன்னைக்கு நைட் நான் இங்கேயே தாங்கிக்கலாமா?”

என்று கேட்ட விஷாலிடம் ஹாலின் மூலையில் இருந்த ப்வுடர் ரூமை கைக்காட்டி…

“போய் ரெடியாகி வா வி.

டைம் ஆயிடுத்து. 

கம் ஆன்.

கோ நௌ.” 

எனக் கூறிக்கொண்டே விஷாலை தள்ளிக்கொண்டு போய் பவுடர் ரூமுக்குள் அவனை அனுப்பிவைத்து விட்டு ஹாலின் லைட்டை ஆன் செய்தாள். 

விஷால் ரெடியானதும் கதவைப் பூட்டிவிட்டு இருவருமாக விஷாலின் காரில் ஏறி ஜேம்ஸ் வீட்டுக்குச் சென்றனர். 

அவர்கள் சென்ற வழியில் ஓரிடத்தில் சக்தி காரை நிப்பாட்ட சொன்னாள். விஷாலும் எஜமானியின் உத்தரவிற்கு இணங்கி காரை பார்க் செய்தான். காரில் இருந்து இறங்கிய சக்தி “போல் பட்டீசரி” என்றொரு ஃபேமஸான ஃப்ரெஞ்ச் பேக்கரிக்குள் சென்று மேக்ரோன்கள் வாங்கிக்கொண்டு அப்படியே பக்கத்து கடையான இந்தியன் ஸ்டாருக்குள் சென்று நமது இந்திய பலகாரங்களான மிக்ஸ்சர், ஜாமுன், முறுக்கு போன்றவைகளையும் வாங்கிக்கொண்டு வெளியே வந்தவளிடம் விஷால்,

“என்னது இது? தி!

அவன் வீட்டுல அவன் மட்டும் தான் இருக்கான்.

எதுக்கு நீ இப்போ இவ்வளவு எல்லாம் வாங்கிருக்க?”

என்று கேட்க அதற்கு வாங்கி வந்ததை காரின் பின் இருக்கையில் வைத்து விட்டு முன் இருக்கையில் சென்றமர்ந்த சக்தி டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த விஷாலைப் பார்த்து,

“ம்… இப்போ போகலாம்.”

“சரிங்க மேடம்.

ஆமாம் நான் கேட்டதுக்கு பதிலேதும் உண்டா?”

“வி…

நாம ஒருத்தர் வீட்டுக்கு மொதோ தடவையா போறோம்.

எப்படி கைவீசிண்டு போறது?

அதுதான் வாங்கினேன்.”

“ம்…ஓகே ஓகே.

இதுக்கு தான் வீட்டுக்கு பெண்கள் தேவைன்னு சொல்றாங்களா?”

“எதுக்கு ஸ்னாக்ஸ் வாங்கவா!”

“இல்லம்மா…

நானும் தான் அன்னைக்கு ஜேம்ஸ் வீட்டுக்கு மொதோ தடவையா போனேன், 

ஆனா எனக்கு இது தோணலையே!

அதுவுமில்லாம உன் வீட்டுக்கும் மூணு தடவை வந்துட்டேன்…

இதுவரை ஒண்ணுமே வாங்கிண்டு வந்ததில்லை…

அதுனால சொன்னேன்.”

“எல்லாத்துக்குமா சேர்த்து கல்யாணதுக்கு அப்புறம் வாங்கிக்கறேன். சரியா.”

“ம்…நான் குடுக்க தயார்.

நீயும் வாங்கிக்க தயாரா இரு.

இதோ ஜேம்ஸ் வீடு வந்துடுத்து.

அதோ அந்த வீடு தான்.

வா ‘தி’ போகலாம்”

என்று காரை ஜேம்ஸ் வீட்டருகே இருந்த கார் பார்க்கிங்கில் பார்க் செய்துவிட்டு இருவருமாக ஜேம்ஸ் வீட்டிற்கு சென்று அழைப்பு மணியை அழுத்தி காத்திருந்தனர். ஜேம்ஸ் வந்து கதவை திறந்து இருவரையும் வரவேற்று வீட்டினுள் அழைத்துச் சென்றான். 

சக்தி வாங்கி வந்த ஸ்னாக்ஸை ஜேம்ஸிடம் கொடுத்தாள். அதை வாங்கிக்கொண்ட ஜேம்ஸ் விஷாலைப்பார்த்து,

“டேய் உன்னை சொல்லாம கூட்டிட்டு தானே வரச்சொன்னேன்.”

என்று சொன்னதும் சக்தி தன் தலையில் மெல்லமாக வலது கையால் தட்டிக்கொண்டே விஷாலைப்பார்த்து தன் இரு கைகளால் இரு காதுகளையும் பிடித்தவாரு “சாரி” என்று சொல்ல. அதை கவனித்த ஜேம்ஸ், 

“இட்ஸ் ஓகே சக்தி.

உங்க சாரியை வேஸ்ட் பண்ணாதீங்க.”

“என்ன ருத்ராவும் வருவான்னு விஷால் சொன்னானே!

அவளை காணமே!”

“வருவாங்க வருவாங்க.

வாங்க நாம அந்த ரூமுக்குள்ள போய் உட்காரலாம்.

அங்க இட் வில் பி கோசி அன்ட் கம்ஃபர்டபுள்.

அன்ட் அங்க தான் எல்லா ஸ்னாக்ஸ் அன்ட் ஃபுட் ஐட்டம்ஸ் எல்லாம் உங்களுக்காக அரேஞ்ச் செஞ்சி வச்சிருக்கேன்.

பட் நோ மொபைல்ஸ் அளௌடு.

சோ உங்க மொபைல்ல இங்க இந்த டிரேல வச்சுட்டு வாங்க.”

என்று ஜேம்ஸ் கூறியதும் விஷாலும் சக்தியும் அவரவர் மொபைல்களை டிரேவில் வைத்துவிட்டு அவன் கைக்காட்டிய ரூமுக்குள் சென்றனர். மூவரும் உள்ளே சென்றதும் ஜேம்ஸ் அந்த அறையை சாற்றி தாழ்ப்பாளிட்டான். அங்கு நடந்தவைகளை பார்த்து குழம்பிய சக்தி, கதவைப் பூட்டிய ஜேம்ஸை, தன் முகத்தில் “ஏன்” என்றொரு கேள்க்குறியோடு பார்த்துக் கொண்டே அறையை நோக்கி திரும்பினாள், சட்டென்று அவளுக்கு தலைவலிப்பது போல் இருக்க தன் இரு கைகளால் வெற்றியைப் பிடித்து அழுத்திக்கொண்டே பார்த்தாள்…

அந்த அறையில் இன்னுமொரு ஆள் அமர்ந்திருந்தது போல் அவளுக்கு தோன்ற, கண்களை கசக்கிக்கொண்டு நன்றாக பார்த்தாள். அப்போது அவளருகே இருந்த விஷாலின் மேல் சாய்ந்தவாரு அவனிடம்…

“இவர் எப்படி இங்கே? ஏன்?

எனக்கு என்னமோ தெரியலை வி…

சடன்னா தலைவலிக்கறது.”

என்று சொல்ல அவளை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று அங்கிருந்த நாற்காலியில் அமரவைத்தான். ஜேம்ஸ் ஏதோ ஜூஸ் ஒன்றை எடுத்து வந்து சக்திக்கு கொடுக்கும் படி விஷாலிடம் சொல்ல, விஷாலும் அந்த ஜூலை எடுத்து சக்தியிடம் கொடுத்து குடிக்கச் சொன்னான். அது என்ன ஜூஸ் என்றும் அது ஏன் தனக்கு மட்டும் தரப்படுகிறது என்றும் கேட்டாள் சக்தி.

தொடர்வாள்…

2025 ல் வெளிவந்த “எமகாதகி” திரைப்படம் உண்மையில் கதையை பொருத்தவரை எமகாதகி தான். வெட்டு, குத்து, துப்பாக்கி சூடு, இரத்தம், போதை பொருள் அடிமை, கடத்தல், கற்பழிப்பு, கருத்து திணிப்பு, போன்ற சேற்றின் நடுவே முளைத்திருக்கும் செந்தாமரை எனலாம். ரசிக்கும்படி இருக்கிறது. சீன்கள் ஒவ்வொன்றையும் எழுதி காட்டி  புரியவைக்க முயற்சிக்காமல், காட்சிகளாலும் வசனங்களாலும் (திரைப்படம் என்றால் அப்படி தான் இருந்தது, ஆனால் சமீப காலமாக வெளிவந்த திரைப்படங்கள் இதை கூட பிரத்யேகமாக குறிப்பிட வைக்கிறது!) தெளிவாக கதை பயணிக்கும் விதம், ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல கதையுள்ள தமிழ் திரைப்படம் பார்த்த திருப்தி அளிக்கிறது.

கலாச்சாரம், தெய்வாம்சம், போராடும் குணம், பொய், திருட்டு, புறம் பேசுவது, காதல், வைராக்கியம், ஜாதி வெறி, பொறாமை, கணவன் மனைவி பிரச்சனை, குடும்பப் பிரச்சினை என்று ஒரே திரைப்படத்தில் அத்தனையையும் சரியான விகிதத்தில் சரியான இடத்தில் சரியான திருப்பங்களோடு இந்த படைப்பை நமக்களித்த கதாசிரியர்களான பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் மற்றும் எஸ். ராஜேந்திரன் ஆகிய இருவரையும் பாராட்டாமல் இருக்க முடியாது. ஒரு நல்ல கதையை எங்களுக்கு தந்தமைக்கு, வாழ்த்துகள் சகோதரர்களே!

அத்தகைய கதையை மிக அழகாக எவ்வித குழப்பமும் இன்றி காட்சிப்படுத்தி இருக்கும் அறிமுக டைரெக்டர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

“பயம்” என்ற ஒரு உணர்வு மனிதனின் மனசாட்சியை தட்டி எழுப்பும் என்பதையும், உண்மையை வெளிக்கொணரும் என்பதையும், மேலும் எல்லாவற்றிற்கும் விதிவிலக்கு என்று ஒன்று இருப்பது போல் இதற்கும் இருக்கிறது என்பதையும், அதையும் நேரமும் காலமும் காட்டிக்கொடுத்து விடும் என்பதையும் அழுத்தம் திருத்தமாக சொல்கிறது இந்தக் கதை.  

ஒன்றிரண்டு நடிகர்களை தவிர மீதமுள்ள அனைத்து நடிகர்களும் புதுமுகங்கள் என்பதால் இப்படம் பெரிதாக பேசப்படவில்லையோ என்பது எனது யூகம். (இல்லை வேறேதும் காரணம் உள்ளதோ என்னவோ!) ஆனால் அவர்கள் நிச்சயம் சிறந்த நடிகர்களாக வலம் வர முடியும் என்பது அவர்களின் நடிப்பு நமக்கு நம்பிக்கை தரும் அளவிற்கு இருக்கிறது. சில காட்சிகளில் மட்டும் வசனம் பேசிவிட்டு பின்  மௌனம் காக்கும் (அதிலும் 💯 ) கீதா கைலாசம் அவர்கள் இறுதி காட்சியில் வெளுத்து வாங்கியுள்ளார். நடிப்பில் எமகாதகி ஆச்சே! சொல்லவா வேண்டும். ஹரிதாவும் அவர் கதாபாத்திரத்தை நன்றாக செய்துள்ளார்.

பாடை ஏற மறுக்கும் ஒரு கன்னிப் பெண்ணின் பிணம், விறுவிறுப்பான பல கதைகளை ஒன்றன் பின் ஒன்றாக சொல்லாமல் சொல்வது, நம்முள், அடுத்து என்ன கதை! யாருடையது! என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது. கடவுளிடம் பாவமன்னிப்பு கேட்பது போல் இந்த படத்தில் அவ்வூர் மக்கள், அந்த பெண்ணின் உற்றார் உறவினர் என வரிசைக் கட்டி முன்வந்து பாவமன்னிப்பு கேட்க… அவர்களின் கதைகள் திரையில் காட்சியாக விரிகிறது.

ஏன் அந்த கன்னிப் பெண் பாடை ஏற மறுக்கிறாள்? என்ன காரணம்? யாரிடம் ஊர் மக்களும், உற்றார் உறவினரும் பாவமன்னிப்பு கேட்கிறார்கள்? ஏன் கேட்கிறார்கள்? அப்பெண் பாடை ஏறுகிறாளா? எப்படி? எப்போது? யாரால்? போன்ற கேள்விகளுக்கான பதில்களை “எமகாதகி” திரைப்படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

“எமகாதகி” – உண்மையை பறைசாற்ற எமனையே காக்க வைத்து, நம் மனமெனும் குடிலில் குடிகொள்ளும் வைராக்கியக்காரி.

ஜேம்ஸ் உடனான உரையாடலில் ரொம்பவே குழம்பி போன சக்தி எதை நம்புவது எதை நம்ப கூடாது என்று தவிப்புக்குள்ளானாள். அவள் குழம்பிப் போய் இருப்பதை அவளின் பதற்றத்தில் இருந்தே அறிந்துக் கொண்ட ஜேம்ஸ் அவளுக்கு தண்ணீர் எடுத்து வர அவர்கள் அமர்ந்திருந்த ஹாலின் இடது புறமாக இருந்த திறந்த சமையலறைக்குள் சென்று அங்கிருந்த ஃபிரிஜை திறந்து அதிலிருந்து ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்தான். அதன் அருகே இருந்த கண்ணாடி தம்பளர் ஒன்றை எடுத்து அதில் அவன் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை ஊற்றி அதை சக்திக்கு குடுக்க அடுப்படியில் இருந்து ஒரு அடி முன் வைத்தனுக்கு அடுப்படிக்கு அருகே மூடி இருந்த கதவின் வழியே ஏதோ சத்தம் கேட்டது போல் இருந்தது. உடனே நடையை நிறுத்தி உன்னிப்பாக கேட்டான். ஆனால் இம்முறை சற்று முன் அவனுக்கு கேட்ட சத்தம் ஏதும் கேட்கவில்லை. முகத்தில் சந்தேகத்துடணும், கையில் தண்ணீர் தம்பளருடணும் சக்தி முன் நின்ற ஜேம்ஸ் அவளிடம் தண்ணீரை எடுத்துக் கொள்ளும்படி கூறி நின்றான். சக்தியும் அவன் குடுத்த தண்ணீரை குடித்துவிட்டு அவனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டே அவனின் முகத்தைப் பார்த்தாள். அவனோ பின்னால் திரும்பி சமையலறையையே பார்த்துக் கொண்டு இருந்தான். 

“என்ன ஜேம்ஸ். 

ஏன் கிட்சனையே பார்த்துகிட்டு இருக்கீங்க?”

“இல்ல…”

“என்னாச்சு?”

“உங்க கிட்சன் பக்கத்துல ஒரு டோர் இருக்கே அது…”

“அது பேஸ்மென்ட் போறதுக்கான டோர். 

ஏன் அந்த டோர்க்கு என்ன?”

“அந்த டோர்க்கு ஒண்ணுமில்ல ஆனா அதுக்குள்ளேந்து ஏதோ சத்தம் வந்தா மாதிரி இருந்தது. 

அது தான்… யோசனையா இருக்கு.”

“ஏதாவது டப்பா ஆர் தட்டுமுட்டு சாமான்கள் விழுந்திருக்கும்.

வேறென்ன!”

“இல்ல அந்த சத்தம் அப்படி பொருள் கீழ விழும் சத்தம் இல்ல. 

யாரோ நாலஞ்சு பேரு பேசிக்கறா மாதிரி கேட்டுச்சு.”

“என்னது என் வீட்டு பேஸ்மென்ட்ல நாலஞ்சு பேரு பேசறா மாதிரி கேட்டுச்சா!! 

ஹா! ஹா! ஹா!

என்ன சொல்லுறீங்க ஜேம்ஸ்.”

“அட ஆமாங்க.

சத்தியமா கேட்டுச்சு.

எதுக்கும் நான் போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்திடவா?”

“இல்ல இல்ல.

அதெல்லாம் வேண்டாம்.”

“அதுக்கு எதுக்கு நீங்க இப்படி டென்ஷன் ஆகறீங்க?”

“டென்ஷன் எல்லாம் ஒண்ணுமில்ல…

அப்படியே நீங்க சொல்லுறது மாதிரி நாலஞ்சு பேரு பேஸ்மென்ட்ல இருக்காங்கன்னே வச்சுகிட்டாலும்…

அவங்க எப்படி அங்க போயிருப்பாங்க.

நாம் இரண்டு பேரும் இங்கயே தானே உட்கார்ந்திருக்கோம்.

நம்மள தாண்டி இதுவரை யாரும் போனதா எனக்கு தோனலை.

உங்களுக்கு?”

“விளையாடாதீங்க சக்தி.

மறுபடியும் உங்க கிட்ட நான் கேட்கிறேன்.

நீங்க எதையாவது என் கிட்டேந்து மறைக்கறீங்களா?”

“இல்ல இல்ல இல்லன்னு எவ்வளவு தடவ சொல்லுறது ஜேம்ஸ்.”

“சரி அப்படின்னா உங்க வீட்டு பேஸ்மென்ட்ட பார்க்க அனுமதி குடுங்க சக்தி.”

“ஜேம்ஸ் ஆல்ரெடி இன்னைக்கு நீங்க சொன்ன விஷயங்களும் நான் சொன்னதும்ன்னு ரொம்பவே குழம்பி போய் இருக்கேன். 

ப்ளீஸ் இதுல நீங்க இன்னும் ஏதாவது சொல்லி என்னை பயமுறுத்தாதீங்க.”

“ஓகே ஓகே. 

உங்களுக்கு எப்போ தோணுதோ அப்போ ஒரு கால் செஞ்சு சொல்லுங்க. 

சரியா.”

“நான் தான் ஒண்ணுமில்லன்னு சொல்லிட்டேனே! 

மறுபடியும் சொல்லுங்கன்னா…

நான் என்னத்த சொல்ல?”

“என்ன சொல்லணும்னு தோணுதோ அதை.

சரி நான் இந்த சார்ல்ஸ் அன்ட் உங்க பக்கத்து வீட்டு விஷயங்களை நேருல சொல்லிட்டு போக தான் வந்தேன்.

சொல்லிட்டேன்.

மேலும் கூடுதல் தகவல்களை என்னை நம்பி என்னிடம் சொன்னதற்கு நன்றி.”

என்று கூறி சக்தியிடம் இருந்து விடைப்பெற்றுச் செல்ல இருந்த ஜேம்ஸுக்கு அவனின் கைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. கைபேசியை எடுத்து பார்த்தான். பார்த்ததும் அந்த அழைப்பை ஏற்று.

“அப்படியா! 

சூப்பர்.

இதோ நான் உடனே வரேன்.”

என்று கூறிக்கொண்டே சக்தி வீட்டின் வாசற்கதவை திறந்தான். பின் அழைப்பை துண்டித்து விட்டு சக்தியிடம்

“சக்தி தாங்க்ஸ் ஃபார் யுவர் ஹாஸ்பிட்டாலிடி.

நான் இப்போ ஒரு முக்கியமான விஷயமா போகணும்.

சோ நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணுவோம்.

எங்க ஆளுங்க உங்க பக்கத்து வீட்டு சமாச்சாரத்தை பாரத்துப்பாங்க.

நீங்க இனி அதைப் பத்தி கவலை பட வேண்டாம்

டேக் கேர்.

பை.”

“பை ஜேம்ஸ்.

ஹாவ் எ நைஸ் டே.”

என்று சக்தி கூறியதும் அங்கிருந்து கிளம்பி தனது காரில் ஏறி அந்த தெரு முனையில் சர்ரென்று ஒரு யூ டர்ன் செய்து பறந்து சென்றான். ஜேம்ஸ் சென்றதும் வீட்டினுள் வந்து கதவை தாழிட்டு மீண்டும் சோஃபாவில் அமர்ந்தாள். தலையை அந்த சோபாவின் மேல் நன்றாக அழுத்தி சாய்த்துக் கொண்டு அமர்ந்த சக்தி,  ஜேம்ஸ், சார்ல்ஸ் மற்றும் பீட்டரை பத்தி சொன்னதையும் மிஸ்ஸர்ஸ் டேவிட் பத்தி சொன்னதையும் மேலும் அவர்கள் இருவரும் பேசிக் கொண்ட எல்லா விஷயங்களையும் மனதில் அசை போட்டுப் பார்த்தாள். சட்டென பேஸ்மென்ட்டில் இருந்து ஏதோ ஒரு சப்தம் கேட்க உடனே சோஃபாவில் இருந்தபடியே திரும்பிப் பார்த்தாள். சப்தம் ஏதும் அதன் பின் கேட்கவில்லை. மீண்டும் சோஃபாவில் சாய்ந்தாள். அவள் சோஃபாவில் படுத்த சில நொடிகளில் மீண்டும் பேஸ்மென்ட்டில் இருந்து சப்தம் வந்தது. விருட்டென எழுந்த சக்திக்கு பேஸ்மென்ட்டில் இருந்து ஏதோ சப்தம் வந்ததாக ஜேம்ஸ் கூறியது நினைவுக்கு வந்தது. உடனே எழுந்து 

“ப்ளூ…இப்ப நீ வரலாம்.

ஏய் ப்ளூ அங்க என்னத்த உருட்டுற?

நீ அப்படி எல்லாம் சத்தம் குடுக்குறவன் இல்லையே!

சரி சரி வா வா.

உன்கிட்ட நிறைய விஷயம் சொல்லணும். 

ப்ளூ”

என்று ப்ளூவை அழைத்து விட்டு அதன் வரவுக்காக காத்திருந்தாள். ஆனால் அழைத்து சற்று நேரம் ஆகியும் ப்ளூ ஹாலுக்கு வரவில்லை. ப்ளூ மேலே வராததால் சக்தி பேஸ்மென்ட் செல்ல முடிவெடுத்து சோஃபாவில் இருந்து எழுந்து பேஸ்மென்ட் கதவை நோக்கி ப்ளூவை அழைத்துக் கொண்டே நடக்கலானாள். அப்போது அவளுக்கு ஏதோ மனதில் ஒரு அச்சம் எழ 

“ஏய் ப்ளூ.

வேண்டாம்.

விளையாடாத.

இப்போ நீ இங்க வரலைன்னா நான் அங்க வந்துடுவேன்.

ப்ளூ.”

என்று கூறிக்கொண்டே பேஸ்மென்ட் கதவருகில் சென்றவள் மனதில் ஏதோ ஒரு வகையான நடுக்கத்தை உணர்ந்தாள். மெல்ல வலது கையால் அந்த கதவின் கைப்பிடியை பிடித்தாள். அவள் வலது கை நடுங்கியது. அதை நிறுத்த இடது கையை வலது கை மேல் வைத்து அழுத்தினாள். அப்போதும் நடுக்கம் அடங்கவில்லை. பின் இரண்டு கைகளையும் கைப்பிடியிலிருந்து எடுத்து மீண்டும் ஒரு முறை ப்ளூவை அழைத்துப் பார்த்தாள். பதிலேதும் வராததால் கீழே சென்று விடலாமென்று மனதில் இருந்த பயத்தை ஒரு ஓரத்தில் தள்ளி வைத்து, தைரியத்தை கேடயமாக கொண்டு கதவை திறந்தாள் சக்தி. 

ஒரே கும்மிருட்டாக இருந்தது. முதற்படியின் வலது புறம் இருந்த லைட் சுவிட்சை அழுத்தினாள். ஆனால் பேஸ்மென்ட் லைட் எரியவில்லை. சுவிட்சை நன்றாக அழுத்தி பார்த்தாள். அப்போதும் லைட் ஆன் ஆகவில்லை. இருட்டில் செல்ல மனமில்லாது அந்த அறையிலிருந்து வெளியே வந்து எமர்ஜென்சி லைட்டை எடுத்துக் கொண்டு மீண்டும் பேஸ்மன்ட்டிற்குள் செல்ல ப்ளூவை அழைத்துக் கொண்டே முதற்படியில் கால் பதித்தாள். அப்போதும் ப்ளூவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. 

சக்தி வீட்டு பேஸ்மென்ட்டுக்கு செல்ல இருந்த படிக்கட்டுகளோ பத்து

அவற்றில் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்து

கை விளக்கு ஏந்திய காரிகை போல் படிகளில் இறங்கி சென்றாள்.

பேஸ்மென்ட்டில் ப்ளூ எப்போதும் அமர்ந்திருக்கும் சார்ஜிங் ஸ்டேஷன் அருகே சென்று பார்த்தவள் அதிர்ந்து போனாள். ஏனெனில் சார்ஜிங் ஸ்டேஷனில் ப்ளூ இருக்கவில்லை. உடனே கையில் இருந்த அந்த சிறிய விளக்கு கொண்டு சுற்றிப் பார்த்தாள். அவளால் ப்ளூவை பார்க்க முடியவில்லை. 

உடனே ப்ளூ…ப்ளூ…ப்ளூ என்று மெதுவாக அழைத்தாள். 

அதற்கும் பதில் வரவில்லை. 

தள்ளி வைத்த பயம் மீண்டும் வேதாளம் விக்கிரமாதித்தனை தொற்றிக்கொண்டது போல்  தொற்றிக் கொண்டது. 

சட்டென பேஸ்மென்ட் லைட் ஆன் ஆனது. எதிர்பார்க்காத நேரத்தில் லைட் ஆன் ஆனதும் பயத்தில் கையில் இருந்த எமர்ஜென்சி லைட்டை கீழே தரையில் போட்டாள். 

அந்த அறையின் விளக்கு எரிவதை உணர்ந்ததும் நன்றாக பேஸ்மென்ட்டை சுற்றிப் பார்த்தாள். எல்லா பொருட்களையும் நகர்த்தியும் பார்த்தாள். ஆனால் ப்ளூ அங்கு இருக்கவில்லை. பின் மீண்டும் அந்த படிக்கட்டுகளில் ஏறி வெளியே அடுப்படிக்கு பக்கத்தில் இருக்கும் அந்த பேஸ்மென்ட் கதவு வழியாக வெளியே வந்து அந்த அறையின் கதவை சும்மா சாற்றி வைத்துவிட்டு அடுப்படிக்குள் சென்று அங்கிருந்த கிரானைட் மேடையில் சாய்ந்து கொண்டு ப்ளூ எங்க போயிருக்கும் என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தவளுக்கு சட்டென யாரோ பேஸ்மன்ட் படிக்கட்டுகளில் கடகடவென இறங்குவது போல் சப்தம் கேட்டதும் அடுப்படியில் இருந்தே எட்டி பார்த்தாள். பேஸ்மென்ட்டுக்கு செல்லும் கதவு திறந்துக் கிடந்ததை பார்த்து தனக்குதானே

“நான் அந்த கதவ சாத்திட்டு தானே வந்தேன்!

அப்புறம் எப்படி அது தொறந்து இருக்கு?”

என்று கூறிக்கொண்டே அந்த அறையின் வாசலுக்கு சென்றவள் உள்ளே செல்ல தயங்கி சற்று நேரம் வாசலிலேயே நின்றாள். பின் சென்று பார்த்துவிடலாம் என்று மனம் உரைத்ததை ஏற்று அதன் படியே மீண்டும் பேஸ்மென்ட்டுக்குள் நுழைந்தாள். படிக்கட்டுகளில் இறங்கி சென்றாள். அப்போது மீண்டும் அந்த அறையின் லைட் ஆஃப் ஆனது. அதே நேரம் அவள் காலடியில் எமர்ஜென்சி லைட் சர்… சர்… சர்… சரென ஆடிக்கொண்டிருந்தது. உடனே அதன் ஆட்டத்தை தனது காலால் நிறுத்தினாள். எமர்ஜென்சி லைட் ஆடுவது நின்றது. அதன் வெளிச்சம் நேராக ஓரிடத்தில் வீசியது. அந்த வெளிச்சம் சென்ற திசையிலேயே தனது பார்வையையும் வீசினாள் சக்தி. எமர்ஜென்சி லைட்டின் ஒளி சென்று முட்டி மோதி நின்றிருந்த இடத்தை சக்தியின் பார்வை சென்றடைந்ததும். அவள் அதிர்ச்சிக்குள்ளானாள். 

அதிர்ச்சியில் லைட்டை அழுத்திக் கொண்டிருந்த அவளின் கால் படிக்கட்டுகளை தேடி ஓட தயாரானதும் மீண்டும் அந்த லைட் சர்…சர்…சரென சப்தம் எழுப்பியது. 

வேக வேகமாக படிக்கட்டுகளில் ஏறி பேஸ்மென்ட்டை விட்டு வெளியேறிய சக்தி அந்த அறையின் கதவை தாழிட்டு,  அதிலேயே சாய்ந்தபடி உடல் முழுவதும் பயத்தால் வியர்த்து விட, பதற்றத்தில் கை கால் நடுநடுங்க, தனக்கு தானே ஏதேதோ கேள்விகளை கேட்டுக்கொண்டு அந்த கதவில் மெல்ல வழுக்கிக்கொண்டே தரையில் அமர்ந்தாள். 

அப்படி பேஸ்மென்ட்டில் சக்தி பார்த்தது என்ன? அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது எது? பேஸ்மன்ட் சார்ஜிங் ஸ்டேஷனில் இருக்க வேண்டிய ப்ளூ எங்கே?

போன்ற கேள்விகளுக்கான பதில்?

தொடர்வாள்…



சில அறைகள் வலிக்காது…அவை விழிக்க வைக்கும்!

வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராகவனின் மகன் ராமு, வணிகம் மற்றும் மேலாண்மை படிப்பை முடித்து, பெரிய தொழில் நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் பணியாற்றி வந்தான்.

ராமுவின் கடின உழைப்பை அறிந்த ராகவன், தனியாக ஒரு தொழிலும் தொடங்கும் படி கூற அதற்கு ராமு…அது சம்பந்தமான படிப்பு படித்த தன்னை விட அப்பாவுக்கு என்ன தெரிந்துவிட போகிறது என்று அவரின் சொல்லை மதிக்காமல் அலட்சியம் செய்தான்.

ஒரு நாள் ராமு வேலை பார்த்து வந்த நிறுவனம் சில சிக்கல்களால் மூடப்பட்டது. செய்வதறியாது மனக்குழப்பத்துடன் வீடு திரும்பினான்.

அப்பாவின் மகிழ்ச்சி சிரிப்பொலியாக வாசலில் காலணிகளை கழற்றி வைத்துக்  கொண்டிருந்த ராமுவுக்கு கேட்டது.

ராமு வீட்டினுள் நுழைந்ததும், தெருமுனை பெட்டிக்கடை நடேசன் ஒரு சுவீட் டப்பாவை ராமுவிடம் நீட்டி…

“எல்லாம் உங்கப்பா தயவால் நடந்தது தம்பி. அவர் போல் ஒரு சிறந்த பிசினஸ் மேன் இல்லைன்னு கூட நான் சொல்லுவேன். எங்க கடைக்கு தினமும் வந்து பிசினஸ் சம்பந்தமான பல விஷயங்களையும் நுணுக்கங்களையும் பேச்சோடு பேச்சா சொல்லி கொடுத்ததுல… வர வெள்ளிக்கிழமை என்னோட புது சூப்பர் மார்க்கெட் திறப்பு விழாவுக்கு அப்பாவை தலைமை தாங்கி திறந்து வைக்கும்படி அழைக்க வந்திருக்கேன். சுவீட் எடுத்துக்கோங்க தம்பி.”

என்று சொன்னதும்…அனுபவ அறிவில் சிறந்த ராகவனை மதிக்காத மெத்த படிப்பு படித்த ராமுவின் கன்னத்தில் பளாரென்று ஓர் அறை விழுந்தது போல் இருந்தது.


♥️முற்றும்♥️
நா. பார்வதி

🎬 சினிமா, நாடகம், தொலைக்காட்சி போன்ற சக்திவாய்ந்த ஊடகங்கள்
கருத்துகளை விதைக்கவும், மாற்றங்களை உருவாக்கவும் வல்லமை கொண்டவை. அதே நேரம், கருத்து சொல்லுகிறோம் என்ற பெயரில்
❌ தவறான எண்ணங்கள் அல்லது 👶 குழந்தைகள் மற்றும் 👥 சமூகத்தைப் பாதிக்கக்கூடிய விஷயங்கள்
வெளிப்படுத்தப்படும் போது,
அவற்றை “போட்டி” என்ற பெயரில் 🌟 புகழ்ந்து, பாராட்டி 🏆, பரிசளித்து 🎁 ஊக்குவிப்பது நம்மை ஒரு கணம் சிந்திக்க வைக்க வேண்டிய விஷயமாகிறது.

இந்த உண்மையைச் சொன்னால்,
“பூமர்” 🌿,
“பழைய பஞ்சாங்கம்” 📜,
“பாராட்டத் மனமில்லாதவர்” 😐, “முற்போக்கு சிந்தனை இல்லாதவர்” 🤔
என்ற முத்திரைகள் உடனே குத்தப்படும்.

ஆனால் முகஸ்துதிக்காக 😏
“சோ ஸ்வீட்” 🍬, “க்யூட்” 😍,
“வாவ்” 😲, “ஆஹா” 😄, “ஓஹோ” 😮 என்று புகழ்ந்து தள்ளிவிட்டு,
பின்னால் சென்று
“இதெல்லாம் ஒரு சினிமாவா / நாடகமா / நிகழ்ச்சியா / போட்டியா!” 🎭
“இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ?” 🤷‍♂️
என்று சொல்லிக்கொள்பவர்களே,
இந்த நவநாகரீக சமுதாயத்தில் அறிவுஜீவிகள் 🧠 மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்களாக💡 கருதப்படுகின்றனர்.

🔥 “தீயது தீ போலப் பரவும்.
நல்லதும் நீர் போலப் பரவ வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது” 🌊

எனவே, இந்த சமூக ஊடகங்கள் நிறைந்த காலத்தில், நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோம், எப்படி வெளிப்படுத்துகிறோம்,
எதைப் பரப்புகிறோம் என்பதில் நமக்குள்ள பொறுப்பை 📌
சிந்தித்து செயல்படுத்த வேண்டிய அவசியம் அத்தகைய சக்திவாய்ந்த ஊடகங்களை சேர்ந்த அனைவருக்கும் இருத்தல் வேண்டும்.

திரை 🎬 அல்லது மேடையை 🎭 விட,
வாழ்க்கையில் மேலே குறிப்பிட்டுள்ள அறிவுஜீவிகள் 🧠 மற்றும் முற்போக்குவாதிகளின் 💡 நடிப்புதான்
உண்மையில் அபாரம் 👏👏👏

தவறான கருத்துக்கு மன்னனே பரிசளிக்க இருந்த போதும்,
“குற்றம் குற்றமே” ⚖️ என்று
சிவபெருமானிடமே துணிந்து சொன்ன
நக்கீரர் 🏛️ இருந்த மண்ணில்…
இன்று
அத்தகைய நக்கீரர்கள் மறைந்துவிட்டனரா⁉️,
இல்லை
உண்மையைச் சொன்னால் சுட்டுப் பொசுக்கி விடும் 🔥
நெற்றிக்கண்கள் 👀👀👀👀
அதிகமாகிவிட்டனவா⁉️

💭 சிந்தனை செய் மனமே…

ஏதேதோ படங்கள் வெப் சீரிஸ்களை பற்றி எல்லாம் பரபரப்பான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. ஆனால் உண்மையில், நல்ல படங்களும் வெப் சீரிஸ்களும் பற்றி ஏன் அதிகமாக சமூக வலைத்தளங்களில் எவ்வித பதிவுகளும் வலம் வருவதில்லை! என்ற கேள்வி என்னுள் எழுந்தது. ஒரு வேளை என் கண்ணில் அப்பேற்பட்ட கருத்துகளோ பதிவுகளோ தென்படவில்லையோ என்னவோ! என்ற பதிலும் தோன்றியது. அதன் விளைவு தான் இந்த பதிவு. என்னைப் போல் பதிவுகளை தவறவிட்டவர்களுக்காக (நல்ல வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களை பற்றிய பதிவு போட தவறியவர்களுக்காகவும்)  இதோ  “ராக்கெட் பாய்ஸ்” வெப் சீரிஸ் பற்றிய எனது கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Sony liv- இல் 2022 (சீசன் 1) மற்றும் 2023 (சீசன் 2) ஆம் ஆண்டுகளில் வெளிவந்த “ராக்கெட் பாய்ஸ்” என்னும் வெப் சீரிஸ் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படைப்பாகும். நமது இந்திய நடிகர் நடிகைகள் மற்றும் விளையாட்டு வீரர்களை பற்றிய படங்களை எல்லாம் விட… நம் நாட்டுக்கான முன்னேற்ற பாதையை வழிவகுத்து நம்மையும் நம் நாட்டையும் தலைநிமிர்ந்து நிற்க வைத்த நமது அறிவியலாளர்கள் /விஞ்ஞானிகள் பற்றிய முப்பது/ நாற்பது ஆண்டின் வரலாற்று சம்பவங்களை மிகவும் நேர்த்தியாக  விறுவிறுப்பு குறையாது இனிமையான (ரசிக்கும் வண்ணம்) பின்னணி இசையோடு கதைதயை நகர்த்தி நம்மை நம் இருக்கையோடு கட்டிப்போடுகின்றனர் நமது “ராக்கெட் பாய்ஸ்”.

இது விண்வெளி நாயகர்களின் வெறும் வரலாற்று கதை மட்டுமல்ல.  அறிவியல் தகவல்கள், அன்றைய அரசியல் தகவல்கள், எதிரி நாடுகளின் சூழ்ச்சிகள், அதற்கு பலியான நம்மவர்கள் என்று இந்த வெப் சீரிஸ் ஒரு தகவல் பெட்டகமாகவும் திகழ்கிறது.

அறிவால் ஒளிர்ந்த மகத்தான சிந்தனையாளர்களான மதிப்பிற்குரிய திரு. சி.வி. ராமன், திரு. ஹோமி ஜே. பாபா, திரு. விக்ரம் சாராபாய், திரு. சாந்தி ஸ்வரூப் பட்நாகர் மற்றும் நமது டாக்டர் திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் தங்கள் வாழ்நாளை முழுவதுமாக அறிவியல் என்ற தங்கள் ஒரே விருப்பத் துறையின் மூலம் நாட்டை கட்டியெழுப்ப அர்ப்பணித்ததற்கான ஒரு பொருத்தமான மரியாதை அஞ்சலியாகவும் இந்த தொடர் அமைந்துள்ளது.

தங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும், அது நட்பை ஒருபோதும் இழக்கச் செய்திடாது என்பதற்கு எடுத்துக்காட்டாகவும், சிறந்த நட்புக்கு இலக்கணமாகவும் திகழ்ந்த திரு. ஹாமி பாபா மற்றும் திரு. சாராபாய் நண்பர்களின் பாதை வெவ்வேறாக இருந்தாலும் பயணம் ஒன்றாகவே இருந்துள்ளது.

என்ன தான் இருவரும் வசதியான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்றாலும்,  லண்டன் கேம்ப்ரிட்ஜில் படித்தவர்கள் என்றாலும் இருவரின் கனவும் மெய்ப்பட, அவர்கள் பல தடைகளை எதிர்கொண்டும், பல ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருக்கவும் செய்துள்ளனர். அவரவர் பாதையில் பயணித்த போது எழுந்த தடைகளை இருவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து அவற்றை கடந்து வந்ததை நாம் இந்த படைப்பின் மூலம் அறிய வரும் போது நம்மையும் அறியாமல் அவர்கள் நட்புக்கு நம் மனம் மணிமகுடம் சூட்டி மகிழ்கிறது.

பல தோல்விகளை சந்தித்தாலும் மனம் தளராமல் நமது நாட்டுக்காக மீண்டும் முயற்சித்த நமது அன்றைய அறிவியலாளர்கள்/அரசியல்வாதிகள்/ விஞ்ஞானிகளின் உடல் மற்றும் மனப்போராட்டங்களை வெளிப்படுத்தும் உணர்ச்சிப்பிரவாகம்.

ஒரு நல்ல நாடு/நல்ல வீடு எதுவானாலும் நன்றாக வளர்ந்து வருமே என்றால் அதை வீழ்த்த எதிரிகள் வலம் வரத்தான் செய்வார்கள். அவ்வாறு அப்போது (இப்போதும்) வலம் வந்த நம் அண்டை நாட்டு எதிரிகளையும் அமெரிக்க நாட்டையும் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதையும், அதில் எப்படி வெற்றிக் கண்டார்கள் என்பதையும் பார்வையாளர்களான நம்மை நகத்தை கடித்துக்கொண்டு நாற்காலியின் முன் வந்து அமர்ந்து பார்க்கும் வண்ணம் காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

எட்டப்பன் ஒருவனால் உயிரிழக்கிறார் திரு. ஹோமி. அவர் உயிரிழந்தாலும் அவர் விதைத்தது அறுவடை செய்யப்படுகிறது. இந்தியா பலம் பொருந்திய நாடாக இன்றும் வலம் வருகிறது.
அதற்கு காரணமான நம் அறிவியலாளர்களையும் விஞ்ஞானிகளையும் என்றென்றும் கருத்தில் கொள்வோம். அவர்களையும் போற்றி வணங்குவோம்.

கட்டபொம்மன் வம்சாவளியினர் இருந்து வருவதை போலவே எட்டப்பனின் வம்சாவளியினரும் இன்னமும் இருந்து வருகிறார்கள்.

நம் நாட்டை பாதுகாப்பது ராணுவ வீரர்களின் கடமை மட்டுமல்ல அது இந்திய நாட்டின் பிரஜைகளான நமதும் ஆகும். கடமை உணர்ந்து செயல்படுவோம்.

நமது சுதந்திரத்திற்காக நம் முன்னோர்கள் சிந்திய வியர்வையும் உதிரமும் விலைமதிப்பில்லா பொக்கிஷம் என்பதை நாமும் நன்குணர்ந்து நமது சந்ததியினருக்கும் உணர்த்துவோம். நம் நாட்டை உயர்த்துவோம்.

முதல் அணுக்கரு உலை (nuclear reactor), முதல் ராக்கெட், முதல் தூர்தர்ஷன் நிகழ்ச்சி, முதல் ஆட்டம் பாம் என்ற நிகழ்வுகளை ஒன்றன் பின் ஒன்றாக கோர்த்து பின்னி அழகான மாலையாக நமது “ராக்கெட் பாய்ஸ்” க்கு சமர்ப்பித்துள்ள படக்குழுவினர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளும் அவரவர் கதாப்பத்திரமாகவே வாழ்ந்துள்ளனர் என்று தான் சொல்ல தோன்றுகிறது.

ஒளிப்பதிவாளரின் கைவண்ணம் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கிறது.

அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

“ராக்கெட் பாய்ஸ்” – விண்வெளியை சென்றடைந்து விட்டாலும்,  வானிலும் நம் மனதிலும் இன்றும் ஒளிரும் விண்மீன்கள்.

நன்றி 🙏

நா. பார்வதி