அத்தியாயம் 108: மண்மணம்

ஈஸ்வரன் வீட்டிலிருந்து ஹோட்டல் ரூமிற்கு திரும்பி சென்றனர் நவீன், மிருதுளா மற்றும் சக்தி. மிருதுளா அவளின் அப்பா அம்மா தங்கியிருந்த அறைக்குச் சென்று

“அப்பா அம்மா நீங்க ரெண்டு பேரும் டின்னர் சாப்டேங்களா?”

“ஆங் நாங்க சாப்டாச்சு. இங்கேயே ரெஸ்டாரண்ட் ல ஆர்டர் செஞ்சு சாப்டுட்டோம். நீங்க மூணு பேரும் சாப்டாச்சா?”

“ஆங் நாங்க சாப்டாச்சு. சரி… அது கேட்டுட்டு போக தான் வந்தேன்.
சரி நீங்க தூங்குங்கோ. நானும் போய் தூங்கட்டும்.
நாளைக்கு காலையில ஒரு ஆறு மணிக்கெல்லாம் ரெடியாகி எல்லா கோவில்களுக்கும் போயிட்டு அப்படியே சென்னை போயிடலாம் சரியா”

“ஓகே மிருது நாங்க ரெடியா இருக்கோம். குட் நைட் போய் தூங்கு”

மிருதுளா அவர்கள் அறைக்கு வந்துப் பார்த்தாள்

“என்னப்பா அதுக்குள்ள சக்தி தூங்கிட்டாளா?”

“ஆமாம்… காலையிலேந்து டிராவல் பண்ணிருக்கா இல்லையா…அதுதான் தூங்கிட்டா போல.
என்ன உன் மச்சினன் உன்னை மதிச்சு நாளைக்கு காதுக்குத்துக்கு கூப்பிட்டிருக்கான்…
நீ என்னடான்னா வரலைன்னு சொல்லிட்டப் போல!!!”

“ஏன் உங்களுக்கு போகணும்னா நாம போயிட்டு வரலாமே!!
எப்பவும் நான் மட்டுமே தான் குத்திக்கறேன்.
ஒரு தடவை நீங்களும் குத்திக்கோங்கோ …காத..!!”

“எனக்கும் அந்த குடும்பத்துக்கும் உறவு விட்டுப் போய் ரொம்ப வருஷங்களாயாச்சு…
உனக்கு தானே அவா எல்லாம் சொந்தம். அதுதான் உன் கிட்ட கேட்டேன்.
எனக்கு தெரியாம எவ்வளவோ காது குத்திருக்கா நான் இல்லன்னு சொல்லலை …
ஆனா என்னைக்கு எனக்கு தெரிஞ்சே காது குதத்தினாளோ அன்னேலேந்து நான் உஷாராகிட்டேன்.
நானா அங்க போகணும்னு சொன்னேன்!! நானா அவாளை டிரிப்புக்கு கூட்டிண்டு போகணும்னு சொன்னேன்?
இல்ல நானா வாட்ச், வைர மூக்குத்தி அப்புறம் என்ன அது ..
ஆங் ஜர்கான் தோடு அன்ட் டேப்லெட் வேற….
ம்… என்ன ஆச்சு காலையில நீ அவாளுக்கு கொடுத்தது மாலையில் கை மாறிடுத்து பார்த்தே இல்ல!!.”

“ஆமாம் நவீ. எனக்கு அதுல ரொம்ப கோவம் தான்.”

“இதுக்குத் தான் பெரியவா சொல்லி வச்சிருக்கா….
தானமானாலும், பரிசானாலும், உதவியானாலும் அதோட மதிப்பு தெரிஞ்சவாளுக்கு மட்டும் தான் இதெல்லாம் செய்யணும்னு.
அதை விட்டுட்டு கண்டவாளுக்கெல்லாம் செஞ்சா அது இப்படி தான் கை மாறும். கொடுத்தவாளையே வேதனையும் பட வைக்கு.”

“ம்…உண்மை தான்.
நான் ஒத்துக்கறேன்.
இனிமே இவாளுக்கு எல்லாம் எதுவுமே வாங்கிக் குடுக்க மாட்டேன்.
இதுவே கடைசி நவீ.”

“ம்…பார்ப்போம் பார்ப்போம்.”

“இல்ல நவீ…இவ்வளவு வருஷங்களா நானும் விட்டுக் கொடுத்து வந்ததில் அவா கொஞ்சமாவது மாறியிருப்பானு நினைச்சேன்.
இல்லை துளி கூட அவா மாறலை. இன்னமும் அவா மனசுல அதே வஞ்சத்தோட தான் இருக்கா.
நீங்க எப்பவும் சொல்லறா மாதிரி இவா எல்லாம் எப்போதும் திருந்த மாட்டானு நான் நல்லா புரிஞ்சுண்டுட்டேன்.
இனி நீங்க பார்க்கப் போறது வேற வேற வேற மாதிரியான மிருதுளாவ.”

“டைலாக் எல்லாம் சூப்பர் தான். கை தட்டி விசிலடிக்கணும் போல தான் இருக்கு…”

“ஏன் இழுக்கறேங்கள் நவீ… சொல்ல வந்ததை சொல்லிடுங்கோ”

“இல்ல உன் பேச்சு …
அவா உன் முன்னாடி நல்லவா மாதிரி நடந்துண்டாலே காணாம போயிடுமேன்னு சொல்ல வந்தேன்.”

“இனி அது மாதிரி எல்லாம் நடக்கவே நடக்காது நவீ.
மதியாதார் வாசல் மிதியாதேன்னு சொல்லுவா…
அது மூனாம் மனுஷாலுக்கு தான்னு இவ்வளவு நாளா நினைச்சுண்டிருந்தேன். ஆனால் அது பெத்தவாளானாலும், கூடப் பிறந்தவாளானாலும் பொருந்தும்னு இப்போ தான் உணர்ந்தேன்.
என்னை பாடாப்படுத்தினா, உங்களை மதிக்கறதே இல்லை, இன்னமும் என்னைப் படுத்திண்டு தான் இருக்கா. அவாளோட படுத்துற ஸ்டைல் அதாவது பாங்கு இருக்கே அதை இந்த பதினேழு வருஷமா அப்படியே ஒரே மாதிரி தான் ஃபாலோ பண்ணிண்டு வரா .
இதுல என்னன்னா அதெல்லாம் நான் புரிஞ்சுக்காததால தான் அவாளுக்கு திருப்பி பேச மாட்டேங்கறேன்…
இல்ல திருப்பி எதுவும் செய்ய மாட்டேங்கறேன்ங்கறது அவாளோட நெனப்பு…
ஆனா உண்மையில் சொல்லப் போனா நான் இத்தனை வருஷங்களா அவாளுக்கு வாய்ப்புகளைக் கொடுத்துண்டே வந்திருக்கேன்…
ஏதாவது ஒரு வாய்புல அல்லது சந்தர்பத்துல எப்பயாவது…
மனசுக்குள்ளயாவது…
“ச்சே இந்த பொண்ணை நாம என்ன பாடுபடுத்தியிருக்கோம்!! ஆனாலும் அவ ஒரு வார்த்தைக்கூட மரியாதைக் குறைவாவோ இல்ல திருப்பி அவமானப்படுத்தவோ இல்ல பேசவோ கூட செய்ய மாட்டேங்கறாளே…
எங்களுக்கு எப்போதும் நல்லதே தானே செஞ்சிண்டிருக்கா…” ன்னு ஒரு மூலையில நினைச்சிருந்தான்னா ஒருவேளை திருந்தி இருக்கலாம்!!!
ஆனா இவா நீங்க சொல்லறா மாதிரி ஜென்மத்துக்கும் திருந்த மாட்டானு எனக்கு நல்லாவே தெரிஞ்சுடுத்து. எனக்கு அவா கிட்ட ஒரே ஒரு எதிர்பார்ப்பு தான் இருந்தது.
அதை அவா உடைச்சு சுக்கு நூறாக்கிட்டா ஸோ இனிமேல் எனக்கு எந்த வித எதிர் பார்ப்பும் இல்லை பந்தமும் இல்லை. நான் படிச்சது கான்வென்ட்டா அங்கே ஸ்கூல் சுவற்றில் எழுதியிருந்தது என் மனசுலப் பதிஞ்சிடுத்து “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு” னுட்டு போட்டிருந்தது…
அதை செய்யப் போய் நல்லா ரெண்டு கன்னத்துலேயும் மாறி மாறி வாங்கிண்டதுக்கப்புறமா தான் புத்தி வந்திருக்கு அதெல்லாம் கடவுள் அவதாரங்களால தான் முடியும் நான் வெறும் சாதாரணமான மனுஷி தானே. என்ன பண்ண?
ஒரு நாள் ஃபேஸ்புக்ல ஒண்ணு படிச்சேன்…”நீ எவ்வளவு பொறுத்துக் கொள்கிறாய் என்பதில் தான் அடுத்தவர் உன்னிடம் எப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்பதும் அடங்கும். ஆகையால் உன் பொறுமையை எப்போது முறித்திறிய வேண்டுமென்பது உன்னிடம் தான் உள்ளது. கவனமாக இரு” னுட்டு எனக்காகவே போட்டா மாதிரி இருந்தது அந்த போஸ்ட்.
நான் நிறைய யோசிச்சாச்சு ….
இவாளுக்கு நான் என்ன தான் நல்லது நினைச்சாலும் சரி செஞ்சாலும் சரி என்னை கெட்டவள்ன்னு தான் முத்திரைக் குத்தப்போறா …
அப்புறமும் நான் ஏன் இவாளுக்கு நல்லவளா இருக்கணும்? சொல்லுங்கோ!!”

“மிருது!!! நீ ஒண்ணு அந்த எக்ஸ்ட்ரீமுக்கு போற இல்லாட்டி இந்த எக்ஸ்ட்ரீமுக்கு வர…
நீ சொல்லறதெல்லாமே வெரி வெரி கரெக்ட் தான்…
ஆனா நீ கடைசியா சொன்ன பாரு இவாளுக்கு ஏன் நீ நல்லவளா இருக்கணும்னு….
அது தான் எனக்கு பயத்தைக் குடுக்கறது”

“இதுல என்ன பயப்படறதுக்கு இருக்கு நவீ”

“இல்ல நீயும் அவாளை மாதிரியே மாறப்போறயோன்னு தான்….
நீ நல்லவள்.
நல்லவளாகவே இரு.
ஆனா அவாகிட்ட வேண்டாம் அவ்வளவு தான் நான் சொல்வேன்…
ஆனா நீ ஏன் அவாகிட்ட கெட்டவளாக
நடந்துக்கணும்?”

“ச்சே ச்சே!!! நவீ நீங்க தப்பா எடுத்துண்டுட்டேங்கள்.
நான் கெட்டவளா ஆவேன்னும் சொல்லலை…
இனி அவாளுக்கு கெட்டதை செய்யவேன்னும் சொல்லலை…
அது என்னால முடியாததும் கூட…
நான் என்ன சொல்ல வந்தேன்னா நல்லது செய்து கெட்டவளாகறதை விட எதுவும் செய்யாமலிருந்தே கெட்டவளா இருந்துடறேனேனு சொல்ல வந்தேன்….
அப்படி இருந்தா எனக்கும் மனசு வலிக்காதில்லையா!!
ஆமாம்…நாம இப்படி எப்போதும் நல்லதையே செஞ்சுட்டு கடைசியில அவா அவாளோட குணத்தைக் காட்டினா அப்புறம் நமக்கு வலி ரொம்ப இருக்குமில்லையா…
அதே நாம எதுவுமே பண்ணாம இருந்துட்டு அவா அப்படியெல்லாம் பண்ணியிருந்தா நமக்கு வலியே இருந்திருக்காதுன்னு சொல்ல வந்தேன்.”

“ஓ!! அப்படி!! ஓகே ஓகே!!
நான் நினைச்சேன் அடிப்பட்டு அடிப்பட்டு ஒரேயடியா நல்லவளேந்து அப்படியே கெட்டவளாகிடுவியோன்னு!!
அதுதானே!
நீ சொன்னா மாதிரி உன்னால அது முடியாது தான்.
ஆனாலும் அவா உன்னை அப்படி மாத்திட்டாளோன்னு கொஞ்சம் பயந்துட்டேன் அவ்வளவு தான்‌”

“அப்படி இல்லை நவீ…
ஆனாலும் அவா என்னை மாத்ததான் செய்திருக்கா.
வெறும் பச்ச மண்ணாட்டம் உங்காத்துக்குள்ள வந்தேன்…
அங்கேயே வேரூன்றிய மரமாட்டம் நீங்களும், உங்களை இறுக்க பிடித்திருக்கும் வளமையான மண் போலவும் இருக்கலாம்னு நினைச்சேன். நீங்க சொன்னா மாதிரி இந்த மண்ணை எல்லாருமா போட்டு அடிச்சு, மிதிச்சு, சுட்டு, அதில் துப்பி எல்லாமே செஞ்சா, செஞ்சுண்டுமிருக்கா.
கணவன்ங்கற செடியை பிடிச்சுண்டு அவரையும் வளமாக்கி நாமளும் வளமாகலாம்னு தான் வந்தது மண்ணுங்கற மனைவி.
ஆனால் அந்த கணவன் அந்த மண் தன்னை வந்து பிடித்துக் கொண்ட புதிதில் எல்லாருமா தூற்றி பாடாய்ப் படுத்தும் போது அவர் கண் பார்க்கவில்லை, காது கேட்கவில்லை, வாய் பேசவில்லை, மூலை செயலிழந்து போனதால் தான் மண் எவ்வளவு வளத்தை அள்ளிக் கொடுத்தாலும் இன்னமும் தூற்றப் பட்டுக்கொண்டே இருக்கு…
கணவன்ங்கற செடி எப்போது அந்த மனைவிங்கற மண்ணோடு சேர்ந்தானோ அப்போதே அவர்களைச் சுற்றி வளர்ந்த பழி, பொய், திமிர், படுத்தல்கள், இகழ்ச்சி, அவமரியாதை போன்று (அவன் வீட்டினுள்) முளைத்த புல்லுருவிகளை எல்லாம் வெட்டி எறிந்திருந்தால் அந்த மண்ணை எவரும் தூற்றியிருக்க மாட்டார்கள்.
தூற்றவும் யோசித்திருப்பார்கள். ஏனெனில் தாங்கள் புல்லுருவிகளானால் வெட்டி எறியப்படுவோம் என்பதை உணர்ந்திருப்பார்கள்.
ஆனால் அந்த செடி அதை செய்யாது அது பாட்டுக்கு தானாக மண்ணின் வளங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு பெரிய விருட்சமானது.
அப்போது அந்த விருட்சம் தங்களுக்கு இனி தீனி போடாது என்றுணர்ந்த புல்லுருவிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து முன்பு மண்ணை தாக்கியது போலவே அந்த விருட்சத்தை தாக்கியது.
அப்போது தான் விருட்சம் அதன் வலியையும் வேதனையையும் உணர்ந்து இனி அங்கே இருந்தால் நாம் வளர முடியாது என்ற முடிவுக்கு வந்தது.
உடனே அந்த இடத்திலிருந்து தனது மண்ணோடு வேறு இடம் சென்றது. அன்று முதல் அந்த விருட்சம் தான் செடியாக இருந்த இடத்தையே மறந்துப் போனது.
ஆனால் மண் அன்றும் மண் தான் இன்றும் மண் தான்.
செடி விருட்சமானதும் மண்ணிடம் தன்னையும் மணலாக மாறச்சொல்லி வற்புறுத்தியது….
மண்ணும் மணலாகியிருந்தால் அப்படியே சர்ரென்று சருக்கி எங்காவது தப்பித்திருக்கலாம் …
ஆனால் விருட்சத்துக்கு தெரியாது இந்த மண் மணலானால்…
தான் அதில் அப்படி கம்பீரமாக நிற்க முடியாதென்பது.
ஆகையால் தான் மண் மணலாகாமல் இவ்வளவு நாட்கள் அனைத்தையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்தது.
மண்ணில் விதையைத் தவிர வேறு எது வீழ்ந்தாலும் அவற்றை மட்க வைத்துவிடும்.
அது போல தான் திருமணம் என்ற விதையை இந்த மண்ணில் விதைத்ததால் அந்த விதை வளரும் பருவத்திலேயே அதனோடு சேர்ந்து அந்த மண்ணில் விளைந்த புல்லுருவிகளில் நல்லவைகளை விட்டுவிட்டு தேவையில்லாதவைகளை மட்கச் செய்தது அந்த மண்.
அப்படி மண் மட்கச் செய்துக் கொண்டிருந்ததிலே அதுவும் சோர்ந்துப் போய்விட்டது…
இனி அதனால் அதற்கு மேல் எந்த புல்லுருவிகளையும் மட்கச் செய்ய முடியாது என்றானதும் மணல்சாரி மண்ணாக மாற முடிவெடுத்துள்ளது. அதாவது விருட்சம் பாதிக்காதவாறு மண்ணாகவும் மற்றவை எதுவாக இருந்தாலும் அவைகளுக்கு மணல்சாரி மண்ணாக இருந்து நம்முள் தங்க விடாது சருக்கிக் கொண்டே போகப் போகிறாள் இந்த புது வகையான மணல்சாரி மண்ணான உங்கள் மனைவி மிருதுளா.”

“அப்பப்பா!!! மிருது கலக்கிட்ட போ…
நீ சொன்னது அத்தனையும் உண்மை. நான் ஆரம்பத்துல கொஞ்சம் அவாளை லூசா விட்டுட்டேன்…
அப்பா அம்மா தானேனுட்டு கொஞ்சம் விட்டது தப்புதான்.
ஆரம்பத்துலேயே கடிவாளத்தைப் போட்டிருந்தா குதிரைகள் சரியா ஓடியிருக்கும் மண்ணுக்கும் பாதிப்பு வந்திருக்காது….
ஆனால் அந்த குதிரைகளுக்கு அவ்வப்போது கடிவாளத்தைப் போட்டுண்டு தான் இருந்தேன்….
ஒரு கட்டத்துல அதுகள் அதுக்கெல்லாம் அடங்காததுகள்னு தெரிஞ்சுடுத்து…
அதுனால தான் நான் பேசாம இருந்துட்டேன்…
அது உன்னை இவ்வளவு தூரம் பாதிச்சிருக்கும்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கலை.
சாரி மிருது.”

“இட்ஸ் ஓகே நவீ.
நீங்களும் அப்போ திருமணம்ங்கறதுல நான் எப்படி புது மண்ணாக இருந்தேனோ அதே போல நீங்களும் புது விதையாகத் தானே இருந்தேங்கள்.
நீங்களும் சுற்று சூழல்களை புரிஞ்சிண்டு வேரூன்றி வளர்றதுக்கு கொஞ்சம் வருஷம் எடுத்தது…
அதை அவா எல்லாருமா யூஸ் பண்ணிண்டுட்டா அவ்வளவு தான். ‘மண்ணுங்கிறது காலுக்குக் கீழே சும்மா கிடக்குற தூசி’ ன்னுதான் பெரும்பானவாளோட நினைப்பு. அப்படித்தான் உங்க ஆத்துலேயும் நினைச்சிருக்கா.
ஆனா அதுனால தான் அதில் விதைத்த திருமணம்ங்கற விதை
இன்று விருட்சமாக வளர்ந்து தனக்கும் தன்னை வளமாக வளரச்செய்த மண்ணுக்கும் அவர்களின் சின்ன செடிக்கும் பாதுகாப்பாக இருக்குங்கறதை அவாளால ஏத்துக்க முடியாதைக்கு தான் அவா இப்படி கிடைக்குற சந்தர்ப்பங்களில் எல்லாம் என்னை படுத்திண்டிருக்கா.
ஆனா இனி அவாளுக்கெல்லாம் டாட்டா பை பை சொல்லிட்டு என்னோடிருக்கும் விருட்சத்தையும், செடியையும் பத்திரமாக பார்த்துக் கொண்டு நானும் வளமாக வாழப் போகிறேன்.
டாட்”

“வாவ்!!! வாவ்!!! வாவ்!!! மிருது ஆசம். சூப்பர் இப்போ அடிக்கறேன் பாரு விசில்.”

“அச்சச்சோ!! பேசாம இருங்கோப்பா குழந்தை எழுந்துக்கப் போறா.
அப்புறம் ஹோட்டல் ஸ்டாஃப் யாராவது என்ன ஏதுன்னு கேட்டுண்டு வந்திடப் போறா”

“ஓகே !! ஓகே!! ஓகே!! ஆனா ஒண்ணு உன்கிட்ட நான் சொல்லியே ஆகணும் மிருது.”

“என்னது நவீ?”

“நீ இவ்வளவு பொறுமையா இருந்ததால தான் என்னால அவாளை எல்லாம் நல்லாவே புரிஞ்சுக்க முடிஞ்சுது.”

“என் பொறுமை எப்படி உங்களுக்கு அவாளை புரிய வச்சுது? புரியலையே நவீ!”

“அதாவது அவா அப்படி உன்னைப் படுத்தின போதெல்லாம் நீ அமைதியா ஏதும் திருப்பி சண்டை போடாமலும், திருப்பி பேச்சுக்குப் பேச்சு பேசாமலும் இருந்ததால் தான் எனக்கு தப்பு யார் சைடுல இருக்குனு தெரிஞ்சுக்க முடிஞ்சுது.”

“ம்…ஹூம்…ப்ளீஸ் எக்ஸ்ப்ளேயின் நவீ”

“சப்போஸ் நீயும் அவாகிட்ட எகிறிண்டு போயிருந்தேனா அப்புறம் சண்டை பெருசாகியிருக்கும்.
அப்போ அந்த சண்டையை நிறுத்தறதுல தான் என் கவனம் போயிருக்குமே தவிர தப்பு யார் பண்ணிருப்பானு யோசிச்சிருக்கக் கூட மாட்டேன்.
ஆனா நீ அமைதியா பொறுமையா இருந்ததால ஐ காட் எ க்ளியர் பிக்சர் ஆஃப் எவ்ரிதிங்”

“ஓ!!! அப்படி சொல்லறேளா!!! ஓகே!! இப்போ புரியறது.
எல்லா நேரங்களிலேயும் நாம திருப்பி பேசணும்னு இல்ல நவீ.
அதே போல எல்லா சண்டைகளிலும், போராட்டங்களிலும் நாம கலந்துக்கணும்னும் இல்லை.
நமது சண்டைகளையும், பேச்சையும், போராட்டங்களையும் எப்போ நம்ம எதிராளி கேட்பார்கள், புரிந்து கொள்வார்கள்னு தோனறதோ அப்போ போதும்.
இல்லாட்டி அப்படியே நகர்ந்துப் போயிடறது தான் நம்ம மனநிம்மதிக்கு நல்லது.
எப்பவுமே கத்திண்டும் சண்டைப் போட்டுண்டும், எல்லாத்துக்கும் போராடிண்டும் இருந்தா குடும்பம் நல்லாவா இருக்கும்?
அதுவுமில்லாமல் பொறுத்தார் பூமி ஆள்வார்னு சொல்லுவா இல்லையா அது போல என்னோட இந்த பதினேழு வருடப் பொறுமை எனக்கு இனி நான் வாழப் போற இருபது, முப்பது அல்லது ஐம்பது வருஷங்களை நிம்மதியாக இருக்கச் செய்யப் போறது.
இது என்னோட ஸ்ட்ரேடர்ஜீன்னு சொன்னாலும் ஐ வில் நாட் கேர் அபௌட் இட்.
ஏன்னா நான் அவாகிட்டேந்து எல்லாம் ஒதுங்கினாலும் அவாளுக்கு என்கிட்ட வந்து ஏன் இப்படி பண்ணறனு கேட்க இனி எந்த வாயுமில்லை.
அப்படியே கேட்டுண்டு வந்தாலும் என் விருட்சம் அவாளை எல்லாம் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டிடாது?”

“ஓ!! ஷுவர்.
நோ டவுட் அபௌட் இட்.
நிச்சயமா.
இனி இந்த விருட்சம் இருக்கும் காலம் வரைக்கும் அதுக்கு சொந்தம், பந்தம் எல்லாமே இந்த பொறுமையான பூமா தேவியும் அவளின் அழகிய இளவரசியும் தான்.
வேறு எவருமில்லை.
வேறு எவரும் இனி நம்மை வீழ்த்தும் எண்ணத்திலோ இல்ல
நமக்கு தீங்கு விளைவிக்கும் எண்ணத்திலோ இல்ல
நம்மளை அவமானப்படுத்தும் விதத்திலோ ஏதாவது செஞ்சான்னா அவாளை எல்லாம் பிடித்து நொறுக்கிடுவேன்.
கவலையில்லாமல் நிம்மதியா படுத்துத் தூங்கு மிருது.
டைம் என்ன ஆயிடுத்து பாரு”

“ஓ மை காட்!!! இட்ஸ் டுவெல்வோ க்ளாக்!!! சரி சரி சரி படுங்கோ தூங்குவோம். நாளைக்கு காலையில என் அப்பா அம்மா ஆறு மணிக்கெல்லாம் ரெடியாகி வந்து காலிங் பெல் அடிக்கப்போறா நாம தூங்கிண்டு இருக்கப் போறோம்…குட் நைட் நவீ.”

“குட் நைட் மிருது”

மறுநாள் விடிந்ததும் அனைவரும் எழுந்து கோவில்களுக்கெல்லாம் சென்று விட்டு சென்னையை சென்றடைந்தனர்.
அங்கே சில நாட்கள் தங்கிவிட்டு ஜூலைப் பத்தாம் தேதி குவைத்துக்கு திரும்பினர் நவீன் குடும்பத்தினர்.
சக்தி நன்றாக படித்து ப்ளஸ்டூ தேர்வில் அவளின் பள்ளியிலேயே இரண்டாவதாக நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்று லண்டனில் சென்று படிக்க வேண்டும் என்ற அவளின் கனவும் நெனவானது.
அவளை நவீனும் மிருதுளாவும் லண்டனுக்கு கல்லூரியில் விட்டு வரச் சென்றனர்.
அவளை அங்கே விட்டுவிட்டு ஊருக்கு திரும்பும் நாளன்று நவீனால் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது தவித்தான்.
ஆனால் சக்தி முன் அழுதால் அவளின் தன்னம்பிக்கையை உடைத்துவிடுவோமோ என்றெண்ணி எப்படியோ மிகவும் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
சக்திக்கும் அழுகை அவள் கண்களில் கண்ணீராக எட்டிப்பார்த்தது உடனே மிருதுளா அவளைக் கட்டியணைத்துக் கொண்டு

“இது உன்னுடைய கனவு இல்லையா.”

“ஆமாம்”

“இதுக்காக நீ கஷ்டப்பட்டு படிச்சு இங்க வந்திருக்க?”

“ஆமாம்மா”

“நாற்பதாயிரம் பேர் அப்பளைப் பண்ணி அதுல மூவாயிரம் பேர் தான் தேர்வாகியிருக்கா அதுல நீயும் ஒருத்தி இல்லையா”

“ஆமாம்மா”

“நாங்க உன்னை நினைத்து மிகவும் சந்தோஷப்படறோம்.
உன் அப்பா அம்மான்னு சொல்லிக்கறதுல எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு.
அதை நீ எங்களுக்குத் தந்திருக்க சக்திமா.
இனி உன் ஆசைகள், உன் கனவுகள் அதையெல்லாம் தேடிப் போ கண்டுபிடி வாழ்க்கையை சுவாரஸ்யமா வாழக்கத்துக்கோ…
அழதே கண்ணா.
உனகாக நாங்க ரெண்டு பேரு எப்பவுமே இருப்போம்.
சரியா.
ஆர் யூ ஓகே நவ்.
இல்லாட்டி வா எங்களோடவே திரும்பி குவைத்துக்கே வந்துடு”

“ம்…ம்….அப்புறம் எதுக்கு இவ்வளவு என்ட்ரன்ஸ் எக்ஸாம் எல்லாம் எழுதினேனாம்”

“ம்…தெரியறதுல்ல…
அப்போ ஒழுங்கா இங்கு இருந்து உன் படிப்பை முடிச்சிட்டு ஊருக்கு வா.
சரியா.
எப்படியும் நாலு மாசத்துக்கு ஒரு தடவை வரலாமே அப்புறமென்ன.
ஓகே சியர்அப் மை பேபி.”

“இப்போ பாருமா.
அம்மா அன்ட் அப்பா பத்திரமா குதைத் போயிட்டு வாங்கோ.
நான் நல்லா படிச்சுட்டு ஊருக்கு வர்றேன். இந்த டிசம்பரில் பார்ப்போம் பை.
எனக்கு கிளாஸுக்கு நேரமாச்சு பை பை. பைப்பா”

என்று நவீனையும் மிருதுளாவையும் இறுக்கக் கட்டிக்கொண்டு முத்தமிட்டு அவளின் கனவுகளுக்குப் பின்னால். சென்றாள் சக்தி.

ஹுத்ரோ ஏர்போர்ட்டில் நவீன் பாத்ரூமுக்குள் அடிக்கடிச் சென்று அழுதுவிட்டு வந்தான். அவர்களின் ஃப்ளைட்டுக்காக அமர்ந்திருந்த போது

“நவீ என்னது இது இப்படி அழுதுண்டே இருக்கேங்கள்.
நம்ம சக்தி இவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சு இந்த காலேஜ்ல சேர்ந்திருக்கா.
அவளே தன்னம்பிக்கையோட எவ்வளவு தெளிவா முடிவெடுத்து வந்திருக்கா…
அவ்வளவு நல்லா அவளை வளர்த்திருக்கோம் நாம…
அதை எல்லாம் நினைச்சுப் பெருமைப் படுவேங்களா அதை விட்டுட்டு அழுதுண்டே இருக்கேங்களே!!”

“அழுதேனா இல்லையே”

“ம்…உங்க முகமே காட்டிக் கொடுக்கறதே”

“இல்ல மிருது …பதினெட்டு வருஷமா நம்ம கூடவே இருந்துட்டு இப்போ திடீன்னு அவ பாட்டுக்கு கிளம்பி லண்டன் வந்துட்டா…
நாம குவைத்துல என்ன பண்ணப்போறோம்?”

“இது நல்லா இருக்கே!!!
அதுக்காக அவளை நம்ம கூடவே வச்சுக்க முடியுமா சொல்லுங்கோ.
அவளைப் பெத்தோம் சந்தோஷமா நல்லபடியா வளர்த்தாச்சு.
இப்போ அவ அவளோட கனவுகளைத் தேடி போக ஆரம்பிச்சுட்டா…
இனி நாம நம்மளால ஆன ஹெல்ப்பை மட்டும் பண்ணிண்டு பேசாம நாம இருக்கற இடத்துல இருந்துக்க வேண்டியது தான்.
எனக்கும் வருத்தமா தான் இருக்கு ஆனாலும் ப்ராக்டிக்கலாவும் யோசிக்கணும் இல்லையா நவீ.
உங்க பொண்ணை படிக்க காலேஜ்லுல விடறதுக்கே உங்களுக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கே…
அப்போ இருபத்தி இரண்டு வருஷமா என்னை பார்த்து பார்த்து வளர்த்த என் பேரன்ட்ஸை கல்யாணம்ங்கற பேர்ல ஒரே நாள்ல எல்லாத்தையும் விட்டுட்டு உங்காத்துக்கு வந்தேனே அப்போ எங்க அப்பா அம்மாக்கு எப்படி இருந்திருக்கும்!!”

“எஸ் எஸ்…எனக்கு புரியறது ஆனாலும் மனசு கேட்கமாட்டேங்கறது மிருது.”

“இட்ஸ் ஓகே நவீ.
உங்களுக்கு நான் எனக்கு நீங்கள்…
இனி அவ்வளவு தான்.
சக்தியை நாம் எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக் கூடாது.
அவள் அவளின் கனவுகளை தேடி பிடித்து வரட்டும்.”

என்று நவீனின் தோளில் சாய்ந்துக் கொண்டே சொன்ன மிருதுளாவின் தோள்களில் தன் கையைப் போட்டு அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். ஃப்ளைட் ஏறினர். எப்போதும் மூவராக பயணித்தவர்களில் ஒருவருக்கு சிறகு முளைத்து தானாகவே பறக்க ஆரம்பித்து விட்டதால்
இன்று இருவரானார்கள்.

குவைத்தில் அவர்கள் வீட்டுக்கு ஒன்றரை நாள் பயணம் முடித்து வந்து சேர்ந்தனர். வந்ததும் சக்திக்கு கால் செய்து பேசினார்கள் நவீனும் மிருதுளாவும். தன் அப்பா அம்மாவிடமிருந்து கால் வந்ததும் மகிழ்ச்சியடைந்தாள் சக்தி.

மறுநாள் விடுமுறை என்பதால் நவீன் வீட்டிலேயே இருந்தான். காலை எழுந்ததும் வீட்டில் சக்தி இல்லாதது அவர்களுக்கு ஏதோ ஒன்றைத் தொலைத்ததுப் போலவே தோன்றியது.

மிருதுளா காலை டிபனை செய்யணுமே என்பது போல செய்தாள். அதை சாப்பிடனுமே என்பது போல இருவரும் ஒரே ஒரு இட்டிலி மட்டும் சாப்பிட்டு எழுந்தனர். இரண்டு மூன்ளு நாட்களாக தூங்காத நவீன் அன்று மத்தியம் சோஃபாவில் படுத்தப் படியே தூங்கிப் போனான்.

சற்று நேரத்தில் அது அவனுக்கு அசௌகரியமாக இருக்கவே பெட்டில் படுக்கலாமென்று எழுந்து தன் அறைக்குச் சென்றான். அப்போது சக்தி அறையிலிருந்து அழுகைக் குரல் கேட்டது. சக்தி அறையிலிருந்து எப்படி அழுகைக் குரல் கேட்கிறது என்ற ஆச்சர்யத்தோடு அங்குச் சென்றுப் பார்த்தான்.

தொடரும்….











Leave a comment