அத்தியாயம் 107: மூணாரும் மூட் அவுட்டும்!

ஐவரும் சென்னையிலிருந்து கிளம்பி நான்கு மணிநேரம் காரில் பயணம் செய்து ஈஸ்வரன் வீட்டுக்குச் சென்றனர். அங்கே அவர்கள் தன்னிடம் சொன்னது போல வருவார்களா அல்லது நவீன் சொன்னது போல கடைசி நேரத்தில் வரவில்லை என்று சொல்லிவிடுவார்களா!!! அங்கே கஜேஸ்வின் இருப்பார்களா? இருந்தால் என்ன செய்வது என்று மனதில் பல குழப்பங்களுடன் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினாள் மிருதுளா. கதவைத் திறந்தார் ஈஸ்வரன்

“ம்….வா வா. எங்கே உன் அம்மா, அப்பா, நவீன் எல்லாரும்”

“அவா கீழே கார்ல உட்கார்ந்திருக்காப்பா. உங்களை அழைச்சுண்டு போக தான் நான் வந்திருக்கேன். இப்போ கிளம்பினா தான் சாயந்தரத்துக்குள்ள முன்னார் போய் சேர முடியும்.”

“ஓ!! அப்படியா. சரி சரி சரி. நாங்களும் ரெடியா தான் இருக்கோம். கதவைப் பூட்டிட்டு கிளம்ப வேண்டியதுதான். வா போகலாம்”

“அம்மா அந்த பேக் தாங்கோ நான் தூக்கிண்டு போறேன். நீங்க ரெண்டு பேரும் கதவைப் பூட்டிட்டு வாங்கோ”

என்று அவர்களின் வருகையை நவீனிடம் கூற வேகவேகமாக இரண்டாவது தளத்திலிருந்து மாடிப்படிகளில் இறங்கிச் சென்றாள் மிருதுளா. கீழே சென்றதும் நவீன் அவள் கையிலிருந்த பையை கவனிக்காமல் அவள் மட்டும் வருவதைப் பார்த்து

“என்ன மிருது நான் சொன்னது தானே நடந்தது!! சரி சரி வா நீ வந்து கார்ல
ஏறு நாம போவோம்”

“இல்லை நவீ அவா ரெண்டு பேரும் நம்ம கூட வரா. இதோ அவா பை. ம்…‌இதோ வந்துட்டா. வாங்கோ வண்டியில் ஏறுங்கோ”

என்றதும் ஈஸ்வரன் நேராகச் சென்று டிரைவர் பக்கத்தில் முன் இருக்கையில் அமர்ந்துக் கொண்டார். பர்வதம், அம்புஜம், ராமானுஜம் மூன்று பேர் அமரக்கூடிய நடு இருக்கையில் அமர்ந்துக் கொண்டனர். நவீன், மிருதுளா மற்றும் சக்தி பின்னால் இருந்த மூன்று பேர் அமரக்கூடிய இருக்கையில் அமர்ந்துக் கொண்டனர். அனைவரும் காரில் ஏறியதும் அம்புஜம் பர்வதீஸ்வரனிடம்

“எப்படி இருக்கேங்கள் மாமா அன்ட் மாமி? கடைசியா நாம வேனு கல்யாணத்துல பார்த்தது இல்லையா”

“ஆமாம். நாங்க நல்லா இருக்கோம். நீங்க எப்படி இருக்கேங்கள். வேனு மாட்டுப்பொண்ணு எல்லாரும் எப்படி இருக்கா?”

“எல்லாரும் நன்னா இருக்கா மாமி.”

என்று கொஞ்ச நேரம் குசலம் விசாரித்து விட்டு பின் பொதுவான சில விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்த போது வண்டி ஓர் ஹோட்டலின் வாசலில் நின்றது. அனைவரும் இறங்கி காலை உணவை உண்டபின் மீண்டும் கார் முன்னாரை நோக்கிச் சென்றது. அதிகாலை எழுந்ததாலும் காலை உணவாக வெண்பொங்கல் உண்டதாலும் ஈஸ்வரனைத் தவிர அனைவரும் நன்றாக உறங்கிப் போனார்கள். ஒரு ஐந்து மணிநேரம் ஆனதும் முழித்துக் கொண்ட நவீன் டிரைவரிடம்

“அண்ணா எங்க வந்திருக்கோம்? இன்னும் எவ்வளவு நேரமாகும் அந்த ரிசார்ட்டுக்கு போக?”

“சார் கிட்டக்க வந்துட்டோம் சார். இன்னும் ஒரு ஒன்றரை மணி நேரம் தான் சார் அங்க ரீச்சாகிடுவோம்”

“ஓகே! ஓகே!”

என்று நவீனும் டிரைவருமாக பேசிக் கொண்டதில் அனைவரும் விழித்துக் கொண்டனர். அதைக் கேட்ட மிருதுளா நவீனிடம்

“அப்படிப் பார்த்தா நாம அங்க ரீச்சாக எப்படியும் இரண்டு இரண்டரை மணியாகிடுமே நவீ!!”

“ஆமாம்…ஆகலாம்”

“அப்போ வழியிலேயே எங்கயாவது லஞ்ச் முடிச்சுட்டு போகலாமா? எல்லாரும் வயசானவா ஸோ பசி தாங்க மாட்டா இல்லையா…இப்பவே மணி ஒன்னாச்சு”

“அப்படியா சரி டிரைவர் நல்ல வெஜ் ரெஸ்டாரண்ட்டா பார்த்து நிப்பாட்டுங்க சாப்டுட்டு போகலாம்”

என்றதும் வண்டி ஓர் ஹோட்டல் முன் நின்றது. அனைவரும் இறங்கி மத்திய சாப்பாடு சாப்பிட்டுவிட்டு மீண்டும் காரில் ஏறி பயணித்தனர். அப்போது அரசியல் மற்றும் சினிமா பிரமூகர்கள் என பேப்பரிலிருந்த விஷயங்களைப் பற்றி மும்முரமாக நான்கு பெரியவர்களும் பேசிக்கொண்டிருந்தனர். சக்தி தன் மொபைலில் ஏதோ விளையாடிக்கொண்டிருந்தாள். நவீனும் மிருதுளாவும் மாலை எல்லோருமாக எங்கு செல்லலாமென்று திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். வண்டி மூன்று மணிக்கு அவர்கள் புக் செய்திருந்த ரிசார்ட் முன் சென்று நின்றது. அனைவரும் இறங்கினர். வயதானவர்கள் நால்வரும் பாத்ரூம் எங்கிருக்கிறது என்று விசாரித்து அங்கே சென்றனர். மிருதுளாவும் நவீனும் செக் இன் செய்துக் கொண்டிருந்தனர். அப்போது மிருதுளா மூன்று அறைகளும் பக்கத்துப் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று கூறினாள். அவர்களும் அதுபடியே தருவதாக கூறினர். டிரைவர் அவர்கள் பைகளையும் பெட்டிகளையும் இறக்கி வைத்ததும் ரிசார்ட் ஊழியர்கள் அவற்றை ஒரு தள்ளு வண்டியில் வைத்து ரிசப்ஷனில் கொண்டு வைத்தனர். மூத்தவர்கள் வந்து ரிசப்ஷனில் அமர்ந்ததும் அனைவருக்கும் வெல்கம் டிரிங்க் எனப்படும் வரவேற்பு பானம் வழங்கப் பட்டது.

அதன்பின் அனைவரையும் அவரவர் அறைகளைக்கு அழைத்துச் சென்றனர் ரிசார்ட் ஊழியர்கள். மூவரின் அறைகளும் பக்கத்துப் பக்கத்தில் இருந்தது. மிருதுளா மூத்தவர்களிடம் ஐந்து மணிக்கு வெளியே செல்லவேண்டும் அதுவரை நன்றாக ஓய்வெடுங்கள் என்று கூறி அவர்களுக்கு அவர்களின் அறைகளை காண்பித்து எது எது எங்கெங்கு உள்ளது என்பதையும் சொல்லிக் கொடுத்து, ஏதாவது அவசரமென்றால் தன்னை எப்படி தொலைபேசியில் அழைப்பது என்பதையும் சொல்லி, சாப்பிட ஏதாவது தேவையென்றால் ரூம் சர்வீஸுக்கு எந்த எண்ணை அழுத்த வேண்டுமென்றும் விவரித்துவிட்டு தன் அறைக்குச் சென்றாள். அங்கே நவீன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். சக்தி டிவிப் பார்த்துக் கொண்டிருந்தாள். சக்தியையும் சற்று ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு மிருதுளாவும் சிறிது நேரம் கண் அசந்தாள்.

மாலை ஐந்தரை மணிக்கு அருகேயிருந்த ஒரு கோவிலுக்கு மட்டும் சென்று ரிசார்ட் திரும்பினர். ஏனெனில் அன்று மாலை ரிசார்ட்டில் ஏதோ விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இருப்பதாக தெரியவந்ததும் சீக்கிரம் ஒரு ஆறரை மணிக்கெல்லாம் திரும்பி வந்தனர். ஏழு மணிக்கு விளையாட்டுகளும் கலை நிகழ்ச்சிகளும் ஆரம்பமானது. ஈஸ்வரன் தன் ஃபோனில் படம் பிடித்துக் கொண்டும் பின் ஏதோ டைப் செய்துக் கொண்டுமிருந்ததை கவனித்தாள் மிருதுளா. எல்லா நிகழ்ச்சிகளும் முடிந்ததும் அனைவருக்கும் பஃபே முறையில் இரவு உணவு வழங்கப்பட்டது. அதில் இருநூறுக்கும் மேற்பட்ட உணவு வகைகள் வைக்கப் பட்டிருந்தது. அனைத்தையும் என்னென்ன என்பதை மூத்தவர்களுக்கு விவரித்தாள் மிருதுளா. பின் அனைவரும் தட்டை எடுத்துக் கொண்டு அவரவருக்கு வேண்டியதை எடுத்து உண்டு மகிழ்ந்தனர். பின் எல்லோருமாக சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு காலார நடந்து அவரவர் அறைகளுக்குச் சென்றனர்.

மிருதுளா, நவீன், சக்தி மூவரும் அவர்கள் அறைகளுக்குச் சென்றதும் சக்தி தன் பெற்றோரிடம்

“அப்பா அம்மா இன்னைக்கு என்ன டேட்?”

“ஜூன் ட்வென்டி செக்கண்ட் டி. அதுக்கென்ன?”

“அம்மா இன்னைக்கு என்னோட யூ.எஸ் என்ட்ரன்ஸ் எக்ஸாம் ரிசல்ட் வந்திருக்கும்”

“அமாம் சக்தி …நானும் மறந்தே போயிட்டேன் பாரேன்!! சரி சரி வா என் லேப்டாப்ல பார்ப்போம்”

“ம்…ஓகேப்பா.”

“சரி அதுக்கு உன் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் மற்ற லாகின் டீட்டேய்ல்ஸ் எல்லாம் வேணுமே டா கண்ணா”

“எல்லாமே என் மொபைல்ல இருக்குப்பா. நீ அந்த பேஜ்ஜை ஓபன் பண்ணு நான் எல்லா டீட்டேய்ல்ஸும் தர்றேன்”

என்று மூவரும் ஆவலாக சக்தி எழுதிய ஒரு நுழைவுத் தேர்வின் முடிவுகளைப் பார்த்தனர். அதைப் பார்த்ததும் சக்தி ஐய்யா என்று சந்தோஷத்தில் குதித்தாள் நவீனும் மிருதுளாவும் அவளை கட்டியணைத்து முத்தமிட்டு வாழ்த்து சொன்னார்கள். பின் மிருதுளா தன் அம்மா அப்பா அறையின் தொலைபேசி எண்ணுக்கு கால் செய்து விஷயத்தை சொன்னாள். அவர்களும் மகிழ்ச்சியடைந்தனர். சக்தியிடம் பாராட்டுத் தெரிவிக்கும் படியும் காலையில் நேரில் தாங்கள் தெரிவிப்பதாகவும் சொல்லி ஃபோனை வைத்தனர். பின் தன் மாமனார் மாமியாருக்கு கால் செய்து அதே விஷயத்தை சொன்னாள்…அதற்கு ஃபோனை எடுத்த ஈஸ்வரன்

“ஓ!! அப்படியா. சரி சரி.”

என்று ஃபோனை வைத்தார். உடனே மிருதுளா முகம் மாறியதைக் கண்ட நவீன் அவளிடம்

“என்ன உன் மாமனார் வழக்கம் போல ஒண்ணுமே சொல்லாம ஃபோனை வச்சுட்டாரா?”

“ஒரு வேளை தூங்கிட்டாளோ என்னவோ? அதுனால கூட இருக்கலாம். அவா நாளைக்கு காலையில நம்ம சக்திக்கு விஷ் பண்ணுவா பாருங்கோ.”

“நீ எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்ட…எனக்கு தூக்கம் வர்றது….சக்தியும் தூங்கிட்டா…வா வந்து நீயும் தூங்கற வழியப்பாரு.”

என்று நவீன் சொன்னதும் சென்று படுத்துக் கொண்டு உறங்கிப் போனாள் மிருதுளா. மறுநாள் காலை எழுந்து தயாராகி அனைவரும் அந்த ரிசார்ட் ரெஸ்டாரண்ட்டில் ஒன்று கூடினர். அப்போது அம்புஜம் சக்தியைக் கட்டிக் கொண்டு

“வாழ்த்துகள் சக்தி. உன் அம்மா நேத்து நைட்டு ஃபோன் பண்ணி சொன்னா. நீ அந்த பரீட்சையில் 2400 க்கு 2370 எடுத்திருக்கயாமே ரொம்ப சந்தோஷமா இருக்குக் கண்ணா.”

ராமானுஜம் சக்தியை தட்டிக்கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார். ஆனால் பர்வதீஸ்வரன் கண்டுக் கொள்ளாதது போல நடந்துக் கொண்டனர். அது மிருதுளாவை மனதளவில் பாதித்தது ஆனாலும் அவள் அதைக் காட்டிக் கொள்ளாது இருந்துக் கொண்டாள். காலை உணவு உண்ட பின் வெளியே சுற்றிப் பார்க்க சென்றனர். அப்போது ஓரிடத்தில் மிருதுளாவை தனியாக அழைத்துச் சென்ற அம்புஜம் அவளிடம்

“ஏய் மிருது எங்க கிட்ட சக்தி பரீட்சை முடிவைப் பத்தி சொன்னதை நீ உன் மாமனார் மாமியார்ட்ட சொல்லலையா? நீ அவாகிட்டயும் சொல்லிருப்பனுட்டு தான் நாங்க பாட்டுக்கு குழந்தையை பாராட்டினோம்…அவா கோவிச்சுக்கப் போறாடி”

“அம்மா நான் உங்ககிட்ட என்ன சொன்னேனோ அதை அப்படியே அவாகிட்டயும் நேத்து நைட்டு சொன்னேன்.”

“ஓ!! அப்படீன்னா அவா நைட்டே பாராட்டிட்டாளோ? அதுதான் காலையில நாங்க குழந்தையைப் பாராட்டும் போது ஒண்ணும் சொல்லாமல் இருந்தாளா?”

“ம்..ம்…சரி சரி வா. அவா எல்லாரும் அங்க போயிட்டா பாரு.”

என்று தாயிடமும் அவர்களைப் பற்றி ஏதும் கூறாது தவிர்த்துவிட்டாள் மிருதுளா.

எல்லா சுற்றுலா தளங்களுக்கும் சென்று மத்திய உணவை ஒரு ஹோட்டலில் அனைவரும் அமர்ந்து அவரவர்களுக்கு வேண்டியதை ஆர்டர் கொடுத்துவிட்டு உணவுக்காக காத்துக் கொண்டிருக்கையில் அம்புஜத்தின் கைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வாட்ஸ்ஆப்பில் வந்தது. அதை எடுத்து என்னவென்று பார்த்தாள். அதில் வேனு தன் மனைவியுடன் எடுத்த படத்தை பகிர்ந்திருந்தான். அதைப் பார்த்ததும் அம்புஜத்துக்கு ஓரே சந்தோஷமானது. உடனே ராமானுஜத்திடமும் மிருதுளாவிடமும் காண்பித்தாள். அதைப் பார்த்த மிருதுளா நவீனிடம் காட்டிவிட்டு தன் அம்மாவிடம் கைபேசியைக் கொடுத்து

“அம்மா இந்த ஃபோட்டோவுல மகதி ரொம்ப அழகா இருக்காமா”

என்றதும் பர்வதத்திடம் கைபேசியிலிருந்த படத்தைக் காட்டினாள் அம்புஜம் அதற்கு பர்வதம் மெல்ல மிருதுளா காதில் மட்டும் விழும்படி

“ஆமாம் ஆமாம்…அவ அழகா இருக்கா அதுனால படத்துலயும் அழகா தெரியறா…நாம அழகா இருந்தா தானே படத்துலேயும் அழகா தெரிவோம்”

என்று குத்தலாக கூறினாள். மிருதுளாவுக்கு கோபம் வந்தது ஆனால் தான் அழைத்து வந்ததால் அவர்களிடம் பிரச்சினை ஏதும் செய்யாது நல்லபடியாக திருப்பிக் கொண்டு விடவேண்டும் என்ற எண்ணம் அவளை அதற்கு பதில் பேசவிடாமல் தடுத்தது. இதே போல அங்கிருந்த நான்கு நாட்களும் கிடைக்கும் சந்தர்பத்தில் எல்லாம் குத்தலாகவே பேசினாள் பர்வதம். அதை அனைத்தையும் வழக்கம் போல பொறுத்துக் கொண்டாள் மிருதுளா.

மூன்றாவது நாள் இரவு உணவு உண்டு முடித்தப்பின் அம்புஜமும் ராமானுஜமும் அவர்கள் அறைக்கு செல்ல வேண்டி மற்ற அனைவருக்கும் “பை பை” சொல்ல உடனே சக்தி மிருதுளாவிடம்

“அம்மா அம்மா நான் இன்னைக்கு அம்பு பாட்டிக்கூடப் படுத்துக்கறேன் மா”

“ம்…சரி சரி போ…அம்மா அவளை ரொம்ப நேரம் டிவி பார்க்க விடாதே.”

“சரி சரி நான் பார்த்துக்கறேன். நீ வாடி என் செல்லக் குட்டி நாம போகலாம். சரி மாமா அன்ட் மாமி நாங்க வர்றோம். குட் நைட்”

“அம்மா அன்ட் அப்பா நாளைக்கு காலையில எட்டு மணிக்கு உங்க பெட்டியெல்லாம் பேக் பண்ணிண்டு இதே ரெஸ்டாரண்ட்டுக்கு வந்திடுங்கோ. நாம ஒன்பது மணிக்கெல்லாம் இங்கேந்து கிளம்பணும் சரியா”

“ஓகே டன். வந்திடுவோம். குட் நைட்”

என்று கூறி அவர்கள் சென்றதும் தன் ரூமுக்கு செல்வதற்காக எழுந்த நவீனை சற்று நேரம் கூட அமர்ந்து விட்டு செல்வோம் என்று கூறி அமரவைத்து பர்வதம் ஈஸ்வரன் மிருதுளா மூவருமாக பேசிக்கொண்டிருந்தனர். நவீன் ஏதும் பேசாது அமர்ந்திருந்தான். அவன் அந்த மூன்று நாட்களிலுமே அவர்களுடன் ஏதும் பேசவில்லை. பர்வதீஸ்வரன் அங்கிருந்த மூன்று நாட்களிலும் கவினின் வீட்டு கிரகப்பிரவேசம் பற்றி எதுவுமே நவீனிடமோ மிருதுளாவிடமோ மூச்சுவிடாதிருந்தனர் . நவீனும் மிருதுளாவும் அதைப் பற்றி ஏதும் கேட்டுக்கொள்ளாது இருந்தனர். ஈஸ்வரன் தன் கைபேசியையே நோண்டிக் கொண்டிருந்தார். அப்போது அவர் தன் ஃபோனை மிருதுளாவிடம் கொடுத்து

“மிருதுளா இந்த பிச்சுமணி ஏதோ மெஸேஜ் அனுப்பிருக்கான்…அது ஒண்ணுமே புரியலை…சரியா தெரியலை… என்னன்னு படிச்சு சொல்லு”

என்று கூற மிருதுளாவும் அதை வாங்கிப் படித்தாள். அவளருகிலிருந்த நவீனும் அந்த குறுஞ்செய்தியைப் பார்த்தான். அதில் “கவின் வீட்டு கிரகப்பிரவேசத்தில் என்னால் கலந்துக் கொள்ள முடியாது போனதுக்கு மன்னிக்கவும். அவனிடம் எங்களின் வாழ்த்துகளையும் ஆசிர்வாதத்தையும் தெரிவிக்கவும்” என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. தன் மாமானாருக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியுமென்பது மிருதுளாவுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அவர் அந்த விஷயத்தை இவர்களிடம் கன்வே செய்வதற்காக இப்படிச் செய்கிறார் என்பதை உணர்ந்த மிருதுளா அவரிடம்

“உங்க புள்ளைக்கு வாழ்த்தும் ஆசிர்வாதமும் தெரிவித்திருக்கார் பிச்சுமணி மாமா”

என்று பொதுவாக சொல்லி அவர் ஃபோனை அவர் கையிலேயே திருப்பிக் கொடுத்துத்தாள். அதற்கு மேல் அவரை அதைப் பற்றி பேச விடாமலிருக்கவும் அதைப் பற்றி கேட்க விரும்பாததாலும் சட்டென அவரிடம்

“ஆமாம்ப்பா நானும் வந்ததிலிருந்து பார்க்கறேன்…நீங்க ஃபோட்டோ எடுக்கறேங்கள் உடனே உங்க ஃபோனில் ஏதோ மெஸேஜ் டைப் பண்ணறேங்கள். அப்படி என்னதான் செய்யறேங்கள் எடுத்த ஃபோட்டோஸை?”

“அதுவா…அதெல்லாம் என் பசங்களுக்கும் என் மாட்டுப்பொண்களுக்கும் எல்லா இன்பஃர்மேஷன்ஸையும் உடனே உடனே அனுப்பணுமில்லையா அதுதான் அனுப்பறேன். வேற ஒண்ணுமில்லை”

“ஓ!!! அப்படியா!!! ஆனா இதுவரைக்கும் நவீனுக்கோ இல்ல எனக்கோ இது மாதிரியெல்லாம் டக்டக்குனு எந்த மெஸேஜும் …சாரி… சாரி… இன்பஃர்மேஷன்ஸும் நீங்க அனுப்பினதில்லையா அது தான் கேட்டேன்….சரி… அது என்ன உடனுக்குடன் அனுப்பவேண்டிய இன்பஃர்மேஷன்?”

“ம்…அது நாம போற இடங்கள் அதோட பேரு அங்க என்னென்ன இருக்கு? அதோட ஃபோட்டோஸ் அப்புறம் நாம எல்லாருமா எடுத்துண்ட ஃபோட்டோஸ் இதெல்லாம் தான் வேறென்ன…சரி சரி …எனக்குத் தூக்கம் வர்றது. நாங்க போய் படுத்துக்கறோம். காலையில எட்டு மணிக்கு ரெஸ்டாரண்ட்டில் சந்திக்கலாம். பை”

என்று கூறி அங்கிருந்து கிளம்பிச்சென்றனர் மூத்த தம்பதியர். அவர்கள் போன பின்னாலும் நவீனும் மிருதுளாவும் அங்கேயே சற்று நேரம் அமர்ந்திருந்தனர். அப்போது நவீன் மிருதுளாவிடம்

“பார்த்தயா உன் மாமனாரின் சாமர்த்தியத்தை…அவன்ட்ட ஏன்டா அழைக்கலைன்னு கேட்கத் துப்பில்லை, நம்ம கிட்ட சொல்ல திராணி இல்லை ஆனாலும் நாம தெரிஞ்சுக்கணுமாம் அவன் வீட்டு கிரகப்பிரவேசம் நல்லா நடந்ததுன்னு …எப்படி?”

“அதைவிட என்னை ஹிட் பண்ணினது வேற ஒரு டையலாக் தான் நவீ!!”

“இதைவிட வேற என்ன?”

“நீங்க அவர் அதை சொன்னதும் திருப்பி கேட்பேங்கள்னு நினைச்சேன். ஆனா நீங்க கேட்காததால நான் ஏதோ சொல்லி சமாளிக்க வேண்டியிருந்தது.”

“அப்படி என்ன சொன்னா? எனக்குப் புரியலை மிருது”

“என் பசங்களுக்கும் என் மாட்டுப்பொண்களுக்கும்னு சொன்னாரே கவனிச்சேங்களா? அப்படீன்னா நாங்க யாராம்ன்னு எனக்கு கேட்கத் தோணித்து…ஆனா அதைக் கேட்க போய் அப்புறம் அதுக்கு அவா கத்த ஆரம்பிச்சான்னா அப்புறம் எல்லாருக்கும் வந்த இடத்துல தர்மசங்கடமாகிடுமேனுட்டு பேசாம லைட்டா அதுக்கு திருப்பிக் கொடுத்துட்டு விட்டுட்டேன்”

“ம்…ம்…கவனிச்சேன்…எல்லாம் கவனிச்சேன். நீ இந்த ஒரு இடத்துல மட்டும் விட்டுக் கொடுக்கலைங்கறதையும் நான் மூணு நாளா கவனிச்சிண்டு தான் இருக்கேன் மிருது.”

“ம்…சரி சரி…அதை விடுங்கோ நம்ம சக்திக் குட்டி இப்படி ஃபுல் ஃபுல்லா மார்க் எடுத்திருக்காளே அவளுக்கு ஏதாவது கிஃப்ட் வாங்கிக் கொடுக்கணும்.”

“அவகிட்டயே அவளுக்கு என்ன வேணும்னு கேட்டு வாங்கிக் குடுப்போம்”

“அதுவுமில்லாம நாம உங்க அப்பா அம்மாவை வீட்டுல விட்டுட்டு ஒரு ஹோட்டல் புக் பண்ணி அங்கே அன்னைக்கு நைட்டு இருந்துட்டு மறுநாள் காலையில நாம அங்க ரெகுலரா போற கோவில்களுக்கெல்லாம் போயிட்டு சென்னைக்கு போவோம் நவீ…ப்ளீஸ்”

“ம்…சரி ஓகே. அப்படியே செய்யலாம். இப்போ போய் தூங்கலாமா!!!”

“ம்…ஓகே வாங்கோ. காலையில சீக்கிரமா எழுந்து எல்லாத்தையும் பேக் பண்ணணும் வேற…”

அவர்கள் முன்னாரிலிருந்து ஊருக்கு கிளம்பும் நாள் வந்தது. அன்று காலை எட்டு மணிக்கு அந்த ரிசார்ட் ரெஸ்டாரண்ட்டில் அனைவரும் அவரவர் பெட்டி மற்றும் பைகளுடன் கூடினர். காலை உணவை உண்டு முடித்ததும். மிருதுளா சக்தியிடம் ஏதோ சொன்னாள். உடனே சக்தி தன் ஈஸ்வரன் தாத்தாக்கும் பர்வதம் பாட்டிக்குமாக குவைத்திலிருந்து வாங்கி வந்த கிஃப்ட்ஸை அவரவரிடம் கொடுத்து

“தாத்தா அன்ட் பாட்டி எங்களோடு இந்த நான்கு நாட்கள் வந்திருந்து எங்களுடன் மகிழ்ச்சியாக இருந்தமைக்கு நன்றி”

என்றதும் ஈஸ்வரன் திருப்பி

“தாங்ஸ்” என்றார்

உடனே சக்தி

“தாத்தா அன்ட் பாட்டி பிரித்துப் பார்த்துப் பிடிச்சிருக்கானு சொல்லுங்கோ ப்ளீஸ்” என்றாள்

உடனே பரிசுப் பொருட்களை மூத்தவர்கள் பிரித்துப் பார்த்தனர். முதலில் ஈஸ்வரன் பிரித்துப் பார்த்தார் அதிலிருந்த வாட்ச்சையும் டேப்லெட்டையும் பார்த்துக் கொண்டிருக்கும் போது ராமானுஜம் தன்னிடமிருந்த புது டேப்லெட்டை எடுத்துக் காட்டி

“மாமா இங்கே பாருங்கோ எனக்கும் உங்களுக்கு வாங்கினா மாதிரியே ஒரு டேப்லெட் வாங்கித் தந்திருக்கா”

என்று காட்டியதும் அதை வாங்கிப் பார்த்த ஈஸ்வரன்

“அட ஆமாம் அதே தான். அப்போ வாட்ச் எங்கே?”

“அது ஆத்துல வச்சிருக்கேன். அதுவும் நாம ரெண்டு பேருக்கும் ஒண்ணே தான்’

“ஏய் பர்வதம் நீயும் திறயேன்டீ”

என்று ஈஸ்வரன் சொன்னதும் திறந்துப் பார்த்த பர்வதம்

“என்கிட்ட மூக்குத்தியும் தோடும் நிறைய இருக்கு…ம்…இதுவும் நல்லாதான் இருக்கு”

என்று கூறியதும் மிருதுளா சட்டென

“அம்மா உங்க கிட்ட நிறைய மூக்குத்தி அன்ட் தோடு இருக்கலாம்…ஆனா வைர மூக்குத்தி இருக்கா?”

“இல்லை”

“ஆங்!! இல்லையில்லையா…இன்னேலேந்து அதுவும் உங்ககிட்ட இருக்கு.”

என்று மிருதுளா கூறி முடித்ததும் அம்புஜம்

“ஆமாம் மாமி எனக்கும் இதே தோடு அன்ட் வைர மூக்குத்தி தான் இவா வாங்கித் தந்திருக்கா. பாருங்கோ நான் அதைத் தான் போட்டுண்டும் இருக்கேன்.”

என்று காண்பிக்க அதற்கு மிருதுளா

“ஆமாம் மா. எங்களுக்கு நீங்க நாலு பேருமே அப்பா அம்மா தான். அதுனால குடுக்கற கிஃப்ட்டுல கூட பேதமிருக்கக் கூடாதுங்கறது எங்களோட பாலிசி. உங்க ரெண்டு பேருக்காக நாங்க வாங்கிண்டு வந்த வைர மூக்குத்தியும் ஜர்கான் தோடும் தான் அது ரெண்டும்”

“என்னது வைர மூக்குத்தியா???”

என்று வாயைப் பிளந்தாள் பர்வதம்.

பின் அனைத்தையும் அவரவர் கைப்பையில் வைத்துக் கொண்டு அங்கிருந்து காரில் புறப்பட்டனர். மத்திய சாப்பாட்டையும் மாலை நேர சிற்றுண்டி மற்றும் காபியையும் ஹோட்டலில் அனைவருக்கும் வாங்கிக் கொடுத்துவிட்டு ஒரு ஐந்து மணி போல முதலில் ஈஸ்வரன் தம்பதியரை அவர்கள் வீட்டில் இறக்கி விட்டுவிட்டு அவர்களின் வழக்கமான கோவில்களுக்கெல்லாம் சென்று வரவேண்டி அங்கேயே ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு தங்கினார்கள். நவீனும் மிருதுளாவும் சக்தியுமாக அன்று மாலை ஒரு ஏழு மணிக்கு புறப்பட்டு ப்ரவீன் வீட்டுக்குச் சென்றனர். அங்கே துளசி இருக்கவில்லை. ப்ரவீன் வந்தவர்களிடம்

“வாங்கோ வாங்கோ அண்ணா அன்ட் மன்னி. வெல்கம் சக்தி”

“எப்படி இருக்கேங்கள்? எங்க துளசி குழந்தைகளை எல்லாம் காணம்? நீ மட்டும் இருக்க?”

“அவா எல்லாருமா துளசியோட அண்ணா ஆத்துக்கு போயிருக்கா மன்னி. அவா போய் ஒரு மூணு நாளாச்சு. நாளைக்கு வந்திடுவா. அப்புறம் டிரிப் எல்லாம் எப்படி இருந்தது?”

“சூப்பரா இருந்தது. இந்தா ப்ரவீன் குழந்தைகளுக்கும் உனக்கும் துளசிக்கும் எங்களோட ஒரு சின்ன அன்பளிப்பு.”

“ஓ!! தாங்ஸ் மன்னி. இருங்கோ குடிக்க தண்ணிக் கொண்டு வர்றேன். இவ்வளவு நேரம் நான் அப்பா அம்மா ஆத்துல தான் இருந்தேன். இப்போ தான் இங்கே வந்தேன். நீங்க கொஞ்சம் முன்னாடி வந்திருந்தேங்கள்னா நான் இங்கே இருந்திருக்க மாட்டேன். இந்தாங்கோ தண்ணி எடுத்துக்கோங்கோ”

என்று அவன் தண்ணீர் டம்பளரைக் கொடுக்கும் போது அவன் கையை கவனித்த மிருதுளாவுக்கு தூக்கி வாரிப் போட்டது. ஏனெனில் அவள் ஆசையாக ஈஸ்வரனுக்கு பரிசளித்த வாட்ச் ப்ரவீன் கையிலிருந்தது. தண்ணீர் குடித்துவிட்டு டம்பளரை ப்ரவீனிடம் திருப்பிக் கொடுத்ததும் அதை அடுப்படிக்குள் வைக்கச் சென்றான் ப்ரவீன். அப்போது மிருதுளா மெல்ல நவீனிடம் ப்ரவீனின் கையை கவனிக்கச் சொன்னாள். அவனும் பேச்சு வாக்கில் கவனித்தான். பின் நவீன் எழுந்து

“சரி டா நாழி ஆயிடுத்து நாங்க கிளம்பறோம்.”

“எங்க ? அப்பா அம்மா ஆத்துக்கு தானே நானும் வர்றேன்”

“இல்ல இல்ல நாங்க ஹோட்டலுக்கு டின்னர் சாப்பிடப் போறோம். எங்களோட வாயேன் நீயும் தனியா தானே இருக்க “

“சரி வரேன்.”

என்று நால்வரும் ஹோட்டலுக்குச் சென்று டின்னர் அருந்திக் கொண்டிருக்கும் போது ப்ரவீன் நவீனிடம்

“அண்ணா அப்போ நீங்க நாளைக்கு பவினோட புள்ளைக்கு முடியெறக்கி காதுக்குத்துற பங்ஷனுக்கும் வர்றேங்கள் தானே!!”

“என்னது அப்படி ஒரு பங்ஷன் நாளைக்கு நடக்கப் போறாதா என்ன?”

“ஆமாம். ஏன் அவன் உங்களுக்கு சொல்லலையா?”

“ம்…ம்….”

“அப்பா அம்மாவும் சொல்லலையா?”

“ம்..ம்..”

என்று இரண்டே சப்தத்தில் பதிலளித்தான் நவீன். பின் அங்கிருந்து ப்ரவீனை அவன் வீட்டில் விடச்சென்ற போது அவன்

“இல்ல அண்ணா என்னை அப்பா ஆத்துலேயே விட்டுவிடு. ஏன்னா காலையில சீக்கிரமா கிளம்பி போகணும். நான் எங்காத்துல இருந்தேன்னா அப்புறம் தூங்கிடுவேன்”

“சரி ப்ரவீன் அப்போ துளசி அந்த பங்ஷனுக்கு வரமாட்டாளா?”

“இல்ல மன்னி அவ வரலை. நான் மட்டும் தான் போகப் போறேன்”

என்று பேசிக்கொண்டே இருக்கும் போது ஈஸ்வரன் வீட்டு வாசலில் கார் நின்றது. ப்ரவீனை இறங்கச் சொன்னான் நவீன். அப்போது ப்ரவீன்

“வாங்கோ இவ்வளவு தூரம் வந்துட்டு உள்ள வராமல் போனா எப்படி வாங்கோ மன்னி வாண்ணா”

“சாயந்தரம் தானே டா வந்தோம்”

“சாயந்தரமும் நீ வாசலோட போயிட்டயாமே…வாண்ணா”

என்று ப்ரவீன் வற்புறுத்தியதால் மூவரும் இறங்கி வீட்டிற்குள் சென்றனர். அப்போது ஈஸ்வரன்

“நீங்க சென்னைக்கு போகலையா?”

“இல்லப்பா நாங்க நாளைக்கு கோவிலுக்கெல்லாம் போயிட்டு தான் சென்னைப் போவோம்”

என்று கூறிக்கொண்டே ப்ரவீன் கையைப் பார்த்தாள் மிருதுளா. அதை கவனித்த ஈஸ்வரன்

“ஓ!! அப்படியா…சரி சரி சரி…நீங்க குடுத்த வாட்ச் இவனுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சுன்னு அவன் எடுத்துண்டுட்டான். டேப்லெட்டை நான் அவன் புள்ளைக்குக் கொடுத்துட்டேன்”

என்று சொன்னதும் மிருதுளா தனக்கு வந்த கோபத்தை அடக்கிக் கொண்டாள். அப்போது பர்வதம் ஈஸ்வரனிடம் ஏதோ சொல்ல உடனே அவர் தன் கைபேசியில் யாரிடமோ பேசி பின் தன் கைப்பேசியை நவீனிடம் கொடுத்துப் பேசச் சொன்னார். அதற்கு நவீன்

“யார் ஃபோன்ல? என் கிட்ட எதுக்கு குடுக்கற?”

“இந்தா பேசு பவின் தான். அவன் உன்கிட்ட ஏதோ சொல்லணுமாம்”

“ஹலோ!”

“அண்ணா எப்படி இருக்க? இந்தியா வந்திருக்கையாமே? சரி நாளைக்கு எங்க புள்ளைக்கு முடியெறக்கிக் காதுக் குத்தறோம் நீயும் மன்னியும் வந்திடுங்கோ. ஒரு நிமிஷம் மன்னிட்ட ஃபோனைக் குடு பவித்ரா பேசணுமாம்”

என்று சொல்ல வேண்டுமே என்பது போல பேசிய பவினிடம் வேறேதும் பேச விரும்பாத நவீன் ஃபோனை மிருதுளாவிடம் கொடுத்தான்.

“ஹலோ நான் மிருதுளா பேசறேன்”

“ஹாய் மன்னி நான் பவித்ரா பேசறேன். நாளைக்கு எங்க புள்ளைக்கு கோவில்ல வச்சு முடியிறக்கி காதுக்குத்தப் போறோம் நீங்க அவசியம் வரணும்.”

“ரொம்ப சந்தோஷம் பவித்ரா. ஆனா சாரி எங்களால வரமுடியாதுமா.”

“ஏன் மன்னி காலையில வந்துட்டு போயிடுங்கோளேன். ஒரு எட்டு மணிக்கெல்லாம் முடிஞ்சிடும்”

“இல்லமா இதை நீங்க முன்னாடியே சொல்லியிருந்தேங்கள்னா நிச்சயம் வந்திருப்போம். இப்படி வந்த இடத்துல சொன்னதால வரலைன்னு சொல்லறேன்னு நினைச்சுக்காத பவித்ரா…எங்களுக்கு இது சாயந்தரம் வரைக்கும் தெரியாதில்லையா அதுனால வேற ப்ளான் போட்டுட்டோம்… ஸோ நாங்க வரமுடியாதுமா. எங்களோட ஆசிர்வாதம் எப்போதும் குழந்தைகளுக்கு உண்டு.”

“அப்படியா சரி மன்னி. நீங்க ஃபோனை அப்பாட்டயே குடுங்கோ”

என்று வந்த இடத்தில் அழைக்கிறார்கள் என்பதை உணர்த்தும் படி பவினுக்கும் பவித்ராவுக்கும் நன்றாக பதிலடிக்கொடுத்தாள் மிருதுளா. ஈஸ்வரன் ஃபோனில் ஏதோ பேசிவிட்டு கட் செய்தபின் ஹாலுக்கு வந்து….

“அது ஒண்ணுமில்லை. நீங்கள் வரேங்கள்னு அவாளுக்கு தெரியாதோன்னோ அதுதான் முன்னாடியே சொல்லலையாம். நீங்க வர்றேங்கள்ன்னு சொல்லியிருந்தா நிச்சயம் கூப்பிட்டிருப்பாளாம்”

“ஏன் நாங்க சொல்லாம? உங்க கிட்ட தான் அப்பவே நான் ஸ்கைப்ல சொன்னேனே!!”

“என்கிட்ட இல்ல…அவாகிட்ட சொல்லலையோன்னோ!!! அதைச் சொல்லறேன்”

“ஓ!! அப்படீன்னா அவா யார் யார் விசேஷத்துக்கு வருவாளோ அவாளை மட்டும் தான் இன்வைட் பண்ணுவாளா? எல்லா சொந்த பந்தங்களையும் கூப்பிடமாட்டாளா? நல்லா இருக்கே இந்த சிஸ்டம் இல்ல நவீ.”

“அப்படி இல்ல”

“சரி நவீ நாழியாயிடுத்து நாம கிளம்பலாமா?”

“எங்கே கிளம்பறேங்கள் இங்கேயே இருக்கலாமே”

“இல்லப்பா என்னோட அப்பா அம்மா வேற இருக்கா”

“அதுனால என்ன? அவாளும் இங்கேயே வந்து தங்கட்டுமே”

“இல்லாட்டி …என் வீட்டில் யாருமே இல்லையே மன்னி அங்க வந்து தங்கிக்கோங்கோ. சரி… இப்போ உங்க அப்பா அம்மா எங்க?”

“நாங்க ஹோட்டல்ல ரூம் போட்டிருக்கோம். அங்கே தான் ஆவா இருக்கா. நாங்களும் இப்போ அங்கே தான் போகப் போறோம்.”

“என்னத்துக்கு அனாவசியமா ரூமெல்லாம் போட்டுண்டு.”

“சரி மிருது நாம போகலாம். நாங்க வர்றோம்”

என்று அவர்கள் போட்டுக்கொண்டிருந்த நாடகம் பிடிக்காத நவீன் வெடுக்கென கூறிவிட்டு மாடிப்படிகளில் வேகமாக இறங்கிச் சென்றான். மிருதுளாவும் அவர்களிடமிருந்து விடைப்பெற்றுக் கொண்டு நவீன் பின்னாடியே சக்தியை அழைத்துக் கொண்டுச் சென்றாள்.

தொடரும்….


Leave a comment