அத்தியாயம் 106: பயணமும், பர்மிஷனும்

“நம்பினா நம்புங்கோ நம்பாட்டி போங்கோ!! எனக்கென்ன?”

“சரி நீ ஆரம்ப காலத்துலேயே எல்லாம் தெரிஞ்சுண்டுட்டன்னு வச்சுண்டா கூட ஏன் இத்தனை வருஷங்களா உன் எதிர்ப்பைக் காட்டலை? ஏன் மறுபடியும் மறுபடியும் அவாளை எல்லாம் தலையில தூக்கி வச்சுக்கற? இப்படி எல்லாம் செஞ்சா அவாளும் திருந்த மாட்டா …என்னாலையும் நம்ப முடியாது மிருது?”

“நவீ ….நமக்கு ஒருத்தா ஏதாவது தொல்லை, தொந்தரவு, அவமானம், இது மாதிரியெல்லாம் தொடர்ந்து செஞ்சுண்டே இருந்தானா அவாளுக்கு நம்மளைக் கண்டு பொறாமை அல்லது பயம் உள்ளவாளா தான் இருப்பா. இல்லைன்னா அடுத்தவர்களை துன்புறுத்தி அதில் மனமகிழ்வு காணறவாளா கூட இருக்கலாம். மொத்தத்தில் இந்த மூணு வகையில ஏதாவது ஒண்ணுல சேர்ந்தவாளா தான் இருப்பா. இந்த எண்ணங்கள் மனசுல வளர்ந்துண்டே போனா அவாளுக்கு காழ்ப்புணர்ச்சி தான் விருட்சமா வளரும். அப்படிப் பட்டவாளை நாம எதிர்த்து நிக்கவோ இல்ல பதிலுக்கு பதில் பேசவோ இல்லை அவாளைப் போலவே ஏதாவது பண்ணவோ செஞ்சோம்னா அப்புறம் அவாளோட அந்த குணத்தை நாமே விசிரியால வீசி கொழுந்து விட்டு எரிய வைக்கிறது போல ஆகிடாதோ!!! அது ஒரு பக்கம் இருக்கட்டும்….அப்படியே அவா செஞ்சதையே அவாளுக்கு நாம திருப்பி செஞ்சோம்னா அப்புறம் அவாளுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாம போயிடாதா? எனக்கு பேச தெரியாமையோ இல்ல பழிவாங்கத் தெரியாமையோ இல்ல ஆனா எதுக்குன்னு தான் விலகறேன்”

“ஆங் அதைத் தான் நானும் சொல்லறேன் விலகிடுன்னு.”

“ம்…என்னோட பொறுமைக்கும் எல்லைன்னு ஒண்ணு இருக்கும் இல்லையா அதுவரை நான் இப்படியே இருந்துடறேனே நவீ!!! கடவுள் படைப்பில் என்னோட டிசைன் இதுதானோ என்னவோ!!!! அதுவரை யாரு வேணும்னாலும் என்னை இளிச்சவாயின்னு நினைச்சாலும் சரி, பொழைக்கத் தெரியாதவள்ன்னு சொன்னாலும் சரி, இல்ல எனக்கு சூடு சொரனையே இல்லையான்னு கேட்டாலும் சரி… நான் இப்படித் தான். ஆனால் எப்போதுமே இப்படிதானானான்னு கேட்டா அதுக்கு காலமும் நேரமும் தான் பதில் சொல்லணும். நான் சொல்லறது சரி தானே நவீ”

“ம்….பார்ப்போம் உன் பொறுமைக்கு எது எல்லைன்னு”

“அம்மா எவ்வளவு நேரமா மா பேசுவ… பசிக்கறது மா. டின்னர் பண்ணலையா?”

“ஊப்ஸ்…சாரி டா கண்ணா. சப்ஜீ ரெடி… இதோ ஒரு அஞ்சே நிமிஷத்துல சப்பாத்திப் போட்டு தந்துடறேன் சரியா. ஓகே நவீ நான் போய் டின்னர் பண்ணட்டும்”

என்று மிருதுளா அவள் தரப்பு விளக்கத்தைக் கொடுத்து விட்டுச் சென்றாள். நவீன் குடும்பத்தினர் குவைத்துக்கு சென்று ஒரு வருடமானது. சக்தி பதினோராம் வகுப்பு முடித்துவிட்டு பல நுழைவுத் தேர்வுகளுக்கான வகுப்புகளுக்கு சென்றதோடு அந்த தேர்வுகளை எல்லாம் எழுதியும் முடித்தாள். அதில் ஒன்றில் நூற்றியிருபதுக்கு நூற்றிபத்தொன்பது மதிப்பெண்கள் எடுத்து அவளின் புகைப்படம் வலைத்தளத்தில் வந்தது. மற்றொரு பரீட்சையின் முடிவுகள் வர மூன்று மாதங்கள் இருந்தன. கோடைக்கால விடுமுறை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது இந்தியாவுக்கு சென்று வர திட்டமிட்டாள் மிருதுளா. அதை நவீனிடம் சொன்னதும்

“எதுக்கு மிருது இப்போ தானே நாம வேனுவோட கல்யாணத்துக்கு போயிட்டு வந்திருக்கோம்!!”

“இல்ல நவீ இந்த வருஷம் முடிஞ்சா அப்புறம் நம்ம சக்தி வெளிநாடுக்கு படிக்கப் போயிடுவா… அதுக்கப்புறம் எப்ப மறுபடியும் இந்தியாவுக்கு அவளால போக முடியுமோ? நமக்குத் தெரியாது. அதுனால இந்த லீவுல எல்லா கோவில்களுக்கும் போயிட்டு அப்படியே உங்க பேரன்ட்ஸ் அன்ட் என் பேரன்ட்ஸ், நாம மூணு பேருன்னு ஒரு குட்டி ட்ரிப் எங்கேயாவது போயிட்டு வரலாமே… என்ன சொல்லறேங்கள்?”

“ம்….உன் பொறுமைக்கு இன்னுமா எல்லை எங்க இருக்குன்னு உனக்கு கண்ணு தெரியலை”

“ப்ளீஸ் நவீ நம்ம சக்தியும் அவ தாத்தாப் பாட்டிகளோட ஒரு மூணு நாள் ஜாலியா இருக்கட்டுமே. அவாளுக்கும் வயசாகிண்டே போறது ஸோ எப்ப வேணும்னாலும் எது வேணும்னாலும் நடக்கலாம் இல்லையா?”

“ம்…..சரி சரி என்னவோ பண்ணு. ஆனா ஒண்ணு நிச்சயம் இதுக்கு நீ வருத்தப்பட தான் போற”

“ம்…பார்ப்போம் பார்ப்போம். சரி நாம சிம்லா போகலாமா?”

“ம்….ஆனா அவா நாலு பேரு நாம மூணு பேரு…ஃப்ளைட் டிக்கெட்ஸ் அன்ட் ஹோட்டல்…சாப்பாடு செலவுகள் எல்லாம் கூட்டிக் கழிச்சுப் பார்த்தா ரொம்ப ஜாஸ்த்தி ஆகிடாதா?”

“அப்படியா அப்போ ஒரு பெரிய கார் வச்சுண்டு எல்லாருமா முன்னார் போயிட்டு வரலாமா?”

“ம்…அது ஓகே!”

“சரி அப்போ அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் செய்யத் தொடங்கறேன். அதுக்கு முன்னாடி நம்ம பேரன்ட்ஸ் கிட்ட கால் பண்ணி சொல்லிடறேன்…சப்போஸ் உங்க அப்பா அம்மா வரலைன்னு சொல்லிட்டான்னா என்ன பண்ணறது? புக் பண்ணினது எல்லாம் வேஸ்ட் ஆகிடுமே?”

“அதெல்லாம் வருவா…அப்படியே வராட்டினா என்ன இப்போ அது தான் பெரியப்பா ஃபேமிலி, அத்தை ஃபேமிலி, சித்தப்பா ஃபேமிலினுட்டு பக்கத்துலேயே எல்லாரும் இருக்காளே அவா யாரையாவது கூட்டிண்டு போனா போறது.”

“ம்…அதுவும் நல்ல ஐடியா தான். அவாளும் எல்லாரும் வயசானவா தானே. சரி நான் வேலைகளில் இறங்கட்டும்”

என்று அன்று மாலையே மிருதுளா தன் பெற்றோருக்கு கால் செய்தாள்

“ஹலோ அம்மா நான் மிருது பேசறேன்”

“ஆங் சொல்லு மிருது. எப்படி இருக்க? மாப்ள எப்படி இருக்கார்? சக்திக் குட்டி எப்படி இருக்கா?”

“அம்மா ஸ்கைப்ல வா”

“ம்…சொல்லு மிருது”

“அம்மா நான் உன்னை ஸ்கைப்ல இரண்டு தடவை கூப்பிட்டேன் நீ எடுக்கலை அது தான் ஃபோன்ல கூப்பிட்டேன்…நீ என்னடான்னா ஸ்கைப்ல பேசறா மாதிரி நலம் விசாரிக்கறயே!!!”

“நீ ஸ்கைப்ல தான் கூப்பிட்டிருக்கன்னு நினைச்சுண்டு நான் பேச ஆரம்பிச்சேன். சாரி மிருது”

“இட்ஸ் ஓகே மா. சரி நாங்க சக்தியோட இந்த லீவுக்கு ஊருக்கு வரலாம்னு இருக்கோம்.”

“சூப்பர் சூப்பர் பேஷா வாங்கோ. உனக்குப் பிடித்த அப்பம்…மாப்ளைக்குப் பிடித்த முள்ளு முறுக்கு நம்ம சக்திக் குட்டிக்குப் பிடித்த ரிப்பன் பக்கோடா எல்லாம் செய்து வைக்கிறேன். எப்போ வர்றேங்கள்”

“நாங்க வர்ற ஜூன் இருபதாம் தேதி வந்துட்டு ஜூலை பத்தாம் தேதி கிளம்பிடுவோம். இந்த தடவை உங்க ரெண்டு பேரையும் ப்ளஸ் என் மாமனார் மாமியாரையும் கூட்டிண்டு ஒரு முன்னார் ட்ரிப் போகலாம்னு இருக்கோம். உங்களுக்கு வர சம்மதமா?”

“ஓ! இதெல்லாம் என்னத்துக்கு கேட்டுண்டு? நாங்க என்ன ஆஃபீஸுக்கா போகணும். சும்மா தானே உட்கார்ந்துண்டிருக்கோம். வான்னா வரப்போறோம்.”

“ஓகே மா. அப்படீன்னா நாங்க வந்துட்டு ஒரு இரண்டு நாள்ல அதாவது இருபத்திரெண்டாம் தேதி நாம முன்னாருக்குப் போயிட்டு நாலு நாள் அங்கே தங்கிட்டு வரலாம் சரியா. அதுக்கு வேண்டிய டிரெஸ்ஸை எடுத்து வச்சுக்கோங்கோ… அப்பா நீ எனக்கொரு ஹெல்ப் பண்ணணுமே!!”

“சொல்லு மிருது என்ன பண்ணணும்?”

“நாம நாலு …மூணு… ஏழு பேர் வசதியா உட்கார்ந்து முன்னார் போறா மாதிரி ஒரு வண்டி ஏற்பாடு பண்ணறையாப்பா?”

“ஓ பண்ணறேனே. டேட் எல்லாம் ஃபைனல் பண்ணிட்டயோனோ!! அதே டேட்டுக்கு சொல்லலாமில்லையா?”

“எஸ் அப்பா அதே டேட் தான் நோ சேஞ்ச் வண்டியை கன்ஃபார்ம் பண்ணிடூ. எவ்வளவு என்னங்கறதை சொல்லு நான் உனக்கு பணம் டிரான்ஸ்ஃபர் பண்ணிடறேன்”

“அதெல்லாம் ஒண்ணும் இப்போ குடுக்க வேண்டாம் மிருது. நாம ட்ரிப் போயிட்டு வந்து குடுத்தாப் போறும். கிளம்பற அன்னைக்கு அட்வான்ஸ் கேட்ப்பா அவ்வளவு தான். அப்போ தான் நீங்களே இங்க இருப்பேங்களே”

“ம்….அப்போ ஓகேப்பா. நீ வண்டியை புக் பண்ணிடு. சரி நான் வச்சுடவா. அடுத்து என் மாமனார் மாமியார்ட்ட கேட்கணும்”

“ஏன்டி மிருது அவா வருவாளாடி?”

“ஏன்ம்மா அப்படி கேட்குற?”

“இல்ல அவா வரணும்னு தான் ஆசைப்படுவா ஆனா அந்த குவைத் காரனும் காரியும் விடமாட்டேளே அதுதான் கேட்டேன்.”

“வந்தா சந்தோஷம். வரட்டும். இல்லாட்டி வேற யாராவது பெரியவாளை கூட்டிண்டு போக வேண்டியது தான்..சரி மா எனக்கு நிறைய வேலையிருக்கு வச்சுடவா”

அப்பாவிடம் சொல்லி காருக்கு ஏற்பாடு செய்தாள். பின் ஹாட்டல் புக்கிங் எல்லாம் நவீனும் மிருதுளாவுமாக செய்து முடித்தனர். பின் தன் மாமனாரை ஸ்கைப்பில் அழைக்க தயாரானவளிடம் நவீன்

“இங்கே பாரு மிருது …உங்க அப்பா அம்மா எந்த பந்தாவுமில்லாம உடனே ஓகே சொல்லிட்டா…ஆனா அங்கே அப்படி எல்லாம் சொல்லிட மாட்டாங்கறதை மனசுல நிறுத்திண்டு கால் பண்ணு சரியா!!”

“அவாளும் என் அப்பா அம்மா மாதிரி தானே நவீ…ரெண்டு பேருமா தனியா அங்கே இருக்கா. என்ன குழைந்தை ஸ்கூலுக்கு போகணும் இல்ல வேலைக்குப் போகணும்னு ஏதாவது இருக்கா என்ன?”

“பின்ன இல்லாமையா? அதுதான் மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் ப்ரவீன் ஃபேமிலி அங்கேயே தானே இருக்கா நைட்டைத் தவிர…அதுனால சொன்னேன்”

“ம்..ம்..நான் பார்த்துக்கறேன்”

“அப்படியா மேடம்?அதை நானும் பார்க்கறேன்!!”

என்று நவீன் சொன்னதும் ஈஸ்வரனை ஸ்கைப்பில் அழைத்த மிருதுளா…

“ஹாய் அப்பா எப்படி இருக்கேங்கள் எல்லாரும்?”

“ம்…நாங்க நல்லா இருக்கோம் நீங்க எல்லாரும் எப்படி இருக்கேங்கள்? ரொம்ப மாசம் கழிச்சு கால் பண்ணிருக்கயே என்ன விஷயம்”

“நாங்களும் நல்லா இருக்கோம். சரி ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் கால் பண்ணினேன். “

“என்ன அது?”

“நாங்க இந்த சம்மர் லீவுக்கு ஊருக்கு வர்றதா இருக்கோம். அப்படியே உங்க ரெண்டு பேரையும் ப்ளஸ் என் அப்பா அம்மாவையும் கூட்டிண்டு முன்னார் வரை ஒரு ட்ரிப் போகலாம்னு இருக்கோம். நாங்க இந்த மாதம் இருபதாம் தேதி சென்னை வந்திடுவோம். இருபத்திரெண்டாம் தேதி ஊருக்கு வருவோம். அங்கேந்து கார்ல முன்னார் போயி ஒரு நாலு நாள் உங்களோட எல்லாம் இருந்து டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு வரலாம்னு இருக்கோம். என்ன சொல்லறேங்கள். ஜூன் இருப்பத்தி இரண்டாம் தேதிலேந்து இருபத்தி ஐந்தாம் தேதி வரை உங்களால் எங்க கூட வர முடியுமா?”

என்று மிருதுளா கேட்டதும் ஈஸ்வரனும் பர்வதமும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அப்போது பர்வதம் ஈஸ்வரனிடம்

“வேற யாரு வர்றான்னு சொன்னா?”

“அவ அப்பா அம்மாவையும் நம்மளையும் கூட்டிண்டு போகறாளாம்”

என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். அதைக் கேட்ட மிருதுளா சட்டென

“உங்களால வரமுடியாட்டிப் பரவாயில்ல விடுங்கோ. நோ கம்பல்ஷன். நாங்க எனி வே டிக்கெட், ஹோட்டல், கார் எல்லாம் புக் பண்ணியாச்சு. உங்களால வர முடியலைன்னா அப்புறம் வேற நம்மாத்தேந்து பெரியப்பாவையோ, சித்தப்பாவையோ இல்ல அத்தையை ஃபேமிலியையோ அழைச்சுண்டு போகலாம்னு நவீ சொன்னார்.”

“இல்ல அதுக்கில்ல…நாங்க கவின் கிட்ட ஒரு வார்த்தைக் கேட்கணும் அதுதான்!!”

“ஓ!! எஸ்!! தாராளமா கேளுங்கோ. எங்களோட வர்றதுக்கு உங்க ரெண்டாவது புள்ளையோட பர்மிஷன் வேணும்ன்னா… வாங்கிக்கோங்கோ அதுனால எங்களுக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை.”

“இல்ல அதுக்கில்ல கவின் ஒரு வீடு வாங்கினானே ஞாபகமிருக்கா? பிச்சுமணி பொண்ணு கல்யாணத்தப்போ நானும் கஜேஸ்வரியுமா ரிஜிஸ்ட்ரேஷனுக்கு போனோமே!!”

“ஆங் ஞாபகமிருக்கு. அதுக்கும் நீங்க ட்ரிப் வர்றதுக்கும் என்ன சம்மந்தம்?”

“அவன் அந்த வீட்டு கிரகப்பிரவேசத்தை ஜூன் இருபதாம் தேதி வச்சிருக்கான்.”

என்று ஈஸ்வரன் சொன்னதும் சற்று வருத்தமான மிருதுளாவிடம் நவீன் கண்களாலேயே பார்த்தயா? என்று கேட்டான். உடனே சுதாரித்துக் கொண்ட மிருதுளா ஈஸ்வரனிடம்

“ஓ!! அப்படியா. இருக்கட்டுமே. அது இருபதாம் தேதி தானே நாங்க உங்களை வரச்சொல்லுறது இருபத்தி இரண்டாம் தேதியாச்சே.”

“நாங்க வர்றோம் …ஆனா ஒரு நாள் டைம் குடு நான் நாளைக்கு சொல்லறேன். எதுக்கும் அவன்ட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கறேன்”

“ம்…சரி நான் வச்சுடறேன். பை”

என்று பட்டென காலை முடித்த மிருதுளாவிடம் நவீன்

“கேட்டேல்ல!! இதை நான் எதிர்ப்பார்த்தேன். இவாளாவது உடனே சம்மதிக்கறதாவது.”

மிருதுளா அமைதியாக உட்கார்ந்திருந்ததைப் பாரத்த நவீன் அவளிடம்

“என்ன மிருது உன் பொறுமை அதோட எல்லையை கண்டுப் பிடிச்சுடுத்தா?”

“இல்ல நவீ…அதை விடுங்கோ. எனக்கென்னனா அவா ரெண்டு பேரும் எங்கெங்கயோ கவினோட பவினோட ப்ரவீனோட எல்லாம் போறா வரா… நம்மகிட்ட பர்மிஷனெல்லாம் கேட்க வேண்டாம்ப்பா …அட்லீஸ்ட் இன்பார்மாவது பண்ணிருக்காளா? ஆனா நாம கூப்பிட்டா எல்லார் கிட்டயும் பர்மிஷன் வாங்கணும்னு சொல்லறதைக் கேட்டதும் எனக்கு மனசுக்கு வருத்தமாயிடுத்து.”

“அவா தான் இன்னைக்கு உனக்கு ஒரு இன்பஃர்மேஷன் சொன்னாளே!! உன் மச்சினன் வீட்டுக்கு கிரகப்பிரவேசம் பண்ணப் போறான்னு…அது உன் காதுல விழலையா?”

“ம்…விழுந்தது. அது கவின் கஜேஸ்வரியோட வழக்கம் தானே நவீ. அதுனால எனக்கு அது பெரிசா படலை.”

“ஓ! ஒரு தடவை பட்ட அவமானம் மறுபடியும் பட்டா அது உனக்கு பெரிசா தெரியாதா?”

“இது என்ன இரண்டாவது தடவையா நவீ? கிட்டத் தட்ட அவா நடத்தின எல்லா விசேஷத்துக்கும் அப்படி தான் செஞ்சிருக்கா. ஏன் ஒரு விசேஷத்துக்கு நமக்கு பத்திரிகை அனுப்பாம இருந்ததை நாம கேட்டதுக்கு… உன் மாமனார் மாமியாருக்கு அனுப்பினோமேன்னு உங்க கிட்டயே திமிரா பேசினவா தானே!! என்ன எப்பவும் பத்திரிகை அனுப்பாட்டாலும் ஒரு வார்த்தை சொல்லவாவது செய்வா இந்த தடவை அதுவுமில்லை.”

“நான் பார்த்து வளர்ந்ததுகள் எல்லாம் இவ்வளவு திமிருல இருக்கும் போது நாம மட்டும் இறங்கி போகணும்னு நீ சொல்லறது சரியில்லை மிருது.”

“நவீ…நாம இறங்கிப் போறதுனால எப்பவுமே குறைஞ்சுப் போயிடமாட்டோம்…குறைஞ்சுப் போனதுமில்லை. நாம நல்லா தான் இருக்கோம். விட்டுக் கொடுத்தவா என்னைக்குமே கெட்டுப் போனதில்லைன்னு சொல்லுவா அதுபோல நாம மேல மேல நல்லா தான் ஆகிண்டிருக்கோம். ஸோ கவலைப் படாதீங்கோ”

“விட்டுக் கொடுத்துப் போகறதுன்னா அது டூ வேவா இருந்தா எல்லாருக்கும் அதில் சந்தோஷம் தான் ஆனா அது எப்பவுமே ஒன் வேவாவே இருந்தா அது விட்டுக் கொடுத்துப் போறவாளுக்கு சுமைதான் அதைப் புரிஞ்சுக்கோ மிருது.”

“எதையும் யார்கிட்டேயும் எதிர்ப்பார்த்து விட்டுக் கொடுக்கக் கூடாது நவீ.”

“சரி மா…இப்படியே பேசிண்டிருந்தன்னா ஒரு நாள் நீ பெரிய சாமியாரினி ஆயிடுவியோன்னு எனக்கு பயமா இருக்கு மிருது”

“ஹா! ஹா! ஹா!! ஹா!! நல்ல ஜோக் நவீ”

“என்னது ஜோக்கா!! சொல்லுவ சொல்லுவ…சொல்ல மாட்ட …சரி நாளைக்கு உன் மாமனார் என்ன சொல்லுவார்னு நினைக்கற?”

“அவா நிச்சியம் நம்ம கூட வருவா.”

“அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்லற மிருது?”

“ம்….அவாளும் அங்கே தனியாகத் தான் இருக்கா. உங்க தம்பி ப்ரவீன் மைசூருக்கு நம்மாத்துக்கு வந்திருந்த போது உங்க அம்மா ஃபோன்ல என்ன சொன்னா??”

“என்ன சொன்னா?”

“ப்ரவீனும் துளசியும் குழந்தைகளும் அங்கேயே ஒரு வாரம் இருக்கட்டும் நாங்களும் நிம்மதியா இங்கே இருக்கோம்னு சொன்னா இல்லையா அதை வைத்துத்தான் நான் சொல்லறேன். ஸோ அவாளுக்கும் ஒரு சேஞ்ச் தேவைப்படறது. அதுவுமில்லாம அவாளை வேற எந்த பசங்களும் எங்கேயும் அழைச்சுண்டு போனதில்லைங்கறதும் ஒரு முக்கியமான பாய்ண்ட்”

“ஆமாம் நீ இவ்வளவெல்லாம் யோசிச்சு எல்லாம் செய்…அவா அதையும் கெடுத்துக் குட்டிச்சுவறாக்கி…உன்னையே அவமானப்படுத்தவும் செய்வா”

“பார்ப்போம் நவீ.”

மறுநாள் மிருதுளாவை ஸ்கைப்பில் அழைத்தார் ஈஸ்வரன்

“ஹலோ”

“ஹலோ அப்பா. சொல்லுங்கோ. பர்மிஷன் வாங்க வேண்டிய இடத்திலெல்லாம் வாங்கியாச்சா? கிடைச்சுதா?”

“ஆங் கேட்டேன். கவின் சொல்லறான் நாங்க அவன் கூட கிரகப்பிரவேசத்துக்கு ட்ராவல் பண்ணிட்டு திரும்பி இருபத்தி ஒன்னாம் தேதிதான் வருவோமாம். ஸோ உடனே அடுத்த நாளே முன்னார் கிளம்பணும்னா கஷ்ட்டமில்லையான்னு கேட்கிறான்.”

“இட்ஸ் ஓகே அப்பா. அவன் கூட அவ்வளவு தூரம் கார்ல போய் கிரகப்பிரவேசம் அட்டெண்ட் பண்ணறது உங்களுக்கு களைப்பைக் குடுக்காது தான். புரியறது. சரி அப்போ நாங்க பெரியப்பா ஆர் அத்தைக் கிட்ட சொல்லி அவாளைக் கூட்டிண்டு போயிக்கறோம். இட்ஸ் ஓகே!!”

“அவா எல்லாம் என்னத்துக்கு?”

“இது நல்லாயிருக்கேப்பா…நாங்க ரூமுலேந்து எல்லாம் புக் பண்ணியாச்சே…அதை கேன்சல் பண்ணவும் முடியாது…அது சும்மா போறதுக்கு அட்லீஸ்ட் அவாளையாவது கூட்டிண்டு போவோம் இல்லையா. அவாளாவது சந்தோஷப்படுவா இல்ல”

“அவாளையும் கவின் அவனோட கிரகப்பிரவேசத்துக்கு அழைச்சிருக்கான். அவாளும் எங்களோட தான் வரப்போறா”

“ஸோ வாட்? அவாளுக்கும் எங்களோட வர்றதுக்கு உங்களை மாதிரி கஷ்டமாயிருந்தா வரமாட்டா இல்லைன்னா வருவா அவ்வளவு தானே. கேட்கறதுல எந்த தப்புமில்லையே!!! அதுவுமில்லாம என் அப்பா அம்மா சென்னையிலேந்து கார்ல டிராவல் பண்ணிண்டு நம்ம ஊருக்கு வந்து அங்கேந்து அதே கார்ல முன்னார் வரை உட்கார்ந்துண்டு தான் வரப்போறா…உங்களை விட அதிக நேரம் கார்ல அவா உட்காரணும் …அவாளும் வயசானவா தான்!”

என்று மிருதுளா சொன்னதும் பர்வதம் ஈஸ்வரன் பின்னாலிருந்து ஏதோ முனுமுனுத்தாள்…உடனே ஈஸ்வரன் மிருதுளாவிடம்

“பர்வதத்திற்கு வரணுமாம். அதுனால நாங்களே வர்றோம்”

“அப்படியா? உங்களுக்கு கஷ்டமாயிருக்காதே?”

“அதெல்லாம் ஒண்ணுமிருக்காது நாங்க பார்த்துக்கறோம். சரி நான் காலைக் கட் பண்ணவா?”

“ஓகே பா பை.”

என்று காலைத் துண்டித்ததும். அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த நவீன் மிருதுளாவிடம்

“பார்த்தியா மிருது. அடுத்தவா சந்தோஷமா இருப்பாளேனுட்டு இவா வரேன்னு சொன்னதை!!”

“எப்படியோ வரேன்னு சொல்லிட்டாயில்லையா. விடுங்கோ”

“எனக்கென்னவோ இப்போ நம்ம கிட்ட வரேன்னு சொன்னதுக்குப் பின்னாடியும் ஏதோ ஒரு ப்ளான் இருக்குமோன்னு டவுட் வர்றது”

“இதுல என்ன டவுட் நவீ?”

“ஆமாம் இப்போ வரலைன்னு சொன்னா நீ பாட்டுக்கு பெரியப்பா ஆர் சித்தப்பா ஆர் அத்தையை கூப்பிட்டுப்ப….அதே இப்போ வரோம்னு சொல்லிட்டு அங்கே போனதும் வரலைன்னு சொன்னா அப்போ எப்படி? யாரை? கூப்பிடுவ? என் யூகம் சரியா?”

“ம்…அப்படிப் பண்ணுவாளா என்ன?”

“எல்லாம் பண்ணுவா. தான் அனுபவிக்காத சந்தோஷம் வேற யாருமே அனுபவிக்கக் கூடாதுங்கற நல்ல எண்ணத்தின் பிரதிபலிப்பு தான் அது”

“எனக்கென்னவோ அப்படி தோனலை.”

“அப்படீன்னா உனக்கு என்ன தோணறதுனு சொல்லேன் கேட்ப்போம்”

“மே பீ….அவா எல்லாம் யாரு என் புள்ளை மாட்டுப்பொண்ணோட ஊர் சுத்த…அதுக்கு நாமளே போயிட்டு வந்திடலாம்னும் இருக்கலாமில்லையா!!”

“ம்..குட் கெஸ். நீ என்னைக்கு நல்லதோட மறுபக்கத்தைப் பத்தி பேசிருக்க? பார்ப்போம் பார்ப்போம்”

மிருதுளா சுற்றுலாவுக்கு வருகிறீர்களா என்று கேட்ட ஒரு கேள்விக்கு உடனே பதிலளித்த அம்புஜம் ராமானுஜத்தைப் பற்றி அன்றே மறந்தனர் நவீனும் மிருதுளாவும் ஆனால் அந்த கேள்வி கேட்டதற்கு இரண்டு நாட்கள் அவர்களைப் பற்றியே சிந்திக்கவும் பேசவும் வைத்தனர் பர்வதீஸ்வரன். இது போன்றவர்களைத் தான் ஆங்கிலத்தில் “manupulators” என்று கூறுவார்கள். அதாவது சூழ்ச்சித்திறன் மிக்கவர்கள் என்பார்கள். இப்படிப்பட்டவர்கள் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அல்லது சூழலாக இருந்தாலும் அவற்றை தங்களுக்கு ஏற்றார் போல, தங்களுக்கு சாதகமானதாக மாற்றிக் கொள்ள வல்லமைப் படைத்தவர்கள். அவ்வாறு செய்வதற்கு அவர்கள் எவரைப் பற்றியும் சிந்திக்காத சுயநலவாதிகளாகிறார்கள். அவர்களுக்கு அவர்கள் காரியம் தான் முக்கியம் என்று வாழ்வார்கள். இது போன்ற குணமுடையவர்கள் கல்லை மண்ணாகவும் மண்ணைக் கல்லாகவும், தண்ணீரைப் பாலாகவும் பாலை தண்ணீராகவும் அவர்களின் சூழ்ச்சித்திறனால் மாற்றி நம்பவைக்கும் ஆற்றல் மிகுந்தவர்கள்.

நவீன் குடும்பத்தினர் இந்தியாவிற்கு செல்லும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. மிருதுளா தன் அப்பாவுக்கும் மாமனாருக்கும் ஒரே மாதிரியான வாட்ச் மற்றும் கேம் விளையாடுவதற்காக ஒரே ப்ராண்ட் டேப்லெட்டும் ஆன்லைனில் வாங்கினாள். அம்மாக்கள் இருவருக்குமே ஒரே மாடல் வைர மூக்குத்தியும், ஜெர்கான் தோடும் வாங்கினாள். ஈஸ்வரன் வீட்டின் அருகேயே குடியிருப்பதால் ப்ரவீனுக்கும் துளசிக்குமாக கப்புள்ஸ் வாட்ச்சும் அவர்களின் பெண்ணிற்கு வைரத்தில் சிறிய தோடும், மகனுக்கு ஒரு ரிமோட்டில் பறக்கும் ஏரோப்ளேனும் வாங்கினாள். மற்ற அனைத்து சொந்தங்களுக்கும் ஒவ்வொன்றை வாங்கி பேக்கும் செய்து முடிதாள். சொந்த பந்தங்களுக்கான பரிசுப் பொருட்களே ஒரு பெரிய பெட்டி முழுவதும் இருந்தது.

இந்தியாவுக்கு புறப்படும் நாள் வந்தது. மூவருமாக இந்தியா செல்ல ஃப்ளைட் ஏறினர். விடியற்காலை நான்கு மணிக்கு சென்னை விமான நிலைத்திற்கு சென்று இறங்கினர். அங்கிருந்து ஒரு டாக்ஸிப் பிடித்து ராமானுஜம் அம்புஜம் வீட்டிற்குச் சென்றனர். அம்புஜமும் ராமானுஜமும் வீட்டின் வாசலிலேயே காத்திருந்தனர். டாக்ஸி வீட்டின் வாசலில் வந்து நின்றதும் ஓடிச்சென்று அம்புஜம் சக்தியைக் கட்டியணைத்துக் கொண்டு பேசலானாள். ராமானுஜம் நவீனுடன் சேர்ந்து பெட்டிகளை வீட்டினுள் எடுத்து வந்தார். அவர்கள் குளித்து வந்ததும் அவர்கள் மூவருக்கும் மிகவும் பிடித்த லெமன் சேவை, தேங்காய் சேவை, மெது வடை, தேங்காய் சட்னி, சாம்பார் எல்லாம் செய்து வைத்திருந்த அம்புஜமும் ராமானுஜமும் அவர்களுக்கு மாறி மாறி பரிமாறினார்கள். அப்போது நவீன்

“நீங்க ரெண்டு பேரும் எங்களோடவே சாப்பிடலாமே!”

“ஆமாம் மா. நாங்களே போட்டு சாப்ட்டுக்கறோம். நீங்களும் எங்களோட உட்கார்ந்து சாப்பிடுங்கோ”

“நீங்க மொதல்ல சாப்பிடுங்கோ நாங்க ரெண்டு பேருமா அப்புறமா சாப்ட்டுக்கறோம்”

“இதெல்லாம் செய்ய நீங்க ரெண்டு பேரும் நிச்சயம் நாலு மணிக்கு எழுந்துண்டிருப்பேங்கள்…இப்போ மணி ஏழாகறது. உங்களுக்கும் பசிக்குமில்லையா!! எல்லாத்தையும் இங்கே கொண்டு வந்து வச்சுட்டு எங்களோட சேர்ந்து சாப்பிடுங்கோ…எப்பவும் நீங்க ரெண்டு பேரும் மட்டும் தானே சாப்பிடறேங்கள்?”

“அதுக்கில்ல மிருது…”

“பாட்டி தாத்தா ரெண்டு பேரும் எங்க கூட சாப்பிடுங்கோ ப்ளீஸ்”

“சரிடி என் செல்லக் குட்டி….இதோ சாப்ட்டாப் போச்சு”

என்று அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். அப்போது மிருதுளா தன் அம்மாவிடம்

“ஏன் மா நாங்க சொன்னப்போ கேட்கலை…அதையே உன் பேத்தி சொன்னதும் சாப்பிடறேங்கள்?”

“ம்…பின்ன …பேத்தின்னா சும்மாவா. எங்க செல்லக்குட்டிமா சொன்னா எப்படி தட்டுவோம் சொல்லு”

“அப்போ உங்க பொண்ணை விட பேத்திதான் உங்களுக்கு பெரிசு இல்லையா?”

“இதுல உனக்கு சந்தேகம் வேறையா? சக்திக் குட்டி தான் எங்களுக்கு பெரிசு. இந்தாடிக் கண்ணா பாட்டிக்கிட்டேந்து ஒரு வாய்…சாப்டு”

“அம்மா இதெல்லாம் டூ மச்….நான் பதினொன்னாவது படிக்கும் போது எப்பயாவது எனக்கு ஊட்டிவிட்டிருக்கேங்களா மா?”

“நீ எங்க பொண்ணு ஆனா சக்திக் குட்டி எங்க பேத்தியாச்சே”

என்றதும் நவீனும் சக்தியுமாக மிருதுளாவைப் பார்த்து கிண்டல் செய்தனர். அதற்கு மிருதுளாவும் சிரிக்க அனைவரும் சிரித்துப் பேசிக்கொண்டே சாப்பிட்டு எழுந்தனர்.

மிருதுளா தன் அப்பாவுக்கும் அம்மாவுக்குமாக வாங்கி வந்த பரிசுப் பொருட்களை சக்தியிடம் கொடுத்துக் கொடுக்கச் சொன்னாள். அதைப் பார்த்ததும் இருவரும் மிகவும் சந்தோஷப்பட்டனர். அப்போது ராமானுஜம் மிருதுளாவிடம்

“என்னத்துக்கு இப்போ இந்த செலவெல்லாம் பண்ணின மிருது?”

“ஏன்ப்பா உனக்கு அந்த வாட்ச்சும் டேப்லெட்டும் பிடிக்கலையா?”

“அதுக்கில்ல மிருது. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இப்போ இந்த சுற்றுலா செலவு வேற இருக்கேன்னுட்டு கேட்டேன்”

“அச்சச்சோ!!! குழந்தைகள் ஆசையா வாங்கிண்டு வந்து தந்திருக்கா…பேசாம வாங்கிண்டு அவாளை ஆசிர்வாதம் பண்ணறதை விட்டுட்டு தேவையில்லாம பேசறேங்களே!!”

“அதுக்கில்ல அம்பு”

“இதோ பாருங்கோ உங்க ரெண்டு பேருக்கும் நாங்க ஆசையா வாங்கிண்டு வந்திருக்கோம்…நீங்க செலவைப் பத்தி எல்லாம் யோசிக்காதீங்கோ!!”

“ஓகே! மாப்ள இனி அதைப் பத்தி பேச மாட்டேன். சக்தி தாத்தாவுக்கு இந்த டேப்லெட்டில் பபுள்ஷூட் டவுன்லோடு பண்ணித் தாடி செல்லம்”

“பபுள்ஷூட் மட்டுமில்ல தாத்தா… உனக்கு நிறைய கேம்ஸ் டவுலோடு செய்துத் தரேன்…வா”

“சக்திக்குட்டி பாட்டிக்கும் அதே கேம்ஸ் எல்லாம் என் ஃபோன்ல டவுலோடு பண்ணித்தாடிக் கண்ணா”

“ஓகே! ரெண்டு பேரும் வாங்கோ நான் டவுனலோடு செஞ்சு அதை எப்படி விளையாடணும்னும் சொல்லித் தரேன்”

என்று மூவரும் ஒரு அறையில் மணிக்கணக்காக பிஸியானார்கள். மறுநாள் நவீன், மிருதுளா, சக்தி மூவரும் முன்னார் செல்வதற்கு அவரவர்களுக்கு தேவையான துணிமணிகளை பேக் செய்து முடித்ததும் மிருதுளா கீழே சென்று தன் அப்பா அம்மாவிடம்

“நீங்க எல்லாம் பேக் பண்ணியாச்சாமா?”

“ஓ! நாங்க நீங்க வர்றதுக்கு முன்னாடி நாள் தான் பேக் செஞ்சோம். சுவட்டர் எல்லாம் எடுத்துண்டிருக்கேளா?”

“என்னத்துக்கு அதெல்லாம்? வெய்யில் சுட்டெரிக்கறது…இதில் சுவட்டர் எல்லாமா…நீ வேற”

“அப்பா அங்கே குளிரா தான் இருக்கும். எதுக்கும் எடுத்து வச்சுக்கோங்கோளேன் நாமளா தூக்கிண்டு போகப் போறோம்? கார் தானே தூக்கிண்டு வரப்போறது?”

என்று பேசிக் கொண்டிருக்கும் போது மிருதுளாவின் இந்தியா நம்பருக்கு நவீனின் ஒண்ணு விட்ட தங்கையிடமிருந்து கால் வந்தது. உடனே எடுத்துப் பேசினாள் மிருதுளா.

“மன்னி எப்படி இருக்கேங்கள்? நவீன் அண்ணா, சக்தி எல்லாரும் எப்படி இருக்கா?”

“ம்…நாங்க நல்லா இருக்கோம் மா நீ எப்படி இருக்க? உன் நியூலி மேரிட் லைஃப் எல்லாம் எப்படி இருக்கு? சாரிமா எங்களால தான வரமுடியாம போச்சு. சரி நான் இந்தியாவுக்கு வந்திருக்கேன்னு உனக்கு யார் சொன்னா? கரெக்ட்டா கால் பண்ணறயே!!”

“ஆங் நான் நல்லா இருக்கேன் மன்னி. எங்கள் லைஃபும் நல்லா போயிண்டிருக்கு. ஈஸ்வரன் பெரியப்பா தான் நீங்க இருபதாம் தேதி வர்றதா சொன்னா. அதுதான் இன்னைக்கு கால் பண்ணினேன்”

“அப்படியா…சொல்லு சொல்லு. என்ன விஷயம்?”

“மன்னி இந்த கவின் அண்ணாவும் அந்த கஜேஸ்வரியும் பண்ணியிருக்கறதைப் பார்த்தேளா?”

“ஏன் அவா உனக்கென்ன பண்ணினா?”

“எனக்குன்னு இல்ல மன்னி ஈஸ்வரன் பெரியப்பா சைடுலேந்து யாரையுமே விசேஷத்துக்கு அழைக்கலை …இத்தகைக்கு நாங்க எல்லாரும் கவினுக்கு மட்டுமில்ல அந்த கஜேஸ்வரிக்கும் சொந்தம் வேற…அவா வீட்டுக் கிரகப்பிரவேசத்தை நேத்து நடத்திருக்காளே அதைத் தான் சொன்னேன்”

“ஓ!! அதையா!! ஆமாம் சொந்த அண்ணா மன்னி கிட்டயே சொல்லலையாம் இதுல உங்களை எல்லாம் அழைக்கலைன்னு நீ என் கிட்ட சொல்லற!!”

“அப்படியா உங்களையுமா அழைக்கலை?”

“அது …அவா வழக்கம் தான் மா. அதுனால எங்களுக்கு புதுசா படலை…ஆனா உங்களுக்கெல்லாம் இது தான் மொதோ தடவை போல அதுதான் இப்படி ஷாக் ஆகறேங்கள்.”

“இனி நாங்கஅவாளோட எந்த விசேஷத்துக்கும் போக கூடாதுன்னுட்டு முடிவெடுத்திருக்கோம் மன்னி”

“அது உங்க விருப்பம் மா. அதை நீ என் கிட்ட சொல்லணும்னு அவசியமில்லையே”

“அதுக்கில்ல மன்னி எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வர்றது. அதுதான் உங்களோட ஷேர் பண்ணிக்கலாம்னு ஃபோன் பண்ணினேன்…ஆனா உங்களையே கூப்பிடலைன்னு தெரிஞ்சதுக்கப்புறமா அவா மேலே இன்னும் வெறுப்பு தான் வர்றது. சரி மன்னி அண்ணா கிட்டேயும் சக்திக் கிட்டேயும் நான் கேட்டதா சொல்லிடுங்கோ. நான் வைக்கறேன் பை. நீங்க ஊருக்கு எப்போ கிளம்பறேங்கள்?”

“நாங்க வர்ற ஜூலை பத்தாம் தேதி கிளம்பிடுவோம் மா”

“அப்படியா அதுக்கு இடையில முடிஞ்சா ஆத்துக்கு வாங்கோ மன்னி.”

“நிச்சயம் ட்ரைப் பண்ணறோம் மா”

“ஓகே மன்னி பை வச்சுடவா. அப்புறமா உங்களுக்கு கால் பண்ணறேன்”

என்று அழைப்பைத் துண்டித்தாள் நவீனின் ஒண்ணு விட்ட தங்கை ராதிகா. மாடிக்ஙுச் சென்று நவீனிடம் ராதிகா சொன்னதை கூறினாள் மிருதுளா. அதைக் கேட்டதும் நவீன்

“பரவாயில்லையே மிருது நீயும் பேச கத்துண்டுட்டியே!! பலே!!! அந்த கூட்டம் ரொம்ப திமிருல ஆடுறா…பார்ப்போம்…எல்லாத்தையும் பொறுமையா தள்ளி நின்னுண்டு பார்ப்போம்”

இருபத்தி இரண்டாம் தேதியானது. நவீன், மிருதுளா, சக்தி, அம்புஜம், ராமானுஜம் ஐவரும் காலை நான்கு மணிக்கெல்லாம் தயாராகி காரில் ஏறி பர்வதீஸ்வரன் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

தொடரும்…..























Leave a comment