அத்தியாயம் 103: எஸ்கலேட்டர்!!

குவைத் மண்ணில் தரையிறங்கியது விமானம். நவீன், மிருதுளா, சக்தி மூவரும் மூவாயிரத்தி ஐநூற்றி நாற்பத்தி ஓரு கிலோமீட்டர் பிரயாணம் செய்து குவைத் மண்ணில் கால் வைத்தனர். இமிக்ரேஷன் எல்லாம் முடிந்து தங்களின் பெட்டிகளையும் எடுத்துக் கொண்டு குவைத் ஏர்ப்போர்ட்டு வெளியே வந்தனர். மிருதுளா எதிர்ப்பார்த்த விஷயமான தன் மச்சினன் அவன் மனைவியின் வரவு …நவீன் சொன்னதுப் போலவே வெறும் நப்பாசையானது. ஆனால் நவீனின் பெயர் பலகைக் கொண்டு ஒருவர் காத்திருந்ததைப் பார்த்த நவீன் நேராக அவரை நோக்கி நடக்கலானான். அப்போது மிருதுளா நவீனிடம்

“இவர் யார் நவீ உங்க பெயர் எழுதியப் பலகையை வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்?”

“ம்….உன் மச்சினனும் ஓர்பிடியும் தான் நம்மளை ரிசீவ் பண்ணி அவா ஆத்துக்கு அழைச்சுண்டு வர்றதுக்காக அனுப்பிருக்கா போல!!”

“ஹேய் நவீ….விளையாடாதீங்கோ நவீ…..உங்களை நான் கிண்டல் பண்ணணும் ஆனா நீங்க பண்ணறா மாதிரி நானே வச்சுட்டேன். சரி சரி சொல்லுங்கோப்பா யார் இவர்.”

“இவரை அனுப்பியிருக்கறது என்னோட இங்கத்த ஆஃபீஸ் காரா தான் மிருது.”

“அப்போ உங்களுக்கு இங்க ஆள் நமக்காக வெயிட் பண்ணுவானு முன்னாடியே தெரியுமா?”

“ஆங்…தெரியுமே”

“அப்படீன்னா ஏன் நீங்க நேத்து நான் அப்படி சொல்லும் போதே இதைப் பத்தி சொல்லலை”

“நேத்து நீ எதை சொல்லும் போது நான் எதைப் பத்தி சொல்லலைன்னு சொல்லுற மிருது”

“ம்…..உங்க…சாரி …சாரி என் மச்சினனும் ஓர்பிடியும் ஏர்போர்ட் வருவான்னு சொன்னபோது ஏன் உங்க ஆஃபீஸ்லேந்து நம்மை பிக்கப் பண்ண ஆள் வருவானு சொல்லைலைன்னு கேட்டேன். புரியறதா!!”

“ம்…நல்லாவே புரியறது மிருது. இப்போ நீ கார்ல ஏறு. சக்தி மா ஏறு கண்ணா.”

“வாவ் !! அப்பா சூப்பர்”

“என்னடி சூப்பர் சக்தி”

“அம்மா நம்மளை பிக்கப் பண்ண வந்திருக்கும் காரைப் பாரும்மா….இட்ஸ் மெர்க் மா மெர்க்”

“அதுனால என்ன எல்லா காரும் நாலு சக்கரத்துல தானே ஓடும்!! இது மட்டும் என்ன ரெண்டு சக்கரத்துலயா ஓடப்போறது இவ்வளவு ஆச்சர்யப்படற!!”

“அம்மா உள்ளே உட்கார்ந்துப் பாரு யூ வில் ஃபீல் தி டிஃப்ரெனஸ்”

என்று சக்தி சொன்னதும் உள்ளே ஏறினாள் மிருதுளா.

“ம்…நல்ல சொகுசா தான் இருக்கு”

“நான் தான் சொன்னேன் இல்லமா”

“மிருது இது ரோட்டுல ஓடறா மாதிரியே இருக்காது. சரி சரி ரெண்டு பேரும் சீட் பெல்ட் போட்டுக்கோங்கோ. ஆல் ஓகே! லெட்ஸ் கோ டூ தி சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் நவ்”

“ஓகே சார்”

“ம்…நீ தான் ரொம்ப ஆசைப்பட்ட உன் சொந்தங்தள் எல்லாம் வருவானுட்டு அதை ஏன் அப்பவே நான் சொல்லி அதில் மண்ணைப் போடணும்னு தான் சொல்லலை போதுமா.”

“ம்….ம்….ஓகே !! ஓகே!!! நாம அந்த சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் போக எவ்வளவு நேரமாகும்?”

“இட் வில் டேக் பிஃப்டீன் மினிட்ஸ்”

“அவ்வளவு தானா?”

“ஆமாம் மிருது.”

மிருதுளாவும் சக்தியும் காரின் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டும் அதைப் பற்றி பேசிக் கொண்டும் இருந்தனர்.

இருவரும் அவரவர் முகநூல் பக்கத்தில் தாங்கள் நல்லபடியாக குவைத் வந்து சேர்ந்துவிட்டதாகவும்…இனி அதுவே அவர்கள் வசிக்கப் போகும் இடம் எனவும் ஏர்போர்ட்டில் எடுத்த ஃபோட்டோவைப் போட்டு பதிவிட்டனர். நவீன் வீட்டு அதிமேதாவிகளான எட்டுப் பேரைத் தவிர அனைத்து நண்பர்கள், சொந்தங்கள் எல்லாம் வாழ்த்துத் தெரிவித்தனர்.

கார் ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் வாசலின் முன்னிருந்த பார்க்கிங்கில் நின்றது. மூவரும் இறங்கினர். டிரைவர் அவர்கள் பெட்டிகளை எடுத்து வெளியே வைப்பதற்கு முன்னதாகவே அந்த சர்வீஸ் அப்பார்ட்மெண்டிலிருந்து ஒருவர் டிராலியைக் கொண்டு வந்து பெட்டிகளை அதில் அடுக்கி வைத்து உள்ளே எடுத்துச் சென்றார். நவீன் மிருதுளாவையும் சக்தியையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான். உள்ளே சென்று தங்களது அப்பார்ட்மெண்ட்டைப் பார்த்ததும் மிருதுளா நவீனிடம்

“என்ன நவீ இது ஃபைவ் ஸ்டார் ப்ராப்பர்ட்டி மாதிரி இருக்கு!!”

“மாதிரி இல்ல மிருது. ஃபைவ் ஸ்டார் ப்ராப்பர்ட்டியே தான். அப்படிப் பட்ட வேலையும் அதுக்கு ஏத்த சம்பளமும் இப்படிப்பட்ட சௌகர்யமும் இல்லாட்டி நான் ஒத்துண்டிருக்க மாட்டேனே!!”

“சூப்பரா இருக்கு நவீ. நான் இதெல்லாம் கனவுல கூட நினைச்சுப் பார்த்ததில்லை. மெர்சிடீஸ் காரு…ஃபைவ் ஸ்டார் ப்ராப்பர்ட்டி…. இதெல்லாம் பார்க்கும் போது எனக்கு சந்தோஷமும் வர்றது அதே நேரம் கொஞ்சம் பயமும் வர்றது”

“சந்தோஷம் வர்றது ஓகே….ஆனா….ஏன் பயம் வர்றது மிருது.”

“எப்பவுமே நாம நம்ம வாழ்க்கையில ஒவ்வொரு படியா மேலே ஏறி வரும் போதெல்லாம் எனக்கு அப்படித் தான் தோனித்து, தோனறது….இனியும் தோனும் நவீ”

“அது தான ஏன்னு கேட்கிறேன் மிருது”

“நாம எஸ்கலேட்டர் ல ஏறும் போது எவ்வளவு ஜாக்கிரதையா நமது காலை எடுத்து வைத்து ஏறறோம் !!! ஏன் அப்படி?அது நம்மளை மேலே கூட்டிண்டு போகப் போறதுனு நம்பிக்கை இருந்தாலும் நாம அதுல காலை சர்வ ஜாக்கிரதையா தானே வைக்கறோம்!”

“ஏன்னா எங்கேயும் விழுந்துடக் கூடாதுங்கறதுனால அப்படி பண்ணறோம். ஆனா…அதுக்கும் நீ இப்ப சொன்னதுக்கும் என்ன சம்மந்தம்”

“இருக்கு நவீ. அதே போல வாழ்க்கைங்கற எஸ்கலேட்டர் நம்மை மேலே கூட்டிண்டு போகும்னு நம்பினாலும் நாம வைக்கற ஒவ்வொரு ஸ்டெப்புமே ஜாக்கிரதையா தான் வைக்கணும்….வைக்கறது மட்டுமில்ல பின்னாடி விழுந்துடாமலும் இருக்கணும். ஏறும்போது வலி இருக்காது… அப்படியே…இருந்தாலும் அது ஏறணும்ங்கற நினைப்புல நமக்குத் தெரியாது. ஆனால் விழுந்தாலோ அடி பலமா படும் இல்லையா. அதுனால ஏறும் போது நாம கீழே விழுந்திடாம இருக்கணுமே தாயினு எப்பவுமே ஒரு பயம்….பயம்னு சொல்ல முடியாது….ஒரு எச்சரிக்கை உணர்வு… எனக்கு…இருந்துண்டே தான் இருக்கும். அது குஜராத்லேந்து இப்போ இந்த குவைத் வரைக்கும் அதே எண்ணம் தான் எனகுள்ள இருக்கு. அந்த எண்ணமிருந்தால் நம்மளுக்கு அகங்காரமோ…பணம் வந்த திமிரோ என்னைக்கும் வராது. புரிஞ்சுதா!!”

“ஓ மை காட்!!! மிருது நீ இவ்வளவு எல்லாம் யோசிச்சா அப்புறம் கிடைச்ச லைஃபை உன்னால எஞ்சாய் பண்ண முடியாது”

“முடியும் நவீ. ஆனா எப்புவுமே என் மனசிலேந்து அந்த எண்ணம் மட்டும் அகலாது. அதுனால ஒவ்வொரு முறையும் நமக்கு நல்லது நடக்கும் போதும் அதை அனுபவிக்கறதுக்கு முன்னாடி அதை நமக்குக் கொடுத்த அந்த அம்பாளை வேண்டிண்டு தான் ப்ரொசீட் பண்ணுவேன்”

“எப்பலேந்து இப்படிப் பண்ணற மிருது?”

“அது நான் சொல்லுவேன் நீங்க வருத்தப் படக்கூடாது”

“அதெல்லாம் படமாட்டேன் சொல்லு.”

“நான் நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி எங்காத்துல ராணி மாதிரி இருந்தேன். எது கேட்டாலும் எங்கப்பா வாங்கித் தந்திடுவா. இல்லைங்கற வார்த்தையை நான் கேட்டதே இல்லை. என்னை யாருமே திட்டினதில்லை. நான் திட்டு வாங்கறா மாதிரி நடந்துண்டதுமில்லை. சமையல் செய்ததில்லை. துணி துவைத்ததில்லை. அப்படி இருந்துட்டு….நம்ம கல்யாணத்துக்கு அப்புறமா என் வாழ்க்கை அப்படியே தடம் மாறித்து. எதெல்லாம் இருந்ததோ கிடைத்ததோ அதெல்லாமே இல்லைன்னு ஆச்சு….அதுவரை கஷ்டம்ன்னா என்னென்னே தெரியாதிருந்த நான் கஷ்டத்துக்கு மேல கஷ்டத்தை மட்டுமே தான் சந்தித்தேன்….அதுவே என் வாழ்க்கையாகிடுத்தோனு கூட பல நாள் நினைச்சிருக்கேன். கல்யாணமான மறுநாளே அடுப்படிக்குள் தள்ளப் பட்டேன். என் அம்மா அப்பா கூட திட்டாத என்னை கண்டபடி வாயிலிட்டு வறுத்தெடுத்தனர் என் மாமியாரும் மாமனாரும். தேவையே இல்லாமல் உங்கள் தம்பிகளிடமெல்லாம் பேச்சு வாங்க வேண்டி வந்தது. அப்பவும் அந்த அம்பாள்ட்ட தான் என் மனக் கஷ்டங்களை சொல்லி அழுதேன். அதுக்கப்புறமா நம்ம வாழ்க்கை படிப்படியா உயர ஆரம்பித்ததும் தான் எனக்கு புரிந்தது என் அழுகை, வேண்டுதல் எல்லாம் அந்த அம்பாளுக்கு போய் சேர்ந்திருக்குணு. அதுக்கு அவள் குடுக்குற சன்மானம் தான் இந்த ஏற்றம் எல்லாமே. அதுனால அவளை எப்படி மறக்க முடியும். நம்ம வாழ்க்கையில எவ்வளவு ஏற்றங்கள் வந்தாலும் நான் இப்படி தான் இருப்பேன். என் மனசும் இப்படி தான் நினைக்கும். கல்யாணத்துக்கு முன்னாடி சந்தோஷமா… ஜாலியா… எஸ்கலேட்டர் மேல மட்டும் தான் கூட்டிண்டு போகும்னு நினைச்சு எந்தவிதத்திலும் எச்சரிக்கையாக இருக்காமல் ஏறிண்டே இருந்த என்னை கல்யாணம் அப்படீங்கற ஒரு விஷயம் சட்டென கீழே தள்ளி விட்டதும் ரொம்பவே தடுமாறிப் போனேன். அதிலிருந்து மெல்ல மெல்ல வெளிவந்து நாம வாழ்க்கையில உயர உயர தான் நிறைய புரிஞ்சுண்டேன்….பக்குவப்பட்டேன். இதுதான் என் எண்ணத்திற்கான விளக்கம் நவீ.”

“அம்மாடி இவ்வளவு வருஷங்களா இதை எல்லாம் நீ என்கிட்ட சொன்னதே இல்லையே!!!”

“நீங்க கேட்டதுமில்லையே”

“ம்…அதுவும் சரிதான். ஆம் சோ சாரி மிருது. இதை எல்லாம் நான் ஆரம்பத்துலேயே கேட்டிருக்கணும்….என்னோட தப்புத் தான்‌.”

“இட்ஸ் ஓகே நவீ. வாழ்க்கைங்கற அலைகள் நம்ம மேல மாத்தி மாத்தி அடிச்சிண்டிருந்ததுல …அதுலேந்து கடலுக்குள் மூழ்கிடாமல் தப்பிப்பதிலேயே நம்மளோட இந்த பதினாறு வருஷங்கள் போயிடுத்து. அதுல கூட நாம இப்போ நல்லாவே நீந்தக் கத்துண்டுட்டோம். அந்த அம்பாள் துணையிருக்க நாம எது வேணும்னாலும் சம்மாளிச்சிடுவோம். ஆம் சாரி இஃப் இட் ஹாட் டிஸ்டர்ப்டு யூ”

“இல்ல மிருது!!! இப்போ நீ மறுபடியும் ராணி தான்‌ கவலைப் படாதே மிருது. நம்ம கல்யாணத்துக்கு அப்புறமா நீ தொலைத்தது அனைத்தையும் இனி உனக்கு நான் தருவேன் கவலை வேண்டாம் மகாராணி. சரி ….நம்ம யுவராணி என்ன பண்ணுறா?”

“ம்…..ஆமாம் நம்ம கதையில அவளை மறந்துட்டோமே…வாங்கோ என்ன பண்ணறான்னு பார்ப்போம்”

“ஏய் சக்தி என்ன படுத்துண்டு டிவி பார்க்கற? உன் ரூமெல்லாம் செட் பண்ணிருக்கலாமில்ல…”

“அம்மா இப்போ தானே வந்திருக்கோம் பண்ணறேன் மா”

“விடு மிருது. இப்போ செட் பண்ணி என்ன ஆகப் போறது? எப்படியும் ஒரு மாசத்துல வேற வீட்டுக்கு ஷிஃப்ட் பண்ணணுமே”

“அதுக்காக ஒரு மாசமும் பெட்டியைத் தொறந்து தொறந்து டிரெஸ் எடுத்துப் போட்டுப்பாளா?”

“அம்மா நான் பண்ணறேன் மா. எனக்குப் பசிக்கறது இப்போ.”

“ஓ!!! அதை மறந்துட்டேனே”

“என்னத்தை மறந்தேங்கள் நவீ”

“இது ரமலான் மாசம்”

“ஸோ!!”

“எங்கேயும் போய் சாப்பிட முடியாது. சாப்பிடவும் கூடாது. இங்கே இவா நோன்பு இருப்பா இல்ல…..அதை நான் மறந்தே போயிட்டேன்.”

“அப்போ சாப்பாடு இல்லையாப்பா?”

“இரு இரு சக்தி நான் ரிசப்ஷனுக்கு ஃபோன் போட்டுக் கேட்கறேன்”

நவீன் அவர்கள் தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட் ரிசப்ஷனுக்கு ஃபோன் போட்டுக் கேட்டான்.

“அப்பா என்ன சொன்னா?”

“நாம வெளியில எங்கேயும் போய் சாப்பிடக் கூடாதாம். ஈவன் தண்ணீ கூட குடிக்கக் கூடாதாம். எல்லா ஹோட்டலும் சாயந்தரம் ஏழு மணிக்கு தான் ஓப்பன் பண்ணுவாளாம்.”

“அப்படியா!!! அப்படீன்னா ஏழு மணிக்கு இன்னும் சிக்ஸ் அவர்ஸ் இருக்கேப்பா….!!!!”

“இரு கண்ணா…நான் முழுசாவே சொல்லி முடிக்கலையே…நாம வெளில போய் சாப்பிடக் கூடாது ஆனா ஹோட்டல்ல ஆர்டர் பண்ணி இங்கே வீட்டுக்குள்ள சாப்பிட்டுக்கலாமாம்.”

“அப்பாடி!!!! சாப்பிடறதுக்கு ஆறு மணி நேரம் வெயிட் பண்ணணுமோன்னு நான் பயந்தே போயிட்டேன்ப்பா”

“ஓகே என்ன வேணும்னு ரெண்டு பேரும் சொல்லுங்கோ நான் ஆர்டர் பண்ணிடறேன்.”

என்று நவீன் சொன்னதும் மிருதுளாவும் சக்தியுமாக தங்களுக்கு வேண்டியதை சொல்ல அதை ஆர்ட்ர் செய்து வரவழைத்து சாப்பிட்டனர். முன்தினம் இரவு நேர ஃப்ளைட் என்பதால் மூவரும் சரியாக தூங்காதிருந்தனர். மத்திய உணவு சாப்பிட்டதும் நன்றாக படுத்துறங்கினர்.

நவீன் மெல்ல எழுந்து கடிகாரத்தைப் பார்த்தான் அதில் மணி ஏழு என்றிருந்தது. திரும்பிப் பார்த்தான் மிருதுளா முழித்துக் கொண்டுப் படுத்திருந்தாள்

“என்ன மிருது நீ எப்போ எழுந்துண்ட? நான் நல்லா தூங்கிட்டேன்”

“நானும் தான் நவீ. நேத்து நைட்டு ஏர்ப்போட் அப்புறம் ஃப்ளைட்டுனு சரியாவே தூங்கலையா….அதுதான் படுத்ததும் தூங்கிட்டேன்….இப்பத்தான்.. நீங்க எழுந்துக்கறதுக்கு பத்து நிமிஷம் முன்னாடி தான் நானும் எழுந்துண்டேன். நீங்க நல்லா தூங்கிண்டிருந்தேள் ஸோ டிஸ்டர்ப் பண்ணலை. எழுந்து போய் சக்தியைப் பார்த்தேன்…அவளும் நல்லா தூங்கிண்டிருந்தா…அதுனால பேசாம நானும் வந்து படுத்துண்டுட்டேன்.”

“சரி நாம ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு கிளம்பி வெளியில போயி சுத்திப் பார்த்துட்டு அப்படியே டின்னர் சாப்டுட்டு வரலாமா?”

“இங்கே தானே இனி இருக்கப் போறோம்…இன்னைக்கே சுத்திப் பார்க்கணுமா என்ன?”

“என் ஆஃபிஸைக் காட்டறேன். எப்படியும் டின்னர் சாப்பிட வெளில போய் தானே ஆகணும் மிருது….சும்மா ஒரு வாக் போயிட்டு வருவோமே வாயேன்”

“ஓகே நவீ. நீங்க போய் உங்க பொண்ணை எழுப்புங்கோ நான் ரெடியாகி வந்துடறேன்.”

“சக்திக் கண்ணா எழுந்திரிமா…மணி ஏழாச்சு…”

“அப்பா இன்னும் கொஞ்ச நேரம்ப்பா ப்ளீஸ்”

“அடே….இது ஈவ்னிங் ஏழு மணி மா. எழுந்துரு நாம வெளில போய் டின்னர் சாப்டுட்டு வந்துட்டு தூங்கிக்கலாம். வா மா”

“சரிப்பா…அம்மா ரெடியாகிட்டாளா?”

“ரெடியாகிண்டேயிருக்கா.”

“சரிப்பா ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ். ஐ வில் பி ரெடி டூ”

என்று சக்தி சொன்னதும் நவீன் சென்று ரெடியாகினான். மிருதுளா நவீனிடம்

“என்ன உங்க பொண்ணு எழுந்துண்டுட்ட்ளா?”

“ஃபைவ் மினிட்ஸ் ல ரெடியாகிவேன்னு சொல்லிட்டுப் படுத்திருக்கா”

“அச்சோ நவீ….அவ அப்படியே தூங்கிடுவா….சரி சரி நீங்க ரெடி ஆகுங்கோ …நான் போய் அவளை எழுப்பி ரெடியாகச் சொல்லறேன்….ஃபைவ் மினிட்ஸ்னு சொன்னாளாம் இவரும் சரினுட்டு வந்தாராம்….நல்ல அப்பா நல்ல பொண்ணு”

என்று கூறிக்கொண்டே சென்று சக்தியை எழுப்பி ரெடியாகச் செய்தாள் மிருதுளா. பின் மூவருமாக கிளம்பி அவர்கள் அப்பார்ட்மெண்ட்டுக்கு வெளியே சென்றதும்

“அய்யோ!!! இது என்னப்பா சாயந்தரம் ஏட்டு மணியாச்சு ஆனாலும் நம்ம ஊரு மத்தியானம் மாதிரி சுடறது.”

“இங்கே அப்படி தான் மிருது. கார் வேணும் இல்லாட்டி இந்த சூட்டுல வெந்திடுவோம்”

“சரி கார் வாங்க வேண்டியது தானே நவீ”

“ம்…லைசன்ஸ் இல்லாம கார் தரமாட்டா மிருது”

“உங்க கிட்ட தான் லைசன்ஸ் இருக்கே நவீ. அது இல்லாமலா இந்தியால வண்டி ஓட்டினேங்கள்? என்னப்பா!!!”

“அந்த லைசன்ஸ் இங்கே செல்லாது மிருது. நான் மறுபடியும் இங்கே லைசன்ஸ் வாங்கினா தான் இங்கே வண்டி வாங்கவும் ஓட்டவும் முடியும்”

“ஓ!!! அப்படீன்னா இங்கே லைசன்ஸுக்கு அப்பளை பண்ணுங்கோ”

“ம்…பண்ணணும் மிருது. அது கிடைக்க லேட் ஆகும்னு எங்க ஆஃபிஸ்ல சொன்னா….பார்ப்போம் டிரைப் பண்ணுறேன்”

“அதெல்லாம் உங்களுக்கு கிடைச்சிடும் நவீ”

“எஸ் அப்பா உனக்கு ஈசியா கிடைச்சிடும்”

“என்னமோ ரொம்ப சுலபமா ரெண்டு பேரும் சொல்லிட்டேங்கள் பார்ப்போம். நாளைக்கு தான் அப்பளை பண்ணப் போறேன். சரி நாம நாளையிலேந்து வீடு வேற தேடத் தொடங்கணும்.”

“ஆமாம் நவீ….எனக்கு இந்த ஹோட்டல் ஸ்டே எல்லாம் சரி வராது. …..பிடிக்காது…ஏதோ ஒரு அஞ்சு நாள்னா சரி….ஒரு மாசமெல்லாம் டூ மச்ப்பா”

“ஏன் மா ஜாலியா இருப்பியா அதை விட்டுட்டு என்னமோ சொல்லுற”

“அப்படி சொல்லு சக்தி.”

“ஆமாம் உங்க ரெண்டு பேருக்கும் என்னப்பா….சரி நாம இங்கேயே இருந்துடலாம். ஒரு மாசம் கழிச்சே வேற வீட்டுக்கு போகலாம்…..ஆனா நம்ம இந்தியாலேந்து ஷிப் பண்ணிருக்கற பொருட்களெல்லாம் இன்னும் ஒரு பத்து நாள்ல வந்திடும் அதை எல்லாம் இங்கே இந்த அப்பார்ட்மெண்ட்லேயே டெலிவரி பண்ண சொல்லலாமா?”

“அதுக்கு தானே மிருது நாளையிலிருந்தே வீடு தேடலாம்னு சொன்னேன்”

“இல்லையே நீங்க உங்க பொண்ணு கூட சேர்ந்துண்டு ….ஏதோ சொன்னா மாதிரி இருந்ததே!!!”

“இல்லவே இல்லை மிருது….நான் எப்போதும் உன் பக்கம் தான்”

“அப்பா…..”

என்று சக்தி சொன்னதும் அவளிடம் கண்ணைக் காட்டினான் நவீன். இவ்வாறாக பேசிக் கொண்டே நடந்துச் சென்றனர். பிறகு ஒரு டாக்ஸிப் பிடித்து ஹோட்டல் சரவணபவனுக்கு சென்று இரவு உணவை உண்டு மகிழ்ந்தனர். மீண்டும் டாக்ஸியில் அவர்கள் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட்டுக்கு வந்தனர். சற்று நேரம் டிவிப் பார்க்க அமர்ந்ததில் சக்தி உறங்கிப் போனாள். அவளை எழுப்பி அவளது பெட்டில் சென்று படுக்க வைத்தாள் மிருதுளா. பின் நவீனும் மிருதுளாவும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மிருதுளா நவீனிடம்…..

“நவீ நான் ஒண்ணு சொல்லுவேன் திட்டக்கூடாது”

“ம்…என்ன மிருது சொல்லு…”

“அவா தான் நம்மை கூப்பிடலை போகட்டும் ….நாமும் போகாம இருக்கறது தப்பில்லையா!!!”

“என்ன வேதாளம் மறுபடியும் முருங்கைமரம் ஏறுது!!!”

“அதுக்கில்ல நவீ….நாம அவாகிட்ட எந்த ஹெல்ப்பும் கேட்கப் போறதில்லையே…சும்மா போய் பார்த்துட்டு வந்துடலாமே..
எதுக்கு பகைச்சிண்டிருக்கணும்”

“அவா தான் அட்ரெஸே தரலையே எங்கன்னு போவ மிருது?”

“அதுதான் ஃபோன் நம்பர் இருக்கே நவீ. ஒரு ஃபோன் போட்டு நாம வந்த விவரத்தை சொல்லி …வீட்டுக்கு வந்து பார்க்கறோம்னு சொல்லுவோம்”

“நாம இங்கே வர்றோம்ங்கறது அவாளுக்கு நல்லாவே தெரியும் இல்லையா…..நல்ல வெயில் காலத்தில், ரமலான் சமையத்தில் குவைத்தில் வந்திறங்கியிருக்கோம். இங்கே இந்த பீரியட்ல எவ்வளவு ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் இருக்கும்ன்னு அவாளுக்கு நல்லாவே தெரியும் தானே!!! அப்படி இருந்தும் நம்மளை வீட்டுக்கு வான்னு அழைக்காதவா வீட்டை நாம ஃபோன் பண்ணிக் கேட்டு அப்படி தெரிஞ்சுண்டு எதுக்கு போகணும்? அதுவுமில்லாம என்கிட்ட லைசென்ஸ் இல்லைன்னும்….வண்டி இல்லைன்னும் தெரிந்தும் ஏதாவது ஹெல்ப் வேணுமான்னு ஒரு ஃபார்மாலிடிக்கு கூட கேட்காத ஜன்மங்களை எதுக்கு போய் பார்க்கணும்? இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வரும்ன்னும் அதனால் நிச்சயம் கவினின் உதவி நமக்கு தேவைப்படும்னும் நினைச்சுத்தான் அவா நான் ஊர்ல இருக்கும்போது சொன்னேனே அதைப் போல எப்படியும் அவா கிட்ட உதவி கேட்டுப் போய் நிப்போம்ங்கற திமிரில் இருக்கா!!!! அவாகிட்ட நாம ஏன் போகணும் மிருது. அவா நம்மளை பகைச்சுக்கறோமேனு யோசிச்சாளா? அப்போ நாமளும் அதைப் பத்தி எல்லாம் சிந்திக்கக் கூட வேண்டாம் சரியா…அதுல எந்த வித தப்புமில்லை. இனி அந்த கூட்டத்தைப் பத்தின பேச்சே நமக்குள்ள வேண்டாம்…பேசாம நீ ஹாப்பியா இரு…நிம்மதியா இப்போ தூங்கு. என்னென்னைக்கும் நமக்கு நாம மூணு பேரு மட்டும் தான். அத்தோட ஃபுல் ஸ்டாப். ஓகே”

“என்னமோ சொல்லறேங்கள். இதெல்லாம் எங்கே போய் முடியப்போறதோ!!!”

“எல்லாம் சுபத்தில் தான் முடியும். நாளையிலிருந்து வீடு தேடும் படலம் அன்ட் லைசென்ஸ் ப்ராசஸ் எல்லாம் ஆரம்பிக்கப் போறது. நமக்கு நிறைய வேலைகள் காத்திண்டிருக்கு. ஸோ நல்லா தூங்கி ரெஸ்ட் எடு….குட் நைட் மிருது.”

“குட் நைட் நவீ!”

தொடரும்…..












Leave a comment