எனது பார்வையில்…

விஜய் சேதுபதி என்றாலே வித்தியாசம் என்பது என் அபிப்பிராயம். அவருடைய படம் என்றாலே வித்தியாசமான கதையோ கதாபாத்திரமோ நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கை, அவரது பல படங்களைப் பார்த்ததில் எனக்கு ஏற்பட்டது. அதை ‘பத்தா’வாக மீண்டும் நிரூபித்திருக்கிறார். கதையின் கரு என்னவோ சாதாரணமானதுதான். ஆனாலும், எண்பதுகளைக் கண்முன் கொண்டுவரும் காட்சிகள், திரைக்கதை, கதாபாத்திரங்கள், பின்னணி இசை என எல்லாவற்றோடும் கைகோத்துக் கும்மியடித்திருக்கிறார்கள் சபரியும் நம்ம பத்தாவும் என்றால் மிகையாகாது.

ஒரு சிறுவனால் பத்தா பக்தனாகியிருக்கிறார். அந்தச் சிறுவனோ, படம் முழுவதும் அவனிடமிருந்து நம் பார்வை அகலாத அளவுக்குக் கதாபாத்திரமாகவே வாழ்ந்து, நம் கவனத்தையும் அன்பையும் தனதாக்கிக் கொள்கிறான். பயம், பரிதவிப்பு, பாசம், நிம்மதி, பெருமிதம் என அத்தனை உணர்வுகளையும் அந்தச் சின்னஞ்சிறு முகத்தில் காட்டி, ‘சபாஷ்!’ சொல்ல வைக்கிறான்.

சிறுவயதில் நம்மிடம் இருக்கும் திறமையை (இருப்பதாக நாமே நினைத்துக்கொள்ளும் திறமையையும் சேர்த்துத்தான்!) வெளிப்படுத்தி, அதில் பல்பு வாங்கியதும் அதை அப்படியே மண்ணுக்குள் புதைத்து மறந்துவிடுவோம். பின்னாளில் அதுவே மீண்டும் நம்மைத் துரத்தி வரும்போது, அதை எதிர்கொண்டு வெல்வது நம்மில் பலரும் கடந்து வந்த அனுபவம்தான். அந்த அனுபவத்தைச் சொல்லும் விதத்தில் நம்ம சபரி, பத்தா இருவரின் நடிப்பும் பின்னணி இசையும் நம்மைக் கட்டிப்போடுகின்றன.

வெகுநாளுக்குப் பிறகு ஒரு ‘ஃபீல் குட்’ படம் பார்த்த உணர்வைத் தருகிறது ‘பத்தா’. ஒரு சிறுவனின் மனநிலையையும் ஒரு கொடூரமான மனிதனின் மனநிலையையும் மாறி மாறிக் காட்டி, இறுதியில் இருவரிடமும் ஏற்படும் மாற்றத்தைத் துல்லியமான காட்சிகளாலும் வசனங்களாலும், பின்னணியில் இழைந்தோடும் இசையாலும் உணர்த்திய விதம் அபாரம். படத்தின் நடுப்பகுதியில் மட்டும் எனக்குக் கொஞ்சம் அலுப்புத் தட்டியது.

கதாநாயகி லிஜோமோல் ஜோஸின் நடிப்பும் ரசிக்கும்படி இருந்தது. முதல் காட்சியில் நாம் பார்க்கும் கதாநாயகிக்கும் படத்தின் இறுதியில் நாம் பார்க்கும் அதே பெண்ணுக்கும் இடையிலான மாற்றம், அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதத்தில் அழகாகத் தெரிகிறது.

தன்னைப் புரிந்துகொண்டு, தனக்காக வாழ்ந்து, தன்னைக் கொண்டாடும் கணவன் கிடைக்கும்போது ஒரு பெண்ணின் அழகு பன்மடங்காகிறது என்பதைச் சொல்லாமலேயே காட்சிகள் மூலம் உணர்த்தியிருக்கிறார்கள். கணவன் மனைவி உறவின் புரிதலுக்கு இந்தப் படம் சூட்டிய மகுடமாக அந்தக் காட்சிகள் ஜொலிக்கின்றன.

கொலை, கொள்ளை, போதை, குடி, அடி, ரத்தம் எனப் பல படங்கள் வரும் இக்காலத்தில், ‘பத்தா’வைப் பத்திரமாகப் பார்வையாளர்களிடம் கொண்டு வந்து சேர்த்த இயக்குநர் திரு. பாலாஜி தரணிதரனுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

பின்னணி இசை என்றாலே அபாய ஒலிபோல் முழங்கும் இன்றைய சூழலில், மனதுக்கு இதமாக ஒலிக்கும் இசையைத் தந்த சாய் அபயங்கருக்கும், ‘பத்தா’ படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்!

பத்தாவைப் பார்த்து மிரண்டு ஓடி ஒளிந்துகொள்ளும் சபரி, சான்ஸ் கிடைத்ததும் அவனையே அடைத்து வைத்துப் பொறை பிஸ்கெட் கொடுத்துப் பல விஷயங்களைப் புரிய வைக்கிறான். அதைப் பார்த்தபோது எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது…

பத்தாவை மாற்றச் சபரி வந்துவிட்டான்! நம் தமிழ்த் திரையுலகுக்கும் இதுபோல் இன்னும் பல சபரிகள் வந்தால்/வரவிட்டால் நன்றாக இருக்கும்.

பத்தா – சிறுவனால் சீர்திருத்தப்பட்டவன்.
-நா. பார்வதி
#பத்தா #எனதுபார்வையில் #திரைவிமர்சனம் #தமிழ்சினிமா #maisaaral #MovieReview

Leave a Reply