
இந்தப் பதிவுடன் பகிர்ந்துள்ள புகைப்படத்தைப் பார்த்ததும், நம் கண்களுக்குத் தெரிவது ஒரு யானைச் சிற்பம். ஆனால், அடுத்த சில நொடிகளில் அதற்குள் ஒரு பெண்ணின் முகம் தெரிகிறது. இன்னும் உற்றுப் பார்த்தால் மற்றொரு உருவம்… தொடர்ந்து தேடினால், மொத்தம் ஒன்பது பெண்கள்!
ஒரே படைப்பு… இருவிதக் காட்சிகள்… பார்க்கும் நம் கண்களை வியப்பில் விரியச் செய்யும் கலைநுட்பம்!
இந்தக் கலை வடிவத்தின் பெயர் ‘நவநாரிகுஞ்சரம்’. ‘நவ’ என்பது ஒன்பதையும், ‘நாரி’ என்பது பெண்ணையும், ‘குஞ்சரம்’ என்பது யானையையும் குறிக்கிறது. ஒன்பது பெண் உருவங்கள் ஒன்றிணைந்து யானையின் தோற்றத்தை உருவாக்கும் இந்தக் கலை வடிவம், சிற்பங்களிலும் ஓவியங்களிலும் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தில் தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் ஆலயம், ஆழ்வார்திருநகரி ஆதிநாதசுவாமி ஆலயம், திருக்குறுங்குடி பெருமாள் ஆலயம் ஆகிய இடங்களில் இந்தச் சிற்பத்தைக் காணலாம் எனக் குறிப்பிடப்படுகிறது.
இதன் அழகு, ஒன்பது உருவங்களை எண்ணிக் கண்டுபிடிப்பதோடு முடிந்துவிடுவதில்லை. ஒவ்வொரு பெண்ணின் உடல் வளைவும் தோரணையும் மற்ற உருவங்களுடன் இயல்பாக இணைத்திருக்கும் விதத்தில்தான் சிற்பியின் திறமை மிளிர்கிறது.
தனித்தனியாகப் பார்த்தால் பெண் உருவங்கள், மொத்தமாகப் பார்த்தால் யானை!
இந்தச் சிற்பத்தை யானையாக மட்டுமே பார்த்துவிட்டுக் கடந்து சென்றால், அதற்குள் இருக்கும் ஒன்பது பெண்களையும், அவர்களை ஒன்றிணைத்த கலைநுட்பத்தையும் கவனிக்கத் தவறிவிடுவோம் அல்லவா?
ஒரு பகுதியை மட்டும் பார்த்துவிட்டு, முழுவதையும் புரிந்துகொண்டதாக நினைக்க முடியுமா?
இந்தச் சிற்பத்தின் முன் நிற்கும்போது, அந்தக் கேள்வி நம் வாழ்க்கையை நோக்கியும் திரும்புகிறது.
ஒரு தோல்வியை மட்டும் நினைத்துக்கொண்டு, “என் வாழ்க்கையே தோல்வி” என முடிவெடுக்கிறோம். ஒருவரின் ஒரு கோபமான வார்த்தையை வைத்து, அவரது முழுக் குணத்தையும் தீர்மானிக்கிறோம். ஒரு கடினமான காலகட்டம், இதுவரை கிடைத்த அன்பையும் மகிழ்ச்சியையும் மறைத்துவிட அனுமதிக்கிறோம்.
ஆனால், கண்ணில் படும் ஓர் உருவம் மட்டுமே முழுச் சிற்பமாகிவிடாது. அதுபோல, இன்று நம்மை வருத்தும் ஓர் அனுபவம் மட்டுமே நம் ஒட்டுமொத்த வாழ்க்கையாகிவிடாது.
கல்லுக்குள் இத்தனை உருவங்களை ஒன்றிணைத்து, அவற்றுக்கு உயிரோட்டமும் அளித்த சிற்பியின் கைவண்ணத்தை ரசிக்கக் கண்கள் இரண்டு போதாதென்றே தோன்றுகிறது!
இந்த ஒன்பது உருவங்களையும் நவரசங்களோடு தொடர்புபடுத்திப் பார்த்தால், இன்னொரு வாழ்க்கைச் சிந்தனையும் விரிகிறது. பல்வேறு உணர்வுகள் ஒன்றிணைந்ததுதான் மனித வாழ்க்கை. மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கையல்ல. துயரம் மட்டுமே அதன் முடிவுமல்ல. நம் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவை கற்றுத்தரும் பாடங்களை உணரும்போது நமக்குள் பக்குவம் பிறக்கிறது.
இவ்வாறு பார்க்கும்போது, இந்தச் சிற்பம் ரசிப்பதற்கான கலைப்படைப்பாக மட்டுமின்றி, வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவும் பாடமாகவும் மாறுகிறது.
அடுத்த முறை ஆலயத்திற்குச் செல்லும்போது, அங்கிருக்கும் சிற்பங்களின் முன் சில நொடிகள் நின்று பாருங்கள். முதற்பார்வையில் தெரியாத ஓர் அதிசயம்/பாடம், உங்கள் கவனத்திற்காகக் காத்திருக்கலாம்.
நவநாரிகுஞ்சரத்தில் யானையைக் காண்பது எளிது. அதற்குள் இருக்கும் ஒன்பது பெண்களையும் காணக் கவனம் வேண்டும்.
அதுபோல, வாழ்க்கையின் சிரமங்கள் யானையைப் போல் பெரிதாக நம் கண்களுக்குத் தெரிந்தாலும், அவற்றுக்கிடையே இருக்கும் நம்பிக்கையையும் வாய்ப்புகளையும் காணக் கவனம் வேண்டும்!
கவனமின்றிப் பார்த்தால் தோற்றம் மட்டுமே தெரியும்,
கவனித்துப் பார்த்தால்தான் அதில் ஒளிந்திருக்கும் தத்துவம் புரியும்! சிந்தனையில் தெளிவும் பிறக்கும்!
-நா. பார்வதி
#maisaaral #pesummai #ThigazhyaTheatre #நவநாரிகுஞ்சரம் #சிற்பக்கலை #வாழ்க்கைப்பாடம் #சிந்தனைத்துளிகள்