மொத ராத்திரி

‘அந்த ஏழு நாட்கள்’ கதையைச் சற்றே மாற்றி, அதே கலகலப்போடு எடுத்திருப்பதைப் பாராட்டுவதா, இல்லை கதைகளுக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டதை எண்ணி வருந்துவதா என்ற சலிப்பு பார்வையாளர்களுக்கு வரத்தான் செய்கிறது.

ஆனால் என்ன… கதையுமின்றி, தரமுமின்றி, நாயகனை மட்டுமே நம்பி வெளியாகி, “பல கோடி வசூல்!” என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பிரம்மாண்டத் தமிழ்ப் படங்களைப் பார்க்கும்போது, இந்த முயற்சியைப் பாராட்டுவதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. பழைய வீட்டுக்குப் புதிதாகப் பெயிண்ட் அடித்திருந்தாலும், அதே நிறத்தை அப்படியே பூசாமல், ஒரு இரண்டு சதவீதமாவது வித்தியாசம் காட்டி ஜொலிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ராஜா கருப்புசாமி!

நடிப்பில் அனைவரின் திறமையும் திரையில் மிளிர்கிறது. குறிப்பாக, நாயகனாக வரும் ரிஷிகாந்த்தின் நடிப்பு அவ்வளவு இயல்பு! இது அறிமுகப் படம் என்று சொன்னால்தான் தெரியும் என்பதுபோல இருக்கிறது அவரது நடிப்பு. இன்றைய பளபளப்பான நாயகர்களுக்கு நடுவே, அமைதியாக ஒளிரும் அகல்விளக்காகத் தெரிகிறார். சரியான வாய்ப்புகள் அமைந்தால், நாளை மிளிரும் நட்சத்திரமாக உயரக்கூடும்.

இயக்குநரின் நடிப்பும் ரசிக்கும்படி இருந்தது. நாயகன்–நாயகியின் திருமணம், மொத ராத்திரி, அதன் பின்னான நாயகியின் மனமாற்றம், ‘அந்த ஏழு நாட்கள்’ டாக்டர் ஆனந்தைப் போல நாயகனே அவரைச் சேர்த்துவைக்கத் துணை நிற்பது, நம்ம பாலக்காட்டு மாதவனைப் போல இயக்குநரின் கதாபாத்திரம் பல்டி அடிப்பது, சேத்தனின் வருகை, அவர் சொல்லும் கதை எனப் பலவும் பழைய படத்தை நினைவூட்டுகின்றன. இருந்தாலும், நடிகர்களின் இயல்பான நடிப்பு அந்த ஒப்பீடுகளை ஓரளவு புறந்தள்ளி ரசிக்க வைக்கிறது என்பது உண்மை.

அந்த ஓட்டத்திலேயே கதையை முடித்திருந்தால்கூட மனம் இவ்வளவு வருந்தியிருக்காது. ஆனால், அதன் பிறகு பெண் கல்வி, சாதி உயர்வு-தாழ்வு போன்ற கருத்துகளை வலிந்து கதைக்குள் நுழைத்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. பேசப்பட வேண்டிய கருத்துகள் தான். ஆனால், அவை கதையின் இயல்பான பகுதியாக அமையாமல், தனியாகத் திணிக்கப்படும்போது கதையும் சிதைந்து, கதாபாத்திரங்களும் வலுவிழக்கின்றன. முதல் பாதியில் ஏற்படாத அலுப்பை மீதிப் படம் ஏற்படுத்திவிடுகிறது.

‘அந்த ஏழு நாட்கள்’ படத்திலும் கருத்து இருந்ததுதான். சொல்லப்போனால், அன்றைய பல திரைப்படங்களிலும் ஏதாவது ஒரு கருத்து சொல்லப்பட்டது. ஆனால், அவை அழகாகவும் நேர்த்தியாகவும் கதையோடு கதையாகச் சொல்லப்பட்டன. கருத்தை வசனமாகவும் காட்சியாகவும் உணர்த்துவதற்குப் பதிலாக, எழுதிக்காட்டுவதும் அதற்காகவே காட்சிகளை வலிந்து சேர்ப்பதும் கதையின் ஓட்டத்தைச் சிதைத்துவிடுகின்றன.

இனிவரும் கதாசிரியர்களும் இயக்குநர்களும், தாங்கள் சொல்ல விரும்பும் கருத்துகளைக் கதையோடு இயல்பாக இணைத்து, ரசிக்கத்தக்க திரைப்படங்களாக உருவாக்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.

என்னைப் பொறுத்தவரை, 2012க்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் செல்வாக்குப் பெற்ற அந்த ‘நான்கு கில்லாடிகள்’ உருவாக்கிய போக்கு, சினிமாவின் திசையையே மாற்ற முயன்றிருக்கிறது. “ரசிகர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள்” என்று பார்வையாளர்களின் ரசனையைத் தாங்களே முடிவு செய்துகொண்டு, படைப்பின் தரத்தைவிட விளம்பரத்திற்கும் வசூலுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சூழலை வளர்த்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

ஒரு காலத்தில் கதைக்காகவும் கலைநயத்திற்காகவும் பேசப்பட்ட திரைப்படங்கள், இன்று எத்தனை கோடி வசூலித்தன என்பதற்காகவே அதிகம் பேசப்படுகின்றன. கடந்த பதினான்கு ஆண்டுகளில் இந்த மாற்றத்துக்கிடையே, பல நல்ல கதைகளும் திறமையான நடிகர்களும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் போதிய கவனம் பெறாமல் ஓரங்கட்டப்பட்டதாக உணர்கிறேன். அவர்களில் சிலர், இந்தச் சூழலில் தாங்களாகவே ஒதுங்கியிருக்கக்கூடும்.

சாதி வெறி, இரத்தம் தெறிக்கும் வன்முறை, போதை, பாலியல் வன்கொடுமை ஆகியவற்றையே மீண்டும் மீண்டும் முன்னிறுத்தும் படைப்புகளால், தமிழ்ச் சினிமாவின் மற்ற முகங்கள் மறைக்கப்படுகின்றன. இத்தகைய படங்களே ரசிகர்களின் ஒரே விருப்பம் என்ற மாயை விலகும் நாள் விரைவில் வரும் என்று நம்புகிறேன். நல்ல கதைகளும் திறமையான இயக்குநர்களும் மீண்டும் தமிழ்த் திரையுலகில் முன்னிலை பெறட்டும்!

மொத ராத்திரி – மொத ராத்திரி வரை விறுவிறுப்பு, அதன் பின் தொய்வு!

Leave a Reply