
கொலை, இரத்தம், சிலைக் கடத்தல் என ஒரே மாதிரியான கதையினூடே கஷ்டப்பட்டுப் பயணிக்க முயன்று தடுமாறும் பார்வையாளர்களை, தனது அலட்டலில்லாத கெத்து, தனித்துவமான பாவனைகள், திரையில் தோன்றிய நொடியிலேயே திரை முழுவதையும் தன்வசமாக்கும் ஆளுமை ஆகியவற்றால் சிறைப்பிடிக்கிறார் ஜெயிலர் முத்துவேல் பாண்டியன்.
கதையிலும் வசனங்களிலும் காட்சியமைப்பிலும் உள்ள குறைகளைக் கவனிக்கவில்லையா, அல்லது கவனிக்கத் தேவையில்லை என்று எண்ணிவிட்டார்களா என்று தெரியவில்லை. மூன்றும் படம் முழுவதும் தப்புத்தாளங்களாகவே ஒலிக்கின்றன.
கர்ப்பிணிப் பெண் அடித்துத் துன்புறுத்தப்படும் வரை காத்திருப்பதும், அதைப் பார்த்த பிறகும் மெதுவாகத் துப்பாக்கியை உருவுவதும், தொலைவிலிருந்தே சுட முடிந்தும் அருகில் வந்து சுடுவதும் நெருடலாகவே இருக்கின்றன!
தன் நண்பரின் குடும்பத்தைக் கடத்தி வைத்திருக்கும் வில்லனிடமிருந்து அவர்களை மீட்டு வருகிறார் முத்துவேல் பாண்டியன். ஆனால், அடுத்த காட்சியில் மீண்டும் அவர்கள் வில்லனின் பிடியில் இருப்பதுபோல் காட்டப்படுவது ஏன்? எப்படி? எதனால்? எதற்கு? இத்தனை கேள்விகளையும் எழுப்பும் இந்தக் காட்சித் தொடர்ச்சி, எடுத்த படத்தைப் பார்த்துவிட்டுத்தான் திரைக்குக் கொண்டு வந்தார்களா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.
அதேபோல், பிரதான வில்லன் சக்கர நாற்காலியில் வரும்போது, அதிலிருந்து ஒரு கயிறு அவிழ்ந்து தொங்குவதை அங்கிருக்கும் ஆயிரக்கணக்கானோரில் யாருமே கவனிக்காதது, இயக்குநரின் கவனக்குறைவையே திரையிட்டுக் காட்டுகிறது.
வில்லியாக வலம் வரும் காந்தாவாக வித்யா பாலனின் நடிப்பு ஓகே. ஆனால், அவர் எதற்காகப் புகைபிடித்துக்கொண்டே இருக்கிறார் என்பதுதான் புரியவில்லை. அதைத் தவிர்த்திருக்கலாம். அந்தக் காலத்து வில்லிகள் முதல் நம்ம நீலாம்பரி வரை, நடிப்பாலேயே நம்மைக் கதிகலங்க வைத்தவர்கள் இருக்கிறார்களே! வில்லத்தனத்தை வெளிப்படுத்தப் புகைபிடிப்பது அவசியமா?
தனது குடும்பத்துக்காக எந்த எல்லைக்கும் செல்ல முத்துவேல் பாண்டியன் தயாராக இருப்பது சரிதான். ஆனால், அதற்காக ஹிரித்திக், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் இயந்திரத் துப்பாக்கிகளையும் பிற ஆயுதங்களையும் ஏந்தி, இரத்தத்தைத் தெறிக்கவிட வேண்டிய அவசியம் என்ன?
எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு நன்றாக இருந்தது. நம்ம பழக்கடை மூர்த்தி சாரின் நடிப்பும், அவருக்குக் கொடுக்கப்பட்ட காட்சிகளும் வசனங்களும் ரசிக்கும்படி அமைந்திருந்தன. இரத்த வெள்ளத்தில் மூழ்கி, மூச்சுத்திணறித் தவிக்கும் பார்வையாளர்கள் சற்றே மேலெழுந்து மூச்சுவிட உதவும் இந்தக் காட்சிகள், கொடுத்த காசுக்குக் கொஞ்சமாவது நிம்மதி அளிக்கின்றன.
வழக்கம்போல் பின்னணி இசை மண்டையில் இடிபோல் தாக்குகிறது. இசையமைப்பாளரின் முந்தைய படங்களோடு ஒப்பிடும்போது கொஞ்சம் தேவலாம் என்று தோன்றினாலும், ஒலியளவை இன்னும் சற்றுக் குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில், தலைவர் அலப்பறை செய்திருக்கிறாரோ இல்லையோ, அவரை வைத்துத் தயாரிப்பாளரும் இயக்குநரும் இசையமைப்பாளரும் செய்யும் அலப்பறை, “அரைக்குடம் தளும்பும்” என்ற பழமொழியைத்தான் நினைவூட்டுகிறது.
நம்ம தலைவர், படைப்பின் தரத்துக்கு முன்னுரிமை கொடுத்து, அடுத்த படத்தில் ஒப்பந்தமாவதற்கு முன் இன்னொரு முறை நன்றாக யோசித்தால், என்னைப் போன்ற அவரது ரசிகர்களும் ரசிகைகளும் ஏமாற்றமடையாமல் இருப்போம்.
தலைவரே! தரமான படைப்புக்குக் கை
வலிக்கத் தட்டுவதும் நாங்களே!
தரமில்லாப் படைப்பை அன்போடு
சுட்டிக்காட்டுவதும் நாங்களே!
வன்முறை விடுத்து,
வன்மம் தவிர்த்து,
வலுவான கதைகளைத்
தேர்ந்தெடுங்கள்,
மனங்களை வெல்லும்
படைப்புகளைத் தாருங்கள்!
சிறையில் சிக்கித் தவிக்க வேண்டிய அயோக்கியர்கள் அனைவரும் சுதந்திரமாக வலம் வருகிறார்கள்,
கண்ணில் பட்டவர்களையெல்லாம் சகட்டுமேனிக்குச் சுட்டுத் தள்ளுகிறார்கள்.
கொலை என்பது கொடூரமல்ல, கொடை என்பதுபோல் சித்தரித்திருப்பது வருத்தமளிக்கிறது.
ஜெயிலர் 2 – தலைவரின் அலட்டலில்லாத கெத்து,
அளவில்லாத வன்முறை, அழுத்தமில்லாத கதை!