அடங்குமா இந்த ஆட்டம்?

பெருமழை வந்து போனது…

ஆனால்,

அதன் தடங்கள் இன்னும் அழியவில்லை.

நிலநடுக்கம்,

நிலை அறியும் முன்பே

நிலத்தையே விழுங்கியது.

நச்சுயிரி,

உயிர் என்ற பேதமின்றி

கொன்று தின்றது.

தேவையற்ற போரினால்

உலகின் ஒரு பகுதி சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இப்போது,

நிலச்சரிவும் வெள்ளமும்

வெறியாட்டம் ஆடி,

பாரபட்சமின்றி

அனைவரையும் அடித்துச் சென்றுவிட்டது.

இதில்…

“தான்” என்ற அகங்காரத்தாலும்,

“பணம் படைத்தவன்” என்ற பெருமிதத்தாலும்,

வாய் ஜாலத்தால் அடுத்தவரை 

வீழ்த்தி மகிழும் “சாமர்த்தியசாலி” 

என்ற மமதையாலும்,

மனிதன் தன்னைத் தானே

அழித்துக் கொண்டும் இருக்கிறான்.

பிறரைத் தாழ்த்தி,

தன்னை உயர்ந்தவன் என்று

தம்பட்டம் அடித்துக்கொள்ளும்

அதிமேதாவிகளும்…

அடுத்தவனை ஏமாற்றி,

தன் பிழைப்பை நடத்தும்

அதிபுத்திசாலிகளும்…

மறந்துபோவது

ஒரே ஒரு உண்மையைத் தான்…

இந்த வாழ்க்கை

யாருக்கும் நிரந்தரமல்ல!

ஆனாலும்,

வாழ்க்கை தங்களுக்கு மட்டுமே

சொந்தம் என்றெண்ணி மனிதன்

ஆடும் இந்த ஆட்டம்…

இனியாவது அடங்குமா?

ஒருநாள்,

பணம் பயனற்றதாகும்…

பதவி பொருளற்றதாகும்…

அதிகாரம் அர்த்தமற்றதாகும்…

ஆணவம் அடையாளமற்றதாகும்…

அப்போது…

“நான் யார்?”

“என்னிடம் எவ்வளவு இருக்கிறது?”

“எனக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்?”

என்ற கேள்விகளுக்கெல்லாம்

எந்த அர்த்தமும் இருக்காது.

ஏனெனில்…

இயற்கை எதையும் கேட்காது.

யார் பணக்காரர்?

யார் ஏழை?

யார் அதிகாரம் படைத்தவர்?

யார் அடிமை?

யார் சாமர்த்தியசாலி?

யார் அதிமேதை?

என்று

எந்தப் பாரபட்சமும் பார்க்காது.

இயற்கையின் சீற்றத்திற்கு முன்,

மனிதனும் ஒன்றுதான்…

மிருகமும் ஒன்றுதான்…

செடி, கொடிகளும் ஒன்றுதான்.

இன்னும் எத்தனை பேரழிவுகள் வேண்டும்

மனிதனின் அகங்காரம் அடங்க?

இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும்

மனிதன் மனிதனை மதிக்க?

இன்னும் எத்தனை அழிவுகள் வேண்டும்

இந்த ஆட்டம் நிற்க?

இயற்கை

ஒவ்வொரு முறையும்

நமக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறது…

“நீ மனிதன் மட்டுமே…

இயற்கைக்கு மேலானவன் அல்ல!”

ஆனால்,

அந்தக் குரல் கேட்டும்!

அதை அலட்சியம் செய்யும் மனிதன்

மீண்டும் தனது ஆட்டத்தைத் தொடங்கிவிடுகிறான்.

இயற்கையின் சீற்றம்

இனியாவது கொண்டு வருமா

மனிதனிடம் மாற்றம்?

-நா. பார்வதி

Leave a comment