அத்தியாயம் 97: விசேஷமும்! வினையும்!

கிரகப்பிரவேச வேலைகளில் மும்முரமான நவீன் மிருதுளா அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து விருந்தினர்களின் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர். நவீனும் மிருதுளாவும் ஒரு பெரிய ஏழு சீட்டர் கார் ஏற்பாடு செய்திருந்தனர். அதில் மிருதுளா பெற்றவர்கள் அவர் ஆர்டர் கொடுத்திருந்த சீர் சாமான்களை வாங்கி வைத்துக் கொண்டு சென்னையிலிருந்து புறப்பட்டு அவர்கள் ஊருக்குச் சென்று அங்கிருந்து ஈஸ்வரன், பர்வதத்ததை ஏற்றிக் கொண்டு நால்வருமாக மைசூருக்கு கிரகப்பிரவேசத்தின் முதன் நாள் மாலை வந்து சேர்ந்தனர். அவர்கள் வந்ததும் காபி போட்டுக் கொடுத்தாள் மிருதுளா. பின் அவர்கள் குளித்து ஃப்ரெஷ் ஆனார்கள். அதற்குள் கடையில் ஆர்டர் செய்திருந்த டின்னர் வந்தது. அதைப் பார்த்ததும் ஈஸ்வரன்

“இது எதுக்கு இவ்வளவு வாங்கிருக்கேங்கள். நாம இருக்கறது ஏழே பேரு தானே”

“இல்லை பெரியப்பாவும் அவர் குடும்பமும் அன்ட் அக்கா அத்திம்பேர் குடும்பமும் வந்திண்டிருக்கா. அவாளுக்கும் சேர்த்துதான் இது.”

“ஒ!! அவா எல்லாரும் வர்றேன்னுட்டாளா என்ன?”

“வர்றேன்னும் சொன்னா. வந்துண்டுமிருக்கா.”

“ராசாமணியுமா வர்றான்?”

“ஏன்ப்பா துருவி துருவி கேட்கறேங்கள்? ஏன் யாரும் வர கூடாதுன்னா? இல்ல வரமாட்டான்னா?”

“இல்ல சும்மா தான் கேட்டேன்.”

“அப்பா அம்மா நீங்க எல்லாருமா இப்போ சாப்பிடறேங்களா? இல்ல அவா எல்லாரும் இன்னும் ஒரு ஹாஃப் அன் அவர்ல வந்துடுவா.. அவாளோட சாப்பிடறேங்களா?”

“அவா எல்லாரும் வரட்டும் மிருது எல்லாரோடயும் சேர்ந்தே சாப்பிடறோம்”

என்றனர் அம்புஜமும் ராமானுஜமும்

“இல்ல இல்ல வாங்கோ வாங்கோ நாம சாப்ட்டுடலாம்”

“இல்ல ஈஸ்வரன் மாமா நீங்க சாப்பிடுங்கோ நாங்க உங்காத்துக்காரா எல்லாரும் வந்துட்டே சாப்பிடறோம்”

“சரி அப்புறம் உங்க இஷ்டம். பர்வதம் வா சாப்பிடுவோம்”

என்று கூறி இருவரும் சாப்பிட்டு எழுந்ததும் ஈஸ்வரனின் சொந்தங்கள் அனைவரும் வந்தனர். அனைவரையும் வரவேற்று அமரவைத்து தண்ணீர் கொடுத்தனர் மிருதுளாவும், அம்புஜமும். வாங்கோ என்றழைத்து விட்டு வேறேதும் பேசாமல் உள்ளே சென்று படுத்துக் கொண்டனர் பர்வதீஸ்வரன் தம்பியர். இதை கவனித்த மிருதுளா நவீனிடம்

“பார்த்தேங்களா நம்ம ஆத்து விசேஷத்துக்கு வந்திருக்கா எல்லாரும் கொஞ்ச நேரம் கூட பேசாம படுத்துக்க போயிட்டாளே ரெண்டு பேரும்!! இதையே நாம செய்திருந்தா என்ன ஆகியிருக்கும்? நம்மளை அவமானப்படுத்திருக்க மாட்டா!”

“எனக்கென்னவோ விஷயம் வேறன்னு தோனறது! அவா வந்ததுலேந்து அவா பேச்சும் நடத்தையும் கேட்டதுலேயும் பார்த்துலேயும் …..நம்ம ஆத்து விசேஷத்துக்கு யாருமே வரமாட்டான்னு நினைச்சுண்டு வந்திருக்கா… ஆனா இவ்வளவு பேரு வந்ததில் ஸ்லைட்டா ஷாக் அடிச்சதுல என்ன பண்ணறதுனு தெரியாம போய் படுத்துண்டுட்டா”

“ஓ!! அப்படி கூட நினைப்பாளா என்ன?”

“எல்லாம் நினைக்குற கூட்டம் தான் மிருது. நாம இவ்வளவு பெரிய வீடெல்லாம் வாங்குவோம்னு நினைக்காததால… அந்த வயித்தெரிச்சல்ல இப்படி ஒரு புரளியை கிளப்பி விட திட்டம் போட்டு தான் அவாளோட எந்த புள்ளகளும் வராம இவா மட்டும் வந்திருப்பதற்கான காரணம். எங்கடா எல்லாரும் நம்ம கிட்ட வீட்டைப் பத்தி விசாரிச்சுட்டா?? அப்புறம் அவா மூத்தப் புள்ள கவினோட வீடு சின்னதுன்னு சொல்லிட்டா!!! அதுக்கு தான் எவரும் நம்ம கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்காம இருக்கணும்னு இவாளே எல்லார்ட்டேயும் ஏதாவது ஒரு பொய்யை சொல்லி பரப்பி அதனால தான் யாருமே கிரகப்பிரவேசம் அடென்ட் பண்ணலைன்னு கிளப்பி விடற திட்டத்தோட வந்திருக்கா!!! ஆனா இதுல டிவிஸ்ட் என்னென்னா இவா எல்லாரும் வருவான்னு அவா நினைச்சிருக்க மாட்டா அதுதோட ரியாக்ஷன் தான் இது. நீ ஒண்ணும் கண்டுக்காதே. வந்தவாளை கவனிப்போம் வா”

என்று அவர்களுக்குள் அடுப்படியில் பேசிக்கொண்டே சாப்பாட்டை பிரித்து வைத்தனர் நவீனும் மிருதுளாவும் அப்போது நவீனின் ஒண்ணு விட்ட அக்கா

“என்னடா நவீன் நீங்க பாட்டுக்கு அடுப்படியில இருக்கேங்கள்! என்ன நடக்கறது இங்கே”

“வாங்கோ அக்கா. இது தான் என் கிட்சன்.”

“ம்…நல்லா இருக்கு மிருதுளா. நீட்டா வச்சிருக்க”

“தாங்க்ஸ் அக்கா. இதோ நம்ம எல்லாருக்குமான டின்னரை பிரித்து அது அதுக்கான கரண்டிகளை போட்டு ரெடி பண்ணிண்டிருக்கோம் அவ்வளவு தான். இதோ ரெடி வாங்கோ எல்லாருமா சாப்பிடலாம்”

அனைவரும் வரிசையாக அமர்ந்தனர். இலைப் போட்டு சாப்பாடு ரவா கிச்சடி, இட்டிலி, சப்பாத்தி, குர்மா, தேங்காய் சட்னி, சாம்பார், ஜாங்கிரி என்று மிருதுளாவும் அம்புஜமும் பரிமாறினார்கள். எல்லோரும் சாப்பிட்டு எழுந்ததுக்குப் பிறகு அந்த இடத்தை எல்லாம் சுத்தம் செய்து விட்டு பின் மிருதுளாவும் அம்புஜமுமாக அமர்ந்து சாப்பிட்டனர். அப்போது மற்ற அனைவரும் நவீன், ராமானுஜத்துடன் பேசிக் கொண்டிருந்தனர். மிருதுளா சாப்பிட்டதும் அனைவருக்குமான பாய், பெட்ஷுட், தலையணை என எல்லாவற்றையும் எடுத்துக் கொடுத்தாள் அனைவரும் சற்று நேரம் பேசிவிட்டு வீட்டில் ஆங்காங்கே கிடைத்த இடத்தில் படுத்துறங்கினர்.

“அம்மா நீயும் போய் தூங்குமா. காலையிலேந்து வண்டில உட்கார்ந்து வந்திருக்க…இதெல்லாம் நான் ஒதுக்கிட்டு போய் படுத்துக்கறேன்”

“இல்ல டி மிருது நானும் கூட செஞ்சா சீக்கிரம் ஆகுமோன்னோ”

“சொன்னா கேட்க மாட்டியே! சரி ஆயாச்சு இப்போ போய் படுத்துக்கோ”

என்று எல்லோரும் உறங்கினர். மறுநாள் விடியற் காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து தயார் ஆகினர் நவீன், மிருதுளா, சக்தி, ராமானுஜம் மற்றும் அம்புஜம். மிருதுளா சக்திக்கு ஹார்லிக்ஸ் கலந்துக் குடுத்ததும், காபி டிக்காக்ஷன் போட்டு முதலில் எழுந்த நவீன், அம்புஜம், ராமானுஜத்துக்கும் தனக்கும் காபி போட்டுக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்து அவர்களோடு குடித்தாள். அப்போது ஈஸ்வரனும் பர்வதமும் எழுந்து வந்தனர். அவர்களுக்கும் காபி போட்டுக் கொடுத்தாள் மிருதுளா. மற்ற அனைவருக்கும் காபி போட்டு ஒரு பெரிய ஃப்ளாஸ்க்கில் ஊற்றி வைத்து விட்டு கிரகப்பிரவேசத்துக்கு எடுத்துப் போக வேண்டிய பொருட்கள் வைத்திருந்த பைகளை எல்லாம் எடுத்து ஹாலின் ஒரு மூலையில் வைத்தாள். பர்வதீஸ்வரன் தம்பதியர் குளித்து ரெடியாகச் சென்றிருந்தனர் அப்போது அம்புஜத்திடம் மிருதுளா

“அம்மா இந்தா இந்த வீட்டுச் சாவி. கீழே நம்ம அப்பார்ட்மெண்ட் வாசல்ல வேன் காத்திண்டிருக்கு. இவா எல்லாரும் எழுந்து ரெடியானதும் காபிக் குடுத்துட்டு, கதவைப் பூட்டிட்டு வண்டில அழைச்சுண்டு வாங்கோ. நான் நவீன் நம்ம அப்பா சக்தி நாங்க நாலு பேருமா இப்போ எங்க கார்ல கிளம்பறோம் ஏன்னா அங்க போயி கோலம் போடணும் அன்ட் வாத்தியார்கள் வந்திடுவா சரியா!”

“ம்…சரி மிருது.”

“கிளம்பலாமா மிருது டைம் ஆகறது”

“இருங்கோ நவீ உங்க அப்பா அம்மாட்டேயும் சொல்லிட்டு வந்துடறேன்”

“அப்பா நீங்க குளிச்சிட்டு கிளம்பி எல்லார் கூடயும் வேன்ல வாங்கோ நாங்க இப்போ புது வீட்டுக்கு போகணும். அங்கே எங்களுக்கு கொஞ்சம் வேலையிருக்கு.”

“ம்…ம்..சரி சரி”

“மிருது மிருது டைம் ஆயாச்சு”

“இதோ வந்துட்டேன் நவீ. சரி பா வந்திடுங்கோ பை”

என்று அனைவரிடமும் கூறிவிட்டு புறப்பட்டு புது வீட்டிற்குச் சென்றனர். அங்கே தன் அப்பா அம்மா கொண்டு வந்த சீர் சாமான்கள் மற்றும் பால் காய்ச்ச வேண்டிய இன்டக்ஷன் அடுப்பு பாத்திரம் டம்பளர்கள் என எல்லா வற்றையும் அடுப்படி மேடையில் தயாராக எடுத்து வைத்து, வாசலில் கோலமிட்டு, வீட்டினுள் கோலமிட்டு, சாமிப் படங்களை சாமி அறையில் வைத்து பூ மாலை போட்டு குத்து விளக்கேற்றி வைத்து எழும்போல் சாஸ்த்திரிகள் வந்தனர். பின் அவர்களுக்கான பொருட்களை எல்லாம் எடுத்துக் கொடுத்தாள் மிருதுளா. அதுவரை வீட்டிலிருந்து எவரும் வராததால் அம்புஜத்திற்கு கால் செய்தாள் மிருதுளா

“அம்மா இங்க எல்லாம் ரெடி நீங்க எல்லாரும் ஏன் இன்னும் வரலை?”

“இதோ வந்துண்டே இருக்கோம் மிருது. உங்க சொசைட்டி கேட்டுக்குள்ள நுழையறோம்”

“ஓ!! ஓகே ஓகே வாங்கோ”

என்று ஃபோனை வைக்கவும் வேன் வந்து வீட்டு வாசலில் நிற்கவும் சரியாக இருந்தது. அனைவரும் வந்ததும் ஐந்தரை மணிக்கெல்லாம் தொடங்கியது கிரகப்பிரவேசம். இடையிடையே நவீன் மிருதுளாவின் நண்பர்கள் வந்துக் கலந்துக் கொண்டனர். அப்போது பர்வதத்தின் ஒண்ணு விட்ட தங்கையின் நவீனின் சித்தப்பா சித்தியின் மகனான ராமும் அவன் மனைவியுமாக வந்திருந்தனர்.

எல்லோருமாக இருந்து, பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் இனிதே கிரகப்பிரவேசம் நடந்தேறியது. அனைவருக்கும் ஆர்டர் செய்யப்பட்ட இடத்திலிருந்து காலை உணவு வந்ததும் பரிமாறப்பட்டது. சாப்பாடு ஆனதும் பர்வதம் ராமிடம்

“என்ன ராம் நீ கிரகப்பிரவேசத்துக்கு வந்திருப்பது ஆச்சர்யம் தான்”

“இதுல உங்களுக்கு என்ன ஆச்சயம் பெரியம்மா?”

“இல்ல கவீனோட, ப்ரவீனோட, பவினோட வீட்டு கிரகப்பிரவேசமெல்லாம் நடந்தது அதுக்கெல்லாம் வரலையே அதுதான் கேட்டேன்”

“எங்காத்துக் கிரகப்பிரவேசத்துக்கு நவீனும் மிருதுளாவும் வந்திருந்தா அதுவுமில்லாம எங்களை நவீனும் மிருதுளாவும் அழைச்சா அதுனால வந்தோம்”

“ம்…ம்…”

என்று கூறிக்கொண்டே சாப்பிட்டு எழுந்தாள் பர்வதம். ராம் தனக்கு வேலையிருப்பதாக கூறி மத்திய சாப்பாட்டிற்கு கூட நிற்காமல் கிளம்பினான். நவீனும் அவர்கள் வந்ததற்கு மகிழ்ச்சி என்று கூறி தாம்பூலம் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். அவர்கள் சென்றதும் மற்ற உறவினர்கள் அனைவரையும் வீட்டைச் சுற்றிக் காண்பிக்க அழைத்துச் சென்றாள் மிருதுளா அப்போது அதில் சிலர் விலையைப் பற்றியும் இடத்தின் அளவு பற்றியும் கேட்க அதற்கு மிருதுளா

“இடம் ஒரு க்ரௌண்ட் அதுல நாலாயிரம் சதுரடி கட்டிடம். மொத்தம் எங்களுக்கு வீடு மட்டும் ஒரு கோடி ஆகியிருக்கு.”

என்றதும் பர்வதம் சும்மா இல்லாமல்

“என் ஒண்ணு விட்ட தங்கச்சி பையன் ராம் …இதோ இந்த கிரகப்பிரவேசத்துக்குக் கூட வந்திருந்தானே அவனும் மைசூர்ல வீடு வாங்கிருக்கான் சிட்டி சென்டர்ல நாலு கோடிக்கு”

என சம்மந்தமே இல்லாமல் சொன்னாள். அனைவரும் ஒருவரையொருவர் பாரத்துக் கொண்டனர் உடனே மிருதுளா…

“இதுக்கப்புரம் மர வேலைகள், லைட்டிங், ஃபால்ஸ் ஸீலிங் எல்லாமிருக்கு. ஸோ எப்படியும் ஒன்னேகால் கிட்ட வந்திடும்”

“ராமுக்கும் எல்லாம் சேர்த்து ஐந்து கோடியாச்சாம்”

இதைக் கேட்டதும் வந்திருந்ததில் ஒருவர் பர்வதத்திடம்

“என்ன பர்வதம் உனக்கு நவீன் ஒரு கோடிக்கு தான் வாங்கிருக்கான்னு வருத்தமா!!! இல்ல நவீன் வாங்கிருக்கறது ஒண்ணும் பெரிசில்ல உன் தங்கைப் புள்ள தான் ஒசத்தின்னு சொல்லவர்றயா!! புரியலையே!!!”

என்றதும் கப்சிப் ஆனாள் பர்வதம். வந்தவருக்கு புரியாமலிருக்கலாம் ஆனால் சொந்தகாரர்களுக்கும் மிருதுளாவுக்கும் நன்றாகவே புரிந்தது. நண்பர்கள் அனைவரும் காலை உணவருந்தி வீட்டைச்சுற்றிப் பார்த்துவிட்டு நவீனுக்கும் மிருதுளாவும் பாராட்டுத் தெரிவித்து பரிசளித்து விட்டுக் கிளம்பிச் சென்றனர்.

சொந்தக்காரர்களிடம் எவருக்கெல்லாம் மைசுரைச் சுற்றிப்பார்க்க விருப்பமுள்ளதோ அவர்களை வேனில் ஏறச்சொன்னான் நவீன். ஈஸ்வரனைத் தவிர அனைவரும் ஏறினார்கள். ஆர்டர் செய்யப்பட்டிருந்த மத்திய உணவு வருவதற்குள் முக்கியமாக பார்க்க வேண்டிய சில இடங்களை வேன் ட்ரைவரிடம் முன்னதாகவே சொல்லி வைத்திருந்தான் நவீன். அப்போது அம்புஜம் மிருதுளாவிடம்

“எல்லாத்தையும் ஓரளவுக்கு ஒதுக்கி வச்சிருக்கேன். நான் இருக்கணுமா இல்ல இவா கூட ஊரைச் சுத்திப் பார்த்துட்டு வரட்டுமா மிருது “

“அம்மா அப்பா ரெண்டு பேரும் போயிட்டு வாங்கோ. நான் பார்த்துக்கறேன்”

இடங்களைச் சுற்றிப்பார்க்க அனைவரும் வேனில் சென்றதும் நவீனும் மிருதுளாவும் சக்தியுமாக எல்லா இடத்தையும் ஒதுக்கி எல்லாப் பொருட்களையும் பைகளில் போட்டு கட்டி வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டியதை தனியாக வைத்து மற்றவைகளை அடுக்கி வைத்து என்று செய்து முடித்ததும் ஹாலில் வந்து அமர்ந்தனர். இவர்கள் செய்வதனைத்தையும் ஹாலில் அமர்ந்தவாறே பார்த்துக்கொண்டு மட்டுமிருந்தார் ஈஸ்வரன். அவர்கள் வந்து அமர்ந்ததும் மெல்ல ஆரம்பித்தார் ஈஸ்வரன்

“ஆமாம் இவாளை எல்லாம் நீங்க இன்வைட் பண்ணிருந்தேங்களா?”

“ஆமாம்! இது என்ன கேள்வி? இன்வைட் பண்ணாமலேயே வர்றதுக்கு இவா எல்லாரும் என்ன நவீனும் மிருதுளாவுமா?”

“அதுக்கில்ல இப்ப எல்லாம் சில பேரு பத்திரிகை கிடைச்சாலும் …கிடைக்கலைன்னு சொல்லறா.”

“அப்படியா அது யாருன்னு சொல்லேன் தெரிஞ்சுக்குவோம்”

“எல்லாம் நம்ம பிச்சுமணி பொண்டாட்டி உன் அம்பிகா மாமி தான்.”

“மாமியா!!! ச்சே ச்சே! இருக்காதுப்பா”

“அவளைப் பத்தி எல்லாம் உனக்கு தெரியாது. அவளை மாதிரி இருக்கறவா எல்லாம் பத்திரிகையை வாங்கி கிழிச்சு குப்பைத்தொட்டில போட்டுட்டு பத்திரிகையே வரலைன்னு சொல்லிடுவா தெரியுமா?”

“ச்சே ச்சே!! பத்திரிகையை யாராவது ஃபர்ஸ்ட்ஆஃப் ஆல் கிழிப்பாளா? இல்லப்பா நீங்க சொல்லறது ஒப்பலை”

“நானே என் கண்ணால பார்த்திருக்கேன்!”

“எதை? அம்பிகா மாமி பத்திரிகையை கிழிக்கறதையா?”

“இல்லடா அவா ஆத்து டஸ்ட்பின்ல பத்திரிகை கிடக்கறதை”

“நீ ஏன் அவா ஆத்து டஸ்ட்பின்னை போய் பார்த்த?”

“அடப் போடா இப்படி தான் எல்லாரும் பண்ணறாங்கறத புரிஞ்சுக்கத் தான் சொல்லறேன் நீ என்னடான்னா ஏட்டிக்குப் போட்டியா பேசற”

“சரி சரி மிருது ஃபோன் பேசப் போனயே யாரு ஃபோன்ல?”

“கேட்டரிங்காரா தான் நவீ. சாப்பாடு அனுப்பிட்டாளாம். இன்னும் ஒரு அரை மணிநேரத்துல இங்க வந்துடுமாம். அதை இன்ஃபார்ம் பண்ண தான் கால் பண்ணினா.”

“ஓ !! ஓகே ஓகே! டூர் போனவா வர்றதுக்கு இன்னும் மினிமம் ஒன் அவர் ஆகும்.”

“இப்ப என்ன அதுவரைக்கும் உட்காருவோம்”

“சரி நான் போய் கொஞ்சநேரம் அந்த ரூம்ல போய் படுத்துக்கறேன்”

“அப்பா நீங்க வீட்டை சுத்திப் பார்க்கலையே. வாங்கோ கூட்டிண்டு போய் காட்டறேன்”

“இல்ல பரவாயில்ல நான் போய் தூங்கறேன்”

“சரிப்பா அப்போ அங்க உங்களுக்கு விரிச்சு வைக்கறேன் வந்து படுத்துக்கோங்கோ”

என்று பாயை விரித்து படுத்துக்கச் சொன்னாள் மிருதுளா. அந்த அறையின் கதவை சாத்திவிட்டு மீண்டும் ஹாலுக்கு வந்தமர்ந்தாள்.

“நவீன் அது எப்படி பத்திரிகையை கிழிப்பா சொல்லுங்கோ. அப்பா சொல்லறது சரியில்லை”

“ம்…அவர் சொல்லறது எல்லாம் மிகச் சரியா தான் சொல்லறார் மிருது உனக்குத்தான் அதோட உள்ளர்த்தம் புரியலை”

“மாமி அப்படிப் பண்ணுவாளா? அவாளுக்கும் மூணு பொண்ணுகள் இருக்காளே!”

“மாமி எல்லாம் ஒண்ணும் பண்ணலை. நீ தான் அப்படி பண்ணியிருப்பன்னு உன் மாமனார் அம்பிகா மாமியை வைத்து எனக்குப் புரிய வைக்கறாராம். அது அவர் அந்த டாப்பிக்கை ஸ்டார்ட் பண்ணினதுமே நான் தெரிஞ்சுண்டுட்டேன்”

“என்னது நானா!! மாமியே அப்படி பண்ணமாட்டானு சொல்லறேன் இதுல நான் எப்படி பண்ணுவேன்”

“அதுதான் அவாளோட சாமர்த்தியம். பத்திரிகை அனுப்பாதது அவா தப்பு ஆனா அதையே எப்படி ட்விஸ்ட் பண்ணி உன் மேல பழியை போடறா பார்த்தயா? இதை சொல்லத்தான் அவர் மத்தவாளோட வெளில போகாம இங்க இருந்ததற்கான காரணம். அது நடக்கலைன்னு தெரிஞ்சதும் போய் படுத்தாச்சு”

“ஓ!!! அப்படியா!!! ச்சே நான் கூட அவர் சொல்லறதை நம்பியிருபபேன்”

“நான் நம்பவே மாட்டேன் மிருது.”

“நவீ எனக்கு ஒரு டவுட்டு. இவர் பத்திரிகையில் பெயர் அட்ரெஸ் மட்டும் தான் எழுதுவார் அதைப் போஸ்ட் பண்ணறது இவா கூடவே இருக்கும் ப்ரவீனா தான் இருக்கும். ஏன்னா இவர் மூன்றாவது மாடியிலிருந்து இறங்கி போய் போஸ்ட் பாக்ஸில் எல்லாம் போட மாட்டார்ன்னு நமக்கு நல்லாவே தெரியும்.”

“ஸோ?”

“ஸோ ஒரு வேளை இவர் பத்திரிகையை ஒழுங்கா போஸ்ட் பண்ணச் சொல்லி அதில் ப்ரவீன் ஏதாவது விளையாடறானா? ஏன்னா நாம இவா தான் அனுப்பலைன்னு நினைப்போம் இல்லையா!!! இந்த பதினைந்து வருட கல்யாண வாழ்க்கை என்னை பெரிய டிடெக்டிவ் ஏஜென்ட்டாவே மாத்திடும்ன்னு நினைக்கறேன்.”

“ஹா!!ஹா!!ஹா!! அதுக்கும் வாய்ப்பிருக்கலாம் மிருது. கான்ட் சே!! எல்லாம் ஒரே குட்டையில ஊரின மட்டைகள் தானே!”

“ஹலோ நீங்களும் அதே குட்டையில் ஊரினவர் தான்… அதை மறந்திடாதீங்கோ”

“நான் மறக்கலை மிருது. ஆனா அந்த குட்டையிலேந்து பதினாறு வயசுலுயே நான் வெளியே போயிட்டேன் அதுனால அதோட இம்பாக்ட் அவ்வளவா இல்லை”

“ம்….ம்….இருங்கோ ஏதோ கால் வர்றது…….கஜேஸ்வரி தான்….உஷ்…ஹலோ கஜேஸ்வரி சொல்லு எப்படி இருக்க? கொழந்தகள் எப்படி இருக்கா?”

“நாங்க நல்லா இருக்கோம். உங்க வீட்டு கிரகப்பிரவேசமெல்லாம் நல்லப் படிம
யா முடிஞ்சுதா?”

“ம்…எல்லாம் நல்லபடியா நடந்தது. அப்பாவைத் தவிர எல்லாருமா ஊரைச் சுத்திப் பார்க்க போயிருக்கா”

“எல்லாரும்னா?”

“எல்லாரும்னா எல்லாரும் தான் நம்ம சொந்தக்காரா தான்”

“அப்படி!! நம்ம சொந்தக்காரா வந்திருக்காளா?”

“ஆமாம்!! ஏன் அதை இவ்வளவு சந்தேகத்தோடு கேட்கற?”

“ம்…இல்ல இல்ல ஒண்ணுமில்ல சும்மா தான் கேட்டேன். சரி அண்ணா இருக்காளா கவின் பேசணுமாம்”

“ம்…இரு இதோ குடுக்கறேன்”

“ஹலோ கங்கிராட்ஸ் நவீன்”

“ஆங். தாங்க்ஸ்.”

“அப்பறம் விசேஷமெல்லாம் எப்படி நடந்தது?”

“எல்லாம் நல்லபடியா நடந்தது. ம்…சரி மத்தியானம் சாப்பாடு கொண்டு வந்திருக்கா நாங்க அங்க போகணும் வச்சுடட்டுமா? அப்புறமா பேசறேன்”

“ஏன் நவீ இப்படி பண்ணீனேங்கள்?”

“ம்‌….அவா பேசறதுலேந்து உனக்கு ஒண்ணுமே புரியலையா?”

“இதுல புரியாததுக்கு என்ன இருக்கு?”

“ம்…உனக்கு அப்புறமா விளக்கிச் சொல்லறேன்….சரி சரி நான் பொய் ஒண்ணும் சொல்லலை நிஜமாவே வண்டி வந்துடுத்து வா போய் சாப்பாட்டை வாங்கி உள்ளே வைப்போம்”

என்று சாப்பாட்டை அடுப்படிக்குள் வைக்கச் சொல்லிவிட்டு அனைவரும் வருவதற்காக காத்திருந்தனர். டூர் சென்ற அனைவரும் வந்தனர். எல்லோருமாக அமர்ந்து கேட்டரிங் ஆட்கள் பரிமாற வயிறார உண்டு மகிழ்ந்தனர். பின் அனைவருக்கும் தாம்பூலம், பட்சணங்கள், ரிட்டர்ன் கிஃப்ட் எல்லாம் கொடுத்து அனைவரையும் வேனில் ஏற்றிக்கொண்டு அவரவர் செல்ல வேண்டிய பஸ் நிலையத்திற்கு கொண்டு போய் விடும்படி வேன் டிரைவரிடம் சொல்லி விடைப்பெற்றுக் கொண்டனர் நவீனும் மிருதுளாவும்.

பர்வதம், ஈஸ்வரன், அம்புஜம், ராமானுஜம், சக்தி அனைவரையும் ஒரு காரில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு அங்கிருந்த வேலையாட்களுக்கெல்லாம் மீதமிருந்த சாப்பாட்டை பரிமாறி அவர்கள் சாப்பிட்டப் பின் கேட்டரிங் காரர்களுக்கு பணம் செட்டில் செய்து… வீட்டைச் பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றனர் நவீனும் மிருதாளாவும்.

அன்று இரவு ஈஸ்வரன் தம்பதியருக்கும் ராமானுஜம் தம்பதியருக்கும் டிரெயினில் செக்கண்ட் ஏசியில் டிக்கெட் புக் செய்திருந்தாள் மிருதுளா. அது படியே அவர்களுக்கு டின்னர் செய்து கொடுத்து. தாம்பூலம், பழங்கள், பட்சணங்கள் எல்லாம் கொடுத்து ரெயில்வே ஸ்டேஷன் சென்று அவர்களை ரெயிலில் ஏற்றி உட்கார வைத்து ரெயில் புறப்படும் வரை அங்கேயே இருந்து வழியனுப்பிவிட்டு அவர்களின் புது வீட்டிற்குச் சென்று படுத்துறங்கினர்.

தொடரும்……






















Leave a comment