அத்தியாயம் 110: பயணம் முடிந்தது

ஏர்போர்ட்டில் காத்திருந்த நவீன் மிருதுளாவின் கண்கள் வெளியே வருவோரை எல்லாம் வழியிலிருந்து நகர்த்தி தங்கள் மகளின் வருகையைப் பார்த்திருந்தன. சிறிது நேரமாகியும் சக்தி வராததால் இருவரும் பதற்றமானார்கள். உடனே நவீன் சக்தியை அவள் கைப்பேசியில் அழைத்தான். அப்போது மிருதுளா அவனைத் தள்ளிக்கொண்டு முன்னே சென்றாள். அவளைப் பார்த்துக் கொண்டே திரும்பிய நவீன் சக்தியைப் பார்த்ததும் ஓடிச் சென்று அவளை கட்டியணைத்துக் கொண்டான். சக்தியும் தன் அம்மாவையும் அப்பாவையும் இறுக்கி அணைத்துக் கொண்டு..

“ஐ மிஸ் யூ போத் வெரி மச்.”

“என்னடி சக்தி இப்படி இளைச்சுப் போயிருக்க?”

“ம்…அதுதான் பதினைந்து நாள் இருக்கப் போறேனே”

“அதுக்கு?”

“நீ அத சாப்புடு இத சாப்புடுனுட்டு ஏத்தி விட்டிடுவியேமா!!
அப்புறம் என்ன?”

“ம்…சரி சரி கார்ல ஏறு சக்தி‌.
உங்க அம்மாவை விட்டா இங்கேயே நின்னுண்டு பேசிண்டே இருப்பா.
மிருது வண்டில ஏறுமா”

என்று மூவரும் காரில் ஏறி வீட்டிற்குச் சென்றனர்.

“சக்தி நீ போய் குளிச்சிட்டு வா.
அதுக்குள்ள நான் இட்டிலி வைச்சுடறேன்.”

“சரி மா. இதோ அஞ்சே நிமிஷத்துல வந்துடறேன்.
பொங்கல், வடை அன்ட் சாம்பார் வாசம் தூக்கறது.”

“போமா போய் குளிச்சிட்டு வாடா”

“அப்பா அந்த குட்டி வடையை மட்டும் எடுத்து ஊட்டிவிடேன். நான் போய் குளிச்சிட்டு வந்து மிச்சத்தை சாப்பிட்டுக்கறேன்”

“ம்….இந்தா ஆ காட்டு. ஓடு ஓடு குளிச்சிட்டு வா‌. நாங்களும் உன் கூட சாப்பிடறதுக்காகக் காத்திருக்கோம்.”

“ஓ!! நீங்களும் இன்னும் சாப்பிடலையா. அச்சச்சோ. அப்போ இரு ஜஸ்ட் டூ மினிட்ஸ் ல குளிச்சிட்டு வந்துடறேன்”

சக்தி குளித்து வந்ததும் மூவருமாக அமர்ந்து உணவை ரசித்து ருசித்து உண்டனர். சக்திக்கோ அம்மா கையால் சாப்பிட்டு நான்கு மாதங்களானது, நவீன் மிருதுளாவுக்கோ தங்கள் மகளின்றி சாப்பிட பிடிக்காது போய் நான்கு மாதங்களானது. ஆக மூவருமே நான்கு மாதங்களுக்குப் பிறகு அன்று தான் நன்றாக உண்டனர். பின் சற்று நேரம் கல்லூரிக் கதைகள் பேசிவிட்டு உறங்கச் சென்றனர். சக்தி வீட்டிலிருந்த பதினைந்து நாட்களையும் தன் அப்பா அம்மாவுடன் மிகவும் மகிழ்ச்சியாக கழித்ததில் பதினைந்து நாள் முடியப் போகிறது என்று வந்ததும் அவளை கவலை தொற்றிக் கொண்டது. மிருதுளா வழக்கம் போல அவளுக்கான பருப்புப்பொடி, கருவேப்பிலைப் பொடி, கொத்தமல்லிப் பொடி, ஊறுகாய், தக்காளி தொக்கு, முறுக்கு, பக்கோடா, ஸ்வீட்ஸ் என எல்லாம் சக்தி ஊருக்குக் கிளம்புவதற்கு ஒரு நாள் முன் செய்து பேக்கிங்கிற்கு தயாராக வைத்தாள். நவீனும் சக்தியுமாக அன்றிரவு அனைத்தையும் பேக் செய்தனர். மீண்டும் லண்டனுக்கு பயணிக்க ஆயத்தம் ஆனாள் சக்தி.

மறுநாள் விடியற் காலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து சக்தி கையில் கட்டிக் கொண்டு போவதற்காக இட்டிலி, வெங்காயச் சட்டினி, சப்பாத்தி, புளியோதரை எல்லாம் செய்து அவற்றை ஆற வைத்தாள். நவீன் ஐந்து மணிக்கு எழுந்து வந்து மிருதுளா செய்து வைத்திருந்ததை பேக் செய்து வைத்தான். பின் சக்தியை ஐந்தே முக்கால் மணிக்கு எழுப்பி விட்டான். சக்தியும் எழுந்து கிடுகிடுவென குளித்து கிளப்பி ஹாலுக்கு வந்து சாப்பாட்டுப் பேக்கிங்கைப் பார்த்து

“அம்மா இதெல்லாம் என்ன? நான் எங்க வைச்சுப்பேன்?”

“இது இட்டிலி அன்ட் சட்னி, இதுல சப்பாத்தி இருக்கு தக்காளித் தொக்கு தொட்டுண்டு சாப்ட்டுக்கோ, இது புளியோதரை.”

“அம்மா…இதெல்லாம் நான் இன்னைக்கே எப்படி சாப்டுவேன். அப்போ ஃப்ளைட்ல தர சாப்பாட்டை என்ன பண்ணுவேன்”

“சரி அப்போ இதை எல்லாம் உன் ரூமுக்குப் போனதும் ஃப்ரிட்ஜில வச்சுடு. இரண்டு நாளைக்கு ஆச்சு.”

“அப்போ நேத்து என்னென்னவோ கட்டிக் குடுத்தியே அதெல்லாம் என்ன?”

“அதெல்லாம் தொக்கும், ஊறுகாயும், ஸ்னாக்ஸும். அது மூணு மாசம் வரைக்கும் கெட்டுப்போகாது. இது ஜஸ்ட் ஃபார் டூ டேஸ். நீ போய் செட்டில் ஆகற வரைக்கும்…சாப்பாட்டுக்காக வெளியில போக வேண்டாம் பாரு அதுக்காக”

“அதெல்லாம் சரி…இப்போ இதெல்லாம் எங்க வச்சுப்பேன்?”

“சக்தி உன் ஹான்ட் லக்கேஜ்ல இடம் விட்டு வச்சிருக்கேன் பாரு அதுல வச்சுக்கோ. சரி மிருது நானும் குளிச்சிட்டு வந்தாச்சு. நீ போய் குளிச்சிட்டு வந்துடு ஏர்போர்ட் போகணும் நாழியாகறது பாரு.”

என்று மிருதுளா குளிக்கப் போனதும் நவீனும் சக்தியுமாக அவளது ஹான்ட் லக்கேஜ்ஜை பேக் செய்து ஏர்போர்ட் செல்ல தயாரானார்கள். மிருதுளா குளித்து ரெடியாகி வந்து சுவாமிக்கு விளக்கேற்றி நன்றாக வேண்டிக்கொண்டு சக்திக்கு விபூதி இட்டு விட்டாள். சக்தியும் சாமி கும்பிட்டுக் கொண்டப்பின் மூவரும் ஆளுக்கொரு பெட்டி எடுத்துக் கொண்டு கார் பார்க்கிங் சென்று அங்கிருந்து தங்கள் காரில் ஏர்போர்ட் சென்றனர். அங்கே செக் இன் முடிந்ததும் சக்தி உள்ளே போகாமல் தயங்கி தயங்கி நவீனையும் மிருதுளாவையுமே பார்த்துக் கொண்டு மெல்ல மெல்ல அடியெடுத்துச் சென்றதைப் பார்த்த நவீன் அவளை தங்களிடம் வரும் படிச் சொன்னான். உடனே ஓடி வந்தாள் சக்தி

“கண்ணா என்ன ஆச்சு? ஏன் செக்யூரிட்டி செக்கிங் போக உனக்கு இவ்வளவு தயக்கம்?”

“அப்பா அம்மா எனக்கு ஏதோ மாதிரி இருக்கு. ஐ திங்….”

“சரி அப்படீன்னா நீ போக வேண்டாம். எங்களோட ஆத்துக்கு வந்துடு”

“அம்மா என்னம்மா சொல்லற? எனக்கு படிக்க போகணும் ஆனா உங்க ரெண்டு பேரையும் நான் ரொம்ப மிஸ் பண்ணுவேனேன்னு கஷ்டமா இருக்கு…அதுதான் யோசிக்கறேன்…நீ என்னடான்னா ஆத்துக்குப் போகலாம்னு சொல்லறயே!!”

“இங்க பாரு சக்தி அப்படித்தான் இருக்கும் ஆனா என்ன பண்ண படிப்பும் முக்கியம் தானே. போடா கண்ணா போய் நல்லபடியா படிப்ப முடிச்சிட்டு வா. இதோ பாரு ஒரு செமஸ்டர் முடிஞ்சாச்சு இன்னும் ஒரு அஞ்சு தானே…அதுவுமில்லாம ஒவ்வொரு செமஸ்டர் முடிஞ்சிட்டும் நீ ஆத்துக்கு வரப்போற அப்புறம் என்ன? இன்னும் ஜஸ்ட் ஒரு நாலே மாசம் தானே. கண்ணைத் தொடச்சிண்டு போய் படிக்கற வேலையைப்பாரு”

“ஓகே அம்மா. நீ சொல்லறதும் கரெக்ட் தான். சரி சரி. நான் போயிட்டு வர்றேன் அப்பா அன்ட் அம்மா. பை. லவ் யூ போத். டேக் கேர்”

“வீ டூ லவ் யூ கண்ணா. யூ டூ டேக் கேர். பை பை”

என்று கூறி சக்தியை தேத்தி அனுப்பிய மிருதுளா …சக்தி தன் கண்ணிலிருந்து மறையும் வரை அவள் சென்ற வழியையேப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்ணிலிருந்து கண்ணீர் உருண்டோடியதை கவனித்த நவீன்

“ஏய் மிருது என்ன இது மறுபடியுமா? சக்திக்கு அவ்வளவு எடுத்துச் சொல்லிட்டு நீயே அழலாமா?”

“நான் அம்மாவாச்சே நவீன். அவளுக்கு தைரியம் சொல்வது என் கடமையாச்சே. ஆனா அவளைப் பிரியும்போது ஏதோ உள்ளப் பண்ணறதுப்பா.”

“இட்ஸ் ஓகே. அவ இன்னும் நாலே மாசத்துல திரும்பி வந்து நம்ம கூட டைம் ஸ்பெண்ட் பண்ணப் போறா அப்புறமென்ன. கண்ணைத் தொடச்சுக்கோ. வா நாம ஆத்துக்குப் போகலாம்.”

என்று சக்திக்கு ஆறுதல் சொல்லி அனுப்பிவைத்த மிருதுளாவுக்கு நவீன் ஆறுதல் சொல்லி வீட்டிற்கு அழைத்துச் சென்றான். வீட்டிற்குச் சென்றதும் மிருதுளா நவீனிடம்

“சரி சக்தி அவ பாட்டுக்கு வந்தா இருந்தா இதா இப்போ ஊருக்கும் கிளம்பி போயிட்டா. இனி நான் என்னப் பண்ணுவேன்?”

“ம்…
உன் வேலையை விடும்போது இந்த யோசனை இருக்கலையா?
உனக்கு யாரு நாலு நாலு மாசம் மட்டும் வேலைத் தருவா?
பேசமா உன்னோட வொர்க் ஃப்ரம் ஹோம் வேலையிருக்கு இல்ல அதைப் பாரு.”

“நவீன் எனக்கொரு யோசனை சொல்லவா”

“ம்…சொல்லு மிருது”

“நாமளே ஒரு பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணினா என்ன?”

“என்னது?”

“அதுதான் இங்க பிஸினஸ் தொடங்கறது ரொம்ப ஈஸியாமே. டாக்யூமென்ட்ஸ் எல்லாம் ஒங்கா சப்மிட் பண்ணினா லைசென்ஸ் உடனே கிடைச்சிடுமாமே! நியூஸ் பேப்பர்ல படிச்சேன்.”

“அதெல்லாம் சரி தான் மிருது.
ஆனா நான் என் வேலையை விடவேண்டியிருக்கும்.
ஏன்னா நான் என் வேலையையும் பார்த்துண்டு பிஸினஸும் பண்ணக் கூடாது.
எத்திக்கலி இட்ஸ் ராங்.
அதுவுமில்லாம பிஸினஸ் ஆரம்பிச்சா ஸ்டார்ட்டிங்ல வீ வில் நாட் கெட் ரெகுலர் இன்கம்.
அப்புறம் எப்படி நம்ம சக்திப் படிப்புக்கு பணம் கட்டுவோம்?
அப்படியே ஆரம்பிச்சாலும் என்ன பிஸஸ் பண்ணறது?”

“கன்சல்டன்சி ஃபேர்ம் தான். நான் அக்கௌன்ட்டிங் பார்த்துக்கறேன். நீங்க உங்களோட லீகல் பார்த்துக்கோங்கோ. என்ன சொல்லறேங்கள்?”

“நல்லா தான் இருக்கு.
நம்ம சக்தி படிப்பு முடிஞ்சிட்டு ஆரம்பிக்கலாம்.
நானும் அதுக்குள்ள அதுக்கு வேண்டிய டீட்டேயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிக்கறேன்.
ஆனா இப்போதைக்கு வேண்டாம் மிருது.
ஒரு இரண்டரை வருஷம் கழிச்சு பார்ப்போம்”

“ம்…அதுவும் கரெக்ட் தான் நவீ.
நம்ம பொண்ணு படிப்பு தான் முக்கியம்.
அவ படிப்பு முடிச்சதும் ஆரம்பிச்சுக்கலாம்.”

என்று அவளின் எண்ணத்தை மீண்டும் மூட்டைக் கட்டி பரணில் போட்டாள் மிருதுளா. பின் இரண்டரை வருடங்களும் நான்கு மாதத்திற்கு ஒரு முறை என சக்தியின் வரவு, மகிழ்ச்சியான தருணங்கள், மீண்டும் சக்தியின் புறப்பாடு, சாப்பாடு, ஸ்னாக்ஸ், ஊறுகாய், பொடிகள் கட்டுவது, மீண்டும் கண்ணீர், மீண்டும் வரவு …மீண்டும் பிரிவு என்று முடிந்து சக்தி குவைத்துக்கே திரும்பி வந்தாள். ஆனால் வந்தவள் அவளுக்கு யூரோப்பில் மேல் படிப்புப்புக்காக அட்மிஷன் கிடைத்துள்ளதாகவும் அதுவும் ஃபுல் ஸ்காலர்ஷிப்பில் கிடைத்துள்ளதாகவும், தான் அடுத்த மூன்று மாதங்களில் அங்கு சென்று அந்த கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்புவதாகவும் கூறினாள். அவள் கூறியதில் பெருமையடைந்தனர் நவீனும் மிருதுளாவும். ஆனால் மனதோரத்தில் மீண்டும் தங்கள் மகளைப் பிரிந்திருக்க வேண்டுமே என்ற எண்ணமும் தோன்றியது. ஆனால் சக்தியின் இளங்கலைப் படிப்பு அவர்கள் இருவருக்கும் நம்பிக்கையை அளித்தது. மன தைரியத்தை வளர்க்க ஏதுவாக இருந்தது. தங்கள் மகள் திருமணமாகிச் சென்றால் எப்படியும் தாங்கள் இருவரும் தனிமையில் தான் இருக்க வேண்டும் என்பதை தங்களுக்குள் சொல்லிக் கொண்டு அவர்களை அவர்களே தேத்திக் கொண்டனர்.

சக்தி தனது முதுகலைப் பட்டப்படிப்பிற்காக யூரோப்பிற்குச் சென்றாள். அவளுக்காக இனி நவீன் எந்த வித செலவும் செய்ய வேண்டிய அவசியமில்லாது போனது. ஏனெனில் அவளுக்கு படிப்பு செலவு, தங்குவதற்கான செலவு மற்றும் ஸ்டைஃபன்ட் எனப்படும் உதிவித் தொகை என எல்லாம் கிடைத்தது. அவள் யூரோப்புக்குப் புறப்பட்டுச் சென்றதும் மிருதுளா நவீனிடம் மீண்டும் பிஸினஸ் ஆரம்பிப்பதைப் பற்றி பேசினாள். அதற்கு நவீன்

“மிருது நாம லைசென்ஸ் க்கு அப்ளைப் பண்ணலாம்.
ஆனா நான் இப்போதைக்கு வேலையை விட மாட்டேன்.
நீ தான் பிஸினஸைப் பார்த்துக்கணும். நானும் அப்பப்போ ஹெல்ப் பண்ணறேன். லீட்ஸ் தர்றேன்.
என்னால முழுசா அதுல இப்போ இறங்க முடியாது.
என்ன சொல்லற?”

“ம்…
ஓகே நவீன்.
நான் பார்த்துக்கறேன்”

“மிருது இது நீ போன வேலைகள் மாதிரி இல்ல…
வேண்டாம்னா விட்டுட்டு வர்றதுக்கு…
ஒரு லைசென்ஸ் எடுக்கவே அஞ்சு ஆறு லட்சமாகும்…
நன்னா யோசிச்சு சொல்லு”

“நான் இந்த இரண்டரை வருஷமா நல்லா யோசிச்சாச்சுப் பா.
நிச்சயம் நான் நல்லா பண்ணுவேன்.
நீங்க லைசென்ஸ் க்கு அப்ளை பண்ணுங்கோ.”

“நீ தான் உன் பெயர்ல தான் பண்ணணும்.”

“ஓ!! ஓகே சரி நாளைக்கு புதன் கிழமை. நாளைக்கே பண்ணிடுவோம்”

“அது என்ன!
நாளை என்ன ஸ்பெஷாலிட்டி?”

“பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காதுனு சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன்.
அதுதான் சொன்னேன்.”

“ம்…
ஓகே.
அப்போ நாளைக்கே அப்ளைப் பண்ணிடலாம்.
ஸோ மிருது பெரிய பிஸினஸ் மாக்னெட்டாகப் போறா!”

“பார்ப்போம்.
எல்லாம் அந்த கடவுளோட அனுகிரகம் இருந்தா நல்லப்படியா தான் நடக்கும்.”

“சரி உன் பிஸினஸுக்கு என்னப் பெயர் வைக்கப் போற மிருது?
ஏன்னா நாளைக்கு அப்ளை பண்ணும் போது மூணு பெயர்களைக் கொடுக்கணும்.
அதுல ஒன்னைத் தான் அவா அப்ரூவ் பண்ணுவா”

“ஆங்…
அதெல்லாம் யோசிச்சு வச்சிருக்கேன் நவீ.
உத்கிருஅஷ்ட் க்ளோபல் சொல்யூஷன்ஸ்
விவக்தி க்ளோபல் சொல்யூஷன்ஸ்
தக்க்ஷக் க்ளோபல் சொல்யூஷன்ஸ்
எப்படி?”

“அட…
சூப்பர் மிருது.
இதெல்லாம் எப்ப யோசிச்சு வச்ச?”

“இரண்டரை வருஷமா யோசிச்சு வச்சிருக்கேன் நவீ.”

“பார்ப்போம்.
இதில் எதை அப்ரூவ் பண்ணறான்னு?”

என்று அவர்கள் பேசிக்கொண்டது போலவே மறுநாள் புதன்கிழமை பிஸ்னஸ் லைசென்ஸ் க்கு அப்ளை செய்தனர். மளமளவென வேலைகளும் நடந்தன. லைசென்ஸும் கிடைத்தது.

“ஹேய் நவீ.
இன்னைக்கு எனக்கு ஈமெயில் வந்தது. நம்ம கன்சல்டன்சி ஃபேர்முக்கு அப்ரூவான பெயர் “விவக்தி க்ளோபல் சொல்யூஷன்ஸ்”.”

“சூப்பர் மிருது.
கங்ராட்ஸ்.
எப்பேலேந்து வேலைகளைத் துவங்கப் போற?”

“முதல்ல இந்த லைசென்ஸ் வச்சு பேங்க் அக்கவுண்ட் ஓபன் பண்ணணும். அதுக்கப்புறம் மெல்ல வேலைகளை ஆரம்பிக்கணும் நவீ”

“சூப்பர்.
பேங்க் அக்கவுண்ட் ஓபனிங்குக்கு பிஸினஸ் ப்ளான் எல்லாம் ரெடியா வச்சிருக்கனு சொல்லு.”

“எஸ் எஸ்…
கொஞ்சம் இருங்கோ.
ம்…
இந்தாங்கோ.
படிச்சுப் பார்த்துட்டு ஏதாவது கரெக்ஷன்ஸ் இருந்தா சொல்லுங்கோ.”

“ம்…ம்…
வாவ்.
பக்காவா எழுதியிருக்க மிருது.
இதை எல்லாம் பார்த்தா…
நீ பிஸினஸ் உமன் ஆகனும்ங்கறதுக்காக தான் கடவுள் உன்னை எந்த வேலையிலலேயும் இருக்க விடலைப் போல.”

“இருக்கலாம்.
இது தான் எனக்கானதுப் போல!”

“கலக்கு கலக்கு மிருது.
நானும் உனக்கு லீட்ஸ் தர்றேன்.”

“நானும் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கேட்டு ரெண்டு மூணு அக்கவுண்ட்டிங் அன்ட் ஆடிட்டிங் ஃபேர்ம்ஸ் கூட அக்ரிமெண்ட் போட ஏற்பாடு செய்திருக்கேன் நவீ”

“சூப்பர். சூப்பர்.
மிருது இன்னும் கொஞ்ச நாள்ல நான் என் வேலையை விட்டுட்டு உன் ஃபேர்ம்லேயே ஜாயின் பண்ணிடறேன்‌.”

“என்னோட ஃபேர்ம் பிக்கப் ஆகற வரைக்கும் நீங்க உங்க வேலையை விட வேண்டாம் நவீ.
எப்போ நல்லா வளர்ந்து ரெகுலர் இன்கம் வர்றதோ…
அப்போ நீங்க உங்க வேலையை விட்டுட்டு வாங்கோ…
நான் உங்களுக்கு வேலை தர்றேன்.”

“ம்….
ஓகே மேடம்”

“ஏய் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் பா”

“நானும் தான் விளையாட்டுச் சொன்னேன்”

“ஏய்!!!
ஹா! ஹா! ஹா! ஹா!”

நவீனும் மிருதுளாவும் ஒரு சின்ன ஆபீஸ் ரூம் ஒன்றை வாடகைக்கு எடுத்தனர். நல்ல நாள் பார்த்து தன் பிஸினஸை துவங்கினாள் மிருதுளா. முதலில் ஒன்றிரண்டு வேலை ஆர்டர்களே வந்தன. அவற்றை நல்லப் படியாக முடித்துக் கொடுத்ததில் மீண்டும் ஒன்று வந்தது. இப்படியே இரண்டு மூன்றானது மூன்று ஐந்தானது. ஐந்து பத்தானது. பத்து இருபது வேலைகளுக்கான ஆர்டர்களானது. இரண்டு வருடத்தில் சக்தி தன் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்து யூரோப்பிலேயே பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்தாள். மிருதுளா தனது பிசினஸில் மும்முரமானாள். வேலைக்கான ஆர்டர்கள் பெருகி மாத வருமானம் வர ஆரம்பித்ததும் நவீன் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு மிருதுளாவுடன் இணைந்து அவனது லீகல் வேலைகளுக்கான ஆர்டர்களையும் எடுத்துச் செய்ய ஆரம்பித்தான். இருவரும் ராப்பகலாக கடினமாக உழைத்தார்கள்.

அவர்கள் உதவிக்காக இரண்டு நபர்களை வேலைக்குச் சேர்த்தனர். பின்பு அதே ஆபீஸையும் அதன் பக்கத்து கடையையும் சேர்த்து லீசுக்கு எடுத்து…தங்கள் ஆபீஸை விரிவுப் படுத்தி இன்னும் ஐந்து நபர்களுக்கு வேலைக் கொடுத்தனர். இப்படியே அவர்களின் பிஸினஸ் விரிவடைந்தது. பேரும், புகழும், நன்மதிப்பும் சம்பாதித்தனர். ஐந்தாண்டுகள் கடுமையாக உழைத்ததில் மிருதுளாவுக்கு அந்த ஆண்டிற்கான சிறந்த பிஸினஸ் உமன் என்ற அவார்டும் கிடைத்தது. அவர்கள் வாழ்க்கையில் எல்லா வளங்களுடனும் நிறைவாக வாழ்ந்தனர்.

மிருதுளாவும் நவீனும் அவர்கள் வாழ்க்கையை பூஜ்யத்திலிருந்து தான் ஆரம்பித்தனர். நவீன் பெரிய பணக்காரனாக இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது சேர்த்து வைத்துக் கொண்டு தான் திருமணம் முடித்திருப்பார் என்ற எண்ணத்தில் தங்கள் மகளை தாரவாத்துக் கொடுத்தனர் அம்புஜமும் ராமானுஜமும். பிறந்த வீட்டில் ராணிப் போல் வாழ்ந்த மிருதுளா புகுந்த வீட்டில் படாத கஷ்டங்களுமில்லை, அவமானங்களுக்கும் அளவில்லை. ஆனால் அனைத்தையும் பொறுமையாக இருந்து தன் கனவனையே தானாக அனைத்தையும் புரிந்துக் கொள்ள வைத்தாள்.

“ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்ற பழமொழிபோல மிருதுளா சொல்லிக் கொடுத்து நவீனைப் புரிந்துக் கொள்ள வைப்பதைவிட அவனையே தானாக புரிந்துக் கொள்ள வைத்தால் தான் அவனுள் நேரும் மாற்றம் உண்மையானதாகவும் நிரந்தரமானதாகவும் இருக்கும் என்றெண்ணி அவள் நடந்துக் கொண்டது அவளுக்கு சில காலம் வேதனைகளையும், வலிகளையும் தந்திருக்கலாம் ஆனால் அவை அணைத்தும் அவள் தாங்கிக்கொள்ளக் கூடிய வயதிலேயே வந்து கடந்து சென்று விட்டன. ஒரு பெண்ணிற்கு எந்த வயதில் மன நிம்மதியும், அமைதியும் தேவையோ அந்த வயதில் மிருதுளாவுக்கு அவை மிகுதியாகவே கிடைத்தது.

திருமணமான புதிதில் நவீன் தனக்காக தன் தாய் தந்தையிடம் பேசாது இருந்ததில் மனவருத்தமிருந்தாலும் நவீனின் நிலைமையையும் புரிந்துக் கொண்டு அதைப் பெரிதாக்காது நடந்துக் கொண்டதினால் நவீனும் அவளை நன்றாக புரிந்துக் கொண்டு பின்னாலில் அவளுக்கு நல்ல துணையாக மாறினான்.

மிருதுளா திருமணமானது முதல் தன் புகுந்த வீட்டினரை மதித்து நடந்துக்கொண்டது, அவர்களை அரவணைத்துச் சென்றது, அவர்கள் அவமானப்படுத்தினாலும் அவர்களை விடாது தங்களுடன் வைத்துக் கொள்ள முயன்றது, அதற்காக பலமுறை தோற்றுப் போனது என தொடர்ந்து வட்டமடித்துக் கொண்டிருந்த அவளின் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அதில் எந்த வித முன்னேற்றமுமின்றி ஆனதில் அவள் மிகவும் வருத்தமடைந்தாள். ஆனால் இனி அவர்களுக்காக வருந்தியோ வேதனைப்பட்டோ ஒன்றும் ஆகப் போவதில்லை என்று ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து அன்று முதல் அவர்களை எல்லாம் தன்னுளிருந்தும் தன்னிடமிருந்தும் தள்ளி வைத்துவிட்டு அவள் அவளுக்காகவும் அவளின் கனவன் மகளுக்காகவும் மட்டுமே வாழத் துவங்கினாள். அப்படி அவள் வாழத் துவங்கியதிலிருந்து அவள் வாழ்க்கை ஏறுமுகமாக தான் இருந்தது.

ஒரு பெண்ணிற்கு பொறுமை மிக மிக அவசியமான அணிகலனாகும். அதை மட்டும் அவள் அணிந்துக் கொண்டால் அவளை விட வலிமை வாய்ந்தவர்கள் இந்த பூமியில் எவரும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் தன் பொறுமைக்கும் ஒரு எல்லையை வகுத்துக் கொள்பவளும் அவளே! தனது பொறுமை என்று மற்றவர்களால் உபயோகித்துக் கொள்ளப் படுகிறதோ அன்று அதை உடைத்தெறியும் பெண்ணிற்கு இணையானவரும் இந்த பூமியில் இருக்க வாய்ப்பில்லை.
நல்லவர்களை சீண்டிக்கொண்டே இருந்தால் அவர்கள் பொறுமையின் எல்லை வரை பொறுத்திருப்பார்கள். எப்போது அப்படி சீண்டிப் பார்ப்பவர்கள் அதைத் தாண்டுகிறார்களோ அன்று அவள் அவர்களை பழிவாங்கவோ அல்லது சண்டையிடவோ செய்யாது அவர்களிடமிருந்து… அவர்கள் கண்ணிற்குக் கூட தெரியாத உயரத்திற்கு பறந்துச் சென்றிடுவாள். இதுவே வலிமையான பெண்ணினத்தின் குணம்.

எப்போதும் நாம் நமக்காக எல்லா நேரங்களிலும், எல்லாவற்றிற்கும் சண்டையிட வேண்டுமென்ற அவசியமில்லை. ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு “சூஸ் யுவர் பேட்டில் வைஸ்லீ”. அதாவது உனக்கான போர், யுதம் அல்லது சண்டை எதுவானாலும் அதை தேர்ந்தெடுப்பதில் புத்திசாலியாக இரு என்பது அதன் அர்த்தமாகும். நாம் ஒரு பிச்சினையை சந்திக்கும் பொழுது அதற்காக நாம் பொங்கி எழ வேண்டுமா? திருப்பி சண்டையிட வேண்டுமா? என்றெல்லாம் யோசிக்க வேண்டும். சிலருடன் பேசி நியாயத்தை நிலை நாட்டலாம், சிலருடன் சண்டையிட்டு நியாயத்தை நிலை நாட்டலாம் ஆனால் பல நேரங்களில் நமது நியாயத்தை நிலையாட்டிக் கொள்ளவும் நமது மன அமைதிக்காகவும் சிலரிடமிருந்து விலகிச் செல்வதே சிறந்த வழி. அதைத் தேர்ந்தெடுத்த மிருதுளா விட்டுக்கொடுத்து அனுசரித்து இளிச்சவாய் என்ற பெயரெடுத்தாலும் அவளின் பொறுமைக்கு கிடைத்தப் பரிசு தான் அவளின் கனவனும், மகளும், மனநிம்மதியும், அவளின் உயர்வும் ஆகும்.

விட்டுக்கொடுப்பவர் என்றுமே கெட்டுப்போவதில்லை. அதே போல விட்டு விலகுபவர்களும் கெட்டுப் போவதில்லை என்பதற்கு மிருதுளாவே சிறந்த உதாரணமாவாள். பெரியவர்கள் பெரியவர்களாக நடந்துக் கொண்டால் சிறியவர்களும் அதற்கு தகுந்தாற் போல அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அளிப்பார்கள். ஒருவருக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் நாம் நடந்துக் கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது. அவற்றை உருட்டி மிரட்டி எல்லாம் பெற முடியாது. அப்படியே பெற்றுக் கொண்டாலும் அது நிலைக்காது. உண்மை, நேர்மை, பொறுமை, ஒழுக்கம் இவை ஒருவரிடமிருந்தால் அவர்களின் வெற்றி மற்றவர்களை வாய்பிளக்கச் செய்யும். அதுவே மிருதுளாவின் வாழ்விலும் நடந்தது. அன்று அவளைத் தூற்றியவர்களிடமும் விமர்சித்தவர்களிடமும் சண்டையிட்டு நேரத்தை வீணடிக்காது மேலே மேலே உயரப் பறந்துச் சென்றாள். அவளின் வளர்ச்சியைக் கண்டு அன்று அவளைத் தூற்றியவர்களையும், விமர்சித்தவர்களையும் இன்று அதற்காக வருத்தமடையச் செய்தாள் மிருதுளா.

பர்வதீஸ்வரன் படைப்பே அப்படி இருந்ததால் மிருதுளா அல்ல மற்ற எவராலும் புரிய வைக்கவோ மாற்றவோ முடியாது போனது. அவர்கள் அப்படித்தான் என்று அனைவரும் அவர்களிடமிருந்து ஒதுங்கிச் சென்றனர்.
அவர்களின் வாரிசுகளாவது திருந்த முயற்சிக்கலாம். ஏனெனில் அவர்களுக்கு இன்னும் வாழ்க்கை இருக்கிறதே!! திருந்துவார்களா? காலம் தான் அதற்கு பதிலளிக்கும்.

ஆணுக்கு பெண் சமம் என்பதை நிரூபிப்பதில் பல பெண்கள் போராடுகிறார்கள். ஆனால் உண்மையில் ஆணைவிட பெண்ணே சிறந்தவள் என்பதை அறியாது போராடிவருகின்றனர். பெண் தன்மேம்பாடு பெறுதல் பற்றி இப்போது பல இடங்களில் பேசிக்கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருக்கின்றனர். இவற்றை எல்லாம் விடுத்து பெண்களே நீங்கள் நீங்களாகவே இருங்கள். ஒரு பெண் தன்மேம்பாடு பெறுவதற்காக ஏன் போரட்டமோ அல்லது ஊடகங்களிலோ போட்டு விவாதிக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் தன்னைத் தானே மேம்படுத்திக் கொண்டு… எப்படி எந்த வித சத்தமுமின்றி ஒரு சிறிய செடி பெரிய விருட்சமாகி அனைவருக்கும் பலன் அளிக்கிறதோ அதே போல நமது வளர்ச்சி சத்தமின்றி இருக்கட்டும் அதன் வெற்றி உலகமெங்கும் பறைசாற்றட்டும்.
மிருதுளாவின் வாழ்விலும் இதுதான் நடந்துள்ளது.

கடவுள் ஒருவருக்கு நிறைய கஷ்டங்களும் வேதனைகளும் கொடுப்பது அவரை சோதித்துப் பார்க்கவே. அவரின் சோதனையில் ஒருவர் வெற்றியடைந்தால் அதற்கு கடவுள் கொடுக்கும் பரிசை எவராலும் அவரிடமிருந்து தட்டிச் செல்ல முடியாது. அதுபோல தான் மிருதுளாவிற்கு கடவுள் கொடுத்த சோதனைகளில் எல்லாம் அவள் தேர்ச்சிப் பெற்றதால் அவளுக்கு பொன், பொருளோட நிறுத்திடாது மன அமைதியையும், ஆரோக்கியத்தையும் சேர்த்து அளிக்கொடுத்திருக்கிறார். மிருதுளா என்ன ஆனாள் என்று இன்றுவரை படித்துவந்த நமக்கு இப்போது புரிந்திருக்குமே!!

முற்றும்
🙏நன்றி🙏

இதுவரை மிருதுளா என்ன ஆனாள் என்ற இந்த தொடரைப் படித்து ஆதரவளித்து வந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இனி சக்தியின் பயணம் தொடரும்.

Leave a comment