சக்தி அழைத்ததும் விரைந்து சென்று பார்த்தாள் மிருதுளா. பாத்ரூமிலிருந்து சக்தி
“அம்மா…அம்மா… என் டிரெஸைப் பாருமா!”
என்று அழ ஆரம்பித்தாள். மிருதுளா தன் மகளைக் கட்டியணைத்துக் கொண்டே
“கவலைப் படாதே சக்தி. இதெல்லாம் எல்லா பொண்ணுகளுக்கும் நடக்குற நல்ல விஷயம் தான். இதோ பாட்டி, அம்மான்னு எல்லாருக்குமே நடந்தது நடக்கறது. இதுக்கெல்லாம் அழக்கூடாது. சந்தோஷமா இரு சரியா. இரு அம்மா இதோ வந்துடறேன். அம்மா பார்த்துக்கோ இதோ வந்துடறேன்”
என்று கூறி சக்திக்கு வேண்டியதை எல்லாம் எடுத்து வரச் சென்றாள் மிருதுளா. அப்போது அம்புஜம் சக்தியை தன் தோளில் சாய்த்துக் கொண்டு
“சக்தி கண்ணா ஒண்ணும் பயப்படாதே. அம்மா சொன்னா மாதிரி இதெல்லாம் எல்லாருக்கும் நடக்குற விஷயம் தான். நாம சாப்பிடறா மாதிரி, குளிக்கறா மாதிரி இதுவும் ரெகுலரா இனி உன் லைஃப்ல இருக்கும். பயப்படாதே சரியா. இப்போ என் சக்திக் குட்டி பெரிய பொண்ணாயிட்டாளே! பாட்டிக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா!”
“பாட்டி நான் இதைப் பத்தி படிச்சிருக்கேன் ஆனா திடீர்னு பார்த்ததும் கொஞ்சம் பயந்துட்டேன் அவ்வளவு தான். நவ் ஐ ஆம் ஆல்ரைட்.”
பாட்டியும் பேத்தியுமாக பேசிக்கொண்டிருந்த நேரத்தில் மிருதுளா சக்திக்கு கொண்டு வந்த டிரெஸ், டவல் மற்றும் சானிட்டரி நாப்கின் எல்லாத்தையும் அவளிடம் குடுத்து குளித்துவிட்டு வரும்படி சொல்லி தன் அம்மாவை அங்கிருந்து அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்து சற்று நேரம் சோஃபாவில் அமர்ந்தாள். அப்போது வேனுவும் ராமானுஜமுமாக
“என்ன ஆச்சு காலையிலிருந்து அம்மாவும் பொண்ணுகளுமா அங்க ஓடறேங்கள் இங்க ஓடறேங்கள்? என்ன நடக்கறதுனு ரெண்டு பேருல யாராவது சொல்லுங்கோளேன்”
“நம்ம சக்தி குட்டி பெரிய மனுஷி ஆகிட்டா”
“அதுதான் எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை. சரி நான் நவீனுக்கு முதல்ல ஃபோன் போட்டு சொல்லட்டும்”
ஃபோனை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றாள் மிருதுளா. அப்போது அம்புஜம் ராமானுஜத்திடமும் வேனுவிடமும்
“நான் ரொம்ப கவலைப்பட்டேன்..என்னடா இந்த பொண்ணு இன்னமும் பெரியவளாகாமா இருக்காளேன்னு ஆனா நம்ம வேனு வர்றதுக்காகவே அவளுக்கு இதைத் தள்ளிப்போட்டிருக்கார் ஆண்டவன்னு இப்போ தான் புரியறது. சரி சரி நான் ஒரு லிஸ்ட் ரெடி பண்ணறேன் நாம போய் அதெல்லாம் வாங்கிண்டு வந்திடுவோம்.”
“அப்போ சக்திக் கூட யார் இருப்பா?”
“அதுதான் மிருதுளா இருக்காளே. நாம மூணு பேரு மட்டும் போய் சக்திக்கு புடவை, நகை சீர் சாமான்கள்னு எல்லாத்தையும் வாங்கிண்டு வந்திடுவோம். ரெண்டு பேரும் கிளம்புங்கோ”
“அம்மா நாங்க அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆகிடுவோம். மொதல்ல நீ போய் ரெடியாகி வா”
இவர்கள் பேசி முடிக்கும் போது மிருதுளா பால்கனியிலிருந்து உள்ளே வந்தாள்.
“என்னமா மாப்ள கிட்ட சொன்னையா? என்ன சொன்னார்?”
“அவர் உடனே கிளம்பி வர்றாராம் ப்பா”
“ஏம்மா அவருக்கே உடம்பு சரியில்லை இதுல காரை வேற நீ எடுத்துண்டு வந்துட்ட பின்ன அவர் எப்படி எதுல வருவார்”
“அப்பா பஸ் பிடிச்சு வந்துடறதா சொல்லிருக்கார்.”
“முடியாத நேரத்துல எதுக்கு இப்படி அலையணும்!! பேசாம இன்னைக்கு நைட்டு டிரெயின் பிடிச்சு நாளைக்கு காலையில வரச் சொல்லேன். இல்லாட்டி இரண்டு மூன்று பஸ் மாறி வரவேண்டியிருக்கும்”
“அதெல்லாம் அவர் பார்த்துப்பார் பா. அம்மா நீ என்ன ரெடியாகி இருக்க?”
“அதுவா நம்ம சக்திக் குட்டிக்கு தாத்தா பாட்டி தாய் மாமான்னு நாங்க சீர் செய்ய வேண்டாமா?”
“அதுக்கு?”
“நாங்க கடைவீதிப் போய் எல்லாத்தையும் வாங்கிண்டு வந்திடறோம். நீ சக்திக் கூடவே இரு. இதோ இந்த இடத்தில் அவள் குளிச்சு வந்ததும் உட்கார வை. அடுப்புல வத்தகுழம்பு வச்சிருக்கேன் பார்த்துக்கோ. நாங்க போயிட்டு சுருக்க வந்திடுவோம்”
“சரி சரி பத்திரமா போயிட்டு வாங்கோ”
“நாங்க வர்றதுக்குள்ள நீ உன் மாமனார் மாமியார் மச்சினன்கள் ஓர்பிடிகள் எல்லார் கிட்டேயும் விஷயத்தைச் சொல்லிடு”
“ஆங் ஆங் நான் பார்த்துக்கறேன்.”
என்று கூறிவிட்டு கடைவீதிக்கு சென்றனர் மிருதுளா வீட்டார். அப்போது சக்தி பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள். அவளை அம்புஜம் சொன்ன இடத்தில் உட்கார வைத்து டிபன் செய்து கொடுத்து தட்டை வாங்கிக் கொண்டுச் சென்றாள். அப்போது சக்தி
“அம்மா நான் இங்கேயே தான் உட்காரணுமா? அந்த ரூமுக்கு போகக் கூடாதா?”
“ஆமாம் சக்தி நீ இங்கேயே தான் உட்காரணும் மூணு நாட்களுக்கு அதுக்கப்புறமா தலைக்கு தண்ணி ஊத்தி சில சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாம் செய்வா. அதெல்லாம் முடிஞ்சதும் நீ எப்பவும் போல இருக்கலாம்”
“அம்மா அப்போ ஒவ்வொரு மாசமும் இப்படி பண்ணுவேங்களா?”
“ஆங்!!! ஒவ்வொரு மாசமும் உனக்கு சடங்கு பண்ணினா என் அப்பாவும் தம்பியும் ஆண்டி ஆகிடுவா! இப்போ மட்டும் தான் செய்வா சக்தி அடுத்த மாசத்திலேந்து நீ விருப்பப்பட்டா தனியா இருக்கலாம் இல்லாட்டினாலும் நோ இஷுஸ். நானெல்லாம் தனியா எல்லாம் இருந்ததுமில்லை இருக்கறதுமில்லை. சரி இந்தா இந்த புக்கைப் படிச்சிண்டிரு நான் போய் உங்க பர்வதம் பாட்டிடேயும் உன் சித்திகள்ட்டேயும் ஃபோன் பண்ணி விவரத்தைச் சொல்லிட்டு வர்றேன்”
“அம்மா இதை எல்லாம் எதுக்கு மா எல்லார்ட்டேயும் சொல்லறேன்னு சொல்லற? அப்போ அவா எல்லாம் இங்கே வருவாளா?”
“சொல்லித்தான் ஆகணும் சக்தி இல்லாட்டி தப்பாகிடும். என்ன நீயும் உன் அப்பா மாதிரியே பேசுற?”
“ஆமாம் அவா வந்தா ஏதாவது உன்னை சொல்லுவா அப்புறம் நீ ரெண்டு நாளைக்கு சங்கடப்படுவ …அதுனால தான் கேட்டேன்….சரி அப்பாகிட்ட சொன்னையா?”
“ஆங்!! சொல்லாம இருப்பேனா? சொன்னதும் ஹீ வாஸ் ஸோ ஹாப்பி. உடனே புறப்பட்டு வர்றதா சொல்லிருக்கா. அநேகமா கிளம்பியிருப்பா. இந்தா ஃபோன் அப்பாட்ட பேசிட்டு தா”
“ஹலோ மிருது சொல்லு”
“ஹலோ அப்பா நான் சக்தி பேசறேன்”
“ஹேய் சக்திக் கண்ணா. அப்பா ஈஸ் ஃபீலிங் வெரி ஹாப்பி. நான் இங்கே கிளம்பிட்டேன் ஈவ்னிங் வந்திடுவேன். ஒண்ணும் பயப்படாதே அப்பா நான் இருக்கேன் சரியா”
“ம்…சரிப்பா. பத்திரமா வா.”
“சரி டா கண்ணா. வச்சுடட்டுமா. பை டேக் கேர்”
“பைப் பா”
என்று தன் தந்தையிடம் பேசியதில் அவர் சொன்ன அந்த வார்த்தை “நான் இருக்கிறேன்” என்பது சக்தியின் மனதில் பதிந்தது. ஃபோனை சக்தியிடமிருந்து வாங்கின மிருதுளா தன் மாமியாரிடமும் ஓர்பிடிகளிடமும் ஃபோனில் பேசி விவரத்தைச் சொன்னாள்.
சக்திக்கு தலைக்கு தண்ணீர் ஊற்றும் நாளன்று மிருதுளா குடும்பத்தினர் மற்றும் பர்வதம் ஈஸ்வரன் மட்டுமிருந்தனர். எல்லா சடங்கு சம்பிரதாயங்களும் முடிந்ததும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தியப் பின் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பர்வதம் சக்தியிடம்
“உனக்கென்ன சக்தி உன் மாமா லண்டனில் சம்பாதிக்கறான். உனக்கு என்ன வேணும்னாலும் வாங்கிக் கொடுத்திடுவான். கார்ன்னா கார், ஸ்கூட்டர்ன்னா ஸ்கூட்டர், டிரெஸ்ன்னா டிரெஸ்ஸு, வீடுன்னா வீடுன்னு நீ எது கேட்டாலும் உன்னைத் தேடி வந்திடும்.”
பேசியதை கேட்ட நவீன் பர்வதத்தை பார்த்து
“ஏன் இதெல்லாம் வாங்கிக் கொடுக்க நான் அவ அப்பா இல்லையா என்ன? எப்பப்பாரு அடுத்தவா கிட்டேருந்து வாங்கிக்கறதுலேயே குறி.”
“இதெல்லாம் சகஜமா சொல்லறது தானே இதுல என்ன தப்பு? இதுக்கு ஏன் இப்படி சொல்லறாய்?”
“எது சகஜமான பேச்சு? கொழந்த இப்போ நீ பெரியவளாயிருக்க பத்திரமா இரு, நல்லா சாப்பிடு, எதுக்கும் பயப்படாதேன்னு ஏதாவது சொன்னா அதுல எந்தவித தப்புமில்ல ஆனா உன் மாமாட்டேந்து உனக்கு அது கிடைக்கும் இது கிடைக்கும்ன்னு பேசறது தப்பு தான். எபபப்பாரு அடுத்தவாகிட்டேந்து என்னகிடைக்கும்னு மட்டும் பார்க்கறது மிகப் பெரிய தப்பு”
என்று நவீன் பேசியதும் அது எங்கடா பிரச்சினையில் முடிந்து விடுமோ என்றெண்ணி வேகவேகமாக மிருதுளா நவீனிடம்
“விடுங்கோப்பா இதுல என்ன தப்பிருக்கு. அம்மா எல்லா பாட்டிகளும் சொல்லறா மாதிரி சொன்னா அவ்வளவு தானே! அவா சொல்லிட்டா நம்ம சக்தி கேட்டுடப் போறாளா என்ன? இல்லை வேனுவ வாங்கித் தந்தா தான் ஆச்சுன்னு நாம சொல்லப் போறோமா?”
என்று பர்வதத்திற்கு பரிந்துப் பேசுவது போலவே பேசி அவளின் தவறையும் சுட்டிக்காட்டினாள் மிருதுளா. அவளின் புகுந்த வீட்டில் அவளுக்கு கிடைத்த அனுபவங்கள் அவளை இப்படி பேச வைத்திருக்கிறது. காலம், நேரம், மனிதர்கள்…அவர்களுடனான அனுபவங்கள் என பல நம் வாழ்கையில் கடந்து வந்தவை அனைத்தும் நம்மை நாமே எண்ணாத அளவுக்கு மாற்றிவிடும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த இடத்தில் திகழ்கிறாள் மிருதுளா. அவள் சொன்னதைக் கேட்டதும் கப்சிப் ஆனாள் பர்வதம்.
எல்லாம் சிறப்பாக நடந்து முடிந்ததும் பர்வதமும் ஈஸ்வரனும் அவர்கள் வீட்டுக்குச் சென்றனர். ப்ரவீன் துளசி மட்டும் ஃபோனில் வாழ்த்துத் தெரிவித்தனர். இரண்டு நாள் தங்கி வேனுவைப் பார்க்க வந்த இடத்தில் ஐந்து நாட்கள் தங்க நேரிட்டது மிருதுளாவுக்கும் அவளின் குடும்பத்தினருக்கும் அளவில்லா மகிழ்ச்சியைத் தந்தது. வேனுவும் இருபது நாள் லீவில் வந்திருந்ததால் இந்த முறை மைசூர் போகமுடியாது போனது.
மைசுருக்கு திரும்பிச் சென்றனர் மிருதுளா, நவீன் மற்றும் சக்தி. வழக்கம் போல அவர்களின் இயல்பு வாழ்க்கையில் மூழ்கலானார்கள். அவர்கள் மைசூருக்கு வந்து ஒரு வருடம் முடிவுறும் வேளையில் அவர்களின் வீட்டு ஓனர் நவீனுக்கு கால் செய்து
“ஹலோ மிஸ்டர் நவீன் எப்படி இருக்கிறீர்கள்?”
“ஹலோ மிஸ்டர் ராவ் நல்லா இருக்கேன். என்ன திடீர்னு ஃபோன்?”
“அது ஒண்ணுமில்லை நீங்க எங்க வீட்டை வாடகைகக்கு எடுத்து ஒரு வருஷம் முடியப்போகுது அதுதான் அக்ரிமெண்ட் படி ரென்ட்டை ஏத்திருக்கேன். நெக்ஸ்ட் மந்த்திலிருந்து வாடகை ஐம்பதாயிரம்ன்னு இன்பார்ம் பண்ணத் தான் ஃபோன் பண்ணினேன். எப்படியும் எங்கள் ரென்ட்டல் ஏஜென்சியிலிருந்து உங்களுக்கு இன்ட்டிமேஷன் இமெயில் மற்றும் புது அக்ரிமெண்ட் வந்திடும். இருந்தாலும் நானே ஃபோனில் உங்ககிட்ட சொன்னா நல்லா இருக்கும்னு தான் ஃபோன் செய்தேன். அதுவுமில்லாம அடுத்த வருஷம் நாங்க சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கே வந்திடுவோம் அப்போ எங்களுக்கு நீங்க வீட்டைக் காலி செய்து தர வேண்டி இருக்கும் அதையும் இப்பவே உங்ககிட்ட சொல்லிட்டா நீங்க ஏதாவது ஏற்பாடு பண்ண சௌகர்யமா இருக்குமேனு சொல்லவும் தான் கால் பண்ணினேன். சொல்லிட்டேன். உங்களுக்கு ஏதாவது என்கிட்ட கேட்கணுமா? கேளுங்க”
“இல்லை மிஸ்டர் ராவ். எனக்கு கேட்க ஒண்ணுமில்லை. நீங்க இப்பவே இதை சொன்னதுக்கு ரொம்ப தாங்க்ஸ் நாங்களும் வேற வீடு பார்க்க வசதியா இருக்கும். டைமும் இருக்கு.”
“அப்படீன்னா சரி. நான் வச்சுடவா. டேக் கேர் பை.”
“பை”
என்று ஃபோனை வைத்ததும் மிருதுளாவிடம் விவரத்தைச் சொன்னான் நவீன் அதைக் கேட்டதும் மிருதுளா நவீனிடம்
“ஏன் நவீன் அப்போ மறுபடியும் அடுத்த வருடம் ஷிஃப்ட் பண்ணணுமா? சரி அந்த வீட்டு ஓனரும் இரண்டு வருஷத்துல வீட்டை மாத்த சொன்னா என்ன பண்ணுவோம்? அப்படீன்னா ஒவ்வொரு இரண்டாவது வருஷமும் வீடு மாத்தனுமா என்ன?”
“அப்படி இல்லை மிருது. இவா வெளிநாட்டில இருக்கா இப்போ இங்கேயே வந்துடப் போறா அதுனால வீட்டைக் கேட்கறா!; அடுத்து நாம பார்க்கற வீட்டு அக்ரிமெண்டில் மினிமம் ஐந்து வருஷம்னு ஒரு கண்டிஷன் போட்டிடணும்”
“நாம இனி இங்கேயே தானே செட்டில் ஆகப் போறோம் நவீ?”
“மோஸ்ட்டிலி எஸ் மிருது”
“அப்போ நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா?”
“என்ன ஐடியா சொல்லு!”
“நாம இந்த வருஷத்துலேந்து ஐம்பதாயிரம் ரென்ட் குடுக்கணும் இல்லையா”
“ஆமாம் அதுனால?”
“அதை அடுத்த வருஷம் மறுபடியும் ஏத்துவா இல்லையா…”
“ஆமாம் ஸோ?”
“ஸோ நான் என்ன சொல்ல வர்றேன்னா….நாம குடுக்கப் போற ஐம்பதாயிரமோ இல்லை அறுபதாயிரமோ ரென்ட்டை ஈ.எம்.ஐ ஆ மாத்திட்டோம்னா நாம அதுக்கப்புறம் ஷிஃப்ட்டிங்கே இருக்காதே! எப்படி?”
“வீடு வாங்கலாம்னு சொல்லறையா?”
“பின்ன ஈ.எம்.ஐ ன்னா அதுதானே நவீ”
“ஆனா நமக்கு அந்த ஜடியாவே இல்லையே”
“இதுவரை இல்லை ஆனா இனி இருந்தா தப்பேதுமில்லையே. யோசிச்சுப் பாருங்கோ. ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை வீடு மாத்திண்டு வாடகையா பணத்தை அள்ளிக் கொடுத்துண்டு இருக்கறதை விட அதே பணத்தை பாங்கில கொடுத்தா நமக்குன்னு சொந்த வீடாகும். இங்கே நமக்கொரு சொத்தாகும் இல்லையா”
“நல்ல யோசனை தான். சரி அப்போ வீடு பார்க்கத் துவங்கிட வேண்டியது தான்”
“ரியலீ!! சூப்பர் அப்போ இந்த வீக் என்டிலிருந்து வீடு பார்க்கத் துவங்குவோம்.”
என்று பேசிக்கொண்டப் படியே ஒவ்வொரு வார கடைசியிலும் ஒவ்வொரு ஏரியாவாக சென்று அங்குள்ள தனி வீடுகள், அப்பார்ட்மெண்ட்டுகள் என பார்க்கத்துவங்கினர் நவீனும் மிருதுளாவும்.
அவர்களின் மனம் போலவே அழகான கேட்டெட் கம்யூனிடியில் தனி வீடொன்று அமைந்தது. கிழக்குப் பார்த்த அந்த வீடு நவீனுக்கு மிகவும் பிடித்துப் போனது. அது காலி மனையாகத்தான் இருந்தது ஆனால் அந்த பில்டரிடம் பேசியதிலும், வீட்டின் வடிவமைப்பை கம்ப்யூட்டரில் பார்த்ததிலும், மேலும் அவர்களுக்கான மாற்றங்கள் கூட செய்து தரப்படும் என்று பில்டர் சொன்னதிலும், அந்த வீடு ஒரே வருடத்தில் முடித்துத் தருவதாக பில்டர் சொல்லிக் கேட்டதிலும் நவீன் மிருதுளாவின் மனம் நிறைந்தது. அதன் விலை சற்று அவர்களின் பட்ஜெட்டுக்கு அதிகமாக இருந்ததால் இருவரும் ஒரு முடிவுக்கு வர ஒரு மாத காலம் எடுத்துக் கொண்டனர். இறுதியில் மிருதுளா நவீனிடம்
“நவீன் உங்களுக்கும் எனக்கும் அந்த வீடு ரொம்ப பிடிச்சிப் போயிடுத்து. நம்ம சக்திக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. பேசாமா வாங்கிடலாமா? என்ன சொல்லறேங்கள்?”
“எல்லாம் சரி தான் ஆனா….ஒரு கோடின்னு சொல்லறானே!! அது நம்ம பட்ஜெட்டிலிருந்து இருபத்தைந்து லட்சம் ஜாஸ்த்தியாகறதே!!!”
“பரவாயில்லை நவீ. வாங்குவோம். நான் அதுக்கு தகுந்தா மாதிரி வீட்டு செலவுகள் மற்றவைகளை எல்லாம் பார்த்துக்கறேன்”
“அப்படிங்கறையா?”
“அப்பா அந்த ஹவுஸ் ரொம்ப அழகா வரும்ப்பா. மாடல் ஹவுஸே எவ்வளவு ஸ்பேஷியஸ்ஸா அழகா இருக்கு. ப்ளீஸ் பா வாங்கலாம்ப்பா”
“சரி என் சக்திக்கே பிடிச்சிருக்கு. அப்போ வாங்கிடுவோம்”
“ஏன் எனக்கு பிடிச்சிருந்தா வாங்க மாட்டேங்களாக்கும். உங்க பொண்ணுக்கு பிடிச்சிருந்தா தான் வாங்குவேங்களோ?”
“அச்சச்சோ சக்தி யாருக்கோ ஜே.ஜே ஆகறது கவனிச்சயா”
“ம்…ம்…கவனிச்சேன்ப்பா கவனிச்சேன்”
“ஹலோ சக்தி மேடம்… நம்ம வீட்டு ஃபினாஸ் மினிஸ்டர் அப்ரூவல் இல்லாம நீ ஒகே சொன்னாலும் உங்க அப்பா வாங்க முடியாதுமா அதைத் தெரிஞ்சுக்கோ’
“அப்பா யாருப்பா அந்த நம்ம வீட்டு ஃபினாஸ் மினிஸ்டர்? நான் இதுவரைப் பார்த்ததில்லையே”
“அடி… படவா…”
“ஓகே ஓகே அம்மா ஒத்துக்கறேன்! ரெண்டு மினிஸ்டருமா பேசி டிசிஷன் எடுங்கோ நான் போயி படிக்கறேன்.”
என்று சீரியஸான நேரத்தைக் கூட சற்று நேரம் சுவாரஸ்யமாக மாற்றினாள் சக்தி. அவள் சென்றதும் நவீன் மிருதுளாவிடம்
“சரி மிருது…சாரி சாரி நிதித்துறை அமைச்சரே!! என்ன செய்யலாமென்று சொல்லுங்கள்”
“அட போங்கோப்பா!!! நீங்களே டிசைட் பண்ணுங்கோ”
“நான் டிசைட் பண்ணினாலும் நீ தானே நான் கொண்டு வர்றதை வைத்து குடும்பம் நடத்தப் போறது. ஸோ நீ சொல்லு அதுபடியே நான் செய்யறேன்”
“அப்படின்னா சரி நாம அந்த வீட்டை வாங்கலாம் மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன். இப்போ என்ன சொல்லறேங்கள்?”
“அப்படியே ஆகட்டும் மகாராணி”
என்று நவீன் சொன்னதும் அதைக் கேட்ட சக்தி உள்ளேயிருந்து எட்டிப் பார்த்து
“அப்பா மந்திரிக்கு ப்ரொமோஷன் கிடைத்திருக்குப் போல”
என்றதும் மூவருமாக சிரித்து மகிழ்ந்தனர். அப்போது நவீன் சக்தி மற்றும் மிருதுளாவிடம்
“ஓகே! நம்ம டிஸிஷன் பாஸ் ஆனதால் நாம இன்னைக்கு வெளியில போய் டின்னர் சாப்பிடலாம் ரெண்டு பேரும் கிளம்புங்கோ”
மூவருமாக அன்றிரவு மைசூரில் புது வீடு வாங்க இருப்பதை எண்ணி மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
அவர்கள் பேசிக்கொண்டது போலவே அந்த மனையை வாங்கினார்கள். அதில் வீடு கட்டும் வேலையும் கிடு கிடுவென நடக்க ஆரம்பித்தது. வீடு கட்டத்துவங்கி சரியாக ஒரு வருடம் ஆக இரண்டு மாதங்கள் இருக்கும் போது வீட்டின் வேலைகளைப் பார்த்து இரண்டு மாதத்தில் அதாவது வைகாசியில் கிரகப்பிரவேசம் வைத்துக் கொள்ளலாமென்றும் அதன் பின் மர வேலைப்பாடுகளை தொடங்கி அது முடிந்ததும் செப்டம்பர் மாதம் புது வீட்டிற்கு குடி போகலாமென்றும் முடிவெடுத்தனர்.
அது படியே நவீனும் மிருதுளாவுமாக இருவீட்டாருக்கும் ஃபோன் செய்து விவரங்களைச் சொல்லி கிரகப்பிரவேசத்திற்கு அழைப்பு விடுத்தனர். முதலில் ஈஸ்வரன் பர்வதத்திற்கு கால் செய்தனர். ஃபோனை எடுத்தார் ஈஸ்வரன்
“ஹலோ அப்பா. நான் மிருதுளா பேசறேன்”
“ஆங். மிருதுளா சொல்லு. என்ன ஃபோனெல்லாம்?”
“ஒரு குட் நியூஸை உங்கக்கூட ஷேர் பண்ணத்தான் கால் பண்ணினோம்.”
“அப்படியா என்ன அந்த குட் நியூஸ்?”
“நாங்க இங்க மைசூர்ல ஒரு வீடு வாங்கியிருக்கோம் ப்பா. அதோட கிரகப்பிரவேசம் வர்ற வைகாசி மாசம் பத்தாம் தேதி வச்சிருக்கோம். இப்போ தான் எல்லாருக்கும் ஃபோன் பண்ணி சொல்லலாம்னு உங்கிட்டேந்து ஆரம்பிச்சிருக்கோம். பத்திரிகை எல்லாம் அடிக்கலை ஃபோன் இன்வைட் தான் பண்ணறோம்.”
“அப்படியா எங்க வாங்கிருக்கேங்கள்? எவ்வளவாச்சு?”
“இதோ நவீன் அந்த டீட்டேயில்ஸ் எல்லாம் சொல்லுவார்ப்பா”
“அது வந்து இங்க நாங்க இப்போ இருக்குற ஆத்துலேந்து கொஞ்ச தூரத்தில் தான் வாங்கிருக்கோம். நிலம் வீடு சேர்த்து ஒரு கோடி ஆகறது.”
“ஒரு கோடியா!!!!”
“ஆமாம். சரி நீங்க எல்லாரும் வந்திடுங்கோ. நாங்க வண்டி ஏதாவது ஏற்பாடு செய்ததும் உன்கிட்ட சொல்லறோம் அதுல வந்திடுங்கோ சரியா. நான் வச்சுடறேன்.பை”
என்று ஃபோனை வைத்ததும் அடுத்து ராமானுஜத்திற்கும் அம்புஜத்திற்கும் கால் செய்தனர்.
“ஹலோ அம்மா நான் மிருது பேசறேன்”
“ஹாய் மிருது எப்படி இருக்க? மாப்ள எப்படி இருக்கார்? சக்திக் குட்டி எப்படி இருக்கா?”
“அம்மா !!அம்மா!!! நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். நாங்க இங்க ஒரு வீடு வாங்கியிர்க்கோம் அதோட கிரகப்பிரவேசத்தை வர்ற வைகாசி பத்தாம் தேதி வச்சிருக்கோம் அதைச் சொல்லி உங்களை ….”
அதைக் கேட்டதும் அம்புஜம் மிருதுளா பேச வந்ததை முழுவதுமாக சொல்ல விடாமல் குறுக்கிட்டு
“ரொம்ப சந்தோஷம் மா. உனக்கும் மாப்ளைக்கு கங்கிராட்ஸ். நாங்க நிச்சயமா வந்திடறோம்”
என்றாள். நவீனும் அவர்களிடம் அழைப்பு விடுத்தான். அதன் பின் வேனுவிடம் சொன்னார்கள். அதற்கு பிறகு கவினுக்கு ஃபோன் செய்து ஸ்பீக்கரில் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தனர். அப்போது ஃபோனை எடுத்த கவின்
“ஹலோ கவினா நான் மிருதுளா பேசறேன்”
என்றதும் …
“ஹேய் கஜேஸ் மன்னி தான் ஃபோன் பண்ணிருக்கா பேசேன் நான் வண்டியைப் பார்க்கிங்ல் போட்டுட்டுப் பேசறேன்”
“நானெல்லாம் பேச மாட்டேன். வேணும்னா நீ பேசிக்கோ. அவாகிட்ட எல்லாம் எனக்கு பேச வேண்டாம்”
என்று ஃபோன் ஆன் ஆனது தெரியாது பேசினார்களா இல்லை தெரிந்தே பேசினார்களா என்பது கஜேஸ்வினுக்கும் அந்த ஆண்டவனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாகும். ஆனால் அதை அனைத்தையும் கேட்டதில் சங்கடமானார்கள் நவீனும் மிருதுளாவும். இது அனைத்தும் வெறும் இரண்டே நிமிடங்களில் நடந்தவையே…உடனே கவின் காலில் வந்து
“மன்னி நான் டிரைவிங்ல இருக்கேன். அப்புறமா பேசட்டுமா?”
“ஓ!! அப்படியா சரி அப்போ கஜேஸ்வரிட்ட ஃபோனைக்குடேன்”
“அவ இப்போ என் கூட இல்லையே. அவ ஆத்துல இருக்கா. நான் வேணும்னா ஆத்துக்கு போயிட்டு உங்களுக்கு கால் பண்ணட்டுமா?”
என்று பொய்யை அவிழ்த்து விட்டான் கவின். அதுத் தெரிந்தும் காட்டிக் கொள்ளாத மிருதுளா ….அப்போது கால் ஐ கட் செய்யச் சொல்லி ஜாடைக்காட்டினான் நவீன்
“ஓ! அப்படியா! பரவாயில்லை கவின். இரு நவீன் ஏதோ சொல்லணுமாம். ஜஸ்ட் ஒரு ஒன் மினிட்”
என்றதும்
“ஹாய் கவின் நாங்க இங்கே மைசூர்ல ஒரு வீடு வாங்கியிருக்கோம் அதோட கிரகப்பிரவேசத்திற்கு இன்வைட்ப் பண்ண தான் கால் பண்ணினோம் வேற ஒண்ணுமில்லை. டிட்டேயில்ஸ் மிருது வாட்ஸ்ஆப்பில் அனுப்புவா. பை. ட்ரைவ் சேஃப்லீ.”
என்று கவினைப் பேச விடாது தான் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி விட்டு காலை கட் செய்தான். அதைப் பார்த்த மிருதுளா
“என்ன நவீன் ஏதோ டீச்சர்ட்ட ஆன்ஸர் ஒப்பிக்கறா மாதிரி இப்படி சொல்லிட்டு வச்சிருக்கேங்கள்?”
“பின்ன அவா பேசினதுக்கு இப்படி தான் பேச முடியும். என்ன ஃபோன் ஆன் ஆனது கூடத் தெரியாமையா பேசினா!! அதெல்லாம் நல்லா தெரிஞ்சே தான் பேசிருக்கா. இருக்கட்டும் !!இருக்கட்டும்!! சரி அடுத்து யாரு?”
“நம்ம ப்ரவீன் அன்ட் பவின் தான்”
என்று ப்ரவீனிடம் பேசி விவரத்தைச் சொல்லி அழைத்ததற்கு அவன்
“இல்ல துளசிக்கு ஆஃபிஸ் ல வேலை அதிகமா இருக்கு அதுவுமில்லாம பசங்களுக்கு ஸ்கூல் திறக்கும் நேரம் அதுதான்….”
என்றிழுக்க உடனே மிருதுளா
“உங்க வசதியப் பார்த்துக்கோங்கோப்பா. வந்தா சந்தோஷம் அவ்வளவுதான்”
என்று ஃபோனை வைத்தனர். அடுத்து பவினுக்கு கால் செய்தனர். முதல் இரண்டு அனுபவத்திற்கு பிறகு அங்கே என்ன கிடைக்கப்போகிறதோ என்ற எண்ணத்தில் அமர்ந்திருந்தாள் மிருதுளா. பவின், பவித்ரா அவர்கள் ஃபோனை அட்டென்ட் கூட பண்ணவில்லை. அதனால் மற்ற சொந்தக்காரர்களுக்கெல்லாம் அழைப்பு விடுத்தனர் நவீனும் மிருதுளாவும்.
நவீனையும் மிருதுளாவையும் எந்த விசேஷத்திற்கும் சரியாக அழைக்காமலிருந்தவர்களை விட்டுக் கொடுக்காது தங்கள் வீட்டு விசேஷத்துக்கு எப்போதும் முறையாக அழைப்பு விடுத்து அவமானத்தையே சந்தித்தனர் நவீனும் மிருதுளாவும். ஆனால் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாது தங்களின் கடமையை சரிவரச் செய்ததாக எண்ணிக்கொண்டனர். அனைவரையும் அழைத்து முடித்ததும். மறுநாளிலிருந்து அதற்கான வேலைகளில் இறங்கினர் இருவரும்.
தொடரும்……