சக்தி வீட்டிலிருந்து வெளியே வந்ததும் தான் அணிந்திருந்த நீல நிறத்தில் பிங் பூக்கள் வரையப்பட்டிருந்த கவுனை… தன் கார் ஜன்னல் கண்ணாடியில் ஒரு முறை சரி பார்த்துக் கொண்டாள். அப்போது அவள் வீட்டு வாசல் வழியாக வாக்கிங் சென்றுக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு பாட்டி அவளிடம் பிரஞ்சில்

“ஹேய் தீ! நீ ரொம்ப அழகா இருக்க. காட் ப்ளஸ் யூ மை சைல்ட்”

அதற்கு சக்தியும் பிரஞ்சில்

“நன்றி மிஸ்ஸர்ஸ் டேவிட்”

“என்ன தீ இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்ட?”

“வேலை இருக்கு அதுதான் சீக்கிரம் கிளம்பிட்டேன். பை…ஹாவ் எ நைஸ் டே மிஸ்ஸர்ஸ் டேவிட். மாலையில் சந்திப்போம்”

என்று கூறிக் கொண்டே கார் கதவைத் திறந்து காருக்குள் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாள்.

கார் நேராக ஒரு காபி ஷாப் முன் சென்று நின்றது.
இஞ்சினை ஆஃப் செய்ததும் கார் பார்க் முழுவதையும் தன் மான் விழிகளால் ஒரு ஸ்கேன் செய்தாள்.
அவள் காரிலிருந்து இரண்டு கார் தள்ளி ஒரு ப்ளாக் ரோல்ஸ் ராய்ஸ் கார் நின்றிருந்ததைப் பார்த்ததும் அவள் கார் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள்‌.
பின் தன் கைப்பையிலிருந்து உதட்டுச்சாயத்தை எடுத்து உதட்டில் தேய்த்துக்கொண்டே மூன்று வருடங்களுக்கு முன் தனது நினைவலைகளில் மெல்ல மூழ்களானாள்

அன்று அவள் எம் எஸ் படிப்பு முடித்து பட்டமளிப்பு விழா நடந்த நாள் ஜூன் 12. அன்றிரவு அனைத்து நண்பர்களுமாக ஓர் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்த கல்லூரியில் சேர்ந்த இரண்டாவது ஆண்டில் விஷால் சக்தியின் நெருங்கிய நண்பனானான்.
நட்பு காதலாக மலர்ந்தது.
ஆனால் அதை இருவரும் அவரவர் மனம் என்னும் மண்ணிலிட்டு புதைத்து வைத்துக் கொண்டனர்.
அது விஷாலின் மனதில் விருட்சமாக வளர்ந்ததும் அதை சக்தியிடம் அந்த பார்டியில் வைத்து தெரிவிக்க வேண்டி அவளின் வருகைக்காக காத்திருந்தான்.

சக்தியும் வந்தாள். அனைவரும் மிகவும் சந்தோஷமாக அவர்கள் அந்த கல்லூரியில் இரண்டு ஆண்டுகளில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள், அனுபவங்கள் மற்றும் கிண்டல் கேலி என அனைத்தையும் பேசிக் கொண்டதில் பார்ட்டி மகிழ்ச்சியாக நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. இடையிடையே ஸ்னாக்ஸ், ட்ரிங்க்ஸ் மற்றும் மெயின் கோர்ஸ் என உண்டு கொண்டும் இருந்தனர். அன்று வரை கலகலப்பாக பேசிக் கொண்டிருந்த விஷால் அன்ட் சக்தி இருவரும் கையில் ஆளுக்கொரு கிளாஸில் கோக் வைத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்ததைப் பார்த்த நண்பர்கள் அவர்களிடம்

“ஹேய் சக்தி அன்ட் விஷால் என்ன ஆச்சு? ஏன் இரண்டு பேரும் பேசாம உட்கார்ந்திட்டு இருக்கீங்க?”

“நாளைக்கு காலையிலே அவரவர் அவரவர்கள் நாட்டுக்கும் வீட்டுக்கும் பறந்து போயிடுவோம்ங்கற கவலையா?”

“அதுனால என்ன நாம வருஷத்துக்கு ஒரு தடவை இப்படி எங்கயாவது ஒண்ணா ஒரு ரீயூனியன் வச்சுட்டா போச்சு. இதுக்காகவா இவளோ ஃபீலிங்ஸ்?”

“ஹேய் என்னடா பேசற ஜான். நம்ம சக்திக்கு தான் கேம்பஸ் இன்டர்வியூவில் இங்கேயே பெரிய கம்பெனியில் ஜாப் கிடைச்சிடுச்சே! அவளைத் தவிர நம்ம எல்லாருக்கும் வேற நாடுகளில் கிடைச்சிருக்கு.”

“எனக்கு இன்னும் எங்கயுமே கிடைக்கலையே ரோஸ். என்னை ஏன் உன் லிஸ்ட்டில் சேர்த்துக்கற?”

“டேய் ரிஷி அதுக்கு நல்லா படிச்சிருக்கணும் இல்ல!!! உனக்கென்னப்பா இந்தியாவுல உங்க அப்பா பிஸினஸ் இருக்கே அதைப் போய் பார்த்துக்கோ”

“ஆங்!! ஆங்!! எங்கப்பா அப்படியே தூக்கி குடுத்துட்டு தான் அடுத்த வேலையே பாப்பாரு….எனக்கென்னவோ நம்ம விஷால் அன்ட் சக்தியோட சைலென்ஸை பார்த்தா…ரெண்டு பேரும் காதல் எனும் வலையில் சிக்கி…விக்கிக்கிட்டு இருக்காங்களோன்னு தோணுது”

“எனக்கும் அப்படி தான் தோணுது ரிஷி. ஈஸ் இட் ட்ரூ விஷால்?”

என்று ரோஸ் விஷாலைப் பார்த்துக் கேட்டதும் உடனே விஷால் தான் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து தனக்கு எதிரே அமர்ந்திருந்த சக்தி அருகே சென்று அவளின் கரம் பற்றி தரையில் முழங்காலிட்டு

“சக்தி நீ எனக்கு கிடைத்த சிறந்த தோழி. உன்னுடய வெளிப்படையான பேச்சு, தைரியம், எளிமை, அறிவு, அழகு, இதுல எது என்னை கவர்ந்ததுன்னு எனக்கு சொல்ல தெரியலை. ஆனா நீ தான் என்னவள்ன்னு ஏதோ ஒண்ணு எனக்குள்ள சொல்லிக்கிட்டே இருக்கு. இந்த நாளையும் நான் தவரவிட்டுட்டேன்னா அப்புறம் எப்போ இதை நான் உன்கிட்ட சொல்ல முடியும்னு தெரியலை அதுனால இப்பவே சொல்லிடறேன்…தீ… ஐ லவ் யூ”

என்று விஷால் கூறி முடித்ததும் அனைவரும் ஹே!! என்று கத்திக் கொண்டே கரகோஷம் எழுப்பினர். அப்போது ரோஸ் அனைவரையும் அமைதியாக இருக்கச் செய்தாள். பின் அனைவரின் பார்வையும் சக்தி மீது பாய்ந்தது. அவள் கூறப் போகும் பதிலுக்காக விஷால் உற்பட அனைவரும் காத்திருந்தனர்.

தான் விஷாலை நேசிப்பது போலவே விஷாலும் தன்னை நேசிக்கிறான் என்று அறிந்துக் கொண்டதில் சக்தியின் கண்கள் ஆனந்தத்தில் வெள்ளப்பெருக்கெடுத்தது. அதைப் பார்த்த நண்பர்கள் அனைவரும் சக்தியிடம்

“கம் ஆன் சக்தி அக்சப்ட்…தீ….தீ…தீ…”

என்று சபதம் எழுப்பத் துவங்கினர். அப்போது சக்தியின் கைபேசி ஒலித்தது. அனைவரும் அமைதியாயினர். சக்தி தன் கைபேசியில் யார் அழைப்பது என்று பார்த்தாள். உடனே தன் கண்களைத் துடைத்துக் கொண்டு கால் ஐ அட்டென்ட் செய்ய எழுந்து வெளியே சென்றாள்.

சென்றவள் வருவாள் தனக்கு நல்ல பதில் தருவாள் என்று காத்திருந்தான் விஷால். ஆனால் சக்தி அந்த கால் ஐ அட்டென்ட் செய்ததும் டாக்ஸி பிடித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டாள்.

காரணமறியாது விஷாலும் அங்கிருந்து தன் வீட்டிற்கு சென்றுவிட மகிழ்ச்சியாக நடந்துக் கொண்டிருந்த பார்ட்டியும் முடிவுற்றது.

அதன் பின் சக்தி தனது ரிசர்ச் வேலையில் மூழ்கியதில் முகநூல் போன்ற எந்த சோசியல் நெட்வொர்க் தளத்திலும் இரண்டு ஆண்டுகள் எட்டிக்கூடப் பார்க்காதிருந்தாள். ஆறு மாதங்களுக்கு முன் அவள் தனது முகநூல் பக்கத்தைத் திருந்துப் பார்த்தாள் அதில் அவள் நண்பர்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் அழைப்புகள் மற்றும் மெஸேஜ்ஜுகள் கொட்டிக்கிடந்தன. அதிலிருந்த ஒரு பெயர் அவள் கவனத்தைத் திருப்பியது. அது தான் விஷாலின் மெஸேஜஸ். அவன் சக்திக்காக தினமும் ஒரு மெஸேஜ் அனுப்பியிருந்தான். அதைப் பார்த்த சக்தி தன்னைத் தானே நொந்துக் கொண்டாள். பின் விஷாலின் முகநூல் பக்கத்துக்குச் சென்று அவனின் புகைப்படத்தைப் பார்த்த அவள் தனக்குள்

“டேய் இந்த மூணு வருஷத்துல எப்படி மாறிட்ட…ம்…ம்..எப்போதும் போல யூ லுக் ஸ்மார்ட்”

என்று கூறிக்கொண்டே அவனுக்கு மெஸேஜ் செய்தாள். உடனே அவனிடமிருந்து பதில் வந்தது

“ஹேய் தீ…அப்பாடா…இப்பவாவது ரிப்ளை பண்ணணும்னு தோணிச்சே….உன்கிட்ட இருந்து மெஸேஜ் வந்ததில் நான் ரொம்ப சந்தோஷமாகிட்டேன். எப்படி இருக்க? ஏன் இவ்வளவு வருஷமா பதில் போடலை? ஜூன் 12த் நைட் எங்க போன? எப்ப மறுபடியும் மெட்ஸுக்கு வந்த? ஏன் இத்தனை வருஷமா கான்ட்டாக்ட்டே இல்ல? நான் என்ன அப்படி கேட்கக்கூடாததைக் கேட்டுட்டேன். உனக்கு இஷ்ட்டமில்லைன்னா அதை நீ அப்பவே சொல்லியிருக்கலாம் இல்ல. இதுக்கெல்லாம் ஆன்சர்ஸ் தேடி தேடி சோர்ந்துப் போயிட்டேன். உன்னைப் பத்தி விசாரிக்காத பிரண்ட்ஸ் இல்ல தெரியுமா‌‌! ஆனா யாருக்குமே எதுவுமே தெரியலை. அப்படி ஏன் எங்க எல்லாரையும் ஒதிக்கிட்ட?”

“அப்பப்பா எவ்வளவு கேள்விகள் வி? எல்லாத்துக்கும் இப்படி மெஸேஜ் லேயே பதில் சொல்லணுமா இல்லை நேரில் மீட் பண்ணி சொல்லணுமா?”

“ஹேய் தீ…ஆம் ரெடி டூ மீட் யூ ரைட் அவே!! எங்க எப்போ சொல்லு.”

“ஹலோ வி நீ இருக்கற இடத்துக்கும் நான் இருக்குற இடத்துக்கும் முன்னூற்றி முப்பது கிலோமீட்டர் டிஸ்டன்ஸ் இருக்கு தெரியுமா?”

“இவ்வளவு வருஷமா இந்த முன்னூற்றி முப்பது கிலோமீட்டர்கள் தான் நம்மள பிரித்து வைச்சிருந்ததுன்னு நினைக்கும் போது அதை உடனே கடந்தாக வேண்டும்னு தோணுது தீ. ஆனா கடைசியா நான் கேள்வி பட்டதை வைத்துப் பார்த்தா நீ யூகேவுக்கு இல்ல ஜாப் கிடைச்சுப் போனதா கேள்விப்பட்டேன்! அப்புறம் எப்படி அன்ட் எப்போ மறுபடியும் பிரான்ஸ் வந்த? சரி சரி முதல்ல எப்போ அன்ட் எங்க மீட் பண்ணலாம்னு சொல்லு”

“நான் பிரான்ஸ்லேயே தான் இருக்கேன். யூகே ல ஜாப் கிடைச்சது என்னமோ உண்மை தான். அங்க போணேன் ஆனா ஆறு மாசத்துல இங்கேயே வந்துட்டேன். உனக்கு இந்த விஷயம் யார் சொன்னா? எப்படி தெரிஞ்சுகிட்ட?”

“நம்ம மனசுக்கு பிடிச்சவங்கள பத்தி நமக்கு நிச்சயம் விவரங்கள் தானா தேடி வரும் தெரியுமா…உன் மனசுக்கு தான் என்னை பிடிக்கலைன்னு நினைக்கிறேன்.”

“நோ நோ நோ….இட்ஸ் நாட் லைக் தட் வி. நான் உன்கிட்ட நிறைய சொல்ல வேண்டியிருக்கு ஸோ நேர்ல பார்ப்போம்.
கம்மிங் சாட்டர்டே மார்னிங் ஒன்பது மணிக்கு லீ கார்னர் காஃபி ஷாப் மெட்ஸுக்கு வர முடியுமா? இட்ஸ் மை ஃபேவரைட் அன்ட் லக்கி ஸ்பாட். என்ன ஓகே வா.”

“அய்யோ அதுக்கு இன்னும் மூன்று நாள் இருக்கே தீ”

“மூணு வருஷமே பறந்து போயிடுச்சு மூணு நாள் போயிடாதா வி. எனக்கு வேலையிருக்கு இல்லாட்டி இன்னைக்கே கூட நான் பாரிஸ் வந்துடுவேன்.”

“ம்…என் லக் அவ்வளவு தான். ஓகே தென் நாம நீ சொன்ன டே, டைம் அன்ட் ப்ளேஸில் மீட் பண்ணலாம்.”

“சரி நீ எதுல வருவ வி”

“நான் உனக்கு ரொம்ப பிடிச்ச ரோல்ஸ் ராய்ஸ் ப்ளாக் கார் தான் வாங்கியிருக்கேன் அதுல தான் வருவேன். என் கார் நம்பர்”

“ஹே வி…இரு இரு கார் நம்பர் எல்லாம் எனக்கெதுக்கு? உன்னை எனக்கு நல்லாவே தெரியும். கடைக்குள்ள வந்தே பார்க்கறேன்.”

“தீ நீ உன் ஃபேஸ்புக் பேஜ்ஜை அப்டேட் பண்ணவேயில்லையே…உன்னோட ரீசன்ட் பிக்சர் எதாவது அனுப்பேன்…ப்ளீஸ்”

“என்ட்ட பெரிய சேஞ்ச் ஏதும் இல்ல வி…ஸோ நேர்ல பார்த்து சொல்லு ஓகே…டில் தென் பை…யுவர் தீ”

நிழலாடிய நினைவலைகளை எண்ணிக் கொண்டே இட்ட உதட்டு சாயம் சற்று உதட்டைவிட்டு வெளியே வர அதை உடனே சரி செய்துக் கொண்டு காரிலிருந்து இறங்கி காரை லாக் செய்து நேராக காஃபி ஷாப்பை நோக்கி நடக்கலானாள் சக்தி.

தொடர்வாள்….













சிறிய முள் ஐந்தில் வெகுநேரமாக கால் கடுக்க நின்றிருந்ததில் எப்படாப்பா ஆறு நீ வருவ என்பது போலவே சோர்ந்திருக்க சோம்பல் முறித்துக் கொண்டு யாருப்பா அங்கே என்று கேட்டு சிறிய முள் ஆறில் ஒரு அடி வைக்க முன் வந்தது. அப்போது பெரிய முள் சட்டென்று பன்னிரெண்டில் போய் செட்டில் ஆனதும் ஹாய் சக்தி குட் மார்னிங் வேக் அப் இட்ஸ் சிக்ஸ் ஓ க்ளாக் என்ற குரல் முழங்கியது. அதைக் கேட்டு விருட்டென்று எழுந்து வேகமாக தனது படுக்கையின் வலது புறம் ஒரு சிறிய பொம்மைப் போல் ஸ்மார்டாக உடையணிந்து இதய வடிவிலான முகத்தில், நீல நிற கண்களுடனும், அகன்று விரிந்த மெல்லிய சிரிப்புக் கோட்டுடனும் இருந்த ரோபோவின் உலோகத் தலையில் அணிந்திருந்த விக் எனப்படும் ஒட்டவைக்கப்பட்ட பொய் தலைமுடியின் உச்சியில் தனது உள்ளங்கையை வைத்து

“தாங்க்யூ ப்ளூ. குட் மார்னிங். ஜஸ்ட் டூ மோர் மினிட்ஸ் டா.”

“நோ தீ நோ நோ. எழுந்துக்கோ. தீ…தீ… ஓ ஹோ!! மறுபடியும் தூங்கிட்டியா?”

என்று நேரத்தை கணக்கிடத் துவங்கியது சக்தியின் இயந்திர தோழனான ப்ளூ. சரியாக இரண்டு நிமிடமானதும் மீண்டும்

“தீ ….தீ…நீ சொன்ன டூ மினிட்ஸ் முடிஞ்சிடுச்சு…கம் ஆன் எழுந்துக்கோ. இன்னைக்கு உன்னோட மிக மிக முக்கியமான நாள். மறந்துட்டியா?”

“என்ன நாள்? என் பிறந்த நாளா ப்ளூ?”

“அப்படின்னா நான் உன்னை எழுப்பறதுக்கு முன்னாடியே மிஸ்ஸர்ஸ் அன்ட் மிஸ்டர் நவீன் உன்னை எழுப்பியிருப்பாங்களே…எனக்கும் வேலை மிச்சமாகியிருக்கும்…ஸோ இன்று உன் பிறந்த நாள் இல்லை.”

“அப்போ என்ன நாள்ன்னு சொல்லேன் ப்ளூ”

“இப்படியா மறப்ப? படிப்பு வேலை ஆராய்ச்சின்னுட்டு இப்படி எல்லாத்தையும் மறந்தா எப்படி தீ!!! உன் வாழ்க்கையில் அடுத்த புதிய பிறப்பெடுக்க அடி எடுத்து வைக்கணும்னு நீ முடிவெடுத்த நாள். ஞாபகம் வந்ததா?”

“ஓ மை காட்…ஆமாம் இல்ல…நகரு நகரு…லெட் மீ கெட் ரெடி”

“அய்யோ! அம்மா! தீ…ஏன் இப்படி என்னை தள்ளிவிட்டுட்டு போற? நான் எழுந்திரிக்க எவ்வளவு நேரமாகும் தெரியுமா…எழுப்பி விட்டுட்டுப் போ தீ…தீ…தீ… போச்சுடா இனி அவ திரும்பி வரவரைக்கும் நான் இப்படியே பப்பரப்பேன்னு கிடக்க வேண்டியது தான்…ஷ் …ஷபா..”

என்று ப்ளூவை கையால் தள்ளிவிட்டு வேகமாக ஓடிச்சென்ற சக்தி நேராக பாத்ரூமிற்குள் சென்று முகத்தில் தண்ணீரை தெளித்து வேக வேகமாக பல் துலக்கி வெளியே வந்து காபி மேக்கரில் காபி பொடியைப் போட்டு அதில் தண்ணீரையும் ஊற்றி வைத்து விட்டு…இரண்டு பிரெட் துண்டுகளை டோஸ்ட்டரில் போட்டு விட்டு, மர அலமாரியிலிருந்து டவல் ஒன்றை எடுத்துக் கொண்டு மீண்டும் வேகமாக பாத்ரூம் சென்று மடமடவென குளித்து ஃப்ரெஷ் ஆகி குளியல் அங்கி என்றழைக்கப்படும் பாத்ரோப்புடன் வெளியே வந்து காபிப் போட்டுக்கொண்டு அந்த இரண்டு பிரெட் துண்டுகளை காபியுடன் உண்டு முடித்ததும் மீண்டும் அலமாரி முன் நின்று உடைகளை தடவிக்கொண்டே

“ப்ளூ வாட் டூ வேர் டுடே?”

“முதல்ல என்னை எழுப்பி விடு தீ…இப்படியே எவ்வளவு நேரம் தரையில் மல்லாந்து படுத்திருப்பேன்”

வாயிலிருந்த பிரட் துண்டை மடக்கென்று விழுங்கிக் கொண்டே ப்ளூவை தூக்கி நிறுத்திய சக்தி தன் தோழனிடம்

“உஷ்….சாரி சாரி ப்ளூ….நான் உன்னை கவனிக்கவே இல்லை…ஆம் ஸோ சாரி….ம்…வா…இப்ப ஓகே வா?”

“ம்…ம்…எவ்வளவு நாளா இந்த நாளுக்காக நீ காத்திருந்த? நான் ஞாபகப் படுத்தலைன்னா அதையும் மறந்திருப்ப.‌‌..ஞாபகப்படுத்தினதுக்கு எனக்கு இந்த பதினைந்து நிமிட தண்டனையா?”

“அது தான் சாரி கேட்டுட்டேன் இல்ல…சும்மா விடு ப்ளூ. சரி சரி இப்ப நான் எதை போட்டுக்கட்டும்ன்னு சொல்லேன்”

“ஹேய் தீ! ரெண்டு நாள் முன்னாடி இன்னைக்கு போட்டுட்டு போறதுக்காக ஒரு டிரெஸ் வாங்கினியே!!! அதோ அங்க அந்த கவர்ல வச்சிருக்க பாரு…அதைப் போட்டுக்கோ. அந்த டிரெஸில் நீ பிரின்ஸஸ் மாதிரி இருப்ப தீ”

“அந்த டிரெஸ் போட்டா தான் நான் பிரின்ஸஸ் ஆ!!! ம்…ம்…”

“அம்மாடி மன்னிச்சுக்கோமா…நீ என்னைக்கும் உங்க அப்பா நவீனோட பிரின்ஸஸ் தான். நான் ஒத்துக்கறேன். இப்போ போய் ரெடி ஆகிட்டு வா. இல்லாட்டி யூ வில் மிஸ் திஸ் டே”

“ஓகே ப்ளூ. ஐ வில் பீ பேக் இன் த்ரீ மினிட்ஸ்”

“எப்பவுமே டூ மினிட்ஸ் தானே சொல்லுவ…இன்னைக்கு என்ன த்ரீ மினிட்ஸ்? சரி சரி சீக்கிரம் தயாராகி வா”

“டட்ட டைங்…ஹே ப்ளூ.‌..கிட்சனை நான் வெளியே போனதுக்கப்புறமா சுத்தம் செய்துக்கோ…இப்போ இந்த பக்கம் திரும்பி என்னைப் பார்த்து நான் எப்படி இருக்கேன்னு சொல்லேன்”

சக்தி பிரட் உண்டு வைத்த தட்டு மற்றும் காபி அருந்திய கப் ஆகியவற்றை அடுப்படி சிங்க்கில் போட சென்றுக் கொண்டிருந்த ப்ளூ தன் தோழியின் அழைப்பைக் கேட்டு கையிலிருந்த பாத்திரங்களுடன் திரும்பி அவளைப் பார்த்ததும் தட்டையும் கப்பையும் கீழே போட்டது…பின் அவளருகே சென்று

“வாவ்!! நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க தீ. எனக்கே உன்னைப் பார்த்ததும் பிரபோஸ் பண்ணணும் போல தோணுது தீ…யூ லுக் கார்சியஸ்”

“ம்….ப்ளூ டோன்ட் மேக் மீ ஃபீல் ஷை.”

“அச்சச்சோ நீ இப்படியே வெட்கப்பட்டுட்டு போனேனா காரியம் கெட்டு விடும் தீ. சரி சரி அதெல்லாம் இருக்கட்டும் நீ உங்க அப்பா அம்மாகிட்ட சொன்னியா?”

“இல்ல ப்ளூ…அவங்க எப்பவுமே எதுக்குமே என்னை தப்பா நினைச்சதுமில்லை நினைக்கவுமாட்டாங்க…என்னோட விருப்பம் தான் அவங்க விருப்பமும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும்…”

“பின்ன ஏன் சொல்லலை தீ? ஆங்கிலத்துல ஒண்ணு சொல்லுவாங்க இல்ல…பேரன்ட்ஸ் ஆர் பை சான்ஸ் அன்ட் பிரெண்ட்ஸ் ஆர் பை சாய்ஸ் ன்னு…அது படி பார்த்தா உனக்கு அந்த காட் அற்புதமான சான்ஸ் அன்ட் சாய்ஸ் ரெண்டுமே குடுத்திருக்காரே!!”

“நீ சொல்லறது எல்லாமே சென்ட் பர்சன்ட் கரெக்ட் தான் ப்ளூ. ஆனா நான் முதல்ல கன்பார்ம் பண்ணிட்டு அப்புறமா அவங்ககிட்ட சொல்லலாம்ன்னு இருக்கேன்.”

“அதுதான் ஏன்னு கேட்கிறேன்? நீ எல்லாத்தையுமே எந்த தயக்கமுமில்லாம உன் பேரன்ட்ஸ்கிட்ட சொல்லுவ ஆனா இதுல ஏன் தயக்கம் அன்ட் அவநம்பிக்கை?”

“இட்ஸ் ஓகே ப்ளூ. ஜஸ்ட் லீவ் இட் தேர். நான் இன்னைக்கு அவாகிட்ட சொல்லுவேனா இல்லையான்னு இப்போ நான் வெளியே போயிட்டு வந்தா தான் எனக்கே தெரியும்.”

“ம்…என்னமோ குழப்பத்துல இருக்கன்னு மட்டும் தெரியுது. ஆனா உன் பேரன்ட்ஸைப் பார்த்ததிலேந்து அன்ட் அவங்களோட பழகியதை வைத்து சொல்லறேன் உனக்கு இந்த தயக்கமே தேவையில்லை. இட்ஸ் ஓகே ஐ வில் லீவ் இட் டூ யூ. சரி கிளம்பி போயிட்டு நல்ல செய்தியோட வா.”

“ஓகே ப்ளூ. நான் போயிட்டு வர்றேன். அம்மா அப்பா காப்பாத்துங்க”

என்று ப்ளூவை இறுக்கி அணைத்து முத்தமிட்டு வெளியே சென்றாள் சக்தி.

தொடர்வாள்…

நவீன் மிருதுளாவின் ஒரே செல்லப் பெண்ணான சக்தி நன்குப் படித்து யூரோப்பில் பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிப்புரிந்து வருகிறாள். அவளின் அப்பா அம்மாவின் அனைத்து சங்கடங்களிலும், கஷ்டங்களிலும், சந்தோஷங்களிலும் அவர்கள் கூடவே பயணித்தவள். அவளுக்காகவே வாழ்ந்து, ஒரே பெண் என்ற காரணத்தைக் காட்டி அவளின் வளர்ச்சியை தடுத்து நிறுத்திடாமல் தங்கள் பெண்ணிற்கு அவள் விருப்பப்படியே அனைத்தையும் நடத்திக் கொடுத்த நவீன் மிருதுளாவின் மனசுப் போலவே நல்ல சிறந்தப் பெண்ணாக வலம் வந்துக் கொண்டிருப்பவள்‌. பொறுமையே பொறுமை இழந்துப் போனாலும் துளிக்கூட பொறுமையை இழந்திடாது அதையே தனது ஆயுதமாகவும் கேடையமாகவும் உபயோகித்த தன் அம்மா மிருதுளாவைப் போல் பொறுத்தாளப் போகிறாளா? இல்லை அவள் வழி தனி வழி என்றிருக்கப் போகிறாளா? இருபத்தி ஆறு வயதான சக்தியின் வாழ்க்கையை

புரட்டிப் பார்க்க நேரம் வந்தது!
அலசி ஆராய காலம் வந்தது!

உயிருள்ள அனைத்திலும் செயல்படும் ஆற்றலைக் குறிப்பதும் சக்தி தான்!
உணர்வுகள் அனைத்திலும் பிரதிபலிப்பதும் சக்தி தான்!

வியந்து வாசிக்க வாரீர்!
விமர்சனங்களை அள்ளித் தாரீர்!

சக்தியுடன் ஓர் புதிய அரிய பயணத்தை திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மேற்கொள்ள உங்களை
பணிவன்புடன் அழைக்கும் உங்கள் சகோதரி

நா. பார்வதி






அவனிதனிலே நாம் பவனி வர காரணமானவள்

அன்பு, அக்கறை, அரவணைப்பின் பெட்டகமானவள்

தன்னலமற்ற தகழியாக குடும்பத்தை ஒளிரவைப்பவள்

பொன்னும், பொருளும் அள்ளிக் கொடுத்தாலும் கிள்ளிக்கூட எடுக்க எண்ணாதவள்

ஈன்ற பிள்ளைகளின் வளர்ச்சி, ஆரோக்கியம், மகிழ்ச்சிக்காக மட்டுமே நித்தம் நித்தம் ஆண்டவனை வேண்டும் தெய்வமானவள்

பிள்ளைகள் என்றும் பற்றிக்கொள்ளும் நம்பிக்கை கரமானவள்

மூன்று எழுத்தில் மூவுலகத்தையும் சுவாசிக்க செய்பவள்

அம்மா

அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்

❤️நன்றி❤️

நேர் நிமிர்ந்த மரமே முதலில் வெட்டிச் சாய்க்கப் படுகிறது 

அது நேராக வளர்ந்து நின்றிருப்பதனால் மட்டுமே வெட்டப்படுகிறது

அது சாய்ந்து வீழ்ந்தாலும் பலர் அமரும் நாற்காலியாகும்

வெட்டுபவருக்கு என்றும் உபயோகமாக மட்டுமே இருக்கும்

தன்னை வெட்டிவிடுவார்கள் என்று ஒருநாளும் அது தன்னை வளைத்துக் கொள்வதில்லை

அப்படிப் பட்ட மரங்கள் எண்ணிக்கையில் குறைவானதாகவே இருக்கும்

நேர் நிமிர்ந்த மரங்களைப் போல தான் மனிதர்களில் சிலர்

நேர்மை, நியாயம், நாணயம், உண்மை, சட்டம், சுய ஒழுக்கம் என்று வாழ்கிறார்கள்

அவர்கள் தங்களின் சுய விருப்பங்களுக்காகவோ / அடுத்தவரிடமிருந்து காரியத்தை நடத்திக் கொள்வதற்காகவோ எங்கும் எதற்கும் தங்களின் நல்ல குணங்களையோ / பழக்கங்களையோ / பாரம்பரியத்தையோ சிறிதும் மாற்றிக் கொள்ளாமல் வாழ்கிறார்கள்

அவர்களுக்கு ஒத்து வரவில்லை என்றால் ஒதுங்கிவிடுகிறார்கள் 

வளைந்து நெளிந்து வளர்ந்த மரங்கள் நேர் நிமிர்ந்திருக்கும் மரத்தில் முட்டி, மோதி, அதன் மீதே சாய்ந்தும் கூட வளர்ந்திருக்கும்

சூழ்நிலைக்கேற்ப, இடத்துக்கேற்ப, ஆட்களுக்கு ஏற்றார்  போல வளைந்து, நெளிந்து வாழ்பவர்கள் நன்னெறியோடு நேராக வாழ்க்கை நடத்துபவர்களை வளைந்த மரத்தைப் போல முட்டுவார்கள், மோதுவார்கள், எல்லா வழிகளிலும் தாக்குவார்கள்

வளைந்து நெளிந்து வளரும் மரங்கள் பல நேரங்களில் பலரை தடுக்கி விழச்செய்யும், கண்களைக் குத்தும், வழியை மறைக்கும், மற்ற மரங்களை வளரவிடாது தடுக்கும் 

அதேப் போல் எல்லாவற்றிக்கும் வளைந்து, நெளிந்து, குனிந்து, கும்பிடுப் போட்டு வாழ்க்கை நடத்துபவர்கள், விரல் விட்டு எண்ணக் கூடிய நேர்மையான மனிதர்களை பல நேரங்களில் பல சோதனைகளுக்கு உள்ளாக்குகிறார்கள்

அவற்றை எல்லாம் பொறுமையாக, நிதானம் தவறாமல் கையாளுபவர்கள், வெட்டுப் பட்டும் நேர்மையாகவே இருப்பவர்கள் என்றாவது ஒரு நாள் மீண்டும் துளிர்ப்பர், மீண்டும் நேர்மையானவராகத்  தான் வளர்வர்

நேர்மையின்றி, வேண்டிய இடங்களில் வேண்டியோருக்கு  துதிப் பாடி வளைந்து கொடுத்தால் தான் வெட்டுப்படுவதிலிருந்து சற்று தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் பலரால் திணிக்கப் படுகிறது

எத்துனை முறை வெட்டுப் பட்டாலும் நாம் நமது நேர்மையிலிருந்தும், நேர்மறை எண்ணங்களிலிருந்தும் நல்லொழுக்கங்களிலிருந்தும் ஒருபோதும் வளைந்து, நெளிந்து மாற வேண்டிய அவசியமில்லை 

வளைந்தும், நெளிந்தும், அடுத்த மரத்தில் சாய்ந்தும் மட்டுமே வளரக்கூடிய மரங்களின் மத்தியில் நெடுநெடுவென நேர் நிமிர்ந்த மரமாகவே நாம் உயர்ந்து நிற்போம்

வெட்டுப் பட்டால் நாற்காலிகள் ஆவோம் இல்லையேல் நமது விதைகள் நாளைய சிறந்த தலைமுறையினர்களாகி, நேர் நிமிர்ந்த மரங்களாக வளர்ந்து நமது குடும்பத்திலும் சமுதாயத்திலும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அதைப் பார்த்து வளைந்து நெளிந்து கிடக்கும் மரங்களும் நேர் நிமிர்ந்த மரங்களாகட்டும்.

❤️நன்றி❤️

இரண்டாயிரத்து இருபது ஆரம்பம் ஜோரு

பிப்ரவரியில் ஆரம்பித்தது அக்கப் போரு

மார்ச்சில் செய்திகள் எல்லாம் தாறு மாறு

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தோம் பாரு

சொந்தங்கள் பல நம்மை விட்டுப் பிரிந்தன 

பந்தங்கள் அனைத்தும் தூரத்திலேயே இருந்தன

அன்பு, பாசம், அக்கறை, வேலை, படிப்பு என்று எல்லாமும் நிகழ்நிலையில்  நடந்தன

பலர் வேலையை இழந்தனர்

சிலர் வேலையை உருவாக்கிக் கொண்டனர்

குடும்பம், பிள்ளைகள் என நேரத்தை உபயோகமாக செலவழித்தனர்

முகக் கவசம்  முக்கிய அணிகலனாக அணியத் துவங்கினர்

தொலைந்த சுத்தம் சுகாதாரம் உயிர்தெழச் செய்தனர்

நிலையில்லாதது வாழ்க்கை என்பதை உணர்ந்தனர்

எதுவும் நிரந்தரமில்லை என்பதைப்  புரிந்துக் கொண்டனர்

பணம், பதவி, கௌரவத்தை விட உயிர் தான் முக்கியம் என்று எண்ணத் துவங்கினர்

மறைந்துக் கொண்டிருந்த மனிதம் மீண்டும் துளிர்க்க காரணமாயினர்

உயிர், குடும்பம், பிள்ளைகள், அன்பு, பாசம், அக்கறை, மனிதநேயம் ஆகியவைகளை விதைத்து இரண்டாயிரத்து இருபத்தி ஒன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம்

நடக்கபோவதெல்லாம் நல்லவையாகவே நடக்கும் என்ற நம்பிக்கையோடு பயணிப்போம்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நண்பர்களின் வாட்ஸ்அப் குழு மூன்று மாதங்கள் முன்புவரை மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒரு நாளைக்கு நூறு மெஸேஜ் வந்த வண்ணம் இருந்தது.

ஒரு மெஸேஜுக்கு பதில் அளிப்பதற்குள் பத்து மெஸேஜஸ் குவிந்து விடும்

அரசியல், அலுவலகம், சினிமா, சீரியல் என்று ஒன்று விடாமல் எல்லாமும் குழுவில் புரட்டி எடுக்கப்படும்.

அவ்வளவு விறுவிறுப்பாக இருந்த குழு

இந்த மூன்று மாதங்களாக கிணற்றில் கல்லை போட்டது போல கம்முனு இருந்தது.

மெதுவாக குழுவில் ராமு…

எல்லாரும் இருக்கீங்களா? ஏன் ஒரு மெஸேஜ்ம் இப்பெல்லாம் யாரும் போடரதே இல்ல…ஒரு கொரோனா ஃபார்வேட் மெஸேஜ் கூட காணோமே ஹலோ டியர் நண்பர்களே!!!

ரொம்ப நேரம் கழித்து கோமுவிடமிருந்து பதில் வந்தது

கோமு: டேய் ராமு உனக்கு வாட்ஸ்அப் ல மெஸேஜ் பண்ணுற அளவுக்கு டைம் இருக்காடா??

ரவி : அப்போல்லாம் ஆஃபிஸ் போயிட்டிருந்தோம் வாட்ஸ்அப் ல ஜாலியா அரட்டை அடிச்சிட்டு இருந்தோம்….இப்போ அப்பிடியா!!!வீட்டு வேலை பென்டெடுக்குதுடா…சரி சரி …நான் துணியை துவைத்துக்கொண்டிருந்தேன்.. பாதிலயே விட்டுவிட்டு உங்களோட பேச ஆரம்பிச்சிட்டேன்….குட்…பை …நண்பர்களே.

ரகு: சீக்கிரமே ஆபிஸுக்கு வரசொல்லனுமுனு வேண்டிக்கோங்கடா…

கொரோனாவால் பதிக்கப்படுவது உடல்நலம் மட்டும் அல்ல…..😉

அன்று வினாயகர் சதுர்த்தி. பாட்டி வள்ளியம்மை சுறுசுறுப்பாக பூஜைக்கு வேண்டிய கொழுக்கட்டை, வடை எல்லாம் செய்து கொண்டிருந்தார்.

மருமகள் ராணி வினாயகரை அலங்காரம் செய்து பின் சுவற்றில் ஹாப்பி பெர்த்டே அஞ்சு என்று ஒரு சுவரொட்டியை ஒட்டினாள். அன்று பாட்டியின் மூன்று வயது செல்லக்குட்டி பேத்தி அஞ்சனாவின் பிறந்தநாளுமாகும்.

ராணி:  அம்மா அடுக்களையில் உங்கள் வேலை முடிந்ததா? நான் அஞ்சுக்கு கேக் பேக் பண்ணணும்…

ஆச்சு என்று சொல்லிக்கொண்டே செய்ததை எல்லாம் வினாயகருக்கு முன் வைத்து தனது கணவர், மகன், மருமகள், பேத்தி அஞ்சனா அனைவரையும் பூஜைக்கு அழைத்தார். பூஜை சிறப்பாக முடிந்தது.

அஞ்சனா: இதெல்லாம் என்ன பாட்டி?

பாட்டி: இன்னைக்கு பிள்ளையாருக்கும் பெர்த்டே ஆச்சே. மூத்த கடவுள் இல்லையா…அதனால இது பிள்ளையாருக்கு பூர்ணக்கொழுக்கட்டை, பிடிகொழுக்கட்டை அப்பறம் வடை.

ராணி : கேக் தயார். அஞ்சுமா கேக்கை வெட்ட வா மா.

எழுந்து வராமல் வருத்தமாக அமர்ந்திருந்தாள் அஞ்சனா. அனைவரும் ஏன் என்ன ஆச்சு என்று வினவினர்.

அஞ்சனா: பாட்டி நான் உன் கூட டூ!

பாட்டி: நான் என்ன செய்தேன் கண்ணா? ஏன் என் கூட அஞ்சுமா டூ விடரா?

அஞ்சனா: பி ஃபார் பிள்ளையார் ரைட்டா?

பாட்டி : சரிதான்.

அஞ்சனா: அ  ஃபார் அஞ்சனா ரைட்டா?

பாட்டி : ரைட்டுதான்.

அஞ்சனா : பிள்ளையாருக்கு பூர்ணக்கொழுக்கட்டையும், பிடிகொழுக்கட்டையும், வடையும் செய்திருக்க பாட்டி அப்போ எனக்கு மட்டும் ஏன் கேக்?

பாட்டி: என் அஞ்சனா குட்டிக்கு வேற என்ன வேணும் சொல்லு உடனே செய்து தரேன்.

அஞ்சனா: எனக்கு ஆறின கொழுக்கட்டை யும், அடி கொழுக்கட்டையும் அன்ட்..அன்ட் அடையும் வேணும்.

அனைவரும் சிரித்தார்கள். பாட்டிக்கும் சிரிப்பு அடக்கமுடியலை ..ஆனாலும் அடுக்களைக்குள் சென்று தட்டு ஒன்றில் ஆறிப்போன பூரணக்கொழுக்கட்டையும், பிடிக்கொழுக்கட்டையை இரண்டாக வெட்டி அதில் ஒரு பாதியையும், வடையை நன்றாக கைகளினால் நசுக்கி அடைப்போல செய்து எடுத்து வந்து ….

பாட்டி: அ ஃபார் அஞ்சனா குட்டிக்கு பாட்டி செய்த ஆறின கொழுக்கட்டை, அடி கொழுக்கட்டை அன்ட் அடை தயார் ஆ காமி…

அஞ்சனா : சூப்பர் பாட்டி.

என்று உண்டு பின் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்கள்.

பிள்ளைகள் எப்பொழுது எதை கேட்ப்பார்கள் என்பது எவராலும் கணிக்க முடியாத ஒன்றாகும். ஆனால் அதை அழகாக குழந்தை மனம் கோணாமல் லாவகமாக கையாண்டு சாபாஷ் வாங்குவதில் பாட்டிகளை மிஞ்ச யாரும் இல்லை.

சுதந்திரம் வேண்டும் 

சுதந்திரம் வேண்டும்

சுதந்திரம் பெற்று எழுபத்தி மூன்று ஆண்டுகளுக்கு பின்பும்

சுதந்திரம் வேண்டும் 

சுதந்திரம் வேண்டும் 

தியாகிகள் பெற்றுத்தந்த சுதந்திரத்தை

தினமும் எண்ணாவிட்டாலும் அது பெற்ற

தினத்திலாவது எண்ணிப்பாருங்கள்

திடீரென கிடைத்ததல்ல என்பது புரியும்

எத்தனை எத்தனை போராட்டங்கள்

எத்தனை எத்தனை தியாகங்கள்

எத்தனை எத்தனை உயிரிழப்புகள்

எத்தனை எத்தனை இழப்புகள்

அத்தனையையும் சுயநலத்தால்

அத்தனையையும் அதிகாரத்தால்

அத்தனையையும் பணத்தாசையால்

அத்தனையையும் பேராசையால்

அத்தனையையும் ஊழலால்

மெல்ல மெல்ல அழித்து விட்டு 

மெல்ல மெல்ல நமக்கே தெரியாமல்

நம்மவர்களுக்கே அடிமையாகி

பெற்ற சுதந்திரத்தை தாரை வார்த்துவிட்டு

சுதந்திரம் கிடைத்தும் என்ன பயன் 

என்று அலுத்துக் கொள்வதோ

அதற்கு சுதந்திரம் இல்லை

இதற்கு சுதந்திரம் இல்லை 

என போராட்டத்தில் ஈடுபடுவதோ

எந்த விதத்தில் நியாயம்!!!!

முக கவசம் மிக அவசியம்

நம்மை மறைத்து கொள்ள அல்ல

நம்மை காத்து கொள்ள

முக கவசம் மிக அவசியம்

பேசும் போது தெறிக்கும் மழைச்சாரலில்

குடைப்போல செயல்பட

முக கவசம் மிக அவசியம்

நான்கு மாதம் அழகு நிலையம் செல்லாத

அழகிய முகத்தை மறைத்து கொள்ள

முக கவசம் மிக அவசியம்

உதட்டு சாயங்கள் உபயோகிக்காமல்

உதடுகளை பேணி காக்க

முக கவசம் மிக அவசியம்

நமது வாயின் திரைச்சீலையாக இருந்து

துர்நாற்றத்தை மற்றவர்கள் நுகராமல் தடுத்திட

முக கவசம் மிக அவசியம்

நம்முள் தூசி மற்றும் கிருமிகள்

நுழைந்திடாமல் தடுத்திட

முக கவசம் மிக அவசியம்

நமது வாயிற்கதவாக செயல்பட்டு

வார்த்தைகளை அளந்து பேசிட

முக கவசம் மிக அவசியம்

நம்மால் மற்றவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க

முக கவசம் மிக அவசியம்

நச்சுயிர்கள் நம்முள்

நுழைந்திடாமல் தடுத்திட

முக கவசம் மிக அவசியம்

சில நகைச்சுவை காரணங்களுக்காக

எள்ளி நகையாடும் நாம்

எப்படி தலை கவசம் அணிந்து தன்னுயிர் காத்துக்கொள்கிறோமோ

அதே போல் முக கவசம் அணிந்து நுண்ணுயிர் பரவாமல் தடுத்திடுவோம்

விழித்திடுவோம்! விழித்திருப்போம்!

நம்மையும் நம்மவர்களையும் காத்திடுவோம்.

கண்களுக்கு தெரியாத கொரோனா என்ற நச்சுயிர்

நம்முள் ஊடுருவி

நம் உடல் உறுப்புக்களை தன்வசப்படுத்தி நம்மையே எதிர்க்க செய்து

நம்முயிர் குடிக்க ஆவலாக இருப்பது போல்

கண்களுக்கு நன்றாக தெரிகின்ற மனிதர்கள்

 நம்முடனே பயணிக்கின்றவர்கள்

நச்சுயிரின் பிரதிநிதிகள் போல் பல செயல்களை செவ்வனே செய்து வருகின்றனர்

கொரோனாவிற்கு கூட தடுப்பு மருந்து

கண்டுபிடித்து விடலாம்

மனித கொரோனாக்களை தடுக்க மருந்தேதும் இருந்தால்

மனிதம் காக்கப்படும்.

ஆட்டோ வில் செய்தித்தாள் படித்துக் கொண்டே பயணித்து கொண்டிருந்தவருக்கும் ஆட்டோக்காருக்கும் இடையே நடந்த உரையாடல்

“என்ன சார் நியூஸ் இன்னிக்கு”

“அமைச்சர்களை எல்லாம் பதம் பார்த்த கொரோனா இப்போ நம்ம தலைவரையே பதம் பார்க்க போவுது போல”

“ஏன் சார் தலைவருக்கு மா! வந்துடுச்சு?”

“தெரியலையேப்பா டெஸ்ட் எடுத்திருக்காங்களாம்”

“இருக்கா? போயிடுச்சா? சார்?”

“எத …யாரை… கேக்கறே”

“கொரோனா வ தான் பின்ன தலைவரையா!!!! ச்சசச …ஏன்னா நம்ம ஆளுங்களப்பத்தி நமக்குத்தானே நல்லா தெரியும்…. கொரோனாக்கிட்டயே கம்மிஷன் கேட்டோ இல்ல அதுல அவங்க ஸ்டிக்கர் ஒட்டச்சொல்லியோ துன்புறுத்தி அத தொறத்தி கிறத்தி விட்டுட்டாங்களோனு கேட்டேன்”

“அந்த  வேலைகள் எல்லாம் இதுகிட்ட பலிக்குமா?  கமிஷன் கேட்க வாயை திறந்ததும் வாயிக்குள்ளே போய் குரவலைல அது ஸ்டிக்கர் மாதிரி ஒட்டிக்கொண்டுதுனா அப்பறம் பிரித்தெடுக்கவே முடியாது”

“இத இப்படியும் சொல்லலாமில்ல சார்”

“எப்படி?”

“ஸ்டிக்கர் ஒட்டினவர்களுக்கு  ஸ்டிக்கராலேயே அழிவு னு”

“ஹா ஹா ஹா !!!! சரி வண்டிய அப்படி லெஃப்ட் ல நிறுத்துப்பா. நான் இறங்கும் இடம் வந்துடுச்சு. நன்றி தம்பி உன் கூட பேசிட்டு வந்ததில் ஆட்டோ பயணத்தில் ஆடாமல் வந்ததுபோல இருந்தது” 

முக கவசம் உன் அழகிய இதழ்களை மறைத்தாலும்

கூரான மூக்கை மறைத்தாலும்

உன் மீன் போன்ற விழிகளை அழகாக எடுத்துக்காட்டுகின்றது

முக கவசமின்றி நீ பேசும் போது

உன்  மூக்கும் இதழும் என் மனதை திசைதிருப்பும்

முக கவசத்துடன் நீ பேசும் போது

கவனச்சிதறலின்றி கண்களை மட்டும் காண்கிறேன்

ஆஹா அதில் தான் எவ்வளவு உணர்வுகள்உன் மனதினை உன் கண்களில் படிக்கும்  புதிய மாணவனானேன்

கடவுள் உண்டு என்பார் பலர்

கடவுள் இல்லை என்பார் சிலர்

கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும் என்பார் பகுத்தறிவாளர்

நாமே கடவுள் என்பார் படிப்பாளர்

ஒரு திரைப்படத்தை அல்லது நிறுவனத்தை இயக்க இயக்குனர் தேவை எனும்போது

இந்த பரபஞ்சத்தை இயக்க இயக்குனர்  தேவை இல்லையா!

விஞ்ஞானம் என்பார் விஞ்ஞானிகள்

அறிவியல் என்பார் அறிவாளிகள்

இவ்விரண்டும் இயங்குவது யாராலே?

நமக்கும் மேல் ஓர் சக்தி நம்மை இயக்குகிறது

எல்லாமும் அதுவே

இதை நாம் உணர்ந்தால்

உண்டு, இல்லை, இருந்தால், நாமே என்ற விவாதங்களும் வித்தியாசங்களும் எழாது

வானவில்லின் ஏழு நிறங்களை ரசிக்கிறார்கள்

வண்ணமயமான மலர்களை கண்டு புத்துணர்வு பெறுகிறார்கள்

வண்ணத்துப்பூச்சிகளின் வண்ணங்களில் மெய்சிலிர்க்கிறார்கள்

உடைகளை பல வண்ணங்களில் உடுத்தி மகிழ்கிறார்கள்

மனிதர்களிலும் உண்டு பல நிறத்தவர்கள்

இதை ஏன் ஏற்க மறுக்கிறது சில உள்ளங்கள்

மனகண்களை திறந்து வைப்போம்

அனைத்து நிறங்களையும் ரசிப்போம்

கூட இருப்பவரை தாழ்த்தி

தன்னை உயர்த்தி

மற்றவரை வீழ்த்தி

தன்னை நிலைநிறுத்தி

வாழும் வீரர்களின் வெற்றியானது

எந்த உயரத்தையும் எட்டாது

என்றும் நிலைத்தும் இருக்காது

நமது தமிழ், நமது மொழி. மூன்றாம் பகுதி உங்களுக்காக ….

தமிழ் மொழி சாதாரணமாக ஒரு மொழியின் பெயர் மட்டுமல்ல.. அதற்கு அழகு, இனிமை, அமுது என்றெல்லாம் அர்த்தம் உள்ளது. தமிழை தனித்தன்மை வாய்ந்த மிருதுவான அமிழ்தம் என்றும் கூறுவர். தம்+இழ் தமது உடைமை என்றும் பொருள் கூறியுள்ளனர். தம்+இதழ்+மொழி தமிதழ் மொழி பின்னர் தமிழ் மொழி ஆனது என்றும் சிலர் கருதுகின்றனர்.

எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது. இந்த எழுத்து வரக் கூடிய எந்தச்சொல்லும் பெரும்பாலும் அழகையும் , இனிமையையும் குறிப்பதகாவே இருக்கிறது. உதாரணத்திற்கு மழலை,குழல்,அழகு,குழந்தை,கழல்,நிழல்,பழம்,யாழ் இப்படி ‘ழ’வருகிற எல்லாமே நமக்கு விருப்பமானவை அல்லது பிடித்தவைகளே. ஆகவே இனிமையான ‘ழ’வைத் தன்னுள்ளே உடையது ‘தமிழ்’ (தமி+ழ்) என்பதும் ஒரு அழகான விளக்கமாக எனக்குப்பட்டதால் பகிர்ந்துள்ளேன்.

இனிமையான தமிழின் “ழ”கரம் வேறு எந்த மொழியிலும் இல்லை. அப்படியே இருந்தாலும் அது நமது மொழியிலிருந்து பெற்றவையாகும். இப்படி தனித்துவம் வாய்ந்த தமிழ் மொழி நமக்கு தெரியும் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

“ழ” என்ற எழத்தும், உச்சரிப்பும் நமக்கே உரித்தானது. இனி ஆங்கிலத்திலும் “Tamizh” என்றே நாம் எழுத பழக்கப்படுத்திக்கொள்வோம். இவ்வளவு பெருமைக்குரிய “ழ” வை “ல” என்று உச்சரிக்கும்போது எனது நெஞ்சுப் பொறுக்குதில்லையே….என்று பாரதி போல் சொல்ல தோன்றுகிறது.

அழை என்பதை அலை என்றால்
உழு என்பதை உளு என்றால்
எழு என்பதை எலு என்றால்
கழகம் என்பதை கலகம் என்றால்
கிழி என்பதை கிலி என்றால்
தமிழுக்கே “கிலி” பிடிக்கும்.

அலகும் அழகு
அளகும் அழகு
ஆனால் உண்மையான “அழகு” தமிழை அழகாக உச்சரிப்பதில் உள்ளது.
எனவே அழகு ..அலகு அல்லது அளகு ஆகவும் வேண்டாம்
தமிழ் ..தமில் ஆகவும் அனுமதிக்க வேண்டாம்.

“தமிழ் என்பது அழகு
அதை அழகாக உச்சரிக்க பழகு”

கற்போம்!!! கற்பிப்போம்!!!! வாரீர்…

வலைப்பதிவு வாசகர்களுக்கு எனது முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்களும், தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும், தமிழ் பண்பாடும் எங்கெல்லாம் எவ்வாறெல்லாம்பயணித்துள்ளனர்/பயணித்துள்ளது என்பதை பற்றி போனபதிவில் எனக்கு தெரிந்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். அதற்கு  விருப்பம் மற்றும் பாராட்டு தெறிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நான் படித்து, கேட்டு, தெரிந்து கொண்ட நம் தமிழ் மொழியின் சுவாரசியமான விஷயங்களின் இரண்டாம் பகுதி இதோ உங்களுக்காக.  

உலகில் மிக பழமையான மொழிகளில் ஒன்று நமது தமிழ். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  அடிச்சநல்லூர் தொல்பொருள் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் படி பார்த்தால் நம் மொழி சுமார் கி.மு 500 வருடங்களுக்கு முன் தோன்றியது என்றால் ஆச்சர்யம் தொற்றிக்கொள்ளாதா என்ன!!!! கி.மு காலத்தில் வழக்கத்தில் இருந்திருந்தாலும் இன்றும் ஜீவித்திருக்கும் பழமையான மொழி நமது தமிழ் மொழியே. ஆதியில் தோன்றினாலும் மாய்ந்து போகாமல் இன்றும் உலகளவில் பேசப்படும் மொழியாக தமிழ் திகழ்வதில் ஒவ்வொரு தமிழரும் தோள் தட்டி கொள்வோம்.

அறிஞர்கள் தமிழ் மொழியை மூன்று காலக்கட்டங்களாக பிரித்துள்ளனர். பழைய தமிழ் (கிமு 300 – கிபி 700), இடைக்கால தமிழ் (700 – 1600) மற்றும் நவீன தமிழ் (1600 – இன்றுவரை) 

ஒரு கடவுளாக உருவகப்படுத்தப்பட்ட ஒரே மொழி நமது தமிழ் மொழி. அக்கடவுளை தமிழ் தாய் என்று அழைப்பர். தமிழ் தாய் கோயில் தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அமைந்துள்ளது. தமிழ்த்தாய்க் கோயிலின்  பரிவார தெய்வங்களாக,  வள்ளுவரும், இளங்கோவடிகளும், கம்பரும் தனி விமானம் கொண்டு காட்சி தருகின்றனர். தமிழ்த்தாய்க் கோயிலின் நுழைவாயிலின் முன் துவார பாலகிகளாக ஒலித்தாய், வரித்தாய் நிறுவப் பெற்றிருக்கின்றனர். ஒரு மொழிக்கு முக்கியமான ஒலி மற்றும் வரி துவார பாலகிகளாக …ஆகா விவரிக்க வார்த்தைகள் இல்லாமல் நின்றேன்….என்ன அருமையான அமைப்பு. கருவறையில் தமிழ்த்தாயின் வலப்புறம் அகத்தியரும், இடப்புறம் தொல்காப்பியரும் நின்ற நிலையில் விளங்குகின்றனர்.  தமிழ்த்தாய் நான்கு கைகளுடன் தாமரைப் பீடத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கின்றாள். சேர, சோழ, பாண்டியர்களான மூவேந்தர்களின் தமிழ்ப்பற்றை உணர்த்தும் வகையில் அவர்களின் சின்னங்களான வில், புலி, மீன் ஆகியவை தமிழ்த்தாயின் பின்புறம் உள்ள திருவாச்சியில் பொறிக்கப்பட்டுள்ளன. மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ் தாய் வாழ்த்து தமிழ் தாயான நமது தமிழ் மொழியை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமைந்திருக்கும். இப்பாடல் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.  வேறு எந்த மொழிக்காவது இந்த சிறப்புகள் இருக்கிறதா?

நம் மொழியின் சிறப்புகள் என்னை முற்றுப்புள்ளி வைக்க தடை செய்வதனால் மீண்டும் அடுத்த பதிவில் நம் மொழியின் இன்னும் பல சுவாரசியமான தகவல்களுடன் சந்திப்போம். வாழ்க தமிழ்!!