சுதந்திரம் வேண்டும் 

சுதந்திரம் வேண்டும்

சுதந்திரம் பெற்று எழுபத்தி மூன்று ஆண்டுகளுக்கு பின்பும்

சுதந்திரம் வேண்டும் 

சுதந்திரம் வேண்டும் 

தியாகிகள் பெற்றுத்தந்த சுதந்திரத்தை

தினமும் எண்ணாவிட்டாலும் அது பெற்ற

தினத்திலாவது எண்ணிப்பாருங்கள்

திடீரென கிடைத்ததல்ல என்பது புரியும்

எத்தனை எத்தனை போராட்டங்கள்

எத்தனை எத்தனை தியாகங்கள்

எத்தனை எத்தனை உயிரிழப்புகள்

எத்தனை எத்தனை இழப்புகள்

அத்தனையையும் சுயநலத்தால்

அத்தனையையும் அதிகாரத்தால்

அத்தனையையும் பணத்தாசையால்

அத்தனையையும் பேராசையால்

அத்தனையையும் ஊழலால்

மெல்ல மெல்ல அழித்து விட்டு 

மெல்ல மெல்ல நமக்கே தெரியாமல்

நம்மவர்களுக்கே அடிமையாகி

பெற்ற சுதந்திரத்தை தாரை வார்த்துவிட்டு

சுதந்திரம் கிடைத்தும் என்ன பயன் 

என்று அலுத்துக் கொள்வதோ

அதற்கு சுதந்திரம் இல்லை

இதற்கு சுதந்திரம் இல்லை 

என போராட்டத்தில் ஈடுபடுவதோ

எந்த விதத்தில் நியாயம்!!!!

முக கவசம் மிக அவசியம்

நம்மை மறைத்து கொள்ள அல்ல

நம்மை காத்து கொள்ள

முக கவசம் மிக அவசியம்

பேசும் போது தெறிக்கும் மழைச்சாரலில்

குடைப்போல செயல்பட

முக கவசம் மிக அவசியம்

நான்கு மாதம் அழகு நிலையம் செல்லாத

அழகிய முகத்தை மறைத்து கொள்ள

முக கவசம் மிக அவசியம்

உதட்டு சாயங்கள் உபயோகிக்காமல்

உதடுகளை பேணி காக்க

முக கவசம் மிக அவசியம்

நமது வாயின் திரைச்சீலையாக இருந்து

துர்நாற்றத்தை மற்றவர்கள் நுகராமல் தடுத்திட

முக கவசம் மிக அவசியம்

நம்முள் தூசி மற்றும் கிருமிகள்

நுழைந்திடாமல் தடுத்திட

முக கவசம் மிக அவசியம்

நமது வாயிற்கதவாக செயல்பட்டு

வார்த்தைகளை அளந்து பேசிட

முக கவசம் மிக அவசியம்

நம்மால் மற்றவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க

முக கவசம் மிக அவசியம்

நச்சுயிர்கள் நம்முள்

நுழைந்திடாமல் தடுத்திட

முக கவசம் மிக அவசியம்

சில நகைச்சுவை காரணங்களுக்காக

எள்ளி நகையாடும் நாம்

எப்படி தலை கவசம் அணிந்து தன்னுயிர் காத்துக்கொள்கிறோமோ

அதே போல் முக கவசம் அணிந்து நுண்ணுயிர் பரவாமல் தடுத்திடுவோம்

விழித்திடுவோம்! விழித்திருப்போம்!

நம்மையும் நம்மவர்களையும் காத்திடுவோம்.

கண்களுக்கு தெரியாத கொரோனா என்ற நச்சுயிர்

நம்முள் ஊடுருவி

நம் உடல் உறுப்புக்களை தன்வசப்படுத்தி நம்மையே எதிர்க்க செய்து

நம்முயிர் குடிக்க ஆவலாக இருப்பது போல்

கண்களுக்கு நன்றாக தெரிகின்ற மனிதர்கள்

 நம்முடனே பயணிக்கின்றவர்கள்

நச்சுயிரின் பிரதிநிதிகள் போல் பல செயல்களை செவ்வனே செய்து வருகின்றனர்

கொரோனாவிற்கு கூட தடுப்பு மருந்து

கண்டுபிடித்து விடலாம்

மனித கொரோனாக்களை தடுக்க மருந்தேதும் இருந்தால்

மனிதம் காக்கப்படும்.

ஒரே கல்லூரியில் படித்த தோழிகள் ஒரு வாட்ஸ்அப் குழு அமைத்து அதற்கு பி.ஏ ’98 என பெயர் சூட்டினர். அதில் ஆரம்பத்தில் அவர்கள் பல விஷயங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார்கள். நாட்கள் போக போக குழு அமைதி பூங்காவனமாக மாறியது. யாரும் எதுவும் பகிந்துக் கொள்ளவில்லை.

இப்படி அமைதி நிலவிக்கொண்டிருந்த நேரத்தில் ஒருத்தி அவர்கள் கல்லூரியில் அவர்களுடன் படித்த ஐஸ்வர்யாவை  குழுவில் இணைத்தாள். மீண்டும் குழு விருவிருப்பானது. அனைவரும் ஒருவரையொருவர் அறிமுகம் செய்வதில் தொடங்கி அவர்கள் இன்று என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் வரை அனைத்தும் பகிரந்துக்கொள்ளப்பட்டது. பழைய நினைவுகளில் சில மாதம் ஓடியது பின் மீண்டும் குழு அமைதியானது.

இவ்வாறு புது தோழிகள் சேர்க்கப்படும் போதெல்லாம் குழு விழித்துக்கொள்ளும். குழுவினரும் சோம்பல் முறித்துக்கொண்டு ஒரு ஹாயில் ஆரம்பித்து விசாரிப்புகளும் புகைப்படங்களும் சரமாரியாக பதிப்பிக்கப்படும்  பின் மீண்டும் கும்பகர்ணன் போல நீண்ட கால உறக்கத்தில் ஆழ்ந்துவிடும். 

குழுவில் யாராவது அந்த குழுவில் இல்லாத பழைய தோழியை இணைக்கும் பொழுது யார் ? எவர் ? என்ற விவரங்களை முன்னுரையாக கொடுப்பது வாட்ஸ்அப் குழுவின் சம்பிரதாயம். இது பல குழுக்களில் இணைந்துள்ள நாம் அனைவரும் அறிந்த சடங்காகும். இந்த சடங்கை கடைப்பிடிக்காமல் ஒருவரை நாம் இணைத்துவிட்டோமே என்றால் பாவம் அந்த புது நபர்

 “ஹாய் நான் தான் வள்ளி” 

என தொடங்கி 

என்ன ஞாபகம் இருக்கா?

 என தன்னைத்தானே அறிமுகம் செய்துக்கொள்ள வேண்டிவரும். மேலும் அவர்கள் கல்லூரி ஃபேர்வெலில்  கடைசியாக பார்த்திருப்பார்கள் சில பேருக்கு பெயரைக் கேட்டாலே யார் என்று விளங்கி விடும் சகஜமாக உறையாட தொடங்கி விடுவார்கள் ஆனால் பலருக்கு யாரென்று ஞாபகம் இருக்காது அதனால் 

யார்? எந்த செக்ஷன் ? எந்த பென்ச்? எந்த பஸ்ஸில் கல்லூரிக்கு வருவாய்? 

என பல கேள்விகள் கேட்டு அதற்கான விடையை வைத்து இன்னார் என யூகிக்க முயல்வார்கள்.

இவ்வாறு இந்த பி‌.ஏ’98 குழுவில் பூமிகா எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஒருவரை முன்னுரை ஏதுமின்றி இணைத்தாள்….அவரும் சில நேரம் பூமிகா இன்ட்ரோ செய்வதற்காக  பொருத்திருந்து பின் அவரே ஆரம்பித்தார்…

ஹாய் எவ்விரிஒன் ஹவ் ஆர் யூ ஆல்? ஹோப் யூ ஆல் ஆர் சேஃப்.

லதா: ஹாய் வெல்க்கம். மே ஐ நோ யுவர் நேம்.

வனஜா: ஹாய் உன் பொரோஃபைல் போட்டோவ பார்த்தா…. நீ எங்க செக்ஷன்ல தான் இருந்தனு நினைக்கிறேன்? இஸ் யுவர் நேம் வள்ளி?

கிரிஜா: ஹாய் நீ என்னோட பஸ்ஸில் தானே வருவ?

ரமா: ஹாய் யூ வேர் தி ஒன் ஹூ பிரிங் எக் ரைஸ் ? வாவ் அதோட வாசம் இன்னும் இருக்குப்பா..

பிரியங்கா: ஹே ரமா இது அவ இல்லடி அது நம்ம ரோஸி. இவ நாமகூட  ஐஸ்கிரீம் சாப்பிட வந்துட்டு விலைய பார்த்ததும் தண்ணியை குடிச்சிட்டு வந்தாளே அவ தான்…ஆனா ….பேரு மட்டும் ஞாபகம் வர மாட்டேங்குது…

 மது: ஹேய் பிரி ….தட் இஸ் மீனு …மா..இவ இல்ல. இவள பார்த்தா மாதிரி இருக்கு ஆனா நீ சொல்லர மாதிரி பேரு மட்டும் ஞாபகம் இல்லமா.

வள்ளி: ஹே யாருப்பா ஆட் பண்ணினா ?

லல்லு: நம்ம பூமி தான்.

கலையரசி: ப்ளீஸ்ப்பா ஆட் பண்ணும்போது இன்ட்ரோவும் குடுங்கப்பா…

பார்கவி: அதுதானே…. லல்லு இவள நம்ம லிட் …கிலாஸ்ல பார்த்திருக்கோம்னு நினைக்கிறேன்…

பிரஸீ: எனக்கும் நல்லா பழக்கமானவ மாதிரி தான் இருக்கு. 

மாதவி: ஹே! நியூ கம்மர்… வை டோன்ட் யூ இன்ட்ரோ யுவர் செல்ஃப்? நாங்க எல்லாரும் இப்படி கெஸ்ஸிங் கேம் விளையாடாமா இருப்போம்ல…

மைதிலி: யாருப்பா அந்த மர்ம நபர் நம்ம குரூப்ல…ஏய் பூமி சொல்லேன்டி…

ரம்பா: ரொம்ப நாளா தூங்கிட்டு இருந்த நம்ம குரூப் முழிச்சுடுச்சுனு சந்தோஷப்படரதா இல்ல “யார் நீ” னு கேட்டுட்டே இருக்கறதா…

மனோன்மணி: ஏன்மா புதுசா இணைந்த புண்ணியவதி… பூமி தான் ஏதோ பிஸியா இருக்காப்போல நீயாவது உன்னைப்பத்தி சொல்லலாம்ல…

பூமிகா: ஹலோ கேர்ள்ஸ் என்னப்பா இது?? எல்லாருமா மறந்துட்டிங்க? நான் முன்னுரை கொடுத்திருக்கவேண்டும் அனைவரும் மன்னிக்கவும். 

நான் ஒரு ஹாய் சொன்னா எப்பவாவது உடனே பதில் சொல்லிருக்கீங்களா ? இன்னிக்குனு ஒரு அஞ்சு நிமிஷத்துல இவ்வளவு மெஸேஜஸ்ஸா!!!! 

நான் ஆட் பண்ணியது நம்ம இங்கிலீஷ் பொரொஃபஸர் மிஸ் லில்லி. அம் எக்ஸ்டிரீம்லி சாரி மேம். நான் இன்ட்ரோ கொடுக்க கொஞ்சம் லேட் ஆனது இவ்வளோ விபரீதமாகும்னு நினைக்கலை. ஸோ சாரி. 

என்ற பூமிகா வின் மெஸேஜ்க்கு பிறகு சற்று அமைதி நிலவியது. பின் குழுவில் ஒரே சாரி மெஸேஜஸாக பொழிந்தது.  அதற்கு அவர்கள் லில்லி மேம் “இட்ஸ் ஓகே” என்று  பதிலளித்தும் மீண்டும் சாரி என்று பலர் கூற அதற்கு அவர் பதில்….

லில்லி மேம்: ஹாய் கேர்ள்ஸ் ஏன் எல்லாரும் சாரியை மாரியாய் பொழிகிறீர்கள்? நீங்கள் எல்லோரும் நான் பார்த்து வளர்ந்த என் பிள்ளைகள். உங்கள் அனைவரையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்க்கை எனும்  ஓடு களத்தில் நீங்கள்  அனைவரும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறீர்கள் ஆனால்  எனது வாழ்க்கை நிதானமாகிவிட்டது. 

மறதி என்பது எல்லோருக்கும் வரக்கூடியது தான் அதில் எந்த தவறும் இல்லை ஆனால் நீங்கள் இதிலுள்ள முகியமான பாடத்தை கவனிக்காமல் விட நான் அனுமதிக்க மாட்டேன்.

என்னடா இந்த மேம் இத்தனை வருஷத்துக்கப்புறமும் க்ளாஸ் எடுக்க வந்துட்டாங்கனு நீங்க நினைத்தாலும் பரவாயில்லை, உங்களுக்கு இது என்றாவது உதவாமல் போகாது. வாழ்வில் ……

“எது நடந்தாலும் வேய்ட் ஃபார் அ வைல். டு நாட் ஜம்ப் டூ ரெஸ்பான்ட் ஆர் ரியாக்ட்.”

தினமும் ஏதாவது மெஸேஜஸ் பகிர்ந்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் விஷ் செய்துக் கொள்ளுங்கள்.  ஓகே கேர்ள்ஸ்👍  லவ் யூ ஆல். இதுதான் எனது அலைபேசி எண் அனைவரும் சேமித்து வைத்துக்கொள்ளவும். 

நானும் உங்கள் அனைவருடனும் தொடர்பில் இருப்பேன். எனது நம்பர் உங்கள் அனைவரிடமும் இருப்பதால் உங்களுக்கு எப்போ வேண்டுமானாலும் என்னை அழைத்து உறையாடலாம். சிநேகிதிகளான உங்களுக்குள் டிஸ்கஷன்ஸ் நிறைய இருக்கும் ஸோ ஐ திங்க் ஐ ஷுட் லீவ் திஸ் குரூப்.  நோ ஹார்டு ஃபீலிங்க்ஸ். இட் வாஸ் ஸோ நைஸ் டு ரீட் ஆல் யுவர் மெஸேஜஸ். பை ஆல். டேக் கேர் அன்ட் பி சேஃப் ஆல் ஆஃப் யூ. 

என்று கூறி லில்லி டிச்சர் குழுவை விட்டு வெளியேற மீண்டும் அமைதி நிலவியது..‌. ஆனால் குழுவில் மாற்றங்கள் சில நேர்ந்தது. அன்றிலிருந்து இன்றுவரை அவர்கள் குழு எந்த நாளும் ஒரு மெஸேஜ் கூட இல்லாமல் இருந்ததே இல்லை. குழு நிதானமாக செயல்பட தொடங்கியது. பல கும்பகர்ணிகளை தட்டி எழுப்பி செயல்பட வைத்த லில்லி மேமுடன் “வீ லவ் லில்லி மேம்” என மற்றுமொரு குழு ஆரம்பிக்கப்பட்டது.

❤️முற்றும்❤️

ஆட்டோ வில் செய்தித்தாள் படித்துக் கொண்டே பயணித்து கொண்டிருந்தவருக்கும் ஆட்டோக்காருக்கும் இடையே நடந்த உரையாடல்

“என்ன சார் நியூஸ் இன்னிக்கு”

“அமைச்சர்களை எல்லாம் பதம் பார்த்த கொரோனா இப்போ நம்ம தலைவரையே பதம் பார்க்க போவுது போல”

“ஏன் சார் தலைவருக்கு மா! வந்துடுச்சு?”

“தெரியலையேப்பா டெஸ்ட் எடுத்திருக்காங்களாம்”

“இருக்கா? போயிடுச்சா? சார்?”

“எத …யாரை… கேக்கறே”

“கொரோனா வ தான் பின்ன தலைவரையா!!!! ச்சசச …ஏன்னா நம்ம ஆளுங்களப்பத்தி நமக்குத்தானே நல்லா தெரியும்…. கொரோனாக்கிட்டயே கம்மிஷன் கேட்டோ இல்ல அதுல அவங்க ஸ்டிக்கர் ஒட்டச்சொல்லியோ துன்புறுத்தி அத தொறத்தி கிறத்தி விட்டுட்டாங்களோனு கேட்டேன்”

“அந்த  வேலைகள் எல்லாம் இதுகிட்ட பலிக்குமா?  கமிஷன் கேட்க வாயை திறந்ததும் வாயிக்குள்ளே போய் குரவலைல அது ஸ்டிக்கர் மாதிரி ஒட்டிக்கொண்டுதுனா அப்பறம் பிரித்தெடுக்கவே முடியாது”

“இத இப்படியும் சொல்லலாமில்ல சார்”

“எப்படி?”

“ஸ்டிக்கர் ஒட்டினவர்களுக்கு  ஸ்டிக்கராலேயே அழிவு னு”

“ஹா ஹா ஹா !!!! சரி வண்டிய அப்படி லெஃப்ட் ல நிறுத்துப்பா. நான் இறங்கும் இடம் வந்துடுச்சு. நன்றி தம்பி உன் கூட பேசிட்டு வந்ததில் ஆட்டோ பயணத்தில் ஆடாமல் வந்ததுபோல இருந்தது” 

வேனு என்கிற வேனுகாந்தன் நமது இந்திய தலைநகரில் உள்ள ஓர் பிரபலமான கல்லூரியில் படிக்க ஆசைப்பட்டு அதற்காக நன்றாக படித்து பல பரீட்சைகளில் முழு மதிப்பெண்கள் பெற்று. அதில் சேருவதற்காக விண்ணப்பித்து அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டதிற்கான பதில் மின் அஞ்சலுக்காக காத்திருந்தான். அவனின் கடின உழைப்பும், நம்பிக்கையும் வீணாகவில்லை. அவன் விரும்பி எதிர்ப்பார்த்த கல்லூரியிலேயே  அவனுக்கு ஓர் இடம் கிடைத்தது. 

தந்தை சேகர் ஒரு தனியார் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். தாய் வள்ளியம்மை இல்லத்தரசி. தங்கை மீனு ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். இவர்கள் திண்டுக்கல்லில் வசித்து வருகின்றனர். சேகரின் சம்பாத்தியத்தில் தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. சேகரும், வள்ளியம்மையும் தங்கள் பிள்ளைகளுக்கு எந்த ஒரு கஷ்ட்டமும் தெரியாதவாறு வளர்த்து வந்தனர். வேனுவும், மீனுவும்  பெற்றவர்களின் நிலையை அறிந்து அதற்கேற்ப அனாவசியமாக எந்த செலவுகளும் செய்யாமல் நல்ல பொறுப்புள்ள  பிள்ளைகளாகவே இருந்தனர். 

வேனுவிற்கு சிறந்த கல்லூரியில் இடம் கிடைத்ததில் சேகருக்கும், வள்ளியம்மைக்கும் சந்தோஷமும் பெருமிதமும் இருந்தாலும் கல்லூரி செலவுகளுக்கான பணத்தை எப்படி புரட்டுவது என்ற கவலையும் கூடவே தொற்றியது. பிள்ளையின் கனவை கலைக்க அவர்களுக்கு மனமில்லை. அதற்காக அவன் எவ்வளவு முயற்சி எடுத்துள்ளான் என்பது அவர்கள் நன்கு அறிந்தவர்களாயிற்றே!!!!வேனு தனது தந்தையின் பாரத்தை குறைக்க எண்ணி கல்லூரி ஃபீஸ் மட்டும் தந்தையை தருமாறும் மற்ற இதர செலவுகளை எல்லாம் தான் ஏதாவது வேலைப்பார்த்து சம்மாளித்துக்கொள்வதாகவும் கூறினான். சேகருக்கு சற்று வருத்தமாகவே இருந்தாலும் அரை மனதுடன் சம்மதித்தார். 

அவன் பயணிப்பதற்கு வேண்டியதை எல்லாம் வள்ளியம்மை செய்து கொடுத்தாள். பதினேழே வயதான தனது மகன் எப்படி தனியாக தெரியாத ஊரில் சென்று இருக்கப்போகிறானோ என்ற பதற்றமும், அச்சமும் இருந்தாலும் வெளிக்காட்டிக்கொண்டால் மகனின் மனது கஷ்ட்டப்படுமே என்று எண்ணி அதை மனதிற்குள் பூட்டி வைத்தாள் மகனின் ஆசையை நிறைவேற்ற.

வேனுவின் அறிவுக்கான தேடல் அவனை புதுதில்லி கொண்டு சென்றது. தனது குடும்பத்தை பிரிந்து வந்ததில் அவனுக்கும் சற்று வருத்தமாக தான் இருந்தது ஆனாலும் படிப்பு மீதிருந்த ஆர்வம் அவனை சமாதானம் செய்தது. 

வீட்டில் எந்த வேலையும் செய்யாத வேனு கல்லூரி அருகே ஓர் உணவகத்தில் வேலைப்பார்த்துக்கொண்டே படிக்கலானான்.  சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அருகே இருக்கும் ஒரு டியூஷன் சென்ட்டரில் சென்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து தன் செலவுகளுகானதை ஓரளவு மாதாமாதம் தேற்றினான். முதல் அரை ஆண்டு விடுமுறை டிசம்பர் மாதம் வந்தது. தனது எல்லா நண்பர்களும் விடுமுறைக்கு அவரவர் ஊர்களுக்கு சென்றனர். வேனுவிற்கும் தனது குடும்பத்தினரை பார்க்க, அம்மா கையால் உணவருந்த ஆசைதான் ஆனால் ஒரு பதினைந்து நாட்களுக்காக அதுவும் பயணத்திலேயே போக மூன்று வர மூன்று என்று ஆறு நாட்கள் போய்விடும்…ஏன் அவ்வளவு செலவு செய்யவேண்டும் அந்த பணமிருந்தால் அடுத்த ஒரு மாதத்திற்கான செலவுக்கு உதவும் என்று போகாமல் கல்லூரி விடுதியிலேயே தனியாக இருந்தான். 

அவனைப்போல் இன்னும் சிலர் இருப்பதைப் பார்த்து சந்தோஷப்பட்டான். அவர்களுடன் உரையாடி அவர்களைப்பற்றி அறிந்துக்கொண்டான். அப்பா, அம்மா, தங்கையுடன் தினமும் சிறிது  நேரமே பேசினாலும் வேனுவிற்கு அன்று முழுவதும்  ரீச்சார்ஜ்  ஆனதுப்போலிருக்கும்.  அவன் அங்கு தனிமையிலிருப்பதை வீட்டினருடன் பகிர்ந்தால் அவர்கள் சங்கடப்படுவார்கள் என்று கூறாமல் மறைத்தான். அந்த தனிமை அவனுக்கு நிறைய கற்றுக்கொடுத்தது.

மீண்டும் ஜனவரியில் கல்லூரி திறந்தது தனது நண்பர்களைப்பார்த்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தான் வேனு. மறுபடியும் படிப்பு வேலை என்று வாழ்க்கை நகர ஆரம்பித்தது. பிப்ரவரி மாத கடைசியில் எல்லா நாடுகளிலும் ஒரு வைரஸ் பரவுவதாகவும் அதனால் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவு போட்டதாகவும் செய்திகள் வரத்தொடங்கின. இந்தியாவிலும் இது நிகழும் என்பதை வேனு எதிர்ப்பார்க்கவில்லை.  கல்லூரி அவர்கள் மாணவர்கள் அனைவருக்கும் ஓர் மின் அஞ்சல் அனுப்பியது.  டங் என்று வேனுவின் அலைபேசி சப்தம் எழுப்பியது. அந்த கடிதத்தை படித்ததும் வேனுவிற்கு தூக்கி வாரிப்போட்டது. ஏனென்றால் காலவரையின்றி கல்லூரி முடப்போவதாகவும், வகுப்புகள் அனைத்தும் இணையதளம் மூலம் நடைபெறும் என்றும் அனைவரும் கல்லூரி விடுதிகளை காலி செய்யுமாறு மாணவர்களிடம் கல்லூரி கேட்டுக்கொண்டுள்ளது. 

நிலவரத்தை செய்தித்தாள்களிளும், தொலைக்காட்சி செய்திகளிளும் தெரிந்துக்கொண்ட சேகரும், வள்ளியம்மையும் துடித்துப்போனார்கள்.  உடனே எப்படியாவது கிளம்பி வரச்சொல்லி வேனுவிடம் கூறினார்கள்.

ஆனால் வேனு ஒரு முடிவெடுப்பதற்குள் அனைத்து போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டது. நாடே ஸ்தம்பித்தது. நண்பர்களை அவர்கள் வீடுகளிலிருந்து கார்கள் வந்து அழைத்துச்சென்றது. அதில் ஒரு நண்பன் வேனுவை தன்னுடன் வருமாறு கூறினான். எத்தனை நாள் நண்பன் வீட்டில் தங்குவது என்று எண்ணி மறுத்துவிட்டான் வேனு. தான் எங்கு செல்வது எங்கே தங்குவது என்ன செய்வது என்று பல கேள்விகள் அவனுள் உதித்தது. 

பெட்டியுடன் கல்லூரிக்கு வெளியே வந்தவன் ஒரு சுவரொட்டியைப்பார்த்தான். அதில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துமனைக்கு தன்னார்வத் தொண்டர்கள் தேவை இருக்க இடம் மற்றும் உணவு வழங்கப்படும் என்று அச்சிடப்பட்டிருந்தது.  மனதிற்குள் ஒரு தெம்பு வந்தது வேனுவிற்கு. நேராக அதில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்றான். ஓர் நேர்காணல் நடந்தது. வேனு அதில் தேரச்சிப்பெற்று தனது சேவையை தொடங்கினான். அங்கு பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்தான். பணம் படைத்த தனவான்கள் பலர் முன் வந்து உதவுவதைப்பார்த்து தானும் நாளை படித்து பெரிய ஆளாகி இப்படி நம்மால் முடிந்ததை மக்களுக்கு செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்தான். ஒரு நச்சுயிரின் வெறியாட்டத்தை தன் கண்களால் காண நேர்ந்தது வேனுவிற்கு.  அவன் கண்கள் கலங்கின. இரண்டு நாள் உணவும் உட்க்கொள்ளவில்லை. இதை கவனித்த மற்றொரு தன்னார்வ தொண்டர் ஒருவர் வேனுவிடம் ….நன்றாக உணவு அருந்தவில்லை என்றால் பின்பு எப்படி மற்றவர்களுக்கு உதவ முடியும் என்று கூறினார். 

மீண்டும் தன் சேவைகளில் இறங்கினான். இப்படியே இரண்டு மாதங்கள் ஓடியது. ஒரு நாள் மீண்டும் ரெயில் சேவை தொடங்கப்பட்டதாக செய்தி வர வேனு நேராக தன்னார்வத் தொண்டர்கள் தலைவரிடம் சென்று தான் ஊருக்கு போவதற்கு அனுமதிக்கேட்டான்.  அவரும் அவனது இரண்டு மாத சேவைக்கு நன்றி தெரிவித்து பயணத்திற்கு கொஞ்ம் பணமும் கொடுத்து அனுப்பிவைத்தார். இவை அனைத்தையும் தனது தந்தையிடம் கூறி தன் வரவை தெரிவித்தான்.

மனதிற்குள் தனது குடும்பத்தினரை காணப்போகும் சந்தோஷத்தில் வேகமாக நடந்தே ரயில் நிலையம் சென்றான். அங்கு எல்லா ரெயில்களிலும் மக்கள் நிரம்பி வழிந்தனர்.  அவர்கள் எவரும் முககவசம் அணிந்திருக்கவில்லை. எல்லாரும் அவரவர் ஊர்களுக்கு திரும்பும் ஆர்வத்தில் இப்படி கூடிச்சென்றால் அந்த நச்சுயிர் மிக சுலபமாக தன்னினத்தை பெருக்கி விடுமே அதிலிருந்து தப்பித்து அனைவரும் பத்திரமாக குடும்பத்துடன் சேர்ந்திட வேண்டுமே என்று மனதார வேண்டிக்கொண்டு ரயில் ஏறினான் வேனு. 

ரயிலில் ஒரு கட்டிட தொழிலாளியுடனும் அவர் குடும்பத்தினருடனும் உரையாட வாய்ப்பு கிடைத்ததும் அவர்களைப்பற்றியும் அந்த ஊரடங்கினால் அவர்கள் பட்ட வேதனைகளையும் அவர்கள் சொல்லக் கேட்டதும் தனது கஷ்ட்டங்கள் ஓன்றுமே இல்லை என்ற எண்ணம் வேனு மனதில் தோன்றியது.

மூன்று நாட்கள் பயணத்தில் வேனு வெரும் தண்ணீரும், டியும், பிஸ்கெட்டும் உண்டு வந்தான். மூன்றாவது நாள் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறங்கியதும் அவனுள் சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சி பொங்கியது. சேகர் ரயில் நிலையம் வந்து தனது மகனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.

வள்ளியம்மை ஆரத்தி தட்டுடன் வாசலில் அமர்ந்திருந்தாள். சேகரின் வண்டி வந்து நின்றதும் முதலில் வள்ளியம்மையும் மீனுவும் வேனுவிற்கு ஆரத்தி எடுத்தனர் அதற்கு வேனு 

“என்ன போருக்கா போயிட்டு வந்திருக்கேன் ஆரத்தி எல்லாம் எடுக்குறீங்க” என்று நகைத்தான்.

சேகர் : உண்மையிலே இதுவும் ஒரு வகை போர் தாம்பா.  நாங்க பதரின பதரல், பயந்தது, எல்லாம் உனக்கு புரியாதுப்பா. பத்திரமாக திரும்பி வந்திருக்க அதற்கு தான் இந்த ஆரத்தி. வா வா உள்ள போகலாம்.

வள்ளியம்மை: எப்படிப்பா இந்த இரண்டு மாதம் சம்மாளிச்ச? ரொம்ப கஷ்டப்பட்டியோ? ரொம்ப மெலிஞ்சிட்டயே !! சரியா சாப்பிடலயா?? 

சேகர்: அவன் குளிச்சிட்டு வரட்டும் அப்புரம் வெச்சுக்கோ உன் கேள்விகளை…நீ போப்பா குளிச்சிட்டு சாப்பிட வா… முதல்ல பிள்ளைக்கு சாப்பாடு எடுத்து வை வள்ளி.

தனது மாற்று துணி எடுத்துக்கொண்டு குளியலறையை நோக்கி சென்றான். மீனு ஒடிவந்து அண்ணனுக்கு துண்டு கொடுத்தாள். வள்ளியம்மை அடுப்படியிலிருந்து அப்பளம் பொறித்துக்கொண்டே 

“உடுத்திருக்கற துணிகள அப்படியே பக்கெட்டில போட்டூப்பா நான் துவைச்சுக்கறேன்” என்றாள்

குளித்தபின்பு நேராக பூஜை அறைக்கு சென்று விபூதி பூசிக்கொண்டு உணவருந்த குடும்பத்தினருடன் அமர்ந்தான். தனது குடும்பத்தினரின் அன்பிலும், சுட சுட சாதத்தில் அம்மா செய்த சாம்பார் ஊற்றியதும் எழுந்த வாசத்திலும் அவன் கல்லூரி சென்ற நாளிலிருந்து திண்டுக்கல் ரயில் நிலையம் வந்து சேரும் வரை பட்ட அத்தனை கஷ்ட்டங்களும் காணாமல் போனது வேனுவிற்கு. 

அறிவு தாகத்தினால் திண்டுக்கல்லிருந்து தில்லி வரை பயணம் மேற்கொண்டு  பல இன்னல்களுக்கு ஆளாகினாலும் வாழ்க்கை வேனுவிற்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது. சிறு வயதில் நமக்கு நேரும் சிரமங்களையும் கஷ்ட்டங்களையும் பாடங்களாக ஏற்று அதையும் நன்கு படித்து வாழ்க்கை எனும் பல்கலைக்கழகத்தின் பரீட்சையில் தேர்ச்சி பெற்றோமேயானால் நம்மை வெல்ல எவராலும் முடியாது.

❤️முற்றும்❤️

முக கவசம் உன் அழகிய இதழ்களை மறைத்தாலும்

கூரான மூக்கை மறைத்தாலும்

உன் மீன் போன்ற விழிகளை அழகாக எடுத்துக்காட்டுகின்றது

முக கவசமின்றி நீ பேசும் போது

உன்  மூக்கும் இதழும் என் மனதை திசைதிருப்பும்

முக கவசத்துடன் நீ பேசும் போது

கவனச்சிதறலின்றி கண்களை மட்டும் காண்கிறேன்

ஆஹா அதில் தான் எவ்வளவு உணர்வுகள்உன் மனதினை உன் கண்களில் படிக்கும்  புதிய மாணவனானேன்

கடவுள் உண்டு என்பார் பலர்

கடவுள் இல்லை என்பார் சிலர்

கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும் என்பார் பகுத்தறிவாளர்

நாமே கடவுள் என்பார் படிப்பாளர்

ஒரு திரைப்படத்தை அல்லது நிறுவனத்தை இயக்க இயக்குனர் தேவை எனும்போது

இந்த பரபஞ்சத்தை இயக்க இயக்குனர்  தேவை இல்லையா!

விஞ்ஞானம் என்பார் விஞ்ஞானிகள்

அறிவியல் என்பார் அறிவாளிகள்

இவ்விரண்டும் இயங்குவது யாராலே?

நமக்கும் மேல் ஓர் சக்தி நம்மை இயக்குகிறது

எல்லாமும் அதுவே

இதை நாம் உணர்ந்தால்

உண்டு, இல்லை, இருந்தால், நாமே என்ற விவாதங்களும் வித்தியாசங்களும் எழாது

வானவில்லின் ஏழு நிறங்களை ரசிக்கிறார்கள்

வண்ணமயமான மலர்களை கண்டு புத்துணர்வு பெறுகிறார்கள்

வண்ணத்துப்பூச்சிகளின் வண்ணங்களில் மெய்சிலிர்க்கிறார்கள்

உடைகளை பல வண்ணங்களில் உடுத்தி மகிழ்கிறார்கள்

மனிதர்களிலும் உண்டு பல நிறத்தவர்கள்

இதை ஏன் ஏற்க மறுக்கிறது சில உள்ளங்கள்

மனகண்களை திறந்து வைப்போம்

அனைத்து நிறங்களையும் ரசிப்போம்

கூட இருப்பவரை தாழ்த்தி

தன்னை உயர்த்தி

மற்றவரை வீழ்த்தி

தன்னை நிலைநிறுத்தி

வாழும் வீரர்களின் வெற்றியானது

எந்த உயரத்தையும் எட்டாது

என்றும் நிலைத்தும் இருக்காது

பூங்கரை ஒரு அழகான பசுமையான கிராமம். இந்த கிராமம் புலிவனம் எனும் அடர்ந்த காட்டுக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. ஊர் மக்களின் கூற்றுப்படி காட்டிற்குள் புலிகள் நடமாட்டம் அதிகம் இருந்ததால் அப்பெயர் பெற்றது. இவ்வாறு பசுமை செழிப்பான கிராமத்தில் இரு அழகான பெண்கள் வசித்து வந்தார்கள். இருவரும் பக்கத்து வீட்டு காரர்கள் ஆவர். அவர்களில் ஒருத்தியை தவுட்டுபெண் என்றும் இன்னொருத்தியை தகரபெண் என்றும் ஊர் மக்கள் அனைவரும் அழைப்பார்கள். இவர்களுக்கு ஏன் இப்படி ஒர் பெயர் வந்தது? என்று நினைக்க தோன்றுகிறது அல்லவா? வாருங்கள் மக்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

முதலில் தவுட்டுபெண்ணின் பெயர் ரகசியத்தையும் அவள் குடும்பத்தினரையும் தெரிந்து கொள்ளலாம். இவளுக்கு திருமணமாகி 10 வயதில் மகன் இருக்கிறான். அழகான நாம் இருவர் நமக்கொருவர் என்று வாழும் குடும்பம். இவளது கணவன் வேலை காரணமாக வெளியூரில் தங்கிவருகிறான். ஏதாவது விஷேஷ நாட்களுக்கு மற்றும் மாசத்துக்கு ஒரு முறை மட்டுமே வந்து மனைவி மகனுடன் நேரம் செலவிட்டு அடுத்து தான் திரும்பி வரும் வரையில் தேவையான பணத்தை செலவுக்காக மனைவியிடம் கொடுத்து செல்வான். அவளும் சிக்கனமாக இருந்து அதில் சேமித்தும் வந்தாள். அவள் பெரும்பாலும் தவிடு எடுத்து வந்து அதில் தனது வீட்டின் பின்புறம் தோட்டத்திலிருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி அதனுடன் சேர்த்து தேவையான உப்பு மற்றும் தண்ணீர் கலந்து அடை வார்த்து தனது மகனுக்கும் கணவருக்கும் கொடுத்து தானும் உண்டு வந்ததால் அவளை தவுட்டுபெண் என்று ஊர் மக்கள் அழைத்தனர். 

இப்போது தகரபெண்ணின் பெயர் பற்றியும் குடும்பம் பற்றியும் அறிந்துக் கொள்ளலாம். இவளுக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் 10 வயதில் ஒரு மகனும் 5 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். இவளது கணவன் பக்கத்து ஊரில் பணியாற்றி வருகிறான். வாரம் ஒருமுறை வீட்டிற்கு வந்து மனைவி குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு பின் குடும்ப செலவிற்கு பணம் கொடுத்து செல்வான். இவளும் சிக்கனமாக குடும்பம் நடத்தி வாழ்ந்து வந்தாள். கணவன் ஊருக்கு சென்றால் இவள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு காட்டிற்குள் சென்று தகர (திகரை) இலைகளை பறித்து வந்து அதைவைத்து தான் சமையல் செய்வாள். இப்படி தகர இலையை வைத்து சமைத்து வந்ததால் இவளுக்கு தகரபெண் என்ற பெயர் வந்தது. 

ஒரு வழியாக ஊர் மக்களிடம் விசாரித்து பெயர் ரகசியத்தையும் குடும்ப விவரங்களையும் அறிந்துக் கொண்டு விட்டோம். மேலும் கதைக்குள் பயணிக்க தங்களின் இருக்கை வார்ப்பட்டையை அணிந்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்☺️

இப்படியாக இருவரும் அவரவர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் வீட்டில் வேலைகள் அதிகமாக இருந்ததால் தகரபெண் தகர இலையை பறிப்பதற்காக காட்டிற்குள் செல்ல சற்று தாமதமானது அதனால் திரும்பி வருவதற்கும் தாமதமாகலாம் என்று எண்ணி தவுட்டுபெண்ணிடம் பள்ளியிலிருந்து வரும் தன் பிள்ளைகளை தான் வரும்வரை பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு கிளம்பி சென்றாள். அவள் காட்டிற்குள் சென்று இலைகளை தேடி கண்டுப்பிடிப்பதற்கே மாலை நேரம் ஆகிவிட்டது. அது பனிக்காலம் என்பதால் சீக்கிரமே இருட்டியது. எப்பொழுதும் சாப்பாடு கட்டிக்கொண்டு வருபவள் அன்று அவசரத்தில் மறந்துபோனாள். இருளில் எப்படி வந்த வழி மாறாமல் ஊருக்குள் செல்வது என்ற குழப்பத்தில் இருக்கும்போது தூரத்தில் ஒரு ஒளி தெறிந்தது. தகரபெண் அதை நோக்கியபடி நடந்து சென்றால். தான் செல்லும் வழிநெடுக தனது சேலையை சிறிது சிறிதாக கிழித்து கையில் பட்ட செடிகளில் அல்லது மரப்பட்டைகளில் சொருகி வைத்துக்கொண்டே சென்றாள். சேலை தாவணியானது அவள் அந்த ஒளி வந்த இடத்தை சென்றடைவதற்குள். அந்த அடர்ந்த காட்டின் நடுவில் ஒரு அழகான பெரிய வீடு அதன் வாசலில் வைத்திருந்த விளக்கின் வெளிச்சமே நம் தகரபெண் நோக்கி வந்த ஒளி. சற்று பசி, பயம், பதற்றம் ஆகியவற்றுடன் மெல்ல கதவை தட்டினாள். யாரும் திறக்கவில்லை மீண்டும் தட்டினாள் பதில் இல்லை. கடைசியாக ஒருமுறை தட்டிப் பார்ப்போம் பதில் இல்லையெனில் வீட்டு வாசலின் தின்னையில் படுத்துறங்கி காலை விடிந்ததும் வீட்டிற்கு செல்லலாம் என்று எண்ணி கதவைத் தட்ட கையை உயர்த்தினாள் கதவு திறந்தது. 

கதவு திறந்ததும் ஆச்சர்யமானாள் தகரபெண். ஏனெனில் கதவை திறந்தது ஒரு 80 வயது மூதாட்டி. காட்டிற்குள் உள்ள வீட்டில் இவ்வளவு வயதான பாட்டியா! அவர் தனியாக இருக்கிறாரா இல்லை வீட்டினுள் வேறு யாரேனும் இருக்கிறார்களா! அப்படி இருந்தால் அவர்கள் கதவை திறக்காமல் ஏன் இந்த வயதான பாட்டி வரவேண்டும்!!! என்ற பல சந்தேகங்கள் அவள் மனதில் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றியபடி இருக்க “யாரது” என்றாள் பாட்டி. உடனே சுதாரித்துக் கொண்டு தான் யார் என்பதையும் ஏன்?, எப்படி? அங்கு வந்தாள் என்பதையும் சொல்ல தொடங்கியதும் …”உள்ள வந்து உட்கார்ந்து சொல்லுமா. என்னால ரொம்ப நேரம் நிற்க முடியாது” என்றால் பாட்டி. உடனே வீட்டிற்குள் சென்றாள் தகரபெண். வீடு அலங்கோலமாக கிடந்தது ஒரு கெட்ட நாற்றம் வேற….”

தபெ: பாட்டி இந்த காட்டிற்குள் நீங்க தனியாவா இருக்கீங்க?

பாட்டி:  ஆமாம் மா தனியாக தான் இருக்கேன் ஏன் கேக்கறே? சரி என்ன விடு.. இந்த காட்டுக்குள்ள இந்த நேரத்துல உனக்கு என்ன வேலை அத சொல்லு.

தபெ: நடந்தவற்றை எல்லாம் கூறினாள். 

பாட்டி :அச்சச்சோ குழந்தைகள் உன்ன தேடாதோ

தபெ : அதுதான் எனக்கும் வருத்தமா இருக்கு பாட்டி. இதுவரை அவங்களை நான் இப்படி தனியா விட்டு இருந்ததே இல்லை. என் தோழி தவுட்டுபெண் நல்லாதான் பார்த்துப்பா ஆனாலும் மனசு கேட்க மாட்டேங்குது. உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்??

பாட்டி: எனக்கு யாரும் இல்லை மா. நான் தனி ஆளாக தான் இந்த காட்டுக்குள்ள பல வருஷங்களா இருந்துட்டு இருக்கேன். இந்த காடு தான் எனக்கு எல்லா உறவுகளும். நான் சொல்லுவது எல்லாம் கேட்கும். என்னை பாதுகாப்பாக இத்தனை வருஷம் பார்த்துக்கிட்டு வருதுனா பாரேன்.

இப்படி பாட்டி கிட்ட பேச்சு குடுத்துக்கொண்டே அவர்கள் இருந்த அறையை சுத்தம் செய்தாள் தகரபெண். பாட்டி சுற்றும் முற்றும் பார்த்தாள். 

பாட்டி: அடடே என் வீடா இது பளிச்சுன்னு இருக்கே. பலே!! வாய் பேசும் போதே கை வீட்டு வேலைகள் எல்லாம் பார்த்திடுச்சே. என் வீட இப்படிப்பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு. வயசாயிடுச்சுல்ல என்னால வேலைகள் எல்லாம் செய்ய முடியலையே.

தபெ: யாரையாவது துணைக்கு வச்சுக்கலாம் இல்லையா பாட்டி.

பாட்டி :இந்த காட்டுக்குள்ள எனக்கு வேலை செய்துதர யாருமா வருவா?

தபெ: நாளையிலிருந்து நான் காட்டுக்கு இலை பறிக்க வரும்போது உங்களை வந்து விசாரித்து வீடு சுத்தம் செய்து தந்துவிட்டு போறேன் பாட்டி கவலை படாதீங்க.

பாட்டி: உனக்கு நல்ல மனசு மா. சரி நீ ஏதாவது சாப்பிட்டாயா?? 

தபெ: இல்லை பாட்டி. நீங்க சாப்பிடிங்களா? 

பாட்டி: இதோ இன்று இந்த பழம் தான். சமையல் கட்டில் எல்லா பொருட்க்களும் இருக்கு ஆனா சமைக்க ஆளில்லை என்ன செய்ய!!

தபெ: நான் சமைக்கட்டுமா பாட்டி?

பாட்டி: ஓ தாராளமா!! நானும் நல்ல சாப்பாடு சாப்பிட்டு பல வருஷம் ஆச்சு. 

தகரபெண் சமையலறைக்குள் சென்றாள். அவளுக்கு தலை சுற்றியது. எல்லாப் பொருட்களும் சிதறி, கொட்டி கிடந்தன‌. காய்கள் எல்லாம் அழுகி இருந்தது. பாத்திரங்கள் எதுவும் கழுவாமல் குமிந்திருந்தது. உடனே வேலையில் இறங்கினாள். சமையலறை பளிச்சிட்டது. தான் பறித்து வந்து தகர இலை வைத்து சிறிது நேரத்தில் சுட சுட சாப்பாடு தயாரித்து பாட்டியை சாப்பிட அழைத்தாள். பாட்டி அதற்குள் தூங்கிவிட்டாள். தகரபெண் பாட்டியை எழுப்பி உணவு பரிமாறினாள். பாட்டி தகரபெண்ணையும் உணவு அருந்துமாறு கூறினாள். ஆனால் தகரபெண் மறுத்து விட்டாள். ஏனென்றால் அவள் கொண்டு வந்த இலை கொஞ்சம் தான் அதை வைத்து சமைத்துள்ளாள். பாட்டி வேற… நல்ல சாப்பாடு சாப்பிட்டு பல வருஷமாச்சுன்னு சொன்னதினால் அவள் பாட்டி உண்டபின் மீதமுள்ளதை உண்ணலாம் என்றிருந்தாள். ஆனால் சாதம் மட்டுமே மீந்தது. பாட்டியிடம் ஒரு குவளை நீரும் ஒரு பாத்திரமும் கொடுத்து கைகளை கழுவ சொன்னாள். பின் பாட்டி தனது சாய்வு நாற்காலியில் சென்று அமர்ந்தார். தகரபெண் மீதமான சாதத்தில் தண்ணீர் ஊற்றி மூடி வைத்தாள். இட்டிலிக்கு மாவு, பருப்பு ஊற வைத்துவிட்டு இருந்த பழங்களை உண்டு பாட்டி அருகில் வந்து அமர்ந்தாள். பாட்டி அவளையே பார்த்துக்கொண்டு இருந்தார். 

தபெ: ஏன் பாட்டி அப்படி பாக்குறீங்க?

பாட்டி: இப்பத்தான் வயிறும் மனசும் ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் நெறஞ்சிருக்கு. ருசியான சாப்பாடு. நன்றி மா. ஆமாம் ருசில அளவு பாக்காம சாப்பிட்டு விட்டேன.. உனக்கு??

தபெ: பரவாயில்லை பாட்டி நான் பழங்கள் எல்லாம் சாப்பிட்டேன். அதுவே போதும். நாளைக்கு வீட்டுக்கு போய் சமைத்து பிள்ளைகளுக்கும் கொடுத்து நானும் சாப்பிட்டா போச்சு.

பாட்டி: சரி மா….நல்ல உணவு உண்டதில் என்க்கு நல்ல உறக்கம் வருது. உனக்கு தூக்கம் வரலையா. 

தபெ: தூங்கனும் பாட்டி ஆனா என் பிள்ளைகள் சாப்பிட்டாங்களோ இல்லையோ என்ற கவலை தூக்கத்தை கலைக்கிறது என்ன செய்ய.

பாட்டி: சரி நான் தூங்க போகிறேன். உனக்கு தூக்கம் வந்தால் அந்த அறையில் போய் தூங்கு. அங்கு தேக்கினால் செய்த கட்டிலில் பஞ்சு மெத்தை போட்டிருக்கும் அதற்கு பட்டுத் துணி விரித்திருக்கும். நன்றாக உறக்கம் வரும். 

தபெ: அச்சச்சோ !!! பாட்டி எனக்கு அதிலெல்லாம் படுத்து பழக்கம் இல்லை. ஒரு பாய் போதும் இப்படியே தரையில் படுத்துக்கறேன். 

பாட்டி: அப்படியா சரி அப்போ அதுக்கு பக்கத்து அறையில் பாய் இருக்கு அங்க போய் தூங்கிக்கோ. சரியா நான் உறங்க போறேன். காலை பார்ப்போம்.

என்று சொல்லி பாட்டி உறங்க சென்றாள். தகரபெண்ணுக்கு உறக்கம் வரவில்லை. அவள் பாட்டி சொன்ன அறைக்குள் சென்று பார்த்தாள். அங்கு ஒரு பாய் இருந்தது ஆனால் அந்த அறை முழுவதும் பஞ்சு பறந்து கிடந்தது. ஊசி நூல் எல்லாம் சிதறிய படி கிடந்தன. அவள் அந்த பஞ்சை எல்லாம் ஒரு துணி கொண்டு ஒன்றுசேர்த்து அவற்றை அங்கு கிடந்த காலி தலையனை உறைக்குள் நிறப்பி பின் ஊசி நூல் கொண்டு தைத்து அழகான தலையனைகளை செய்து அடுக்கி வைத்து அறையை சுத்தம் செய்தாள். பின் ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பை ஆட்டுக்கள்ளில் அறைத்து மாவாக்கி மூடி வைத்தாள். அழுகாத காய்களை தனியாக எடுத்து வைத்தது அவளுக்கு ஞாபகம் வர உடனே அவற்றை நன்றாக நீரில் அலம்பி ஒரு கூடையில் போட்டு வைத்தாள். பூஜை அறையை சுத்தம் செய்தாள். இப்படியே ஒன்றன் பின் ஒன்றாக வேலை செய்து கொண்டே இருந்ததில் சற்று கண் அசந்து போனாள். பொழுது விடிந்தது. உடனே எழுந்து வீட்டின் வாசலை கூட்டி, கழுவி கோலமிட்டாள். பின் காலை உணவுக்கு இட்டிலி, சட்டினி, சாம்பார் செய்தாள். பாட்டி எழுந்து வந்தாள்.

பாட்டி: என்ன ஒரு அருமையான சாப்பாட்டின் வாசனை. என்னை படுக்கையறையிலிருந்து இழுத்து வந்துள்ளது. 

தகரபெண் தான் கிளம்ப வேண்டும் என்பதை சொல்ல வந்தாள் அதற்குள் பாட்டி குறுக்கிட்டு …

பாட்டி: இரு இரு நான் குளித்து விட்டு வரேன் இருவரும் ஒன்றாக உணவு அருந்தலாம்.

என்று கூறி உள்ளே சென்றாள்.

தகரபெண்ணுக்கு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அதற்கு இப்போது கிளம்பினால் தான் சரியாக இருக்கும் என்ற கவலை இருந்தாலும் பாட்டிக்காக காத்திருந்தாள். 

“ஆஹா ஆஹா என் வீடு தெய்வீக மணம் கமழுதே. மிக சுத்தமாக இருக்கிறதே. மகிழ்ச்சியாக இருக்குமா.” என்று சொல்லிக்கொண்டே இட்டிலியை  சட்டினி சாம்பார் போட்டு சாப்பிட்டாள். நீயும் சாப்பிடுமா என்றாள் பாட்டி. 

தகரபெண் : பாட்டி நீங்கள் சாப்பிட்டு முடிப்பதற்காக தான் காத்திருந்தேன். நான் உடனே கிளம்ப வேண்டும். என் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். உங்களுக்கு மத்திய உணவும் செய்து வைத்துள்ளேன். சாப்பிடுங்கள். நான் விடைபெற விரும்புகிறேன். நாளை மீண்டும் வருகிறேன்.

பாட்டி: புரிகிறது மா. உன் அவசரம் புரிகிறது. சரி போவதற்கு முன் அதோ ஒரு அறை இருக்கிறதே அதில் நிறைய பெட்டிகள் இருக்கு. அதிலிருந்து ஏதாவது பெட்டியை என் பரிசாக நீ எடுத்துக்கோ. 

தபெ: வேண்டாம் பாட்டி நான் சென்று நாளை வரும்போது எடுத்துக்கொள்கிறேனே.

பாட்டி: இந்தா சாவி. போய் எடுத்துக்கொண்டு கிளம்பு.

என்றாள் அதட்டலாக. உடனே வீட்டின் ஞாபகத்தில் வேகமாக சாவியை வாங்கி அறையை திறந்து ஆக சிறிய பெட்டியை எடுத்துக்கொண்டு மீண்டும் அறையை பூட்டி சாவியை பாட்டியிடம் கொடுத்து 

தபெ: நான் எடுத்துக்கொண்டேன் பாட்டி சந்தோஷமா. இப்பொழுது கிளம்பட்டுமா 

பாட்டி: இது சிறிய பெட்டியாச்சே பெரிசு எடுத்திருக்கலாமே சரி சரி உன் விருப்பம் அதுவானால் நான் என்ன சொல்ல ..சரி இப்படியே கிழிந்த புடவையுடனா போக போகிறாயா?பெட்டி எடுத்த அறைக்கு பக்கத்தில் தான் எனது அறை இருக்கிறது போய் உனக்கு வேண்டிய புடவையை எடுத்து உடுத்திக்கொண்டு வா. பட்டுப்புடவைகள் நிறைய இருக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கோ. இனி எங்க நான் பட்டுப்பீதாமரமா உடுத்திக்க போகிறேன். அப்படியே அங்கு ஒரு பெட்டியில் எனது நகைகளும் இருக்கும். அதிலிருந்தும் வேண்டியதை எடுத்துக்கொள். 

தகரபெண் வீட்டிற்கு போக தவிக்கிறாள். இந்த பாட்டி என்னடான்னா அது செய் இது செய் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாள். தகரபெண்ணும் ஒன்றும் மறுத்துப்பேசாமல் பாட்டி அறைக்கு சென்றாள். மறுத்து பேசினால் பாட்டி இன்னும் தாமதமாக்குவாரோ என்ற பயம். வேகமாக ஒரு நூல் புடவையை எடுத்து உடுத்திக்கொண்டு ஒரேஒரு சங்கிலி மட்டும் அணிந்து கொண்டு ஓடி பாட்டியிடம் வந்து தான் கிளம்பியாக வேண்டும் என்று கெஞ்சாத குறையாக சொன்னாள்.

பாட்டி அவளது அவசரம் புரியாததுபோல் ஏன் பட்டுப்புடவை உடுத்திக்கொள்ளவில்லை? ஏன் ஒரேஒரு சங்கிலி தான் அணிந்து “பத்திரமாக சென்று வா பெண்ணே நாளை சந்திப்போம் என கூறி விடை கொடுத்தாள்”

ஒரு வழியாக பாட்டி வீட்டிலிருந்து கிளம்பினாள் தகரபெண். அவள் தான் வழிநெடுக போட்ட புடவை கிழிசல்களை தொடர்ந்து ஊருக்கு போய் சேர்ந்தாள். நேராக தவுட்டுபெண் வீட்டின் கதவை தட்டினாள். கதவு திறந்ததும் தன் பிள்ளைகளை பற்றி விசாரித்தாள்.

தவுட்டுபெண் : இரு இரு என்ன அவசரம் உனக்கு?? அவர்கள் எழுந்து பால் அருந்துகின்றனர். ஆமாம் நீ எங்கே சென்றாய்? இரவெல்லாம் எங்கிருந்தாய் ?

தகரபெண்: அந்த விவரம் எல்லாம் என் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வந்து சொல்கிறேன்.

என்று கூறிக்கொண்டே தன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்கு போனாள். பின் வேகமாக காலை உணவு செய்து பிள்ளைகளுக்கு கொடுத்து, பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பியதும் அப்பாடா என்றிருந்தது அவளுக்கு. சற்று நேரம் படுத்துக்கொண்டாள். அப்பொழுதுதான் அவளுக்கு அந்த பாட்டி பரிசாக தந்த பெட்டியின் ஞாபகம் வந்தது. பிள்ளைகளை கிளப்பும் அவசரத்தில் மறந்தே போனாள். உடனே அதை எடுத்து திறந்ததும் அதிர்ச்சியுற்றாள். ஏனென்றால் அந்த பெட்டி முழுவதும் தங்க காசுகளும், வைர வைடூர்யங்களின் ஒளி  கண்ணைப் பறித்தது. அப்படியே பிரமையில் ஆழ்ந்தாள். கதவை யாரோ தட்டும் சத்தம் அவளை பிரமையிலிருந்து மீட்டு வந்தது. கதவை திறந்தாள்.

தவுட்டுபெண்: என்னடி கதவை திறக்க இவ்வளவு நேரம்? என்ன செய்து கொண்டிருந்த? சரி நேற்று முழுவதும் எங்க இருந்த? அத கேட்க தான் வந்தேன்.

தகரபெண் : வா வா நானே உன் வீட்டுக்கு வந்திருப்பேன். உனக்கு ஒன்னு காட்டுகிறேன் நீ அசந்துடுவ. 

தவுட்டுபெண் : நான் என்ன கேக்கறேன் நீ என்ன சொல்லுற!!!!

என்று கூறிக்கொண்டே தகரபெண் காட்டிய பெட்டியை பாத்து வாயடைத்து போனாள்.

தவுபெ: என்னப்பா இது இவ்வளவு ஜொலிக்கிறது. ஏது உனக்கு? அவ்வளவும் நிஜமாகவே தங்கமும் வைரமுமா? இதை எடுக்கதான் போயிருந்தாயா? சொல்லிருந்தால் நானும் வந்திருப்பேன் இல்லையா!! இதை வைத்து நம் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழலாமே!! நம் கணவர் இப்படி வெளியூரில் கஷ்டப்பட வேண்டியதில்லை!! 

தகபெ: நீ இப்படி கேள்வி மேல கேள்வி கேட்டுட்டே போற!!! என்னை பதில் சொல்ல விடு.

என்று சொல்லிக்கொண்டே தகரபெண் நடந்தவற்றை கூறி முடித்ததும்….

தவுபெ: அட அசடே எடுத்தது தான் எடுத்த கொஞ்சம் பெரிய பெட்டியா எடுத்திருக்கலாமில்லையா!! 

தகபெ: எனக்கு இதை தூக்கிகிட்டு வரத்துக்கே கஷ்டமாக இருந்தது. பாவம் வயசான பாட்டி தனியா இருக்காங்க. நாளைக்கு வரேன் என்று சொல்லியுள்ளேன் ஆனால் என்னால் போக முடியாது. என் கணவர் நாளை வருவார். இப்போதான் ஞாபகம் வந்தது. இரண்டு நாள் கழித்து போகனும். சரி இந்தா இதிலிருந்து நீயும் கொஞ்சம் எடுத்துக்கொள். 

தவுட்டுபெண் அதிலி‌ருந்து பாதி பொருளை எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கு போனாள். அதிலிருந்து எடுத்து வந்த நகையை போட்டு அழகு பார்த்தாள். அப்பொழுது அவளுள் பேராசை எழுந்தது. தானும் ஒரு பெட்டி எடுத்து வரவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இப்பொழுதே சென்றால் வேலையும் அவ்வளவாக இருக்காது ஏனெனில் தகரபெண் எல்லா வேலைகளையும் சுத்தமாக செய்பவள் என்பது ஊர் அறிந்ததே அதனால் பாட்டியின் வீடு பளிச்சிடும் மேலும் மாவாட்டி வைத்திருப்பதால் சட்டென்று உணவும் பாட்டிக்கு கொடுத்திடலாம் என்றெல்லாம் யோசித்து  மனதிற்குள் ஒரு திட்டமிட்டு தகரபெண்ணிடம் சென்று தனது ஊர்க்காரர் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லை அதனால் தான் உடனே  போகவேண்டும் தனது பிள்ளையை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு புறப்பட்டு சென்றாள் காட்டிற்குள். 

தகரபெண் சொன்ன வழியாக சென்றாள். சிறுது நேரத்தில் தகரபெண்ணின் புடவை கிழிசல்களை பார்த்தாள். அதே வழியில் பயணித்தாள். மாலையானது இருளும் படிந்தது, வீடும் தெறிந்தது. மகிழ்ச்சியாக கதவை தட்டினாள். தகரபெண் கூறியது போல் இரண்டு முறையும் கதவு திறக்கவில்லை. மூன்றாவது முறை திறந்தது. பாட்டி “யாரது” என்று கேட்டாள். உடனே தவுட்டுபெண் உள்ள போய் பேசலாம் பாட்டி வாங்க என்று பாட்டிக்கு முன் அவர் வீட்டிற்குள் சென்றாள். சென்றவள் கெட்ட நாற்றம் தாளாமல் ஒடி வெளியே போனாள். தகரபெண் வீட்டை சுத்தம் செய்து முழுசா ஒரு நாள் கூட ஆகவில்லை அதற்குள் வீடு அலங்கோலமாகவும் கெட்ட நாற்றத்துடனும் இருக்கே!!!! தகரபெண் பொய் சொல்லியிருப்பாலோ!!!! என்றெல்லாம் பல எண்ணங்கள் தோன்றியது தவுட்டுபெண்ணுக்கு.  பாட்டி உள்ளே இருந்து ” ஏம்மா ஓடிட்ட” என்று கேட்டாள். உடனே சுதாரித்துக் கொண்டு வீட்டை சுற்றிப்பார்க்க போனதாக சொல்லி சமாளிக்க நினைத்தாள் ஆனால் பாட்டி விடுவாரா!!!

பாட்டி: அதற்கு ஏன் ஓடின ஏதோ என் வீடு இடியபோறாமாதிரி? நிதானமாக சுற்றி பார்க்க வேண்டியது தானே!! அதுவும் வெளியே இந்த இருட்டில் என்னத சுற்றி பார்ப்ப வா உள்ள வா. நீ யாரு ? எப்படி இங்கே வந்த ? இந்த விவரங்கள் எல்லாம் சொல்லு கேட்போம். 

தவுபெ: இதோ வரேன். சொல்லுங்க பாட்டி. சாப்பிட ஏதாவது வச்சிருக்கேங்களா?? இல்லை மாவெல்லாத்தையும் முடிச்சிட்டிங்களா??

பாட்டி: என்னது!!! ஏதோ நீ தான் நேற்று வந்து மாவு அறைத்து வச்சிட்டு போன மாதிரி கேக்கறே?

தவுபெ: வீடுன்னா இட்டிலிக்கு மாவாட்டி வைத்திருப்பது சகஜம் தானே அதனால கேட்டேன் !!

என்று சொல்லிக்கொண்டே நாலாபுறமும் அவள் கண்கள் சுழன்றது

பாட்டிக்கு இவள் எப்படி அங்கு வந்தாள்? ஏன் வந்திருக்கிறாள்? எதை அவள் கண்கள் சுழன்று தேடுகிறது என்பதெல்லாம் புரிந்தும் புரியாததுபோல தனக்கு பசிப்பதாகவும் சமைத்து தரும் மாறு தவுட்டுபெண்ணிடம் கூறினாள். அதற்கு தவுட்டுபெண் பாட்டிக்கு வயசாகிவிட்டதால் பழம் மட்டும் சாப்பிடுமாறு கூறிவிட்டு தனக்கு தூக்கம் வருவதாகவும் எங்கே படுத்துரங்க வேண்டும் என்று கேட்டாள். பாட்டியும் தகரபெண்ணிடம் சொன்னது போலவே இரண்டு அறைகளைப்பற்றி சொல்லி முடிப்பதற்குள் தான் தேக்கு கட்டிலில் படுத்துக்கொள்வதாக கூறினாள். சரி என்று பாட்டி அறையை காண்பிக்க ஓடீ சென்று மெத்தையில் படுத்துருண்டாள். நன்றாக உறங்கினாள். காலை விடிந்து பல மணிநேரம் ஆகியும் எழாமல் உறங்கிக்கொண்டிருந்த தவுட்டுபெண்ணை எழுப்பினார் பாட்டி. வேகமாக எழுந்தாள். வீட்டிற்கு போக வேண்டும் என்றாள். பாட்டி புன்முறுவலுடன் “சரி சரி அந்த கடைசி அறைல பெட்டிகள் அடுக்கி இருக்கும் நீ போய் உனக்கு வேண்டியதை என் பரிசாக எடுத்துக்கொள்” என்று கூறி முடிப்பதற்குள் சாவியை பறித்து கொண்டு போய் அறையை திறந்து இருப்பதிலேயே பெரிய பெட்டியை தூக்க முடியாமல் இழுத்துக்கொண்டு வந்தாள். இதை பார்த்ததும்…

பாட்டி : இது போதுமா? 

தவுபெ: இதைவிட பெரிய பெட்டி இருக்கா?

பாட்டி: இல்லை இதை இப்படி வீடு வரை இழுத்துக்கொண்டே போக போறயா?? சரி உன் பாடு சென்று வா.

தவுட்டுபெண் யோசித்தாள் “என்ன இந்த பாட்டி பொசுக்கென்று போயிட்டு வா என்று சொல்லுது அப்போ பட்டுப்புடவை…அதையும் விட கூடாது”

தவுபெ : ஏன் பாட்டி உங்க கிட்ட புடவைகள் நிறைய இருக்குமே இத்தனை வருஷமாக சேர்த்து வச்சிருப்பேங்களே!!!

பாட்டி: அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை மா. இந்த காட்டுக்குள்ள எனக்கு யாரு புடவை எடுத்து தர போறா!!! சரி உனக்கு நேரமாகுதில்ல. கிளம்ப வில்லை? 

தவுட்டுபெண் மனதிற்குள் ” போச்சு பட்டுப்புடவை போச்சு இந்த கிழவி தராது போல… பரவாயில்லை இந்த பெட்டில இருக்கறத வச்சு நாமளே வாங்கிக்கலாம்”

பாட்டி: என்னடிமா யோசனை??

தவுபெ: ஒன்னுமில்லை!! நான் சென்று வருகிறேன்

பெரிய பெட்டியை தூக்கவும் முடியாமல் இழுக்கவும் முடியாமல் கஷ்டப்பட்டு ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தாள். அவள் பிள்ளையை பற்றி சிந்தனையே இல்லாமல் இருந்தாள். வேகமாக கதவை திறந்து வீட்டிற்குள் சென்று அவசர அவசரமாக பெட்டியை திறந்தாள். அதனுள் பாம்பு, பூரான், தேள் எல்லாம் நிரம்பி வழிந்தன. பயந்து போனாள் தவுட்டுபெண். தகரபெண் மீது கோபம் கொண்டாள். அவள் தன்னிடம் பொய் சொன்னதாக கருதினாள். 

இவ்விடத்தில் தவுட்டுபெண் 

பேராசையால் பொறாமை கொண்டு பொறாமையால் கோபம் கொண்டு மதியிழந்தாள். செய்வதறியாது தகரபெண் தான் தனது இந்த நிலைமைக்கு காரணம் என்று மதிகெட்டு நினைத்து அந்த பெட்டியை தகரபெண் வீட்டின் பின்புறம் கொண்டு போய் போட்டாள். அந்த பெட்டி தகரபெண் வீட்டின் பின்புறம் மண் தரையில் விழுந்த வேகத்தில் திறந்து கொண்டது. அதனுள்ளே பாம்பு தேள்களுக்கு பதில் தங்கமும் வைரமும் ஜொலித்து. 

அதிர்ச்சியடைந்த தவுட்டுபெண் வேகமாக தகரபெண் வீட்டின் கதவை ஓடிபோய் தட்டினாள். தகரபெண் கதவை திறந்து நலம் விசாரித்தாள். அதற்கு பதில் சொல்லாத தவுட்டுபெண் தனது பெட்டி ஒன்று தகரபெண் வீட்டின் பின்புறம் விழந்ததாகவும் அதை எடுக்க வந்ததாகவும் கூறிக்கொண்டே பின்புறம் கதவை திறந்து தகரபெண் பார்ப்பதற்குள் வேகமாக பெட்டியை மூடி அதை அவள் வீட்டுப் பக்கமாக வேலியின் அடிவழியாக தள்ளிவிட்டு சென்றுவருவதாக கூறி தன் மகனையும் அழைத்துக்கொண்டு அவள் வீட்டுக்கு பின்புறம் போய் பெட்டியை இழுத்து வந்து வீட்டினுள் வைத்து திறந்தாள் மீண்டும் பாம்பும், தேளும் நெளிந்தது. குழம்பி போன தவுட்டுபெண் தன் பிள்ளையை கூட கவனிக்காமல் மீண்டும் தகரபெண் வீட்டினுள் பெட்டியை போட்டாள் பொன்னும் வைரமுமாக மின்னியது. பின் தனது வீட்டினுள் எடுத்து வந்தால் மீண்டும் பாம்பாக மாறியதில் தவுட்டுபெண்ணுக்கு பித்து பிடித்தது. இதைப்பார்த்த அவள் மகன் அழுது கொண்டே எந்த பெட்டியால் தனது தாய் இப்படி ஆனாளோ அந்த பெட்டியை தகரபெண் வீட்டின் பின்புறம் போட்டு விட்டு தன் தாயை அழைத்துக்கொண்டு அப்பாவிடம் போய் அங்கேயே இருந்தார்கள். தகரபெண் தனது வீட்டின் பின்புறம் சென்று பார்த்தாள் பாட்டி வீட்டில் பார்த்த அதே பெட்டி கிடந்தது. அப்பொழுது தான் அவளுக்கு எல்லாம் புரிந்தது. தன் கணவரிடம் நடந்தவற்றை கூறி இருவரும் பாட்டி வீட்டிற்கு காட்டிற்குள் சென்றார்கள். அங்கு அப்படி எந்த வீடும் இருந்ததுக்கான அறிகுறியும் இல்லை. அந்த வீடு இருந்த இடத்தை தொட்டு கண்ணில் ஒத்திக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு வீடு வந்த தம்பதியர் மெல்ல பெட்டியை திறந்தார்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். 

இத்துடன் இந்த பயணம் இனிதே நிறைவுற்றது. உங்கள் இருக்கை வார்ப்பட்டையை இத்துடன் அவிழ்த்து விடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

❤️முற்றும்❤️

கோமு என்ற ஒரு வாலிபன் முருங்கைக்கரை என்ற ஊரில் வசித்து வந்தான். அவனது தொழில் வேட்டையாடுதல். காட்டுக்குள் சென்று விலங்குகள், பறவைகள் போன்றவற்றை வேட்டையாடி அவற்றை ஊர் மக்களிடம் விற்பனை செய்து காசு சம்பாதித்து வாழ்ந்து வந்தான். காட்டுக்குள் கிடைக்கும் அரிய வகை மூலிகைகள் பொருட்கள் ஆகியவற்றையும் சேகரித்து அதை ஏலத்தில் விட்டு அதையும் காசாக்கிவிடுவான். நல்ல கெட்டிக்காரன், திறமைசாலி, யாருக்கும் கெடுதல் நினைக்காத நல்ல உள்ளம் படைத்தவன். கடவுள் பக்தி உடையவன். அவன் அந்த ஊர் தலைவர் ஆகவேண்டும் என்று பல நாள் ஆசை பட்டு அதற்கு பல வழிகளில் முயற்சியும் செய்துப்பார்த்து பயனில்லாமல் போனது. கடவுளிடம் கோபம் கொண்டான். அந்த ஆசையை அப்படியே மனதினுள் பூட்டி வைத்து விட்டு தனது வேலையை பார்த்தான்.

ஒரு நாள் வேட்டைக்கு சென்றவன் ஊர் திரும்பவில்லை. அனைவரும் அவனுக்காக காத்திருந்து காத்திருந்து பின் அவரவர் வீட்டுக்கு சென்றனர். காட்டுக்குள் சென்ற கோமுவை வனவிலங்குகள் தாக்கியதில் அவன் மூக்கு பாதியாக அறுப்பட்டு போனது. அவன் பல மூலிகைகளை காயம் பட்ட இடங்களில் போட்டு தனக்கு தானே வைதியம் பார்த்துக்கொண்டு அங்கு கிடைத்த பழங்களை உண்டு இருந்தான். விலங்குகளிடமிருந்து தப்பிப்பதற்காக அவன் ஓடியதில் வழி மாறி போய்விட்டான். எங்கு இருக்கின்றான் என்பது அவனுக்கே தெரியாது.

காயங்கள் எல்லாம் மாய்ந்து கொஞ்சம் உடலில் சக்தி வந்ததும் எழுந்து மீண்டும் நடக்கலானான் தன் ஊரைத் தேடி முறிந்த அரை மூக்குடன். பல நாள் நடந்தும் அவனால் காட்டை விட்டு வெளியேற முடியவில்லை ஏனெனில் அவன் காட்டின் நடுவில் சிக்கிக்கொண்டுள்ளான். அவ்வளவு தூரம்  காட்டிற்குள் அவன் சென்றதில்லை. ஊருக்கு வழி தெரியாததால் குழப்பம், வலியால் வேதனை, நல்ல உணவுக்காக ஏக்கம், மூக்கு அறுப்பட்டு பாதியானதில் கோபம், ஊர் தலைவர் பதவி ஆசை இப்படி பல உணர்ச்சிகளால் சூழப்பட்டு அதில் சிக்கி செய்வதறியாது கடவுளை திட்டித்தீர்தான். ஏன் தனக்கு  இப்படி கஷ்டங்களையும் தோல்விகளையும் கொடுத்து வாட்டி வதைக்கிறார் என்ற  ஆத்திரத்தில் கத்தினான். காடே அதிர்ந்தது. எங்கடா மீண்டும் காட்டு விலங்குகள் தனது சப்தத்தில் வந்து மீதமுள்ள மூக்கையும் தின்று விடுமோ என்று பயந்து சற்று நேரம் ஒளிந்து கொண்டான். பின்னர் வலது புரம் திரும்பிபார்த்தான் ஏதோ ஒரு ஒளி தெறிந்தது. ஒளியின் பிரகாசத்தை நோக்கியே நடக்கலானான். தனது ஊர் என்று எண்ணி மனதுக்குள் மகிழ்ச்சி அடைந்தான். 

அவன் நடந்து நடந்து களைத்து விட்டதால் ஒரு மரத்தாலான கம்பம் ஒன்றில் சாய்ந்தான். சற்று நேரம் கழித்து தான் எதன் மேல் சாய்ந்துள்ளோம் என்று தலையை தூக்கிப் பார்த்தான். பெரிய பெயர் பலகை தெரிந்தது அதில் வெள்ளரிக்கா பட்டினம் என்று எழுதியிருந்தது. தனது ஊர் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு ஊரை அடைந்தது அவனுக்குள் மகிழ்ச்சியை அளித்தது. ஊருக்குள் சென்றான் அதிர்ச்சியுற்றான். ஏனெனில் அந்த ஊர் மக்களுக்கு யாருக்குமே மூக்கு என்ற ஒரு உறுப்பு முகத்தில் இல்லை. அதற்கு பதில் சிறு இரு துவாரங்கள் மட்டுமே இருந்தது. ஏதோ வித்தியாசமான ஊருக்குள் நுழைந்து விட்டோம் ஏதோ விபரீதம் தனக்கு நடக்க போகிறது, இன்னொரு சோதனை தனக்காக அந்த கடவுள் கொடுத்து ரசிக்கிறார் என்ற பல எண்ணங்கள் அவனுள் பறந்தன. வெள்ளரிக்கா பட்டின மக்கள் கோமுவைப்பார்த்து அதிசயித்துப் போனார்கள் ஏனென்றால் அவர்கள் அரை மூக்குடன் இருக்கும் மனிதனை அன்று தான் முதல் முதலில் காண்கிறார்கள். அவர்கள் காட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாதவர்கள். அவர்கள் ஊருக்குள் நுழைந்த முதல் அரை மூக்குடைய வேற்று ஆள் நமது கோமு தான்.

வெள்ளரிக்கா பட்டினத்துக்கு ஒரு வயதான ராஜா இருக்கிறார் அவருக்கு வாரிசுகள் இல்லாததால் அடுத்து யார் தங்கள் ஊரை ஆளப்போகிறார் என்ற குழப்பம் ஊர் முழுவதும் நிலவி இருந்தது. ராஜா உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். மக்களும் வருத்தத்தில் ஆழ்ந்திருந்தனர். அந்த ஊரில் வெள்ளரிக்காய் செடியிலும் கொடியிலும் காய்த்து ஊர் முழுவதும் பரவி கிடந்தது. இது போக மா, பலா, தென்னை மரங்களும் தெருக்களின் ஓரங்களில் நெடு நெடுவென காய் கனிகளோடு அழகாக வளர்ந்திருந்தது. அவர்கள் தோட்டத்தில் தங்கமும் வைரமும் சாதாரண கற்கள் போல கிடந்தன. ஊரின் மேற்கு எல்லையில் ஒரு பெரிய கிணறு உள்ளது. அதிலுள்ள நீர் அமிர்தம் போல் இருக்கும். காட்டிற்குள் இப்படி ஒரு தன்னிறைவு பசுமை கிராமம் இருப்பதே யாருக்கும் தெரியாது. கோமுவை போல் வழிதவறி வந்தவர்கள் இந்த ஊரின் வளத்தை கண்டு பேராசைக்கொள்ள..அவர்கள் காட்டு விலங்குகளுக்கு இறையாக வெட்டி வீசப்பட்டனர். இதெல்லாம் நமது கோமுவுக்கு தெரியாதல்லவா. அவன் செய்வதறியாது நின்றான்.

நாட்டு மக்கள் அவனை தூக்கிக்கொண்டு அரசரிடம் சென்றார்கள். அரசரும், அவரது மந்திரியும் அரைமூக்கனை ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள்.  கோமுவை பார்த்து யார், எப்படி இங்கு வந்தாய் என்று கேட்டார்கள். கோமு நடந்ததை கூறினான். ராஜா அவனுக்கு ஒரு வீடு கொடுத்து அதில் இருக்கச்சொன்னார். அவனும் ஆரம்பத்தில் சற்று பயத்துடன் இருந்தான். ஏனென்றால் அது புது ஊர் அதுவும் அடர்ந்த காட்டிற்குள். மூக்கில்லாத வித்தியாசமான மனிதர்கள். தனக்கு நல்லது செய்கிறார்களா இல்லை தன்னை பலி கொடுக்க நல்ல நாளுக்காக விட்டுவைத்திருக்கிறார்களா என்ற குழப்பத்தில் இருந்தான். மீண்டும் கடவுளை மனதில் திட்டினான். 

சில நாட்கள் கடந்தது  அந்த நாட்டு மக்கள் கோமுவிடம் நன்றாக பழகினார்கள் கோமுவும் அவர்கள் ஊரில் சில மாற்றங்களை செய்து அழகாகினான். புதுப்புது உணவு வகைகளை செய்தும் கொடுத்தான், செய்முறையை கற்றும் கொடுத்தான். குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தான். வெளி உலகம் பற்றி நிறைய விஷயங்களை மக்களுடன் பகிர்ந்து கொண்டான். ஆனால் அவன் அங்கு இருக்கும் தங்கத்துக்கும், வைரத்துக்கும், அந்த நாட்டின் வளத்துக்கும் ஆசைப்படவே இல்லை ஏனென்றால் அவன் உயிரோடு வாழ்வதே அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது.  அரசருடனும்  கோமு நன்றாக பழக ஆரம்பித்தான். இப்படியே பல மாதங்கள் ஓடிவிட்டது. ஒரு நாள் ராஜா இறந்துவிட்டார். ஊரே கவலையில் ஆழ்ந்தது.

அடுத்து யார் தங்களுக்கு ராஜாவாக இருந்து வழி நடத்தப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. மந்திரி எழுந்தார் மக்களை பார்த்தார் ” நமது நாட்டிற்கு வந்து சில காலங்களே ஆனாலும் நம் அனைவரையும், நம் பழக்கவழக்கங்களையும், நம் முறைகளையும் நன்கு புரிந்துகொண்டு, கற்றுக்கொண்டு மேலும் நம் நாட்டு நலனுக்காக பல திட்டங்களை வகுத்து தந்து, கல்வி என்ற ஒன்றை நம் பிள்ளைகளுக்கு கற்ப்பித்து நமது அரசரின் செல்ல பிள்ளையாக இருந்த முறிமூக்கனை நமது ஊரின் ராஜாவாக்க முடிவெடுத்துள்ளோம் இதில் யாருக்கேனும் மாற்றுக் கருத்து இருந்தால் கூறலாம்” என்று கூறி அமர்ந்தார். சற்று நேரம் அமைதி நிலவியது. பின் மக்கள் அனைவரும் முறிமூக்கன் ராஜா வாழ்க !! முறிமூக்கன் ராஜா வாழ்க!! வாழ்க!! என கோஷம் எழுப்பினர். நடப்பவை அனைத்தும் கனவா இல்லை நிஜமா என்று தன்னைத்தானே கிள்ளிப் பார்த்துக்கொண்டு திகைத்து நின்றான்.  

ஒரு ஊருக்கு தலைவராக ஆசைப்பட்ட கோமு இப்பொழுது காட்டிலிருக்கும் ஊருக்கு ராஜா ஆனான். அன்றிரவு அவன் தனக்கு நடந்தவைகளை நினைத்துப்பார்த்தான். ஒவ்வொரு முறை அவனுக்கு கெடுதல் நடந்த போதும் அவன் கடவுளை திட்டியது ஞாபகம் வந்தது. இப்போது அவனுக்கு புரிந்தது கடவுள் அவனுக்கு கொடுத்த கஷ்டங்கள் எல்லாமுமே அவனை இப்படி ஓர் இடத்தில் அமர வைத்து அழகு பார்ப்பதற்கே என்று. அந்த ஊரில் ஒரு கோவில் கூட அவன் பார்க்கவில்லை என்பதும் அவன் நினைவிற்கு வந்தது. மறுநாள் மக்களிடம் அவன் கற்ற பாடத்தை கூறி ஒரு கோவில் கட்ட ஆலோசனை கேட்டான். மந்திரிகளும் மக்களும் அமோதிக்க உடனே கட்டுமானம் தொடங்கப்பட்டது. சில மாதங்களில் கோவில் கட்டி முடிக்கப்பட்டது. 

அவனது கோமு என்ற பெயர் மாய்ந்து போனது. மூக்கில்லா ராஜ்ஜியத்தில் முறிமூக்கன் ராஜாவாக சிறப்புடன் நல்லாட்சி புரிந்து வந்தான்.  நல்ல சிந்தனைகளும், நேர்மறை எண்ணங்களும், பொருமையும் இருந்தால் நமக்கு நல்லதே நடக்கும் என்பதற்கு கோமு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்தான். அவன் நினைத்திருந்தால் தப்பி செல்ல முயன்றிருக்கலாம் ஆனால் அவன் அதை செய்யாமல் கிடைத்தை ஏற்றுக்கொண்டு பொறுமையுடன் தனது காலத்தை மற்றவர்களுக்கு தீங்கு நினைக்காமல்/செய்யாமல் முடிந்தவரை உதவிகள் செய்து கடவுளை மனதில் திட்டினாலும் அவர் மீது வைத்த நம்பிக்கையை விடாமல் நல்லதே நடக்கும் என்று நம்பியதால் அவனுக்கு நல்லதே நடந்தது.

வாழ்க்கை என்பது நமக்கு கடவுள் வழங்கிய விசித்திர பரிசுப் பெட்டகம். ஆம் ஒவ்வொரு முறை நாம் திறக்கும்போது ஒவ்வொரு அனுபவங்களை கொடுத்து நமக்கு பாடம் கற்ப்பிக்கும் மந்திரம் நிறைந்த பெட்டிகள் கொண்ட பெட்டகமே. நமது வாழ்வில் நடப்பவை எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும். காரணமின்றி எந்த காரியமும் நடந்திராது. உதாரணமாக நமது குடுபம்பத்தை கெடுப்பதற்க்கும் நிம்மதியை குலைப்பதற்கும் என்றும் சில பொறாமை கார்கள் நமக்கு பின்னால் அவர்களைப் போன்றே எண்ணமுடையவர்களோடு கைக்கோர்த்து பல வேலைகளை செய்வார்கள். அது அவர்களின் குணம். அவர்கள் மீது கோபப்பட்டு அல்லது ஆத்திரப்பட்டு ஒன்றும் ஆகபோவதில்லை. நமது வாழ்வில் அப்படி ஒரு சங்கடம் நடக்க வேண்டும் என்றிருந்தால் அது நடந்தே தீரும்.  கெட்டவை கெட்டவர்கள் மூலம் தான் நடக்கும். சிலர் கஷ்டப்படும் காலங்களில் கடவுளை திட்டித்தீர்ப்பார்கள் ஆனால் அவர்களுக்கே நல்லது நடந்தால் நன்றி கூறுபவர்கள் விரல்விட்டு எண்ணும் அளவில் தான் இருப்பார்கள் நம் கோமுவைப்போல் சிலர். கஷ்டமோ நஷ்டமோ சந்தோஷமோ துக்கமோ எதுவாயினும் நாம் தான் கடந்து ஆகவேண்டும். அவ்வாறு நடப்பவைகளை நேர்மறை எண்ணங்களுடன் அணுகினால் வாழ்க்கையை சிறப்பாக வாழ முடியும் என்பதை உணர்ந்திடவே வெள்ளரிக்கா பட்டினம் சென்று வந்தோம்.

உங்களின் இந்த வெள்ளரிக்கா பட்டினம் வரையிலான பயணம் இனிதே முடிந்தது.

❤️முற்றும்❤️

பசும்பொன் என்ற ஒரு கிராமம். பெயரை கேட்டதுமே உங்களுக்கு புரிந்திருக்கும் ஏன் அப்படி ஒரு பெயர் வைத்திருப்பார்கள் என்று. ஆம் பசுமையான வயல்கள் அதிலே பொன்னிற நெல் கதிர்கள். பார்ப்பதற்கு பச்சையும் பொன்னிறமுமான பட்டுக்கம்பளம் விரித்தது போல் இருக்கும்.

இப்படிப்பட்ட கிராமத்தில் ஜான் பல்லன், முழம் பல்லன் என்று இருவர் வசித்து வந்தனர்.  கிராமத்திற்கு அதன் அழகை கண்டு எப்படி பெயர் வந்ததோ அதே போல் இவ்விருவரின் பற்களை கண்டு இவர்களை சிறு வயதிலிருந்தே அப்படி அழைத்தனர் கிராம வாசிகள். பின்னர் அதுவே அவர்கள் பெயரும் ஆனது. 

ஜான் பல்லனுக்கு பற்கள் ஒரு ஜான் அளவிற்கும், முழம் பல்லனுக்கு பற்கள் ஒரு முழம் அளவிற்கும் நீட்டிக்கொண்டு இருப்பதால் அவர்கள் அப்பெயரை பெற்றனர்.

இருவரும் நல்ல நண்பர்கள். அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தனர். 

முழம் பல்லன் அவனால் ஆன உதவிகளை ஊருக்கும் ஊர் மக்களுக்கும் செய்து வந்தான். நல்ல குணம் படைத்தவன். அவனால் முடிந்தால் உதவுவான் இல்லை என்றால் ஒதுங்கி கொள்வான். அவனுடைய கொள்கையானது யாருக்கும் உதவாவிட்டாலும் உபத்ரவமாக இருக்கக்கூடாதென்பதே. அவன் உண்டு அவன் வேலையுண்டு என்று அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.

ஜான் பல்லன்  வெளி உலகிற்கு நல்லவன் வேஷம் போடும் வேஷதாரி. சரியான வடி கட்டின கஞ்சன். யாருக்கும் எந்த உதவியும் செய்யாவிட்டாலும் முழம் பல்லன் செய்வதை எல்லாம் தான் செய்ததாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆசாமி. யாரையாவது புகழ்ந்தால் இவனுக்கு பிடிக்காது. அவனை யாராவது புகழ்ந்தால் புலங்காகிதம் கொள்வான். அதிலும் முழம் பல்லனை யாரேனும் புகழ்ந்தாலோ இல்லை நல்லதாக நாலு வார்த்தை சொன்னாலோ இவனுக்கு இருப்புக்கொள்ளாது அவர்களிடம் காரணமின்றி சண்டையிடுவான். அவனுக்கு முழம் பல்லனை ஊரார் போற்றுவது சற்றே பொறாமையை கொடுத்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வாழ்ந்து வந்தான்.  

இப்படியாக வாழ்க்கை ஒடிக்கொண்டிருந்த சமையத்தில் முழம் பல்லன் தன் பக்கத்து ஊரில் இருக்கும் நண்பனின்  திருமணத்திற்கு போக வேண்டிய சூழ்நிலை வந்தது.  பிரயாணத்திற்கு சாப்பாடு பொட்டலம் எல்லாம் கட்டிக்கொண்டு கிளம்பினான்.  முழம் பல்லனின் தாய் ருசியாக சமைப்பார்கள். தன் நண்பன் ஜான் பல்லனிடம் கூறி விட்டு புறப்பட்டான். ஜான் பல்லனுக்கு மனதில் ஒரே கொண்டாட்டம் இனி ஊர் மக்கள் அவனிடம் தான் உதவி கேட்பார்கள், சில நாட்கள் இனி முழம் பல்லனை போற்றி பேச மாட்டார்கள் என்று.

அந்தக்காலத்தில் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு நடந்தே செல்வார்கள். இடையிடையே கிடைத்த இடத்தில் இளைப்பாறி பின் மீண்டும் பயணத்தை மேற்கொள்வார்கள். அதுபோல் நம் முழம் பல்லன் ஒரு நதியின் கரையில் இளைப்பாற முடிவு செய்தான். சூரியன் வானுக்குள் மறைந்தார். நிலவு மெல்ல மேலே எழ ஆரம்பித்தார். நாள் முழுவதும் நடந்த களைப்பால் அவனை மேலும் நடக்க அனுமதிக்கவில்லை அவனது கால்கள். எனவே அங்கேயே அமர்ந்தான். முகம், கை, கால்களை கழுவி விட்டு கட்டிக்கொண்டு வந்த புளியோதரையில் கொஞ்சம் சாப்பிட்டு மீதியை மீண்டும் கட்டி பையினுள் வைத்து விட்டு கைகளை நதியில் கழுவினான். மிதமான தென்றல் வீசியது, இரவு உணவும் ஆனது, தனது மேல் துண்டை தரையில் விரித்தான் நன்றாக உறங்கினான்.

நடுஇரவில் ஏதோ சப்தம் கேட்டது.  அவன் அசையாமல் கண்களை மட்டும் திறந்து சப்தம் வந்த திசை பார்த்தான்……….தேவதைகள் போல் இரு உருவம் அவன் பையில் இருந்த புளியோதரையை சாப்பிட்டுக்கொண்டிந்ததை கண்டான். ஏதோ பயணிகள் பசியினால் தன் உணவை சாப்பிடுகிறார்கள் இந்த வேளையில் தான் எழுந்தால் அவர்கள் பயத்தில் சாப்பிட மாட்டார்கள் என்று எண்ணி அவர்களை காணாதது போல் மீண்டும் நித்திரையில் ஆழ்ந்தான்.

பொழுது விடிந்ததும் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தான் அவ்விருவரும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணவில்லை. சரி புறப்பட்டுச் சென்றிருப்பார்கள் என்று அவனுக்குள் சொல்லிக்கொண்டான். நதியில் குளித்து பின் பயணத்தை தொடர வேண்டும் என்று முடிவு செய்து நீருக்குள் செல்வதற்கு முன் முகத்தை கழுவுவதற்கு கைகளில் நீர் எடுக்க குனிந்தான் நீரில் அவன் முகத்தை பார்த்து அதிர்ச்சியுற்றான். மீண்டும் பார்த்தான் அவனால் நம்ப முடியவில்லை. அவனது முகத்தில் ஒரு மாற்றம். அவனது முழம் பற்கள் எல்லாம் மாய்ந்து அழகான பல் வரிசையுடன் முகம் மிளிர்ந்தது. மேலும் அவன் சாப்பாட்டு பையில் பொன்னும், வைரமும், வைடூர்யமும் மின்னின. மகிழ்ச்சியில் வேகம் கூடியது அவன் நடையில். தன் தாயிடமும் நண்பனிடமும் கூற வேண்டும் என்ற ஆர்வத்தில் தனது  ஊருக்கே  திரும்பி சென்றான். கிராம மக்கள் எல்லோரும் எப்படி இந்த அதிசயம் நடந்தது என்று வினவினார்கள். அவனும் நடந்தவற்றை ஒளிவு மறைவு இன்றி அப்படியே கூறினான்.  

இதை அனைத்தையும் கேட்ட ஜான் பல்லன் உடனே இரண்டு பையில் உணவு பொட்டலங்கள் கட்டிக்கொண்டு நண்பனிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டு சென்றான். 

அதே நதிக்கரையை பொழுது சாயும் வேளையில் சென்றடைந்தான். ஒரு பையிலிருந்த உணவை உண்டு மற்றொரு பையை சற்று தள்ளி வைத்து விட்டு உறங்காமல் அவ்விரு உருவங்களுக்காக காத்திருந்தான். நள்ளிரவில் சப்தம் கேட்டது மெல்ல திரும்பி பார்த்தான் அதே தேவதைகள் போல இருவர் பையை திறந்து பார்த்தனர் ஆனால் அதில் நல்ல உணவு இல்லாததால் அவர்கள் உண்ணாமல் எழுந்து ஜான் பல்லனை பார்த்து “பாவம் இம் மானிடன் நல்ல உணவும் இல்லை பற்களும் இவ்வளவு நீளமாக இருக்கிறதே” என்று

அவர்களுக்குள் உரையாடினர். இதை அனைத்தையும் பார்த்தும் கேட்டும் கொண்டிருந்த ஜான் பல்லனுக்கு கோவம் ஏனெனில் அந்த தேவதைகள் உணவை உண்ணாததால் வைரமும்,  வைடூரியமும் வைக்கவில்லையே என்று. தேவதைகள் கூறிக்கொண்டனர் “உணவு தான் இல்லை வந்ததற்கு அவன் பல்லையாவது சரி செய்துவிட்டு செல்வோம்” என்று கூறிக்கொண்டே அவன் அருகில் சென்றனர். ஜான் பல்லனுக்கு பொன்னும் பொருளும் கிடைக்கவில்லையே என்ற கோபம் ஒருபுறம் ..எங்கே இவர்கள் தன் பற்களை முழம் பல்லனை போல் அழகாக்காமல் போய் விடுவார்களோ என்ற எண்ணம் மறுபுறம். இந்த சிந்தனை அவனை பொருமை இழக்க செய்தது. தவளை தன் வாயால் கெடும் என்பது போல் ….ஜான் பல்லன் சும்மா இல்லாமல் “அவன் பல்லைப்போல எம்பல்லும்” என்று கூற தேவதைகள் சட்டென்று மறைந்தனர். ஜான் பல்லனும் மயங்கி விட்டான்.

மறுநாள் சூரியன் உதயம் ஆகி பல மணிநேரம் ஆனபிறகு எழுந்தான் ஜான் பல்லன். உடனே வேகமாக நதியில் முகம் பார்க்க ஓடினான். நீரில் முகம் பார்க்க குனிந்தான் அதிர்ச்சியுற்றான். முன்னிருந்த ஜான் பல்லுடன் முழம் பல்லும் சேர்ந்து ஒரு அடி நீளத்திற்கு பல் இருந்தது. கவலையில் ஆழ்ந்தான். ஊருக்கு சென்றான். அனைவரும் சிரித்தனர். முன்னாள் முழம் பல்லன் ஓடி வந்து வினவினான்.

விம்மி விம்மி அழுதுகொண்டே ஜான் பல்லன் நடந்தவற்றை கூறினான். இப்பொழுது அழுது என்ன பயன். முன்னாள் முழம் பல்லன் அவனை சமாதானம் செய்தான். அவனுக்கு கிடைத்த வைரம், வைடூர்யங்களை ஜான் பல்லனுடன் பகிர்ந்து கொண்டான். ஜான் பல்லன் தன் நண்பனை கட்டி கொண்டு “நண்பா உன்னைப் போல ஒரு நல்லுள்ளம் படைத்தவன் மீது நான் பொறாமை கொண்டதாலும், அதன் காரணமாக உன்னை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று நினைத்ததாலும், இந்த ஊர் மக்கள் உன்னை பழித்து என்னை உயர்த்தி பேச வேண்டும் என்று எண்ணியதாலும் வந்த விளைவு தான் இந்த ஒரு அடி நீள பற்கள். நான் கற்றுக் கொண்ட இந்த பாடத்தை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.” என்று கூறியதுடன் விடாமல் வாழ்ந்தும் காட்டினான்.

ஜான் பல்லனைப் போல் பட்டால் தான் திறுந்துவேன் என்று இல்லாமல் பெரியவர் சொல்கேட்டு அல்லது இது போன்ற கதைகள் கேட்டு /படித்து நம்மை திருத்திக் கொண்டால் வாழ்வில் எந்தவிதத்திலும் நஷ்டப்படாமல் நிம்மதியாக வாழலாம்.

பொறாமை குணம் கொண்டால் நஷ்டமும் சில நேரங்களில் அழிவும்  நிச்சயமே. மல்லிகைப்பூ தாமரையை கண்டு பொறாமை கொண்டால் தன்னிடம் இருக்கும் சுகந்தம் என்ற குணத்தை மறக்கின்றது, தன்னை தலையில் சூடி அழகு பார்ப்பார்கள் என்பதை மறக்கின்றது. அதுபோல ஒருவர் மற்றொருவர் மீது பொறாமை கொண்டால் தனது நற்குணங்களை தானே மறந்து விட நேரிடும். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் தனித்தன்மைகள், குணாதிசயங்கள் எல்லாம் வேறுபடும். அதில் நல்லதும் கெட்டதும் கலந்துதான் இருக்கும். அன்னப்பறவை எப்படி பாலையும் நீரையும் கலந்து கொடுத்தால்…பாலை மட்டும் குடிக்குமோ அதுபோல நல்லதை உணர்வோம், அதை மட்டும் பின்பற்றுவோம். வாழ்க்கையை சிறப்பாக வாழ்வோம்!

❤️முற்றும்❤️

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் வில்வித்தை கலையை கற்ப்பித்த ஆசான் துரோணாச்சாரியார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவருக்கு அஸ்வத்தாமன் என்ற ஒரு மகன் இருந்தான்.

குழந்தை பிறந்தவுடன் குதிரை போல் கனைத்ததால் அவருக்கு அஸ்வத்தாமன் என்று பெயர் சூட்டினார்கள். “அஸ்வம்” என்றால் சமஸ்கிருதத்தில் “குதிரை ” என்பது பொருள்.

துரோணாச்சாரியாரின் செல்லப்பிள்ளையாக வளர்ந்தான் அஸ்வத்தாமரன். குருவாகிய தன் தந்தையிடம் இருந்து எல்லா வித்தைகளையும் கற்று வில் வித்தையில் சிறந்து விளங்கினான்.

அஸ்வத்தாமனின் தாய் வில்வித்தையில் சிறந்து விளங்கிய கிருபாச்சாரியாரின் சகோதரி ஆவார். கிருபாச்சாரியார் அஸ்வத்தாமனுக்கும், பாண்டவர்களுக்கும் மற்றும் கௌரவர்களுக்கும் வில்வித்தையில் குருவாக இருந்து பல கலைகளை கற்ப்பித்துள்ளார்.

அஸ்வத்தாமன் தன் தாய் மாமாவிடமும், தந்தையிடமும் பாடங்களை படித்து வில்வித்தையில் பல நுணுக்கங்களையும், ரகசியங்களையும் வேகமாக கற்று தேர்ந்து சிறந்த வில்லாளியாக திகழ்ந்தான்.

பாண்டவர்கள் கௌரவர்களால் பகடை ஆட்டத்தில் தோற்க்கடிக்கப்பட்டு காட்டில் இருந்த சமயத்தில் அஸ்வத்தாமன் கிரேஷ்ணனிடமிருந்து ஏதாவது தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் கிருஷ்ணரை பார்க்க சென்றான்.

மாயக்கண்ணனுக்கு அஸ்வத்தாமனின் எண்ணம் தெரியாதா என்ன? இருந்தும் ஒன்றும் தெறியாதது போல் வா அஸ்வத்தாமா வா என்றார்.

தான் ஏதாவது கண்ணனிடம் வாங்கியே தீரவேண்டும் என்று அஸ்வத்தாமன் கூறலானான் ” கிருஷ்ணா என்னிடம் இருக்கும் அஸ்திரங்களில் தலையாயதும் மிக சக்தி வாய்ந்ததும், யார் மீது ஏய்தினாலும் அவர்களை கொன்று விடும் பிரம்மஷீரா அஸ்திரத்தை உனக்கு தருகிறேன் அதற்கு பதிலாக உன்னுடைய சுதர்சன சக்கரத்தை தருவாயா? எனக்காக இதை நீ செய்ய வேண்டும். நான் மிகவும் நன்றியுடன் இருப்பேன்” என்றான்.

 மனதார கண்ணனை நினைத்து வேண்டினாலே நமக்கு வேண்டியதை கேட்காமலேயே அள்ளித்தருவார் அந்த பரந்தாமர். அவரிடம் போய் நான் ஒன்று தருகிறேன் நீ ஒன்று தா என்று சொன்ன அஸ்வத்தாமனை பார்த்தார் கிருஷ்ணர்.

கிருஷ்ணர் தருவாரா இல்லை மறுத்துவிடுவாரா என்ற குழப்பத்தில் நின்றிருந்த அஸ்வத்தாமனை பார்த்து கண்ணனுக்கே உரித்தான புன்முறுவலுடன் “எனக்கு இந்த வர்த்தகம் பிடித்திருக்கிறது. நான் என் சுதர்சன சக்கிரத்துக்கு உன் பிரம்மஷீரா அஸ்திரத்தை மாற்றிக்கொள்ள தயார் ” என்றார். சொல்வதோடு நிறுத்தாமல் “இதோ எடுத்துக்கொள்” என்று அஸ்வத்தாமனிடம் நீட்டினார்.

அஸ்வத்தாமன் சக்கரத்தை எடுக்க முயன்றான் ஆனால் அவனால் கிருஷ்ணனின் கரங்களில் இருந்து தூக்க முடியாமல் திகைத்து நின்றான்.

கிருஷ்ணன் அஸ்வத்தாமனை பார்த்து கேட்டார் ” அஸ்வத்தாமா உன்னால் சுதர்சன சக்கரத்தை தூக்கக்கூட முடியவில்லையே பின்னர் எப்படி அதை உபயோகிப்பாய்”

அஸ்வத்தாமனுக்கு பெருத்த அவமானமாகவும், சங்கடமான தருணமாகவும்  இருந்தது. செய்வதறியாது, கைகளை பிசைந்து கொண்டிருந்தவனை பார்த்து சிறு புன்னகையுடன் கிருஷ்ணர் கூறினார் ..

” உன்னிடம் இருப்பதை கொண்டு திருப்த்தியாக வாழ பழகு. உன்னிடம் உள்ள ஆயுதத்தை உபயோகித்து சண்டையிட்டு வெற்றி காண முயற்சி செய். என்னுடைய ஆயுதம் உனக்கு மிக கனமானதாகும்.” 

இது அஸ்வத்தாமனுக்கு மட்டும் அல்ல நாம் அனைவருக்கும் நல்ல  பாடமே. 

அடுத்தவரின் பொருள் மீதோ அல்லது அடுத்தவர் வாழ்க்கை மீதோ ஆசை கொண்டு அதே நமக்கு வேண்டும் என்றோ அல்லது அதே வாழ்க்கை நாமும் வாழ வேண்டும் என்று நினைத்தால் முடிவு அஸ்வத்தாமனின் நிலைமை தான்  நமக்கும்.

இருப்பதைக்கொண்டு நலமுடன் வாழ்வோம்🙏

❤️முற்றும்❤️

நமது தமிழ், நமது மொழி. மூன்றாம் பகுதி உங்களுக்காக ….

தமிழ் மொழி சாதாரணமாக ஒரு மொழியின் பெயர் மட்டுமல்ல.. அதற்கு அழகு, இனிமை, அமுது என்றெல்லாம் அர்த்தம் உள்ளது. தமிழை தனித்தன்மை வாய்ந்த மிருதுவான அமிழ்தம் என்றும் கூறுவர். தம்+இழ் தமது உடைமை என்றும் பொருள் கூறியுள்ளனர். தம்+இதழ்+மொழி தமிதழ் மொழி பின்னர் தமிழ் மொழி ஆனது என்றும் சிலர் கருதுகின்றனர்.

எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது. இந்த எழுத்து வரக் கூடிய எந்தச்சொல்லும் பெரும்பாலும் அழகையும் , இனிமையையும் குறிப்பதகாவே இருக்கிறது. உதாரணத்திற்கு மழலை,குழல்,அழகு,குழந்தை,கழல்,நிழல்,பழம்,யாழ் இப்படி ‘ழ’வருகிற எல்லாமே நமக்கு விருப்பமானவை அல்லது பிடித்தவைகளே. ஆகவே இனிமையான ‘ழ’வைத் தன்னுள்ளே உடையது ‘தமிழ்’ (தமி+ழ்) என்பதும் ஒரு அழகான விளக்கமாக எனக்குப்பட்டதால் பகிர்ந்துள்ளேன்.

இனிமையான தமிழின் “ழ”கரம் வேறு எந்த மொழியிலும் இல்லை. அப்படியே இருந்தாலும் அது நமது மொழியிலிருந்து பெற்றவையாகும். இப்படி தனித்துவம் வாய்ந்த தமிழ் மொழி நமக்கு தெரியும் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

“ழ” என்ற எழத்தும், உச்சரிப்பும் நமக்கே உரித்தானது. இனி ஆங்கிலத்திலும் “Tamizh” என்றே நாம் எழுத பழக்கப்படுத்திக்கொள்வோம். இவ்வளவு பெருமைக்குரிய “ழ” வை “ல” என்று உச்சரிக்கும்போது எனது நெஞ்சுப் பொறுக்குதில்லையே….என்று பாரதி போல் சொல்ல தோன்றுகிறது.

அழை என்பதை அலை என்றால்
உழு என்பதை உளு என்றால்
எழு என்பதை எலு என்றால்
கழகம் என்பதை கலகம் என்றால்
கிழி என்பதை கிலி என்றால்
தமிழுக்கே “கிலி” பிடிக்கும்.

அலகும் அழகு
அளகும் அழகு
ஆனால் உண்மையான “அழகு” தமிழை அழகாக உச்சரிப்பதில் உள்ளது.
எனவே அழகு ..அலகு அல்லது அளகு ஆகவும் வேண்டாம்
தமிழ் ..தமில் ஆகவும் அனுமதிக்க வேண்டாம்.

“தமிழ் என்பது அழகு
அதை அழகாக உச்சரிக்க பழகு”

கற்போம்!!! கற்பிப்போம்!!!! வாரீர்…

வலைப்பதிவு வாசகர்களுக்கு எனது முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்களும், தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும், தமிழ் பண்பாடும் எங்கெல்லாம் எவ்வாறெல்லாம்பயணித்துள்ளனர்/பயணித்துள்ளது என்பதை பற்றி போனபதிவில் எனக்கு தெரிந்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். அதற்கு  விருப்பம் மற்றும் பாராட்டு தெறிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நான் படித்து, கேட்டு, தெரிந்து கொண்ட நம் தமிழ் மொழியின் சுவாரசியமான விஷயங்களின் இரண்டாம் பகுதி இதோ உங்களுக்காக.  

உலகில் மிக பழமையான மொழிகளில் ஒன்று நமது தமிழ். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  அடிச்சநல்லூர் தொல்பொருள் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் படி பார்த்தால் நம் மொழி சுமார் கி.மு 500 வருடங்களுக்கு முன் தோன்றியது என்றால் ஆச்சர்யம் தொற்றிக்கொள்ளாதா என்ன!!!! கி.மு காலத்தில் வழக்கத்தில் இருந்திருந்தாலும் இன்றும் ஜீவித்திருக்கும் பழமையான மொழி நமது தமிழ் மொழியே. ஆதியில் தோன்றினாலும் மாய்ந்து போகாமல் இன்றும் உலகளவில் பேசப்படும் மொழியாக தமிழ் திகழ்வதில் ஒவ்வொரு தமிழரும் தோள் தட்டி கொள்வோம்.

அறிஞர்கள் தமிழ் மொழியை மூன்று காலக்கட்டங்களாக பிரித்துள்ளனர். பழைய தமிழ் (கிமு 300 – கிபி 700), இடைக்கால தமிழ் (700 – 1600) மற்றும் நவீன தமிழ் (1600 – இன்றுவரை) 

ஒரு கடவுளாக உருவகப்படுத்தப்பட்ட ஒரே மொழி நமது தமிழ் மொழி. அக்கடவுளை தமிழ் தாய் என்று அழைப்பர். தமிழ் தாய் கோயில் தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அமைந்துள்ளது. தமிழ்த்தாய்க் கோயிலின்  பரிவார தெய்வங்களாக,  வள்ளுவரும், இளங்கோவடிகளும், கம்பரும் தனி விமானம் கொண்டு காட்சி தருகின்றனர். தமிழ்த்தாய்க் கோயிலின் நுழைவாயிலின் முன் துவார பாலகிகளாக ஒலித்தாய், வரித்தாய் நிறுவப் பெற்றிருக்கின்றனர். ஒரு மொழிக்கு முக்கியமான ஒலி மற்றும் வரி துவார பாலகிகளாக …ஆகா விவரிக்க வார்த்தைகள் இல்லாமல் நின்றேன்….என்ன அருமையான அமைப்பு. கருவறையில் தமிழ்த்தாயின் வலப்புறம் அகத்தியரும், இடப்புறம் தொல்காப்பியரும் நின்ற நிலையில் விளங்குகின்றனர்.  தமிழ்த்தாய் நான்கு கைகளுடன் தாமரைப் பீடத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கின்றாள். சேர, சோழ, பாண்டியர்களான மூவேந்தர்களின் தமிழ்ப்பற்றை உணர்த்தும் வகையில் அவர்களின் சின்னங்களான வில், புலி, மீன் ஆகியவை தமிழ்த்தாயின் பின்புறம் உள்ள திருவாச்சியில் பொறிக்கப்பட்டுள்ளன. மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ் தாய் வாழ்த்து தமிழ் தாயான நமது தமிழ் மொழியை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமைந்திருக்கும். இப்பாடல் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.  வேறு எந்த மொழிக்காவது இந்த சிறப்புகள் இருக்கிறதா?

நம் மொழியின் சிறப்புகள் என்னை முற்றுப்புள்ளி வைக்க தடை செய்வதனால் மீண்டும் அடுத்த பதிவில் நம் மொழியின் இன்னும் பல சுவாரசியமான தகவல்களுடன் சந்திப்போம். வாழ்க தமிழ்!!

ஒரு குழந்தை பிறந்து மூன்று மாதங்களில் கொடுக்கும் சப்தம் அ என்றே இருக்கும். குழந்தையின் தாய் சாதம் ஊட்டும் போதும் அ…அ…..அம் என்று சொல்லி தான் ஊட்டுவாள். நாம் முதலில் குழந்தையை அ…அ…அ‌‌…ம்மா என்றும் அ…அ…அ…அப்பா என்றும் தான்  சொல்ல கேட்டு மகிழ்கிறோம். சரஸ்வதி பூஜை அன்று குழந்தைகளை முதல் மதலில் நெல்லை பரப்பி அதில் “அ” என்றே எழுதச்செய்வோம். நாமே எங்காவது இடித்துக்கொண்டாலோ அல்லது கீழே விழுந்தாலோ அம்மா என்று தான் முதலில் கூறுவோம். இப்படி நம் முதல் சப்த்தமும் சரி, எழுத்தும் சரி  அகரத்திலேயே  தொடங்குகின்றன. 

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டே தொடங்குகின்றன. சிறந்த இந்த தமிழ் மொழியானது எங்கெங்கெல்லாம் பயணித்துள்ளது எவ்வாறெல்லாம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம் வாரீர்….

நமது தமிழ் மொழி உலகில் பேசப்படும் மொழிகளில் 20ஆது இடத்தையும், நம் மொழி பேசுபவர்கள் 1.06% விகிதம் உள்ளார்கள் என்று விக்கிப்பீடியாவில் பதிவாகியுள்ளது. ஆனால் நம்முன்னோர்கள் கூற்றுப்படி கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி நம் தமிழ் மொழியாகும்.

கண்டெடுக்கப்பட்ட பல கல்வெட்டுகள் மற்றும் நாணயங்கள் வைத்து நம்மவர் எங்கெல்லாம் பயணித்து நம் மொழியையும் பயணிக்க செய்தனர் என்பதை நாம் தெறிந்து கொள்ள வேண்டும். நான் அறிந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தமிழானது ஆசியா, ஆப்பிரிக்கா, சீனா, கம்போடியா, எகிப்து மற்றும் இந்தோனேசியா வரை எட்டியுள்ளது. 18ஆம் நூற்றாண்டில் ஃப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலேயர் நம் தமிழ் மக்களை ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள பல நாடுகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால் நம் மொழி மற்றும் கலாச்சாரம் இன்றளவும் பல நாடுகளில் காணமுடிகிறது. உதாரணத்திற்கு மலேசியாவில் இருபது லட்சத்திற்கும் மேலானவர்கள் தமிழ் மொழி பேசுபவர்கள் என்று பதிவாகியுள்ளது என்றால் பாருங்களேன். 

சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் நமது தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகும். ஃப்ரெஞ்ச் காரர்களால்  மொரீசியஸில் முதல் முதலில் குடியேறியவர்கள் நம் தமிழ் மக்களே. பின்பு ஆங்கிலேயர்கள் ஃப்ரெஞ்ச் காரர்களை வீழ்த்துவதற்கு மேலும் பல தமிழர்களை மொரீசியஸில் குடியேர செய்தனர். மொரீசியஸ் நாணயங்கள் தமிழ் மொழியில் இருக்கும். 

இவ்வாறு உலகம் முழுவதும் தமிழ் மொழியும், கலாச்சாரமும், பண்பாடும் வளர்ந்துள்ளது. நமது ஹரியானா மாநிலத்தில் தமிழ் மொழி உத்தியோகபூர்வ அங்கிகாரம் பெற்று திகழ்ந்தது 2010 ஆண்டு வரை. அதற்கு பின் பஞ்சாபியாக மாற்றப்பட்டது.

மேலும் தமிழ் மொழி பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை  அடுத்த பதிவில் காண்போம்.

ஊரடங்கு உத்தரவுக்கு நன்றி 

 நீ எங்களை மறந்திடுவாய்

ஆனால் எங்களால் அது முடியுமா?

உன்னை நாடு முழுவதும் பிறப்பித்த போது

பலரின் கேலி, கிண்டல், மீம்ஸ், விவாதங்களுக்கு உள்ளாக்கப்பட்டு பின்பு எங்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கேற்றாய்

உன்னால் உணர்ந்தோம் எங்கள் குடும்பத்தினரை 

உன்னால் அறிந்துக்கொண்டோம் ஆடம்பரம் அவசியம் இல்லை என்று

உன்னால் தீயப்பழக்கம் உள்ளவர்கள் கூட ஒரு மாதம் தங்கள் பழக்கத்தை மறந்திருந்தனர்

உன்னால் தெரிந்தது அண்ணாச்சி கடைகளே நம்பகமானது என்று

உன்னால் உணர்ந்தோம் வீட்டு உணவின் அருமை

உன்னால் அறிந்தோம் நேரத்தின் முக்கியத்துவம்

உன்னால் தெரிந்துக்கொண்டோம் பலரின் வெளிவராத திறமைகளை

உன்னால் உணர்ந்தோம் திரைப்படம் மற்றும் திரைப்பட நடிகர்கள் வெரும் பொழுதுபோக்கிற்கே என்று

உன்னால் புரிந்துக்கொண்டோம் மருத்துவம்,  மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறையினர், அனைத்து அரசாங்க ஊழியர்களின் அருமை பெருமைகளை 

உன்னால் தெரிந்துக்கொண்டோம் அவசியத்திற்கும், அநாவசியத்திற்குமான வித்தியாசம்

எங்களுக்கு இவ்வளவு உணர்த்திய உன்னை மறப்பது எளிதல்ல

உன்னை பிறப்பிக்க காரணமாக இருந்த எதுவானாலும் /எவரானாலும்…  அவைகள் / அவர்கள் ஓடி ஒளிந்து கொள்ள நேரம் வந்துவிட்டது

ஏனெனில் நாங்கள் புத்துணர்ச்சியுடன், புதிய எண்ணங்களுடன், புதிய யுக்திகளுடன், மறந்துப்போன பழய பழக்கவழக்கங்களை புதுப்பித்து, புதிய வாழ்க்கை முறையை கையாண்டு புதுப்பொலிவுடன் மிளிர ஆயத்தம் ஆகிவிட்டோம்!!!!