
உலகம் வகுத்துக் கொடுக்கும் ‘டெம்ப்ளேட்’படி வாழ்வது சுலபமா, நம்முடைய இயல்போடு வாழ்வது சுலபமா என்ற கேள்வியை, நடிகை நித்யா மேனனுடனான நேர்காணலில் திரு. கோபிநாத் முன்வைக்கிறார். அதற்கு நித்யா மேனன் அளித்த பதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நம்முடைய இயல்பை விட்டுக்கொடுக்காமல் வாழ வேண்டும் என்ற அந்தக் கருத்தில் எனக்கும் முழு நம்பிக்கை உண்டு. நானும் அப்படித்தான் வாழ முயல்கிறேன். அந்த நேர்காணல் என் மனதில் எழுப்பிய சில சிந்தனைகளை இந்தப் பதிவில் பகிர்ந்துள்ளேன்.
பல நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது, சிலர் தங்களை நேர்த்தியாக அலங்கரித்துக்கொண்டு வருவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
எனக்கோ ஒரு புடவையைச் சரியாக உடுத்திக்கொண்டு, சன்ஸ்கிரீனும் கொஞ்சம் காம்பாக்டும் போட்டுக்கொண்டு கிளம்பவே நேரமாகிவிடுகிறது. இவர்கள் எப்படி இவ்வளவு பொறுமையாகவும் நேர்த்தியாகவும் தயாராகி வருகிறார்கள் என்று நினைத்ததுண்டு!
அது அவர்களின் விருப்பம். அதில் அவர்களுக்கு மகிழ்ச்சி இருந்தால், அதைவிட வேறென்ன வேண்டும்?
ஆனால், சிலர் தங்களுக்கு வசதியாக இல்லாத உடையில் சிரமப்படுவதைப் பார்க்கும்போது ஓர் எண்ணம் எழுகிறது. அவர்களுக்குப் பிடித்து அணிந்திருந்தால் சரி. “இந்த நிகழ்ச்சிக்கு இப்படித்தான் வர வேண்டும், இந்த இடத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்ற அழுத்தத்திற்காக அணிந்திருந்தால்?
இடம் எதுவாக இருந்தாலும், நிகழ்ச்சிக்குரிய தேவைகளையும் மதித்து, நமக்குச் சௌகரியமான உடையில் நம்மால் பங்கேற்க முடியாதா?
புடவை அணிந்து சென்ற சில இடங்களில் என்னை மேலும் கீழுமாகப் பார்த்தவர்கள் உண்டு. சிலர் நேரடியாகவே சொல்லியிருக்கிறார்கள்:
“நீங்கள் இந்தத் துறையில் இருக்கிறீர்கள்… உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். மற்றவர்களைப் பாருங்கள்; வேலைக்குப் போக ஆரம்பித்தாலே எவ்வளவு மாறிவிடுகிறார்கள்! நீங்கள் என்னவென்றால்…”
ஒருமுறை இப்படிக் கூறியவரிடம் நான் கேட்டேன்:
“ஏங்க, நான் நானாக இருப்பது அவ்வளவு பெரிய குற்றமா?”
பிறகு அங்கிருந்து விலகிச் சென்றேன்.
இதைத்தான் உலகம் நமக்காக வகுத்துக் கொடுக்கும் ‘டெம்ப்ளேட்’ என்று நினைக்கிறேன்.
இந்தத் துறையில் இருந்தால் இப்படித்தான் தோன்ற வேண்டும். இந்த இடத்திற்குச் சென்றால் இப்படித்தான் உடையணிய வேண்டும். இந்த வட்டத்தில் பழகினால் இப்படித்தான் பேச வேண்டும்…
ஒவ்வொரு எதிர்பார்ப்பிற்கும் ஏற்றபடி நம்மை மாற்றிக்கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் நம்மையே நாம் தொலைத்துவிட மாட்டோமா?
நாம் யார்? நமக்கான தனித்துவம் என்ன? நமக்கு உண்மையில் எது பிடிக்கும், எது பிடிக்காது?
உணவிலும் இதே மனப்பான்மையைப் பார்க்க முடிகிறது.
“எனக்கு மெக்சிகன் உணவு பிடிக்கும்”, “நான் கான்டினென்டல் உணவைத்தான் விரும்புவேன்” என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. புதிய உணவுகளைச் சுவைப்பதும் ரசிப்பதும் அவரவர் விருப்பம்.
ஆனால், அதற்காக இட்லி, தோசை, பொங்கலை ஏன் இகழ வேண்டும்? அவற்றை விரும்பி உண்பவர்களை ஏன் ஏளனம் செய்ய வேண்டும்?
நம் ரசனையைச் சொல்ல, அடுத்தவரின் ரசனையைத் தாழ்த்த வேண்டியதில்லையே!
பிற நாட்டுப் பண்பாடுகளை அறிந்துகொள்வதும், அவற்றில் பிடித்தவற்றை ஏற்றுக்கொள்வதும் அழகான விஷயங்கள்தான். ஆனால், அவற்றை ஏற்றுக்கொண்டால்தான் நமக்கு மதிப்பு கிடைக்கும் என்று நினைப்பதில்தான் சிக்கல் தொடங்குகிறது.
நம்மை மாற்றச் சொல்வது பல நேரங்களில் அந்த நாடுகளோ, அங்குள்ள மக்களோ அல்ல. நம்மைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்புகளும், அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற நமது அழுத்தமும்தான்.
நீங்கள் விரும்பி மாறுகிறீர்கள் என்றால், மகிழ்ச்சியாக மாறுங்கள். உங்கள் ஆடை, ஒப்பனை, உணவு, வாழ்க்கைமுறை, அனைத்திலும் உங்களுக்கான தேர்வு இருக்கட்டும்.
அதே தேர்வுச் சுதந்திரம் மற்றவர்களுக்கும் உண்டு என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.
நீங்கள் மாற விரும்புவதால், மாற விரும்பாதவர்களைக் கேலி செய்ய வேண்டியதில்லை. அவர்கள் மாற விரும்பாததால், உங்கள் தேர்வுகளைக் குறை சொல்லவும் தேவையில்லை.
“மாற்றம் ஒன்றே மாறாதது!”
உண்மைதான். ஆனால், மாற்றம் என்பது வெளித்தோற்றத்தோடு முடிந்துவிடுகிறதா?
நமது அறிவில், சிந்தனையில், திறமையில், உழைப்பில், சக மனிதர்களை அணுகும் விதத்தில் ஏற்படும் வளர்ச்சியும் மாற்றம்தானே?
சுதா மூர்த்தி அவர்களை நினைத்துப் பார்க்கிறேன். அவரது அடையாளத்திற்கு வலிமை சேர்ப்பவை அவரது பணிகளும் சாதனைகளும் சிந்தனைகளும்தான். ஒருவரின் திறமையையும் மதிப்பையும் அவரது தோற்றத்தை வைத்து அளவிட கூடாது என்பதற்கு அவரை ஓர் உதாரணமாகப் பார்க்கிறேன்.
அத்தகைய மாற்றத்தையே நம்மிடம் எதிர்பார்க்கிறேன்.
சிந்தனையில் வளர்வோம்.
அறிவாற்றலை மேம்படுத்திக்கொள்வோம்.
சக மனிதர்களுக்கும் தனிப்பட்ட விருப்பங்கள் உண்டு என்பதை உணர்வோம்.
கூட்டத்தோடு ஒத்துப்போக வேண்டும் என்பதற்காக
உங்கள் இயல்பை விட்டுக்கொடுக்காதீர்கள்.
கூட்டத்தில் தனித்து நின்றாலும்,
தன்னம்பிக்கையுடன் நில்லுங்கள்.
நீங்கள் நீங்களாக இருப்பதில் பெருமை கொள்ளுங்கள்.
பிறரும் அவர்களாக இருப்பதை மதியுங்கள்.
– நா. பார்வதி
#maisaaral #pesummai #thigazhyatheatre #நாம்நாமாகஇருப்போம் #தனித்துவம் #சுயமரியாதை