
‘‘எப்பப் பார்த்தாலும் நைட்டிதானா?’ என்று கேலி செய்பவர்களும் உண்டு. நைட்டி போட்டுக்கொள்பவர்கள் எல்லாரும் ஊர்க்கதை பேச ஆரம்பித்துவிடுவார்கள் என்பதுபோல நடித்துக் காட்டிச் சிரிப்பவர்களும் உண்டு.
ஏன், நைட்டி அணிந்தவர்கள்தான் புறம் பேசுவார்களா என்ன?
பட்டுப்புடவை கட்டிக்கொண்டால் பேச்செல்லாம் பட்டுப்போல மென்மையாகிவிடுமா? இல்லை பாண்ட், சட்டை போட்டவர்களுக்குப் புறம் பேசத் தெரியாதா? 😄
ஒருவர் தனக்குப் பிடித்த உடையை அணிந்துகொள்கிறார். அதை வைத்து அவரை ஏன் மட்டப்படுத்த வேண்டும்? ஒருவேளை, உடலை முழுவதுமாக மூடுவதுதான் இந்த நைட்டி செய்த குற்றமோ?
நைட்டி போட்டுக்கொண்டு வீட்டு
வேலை செய்வதில் கிடைக்கும்
சுகமும் சுதந்திரமும் அலங்கார
உடையில் கிடைக்குமா?
நாள் முழுவதும் ஓடியாடி உழைத்துவிட்டு, வீட்டுக்கு வந்ததும் நைட்டிக்கு மாறும் அந்த நிமிடத்தில் ஒரு தனி நிம்மதி இருக்கிறது. நம் வீட்டுச் சோபாவில் கால்களை மடக்கி உட்கார்ந்து தேநீர் குடிக்கக்கூட உடையோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா என்ன?
வாசலில் செருப்பைக் கழற்றும்போதே பாதி அலுப்பு போய்விடும். மீதிப் பாதி, நைட்டி போட்டதும் போய்விடும். அந்த ‘அப்பாடா!’வில்தான் நைட்டியின் அருமை இருக்கிறது.
இதில் வேடிக்கை என்ன தெரியுமா? நைட்டி அணியும் பலர் இந்தக் கேலிக்கெல்லாம் செவிமடுப்பதில்லை.
‘என் நைட்டி, என் உரிமை!’
என்று கொடி பிடிப்பதும் இல்லை. தங்களுக்குப் பிடித்த உடையில் அவ்வளவு இதமாக இருக்கும்போது, அடுத்தவர் என்ன அணிந்திருக்கிறார் என்று பேசத் தோன்றுவதில்லையோ என்னவோ!
எல்லா உடைகளிலும் நிறையும் குறையும் உண்டு. எது நிறை, எது குறை என்பது அதை அணிபவருக்குத்தான் தெரியும்.
வீடு திரும்பி நைட்டிக்கு மாறியதும்,
நாள் முழுக்க இருந்த பரபரப்பு
கொஞ்சம் தணியும். சிலருக்கு,
அந்தச் சின்ன நிம்மதிதான் நைட்டியின்
பெரிய நிறை.
‘என் உடை, என் சௌகரியம்’ என்பது நைட்டிக்கும் பொருந்தும்தானே?
நமக்குப் பிடித்த உடையில் நாம் நிம்மதியாக இருப்பதுபோல,
பிறரும் தங்களுக்குப் பிடித்த உடையில் நிம்மதியாக இருக்கட்டுமே!
எத்தனை கேலியும் கிண்டலும்
வந்தாலும், கெத்தாகவே வலம் வரும் நைட்டிக்கும் அதை அணிவோருக்கும்
ஒரு சின்னச் சமர்ப்பணம்!
நைட்டி – நிறைவான உடை,
மனம் நிறையும் உடை!
-நா. பார்வதி
#நிறைதான்நைட்டியின்குறையா #நைட்டியின்நிறை #என்உடைஎன்சௌகரியம் #உடைத்தேர்வுஎன்உரிமை #நகைச்சுவையுடன்ஒருசிந்தனை #Maisaaral #pesummai #thigazhyatheatre