
வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராகவனின் மகன் ராமு, வணிகம் மற்றும் மேலாண்மை படிப்பை முடித்து, பெரிய தொழில் நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் பணியாற்றி வந்தான்.
ராமுவின் கடின உழைப்பை அறிந்த ராகவன், தனியாக ஒரு தொழிலும் தொடங்கும் படி கூற அதற்கு ராமு…அது சம்பந்தமான படிப்பு படித்த தன்னை விட அப்பாவுக்கு என்ன தெரிந்துவிட போகிறது என்று அவரின் சொல்லை மதிக்காமல் அலட்சியம் செய்தான்.
ஒரு நாள் ராமு வேலை பார்த்து வந்த நிறுவனம் சில சிக்கல்களால் மூடப்பட்டது. செய்வதறியாது மனக்குழப்பத்துடன் வீடு திரும்பினான்.
அப்பாவின் மகிழ்ச்சி சிரிப்பொலியாக வாசலில் காலணிகளை கழற்றி வைத்துக் கொண்டிருந்த ராமுவுக்கு கேட்டது.
ராமு வீட்டினுள் நுழைந்ததும், தெருமுனை பெட்டிக்கடை நடேசன் ஒரு சுவீட் டப்பாவை ராமுவிடம் நீட்டி…
“எல்லாம் உங்கப்பா தயவால் நடந்தது தம்பி. அவர் போல் ஒரு சிறந்த பிசினஸ் மேன் இல்லைன்னு கூட நான் சொல்லுவேன். எங்க கடைக்கு தினமும் வந்து பிசினஸ் சம்பந்தமான பல விஷயங்களையும் நுணுக்கங்களையும் பேச்சோடு பேச்சா சொல்லி கொடுத்ததுல… வர வெள்ளிக்கிழமை என்னோட புது சூப்பர் மார்க்கெட் திறப்பு விழாவுக்கு அப்பாவை தலைமை தாங்கி திறந்து வைக்கும்படி அழைக்க வந்திருக்கேன். சுவீட் எடுத்துக்கோங்க தம்பி.”
என்று சொன்னதும்…அனுபவ அறிவில் சிறந்த ராகவனை மதிக்காத மெத்த படிப்பு படித்த ராமுவின் கன்னத்தில் பளாரென்று ஓர் அறை விழுந்தது போல் இருந்தது.
♥️முற்றும்♥️
நா. பார்வதி