அத்தியாயம் 83: பிள்ளை மனம் பித்து!பெத்த மனம் கல்லு!

“என்ன ஆச்சு அத்தை?” என்று நவீன் கேட்டதற்கு அவன் அத்தை அவனிடம்

“உன் தம்பி அந்த கவின் இருக்கானே அவன் எங்களை உங்க அப்பாகிட்டயோ இல்லை உங்க அம்மா கிட்டயோ பேச விடலை. எங்களை எல்லாம் ஹாஸ்பிடலுக்கும் வரவேண்டாம்ன்னு சொல்லிட்டான். அங்க உங்க மாமா பிச்சு மணிக்கு மட்டும் தான் அனுமதி போல….அதுனால எனக்கு எந்த விவரமும் தெரியாதுப்பா”

“ஒ!! ஓ!!! அப்படியா!! சரி அத்தை அப்போ நானே அப்பாவுக்கு மறுபடியும் ஃபோன் பண்ணிப் பார்க்கறேன். வச்சுடட்டுமா?”

“நீ பண்ணிணாலும் அந்த கால் கவினுக்கு தான் போகும். அது மாதிரி தான் அவன் ஏதோ பண்ணி வச்சிருக்கான். ரொம்ப தான் பண்ணறாப்பா அவனும் அவன் பொண்டாட்டியும். சரி வச்சுடு பா. உனக்கு ஏதாவது தெரிஞ்சுதுனா எனக்கும் சொல்லுப்பா”

“ஓகே அத்தை நான் நிச்சயம் சொல்லறேன்”

என்று ஃபோனை வைத்ததும் அனைத்தையும் கேட்ட மிருதுளா நவீனிடம்

“ஏன் இந்த கவின் இப்படி எல்லாம் பண்ணறான்”

“அது ஒண்ணுமில்லை அவர் தான் பார்த்துக்கறாராம்….நான் காசு கொடுக்கலை இல்ல அதுதான்”

“உங்கிட்ட சரி ஆனா அத்தை கிட்ட எல்லாம் ஏன் அப்படி பண்ணறான்”

“எனக்கென்ன தெரியும் அவாளோட எல்லா ஆக்ஷன்ஸுக்கு பின்னாடியும் ஏதாவது பெரிய ப்ளான் இருக்கும். போக போக தெரியாமலா போயிடும்!!”

“என்னமோ போங்கோப்பா….என்ன குடும்பம் இதுன்னு எனக்கு ஒண்ணுமே புரியலை. ப்ரவின் கல்யாணத்துக்கு அடுத்த மாசம் போறோமே அப்போ நேர பார்த்து விசாரிச்சா போச்சு”

ப்ரவினின் திருமணம் நாள் நெருங்கியது. அவனின் திருமணநாள் முன்தினம் நவீனின் ஒண்ணுவிட்ட சித்தியின் பேத்திக்கு ஆயுஷ்ஹோமம் என்று ஒரு மண்டபத்துக்கு அழைத்திருந்தனர். நவீனையும் மிருதுளாவையும் அங்கேயே நேராக வரச்சொல்லியிருந்தனர் மூத்த தம்பதியர். ஆகையால் இருவரும் நேராக அந்த மண்டபத்துக்கே சென்றனர். அங்கு சென்ற பிறகு தான் இருவருக்கும் தெரியவந்தது அங்கு ஆயுஷ்ஹோமம் மட்டுமின்றி ப்ரவீனின் விரதமும் அங்கு தான் நடக்கிறதென்பது. இவர்கள் மண்டபத்தினுள் நுழைந்ததும் பர்வதம் எல்லார் முன்னிலையிலும் மிருதுளாவிடம்

“என்னது இது நாந்தியும் விரதமும் நடக்கபோறது நீ ஒன்பது கஜம் உடுத்தாம சாதா சாரி கட்டிண்டு வந்திருக்க?”

என்று கேட்டதும் அதிர்ந்து போனாள் மிருதுளா ஆனால் சட்டென்று அவள்

“நீங்க சொன்னா தானே தெரியும். நாங்க குழந்தையோட ஆயுஷ்ஹோமம்ன்னு தான் நினைச்சு வந்தோம். இப்போ நீங்க சொல்லி தான் எங்களுக்கு தெரியும் அப்புறம் எப்படி நான் ஒன்பது கஜத்தில் வருவேனாம்?”

“சரி சரி ஆத்துக்கு போய் ஒன்பது கஜம் கட்டிண்டு வா”

என்று பர்வதம் எல்லார் முன்னும் சொல்ல அதற்கு சொந்தங்கள் எல்லாம் மிருதுளாவிடம்

“அது எப்படி மிருதுளா உங்களுக்கு சொல்லாம இருப்பாளா? என்ன சொல்லுற? எதுவா இருந்தாலும் இந்த நேரத்துல வேண்டாம். நீ சுருக்கப் போய் புடவையை மாத்திண்டு வா”

“அய்யோ சித்தி, அத்தை சத்தியமா எனக்கும் நவீக்கும் இப்போ தான் தெரிய வந்தது. இப்போ என்ன? சாரியை மாத்திண்டு வரணும் அவ்வளவு தானே!”

என்று கூறி சக்தியை தூக்கிக் கொண்டு நவீனிடம் ஆட்டோ பிடிக்கச் சொல்லி இருவருமாக மிருதுளா அம்மா வீட்டுக்கு சென்றனர். அங்கே மிருதுளா பெற்றவர்கள் மண்டபத்துக்கு வருவதற்காக ரெடி ஆகிக் கொண்டிருந்தனர். வீட்டினுள் நுழைந்ததும் நவீனிடம் பட்டாசு போல வெடித்து சிதறினாள் மிருதுளா. நவீனும் தன் வீட்டார் செய்தது தவறு தான் என்றும் அதனால் வெட்கப் படுவதாகவும் கூறினான். விவரம் தெரியாத அம்புஜம் மிருதுளாவிடம் நடந்ததை விசாரித்தாள் அப்போது மிருதுளா மண்டபத்தில் நடந்தவற்றை கூறினாள் அதைக் கேட்டதும் அம்புஜம்

“என்ன சொல்லறேங்கள் ரெண்டு பேரும்? எங்க கிட்ட உங்க தம்பி கவினும் கஜேஸ்வரியுமா தான் வீட்டுக்கு வந்து ப்ரவீன் கல்யாணப் பத்திரிகை கொடுத்துட்டு இன்னைக்கு இருக்குற நாந்திக்கும், விரதத்துக்கும் அழைச்சுட்டு போனாளே !!! அப்புறம் ஏன் உங்க கிட்ட சொல்லலை?”

“ஏன் மா நீயாவது எனக்கு ஃபோன் போட்டு சொல்லிருக்கலாம் இல்ல”

“ஏன்டி எனக்கு என்ன ஜோசியமா தெரியும் அவா உங்க கிட்ட சொல்லலைன்னு!!”

“சரி சரி எல்லாம் எங்க தலை எழுத்து. வா வந்து எனக்கு ஒன்பது கஜம் கட்டி விடு”

என்று புடவையை மாற்றிக்கொண்டு மண்டபத்துக்கு நால்வருமாக சென்றனர். அங்கு சென்றதும் அனைவரின் பார்வையும் மிருதுளா மீது பாய்ந்தன. ஏதோ மிருதுளா தவறு செய்தது போல பார்க்கப்பட்டாள். அனைத்தையும் பொறுத்துக் கொண்டு செய்ய வேண்டியவைகளை எல்லாம் செய்து முடித்ததும் நேராக தன் மாமனாரிடம் சென்றாள் மிருதுளா. அவள் பின்னாலேயே சென்றான் நவீன். அங்கே தனியாக அமர்ந்திருந்த ஈஸ்வரனிடம் மிருதுளா

“ஏன்ப்பா இன்னைக்கு விரதமும் இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிருந்தா நாங்க அதுக்கு தயாரா வந்திருப்போமில்லையா? ஏன் சொல்லலை?”

“எனக்கு ஆப்பரேஷன் ஆனதால ஒண்ணுத்தலையும் நான் பட்டுக்கலை. எல்லாம் கவின் கஜேஸ்வரி தான். அதுனால என் கிட்ட கேட்டுட்டு நோ யூஸ்”

என்று பொறுப்பில்லாமல் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கவினும் கஜேஸ்வரியும் வந்தனர். கவின் நவீனிடம்

“உங்களுக்கு என்ன தெரிஞ்சுக்கணும்? இங்க வேண்டாம் அப்பா ரெஸ்ட் எடுக்கட்டும் அப்படி வாங்கோ”

என்று (பொறுப்பானவராம்….அனைவர் முன்னிலும் காட்டிக்கொள்ள)கூறி அழைத்துச் சென்றனர். அங்கே போனதும் நவீன் கவினிடம்

“எல்லாம் நீங்க தானே பண்ணறேங்கள்ன்னு …கிரியேட் ஆக்கிருக்கேங்கள் ….இருந்துட்டு போங்கோ ஆனா ஏன் எங்கிட்ட இன்னைக்கும் விஷேசம் இருக்குன்னு சொல்லலை?”

“சொன்னோமே!!! என்ன கஜேஸ் சொன்னோம் இல்லையா?”

“ஆமாம் கவின் சொன்னோம்”

“என்ன ரெண்டு பேருமா விளையாடறேங்களா?”

“இல்லை நவீன் அது தான் உன் மாமனார் மாமியார் வீட்டுக்கு போய் சொன்னோமே!!! அவா சொல்லலையா?”

“என் தம்பி விசேஷத்தை என்கிட்ட சொல்லாம அது என்ன மாமானார்ட்ட சொன்னேன்னு சொல்லற?”

“இல்ல நீங்க எல்லாம் ஒண்ணு தானேன்னு நினைச்சேன். “

என்று கவினும் கஜேஸ்வரியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு புன்னகைத்தனர். அதைப் பார்த்ததும் கோபம் கொண்ட மிருதுளா கவினிடம்

“ஓ!! கவின் உங்க குடும்ப பழக்கம் இது தானா எனக்கு தெரியாம போச்சு. பரவாயில்லை இப்போ தெரிஞ்சுண்டுட்டோம். இல்லையா நவீ !!! இனி நம்மாத்துல என்ன விசேஷம்னாலும் கவினோட மாமனார் மாமியார்கிட்ட சொன்னா போதும். சாரி கவின் எங்களுக்கு இந்த முறையெல்லாம் புதுசா …அதுதான் தெரியலை. எல்லாம் கஜேஸ்வரி வீட்டு பழக்கம் போல…சரி சரி இனி அப்படியே செய்துடறோம் என்ன நவீ”

“யூ ஆர் ரைட் மிருது. இனி அப்படியே செய்திடுவோம்”

“என்ன நவீன் மன்னி அப்படி சொல்லறா நீயும் அதை ஆமோதிக்கற?”

“நீங்க எல்லாரும் பண்ணறதைப் பார்த்தா ஆத்திரம் தான்டா வர்றது. உன்னை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்டா. ச்சே போங்கடா….வா மிருது நாம இங்கிருந்து போவோம்.”

என்று அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர் நவீனும், மிருதுளாவும். அன்று மாலை ரிசெப்ஷனுக்கு மண்டபம் சென்று எதிலும் பட்டுக்கொள்ளாமல் இரு நாற்காலியில் அமர்ந்துக் கொண்டனர். அங்கே கவின் கஜேஸ்வரியின் நாடகம் விமர்சையாக நடந்தேறிக் கொண்டிருந்தது. அவற்றையும் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த நவீன் மிருதுளாவிடம் கவின் வந்து

“உங்க ரெண்டு பேருக்கும் மேலே ரூம் போட்டிருக்கோம்”

“ஓ! அப்படியா!! நோ தாங்க்ஸ். நாங்க நைட்டு எங்காத்துக்கு போயிட்டு காலையில கல்யாணத்துக்கு வர்றோம்”

“அப்படியா!!! சரி”

என்று கூறிவிட்டு அவனின் நாடகத்தை தொடர்ந்தான். திருமணம் இனிதே நடந்தேறியது. நவீனும் மிருதுளாவுமாக ப்ரவினுக்கு ரூபாய் பத்தாயிரம் கொடுத்தனர். அவன் நேராக மொய் எழுதிய தன் மாமா அருகில் சென்று அமர்ந்து மொத்தம் எவ்வளவு மொய் வந்திருக்கு என்ற கணக்கை சரி பார்த்த பின் மொத்த பணத்தையும் அவனே எடுத்துக் கொண்டு அவன் பெட்டியில் வைத்துக் கொண்டான். அதை பார்த்த மிருதுளா நவீனிடம்..

“பார்த்தேங்களா உங்க ரெண்டாவது தம்பியை. மொய் பணம் உங்க அப்பா அம்மா கையில போனா ஒரு பைசா தேறாதுன்னு தெரிஞ்சுண்டு தாலிகட்டின கையோட வந்து மொத்தத்தையும் வாங்கி அவன் பெட்டிக்குள்ள வச்சிண்டுட்டான். நீங்க என்னடான்னா மொத்தத்தையும் உங்க அப்பா அம்மா கிட்ட கொடுத்துட்டு ஊருக்கு போக அவாகிட்ட காசு கேட்டுண்டு நின்னு அதை அவா திருப்பி கேட்டு வாங்கிண்டு அதுனால நாம கஷ்டப்பட்டு…ம்….”

“விடு விடு நான் அவாளை நம்பினேன் ஏமாந்தேன். நான் ஏமாந்ததை பார்த்து இவா எல்லாரும் உஷாராயிட்டா. என் தப்பு எனக்கு தெரியாம இல்லை”

ப்ரவின் திருமணம் முடிந்ததும் மரியாதை இல்லாத இடத்தில் இருக்க இஷ்டமில்லாமல் அடுத்த நாளே ஹைதராபாத் கிளம்பிச் சென்றனர் நவீனும் மிருதுளாவும்.

மாதங்கள் ஒடின. கஜேஸ்வரிக்கு சீமந்தம் வளைகாப்பு நடத்தினார்கள் ஆனால் நவீன் மிருதுளாவை அழைக்கவில்லை. அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக செய்தி வந்தது. அதே நேரம் ப்ரவினின் மனைவி துளசியின் சீமந்தம் வந்தது அதற்கு ப்ரவினும் துளசியும் நவீன் மிருதுளாவை அழைத்திருந்தார்கள். இருவரும் சக்தியுடன் சென்றிருந்த இடத்தில் கவின் கஜேஸ்வரியின் குழந்தைக்கு (அவர்கள் மதிக்காவிட்டாலும்) செய்ய வேண்டிய சீர் அனைத்தையும் செய்தனர். விசேஷம் முடிந்த அடுத்த நாள் காலை மூத்த தம்பதியர் வீட்டுக்கு சென்றனர் நவீனும் மிருதுளாவும். அங்கே துளசி பிரசவத்திற்கு தாய் வீடு செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள். கவினும் கஜேஸ்வரியும் குழந்தையுடன் கோவிலுக்கு சென்றிருப்பதாக ஈஸ்வரன் சொன்னார். பர்வதம் அடுப்படியில் மும்முரமாக ஏதோ செய்துக் கொண்டிருந்தாள். அதை கவனித்த மிருதுளா அடுப்படிக்குள் சென்று

“என்னமா ஏதோ மும்முரமா செஞ்சிண்டிருக்கேங்கள். வாசம் வாசல் வரை வர்றதே”

“இன்னைக்கு நம்ம துளசியை பிரசவத்துக்கு அவா ஆத்துக்கு அழைச்சுண்டு போக அவா அம்மா அப்பா எல்லாரும் வரா. எப்படி வெறுமனே அனுப்பறது. அது முறையில்லையே. அது தான் லெமன் சேவை, தேங்காய் சேவை, கேசரி, மெது வடை எல்லாம் பண்ணிருக்கேன். இதோ இந்த டப்பால பால்கோவா வச்சிருக்கேன் துளசி கையில குடுத்தனுப்பறதுக்கு…நம்மாத்து வாரிசை நல்லபடியா பெத்துண்டு வரணும் இல்லையா அதுக்குத் தான்”

என்று பர்வதம் சொல்லி முடித்ததும் மிருதுளா கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது அதை கவனித்த நவீன் அவள் தோளைப் பிடித்து அழுத்தி

“சரி மிருது நாம கிளம்பலாம்.”

“என்ன அவசரம் அவா எல்லாம் வந்துட்டு எல்லாரோடையும் சாப்டுட்டு போனா போதாதா. இருங்கோ”

“இல்ல இல்ல நீ உன் சம்மந்திகளை எல்லாம் கவனி நாங்க போயிட்டு சாயந்தரமா வர்றோம்”

என்று அங்கிருந்து கிளம்பிச்சென்றனர். ராமானுஜம் வீட்டுக்கு வந்ததும் மிருதுளா ஓவென்று அழுதாள். அதைப் பார்த்த அம்புஜம் என்ன என்று விசாரித்து விவரம் தெரிந்துக் கொண்டதும்…

“விடு மிருது…இதுக்கெல்லாமா அழறது. அந்த மாமி உன்னை வெறுப்பேத்தறதுக்காகவே சும்மா சொன்னாலும் சொல்லிருப்பா அதை போய் ….”

“இல்லமா அவா செஞ்சு வச்சதை எல்லாம் பார்த்தேன். அவா என்ன வேணும்னாலும் செய்து கொடுக்கட்டும் அதை நான் ஒண்ணுமே சொல்லலை. ஆனா நாம என்ன மா தப்பு பண்ணிணோம்? என்னையும் உங்களையும் எவ்வளவு அசிங்கப் படுத்தி அனுப்பினா…பெரியம்மா சொல்லியும் என்கிட்ட எதுவுமே கொடுத்தனுப்பலையே மா!!! அதெல்லாம் அவா பேச பேச என் கண் முன்னாடி படம் போல ஒடித்து தெரியுமா!!”

“சரி விடு நமக்கு அப்படி பண்ணிட்டா… என்ன பண்ண முடியும். விடு… அவாளுக்கு நம்ம சக்திக் குட்டிக்கு பண்ணற பாக்யத்தை அந்த அம்மன் கொடுக்கலைன்னு நினைச்சுப்போம். விட்டுத் தள்ளு. போய் முகத்தை அலம்பிண்டு வா”

“உன் அம்மா சொல்லறது தான் கரெக்ட் மிருது. விட்டுத் தள்ளு. சரி இன்னைக்கு சாயந்தரம் வீட்டுக்கு போய் அந்த வீடு மாட்டரை கேட்டுட்டு வந்திடுவோம் ஏன்னா இன்னைக்கு எல்லா பசங்களும் இருக்கா அது தான் பேசி முடிவெடுத்தடுலாம்ன்னு நினைக்கிறேன்.”

“அது நீங்க வாங்கின வீடு அதைப் பத்தி நீங்க உங்க அம்மா அப்பாட்ட தானே பேசணும் அதுக்கு என்னத்துக்கு தம்பிகள் எல்லாரும் இருக்கணும் நவீ?”

“ஆமாம் இப்போ அந்த வீடு என் அம்மா பேர்ல இருக்கு அதை எனக்கு எழுதிக் கொடுத்துட்டான்னா நாளைக்கு நான் ஏமாத்தி வாங்கிண்டேன்னு சொல்லிட்டான்னா? சொல்லிட்டானா என்ன? நிச்சயம் சொல்லக்கூடியவா தான். அதனால எல்லாரையும் வச்சுண்டே பேசிடலாம்ன்னு இருக்கேன்”

“ஆனாலும் நீங்க ரொம்ப தான் நம்பறேங்கள் நவீன். சரி போவோம்”

இருவரும் சக்தியை அம்புஜத்திடம் விட்டுவிட்டு மூத்த தம்பதியர் வீட்டுக்கு சென்றனர். அங்கே சென்ற பின் தான் தெரிய வந்தது கவினும் கஜேஸ்வரியும் கிளம்பி ஈரோடு சென்று விட்டனர் என்ற விவரம். ஆனாலும் மாமாவை நம்பி காலம் கடத்திய விஷயத்துக்கு முடிவு கட்டியே ஆக வேண்டுமென்ற எண்ணத்தில் காலை நடந்த சம்பவத்தினாலும், தொடர்ந்து நடந்த அவமானங்களாலும்
நவீன் சரியான கோபத்திலிருந்தான். அவனிடம் கோபப்படாமல் பக்குவமாக பேச சொன்னாள் மிருதுளா. அதற்கு நவீன்
தன் பெற்றவர்கள் மீதிருந்த அதிருப்தியையும் தாண்டி ஏதோ ஒரு நம்பிக்கை இருக்கப் போய் பேச்சை ஆரம்பித்தான்

“ஆமாம் இங்க வரதுக்கு முன்னாடி நாம எல்லாருமா இருந்தோமே ஒரு வீடு அது உங்களுக்கு ஞாபகமிருக்கா ?”

“ஏன் இல்லாம நல்லாவே ஞாபகமிருக்கே. அதுக்கென்ன இப்போ?”

“அதை வாடகைக்கு விட்டிருக்கேங்கள்!”

“ஆமாம் விட்டுருக்கோம்”

“அதை ஏன் என்கிட்ட சொல்லலை?”

“அதையெல்லாம் பத்தி பேச பொறுப்பா இருந்திருக்கணுமே!!”

“என்ன சொன்ன?? பொறுப்பப் பத்தி என்கிட்ட பேசறையா? யாருக்கு? எனக்கு பொறுப்பில்லையா?”

“இல்லடா….நீ பொறுப்பா தான் இருந்த ஆனா உன் கல்யாணத்துக்கப்புறமா தான் நீ பொறுப்பில்லாதவனாயிட்டயே”

“இல்ல அப்படி என்ன நான் பொறுப்பில்லாதவனாயிட்டேன்!! அதை நீ கண்ட!!”

“இவளை கட்டிண்டதுக்கப்புறமா நீ எங்களுக்குனு என்ன செஞ்ச? என்னத்த பார்த்துண்ட?”

“சரி இந்த பஞ்சாயத்தை இன்னொரு நாள் வச்சுப்போம். இப்போ நீ டாப்பிக்கை மாற்ற முயற்சிக்காதே. நான் கேட்ட கேள்விக்கு பதில். நான் பொறுப்பா இருந்தேனோ இல்லையோ ஆனா நான் வாங்கின வீட்டை காலி செய்யும் போதும் என்கிட்ட சொல்லலை. அந்த வீட்டுக்குன்னு நான் வாங்கிப் போட்ட டிவி, ஃப்ரிட்ஜ்ன்னு எல்லாத்தையும் வித்திருக்கேங்கள் அதையும் என்கிட்ட சொல்லலை. இப்போ வாடகைக்கு விட்டதும் சொல்லலை. அது ஏன்? அதுவுமில்லாம அந்த வீட்டை எனக்கே தெரியாமல் உன் பேர்ல ரிஜிஸ்டர் பண்ணிண்டிருக்க? என்கிட்ட ஏன் இதை எல்லாம் சொல்லலை?”

என்று நவீன் பாயின்ட் பாயின்டாக கேட்டதற்கு பதில் ஏதும் இல்லாது போனாலும் தன் கெத்தை விட்டுக் கொடுக்காமல் கால் மேல் கால் போட்டுக் கொண்டு பர்வதம் நவீனைப் பார்த்து

“என்னது நீ வாங்கின வீடா? அது எது?”

என்று ஒரு ஆட்டம் பாம் போட்டாள். அதைக் கேட்டதும் மிருதுளா நவீனைப் பார்த்தாள். நவீன் பர்வதத்திடம்

“நான் வாங்காம வேற யாரு வாங்கினாளாம்? என் கையிருப்பு போக மீதத்தை மாமாவிடம் கடனாக வாங்கி தானே அந்த வீட்டை வாங்கினேன். ஏன் உனக்கு ஞாபகமில்லையோ!!!”

“எந்த மாமன் கொடுத்தான்? எனக்கு எந்த மாமனும் கொடுத்ததா தெரியலை”

“ஓ!!! எந்த மாமனா!! கேட்ப …கேட்ப…சரி அது உனக்கு தெரியாதுன்னே வச்சுக்குவோம் அப்போ அந்த வீட்டை வாங்க ரூபாய் ஐம்பத்தி ஐந்தாயிரம் எங்கேந்து வந்தது? அப்போ பசங்க எல்லாரும் படிச்சுண்டு இருந்தா. எவனும் சம்பாதிக்க ஆரம்பிக்கலை பின்ன எங்கேருந்து வந்தது பணம்?”

“ம்…நீ வெறும் பதினஞ்சாயிரம் தான் தந்த ….மீதிக்கு அப்பா லோன் போட்டா அதுல தான் வாங்கினோம். அதுவுமில்லாம கவின் தான் இந்த வீட்டோட ரிஜிஸ்ட்ரேஷனுக்கு முப்பத்தி ஆறாயிரம் கொடுத்திருக்கான். அதுனால அவன் கிட்டேயும் கேட்டுதான் முடிவெடுக்க முடியும்”

“என்னது கவின் காசு போட்டானா? அப்போ கவின் கிட்ட சொல்லிருக்க ஆனா வீடு வாங்கின என்கிட்ட சொல்லணும்ன்னு உனக்கு தோணல இல்ல!! சரி எந்த ஊர்ல ஐம்பத்தைந்தாயிரம் விலையுள்ள வீட்டுக்கு முப்பத்தி ஆறாயிரம் ரிஜிட்ரேஷன் சார்ஜ்ஜஸ் வரும்?”

“அதெல்லாம் நீ ரிஜிஸ்ட்ரேஷன் ஆஃபிஸ்ல கேட்டுக்கோ. அந்த வீடு என் பெயருல தான் இருக்கும் என் காலத்துக்கப்புறம் நாலு பேருமா எடுத்துக்கோங்கோ”

என்று பொய் சொன்னாலும் திமிராகவே சொன்னாள் பர்வதம் அதைக் கேட்ட நவீன்

“ச்சே இப்படி வாய் கூசாம சொல்லுற!! சரி வேலையே இல்லாத அப்பாக்கு எந்த பாங்கு லோன் குடுத்தது?”

என்று தன் அப்பாவைப் பார்த்தான் நவீன். அதுவரை தலை குனிந்து அமைதியாக அமர்ந்திருந்த ஈஸ்வரன் ஏதும் பேசாமல் இருந்திருந்தால் கூட பரவாயில்லை ஆனால் அவர் தன் மனைவியை காப்பாத்த வேண்டியும், பிரச்சினையை திசை திருப்ப வேண்டியும் நவீனிடம்

“நீ என்னடா செஞ்ச. என் புள்ள அவன் தாண்டா. ஒரு லட்சம் செலவழிச்சு என்னை காப்பாதினான். அவன் தாண்டா என் புள்ள …நீ என் புள்ளையே இல்லடா. வீட்டை விட்டு வெளிய போடா”

என்று கூறியதைக் கேட்ட நவீன் “ச்சீ” என்ற முகபாவத்தோடு தான் ஏமாந்து விட்டதையும், தனது பத்து வருட காலத்தை இப்படிப்பட்ட குடும்பத்துக்காகவா தொலைத்தேன் என்றும் எண்ணி தலை குனிந்து அமர்ந்தான்.

ப்ரவீன் தன் அப்பாவிடம் “உஷ்” என்று சொல்லிவிட்டு…நவீனிடம்

“ஏன் அண்ணா பழசையெல்லாம் இப்போ பேசிண்டு வர்றே! அதுவுமில்லாம கவின் இல்லாத நேரத்துல இதை பத்தி பேசற!!.நீ கவின் இருக்கும் போது வந்து பேசு”

என்று கூறியதும் அதுவரை அமைதியாக இருந்த மிருதுளா எழுந்து தன் மாமனாரைப் பார்த்து

“இதுவரைக்கும் நான் பேசாம இருந்ததுக்கு காரணம் …எல்லாமே எங்க கல்யாணத்துக்கு முன்னாடி நடந்த விஷயங்கள் என்பதால் ஆனா ப்ரவீன் உனக்கும் இதுல பேச வாய்யில்லை ஆனா நீயெல்லாம் பேசும் போது நான் பேசறதுல தப்பேயில்லைன்னு தான் பேசறேன். நவீன் வாங்கின வீட்டைப் பத்தி அவர் என்னத்துக்கு கவின் கிட்ட பேசணும்? கொஞ்சமாவது நியாயம் வேண்டாமா? ஏன் பா அப்போ உங்களுக்கு லட்சம் ரூபாய் கொடுத்தா தான் புள்ளை இல்லாட்டி புள்ளை இல்லை அப்படி தானே!!”

“ஆமாம்! அவன் என் உயிரை காப்பாத்திருக்கான் இவன் என்னத்தை செஞ்சான்?”

“ஓ!!! இப்போ உங்க ரெண்டாவது புள்ளை உங்க உயிரை காப்பாத்தும் போது நீங்க நிதானத்துல இருந்ததால அப்படி சொல்லறேங்கள் ஆனா நீங்க நிதானமே இல்லாத காலம் ஒண்ணு இருந்தது ஞாபகமாவது இருக்கா?? அப்போ எத்தனை எத்தனை தடவை ரெயில்வே தண்டவாளத்திலிருந்தும், பஸ் ஸ்டாண்டிலிருந்தும் தூக்கிண்டு தோள்ல சுமந்துண்டு உங்களை காப்பாத்தி வீட்டுக்கு பத்திரமா கொண்டு வந்து சேர்திருப்பார் சொல்லுங்கோ!!! அப்போ இவர் அப்படி அங்கேருந்தும் இங்கேருந்தும் உங்களை காப்பாத்தாம விட்டிருந்தா உங்க மத்த புள்ளகள் கோடி கொடுத்தாலும் காப்பாத்த எங்க நீங்க இருந்திருப்பேங்கள்னு கொஞ்சம் மனிதாபிமானத்தோட யோசிச்சுப் பேசிருக்கலாம்….ஆமாம் நவீன் இளிச்சவாயி…நீங்க நிதானத்துல இல்லாத போது எல்லாம் ….எவருக்கும் ஷோ போடாம, ஊர் உலகத்துக்கு நான் தான் என் பெத்தவாளை பார்த்துக்கறேன்னு தம்பட்டம் அடிக்காம….உண்மையான பாசத்துல உங்களை காப்பாத்தினதுக்கு அவருக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.”

உடனே ப்ரவின் குறுக்கிட்டு

“இங்க பாருங்கோ மன்னி பாஸ்ட் இஸ் பாஸ்ட் அதை எல்லாம் என்னத்துக்கு இப்போ சொல்லிண்டிருக்கேங்கள்”

“ஓ!! அப்படியா சார். பாஸ்ட்டுன்னு ஒண்ணு இருந்தா தான்ப்பா ப்ரெஸண்ட்டுன்னு ஒண்ணு இருக்க முடியும். அதுவுமில்லாம உங்க அப்பா அம்மா தான் அப்படி பேசறானா உங்க ரெண்டு பேருக்கு கூடவா மனசாட்சி இல்ல!! இந்த மனுஷன் உங்களை மாதிரி காலேஜுக்கு போய் படிச்சாரா சொல்லுங்கோ!!! ஏன் போ‌கலைன்னு உங்க எல்லாருக்குமே தெரிஞ்சது தானே!!!”

உடனே ஈஸ்வரன்

“டேய் பவின் அந்த டாக்யூமென்ட்டை எடுத்துண்டு வந்து இவாகிட்ட வீசி எறிடா…போடா போய் எடுத்துண்டு வா”

என்று பவினை நோக்கி ஈஸ்வரன் சொன்னாலும்…. பர்வதம் கண்ணசைத்ததும் உள்ளே செல்வது போல சென்று அங்கேயே இருந்துக் கொண்டான் பவின். கவின், ப்ரவின், பவின் வரை கண்டுள்ள அந்த வீட்டுப் பத்திரத்தை வீடு வாங்கிய நவீனிடம் ஒரு முறை கூட காட்டவில்லை. அவ்வளவு எடுத்து சொல்லியும் அடாவடியாகவே பேசினார்கள். மிருதுளா தலையை குனிந்து அமர்ந்திருந்த நவீனிடம் சென்று

“எழுந்திரிங்கோ நவீன். இனியும் நாம இங்க இருக்க வேண்டாம். நீங்களும் லட்சம் ரூபாய் கொடுங்கோ அப்போ தான் ஈஸ்வரன் பர்வதம் புள்ளை ஆக முடியும். பெத்த மனம் பித்து புள்ள மனம் கல்லுன்னு தான் நான் கேள்வி பட்டிருக்கேன் ஆனா இங்க எல்லாமே தலைகீழ்….என்ன செய்ய….வாங்கோ நாம இங்கிருந்து கிளம்பலாம்”

என்று நவீனை கூட்டிக்கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினாள். நியாயத்தை நியாயமாக பேச வந்திருந்த நவீனையும் மிருதுளாவையும் அடுமாண்டு பேசி இருவரும் சொல்ல வந்ததை முழுவதுமாக சொல்லவிடாமல் துறத்தி விட்டனர் மூத்த தம்பதியர். நியாயம் என்றுமே அனாதை தான்!!

இருவரும் ராமானுஜம் வீட்டுக்கு வந்ததும் நவீனின் வாடியிருந்த முகத்தைப் பார்த்து ராமானுஜமும் அம்புஜமும் இருவரிடமும் விசாரித்தனர். தன் அப்பா அம்மாவிடம் நடந்தவற்றை சொன்னாள் மிருதுளா அதைக் கேட்டதும் அம்புஜம்

“என்னத்துக்கு நீங்க ரெண்டு பேரும் இப்படி கவலைப் பட்டு உட்கார்ந்திருக்கேங்கள். அம்மா அப்பாவை புள்ளை நம்பினதில் தப்பேதுமில்லை ஆனா அப்படி நம்பின புள்ளையை ஏமாத்தினதுக்கு அவா தான் அசிங்கப்படணும், வேதனைப் படணும், வெட்கப் படணும். நீங்க வேணும்னா பாருங்கோ அவா உங்களை ஒரு வீட்டை வச்சு ஏமாத்தினதுக்கு அந்த அம்பாள் உங்களுக்கு பத்து வீடு தருவாள். நிச்சயமா சாப்பிட்டிருக்க மாட்டேங்கள் போங்கோ ரெண்டு பேரும் முகம் கை கால் அலம்பிட்டு வாங்கோ தோசை வார்த்துத் தரேன். எழுந்துரு மிருது. நீதான் அவருக்கு தைரியம் சொல்லணும். நீயே இப்படி உட்கார்ந்தா எப்படி. போ மா போங்கோ மாப்ள”

என்றாலும் நவீனும் மிருதுளாவும் அங்கு நடந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவித்தனர். பெற்றவர்களை பிள்ளைகள் ஏமாற்றி கேள்விப் பட்டிருப்போம் ஆனால் இங்கே பெற்றவர்கள் தங்களை நம்பிய பிள்ளையை ஏமாற்றியிருப்பது சரியில்லை தான்!! ஆண்டவனின் படைப்புகளில் சில நேரம் சிலர் இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள்!!! இருவரும் சரியாக சாப்பிடாமல் எழுந்தனர். அப்போது நவீன் கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. நவீன் எடுக்காமல் படுத்திருந்தான். மிருதுளா எடுத்துப் பார்த்தாள்….”பிச்சுமணி மாமா” என்றிருந்தது. உடனே நவீனை உலுக்கி

“நவீன் உங்க மாமா தான் கால் பண்ணறார். இந்தாங்கோ பேசுங்கோ”

என்று கொடுத்ததும் நவீன் மொபைலை அழுத்தி

“ஹலோ நான் நவீன் பேசறேன். சொல்லுங்கோ மாமா”

“ஏன்டா …நான் தான் பக்குவமா பேசி ஏற்பாடு பண்ணறேன்னு சொல்லியிருந்தேன் ல அதுக்குள்ள ஏன்டா ரெண்டு பேருமா இப்படி செய்து வச்சிருக்கேங்கள்?”

தொடரும்…‌.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s