அத்தியாயம் 87: வீட்டுல விசேஷம்

ஃப்ளைட் பம்பாய் வந்திறங்கியது. நவீனும் மிருதுளாவும் அவர்களின் தினசரி வாழ்க்கை ஓட்டத்தை மேற்கொண்டனர். சக்தி படிப்பு, நாட்டியம், பாட்டு, ஓவியம், வயலின் என்று எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்து வந்துக் கொண்டிருந்தாள். படிப்பிலும் முன்னணி மாணவியாக இருந்து வந்தாள்.

ப்ரவீனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக நவீனுக்கும் மிருதுளாவுக்கும் ஃபோன் போட்டுச் சொன்னான். அதற்கு தங்கள் வீட்டின் கிரகப்பிரவேசம் வருவதாகவும் அதற்கு வரும்போது குழந்தையை வந்து பார்ப்பதாகவும் நவீன் கூறினான். அந்த குழந்தைக்கும் கவினின் குழந்தைக்கு செய்தது போலவே பெரியப்பா பெரியம்மாவாக அவர்கள் வகை சீரை ஏற்பாடு செய்தனர். குழந்தைக்கு தங்கத்தில் வளையல், வெள்ளி அரைஞாண், தங்கத்தில் மோதிரம், வெள்ளி கொலுசு, டிரெஸ் என அனைத்தையும் வாங்கி வைத்தனர்.

நவீன் சென்னையில் வாங்கிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் நாள் குறிக்கப்பட்டது. அதற்கு இருவீட்டார் பக்கத்திலிருந்து அனைத்து சொந்தங்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர் நவீனும் மிருதுளாவும். ஒரு வருட காலமாக பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்த பர்வதீஸ்வரன் தம்பதியருக்கு ஃபோன் போட்டு சொல்ல வேண்டுமென்று மிருதுளா ஆசைப்பட்டாள் ஆனால் நவீன் தன் தம்பி ப்ரவீன் அவர்கள் வீட்டுக்கு ஃபோனெல்லாம் பேசக்கூடாதென்று சொன்னதை ஞாபகப்படுத்தி வேண்டாமென்று கூற மிருதுளாவுக்கோ மனம் படக்படக் என அடித்துக் கொண்டது.

“அது எப்படி அவாகிட்ட சொல்லாம நாம ஒரு விசேஷத்தை நடத்தறது நவீ? அது நல்லா இருக்காதுப்பா”

“ஏன் அவா எல்லாத்தையும் நம்ம கிட்ட சொல்லறாளா என்ன? வீடு காலி பண்ணியபோது, பொருட்களை வித்தபோது, புது வீடு வாங்கினது, அதில் குடிபோனது, கஜேஸ்வரியின் சீமந்தம், ப்ரவீனின் விரதம் மற்றும் நாந்தின்னு அவா சொல்லாத லிஸ்ட் நீண்டுண்டே போறதே அது உனக்குத் தெரியலையா மிருது. அவாளுக்கு அது நல்லா இருக்கும் போது நமக்கும் இது நல்லா தான் இருக்கும். ஒண்ணும் வேண்டாம். அவா நமக்கு செஞ்சதையே அவாளுக்கு திருப்பி செய்யணும் அப்போ தான் அது அவாளுக்கு புரியும். சும்மா நாம மட்டும் பெரியவா பெரியவான்னு விட்டுக் கொடுத்துண்டே போனோம்னா அப்புறம் அது அவாளோட ரைட்டா நினைச்சுப்பா தெரியுமா. இந்த விஷயத்துல நான் சொல்லறதைக் கேளு மிருது.”

“உங்களுக்கென்ன நவீ !!! அப்படி நாம சொல்லலைன்னா அவா உங்களை ஒண்ணுமே சொல்ல மாட்டா ஆனா என் தலை டில்லி பாம்பே சென்னைன்னு உருளும். அதை கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்திருந்தேங்கள்னா இப்படி பேச மாட்டேங்கள். அதுவுமில்லாம அவா செஞ்சதையே நாமும் திருப்பி செஞ்சா அப்புறம் அவாளுக்கும் நமக்கும் என்ன வித்யாசம் சொல்லுங்கோ. நம்ம மேல தப்பில்லாட்டா தான் அடுத்தவாளை குறை சொல்லும் யோகியதை நமக்கு உண்டு. அப்படி அதையே திருப்பி செஞ்சா அப்புறம் அவா பண்ணற தப்பையே தான் நாமும் செய்யப் போறோம் ஸோ தப்புக்கு தப்பு ஈக்குவல் பண்ணி டாலி பண்ண இது என்ன வணிகமா?”

“அதெல்லாம் சரி தான் மிருது. சரி அவா செய்யறதையே நாமும் செய்ய வேண்டாம் ன்னே வச்சுக்குவோம் அப்போ அவா திருந்திடப் போறாளா என்ன? எனக்கென்னவோ நீ அவா வாயிக்கு பயந்துண்டு ரொம்ப இடம் கொடுக்கறையோன்னு தோனறது. அதுனால அவா திருந்தப் போறதில்லை ஆனா நிச்சயம் உன்னோட இந்த குணத்தை அட்வான்டேஜா எடுத்துண்டு இன்னும் ஆடப் போற வேணும்னா பாரு”

“அவா திருந்தறாளோ இல்லையோ அதைப் பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை. அதுவுமில்லாம அவாளை திருத்த நான் யாரு? பயமெல்லாம் இல்லை ஆனா பெரியவாங்கற ஒரு மரியாதை தான். நாம நம்ம கடமையிலிருந்து தவற வேண்டாமே ப்ளீஸ்”

“ஃபோன் பண்ணக்கூடாது.”

“சரி சரி பண்ண மாட்டேன். ஆனா நாம தான் ஒரு வாரம் முன்னாடியே ஊருக்குப் போறோமே அப்போ நேரா போய் அழைச்சுடலாம்”

“நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் அப்புறம் உன் இஷ்டம். நிச்சியம் இதுக்கு நீ என் கிட்ட பொலம்பிண்டு தான் வரப் போற”

“வந்தா கேட்டுக்கோங்கோ. கேட்க மாட்டாளா”

“நீ பண்ணறது உனக்கே பைத்தியக் காரத்தனமா தெரியலை”

“தெரியறது!!! என்ன பண்ண ? உங்களைப் பெத்தவாளாயிட்டாளே!!”

“ஆமாம் ஆமாம் பெத்…தவா தான்”

கவின் கஜேஸ்வரி மீண்டும் குவைத்துக்கே சென்றுள்ளதால் அவர்களுக்கு ஃபோனில் அழைப்பு விடுத்தனர். என்ன தான் அவர்கள் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கும், சீமந்தத்திற்கும், அழைக்காவிட்டாலும் மிருதுளாவும் நவீனும் அவர்கள் இருவரையும் ஃபோனில் அழைத்ததோடு மின்னஞ்சலில் பத்திரிகையை அனுப்பியும் வைத்தனர். கிரகப்பிரவேசத்திற்கு ஒரு வாரம் முன்னதாகவே ஊருக்குச் சென்று அனைவருக்கும் துணிகள் எடுத்துக் கொண்டு அப்படியே பர்வதீஸ்வரன் வீட்டுக்குச் சென்றனர் நவீனும் மிருதுளாவும்.

“ஆங் வாங்கோ வாங்கோ.”

“அப்பா அன்ட் அம்மா எப்படி இருக்கேங்கள்?”

“நாங்க நல்லா இருக்கோம் நீங்க எப்படி இருக்கேங்கள்?”

“நாங்களும் நல்லா இருக்கோம் பா. இந்தாங்கோ இதுல உங்களுக்கு வேஷ்டி சட்டை அன்ட் அம்மா இந்தாங்கோ இதுல உங்களுக்கு பட்டுப்புடவை இருக்கு வாங்கிக்கோங்கோ”

“என்னத்துக்கு இப்போ இதெல்லாம்?”

“அப்பா நாங்க சென்னையில ஒரு வீடு வாங்கியிருக்கோம். அதுக்கு கிரகப்பிரவேசம் வர்ற வியாழக்கிழமை வச்சிருக்கோம். சாரி லாஸ்ட் மினிட்ல சொல்லறதுக்கு. நாங்க நாளைக்கு சென்னை போயிடுவோம் உங்களுக்கும் என் அப்பா அம்மாவுக்கும் சேர்த்து ஒரு வண்டி ஏற்பாடு பண்ணிருக்கோம் நீங்க ரெண்டு பேரும் வந்து நடத்திக் கொடுக்கணும்.”

“ம்..ம்.. வர்றோம். அப்போ இங்கே இருக்கற ஃப்ளாட் என்ன பண்ணப் போறேங்கள்?”

“அதை வித்துடலாம்ன்னு இருக்கோம்”

“ஏன் வாடகைக்கு ஆள் இருக்கா இல்லையா?”

“இருக்கா ஆனா அவா வீட்டை ரொம்ப மோசமா வச்சிருக்கா. அதுவுமில்லாம வீட்டை காலி பண்ணச் சொன்னா எங்க கிட்டயே சண்டைக்கு வர்றா. காலி பண்ணவும் மாட்டேங்கறா. அதுதான் பில்டர் கிட்டயே சொல்லிருக்கோம். அவர் குடி வச்ச ஆள் தானே ஸோ அவரே பேசி காலி பண்ண வைக்கறேன்னு சொன்னார். அதுக்கு தான் வெயிட்டிங்”

“ஓ!!! அப்படியா! சரி தான்”

ஈஸ்வரனும் மிருதுளாவும் பேசிக்கொண்டிருக்கும் போது காபி போட்டுக் கொண்டு வந்துக் கொடுத்தாள் பர்வதம். அப்போது மிருதுளா

“தாங்க்ஸ் மா. சரி எங்கே ப்ரவீனையும் துளசியையும், பவினையும் காணம்!!”

“ப்ரவீன், துளசி வேலைக்கு போயிருக்கா. பவின் வேலைக்குப் போயிருக்கான்”

“ஓ!! பவினுக்கு வேலைக் கிடைச்சாச்சா? சரி ப்ரவீனும் துளசியும் வேலைக்கு போயிருக்கான்னா அப்போ அவா குழந்தையை யாரு பார்த்துக்கறா?”

“ஆமாம் பவினும் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டான். எங்க பேத்தியை வேற யாரு பார்த்துப்பா நாங்க தான் பார்த்துக்கறோம். சக்தி பாப்பாவைப் பார்க்க வர்றியா?”

“அப்படியா எங்க இருக்கா குழந்தை?”

“அதோ அந்த ரூமுல தான் தூங்கிண்டிருக்கா. வா வந்து பாரு”

குழந்தையைப் பார்த்துக் கொண்டும் அதனுடன் விளையாடிக் கொண்டுமிருந்ததில் நேரம் போனதே தெரியாமல் இருந்தது. நவீன் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் நியூஸ் பேப்பரை மட்டும் புரட்டிப் புரட்டிப் படித்துக் கொண்டே இருந்தான். அவன் பெற்றோரும் அவனுடன் பேசவில்லை. வேலை விட்டு வந்தனர் ப்ரவீனும் துளசியும். அவர்களிடம் குழந்தைக்கு வாங்கி வந்ததை கொடுத்து விட்டு அப்படியே கிரகப்பிரவேசத்திற்கு அழைப்பு விடுத்தனர். பின் அவர்களிடமிருந்து விடைப்பெற எழுந்தபோது பர்வதம்

“இருந்து டின்னர் சாப்டுட்டு போகலாமே”

“பரவாயில்லை மா நாங்க கிளம்பறோம் நாழி ஆயிடுத்து. எல்லாருக்கும் பை குட் நைட்”

என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினர். மறுநாள் சென்னைப் போய் அங்கிருக்கும் சொந்தங்களை எல்லாம் அழைத்தனர். கிரகப்பிரவேசம் நாள் வந்தது. அதற்கு முன்தினம் முதல் படு பிஸியாக கேட்டரிங், பூ, மாலை என்று ஒவ்வொன்றையும் ஏற்பாடு செய்வதற்காக அங்கும் இங்குமாக சென்று வந்ததில் பரப்பரப்பாக இருந்தனர் நவீனும் மிருதுளாவும். தங்கள் பெற்றோரின் வரவுக்காக காத்திருந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்கு காலதாமதமானது. உடனே தன் அம்மாவுக்கு கால் செய்தாள் மிருதுளா. அவள் அம்மாவும் தன் நோக்கியா 1100 கைப் பேசியை ஆன் செய்து

“ஹலோ யாரு? நான் அம்புஜம் பேசறேன்”

“அம்மா நான் மிருது பேசறேன். எங்கே இருக்கேங்கள்? ஏன் இன்னும் வரலை?”

“அதுவா அது சர்ப்ரைஸ். வந்துட்டு சொல்லறேன். இதோ சித்த இரு மா…ஏன்ப்பா டிரைவர் இன்னும் எவ்வளவு நேரமாகும் நாங்க சொன்ன அட்ரெஸுக்கு போக?”

“இதோ ரைட் எடுத்துட்டோம்மா இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல ரீச் ஆகிடுவோம்”

“மிருது இன்னும் பத்து…”

“ஆங் ஆங் கேட்டுது கேட்டுது. சரி சரி பத்திரமா வாங்கோ. நான் ஃபோனை வைக்கறேன்”

என்று ஃபோனை துண்டித்த சில நிமிடங்களில் கார் வந்து மிருதுளா நவீனின் புது வீட்டின் வாசலில் வந்து நின்றது. அவர்களை உள்ளே வரவேற்க வெளியே சென்று

“வாங்கோ வாங்கோ!! எல்லாரும் வாங்கோ. வா மா வா பா. ஏன் இவ்வளவு லேட்டு? ஒரு இரண்டு மணி நேரம் முன்னாடியே வந்திருக்கணுமே!!!என்ன எங்க மாமனாரை காணமே”

“அவர் பீரவீனோட வருவார். நான் மட்டும் உன் அப்பா அம்மா கூட வந்தேன்”

“ஓ!! அப்படியா. சரி சரி வாங்கோ வாங்கோ. இது தான் நாங்க வாங்கிய வீடு. இந்த பக்கத்து வீட்டில் தான் இன்னைக்கு நாம தங்கப் போறோம். டிரைவர் அந்த சாமான்களை எல்லாம் அந்த வீட்டில் வச்சுடுங்கோ ப்ளீஸ்.”

“இருப்பா தம்பி சித்த இரு. ஏன்னா அதை எல்லாம் எடுத்துண்டு வருவோம் வாங்கோ. ம்…இதை பிடிங்கோ. நான் இதை எடுத்துக்கறேன்”

“என்னது மா இதெல்லாம்?”

“சொல்லறேன் முதல்ல இந்த சீர் சாமான்கள் எல்லாம் எங்கே வைக்கட்டும்ன்னு சொல்லு மிருது”

“புது வீட்டுக்குள்ள சாமி படமெல்லாம் வச்சிருக்கேனே அதுக்கு முன்னாடி வை”

“சரி சரி டிரைவர் தம்பி இப்போ இந்த பெட்டியை எல்லாம் அந்த வீட்டில வச்சுடுப்பா”

என்று தாங்கள் வாங்கி வந்த சீர் சாமான்களை சாமி முன் வைத்தனர் ராமானுஜமும், அம்புஜமும். அவற்றைப் பார்த்த மிருதுளா

“என்னமா இதெல்லாம். இது என்ன சுவீட்டா? இப்படி வெத்திலைப் பாக்குப் போலவும், பழங்கள் போலவும் இருக்கு!! எவ்வளவு பூ, பழங்கள் எல்லாம் வாங்கிண்டு வந்திருக்கேங்கள் மா. எதுக்கு இவ்வளவெல்லாம்?”

“ஆமாம் அந்த இரண்டு தட்டு சுவீட்ஸ் தான் நான் சொன்ன சர்ப்ரைஸ். எப்படி இருக்கு? நம்ம ஏ2பி லே ஆர்டர் கொடுத்து செய்யச் சொல்லி வாங்கிண்டு வந்திருக்கோம். எல்லாம் இருக்கட்டும். எங்களுக்கும் எங்க பொண்ணு மாப்பிள்ளை வீடு வாங்கிருக்கான்னு சந்தோஷம் இருக்காதா! அதுதான் வாங்கிண்டு வந்திருக்கோம்.”

“உங்க அம்மா ஆர்டர் கொடுத்த கடையில தான் லேட் ஆயிடுத்து. அவன் எல்லாத்தையும் ரெடி பண்ணி தர்ற ரொம்ப டையம் எடுத்துட்டான். ஆனா ரொம்ப அழகா தான் இருக்கு. கடைக்காரன் சொன்னான் அந்த வெற்றிலைப் பாக்கு சுவீட்டை சாப்பிட்டா வெற்றிலைப் பாக்குப் போலவே இருக்கும்ன்னு. அந்த பழங்கள் போல இருக்கும் சுவீட் எல்லாம் அந்தந்த பழத்தோட டேஸ்ட்டே வருமாம். நாளைக்கு எல்லாம் முடிஞ்சுட்டு சாப்ட்டுப் பார்க்கணும்.”

“சாப்ட்டா போச்சு. சரி இன்னும் அப்பா ப்ரவீன் வரலையே”

“வருவா வருவா”

நவீன் மிருதுளாவைக் கூப்பிட்டு

“என்ன மிருது உன் மாமனார் வரலைப் போலவே”

“ப்ரவீனுடன் வருவார்ன்னு அம்மா சொன்னது உங்க காதுல விழலையோ”

“ஏன் நம்ம ஏற்பாடு பண்ணிண வண்டில வர்ற மாட்டாறோ”

“எதுல வந்தா என்ன வந்தா சந்தோஷம் தான்.”

என்று பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு மாருதி 800 கார் வந்து வீட்டு வாசலில் நின்றது. அதை ஒட்டிக்கொண்டு வந்தது ப்ரவீன். அதிலிருந்து குழந்தையுடன் துளசியும், ஈஸ்வரனும் இறங்கினர். மிருதுளா அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள். அப்போது நவீன் ப்ரவீனிடம்

“குட் குட் காரெல்லாம் வாங்கிருக்க போல”

“ஆமாம் நல்ல விலைக்கு வந்தது வாங்கிட்டேன்.”

“ரொம்ப சந்தோஷம் ப்ரவீன். கங்கிராட்ஸ்”

“தாங்க்ஸ் மன்னி. அதுதான் நாங்க எல்லாரும் பாண்டிச்சேரி போயிட்டு அப்படியே இங்க வந்தோம்”

“ஓ!! அப்படியா குட். சரி வாங்கோ எல்லாரும் சாப்பிடலாம். உங்களுக்காக தான் நாங்க வெயிட்டிங்”

“என்ன நாம மட்டும் தானா? வேற யாருமே காணமே”

“இல்லப்பா இப்போதைக்கு நாம மட்டும் தான் மத்தவா எல்லாரும் லோக்கல்ல தானே இருக்கா அதுனால காலையில வருவா”

“அப்படியா?”

என்று பேசிவிட்டு சாப்பிட்டு படுத்துறங்கினர். விடியற் காலையில் எழுந்து கிரகப்பிரவேசப் பூஜைக்கு வேண்டியதை எல்லாம் வாத்தியார்கள் ஒருபுறம் தயார் செய்துக கொண்டிருந்தனர். நவீனும் ரெடியாகிக் கொண்டிருந்தான். மிருதுளா சக்தியை ரெடி செய்து பின் தானும் ஒன்பது கஜம் கட்டிக் கொண்டு தயார் ஆகி புது வீட்டுக்குள் செல்ல மூவரும் முற்பட்டப் போது ஈஸ்வரன்

“பர்வதம் நீயும் அவா கூடவே புது வீட்டுக்குள்ள போ…மிருதுளா பர்வதத்தையும் கூட்டிண்டு உள்ள போங்கோ. புது வீட்டுக்குள்ள மூணு பேரா போகக்கூடாது.”

என்று நவீன், மிருதுளா, சக்தியுமாக செல்வதற்கு அப்படி ஈஸ்வரன் சொன்னதைக் கேட்டதும் மிருதுளாவுக்கு ஆத்திரம் வந்தது. அந்த கோபத்திலும் நிதானம் தவராது, மரியாதை குறையாமால் ஈஸ்வரனைப் பார்த்து

“அப்பா இது நாங்க வங்கின வீடு. நாங்க மூணு பேரா தான் வந்து வாங்கிருக்கோம். நாங்க மூணு பேரு தான் வாழப்போறோம். அதுனால மூணு பேரா உள்ள போனா எந்த தப்பும் இல்லை. எங்கக்கூட அந்த அம்பாளும் இருக்கா ஸோ நோ ப்ராப்ளம். அம்மா நீங்க உட்காந்துக்கோங்கோ. கூப்பிடும்போது வந்தா போதும்”

என்று கூறிவிட்டு உள்ளே சென்றனர்.

நவீனும் மிருதுளாவும் அழைப்பு விடுத்த அனைவரும் வந்திருந்தனர். கிரகப்பிரவேசம் விமர்சையாக நடந்தேறியது. வந்திருந்த அனைவரும் நவீனையும் மிருதுளாவையும் குழந்தை சக்தியையும் வாழ்த்தி சென்றனர். அன்று மத்தியம் சாப்பாடு முடிந்ததும் அனைவரும் அவரவர் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர். மிருதுளா அனைவருக்கும் பட்சணங்கள், பூ, பழம் என நிறைவாக செய்தாள். ப்ரவீனும் துளசியும் குழந்தையுடன் புறப்பட்டுச் சென்றனர். ஈஸ்வரன், பர்வதம், ராமானுஜம், அம்புஜம் அனைவரும் படுத்துறங்கினர். அப்போது நவீன் அவர்கள் செய்த ஏற்பாடுக்கெல்லாம் பணம் செட்டில் செய்தான். மிருதுளா அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து அவர்கள் பொருட்களை எல்லாம் எடுத்து வந்து புது வீட்டில் வைத்தாள். மாலை ஆனதும் காபிப் போட்டு பெற்றோர்களை எழுப்பினாள். அவர்கள் முன் அம்புஜம் வாங்கி வந்த சுவீட் மற்றும் கிரகப்பிரவேசம் பட்சணங்கள் எல்லாவற்றயும் வைத்தாள். அவர்கள் அதை எல்லாம் சாப்பிட்டனர். பின் முகம் கை கால் அலம்பி விட்டு ஊர்க்கு நவீன் மிருதுளா ஏற்பாடு செய்திருந்த வண்டியில் புறப்பட்டனர். அவர்கள் கையில் மிருதுளா தாம்பூலம் கொடுத்து அதோடு இரண்டு பைகளில் சுவீட் காரம் எல்லாம் கொடுத்தனுப்பினாள்.
அவர்கள் அந்தப் பக்கம் சென்றதும் நவீனும் மிருதுளாவும் அக்கடான்னு உட்கார்ந்து ஓய்வெடுத்தனர்.

கவினுக்கும் கஜேஸ்வரிக்கும் நவீனிடமோ அல்லது மிருதுளாவிடமோ ஒரு வாழ்த்து சொல்ல முடியவில்லை ஆனால் பர்வதீஸ்வரனுக்கு வீடியோ கால் போட்டு நடந்த விவரங்களை விசாரித்தனர் அப்போது மிருதுளா கொடுத்தனுப்பிய, அம்புஜம் வாங்கிய புதிய வகையான சுவீட்களை கஜேஸ்வரியிடமும் கவினிடமும் காண்பித்தாள் பர்வதம். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாததுப்போல பேசிவிட்டு வீடியோ காலை துண்டித்தனர் கவின் மற்றும் கஜேஸ்வரி.

மறுநாள் காலை விடிந்ததும் வீட்டை சுத்தம் செய்து விட்டு கதவைப் பூட்டிவிட்டு பம்பாயிக்கு புறப்பட்டுச் சென்றனர் நவீனும் மிருதுளாவும். பின் மூன்று மாதங்கள் கழிந்த பின் மிருதுளா அப்பாவின் ரிடையர்மென்ட்டுக்கு ஊருக்குச் சென்றனர். அந்த விசேஷம் நல்லபடியாக நடந்தேறியதும் அவர்கள் இருவரையும் சென்னை வீட்டிற்கு அழைத்து வந்து குடிவைத்தனர் நவீனும் மிருதாளாவும். அதை நவீனின் பெற்றவர்களிடமும் தெரிவித்தனர். அவர்களோடு ஒரு வாரம் இருந்துவிட்டு மீண்டும் பம்பாய் சென்றனர். தங்கள் பெண்ணும் மாப்பிள்ளையும் வாடகை வாங்க மறுத்ததினால் ராமானுஜமும் அம்புஜமும் நவீன் மிருதுளாவை வற்புறுத்தி அவர்கள் பெயரில் ஒரு பாலிசியை (வாடகைக்கு பதிலாக) போட்டு வந்தனர்.

இப்படியாக நவீனும் மிருதுளாவும் அவர்கள் உண்டு அவர்கள் வாழ்க்கை உண்டு என்றிருக்கும் போது ஒரு நாள் கஜேஸ்வரி மிருதுளாவை வீடியோ காலில் அழைத்தாள் மிருதுளாவும் சகஜமாக பேசினாள். அப்போது பேச்சோடு பேச்சாக கஜேஸ்வரி

“மன்னி உங்க வீட்டு கிரகப்பிரவேசம் எல்லாம் நல்லா நடந்துதாமே மாமா மாமி சொன்னா. ஏதோ புது வகையான சுவீடெல்லாம் உங்க அம்மா வாங்கிண்டு வந்தாளாமே!!! மாமி அதை காமிச்சு ரொம்ப தான் பீத்தின்டா….”

“ஓ!! அப்படியா!! அது முடிஞ்சு மூணு மாசம் ஆகறதே!!! இப்போ கால் பண்ணி அதைப் பத்தி பேசற?”

“நான் மறந்தே போயிட்டேன் மன்னி. இப்போ தான் ஞாபகம் வந்தது. என் தோழி ஒருத்தி இரண்டு நாள் முன்னாடி தான் சென்னையில வீடு வாங்கி கிரகப்பிரவேசம் பண்ணினா அப்போ தான் எனக்கும் உங்க வீடு ஞாபகம் வந்தது. அவ கெட்டிக் காரி மன்னி. அவளே கிரகப்பிரவேசத்துக்கு வேண்டிய சீர் சாமான்கள் எல்லாம் வாங்கிட்டு அதை அவ அம்மா அப்பாவை கொண்டு வர வச்சு ஏதோ அவ அப்பா அம்மா வே செய்த சீரு மாதிரி காம்மிச்சுண்டுட்டான்னா பாருங்கோளேன்!!!”

“கஜேஸ்வரி எனக்கு இந்த மாதிரி எல்லாம் பேசினா பிடிக்காது. நீ யாரை இப்போ சொல்லற?”

“அச்சோ மன்னி நான் உங்களை சொல்லலை பொதுவா தான் சொன்னேன்”

“நீ என்னையே சொன்னாலும் எனக்கு கவலையில்லை ஏன்னா நானும் நவீனும் அப்படிப் பட்டவா இல்லைன்னு எங்களுக்கும் அந்த ஆண்டவனுக்கும் நன்னாவே தெரியும். நானும் இப்படி குத்தியோ, குதர்க்கமாவோ இல்லை உதாரணம் காட்டியோ பேசனும்னா நிறைய பேசலாம் அவ்வளவு இருக்கு ஞாபகம் வச்சுண்டு இனி பொதுவா பேசு சரியா.”

“நீங்க தப்பா எடுத்துண்டுட்டேங்கள்ன்னு நினைக்கறேன். சரி மன்னி எனக்கு இன்னொரு கால் வர்றது அதை அடென்ட் பண்ணனும் வச்சுடட்டுமா? பை”

“ம்…ம்…பை பை.”

என்று ஃபோனை வச்சதும் மிருதுளா தனக்குள்

“பொதுவா சொல்ல வந்துட்டா பெரிய இவ மாதிரி. நான் இன்னமும் பழைய மிருதுன்னு நினைச்சுண்டுட்டா போல…இனி உருளைக்கு உப்பேரி உடனே கொடுக்கணும் இது மாதிரி அப்போ தான் அடங்குவா இவா எல்லாம். நவீ சொல்லறது கரெக்ட் தான்”

“என்ன உன் முனுமுனுப்புல என் பெயரும் அடிப்படறது!!!”

“அது மட்டும் தான் கேட்டுதாக்கும்”

“எல்லாம் கேட்டேன். நீ அவகிட்ட பேசது வெரி வெரி கரெக்ட். அது தான் பேசிட்டே இல்ல அப்புறம் ஏன் புலம்பற? அதை அதோட விட்டுட்டு அடுத்த வேலையைப் பாரு மிருது”

நவீனின் அறிவுரைப்படி அதை அன்றே மறந்து விட்டு சக்தியின் பிறந்தநாள் ஏற்பாடுகளில் மூழ்கினாள் மிருதுளா. சக்தியின் நண்பர்கள் அனைவரின் வீட்டிற்கும் ஃபோன் போட்டு அழைத்தாள். அனைவரும் வந்திருந்தனர். கேக் கட் செய்து சக்தியின் பத்தாவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அன்று சக்தியிடம் நவீனும் மிருதுளாவுமாக பேசினார்கள்

“சக்தி இது உன்னோட பத்தாவது பிறந்த நாள் இதை உன் நண்பர்களோட கொண்டாடியாச்சு. ஆர் யூ ஹாப்பி?”

“எஸ் அப்பா ஐ ஆம் வெரி ஹாப்பி”

“குட் மா. ஆனா உன்னைப் போல நிறைய குழந்தைகள் அப்பா அம்மா இல்லாம மூணு வேளை சாப்பிட வழியில்லாம ஆர்ஃபனேஜ்ல இருக்காங்க தெரியுமா?”

“ஏன் பா அவங்களுக்கு அப்பா அம்மா இல்லை? ஏன் அவங்க அங்க இருக்காங்க?”

“ஏன்னா சாமி அவங்க அப்பா அம்மாவை எல்லாம் கூட்டிட்டுப் போயிட்டாரு சக்திமா. அதுனால நாளைக்கு நாம அந்த மாதிரி ஒரு ஹோம்முக்கு போய் அவங்களோட சாப்பிட்டு, விளையாடி, அவங்களுக்கு கிஃப்ட் எல்லாம் கொடுத்து ஒரு ஹாஃப் அ டே ஸ்பென்ட் பண்ணிட்டு வரலாமா?”

“ஓகே மா. ஜாலியா இருக்கும்”

சக்தியின் பிறந்தநாளன்று துளசி மிருதுளாவிற்கு ஃபோன் செய்து சக்திக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லியதும். தான் இரண்டாது முறையாக கர்ப்பம் தரித்திருப்பதாக சொல்ல அதற்கு மிருதுளா வாழ்த்து தெரிவித்து

“நீ வேலையை கன்டின்யூ பண்ணப் போறியா துளசி?”

“ஆமாம் மன்னி. இவர் சம்பாத்தியம் எல்லாம் பத்தவே பத்தாது. அதுவுமில்லாமல் இவர் ஒரு வேலை ல ஒழுங்கா இருக்கவும் மாட்டேங்கரார்”

“அப்போ இரண்டு குட்டீஸையும் யாரு பார்த்துப்பா?”

“நம்ம மாமனார் மாமியார் தான வேற யாரு பார்த்துப்பாளாம்?”

“சுப்பர் அந்த பேரன் பேத்தியையாவது பார்த்துக்கட்டும். சந்தோஷம் தான்.”

“ஏன் மன்னி அப்படி சொல்லறேங்கள்? நீங்க சக்தியை நம்ம மாமியார்கிட்ட ஒட்டவே விடலை அது தான் அவாளால் பார்த்துக்க முடியாமல் போச்சு. நீங்க உங்க அம்மா கிட்ட தான் விட்டேங்கள் அப்புறம் இப்படி சொன்னா எப்படி?”

“இங்கே பாரு துளசி இதெல்லாம் உனக்கு தேவையில்லாத பேச்சு. நீ இந்த ஆத்துக்கு வர்றதுக்கு ஒன்பது வருஷம் முன்னாடி வந்தவ நான். அப்போ என்னென்ன நடந்ததுன்னு எல்லாம் உனக்கு தெரியாது. ஸோ யாராவது ஏதாவது சொன்னதெல்லாம் வச்சுண்டு இனி என் கிட்ட இப்படியெல்லாம் பேசிண்டு வராதே! உனக்கு நான் அப்போ நடந்ததை எல்லாம் எக்ஸ்ப்ளேயின் பண்ண வேண்டிய எந்த அவசியமுமில்லை. உன் அம்மாவால முடியாது அதுதான் நீ மாமியார்ட்ட விட்டிருக்கன்னு நான் சொன்னா உனக்கு கோபம் வரும்ல அது மாதிரி தான். ஒருத்தர் வாழ்க்கையில என்ன நடந்தது ஏது நடந்ததுன்னு முழுசா தெரியாம பேசிடக் கூடாது. இனி இப்படி பேசறதா இருந்தா எனக்கு நீ கால் பண்ண வேண்டியதேயில்லை புரிஞ்சுதா!”

“ஓகே மன்னி”

“தாங்கஸ் ஃபார் யுவர் விஷ்ஷஸ். நான் வச்சுடவா”

என்று ஃபோனை துண்டித்தாள் மிருதுளா. அன்று முதல் பர்வதீஸ்வரனின் தூதாகவும், ஒற்றனாகவும் உபயோகப்படுத்தப்பட்டாள் துளசி.

பிள்ளைக்கு சம்பாதிக்க வக்கில்லை என்றும் அதனால் தானும் வேலைக்கு போக வேண்டுமென்றும்…

மூத்த மருமகள் சொல்லாததை சொன்னதாக இட்டுக்கட்டி பர்வதம் கூறினாள் அன்று

அதையே சொல்லி சலித்துக் கொண்டாள் மூன்றாவது மருமகள் மிருதுளாவிடம் இன்று

மூத்த மகனின் குழந்தையைத் தொட்டுக் கூட தூக்க மனமில்லை பர்வதத்திற்கு அன்று

மூன்றாவது மகனின் குழந்தையை முழுநேரம் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது இன்று

பத்து வருடத்திற்கு முன் இருந்தது உடலில் பலம் ஆனால் பேத்திக்கு செய்வதற்கோ இல்லாமல் போனது மனம்

பத்து வருடத்திற்கு பின் இல்லை உடலில் பலம் ஆனால் பேத்தியை பார்த்துக் கொண்டுதான் ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளியது காலம்!!!!

தொடரும்…..Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s