இருபத்தி எட்டாம் தேதி அதிகாலை மூன்றரை மணிக்கெல்லாம் ராமானுஜம் எழுந்து அனைவரையும் எழுப்பினார். அம்புஜம், வேனு, மிருதுளா, ஈஸ்வரன், பர்வதம், நவீன் எழுந்தார்கள். மடமடவென குளித்து அனைவரும் தயார் ஆனார்கள். அன்று அதிகாலை பெண்வீட்டாருக்கு எந்த வேலையும் இல்லை. அவர்கள் திருமணத்திற்கு தயார் ஆகிக்கொண்டிருந்தனர். நவீன் வீட்டார் வாத்தியார்கள் வந்ததும் விரதத்தில் மும்முரமானார்கள். ஃபோட்டோ கிராஃபர்கள் கேமராவுடன் அங்கும் இங்குமாக க்ளிக் செய்ய தொடங்கினர்.
விரதம் முடிவதற்குள் அனைத்து சொந்த பந்தங்களும் எழுந்து குளித்து பெண்கள் பட்டுப்புடவை உடுத்தி நகைகள் எல்லாம் அணிந்து தலைநிறைய பூ வைத்து கொண்டார்கள். ஆண்கள் அனைவரும் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து வந்து சபையில் முன் வரிசையில் அமர்ந்தார்கள். இளவட்டங்கள் புத்தாடை உடுத்தி அந்த கூட்டத்தில் அங்கும் இங்குமாக நண்பர்களுடன் நடந்து பேசிக்கொண்டே இருந்தார்கள். பொடிசுகள் அனைவரையும் அழகாக டிரஸ் பண்ணி மண்டபத்தை விட்டு வெளியே செல்லாமல் அங்கேயே விளையாட அவர்கள் அன்னையர் சொல்ல அங்கும் இங்குமாக ஓடி ஆடி டேய் சதீஷ் என்ன புடி பார்ப்போம்..ஏய் ஆஷா நீ என்ன கண்டுபிடி என குட்டீஸ் லூட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள்.
நாதஸ்வரமும், தவிலும், மிருதங்கமும் இன்னிசையை தந்தன.
வயதானவர்கள் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து அந்த காலத்துல ஆத்துலேயே தான் கல்யாணம் பண்ணினா என்று கடந்தகாலத்தை நிகழ்காலத்துடன் ஒப்பிட்டு அனைத்து சம்பிரதாயங்களையும் அலசி ஆராய்ந்துக் கொண்டிருந்தனர்.
நவீன் வீட்டார் விரதம் முடிந்ததும் காசி யாத்திரைக்கு தயாராகினர். காசி யாத்திரைக்கு வேண்டிய குடை, கைவிசிறி, கொஞ்சம் பருப்பு, அரிசி முடிந்த சிறு மூட்டை என அனைத்துப்பொருட்களும் மாப்பிள்ளை ரூமில் வைக்கப்பட்டிருந்தது. நவீனின் மாமா நவீனுக்கு பஞ்சகஜம் கட்டி, மாலையிட்டு அத்தை வசுந்தரா நவீனின் கண்களுக்கு மையிட்டாள். நவீனுடன் அனைவரும் மண்டப வாசலுக்கு வந்தனர்.
காசி யாத்திரை என்றால் என்ன? ஏன் இதை இவர்கள் திருமணங்களில் வைக்கிறார்கள் ? அப்பொழுது சொல்லும் மந்திரங்களின் பொருள் என்ன? மாப்பிள்ளை தனக்கு திருமண வாழ்வில் இஷ்டமில்லை என்றும் காசிக்கு சென்று வேத பாடங்களை கற்று சன்யாசம் ஏற்க போவதாகவும் முடிவெடுத்து அவர் செல்லும்போது மணமகளின் தந்தை அவரைத் தடுத்து திருமண வாழ்க்கையில் உள்ள சந்தோஷங்களை அவருக்கு எடுத்துறைப்பதோடு மட்டுமல்லாமல் தனது பெண்ணை அவருக்கே மணமுடித்து தருவதாகவும் வாக்களித்து தனது மகனை மாப்பிள்ளைக்கு குடைப்பிடிக்கச் சொல்லி இருவருமாக மணமகனை திருப்பி மண்டபத்திற்குள் அழைத்து வருவதே இந்த காசி யாத்திரை சடங்கின் விளக்கமாகும்.
இவ்வாறு அவர்கள் திரும்பியதும் மணமகளை கீழே வரச்சொல்லி இருவர் கழுத்திலும் மூன்று மாலைகள் போட்டு மூன்று முறை மாற்றிக்கொள்ள சொல்வார்கள். இதை சற்று விளையாட்டாக மணமகன் மணமகள் இருவரின் தாய்மாமன்களும் அவர்களை தூக்கிக்கொள்ள மாலைகளை மாற்றிக்கொள்ள சொல்வார்கள் ஆனால் இருவரையும் உயர்த்தித் தூக்கிப்பிடித்துக்கொள்வார்கள். சிறிது நேரம் விளையாடிய பின்னர் பெண்ணின் தந்தை கூறியது போலவே இருவர் கைகளிலும் கல்யாண மாலையை கொடுத்து மாற்றிக்கொள்ள சொல்ல அவர்களும் மாலையை மாற்றிக்கொண்டு தனது மகளின் கரங்களை பிடித்து மணமகனின் கரங்களில் கொடுத்து இனி என் மகளுக்கு எல்லாமும் நீங்கள்தான் அவளை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு என கூறுவார். இதுவே கண்ணிகாதானம் ஆகும்.
மணமகன் மணமகள் கரங்களைப் பிடித்தவாறே இருவரையும் அலங்காரம் செய்த ஊஞ்சலில் அமரச்செய்து ஊஞ்சல் பாடல்களை பெண்கள் அனைவரும் பாட, சுமங்கலிகள் அவர்களுக்கு பச்சப்பொடி சுற்ற பாலும் பழமும் மணமக்கள் கைகளில் கொடுத்து பின் மாங்கல்ய தாரணத்திற்கு மண்டபத்திற்குள் அழைத்துச்சென்றனர்.
இந்த ஊஞ்சல் வழக்கத்தில் உள்ள சூட்சுமம் என்னவென்றால்…திருமண வாழ்க்கையில் ஊஞ்சல் ஆடுவது போல பல ஏற்ற தாழ்வுகள் இருக்கும் அதை இருவருமாக ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக இன்று கரங்கள் இணைந்து இருப்பது போலவே இருந்து சரிசெய்து வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான்.
அனைவரும் ஊஞ்சல் முடிந்து மண்டபத்திற்குள் வந்தனர். இருவீட்டாரும் அழைப்பு விடுத்திருந்த அனைத்து சொந்தங்களும் நண்பர்களும் வந்திருந்து மண்டபம் முழுவதும் மக்கள் நிறைந்து வழிந்தனர். இரண்டு வீடுகளிலும் இது முதல் கல்யாணம் ஆகையால் அன்று விடுமுறை இல்லாத போதும் அழைத்த அனைவரும் வந்திருந்தனர். கல்யாண மேடையில் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் இருந்தனர். இருவீட்டாரின் சில முக்கிய பெரியவர்களும் இருந்தனர்.
வேதங்கள் முழங்க நாதஸ்வரம் இசைக்க நவீன் மிருதுளாவிடம் கல்யாண கூரை புடவையைக்கொடுத்து கட்டிவரச்சொல்ல மிருதுளாவும் உள்ளே புடவை மாற்ற சென்றாள். அப்பொழுது மேடையில் மாப்பிள்ளைக்கு ராமானுஜமும் அம்புஜமும் பாத பூஜை செய்தனர்.
மிருதுளாவுடன் அனைத்து நவீன் வீட்டார் மாமிகளும் உள்ளே சென்று ஒன்பது கஜப்புடவையை கட்டிவிட்டு (அது சரியாகவும் கட்டவில்லை) மேடைக்கு அழைத்துவந்தனர். பின் ராமானுஜம் மடியில் அமர்ந்தாள் மிருதுளா. பர்வதத்தின் தம்பி சும்மா இல்லாமல் “அப்பா பாவம் கொஞ்சம் பார்த்து உட்காருமா மிருதுளா” என்று கூறி கெக்க புக்கே என சிரிக்க பெண் வீட்டார்களுக்கும் மிருதுளாவிற்கும் துளியும் பிடிக்கவில்லை. அவருக்கு யாரும் அந்த நேரத்தில் பதில் குடுக்கவும் போகவில்லை.
எல்லோரும் மாங்கல்ய தாரணத்திற்காக காத்திருந்தனர். மந்திரங்கள் ஒலிக்க மேளதாளங்கள் முழங்க நவீன் மிருதுளா கழுத்தில் தாலியின் இரண்டு முடிச்சுப் போட மூன்றாவது முடிச்சை அவனின் பெரியப்பா மகள் நாத்தனார் முடிச்சுப்போட மண்டபத்திலுள்ள அனைவரும் எழுந்து மணமக்கள் மேல் பூக்களையும் அட்சதையும் போட்டு வாழ்த்த நமது நவீன் மிருதுளா திருமணம் இனிதே நடந்தது. அம்புஜத்திற்கும் ராமானுஜத்திற்கும் கண்கள் களங்கியது. இருவீட்டாரும் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள். ஆத்துக்கு மாட்டுப்பொன் வந்தாச்சா? உங்க ஆத்துக்கு மாப்பிள்ளை வந்தாச்சா என மகிழ்ச்சியாக விசாரித்துக்கொண்டனர். அனைவருக்கும் ஜூஸ் பரிமாறப்பட்டது. நவீனுக்கும் மிருதுளாவிற்கும் ஜூஸ் கொடுககப்பட்டது.
மாங்கல்ய தாரணம் ஆனதும் மந்திரங்கள் சொல்லிக்கொண்டே மற்ற சடங்குகள் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது அப்பொழுது மேடையில் நவீன், மிருதுளா மட்டுமே இருந்தனர். அனைத்து சொந்தங்களும் மேடைவிட்டு கீழே இறங்கினர். நவீன் மற்றும் மிருதுளாவின் பெற்றோர்கள் வந்த அனைவரையும் வரவேற்ப்பதில் மும்முரமானார்கள். திருமணத்திற்கு வந்திருந்த பெண்வீட்டார் வலதுபுறமும் மாப்பிள்ளை வீட்டார் இடதுபுறமும் என இரு வரிசையில் பலர் பரிசுப்பொருட்களுடனும், பணத்துடனும் மொய் செய்வதற்காக பொறுமையாக நின்று அவர்களுக்கு கொடுத்து வாழ்த்தி கல்யாண சாப்பாடு சாப்பிடுவதற்க்காக கீழே டைனிங் ஹாலுக்குச் சென்றனர்.
காலைமுதல் ஒன்றுமே சாப்பிடாமல் வெரும் பாலும் பழமும் ஜூஸும் மட்டுமே அருந்திய நவீனுக்கும் மிருதுளாவிக்கும்
தனியாக ஒரு டேபிளில் இரண்டு கோலமிட்டு அதன் மேல் இரண்டு வாழை இலை போட்டு அதில் சாப்பாடு பரிமாறப்பட்டது. சொந்தங்கள் நண்பர்கள் அவர்களை சுற்றிக்கொண்டு இருவரையும் கலாயித்துக் கொண்டிருந்தனர். இருவரையும் ஒருவரொக்கொருவர் ஊட்டிவிடும் படி அனைவரும் சொல்ல நவீன் முதலில் மிருதுளாவிற்கு லட்டு ஊட்டிவிட்டான் பின் மிருதுளா நவீனுக்கு ஜாங்கிரி ஊட்டிவிட அனைவரும் கைத்தட்டினார்கள். மத்திய கல்யாண சாப்பாடு ஆன பின் மண்டபம் சற்று காலியானது ஆம் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இருந்தனர் மற்ற அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்றனர்.
நவீனும், மிருதுளாவும் அவரவர் ரூமுக்குள் சென்று ஆடைகளை மாற்றிக்கொண்டனர். கிருஹப்ரவேசம் என பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் அறைக்கும் மாப்பிள்ளைவீட்டார் பெண்வீட்டார் அறைக்கும் சென்று மீண்டும் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்து பின் வெற்றிலைப்பாக்கு, பூ, பழம், ரவிக்கைத்துணி என சுமங்கலிகளுக்கு இருவீட்டிலும் கொடுக்கப்பட்டது. இவை அனைத்தும் முடிந்ததும் அனைவரும் சற்று ஓய்வெடுத்தார்கள். அப்பொழுது அம்புஜம் ரூம் கதவு தட்டப்பட்டது. “யாரது” என கேட்டுக்கொண்டே கதவை திறந்தாள். வெளியே பர்வதம் நின்றுக்கொண்டிருந்ததைப்பார்த்து
“வாங்கோ மாமி. உள்ள வாங்கோ” என்றழைக்க அதற்கு பர்வதம் சத்தமாக
“பருப்பு தேங்காய் ரெண்டிருக்கனும் ஆனா ஒன்னு தான் எங்க ரூமுக்கு வந்திருக்கு” என்று கேட்க
“இல்லையே மேடையிலிருந்த எல்லாத்தையும் உங்க ரூம்ல வைக்கச்சொன்னேன். அவாளும் வச்சானுட்டு சொன்னாலே. இருங்கோ பார்க்கறேன்”
என அம்புஜம் மேடைக்குச்சென்று பார்த்தாள் அங்கு மேடையின் ஓரமாக ஒரு செட் பருப்பு தேங்காய் வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்துக்கொண்டு வந்து பர்வதம் கையில் கொடுத்து…
“சாரி மாமி அவா மேடை ஓரமா வச்சிருக்கா. கவணிக்கலை போல. இதாங்கோ” என்று கூறி கொடுத்தாள்
அதை பர்வதம் வாங்கிக்கொண்டாள். இதை காரணமாக வைத்து வம்பிழுக்கப்பார்த்து வடிவேலு மாதிரி வடபோச்சே என்ற ரியாக்ஷனுடன் அங்கிருந்து சென்றாள்.
மாலை நாலு மணி ஆனதும் அனைவருக்கும் காபி ஈவ்னிங் ஸ்நாக்ஸ் பரிமாறப்பட்டது. மிருதுளா நலங்குக்கு ரெடியானாள். ஒரு தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு பழம் எல்லாம் வைத்து மிருதுளா நவீன் ரூமிற்கு சென்று நலங்கிற்கு அழைத்தாள் அப்பொழுது நவீனின் சித்திகள்
“ஒரு பாட்டு பாடினா தான் எங்க நவீன் வருவான்” என்று சொல்ல எந்த வித தயக்கமுமின்றி மிருதுளாவும் பாட்டு பாடினாள். “சூப்பரா பாடர மிருது” என்றனர்.
நெருங்கிய சொந்தகளும் நண்பர்களும் ஒன்றாக மண்டபத்தின் நடுவில் விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காளத்தில் இருவீட்டாரின் பெண்கள் வட்டமாக அமர்ந்தனர். ஆண்கள் அனைவரும் அவர்களைச்சுற்றி நாற்காலியில் அமர்ந்தார்கள். நடுவிலே எதிர் எதிராக நவீனும் மிருதுளாவும் இரண்டு அணிகளோடு அமர்ந்திருந்தனர். அழகிய பாட்டுடன் நலங்கு ஆரம்பமானது. அப்பளம் உடைத்தல், தேங்காய் உருட்டுதல், அரிசி தறேன் பருப்பு தருவியா என்று கேலிச் செய்தல், அந்தாக்ஷரி எனப்படும் பாட்டுக்கு பாட்டு என்று ஒரே சிரிப்பும் சந்தோஷமுமாக நடந்தேறியது நம்ம மிருதுளா நவீன் நலங்கு. இருவரையும் ஒன்றாக அமரச்செய்து ஆரத்தி எடுத்தனர்.
அந்த காலத்தில் பெரும்பாலும் அரேஞ்ஜ் மேரேஜாக தான் இருந்தது. அத்தகைய கல்யாணத்தில் மணமகனும் மணமகளும் அவ்வளவாக ஒருவருக்கொருவர் பரிட்சயமாகாதவர்கள் என்பதால் இப்படி நலங்கு என சில விளையாட்டுகளை வைத்து அவர்களுக்குள் (ஆங்கிலத்தில் இதை – the ceremony where the bride and groom break the ice and get along என்பார்கள்) நெருக்கத்தையும், ஒற்றுமையையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் ஏற்படுத்தினார்கள் நமது முன்னோர்கள். ஆனால் இன்றைக்கு இது ஒரு கேலிக்கூத்தாகிவிட்டது என்றால் தவறில்லை என நினைக்கிறேன்.
அனைவரும் இரவு சாப்பாடு முடிந்ததும் நவீனையும், மிருதுளாவையும் சாந்தி முஹூர்த்த ரூமிற்குள் அனுப்பி விட்டு வெளியே கும்மிப்பாட்டு பாடி கும்மியடித்து எல்லோரும் அவரவர் ரூமில் உறங்கச் சென்றனர். சீட்டுக்கச்சேரி கும்பல் மீண்டும் சீட்டாட துவங்கியது. அம்புஜம் காலை முதல் அங்கும் இங்குமாக ஓடியாடியதில் களைத்திருந்தாலும் மிருதுளாவின் பெட்டியை அடுக்கி அவளது புடவைகள் நகைகள் எல்லாவற்றையும் சரிபார்த்து தனியாக மற்றொரு பெட்டியில் அடுக்கி மறுநாள் மண்டபத்தை காலி செய்ய வேண்டுமே என அவர்கள் ரூமில் ராமானுஜம், வேனு எல்லாரும் அவிழ்த்துப்போட்ட துணிகளை மடித்து அவரவர் சூட்கேசில் போட்டு மறுநாள் போட்டுக்கொள்ள வேண்டி டிரெஸ்ஸை மட்டும் நால்வருக்கும் எடுத்து வைத்து விட்டு எல்லாவற்றையும் பேக் செய்து அவள் உறங்கும் போது மணி இரண்டரை ஆனது. அங்கே பர்வதமும் இதே போல அவர்கள் ரூமிலிருந்த துணிகளை எல்லாம் அவரவர் சூட்கேசில் போட்டு பேக் செய்தாள்.
இவ்வாறு பலர் தடுக்க எண்ணியும் அவைகளை எல்லாம் சாம்பலாக்கி நவீனுடன் மிருதுளாவை கைகோர்க்க வைத்த அம்புஜம் நம்பும் அந்த அம்பாளின் அடுத்த விளையாட்டு தான் என்ன? எதார்த்தமான, சூது வாது தெரியாத வெகுளிபெண்ணான நம்ம மிருதுளா துளியும் உண்மை இல்லாத, சூது வாது நிறைந்த குடும்பத்தில் அதுவும் ஆகாத மருமகளாக நுழைந்திருக்கிறாள். என்னவெல்லாம் அவளுக்கு காத்திருக்கிறதோ? நவீன் அவளுக்கு பக்கத்துணையாக இருப்பானா? இப்படி இருக்கும் மிருதுளா மாறுவாளா? என்பதைப் பற்றி வரும் நாட்களில் படித்து தெரிந்துகொள்ளலாம்.
எனது அழைப்பை ஏற்று மிருதுளா நவீன் திருமணத்திற்கு வருகைதந்த வாசகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தொடரும்….