அத்தியாயம் 48: லட்சுமியின் வரவு

அவள் அறையில் நன்றாக உறங்கி எழுந்து கீழே வந்தாள் மிருதுளா. நேரம் மதியம் ஒன்று ஆகியிருந்தது. வீட்டில் அனைவரும் அமர்ந்து மத்திய சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.  மிருதுளா முகம் கழுவி விட்டு வீட்டினுள் நுழைந்தாள். உடனே பர்வதம்

“தூங்கியாச்சா! இப்போ என்ன? உட்கார்ந்து சாப்பிடவேண்டியது தானே. வா வா ஒரு தட்டெடுத்துண்டு உட்காரு”

என்று நக்கலாக கூற அதை வீட்டுக்கு வந்திருந்த லட்சுமி அத்தை கவனித்துக் கொண்டிருப்பதை உணர்ந்த மிருதுளாவிற்கு சற்று தர்மசங்கடமானது. ஆனாலும் அவள் ஏதும் ஏதிர்த்தோ இல்லை பர்வதம் கூறியது தவறோ என்று கூறாமல் அமைதியாக தன் தட்டில் சாதத்தைப் போட்டுக் கொண்டு அவியல் என்ற பெயரில் குர்மாவை கொஞ்சமாக பண்ணி வைத்திருந்த பர்வதத்திடம் மிருதுளா…

“அம்மா எல்லாரும் சாப்பிட்டாச்சா?

இதை நான் போட்டுக்கலாமா?”

“எல்லாரும் சாப்பிட்டாச்சு போட்டுக்கோ போட்டுக்கோ” 

என்று அந்த அவியல் என்கிற குர்மாவை டொங்கென்று மிருதுளா முன் வைத்து விட்டு பாத்திரங்களை தேய்க்கப் போட ஆரம்பித்தாள். வீட்டில் ஏழு பேருக்கு சமைக்காமல் எப்பொழுதம் நால்வராகிய ஈஸ்வரன், ப்ரவின், பவின் மற்றும் பர்வதத்திற்கு மட்டும் சமைப்பது போல வெறும் நான்கு பேருக்கு தான் சமைத்திருந்தாள் பர்வதம். அவளின் குணமே அது தானே. பத்தும் பத்தாமலும் செய்வதே அவளின் சமையல் சிக்கனம்.  

மிருதுளா அந்த அவியலை ஊற்றிச் சாப்பிடுவதற்காக பாத்திரத்தின் மூடியைத் திறந்தாள் அதில் அடியில் மிகவும் கொஞ்சமாக காய்கள் ஏதுமின்றி வெறும் அந்த குர்மாவின் தண்ணீர் மட்டுமே இருந்தது. அவளுக்கோ பசி பாவம் என்ன செய்வதென்று முழித்தாள்  பக்கத்திலிருந்த பாத்திரத்தின் மூடியைத் திறந்துப் பார்த்தாள் அதில் கொஞ்சம் ரசம் மீதமிருந்தது. அதை ஊற்றிக் கொண்டு தொட்டுக் கொள்ள காய் என்ன இருக்கு என்று தேடினாள். மிருதுளா படும் அவஸ்தையைப் பார்த்துக் கொண்டிருந்த லட்சுமி ..

“மிருதுளா பர்வதம் பண்ணின ரசத்துக்கு தொட்டுக்கத் தான் அந்த அவியல்! நீ தேடறது இல்லை”

என்று நாசுக்காக பொறியல் ஒன்றும் செய்யவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினாள். பாத்திரங்களை வெளியே தேய்க்கப் போட்டுவிட்டு வீட்டினுள் லட்சுமி சொல்வதைக் கேட்டுக் கொண்டே வந்த பர்வதம்..

“ரசம் சாதத்திற்கு அவியல் தொட்டுக்கறது தான் எங்க ஆத்து பழக்கம். அது அவளும் பழகிக்கட்டும்”

“அது சரி பர்வதம் அதுக்காக காயே இல்லாமல் வெறும் ரசம் சாதத்தையா புள்ளையாண்டு இருக்கறவளுக்கு கொடுப்பா?”

“அப்படின்னா டைத்துக்கு சாப்பிட வரணும். தூங்கிண்டே இருந்தா எப்படி?”

என்று மீண்டும் மிருதுளா துங்குவதைக் குத்திக் காட்டினாள் பர்வதம். லட்சுமியும் விட்டப் பாடில்லை.

“மாசமா இருந்தா தூக்கம் வர்றது சகஜம் தானே அதுக்காக பட்டினியா போடறது? நீ தான் நாலு புள்ளகளை பெத்தவளாச்சே உனக்குத் தெரியாதா என்ன?”

“யாரு? யாரை? இப்போ பட்டினிப் போட்டாளாம் இங்கே? என்னால முடிஞ்சதைத் தான் செய்துத் தருவேன் அது யாராக இருந்தாலும் சரி அதுக்கு மேலே விதவிதமா வேணும்ன்னா அவா அவா செஞ்சு சாப்பிட்டுக்கட்டுமே”

என்று பர்வதம் திமிராக பதிலளிக்க. இவளிடம் பேசி பிரயோஜனமில்லை என்று எண்ணி லட்சுமி.

“எனக்கென்ன நீயாச்சு உன் நாட்டுப்பொண்ணாச்சு. நீ ரசம் சாதமே சாப்பிட்டுக்கோமா”

வீட்டில் இவ்வளவு பேச்சு வார்த்தைகள் நடந்தும் அங்கிருந்த நான்கு ஆண்களில் ஒருவர் கூட லட்சுமி சொல்வதற்கோ இல்லை மிருதுளா சாப்பிட வெறும் ரசம் மட்டும் இருந்ததற்கோ வாயை திறக்கவில்லை அப்படி ஒரு செழிப்பான பர்வத ஆட்சி நடந்துக் கொண்டிருக்கிறது.

மிருதுளா அந்த கொஞ்சம் ரசம் சாதத்தை சாப்பிட்டு எழுந்து வெளிய அமர்ந்து தட்டைத் தேய்த்து வைத்துக் கொண்டிருக்கும் போது பர்வதம் அவளிடம்

“அங்க இருக்கிற எல்லாப் பாத்திரங்களையும் தேய்ச்சு வச்சுடு. உன் தட்டை மட்டும் தேய்ச்சு வச்சுட்டுப் போகாதே. நான் போய் காய வச்சிருக்கற எங்க துணிமணிகளை மாடிலேந்து எடுத்துண்டு வந்துடறேன்” 

என்று கூறி மாடிக்குச் சென்றாள்.  மிருதுளாவும் அங்கிருந்த அனைத்துப் பாத்திரங்களையும் தேய்த்துக் கொண்டிருந்தாள். உள் ரூமில் ஈஸ்வரன்  ப்ரவின், பவின் மூவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர். நவீன் ஹாலில் அமர்ந்திருந்தான். லட்சுமி அத்தை, மிருதுளா பர்வதத்திடம் படும் பாட்டைப் பார்த்து மெதுவாக நவீனின் அருகில் சென்று..

“நவீன் எனக்கு உன் கிட்ட ஒண்ணுச் சொல்லணும்னு தோனறது சொல்லலாமா?”

“என்ன அத்தை? எதுவானாலும் சொல்லுங்கோ”

“அது நம்ம மிருதுளாப் பத்தி தான் நவீன்”

“மிருதுளாவுக்கு என்ன அத்தை?”

“அந்த பொண்ணு உன் குழந்தைய சுமந்துண்டிருக்காப்பா அவளுக்கு நல்ல சத்தான ஆகாரமும் நிம்மதியான தூக்கமும் தான் இப்போ தேவை அதுனால நீ பேசாம மிருதுளாவ உன் மாமியார் ஆத்துல கொண்டு போய் விட்டுட்டு வந்திடு”

என்று பர்வதத்தையோ அவளின் சமையலையோ குற்றம் சொல்லாமல் மிருதுளாவைக் காப்பாற்ற ஒரு சிறு குறிப்பு மட்டும் கொடுத்தாள் லட்சுமி. 

“அப்படியா !! ஆக்சுவலா நாங்க இன்னைக்கு அங்க தான் போயிருக்கணும் நீங்க வந்திருக்கேங்களேன்னு எங்களை இங்க இருக்கச் சொன்னா அது தான் இருக்கோம். இல்லாட்டி காலையிலேயே கிளம்பிருப்போம்”

“அப்படியா ரொம்ப சந்தோஷம். நான் ராசாமணி ஆத்துலேந்து அப்படியே ஊருக்குப் போயிருப்பேன் ஆனா என்னை இங்க இன்னைக்கு வந்துட்டு தான் போகணும்ன்னு உன் அம்மா தான் நேத்து வற்புறுத்தினா அதுனால தான் நான் வந்தேன்”

என்று லட்சுமி நவீனிடம் சொன்னதும் பர்வதத்தின் குட்டு வெளிப்பட்டது. ஏனெனில் அவளுக்கு நன்றாக தெரியும் நவீனும் மிருதுளாவும் அன்று மிருதுளா வீட்டிற்கு கிளம்புவார்கள் என்பது அதைத் தடுப்பதற்கான வேலை தான் லட்சுமியை வரவழைத்திருப்பது.

“ஓ !! அப்படியா அது எனக்குத் தெரியாது அத்தை. இப்போ என்ன உங்கக் கூடவும் எங்களால இருக்க முடிஞ்சுதே அதுல எங்களுக்கும் சந்தோஷமே”

“அதெல்லாம் சரி கொஞ்சம் நான் சொன்னதையும் மனசுல வச்சுக்கோப்பா நவீன்”

என சொல்லி முடிப்பதற்குள் பர்வதம் துணிமணிகளுடன் வீட்டினுள் நுழைந்தாள்

“என்னத்தை சொன்னேங்கள் அவன் மனசுல வச்சுக்க?” 

“அது ஏதோ அத்தையும் மருமானுமா பேசிண்டோம் அதை விடு. சரி துணியை இப்படிப் போடு மடிப்போம்”

என்று லட்சுமி பேச்சைத் திசைத் திருப்பி, பர்வதத்துடன் சேர்ந்து துணிகளை மடித்து வைத்துக் கொண்டே

“சரி பர்வதம் நீ ரொம்ப வற்புறுத்தினதால நான் வந்தேன் உங்களோட  காலையிலேந்து இதோ இப்ப வரை இருந்தாச்சு. வெயில் தாழ நான் கிளம்பறேன் அப்போ தான் ராத்திரி ஒரு எட்டு மணிக்கெல்லாம் வீடு போய் சேரமுடியும்” 

“ஏன் வந்ததும் கிளம்பறேங்கள். இன்னுமொரு ரெண்டு மூணு நாள் இருந்துட்டுப் போறது”

“இல்ல மா கொழந்தகள் எல்லாரும் நேத்தே கிளம்பிப் போயாச்சு. இன்னைக்கு எப்படியோ அட்ஜஸ்ட் பண்ணிண்டு எல்லாம் காலேஜுக்கும் வேலைக்கும் போயிருப்பா நாளைக்கு வந்திடணும்ன்னு சொல்லித் தான் அனுப்பிருக்கா அதனால நான் சாயந்திரம் ஒரு நாலு நாலரைக்கு கிளம்பணும்”

“சரி அப்புறம் உங்க இஷ்டம்”

என்று அவர்கள் பேசி முடிக்கவும் மிருதுளா வேலைகளை முடித்து வீட்டு ஹாலுக்குள் நுழையவும் சரியாக இருந்தது. 

“வா மிருதுளா வேலை எல்லாம் ஆச்சா”

“ஆச்சு அத்தை”

“வா சித்த உட்காரு”

சிறிது நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். பின் மணி நாலடித்ததும் லட்சுமி முகம் கை கால் அலம்பி விட்டு ஊருக்கு கிளம்பத் தயார் ஆகிக்கொண்டிருந்தாள் அப்போது மிருதுளா அனைவருக்கும் காபிப் போட்டுக் கொடுத்தாள். அதைக் குடித்து விட்டு லட்சுமி கிளம்பிச் சென்றாள். 

லட்சுமிக்கு இரண்டு மகள்கள் இரண்டு மகன்கள். மூத்த மகள் ரமாமணியை திருமணம் முடித்துக் கொடுத்து விட்டார். மகன் நாராயணன் ஒரு கம்ப்யூட்டர் சென்டர் மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார்.  சுந்தரேசன் காலேஜ் படித்துக் கொண்டிருந்தான். இரண்டாவது மகளான கஜேஷ்வரி அண்ணனோடு கடையில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். லட்சுமிக்கு தனது இரண்டாவது மகளை பர்வதத்தின் இரண்டாவது மகனான குவைத்திலிருக்கும் கவினுக்கு கட்டிக் கொடுக்க எண்ணமிருந்தது. ஆனால் எவரிடமும் காட்டிக்கொள்ளாமல் வந்துப் போய் கொண்டு இருந்தாள். 

பவின் தங்கள் அத்தையை பஸ் ஸ்டாப் வரைச் சென்று ஊருக்கு பஸ் ஏற்றி விட்டு வந்தான். அன்றிரவு அனைவரும் மீண்டும் ரசம் சாதம் சாப்பிடும் போது…

“ஏன் இப்ப எல்லாம் எப்பவுமே ரசம் சாதமே தர்ற மா? சாம்பார் கூட வைக்க மாட்டேங்கறயே?” 

என்று பவின் கேட்க… அதற்கு ஈஸ்வரன் அதட்டல் துவணியில்..

“என்ன வாய் ரொம்ப நீளறது. போட்டதை சாப்பிட்டு பேசாம இருக்கணும் புரியறதா? இது எல்லாருக்கும் பொருந்தும்” 

என்று கூறியதும் பவின் கப்சிப்ன்னு சாப்பிட்டு எழுந்தான். லட்சுமி மத்தியம் பர்வதத்திடம் சொன்னதற்கான பதில் இரவு ஈஸ்வரனிடமிருந்து வருகிறதென்றால் என்னே ஒரு கம்யூனிகேஷன் சிஸ்டம் என்று தான் நினைக்கத் தோன்றும். ஆம் அவர்கள் வசிப்பதோ ஒரு சிறிய வீடு. அதற்குள் ஏழு பேர் இருக்கிறார்கள். நவீனும் மிருதுளாவும் தனியாக எது பேசினாலும் அது எல்லாருக்கும் தெரிந்துவிடும் ஆனால் மூத்த தம்பதி எப்போது எங்கே எப்படி கம்யூனிகேட் பண்ணிக் கொள்கிறார்கள் என்பது வியப்பான விஷயமே. வெளியே எங்கும் செல்வதுமில்லை. ஆங்கிலத்தில் ஒரு வாக்கியமுள்ளது “ப்ராக்டிஸ் மேக்ஸ் அ மேன் பர்ஃபெக்ட்” என்று அது போல ஈஸ்வரனை அவரது எக்ஸ்பீரியன்ஸ் மேய்டு ஹிம் பர்ஃபெக்ட் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. பயிற்சியாளர் பர்வதம் ஆச்சே!!!

அனைத்து வேலைகளும் முடிந்ததும் மிருதுளா மாடிக்குச் சென்றுப் படுத்துக் கொண்டாள். சிறிது நேரம் கழித்து நவீனும் மாடிக்கு வந்தான். மிருதுளா படுத்திருப்பதைப் பார்த்து

“என்ன மிருது தூங்கிட்டயா?”

“இல்ல நவீ. நேத்து ஆன டென்ஷன் இன்னைக்கு என்னை ரொம்ப அசத்தறது.  எனக்கென்னவோ வயிறு வேற வலிக்கறது. அதுதான் வந்துப் படுத்துண்டுட்டேன்.”

“என்ன வயிறு வலிக்கறதா? வா அப்போ உடனே ஹாஸ்பிடல் போகலாம்”

“இருங்கோ இன்னும் கொஞ்ச நேரம் கூட பார்ப்போம் வலி நிக்கலைன்னா அப்போ போகலாம்”

“விளையாடதே மிருது கிளம்பு. இரு நான் போய் கீழே சொல்லறேன்”

“வேண்டாம் நவீன் விடுங்கோ”

“இல்ல இல்ல நீ இரு இதோ வர்றேன்”

என்று நவீன் ரூமின் கதவைத் திறந்ததும் இருட்டில் யாரோ வேகமாக படிகளில் இறங்குவதைப் பார்த்த நவீனுக்கு பவின் போல தெரிந்தது உடனே

“ஏய் யாரு. டேய் பவின் இருட்டுல எங்க ரூம் முன்னாடி என்னடா பண்ணற”

என்று கேட்டுக் கொண்டே பவின் பின்னாடியேச் சென்றான் நவீன். வீட்டு வாசலில் வைத்து பவினின் டி ஷர்ட்டைப் பிடித்து 

“என்னடா ராத்திரி நேரத்துல மாடில பண்ணிண்டிருந்த?”

“சும்மா காத்து வாங்க வந்தேன்”

“காத்து வாங்க வந்தவன் ஏன் என்னைப் பார்த்ததும் ஓடிப் போன? கூப்பிட கூப்பிட காது கேக்காத மாதிரியே போனயே அது ஏன்?”

“எனக்கு கேட்கலை”

“ஓ!! உனக்கு கேட்கலை சரி உன் விஷயத்துக்கு அப்புறமா வர்றேன்…மிருதுக்கு வயிறு வலிக்கறதாம் வந்து என்னன்னு பார்க்கறயா?”

என்று பர்வதத்திடம் நவீன் கூற அதற்கு பர்வதம்…

“இப்போ என்ன வலியாம்? அதெல்லாம் ஒண்ணுமிருக்காது. வெறும் சூட்டு வலியா தான் இருக்கும். பேசாம தண்ணிக் குடிச்சிட்டுப் படுக்கச் சொல்லு”

“ஹாஸ்பிடல் போக வேண்டாமா?”

“அதெல்லாம் தேவையில்லை”

என்று மிருதுளாவைப் பார்க்காமலும் அவளின் பிரச்சினையை தெரிந்துக் கொள்ளாமலும் ஏதோ கேட்டதுக்கு பதில் சொல்ல வேண்டுமே என்று சொல்லிவிட்டு படுத்துக் கொண்டாள் பர்வதம். 

என்ன செய்வதென்று அறியாமல் மீண்டும் மாடிக்குச் சென்றான் நவீன். அங்கே வலியால் துடித்துக் கொண்டிருந்தாள் மிருதுளா. அவளிடம் பர்வதம் சொன்னதைச் சொன்னான். உடனே அவளும் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்தாள் பின் தன் அம்மா அவளுக்குச் செய்த வைதியம் ஞாபகம் வர உடனே அங்கிருந்த சிறியப் டப்பாவை நவீனிடம் எடுத்துத்தரச் சொன்னாள். அதிலிருந்த நாமக்கட்டியை எடுத்து தண்ணீர் விட்டு அதை தொப்புளைச் சுற்றித் தடவி விட்டு கால் கட்டைவிரலில் தடவ முயன்ற போது நவீன் அவளிடமிருந்து வாங்கி அவனே தடவி விட்டான். 

தனிமையில் நவீனிடமிருந்து கிடைக்கும் அன்பும், பாசமும், அக்கறையும் தான் மிருதுளாவை பர்வதத்தின் ஏச்சுப் பேச்சுக்களின் போது அமைதியாக இருக்க செய்கிறதா? அது சரியான அணுகுமுறையா? அவள் நினைத்திருந்தாள் பர்வதம், ஈஸ்வரன் சொன்ன ப்ரேஸ்லெட், சம்பளம், பத்தாயிரம் ரூபாய் ஆகிய பொய்களுக்கு ஊருக்கு வந்ததும் அதை அவர்களிடம் கேட்டிருக்கலாம் ஆனால் அதற்கு சரியான பதில் கிடைக்காது என்பதை அவள் கொஞ்ச நாள் மூத்த தம்பதிகளுடன் இருந்ததிலிருந்தே நன்கு அறிந்து வைத்திருப்பதனால் கேட்கவில்லையோ!!! 

மூத்த தம்பதியினருக்கு அதைப் பற்றி எல்லாம் துளியும் கவலையில்லை. அவர்கள் அவ்வப்போது ஆங்காங்கே பொய்களை அளித்தெளிப்பதோடு சரி.  அதன் பின் விளைவுகளைப் பற்றிய நினைப்புக் கூட இல்லாத மனிதர்கள். அப்படிப் பட்டவர்களிடம் பேசினால் மட்டும் நியாயம் கிடைத்து விடவா போகிறது? என்று மிருதுளா நினைத்திருந்தாலும் அதில் தவறில்லை. இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். தெரிந்தே பொய் சொல்பவர்கள் தூங்குவதைப் போல நடிப்பவர்கள், அவர்களை எழுப்ப முடியாது. எழுப்ப முயற்ச்சிப்பவர்கள் முட்டாளாக்கப்படுவார்கள். இப்படிப் பட்டவர்களுக்குத் தான் கடவுளும் நல்ல மருமகள்களைக் கொடுப்பார். கடவுளின் கணக்கே தனிக்கணக்கு தான். ஆமாம் அவருக்கும் கொஞ்சம் என்டர்டெயின்மென்ட் வேண்டாமா என்ன? எல்லா வீடுகளிலும் “எங்கள் வீட்டில் எல்லா நாளும்” என்று பாட்டு ஒலித்தது என்றால் அவருக்கும் போர் அடிக்காதா?  நாம் தொலைக்காட்சியில் பார்ப்பது எடிட்டிங் செய்யப்பட்ட சீரியல்கள் ஆனால் ஆண்டவன் பார்த்துக் கொண்டிருப்பது கோடிக் கணக்கான லைவ் சீரியல்கள். 

தொடரும்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s