அத்தியாயம் 47: இரண்டாவது விபத்து

வீட்டுப் பெண்களும், ராசாமணியும், நவீனும் வந்த வேன் விபத்துக்குள்ளானதும் அந்த கிராமத்து மக்கள் அனைவரும் வேனை சூழ்ந்துக் கொண்டு கத்தலானார்கள். வேனை கல்லும் கட்டையும் கொண்டு அடிக்கலானார்கள். வேனுக்குள் உள்ளவர்களுக்கு என்ன நடக்கிறது என்று ஒன்றும் புலப்படவில்லை. அனைவரும் பதற்றமானார்கள். எல்லாப் பெண்களும் மிருதுளா பத்திரமாக இருக்கிறாளா என்று தான் விசாரித்தனர் அவளை ஜன்னல் பக்கத்திலிருந்து எழுந்து நடுவில் அமரச் சொன்னார்கள் ஆனால் நடுவில் அமர்ந்திருந்த பர்வதம் ஜன்னலோரம் அமர மறுத்துவிட்டாள். மக்கள் வெளியே கொந்தளித்தனர் அனைவரையும் வேனிலிருந்து இறங்கச் சொல்லி வேனை கல்லால் அடித்தனர். இதைப் பார்த்த நவீன் மிருதுளாவை வேனின் தரையில் அமரச்செய்து தன் அத்தைகளையும் அக்காக்களையும் சுற்றி பார்த்துக்கச் சொல்லிவிட்டு டிரைவரிடம் விவரத்தைக் கேட்டான். 

“டிரைவர் என்ன ஆச்சு ஏன் இப்படி மக்கள் எல்லாருமா நம்ம வண்டி மேல கல் எறியிறாங்க? நீங்க ஏன் உள்ளயே உட்கார்ந்துட்டு இருக்கீங்க? வாங்க வெளியப் போய் என்ன ஏதுன்னு கேட்போம்”

“சார் …சார்…ஒரு தப்பு நடந்துப் போச்சு சார்”

“தப்பு நடந்திருக்குன்னு தெரியுதுப்பா அது என்னன்னு தான் கேட்கிறேன்”

“டேய் வெளில வாங்கடா.. வண்டியை விட்டு இறங்கி வாங்கடா! ரோடு என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா. இறங்குங்கடா”

என்று வெளியிலிருந்து மக்கள் கோஷம் போட நவீன்..

“டிரைவர் நீங்க சொன்னாத்தான் நான் இறங்கிப்  போய் அவங்ககிட்ட பேச முடியும்”

“சார் நான் வண்டிய ஒட்டிட்டே வந்தேன் அப்போ இரண்டு மாட்டை ஒட்டிட்டு ஒரு பையன் சட்டுன்னு க்ராஸ் பண்ணிட்டான் நான் பதறிப் போய் ப்ரேக்குக்கு பதிலா ஆக்ஸிலேட்டரை கொஞ்சம் அழுத்திட்டேன் ஆனா உடனே ப்ரேக்கும் போட்டுட்டேன் அதுக்குள்ள அந்த பையனையும் ஒரு மாட்டையும் இடிச்சிட்டேன் பையனுக்கு அடிப்பட்டிருக்கு அதோ அங்க உட்கார்ந்திருக்கான் பாருங்க, மாடு என்ன ஆச்சுன்னு தெரியலை அது நம்ம வண்டி முன்னாலேயே கிடக்கு.”

“சரி பெரியப்பா நீங்க எல்லாரும் பத்திரமா உள்ளேயே இருங்கோ நான் போய் என்ன ஏதுன்னு பேசிட்டு வரேன்”

நடப்பதை எல்லாம் பார்த்த மிருதுளா அதிர்ச்சியில் அப்படியே ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தால். சொர்ணம் அத்தை

“நவீன் பாத்துப்பா எல்லாரும் கட்டையும் கையுமா இருக்காப்பா”

நவீன் வண்டியை விட்டு கீழே இறங்கவும் பின்னால் ஆண்கள் வந்த மற்றொரு வேனும் அந்த இடம் வந்து சேர்ந்தது. நவீன் இறங்கியதும் கிராம மக்கள் நவீனின் சட்டைப் பிடித்தார்கள். அதற்கு நவீன் பொறுமையாக நின்று பதிலளித்துக் கொண்டிருக்கையில் வேனின்னுள்ளிருந்து மிருதுளா

“நவீ !நவீ! ப்ளீஸ் அவரை விட்டுடுங்கோ.”

என்று கத்த  வெளியே இருந்து சிலர் வேனினுள் எட்டிப்பார்த்தனர். உடனே சொர்ணம் அத்தை மிருதாளாவைக் காட்டி 

“அப்பா கர்ப்பிணிப் பொண்ணு குழந்தைகள், வயசானவா எல்லாம் இருக்காப்பா கொஞ்சம் புரிஞ்சுக்கோங்கோப்பா”

என்று சொல்ல உடனே அதிலிருந்த சிலர் வேனை ஓறங்கட்டச் சொன்னார்கள். உடனே ராசாமணி டிரைவரிடம் வண்டியை ஓரமாக நிப்பாட்டச் சொன்னார். டிரைவரும் நிப்பாட்டினார். பின் மக்கள் டிரைவரை வெளியே வரச்சொன்னார்கள். வெளியே இருந்து நவீனும் டிரைவரை வண்டியை விட்டு வெளியே வரச்சொல்ல டிரைவர் பயந்தப் படி இறங்கியதும் நான்கைந்து பேர் டிரைவரை அடிக்க… உடனே பின்னாலிருந்த வேனிலிருந்து ஆண்கள் அனைவரும் இறங்கி வந்து டிரைவரை அவர்களிடமிருந்து காப்பாற்றி. வாக்கு வாதம் முற்றியது.

ஆண்கள் வண்டியின் டிரைவர் அவர் வண்டியை ஓரமாக நிப்பாட்டிவிட்டு வந்து நடந்தது என்ன என்று விசாரிக்க …மாடு இறந்துவிட்டதாகவும், பையனுக்கு அடிப்பட்டிருப்பதாகவும் கூறி பணம் கேட்டுக்கொண்டிருந்தது தெரிய வந்தது. உடனே அவரது முதலாளிக்கு அருகிலிருந்த கடையிலிருந்து ஃபோன் போட்டுச் சொல்ல அவரும் உடனே கிளம்பி வந்தார். வந்தவர் அனைவரையும் வண்டியில் ஏறச்சொன்னார். பின் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே போலீஸ் காரர்கள் வந்திறங்கினர். 

காவல் துறையினர் வண்டியை பக்கத்திலிருக்கும் ஸ்டேஷனுக்கு தங்கள் பின்னால் வரும் படி சொல்லி விட்டு, அடிப்பட்ட பையனை ஆஸ்பத்திரியில் சேர்க்கச் சொல்லி, இறந்த மாட்டை ரோட்டின் ஓரமாக எடுத்துப் போடச்சொல்லிவிட்டு ஸ்டேஷனுக்குச் சென்றனர். 

அனைவரும் பதற்றத்திலிருந்தனர். ஆனால் நமது மூத்த தம்பதியினர் பர்வதமும்  ஈஸ்வரனும் மிருதுளா பத்திரமாக இருக்கிறாளா? என்று கேட்கவோ இல்லை அவளுக்கு ஆறுதல் சொல்லவோக் கூட தோணவில்லை. நவீனின் அத்தைகளும் அக்காக்களும் மிருதுளாவிடம்…

“மிருது நீ கவலைப் படாதே, பதற்றப் படாதே அது குழந்தையை பாதிக்கும்மா இந்தா தண்ணீக குடி”

என்று அவளுக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாதென்பதில் அக்கறையுடன் இருந்தனர். பர்வதத்தின் அலட்சியமான போக்கைக் கண்டு சொர்ணம் 

“ஏய் பர்வதம் இதுக்குத் தான் எல்லோரும் கேட்டோம் ஏன் மாசமான பொண்ண இப்படி அலக்கழிக்கறன்னுட்டு. இப்போ புரிஞ்சுதா. இவளுக்கோ இல்ல வயத்துல இருக்குற கொழந்தைக்கோ ஏதாவது ஆகிருந்தா அந்தப் பாவம் நம்மளை சும்மா விடுமா சொல்லு.”

“இப்படி எல்லாம் நடக்கும்ன்னு ஜோசியமா தெரியும்? அது மட்டுமில்லாம இப்ப தான் ஒண்ணும் ஆகலையே அப்புறம் என்னத்துக்கு அதப் பத்தி பேசறேங்கள்?”

“அப்படியே ஆகிருந்தா மட்டும் நீ இதே மாதிரி பொறுப்பில்லாம தான் பேசிருப்பயா?”

“சொர்ணம் அக்கா அவ பேசிருந்தாலும் ஆச்சர்யப் படரத்துக்கு ஒண்ணுமில்லை”

இவர்கள் அனைவரும் இப்படிப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த ராசாமணி

“எல்லாரும் கொஞ்சம் அமைதியா வரேளா” 

என்று சொன்னதும் அனைவரும் பேசாமலிருந்தனர். காவல் நிலையமும் வந்து சேர்ந்தனர். போலீஸ் வண்டியிலிருந்து நவீன் இறங்கி மிருதுளா இருக்கும் வேன் அருகே வந்து

“யாரும் கீழே இறங்க வேண்டாம். ஜன்னல்லை க்ளோஸ் பண்ணிக்கோங்கோ. மிருதுளா பயப்படாதே ஒண்ணும் ஆகாது”

என்று சொல்லிவிட்டு காவல் நிலைத்துக்குள் ஆண்கள் அனைவரும் சென்றனர். அவர்கள் சென்று ஒன்றரை மணி நேரமானது. உள்ளே காரசாரமாக பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருந்தது. மிருதுளாவிற்கு பசி வயிற்றை கிள்ளியது. வெளியே சொல்லவும் முடியாமல் தவித்தாள். மாலை நாலரை மணிக்கு விபத்து நடந்தது,  ஜந்து மணிக்கு காவல் நிலையத்துக்குள் சென்றனர். மணி ஏழு ஆக ஐந்து நிமிடம் இருக்கும் போது வெளியே அனைவரும் வந்தனர். அவர்கள் அனைவரும் வருவதைப் பார்த்ததும் மிருதுளாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. எல்லோரும் வண்டியில் ஏறினார்கள் பெண்கள் இருந்த வண்டியை அந்த டிராவல்ஸ் முதலாளியே ஓட்டினார். 

மாலை ஐந்தரை மணிக்கெல்லாம் வீடு வந்து சேரவேண்டியவர்கள் இரவு எட்டு மணிக்கு தான் ராசாமணி வீட்டைச் சென்றடைந்தனர்.  அனைவரும் இறங்கியதும், ராசாமணி வீட்டின் அருகே இருந்த ஹோட்டலில் இரவு டிபன் ஆர்டர் செய்தார். டிபன் வருவதற்கு ஒரு மணி நேரமாகும் என்று வீட்டிற்கு வந்து ராசாமணி சொன்னதும் அனைவரும் முகம் கை கால் அலம்பி விட்டு அமர்ந்து பேசலானார்கள். அனைவரும் மத்தியம் பண்ணி ரெண்டு மணிக்கு சாப்பிட்டது. மிருதுளாவிற்கு மாலை ஐந்து மணிக்கெல்லாம் பசிக்கத் துவங்கிவிட்டது அதை அடக்கிக் கொண்டதில் தலைவலி வந்தது. மெதுவாக நவீனிடம் சொல்வதற்காக தவித்தாள். நவீன் வெளியே ப்ரவினுடன் நின்றுக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் வேகமாக அங்குச் சென்று நவீனிடம்..

“நவீன் எனக்கு பயங்கரமா பசிக்கறது அன்ட் தலைவலி வேற கொள்ளறது. ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்கோ. என்னால தாங்க முடியலை”

“சரி வா நாம பக்கத்துல இருக்கற ஹோட்டலுக்குப் போய் சாப்ட்டுட்டு வருவோம். டேய் ப்ரவின் நீ வரியா டா”

“இல்லை நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்கோ” 

என்றுச் சொல்லிவிட்டு நவீனும் மிருதுளாவும் வெளியேச் சென்றதும் ப்ரவின் தன் அம்மாவை தனியாக அழைத்து…

“அம்மா மன்னி பசிக்கறதுன்னு அண்ணாகிட்ட சொன்னா அதுனால அவா ரெண்டு பேருமா ஹோட்டலுக்குப் போயிருக்கா” 

என்று தன் கடமையை செவ்வனே நிறைவேற்றியப் பெருமிதத்தோடு உள்ளேச் சென்றான். 

நவீனும் மிருதுளாவும் ஹோட்டலுக்குச் சென்று அமர்ந்தனர். சர்வர் வந்து ஆர்டர் கேட்டதும் அவரிடம் மிருதுளா…

“இங்க என்ன ஆர்டர் பண்ணினா சீக்கிரம் கிடைக்கும்?”

“இட்டிலி, பொங்கல் …”

என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் அதை கொண்டு வரச் சொன்னாள் மிருதுளா. அவளின் இந்த நிலையைப் பார்த்துக் கொண்டிருந்த நவீன்..

“என்ன ஆச்சு மிருது ஏன் இவ்வளவு பதற்றம் அன்ட் அவசரப் படறாய்”

சர்வர் ஒரு ப்ளேட் சுடச்சுட இட்டிலியும், ஒரு ப்ளேட் பொங்கலையும் கொண்டு வந்து வைத்தார். அதில் இட்டிலியை உடனே சாப்பிடத் துவங்கினாள். சாப்பிட்டுக் கொண்டே

“நவீன் நீங்க ஏதும் ஆர்டர் பண்ணலையா? சாரிப்பா எனக்கு அஞ்சு மணிலேந்து சரிப் பசி. எப்படி உங்ககிட்ட சொல்லுவேன்? நீங்க அந்த ஆக்சிடென்ட் பிரச்சினை ல பிஸியா இருந்தேங்கள் அதுவுமில்லாம எல்லாருமே பதற்றத்துல இருந்தா. ஸோ யார்கிட்ட நான் சொல்வேன் சொல்லுங்கோ. பெரியப்பா வேற டிபன் வரத்துக்கு ஒரு மணி நேரமாகும்ன்னு சொல்லிட்டா. அது தான் உங்கள வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேன்”

“இதெல்லாம் டிஸ்டர்பன்ஸா மிருது. சரி சரி பொறுமையா சாப்பிடு. வேற ஏதாவது வேணுமா” 

“சூடா காபி வேணும் நவீ”

“தம்பி ஒரு பொங்கல் அன்ட் இரண்டு பில்டர் காபி சூடா ஸ்ட்ராங்கா”

மிருதுளாவிற்கு சாப்பிட்டுப் பசி அடங்கியப் பின் தான் தனது மாமியார் நினைப்பு வந்தது. உடனே நவீனிடம்

“நவீ நாம வந்து இப்படி சாப்பிட்டதுக்கு அம்மாவோ அப்பாவோ திட்ட மாட்டாளே”

“என்னத்துக்கு திட்டுவா? அதெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டா வா நாம போகலாம்”

என்னத் தான் நவீன் அப்படிச் சொன்னாலும் மிருதுளாவிற்குள் ஒரு பயம் இருந்தது. அவளின் தலைவலி சாப்பிட்டு காபி குடித்ததும் மறைந்தது. இருவரும் ராசாமணி வீட்டிற்குள் நுழைந்ததும், அவர்கள் பின்னாலயே டிபனும் வந்தது. அனைவரும் சாப்பிட அமர்ந்தனர் அப்போது மிருதுளா பரிமாற முன்வந்ததும் வழக்கம் போல சொர்ணம் மற்றும் அவரின் மகள் மிருதுளாவை அமரச் சொன்னார்கள் அதற்கு மிருதுளா பதில் சொல்லுவதற்குள் …

“அவ நல்லா ஹோட்டல்ல சாப்ட்டுட்டு வந்திருக்கா. அவளுக்கு பதில் வேற யாரையாவது உட்காரச் சொல்லுங்கோ” 

என்று பர்வதம் குத்திப் பேச உடனே சொர்ணம் அத்தையிடம் மிருதுளா

“ஆமாம் அத்தை எனக்கு பயங்கரப் பசி தலைவலி அதுதான் நவீன் கூடப் போய் சாப்ட்டுட்டு வந்தேன் சாரி” 

“அடி அசடே இதுக்கெல்லாம் என்னத்துக்கு சாரி சொல்லிண்டு. இப்போ நீ ரெண்டு உயிர். அதெல்லாம் தப்பே இல்லை. நாங்கெல்லாம் உனக்கு எதுவும் ஆயிடக் கூடாதுன்னு எவ்வளவு வேண்டிண்டோம் தெரியுமா. இனி கொழந்தப் பொறக்கற வரைக்கும் எங்கேயுமே போகாத சரியா?”

“சரி அத்தை”

“நீ போய் உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்துக்கோ போ. நாங்கெல்லாம் பார்த்துக்கறோம்”

பர்வதம் எதை நினைத்துப் பேசினாலோ அது நிறைவேறவில்லை.

மிருதுளாவிற்கு பதில் நவீன் அனைவருக்கும் பரிமாறினான்.  அனைவரும் சாப்பிட்டதும் கிளம்ப முற்பட்டப் போது ராசாமணி நவீன் மற்றும் ஈஸ்வரனிடம்

“இந்த ராத்திரி நேரத்துல போகாதீங்கோப்பா. இப்பத் தான் மிருதுளா ஒரு பதற்றத்திலேந்து வெளிய வந்திருக்கா மறுபடியும் ஏதாவது ஆச்சுன்னா வேண்டாம்ப்பா காலை ல கிளம்புங்கோ”

பெரியப்பா சொல்வதிலும் நியாயம் இருப்பதை உணர்ந்த நவீன் தலை அசைக்க, ஈஸ்வரனும் வேறு வழியின்றி சரி என்று சொல்ல அனைவரும் அங்கேயே அன்றிரவு தங்கினார்கள். மறுநாள் விடிந்ததும் காபி குடித்து விட்டு இரண்டு ஆட்டோவில் ஏறி அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் நவீன் குடும்பத்தினர். 

அனைவரும் குளித்து ஃப்ரெஷ் ஆனதும் அமர்ந்துப் பேசிக் கொண்டிருக்கும் போது அவ்வளவு பெரிய விஷயம் நடந்து அனைவரும் தப்பித்தது மாசமான மிருதுளா வண்டியில் இருந்தது தான் காரணம் என்று  ராசாமணி சொன்னதாக ஈஸ்வரன் சொல்ல அதற்கு நவீன்

“அது உண்மை தான். அந்த கிராமத்துக் காரா அதுனால தான் நம்மள ஏழு மணிக்காவது விட்டா இல்லாட்டி விடிய விடிய பேச்சுவார்த்தை நடந்திருக்கும்.”

“சரி சரி எல்லாம் முடிஞ்சதைப் பத்தி என்ன பேச்சு வேண்டிருக்கு. உன் பொன்டாட்டிய ஏதாவது டிபன் பண்ணச் சொல்லு எனக்கு தலை வலிக்கறது”

மிருதுளா அனைவருக்கும் சப்பாத்தி மசால் செய்துக் கொடுத்து அவளும் சாப்பிட்டு, அடுப்படியை சுத்தம் செய்து, பாத்திரங்களைத் தேய்க்கப் போட்டு சற்று நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு வந்து தேய்ப்பதாக நவீனிடம் சொல்லி ஹாலில் ஒரு ஓரமாக படுத்துக் கொண்டாள்.

அவள் படுத்தக் கொஞ்ச நேரத்தில் லட்சுமி அத்தை அவர்கள் வீட்டுக்கு வந்தாள். உடனே மிருதுளா எழுந்துக் கொண்டு அவருக்கு டி போட்டுக் குடுத்து சிறிது நேரம் பேசிவிட்டு மாடிக்குச் சென்றுப் படுத்துக் கொண்டாள். முந்தின நாள் அவள் அடைந்த பதற்றம், பசி எல்லாமும் அவளை மிகவும் சோர்வடையச் செய்தது. அதனால் சற்று நேரம் படுத்து ரெஸ்ட் எடுக்கச் சென்றவள் நன்றாக உறங்கிப் போனாள்.

தொடரும்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s