அம்புஜம், ராமானுஜம், வேனு, ப்ரவின் மற்றும் பவின் ஊருக்கு கிளம்புவதற்கு ஒன்பது நாட்களே இருந்தன. மிருதுளா பிரயாணம் செய்ய கூடாது என்பதால் நவீன் மற்ற அனைவரையும் அவன் நண்பன் குடும்பத்தினருடன் டூர் போய் வர புக் செய்து அதற்குண்டான ரசீதை எடுத்துக்கொண்டு அன்று மாலை ஆபீஸிலிருந்து வந்தான். வழக்கம் போல மலர்ந்த முகத்துடன் வாசல் கதவைத் திறந்து நவீனை வரவேற்று காபி கொடுத்தாள் மிருதுளா. பின் நவீன் அனைவரையும் பார்த்து…
“உங்கள் அனைவருக்கும் ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்“
“என்ன அது நவீ?”
“வாட்ஸ் தீ சர்ப்ரைஸ் அத்திம்ஸ்?”
“என்னது அந்த சர்ப்ரைஸ் அண்ணா?”
நவீன் தனது ஈவினிங் க்ளாஸ் செல்வதற்கு தயாராகிக் கொண்டே ….
“ஓ தெரிஞ்சுக்க இவ்வளோ ஆர்வமா!!! அப்படீன்னா இப்போ சொல்லக் கூடாதே!! எல்லாரும் ஒன்பதரை மணி வரைக்கும் வேயிட் பண்ணுங்கோ…நான் க்ளாஸ் முடிச்சு வந்துட்டு சொல்லறேன். ஸோ ஸ்டே டூயூன்டு டூ நவீன் சேனல். வில் பீ பேக் பை நைன் தெர்ட்டி. பை ஆல்“
என்று கூறி நவீன் பைக்கில் சென்றதும், வேனுவும் பவினும் மிருதுளாவைப் பார்த்து…
“மிருதுக்கா என்ன சர்ப்ரைஸ் பத்தி அத்திம்ஸ் சொல்லறார்ன்னு எங்களுக்கு சொல்லேன்“
“எனக்கும் அது சர்ப்ரைஸ் தான் வேனு“
“மன்னி உங்கள்ட்ட அண்ணா நிச்சயம் சொல்லிருப்பா… என்னன்னு சொல்லுங்கோ“
“உங்க எல்லாரோடையும் தான் நானும் இங்கே இருக்கேன். அவர் ஆபீஸிலிருந்து வந்ததும் விஷயத்தை எல்லாரிடமும் தான் சொன்னார். என்ட்ட தனியா ஏதாவது பேசினாரா சொல்லு…நானே அது என்னவா இருக்குன்னு யோசிச்சிண்டிருக்கேன்“
“எதுவா இருந்தா என்ன? க்ளாஸ் முடிச்சிட்டு வந்து அவரே சொல்லதான் போறார் அதுக்குள்ள நீங்க எல்லாரும் ஏன்தான் இப்படி யோசிச்சு குழம்பிக்கறேங்கள். மாப்ள வந்துட்டு சொல்வார். எல்லாரும் சித்த பொறுமையா இருங்கோளேன்”
“வந்துட்டாங்கப்பா வந்துட்டாங்க நவீன் சப்போர்ட்டர்ஸ். அப்படியே ஆகட்டும் தாயே. நாங்கள் அமைதியாக கார்ட்ஸ் விளையாட போகிறோம் தாங்களும் வருகிறீர்களா?”
“நோ நோ நாங்க டிவி பார்க்க போறோம். இல்லையா வேனு அன்ட் பவின்?”
“ஆமாம் ஆமாம் நோ கார்ட் கேம்“
“அட போங்கப்பா!!! நீங்க அந்த டிவியையே பாருங்கோ. அப்போ நான் போய் என்னோட புத்தகத்தை எடுத்து கொஞ்சமாவது படிக்கறேன். அம்மா நீ டின்னர் பண்ணிடுவியா இல்லாட்டி நான் ஒரு எட்டு மணிக்கு பண்ணறேன்“
“நீ உன் படிப்பைப் பாரு மிருது. நான் சமையலைப் பார்த்துக்கறேன்னு நேத்தே உன்ட்ட சொல்லிட்டேனே! அதுனால நீ அதைப் பத்தி எல்லாம் யோசிக்கவே வேண்டாம். இவா டிவி பார்க்கட்டும்“
“ஓகே அம்மா தாங்கஸ்“
“என்னத்துக்கு தாங்கஸ் எல்லாம் சொல்லிண்டு போடி“
மிருதுளா முன் புத்தகம் இருந்தது ஆனால் அவள் புத்தியோ அந்த சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் என்ற சிந்தனையில் மூழ்கியது. பவின், ப்ரவின், வேனு டிவி பார்த்துக்கொண்டிருந்தாலும் அவர்களுக்குள் நவீன் சொன்ன சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும்? இதுவாக இருக்குமோ? இல்லை அதுவாக இருக்குமோ? என்ற டிஸ்கஷனும் நடந்துக்கொண்டேதான் இருந்தது. இப்படி அனைவருக்கும் அது என்ன என்ற சிந்தனையில் மூன்றறை மணி நேரம் போனதே தெரியவில்லை. நவீன் க்ளாஸ் முடித்து வீட்டிற்குள் நுழைந்தான். உடனே பவின்…
“அண்ணா இப்போவாவது சொல்லேன் அது என்ன சர்ப்ரைஸ் ன்னு“
“இரு டா நான் டிரெஸ்ஸை மாத்திட்டு டின்னர் சாப்ட்டு வரேன். எனக்கு செம பசி“
“போ அண்ணா ரொம்பத்தான் பண்ணற….உன் சர்ப்ரைஸை நீயே வச்சுக்கோ”
“ஓகே …அப்போ திருப்பிக் குடுத்துட்டு நீங்க யாரும் வரலைன்னு சொல்லிடறேன்“
“எங்கே போகபோறோம்?” என ஆவலாக கேட்டான் ப்ரவின்
“இருங்கோ பசங்களா இனி எங்கே போக போறார். நீங்க எல்லாரும் சாப்ட்டாச்சில்லையா இப்போ அவர் சாப்பிடட்டும் அப்பறம் கேட்டுப்போம் விஷயத்தை” என்றாள் மிருதுளா
“மன்னி ஆல்ரெடி மூணு மணி நேரம் வேயிட் பண்ணியாச்சு“
“மூணு மணி நேரம் வேயிட் பண்ணினேங்கள் இல்லையா இன்னும் ஒரு பதினைந்து நிமிஷம் சேர்த்து வேயிட் பண்ணுங்கோ” என நவீன் கூறிக்கொண்டே டிபனை சாப்பிடலானான்.
நவீன் சாப்பிட்டு விட்டு ஹாலில் வந்தமர்ந்து அனைவரையும் அழைத்து அமரச்சொல்லி….
“என் நண்பன் சதீஷ் அவன் குடும்பத்திற்காக குஜராத் டூர் ஏஜென்சி ல ஒரு டூர் புக் பண்ணிருந்தான் அதில் டிக்கெட்ஸ் நல்ல ரேட்டில் கிடைத்தது. அதனால் அஞ்சு சீட் புக் பண்ணிருக்கேன். ஒரு நாள் டூர் டூ அஹமதாபாத், பதான் ஆகிய இடத்துக்கெல்லாம் கூட்டிண்டு போவா. காலை ல அஞ்சு மணிக்கு கிளம்பி நைட் எட்டு அல்லது ஒன்பது மணிக்கு திரும்பி கேம்ப்புக்குள்ள எல்லாரையும் விட்டுட்டு போயிடுவா. சாப்பாடு, டீ எல்லாம் அவாளே தருவா. வர்ற சனிக்கிழமை புறப்பட தயாரா இருங்கோ. இதுதான் நான் சொன்ன சர்ப்ரைஸ். என்ன எல்லாருக்கும் ஓகே வா?”
“சூப்பர் அண்ணா. அஞ்சு டிக்கெட் தானா!!!! ஆனா நம்ம ஏழு பேர் இருக்கோமே!!!” என்று கேட்டான் பவின்
“மிருதுக்கு உடம்பு சரியில்லை அதனால் அவள் டிராவல் பண்ணக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்கா. ஸோ நானும் மிருதுவும் வரலை நீங்க அஞ்சு பேரும் போயிட்டு வாங்கோ. சதீஷ் உங்களை நன்னா பார்த்துப்பான்“
“மாப்ள நீங்க எல்லாரோடையும் போயிட்டு வாங்கோ நான் மிருதுவோட இங்கே இருக்கேன்” என்றாள் அம்புஜம்
“நோ நோ அதெல்லாம் வேண்டம். என் ஆத்துக்காரியை நான் பார்த்துக்கறேன் நீங்க எல்லாரும் போய் எல்லா இடத்தையும் பார்த்துட்டு வாங்கோ. நாங்க இன்னும் ரெண்டு வருஷம் இங்க தானே இருப்போம் அப்பறமா போயிண்டா போச்சு. நீங்க எல்லாருமா ஒன்னா மறுபடியும் எப்போ வருவேங்கள்ன்னு உங்களுக்கே தெரியாது. அதுனால ஒண்ணும் சொல்லாம போயிட்டு என்ஜாய் பண்ணிட்டு வாங்கோ.“
“சரி அப்படியே பண்ணறோம்“
“அப்பாடா குஜராத் வந்து ஒண்ணுமே பார்க்காம ஊருக்கு கிளம்பப்போறேனேன்னு கவலையா இருந்தது. நல்ல வேளையா இந்த டிரிப் கிடைச்சிருக்கு. ஐ ஆம் ஹாப்பி” என்று தனது மகிழ்ச்சியை சத்தமாக பகிர்ந்துக் கொண்டான் ப்ரவின்.
“நீ பண்ணின காரியத்துக்கு உனக்கு டிக்கெட் எடுத்திருக்கக்கூடாது தான்…. பரவாயில்லை போயிட்டு வா. இனி அடுத்த தடவை இப்படி பண்ணாதே சரியா“
“ஓகே அண்ணா. இனிமேல் அப்படி பண்ண மாட்டேன்”
“ஓ !!! அப்போ இதெல்லாம் நம்ம ப்ரவினுகாக தானா!!! ” என்று கூறி கண்ணடித்தாள் மிருதுளா
“ஆமாம் பையன் ஒண்ணுமே பார்க்கலையேன்னு ரொம்ப கவலைப் பட்டதைப் பார்த்து நான் கலங்கிட்டேன் தெரியுமா!!“
“அண்ணா அன்ட் மன்னி ப்ளீஸ் என்னை கிண்டல் பண்ணினது போதுமே. ஐ ஆம் சாரி ரிரிரிரி“
“அது!!! நல்ல புள்ளைக்கு அழகு“
“அம்மா உனக்கு சாப்பாடு நான் கட்டித் தரேன் கவலைப்படாதே“
“ஏன் மிருது அவாளே டிஃபன், சாப்பாடு அன்ட் டீ எல்லாம் தருவாளே. அப்பறம் என்னத்துக்கு கட்டிண்டு போகணும்??”
“நவீ அதை அம்மா சாப்பிட மாட்டா. நிச்சயம் அதில் வெங்காயம், பூண்டு, மசாலா எல்லாம் இருக்கும்“
“ஆமாம் இருக்கும் அதுனால என்ன?”
“அதெல்லாம் சாப்பட மாட்டா“
“ஓ!!! அப்படீன்னா கட்டிண்டு தான் போகணும்“
“நீ ஒண்ணும் செய்யண்டாம் மிருது நானே செஞ்சுண்டு உனக்கும் அவருக்கும் வச்சுட்டும் கிளம்பறேன். நீ அதெல்லாம் நினைச்சு கவலைப்படாதே சரியா. நீ நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ.“
“அம்மா ஒரு நாள் டூர் தான் மா. என்னமோ பத்து நாள் போற மாதிரி பேசற!!“
“அதுதானே” என்றான் நவீன்
இவ்வாறு பேசிக்கொண்டே அந்த டூரில் எந்தெந்த இடங்களுக்கெல்லாம் கூட்டிச்செல்வார்கள் அங்கே எவை பார்க்க வேண்டிய முக்கியமானவை என்பதைப் பற்றி எல்லாம் உறையாடிக் கொண்டே அனைவரும் உறங்கலானார்கள்.
மறுநாள் விடிந்ததும் நவீன் ஆபீஸுக்கு சென்றான். மூன்று பசங்களும் எழுந்து குளித்து டிஃபன் சாப்பிட்டப் பின், ப்ரவின்..
“மன்னி நானும் பவினும் அப்பா அம்மாக்கு ஃபோன் பண்ணிட்டு வரோம்.“
“நான் வரலை நீ போய் பண்ணிட்டு வா“
“டேய் பவின் நீயும் என்கூட வர அவ்வளவுதான்.“
“ஹேய் ப்ரவின் நானும் உங்க கூட வரேன். நான் மட்டும் இங்க உட்கார்ந்துண்டு என்ன பண்ண போறேன்? கம் லெட்ஸ் கோ“
“அதுக்கில்ல வேனு நாங்க எங்க பேரன்ட்ஸோட பேச போறோம்… அங்க நீ வந்து என்ன பண்ணுவ?”
“நான் பாட்டுக்கு ஒரு சேர்ல உட்கார்ந்துக்கறேன். நீங்க பேசி முடிச்சிட்டு மறுபடியும் நாம திரும்பி வந்திடலாம்“
“இல்ல அது வந்து…” என ப்ரவின் இழுக்கையில் சட்டென மிருதுளா….
“ஹலோ ப்ரவின் இதுக்கு ஏன் இப்படி இழுக்கற... அன்னைக்கு நானும் என் பேரன்ட்ஸும் பேச வாக்கிங் போனப்போ தானும் வந்தே ஆவேன்னு பவின் சொன்னான். அதுக்கு நாங்க யாருமே வேண்டாம்னோ இல்ல இவ்வளவு எல்லாம் யோசிக்கலையே …கூட கூட்டிண்டு போனோமில்லையா பவின்?”
“சரி சரி நீயும் வா வேனு போகலாம்“
என வேண்டா வெறுப்பா சொன்னான் ப்ரவின். அதைக் கேட்ட வேனு..
“பரவாயில்லை நீங்க ரெண்டு பேரும் ஏதோ ரகசியம் பேச போறேங்கள் போல அதுதான் நான் வர்றது ப்ரவினுக்கு பிடிக்கலை. நோ ப்ராப்ளம் நீங்களே போயிட்டு வாங்கோ. நான் இங்கேயே டிவி பார்த்துண்டிருக்கேன்“
“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை வேனு. சரி பவின் வாயேன்டா…இதோ நாங்க ஒரு பத்து நிமிஷத்துல வந்திடறோம்“
என்று கூறி வந்த நாளிலிருந்து அன்று தான் மிருதுளாவை அவள் குடும்பத்தினருடன் தனியாக விட்டனர் ப்ரவினும் பவினும். அதுவும் பத்து நிமிஷம். அவர்கள் இருவரும் வெளியே சென்றதும் அம்புஜம் மிருதுளாவிடம்….
“இவா சாமர்த்தியமான பசங்கள் டீ மிருது. நம்மள பேசிக்க விடாம ஒருத்தன் மாத்தி ஒருத்தன் காவலுக்கு இருந்துட்டு இப்போ அவாளுக்குன்னா நம்ம வேனுவ கழட்டி விட்டுட்டு என்ன அழகா போறதுகள் பாரேன்!!!! உன் மாமியார் இந்த பசங்கள இப்படி வேவு பாக்க அனுப்பினதால நமக்கு ஒரு பாதிப்பும் இல்லை ஆனா இதெல்லாம் அவாளுக்கே இதே பசங்களால திரும்பும் பார்த்துக்கோயேன். “
“என்ன சொல்லற மா புரியும்படி சொல்லு“
“இன்னிக்கு நம்மள கவனிக்க இந்த புள்ளகள அனுப்பறாளே நாளைக்கு இவாளுக்கு கல்யாணமானா அவா பெத்தவா எப்படிப்பட்டவா எப்போ யாரை எங்க எதுக்கு அனுப்புவா என்பதெல்லாம் இந்த பசங்களுக்கு அத்துப் படியாயிருக்கும் ஸோ அதுக்கு ஏத்தாமாதிரி நடந்துக்கமாட்டாளோ!!!! அது ஏன் அந்த சமத்து மாமிக்கும் மாமாக்கும் தோனலை?”
“ஓவர் சமத்தா இருந்தா ஏதாவது ஒரு இடத்தில் சறுக்கத்தான் செய்யும். இதிகாசத்ல கூட அதி சாமர்த்தியமாக தன்னை நினைச்சிண்ட எத்தனையோ அதிபுத்திசாலிகள் கடைசியில் அவா வெட்டின குழிக்குள்ளயே விழுந்து பொதஞ்சு போகலையா !!! அது மாதிரிதான் மா…விடு விடு ஃப்ரீயா விடு மம்மீ“
“நாம நாலு பேரும் கார்ட்ஸ் விளையாடலாமா? ” என்று மிருதுளா கேட்க
“ஓ எஸ் நான் ரெடி” என வேனு சொல்ல
நான்கு பேருமாக கார்ட்ஸ் விளையாட்டில் மூழ்கினர். ப்ரவினும் பவினும் வீட்டிலிருந்து ஃபோன் பேச வெளியே சென்று ஒரு மணி நேரமாகியும் அவர்கள் வராததால் மிருதுளா வேனுவைச் சென்று பார்த்து வரும் படி சொல்ல அதற்கு வேனு…
“போ மிருதுக்கா. நான் வரேன்னு சொன்னப்போ அவளோ தயங்கினா இல்ல…இப்போ என்னத்துக்கு நான் அவாள தேடிண்டு போகணும். அதெல்லாம் வருவா வருவா“
“டேய் அவா தான் அப்படின்னா நாமளும் அப்படி இருக்கனும் ன்னு இல்லை டா. ப்ளீஸ் ஒரு எட்டுப் போய் பார்த்துட்டு வாடா வேனு.“
“சரி சரி போயிட்டு வரேன்“
என்று வேனு கிளம்பி வெளியே செல்லவும் ப்ரவினும் பவினும் வீட்டு வாசலின் இரும்பு கேட் ஐ திறந்து உள்ளே வரவும் சரியாக இருந்தது. அவர்களைப் பார்த்ததும் வேனு திரும்பி வீட்டினுள் சென்று…
” மிருதுக்கா அவா ரெண்டு பேரும் வந்தாச்சு“
“ஹேய் ப்ரவின் அன்ட் பவின் என்ன? பத்து நிமிஷத்துல வர்றதா சொல்லிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வந்திருக்கேங்கள்!!! அப்படி என்னப்பா பேசினீங்க இவ்வளவு நேரமா? பணம் பத்தித்தா?”
“அட போங்கோ மன்னி..அங்க ஏதோ லைன் ல ப்ராப்ளமாம் ஒரு இருபது நிமிஷத்துல சரியாயிடும்ன்னு வேயிட் பண்ண சொன்னா சரினுட்டு வேயிட் பண்ணறோம் பண்ணறோம் இன்னும் சரியாகலை அதுனால கிளம்பி வந்துட்டோம். நீங்க இந்த ஃப்ரிட்ஜ் வாங்கினதுக்கு பேசாம ஒரு ஃபோன் வாங்கிருக்கலாம்”
மிருதுளா மனதிற்குள் “கடவுள் இருக்கிறார் டா” என்று ரஜினி ஸ்டைலில் சொல்ல அவளுக்கே சிரிப்பு வந்து அதை அடக்க முடியாமல் சிரித்துவிட அதைப் பார்த்த ப்ரவின்..
“என்ன மன்னி நான் ஜோக்கா சொல்லறேன் !!! சிரிக்கறேங்கள்“
“ச்சே ச்சே நான் எதையோ நினைச்சேன் சிரிப்பு வந்துடுத்து…நீ சொன்னதுக்காக இல்லைப் பா…அதுவும் இல்லாம உனக்கு ஃபோன் வேணும்ன்னா உங்க அண்ணா கிட்ட கேளு அது தப்பே இல்ல ஆனா ஃப்ரிட்ஜுக்கு பதில் அத வாங்கிருக்கலாம் ன்னு எல்லாம் சொல்லாதே. எங்களுக்கு எது அத்தியாவசிய தேவையோ அதைத்தான் நாங்க வாங்குவோம். அதுவுமில்லாம அது என் அப்பா அம்மா எங்களுக்கு ஆசையா வாங்கித் தந்திருக்கறது அதை நீ இப்படி சொன்னது என் மனசுக்கு கஷ்ட்டமா இருக்கு. “
“நான் உங்க மனசு கஷ்டப்படறா மாதிரி எதுவும் சொல்லலைன்னு எனக்குப் படறது“
“அப்படியே இருக்கட்டும் நோ இஷுஸ். சரி எல்லாரும் சாப்பிட வாங்கோ” என அந்தப் பேச்சுக்கு அங்கேயே முற்றுப்புள்ளி வைத்தாள் மிருதுளா. எடுத்து சொல்லியும் தான் சொன்னதில் தவறு ஏதுமில்லை என்றெண்ணும் ப்ரவினிடம் எது சொன்னாலும் பிரயோஜனமில்லை என்பதை உணர்ந்ததால் அவன் நினைப்பை அவனிடமே விட்டுவிட்டு தனது அடுத்த வேலையில் இறங்கி அனைவருக்கும் அன்னம் பரிமாறினாள்.
உணவு உண்டபின் மிருதுளா அசந்து தூங்கலானாள். அப்போது டிவி ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்யப் போன பவினிடம் அம்புஜம் மெல்லிய குரலில்….
“பவின் வேண்டாம் பா. உங்க மன்னிக்கு உடம்பு சரியில்லை இல்லையா. அவள் நாம வந்ததிலிருந்து இன்னைக்கு தான் மத்தியானம் தூங்கறா. நல்லா அசந்து தூங்கறா நீ டிவி போட்டு அவள எழுப்பிடாதப்பா.“
“என்ன மாமி இது…டிவி பார்க்கக் கூடாதா? பின்ன எதுக்கு டிவி“
“மெதுவா பேசேன் பவின்“
“இந்தாங்கோ உங்க டிவி ரிமோர்ட். நான் பார்க்கலை. போர் அடிக்கறதேன்னுட்டு ரிமோர்ட்டை எடுத்தேன்…இட்ஸ் ஓகே“
அம்புஜத்திற்கு அப்பாடா தன் கர்ப்பிணி பெண்ணை டிவி சத்தத்திலிருந்து காப்பாத்தியது பெரிய சாதனைப் போல எண்ணி அன்று அந்த டிவியை வாங்காமல் இருந்திருந்தா இந்த பிரச்சினையை தவிர்த்திருக்கலாமோ என்றும் ஊருக்கு கிளம்புவதற்கு ஒரு நாள் முன்னாடி வாங்கிருந்தா போதுமோ என்றும் தோன்றியது.
நவீன் ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வரும்வரை தூங்கினாள் மிருதுளா. நவீன் வருவதற்கு சற்று முன் எழுந்து முகம் கை கால் அலம்பி விளக்கேற்றி வாசலில் காத்திருந்தாள். நவீன் வந்ததும் குட் ஈவினிங் சொல்லிவிட்டு உள்ளே காபி போடச் சென்றாள். அவளைப் பார்த்துக் கொண்டே பின்னால் சென்ற நவீன் …
“ஏய் மிருது உன் முகமெல்லாம் ஏன் வீங்கினா மாதிரி இருக்கு?”
“அதுவா!! நான் ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் மத்தியானம் நல்லா அசந்து தூங்கிருக்கேன் அதுதான்னு நினைக்கறேன்“
“ஆமாம் அண்ணா நீ வர்றத்துக்கு ஒரு பத்து நிமிஷம் முன்னாடி தான் மன்னி எழுந்துண்டா. அவா தூங்கறதுனால என்னால டிவி கூட பார்க்க முடியலை. அம்புஜம் மாமி… மன்னி தூங்கறான்னுட்டு என்னை டிவி பார்க்கக்கூடாதுன்னுட்டா. ஒரே போர்!!“
“அதுக்கில்லை அவளே அசந்து தூங்கறா எங்கடா டிவி சத்தம் அவளை தூக்கத்திலிருந்து எழுப்பிடுமோன்னு தான் வேண்டாம்ன்னு சொன்னேன். இந்த மாதிரி இருக்கும் போது தூங்கினா எழுப்பப்படாதுன்னுட்டு சொல்லுவா அதுதான்…“
“அதுனால என்ன இட்ஸ் ஓகே. அவன் தான் ஏதோ சொல்லறானா நீங்களும் அதுக்கு விளக்கம் எல்லாம் கொடுத்துண்டு வரேளே!!!! ஒரு இரண்டு மணி நேரம் டிவி பார்க்கலைன்னா தான் என்ன? ஏன்டா பவின்?”
“இரண்டு மணி நேரமில்லை நாலு மணி நேரம் !!!“
இதைக்கேட்டதும் அம்புஜம் மனதிற்குள்
“பாவி பாவி என் பொண்ணு தூங்கினத எல்லாம் கணக்கு போட்டுண்டு இருக்கானே. பகவானே நீ தான் என் பொண்ணா காத்து ரக்ஷிக்கணும்“
“சரி சரி விடுங்கோ விடுங்கோ நான் தூங்கினதுக்கெல்லாம் பஞ்சாயத்த கூட்டுவேங்களா என்ன?.. இந்தாங்கோ நவீ காபி. குடிச்சிட்டு இந்த பட்சணங்களை சாப்ட்டு நீங்க க்ளாஸுக்கு கிளம்புங்கோ“
“ஓகே எஜமானி மா“
அன்று க்ளாஸுக்கு சென்று வந்து இரவு உணவருந்தி விட்டு அனைவருடனும் சற்று நேரம் உரையாடிய பின் ஒருவருக்கொருவர் குட் நைட் சொல்லி விட்டு உறக்கத்தில் ஆழ்ந்தனர்.
ஒருவரின் உண்மையான குணத்தை திரையிட்டோ, அரிதாரம் பூசியோ
பல நாள் மறைத்து வைக்க முடியாது
திரை ஒரு நாள் விலகும் போது
நரியின் சாயம் வெளுத்தது போல
அரிதாரமும் வெளுத்து போகும் போது
நிஜமான சுவரூபம் வெளிப்படும்.
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா…என்பதைப் போல கால் கொண்டு ஆடவேண்டிய பிள்ளைகளை நூல் கொண்டு ஆடும் பொம்மைகளாக ஊரிலிருந்து ஆட்டிவிக்கின்றனர் வித்தகர்களான மூத்த தம்பதியினர். அன்று பொம்மைகள் வித்தகர்களுடன் நூல் கொண்டு செய்தி பரிமாற்றம் பண்ண முடியாமல் தவிக்க சற்றே நூல் தளர பொம்மைகளின் உண்மையான நிறம், வடிவம் அனைத்தும் மெல்ல வெளிவர அதனால் சில பல சங்கடங்களும், பேச்சுவார்த்தைகளும், பஞ்சாயத்தும் நடைபெற அவை அனைத்துக்கும் நம்ம மிருதுளா அன்றைய தினம் முற்றுபுள்ளி வைத்தாலும் இன்னும் எட்டு நாட்கள் உள்ளதே!!!!
தொடரும்….