ரம்யா சித்தி வீட்டிலிருந்து வந்த பின் உறங்க போகும் வரை நவீனின் கோபத்தால் வீட்டினுள் ஒரு இறுக்கமான சூழல் நிலவியது. நவீன்…பவின் மற்றும் வேனுவுடன் சற்று நேரம் பேசிவிட்டு பின் தூங்கலானான். மிருதுளாவிற்கு தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். அவள் மனதில் பல கேள்விகள் மீண்டும் மீண்டும் உதித்து அவளின் தூக்கத்தை துரத்தியடித்தது.
“ஒரே மாதிரியான விஷயம் அதை ரம்யா சித்தி சொன்னால் ஜோக், நான் சொன்னால் பெரிய குற்றமா ? அது ஏன்? இதில் எந்த வித நியாயமும் இல்லையே? பெரியவர்கள் என்றால் எப்படி வேண்டுமானாலும் பேசலாமா? ஆனால் ரம்யா சித்தி போன முறை நான் சென்றபோது பழகியதுக்கும் இந்த முறை பழகியதிலும் நிறைய வேறுபாடு தெரிகிறதே? அது ஏன்? ஒரு வேளை ஊரிலிருக்கும் நம்ம மூத்த தம்பதிகளின் பங்கு இருக்குமோ? நிச்சயம் இருக்கும். ஏனெனில் போன சனிக்கிழமை அவர்களுடன் ஃபோனில் பேசிய போது ரம்யாட்ட பேசினோம்ன்னு சொல்லிவிட்டு உடனே பேச்சை மாற்றினார்களே!!!!… ரம்யா சித்தியின் இந்த மாற்றம் அப்படிதான் நினைக்க தோன்றுகிறது….அது எப்படி நான் நிம்மதியா சந்தோஷமா என் பெற்றோருடன் இருப்பது!! அது அவர்களைப் பொறுத்தவரை பெரிய தவறாயிற்றே. இதை நான் எப்படி நவீனுக்கு சொல்லிப் புரிய வைக்கப் போகிறேனோ !!!!அந்த அம்மன் தான் எனக்கு இதில் உதவி செய்யணும்….“
என்று கடவுள் மீது பாரத்தை வைத்ததும் மெல்ல அவளது விழிகள் மூட, உறக்கம் தொற்றிக்கொண்டது.
காலை கதிரவன் எழுந்து பல மணி நேரம் ஆகியும் மிருதுளா எழவில்லை. அம்புஜம் தன் மகளை தொந்தரவு செய்யாமல் அவளே டிக்காக்ஷன் போட்டு காபி வைத்து ராமானுஜத்துக்கும், நவீனுக்கும் கொடுத்து தானும் ஒரு தம்ளர் காபியுடன் ஹாலில் அமர்ந்தாள். மிருதுளா மெல்ல கண் விழித்துப் பார்த்தாள். அம்மா, அப்பா மற்றும் கணவர் மூவருமாக அமர்ந்து காபி அருந்துவதைப் பார்த்துவிட்டு சட்டென்று எழுந்து…
“மணி என்ன ஆச்சு அம்மா“
“மணி ஏழாக போறது மிருது“
“ஓஹோ இவ்வளவு நேரம் தூங்கிட்டேனே!!! எழுப்பிருக்கலாம் இல்லையா”
“நீ நல்லா தூங்கிண்டிருந்த மா அது தான் எழுப்ப தோணலை..நீ போய் ப்ரஷ் பண்ணியுட்டு வா உனக்கும் காபி போட்டுத் தரேன்“
“ஓகே நீ போட்டு வை நான் இதோ அஞ்சே நிமிஷத்துல வந்துடுவேன்“
என்று கூறிக்கொண்டே நவீனை ஒரு பார்வைப் பார்த்தாள் ஆனால் நவீன் அவளை கண்டுக் கொள்ளவில்லை. அதில் மிகவும் மனவேதனை அடைந்தாள் மிருதுளா. காபி குடித்துவிட்டு மடமடவென வேலையில் இறங்கினாள். காலை டிபன் செய்து மத்திய உணவு செய்து முடிப்பதற்குள் நவீன் ஆபீஸுக்கு ரெடி ஆகி விட்டான். அவன் அம்புஜத்திடம்..
“எனக்கு டிபன் மட்டும் போதும். லஞ்ச் ஆபீஸ்ல சாப்பிட்டுக்கறேன் அவள அவசரப்படாம செய்யச் சொல்லுங்கோ“
“ஏன் அத என்கிட்ட சொல்ல மாட்டேங்களோ! இந்தாங்கோ டிபன். நீங்க உங்க மாமியார்கிட்ட சொன்ன மாதிரி மத்திய சாப்பாட்டை ஆபீஸ்ல ஒன்னும் சாப்பிட வேண்டாம் அதுவும் ரெடி இதோ டேபிள் மேல வச்சுருக்கேன் எடுத்துக்கோங்கோ..“
நவீன் ஏதும் சொல்லாமல் டிஃபனை சாப்பிட்டுவிட்டு லஞ்ச் பாக்ஸை எடுத்துக்கொண்டு தன் மாமனார் மாமியாரிடம் மட்டும் சொல்லிவிட்டு தனது பைக்கில் ஆபீஸ் சென்றான். அதைப் பார்த்த மிருதுளாவுக்கு ஆத்திரம் வந்தது. அவள் கோபத்தில் இருப்பதை அறியாத அம்புஜம் அவளிடம்…
“மிருது நீ நேத்து சும்மா இருந்திருந்தா மாப்பள உன்கிட்ட ஏன் இப்படி கோபப்படப் போறார்?”
“என்ன அம்மா ஏதோ நான் தப்பு பண்ணின மாதிரி சொல்லற!!! உனக்கு அவா பேசினது சரின்னு பட்டுதா?”
“நீ தப்பு பண்ணினேன்னு சொல்லலை மா. அதே சமயம் அவா அப்போ அப்படி பேசினதும் தப்பு தான். அதுக்காக உடனே நீ திருப்பி பேசிருக்க வேண்டாம்….கொஞ்ச நேரம் கழிச்சு சொல்லிருக்கலாம் இல்லாட்டி அவாளுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்னுட்டு நீ சும்மா இருந்திருக்கலாம்….அதனால நீங்க ரெண்டு பேரும் இப்படி முகத்தை திருப்பிண்டு இருக்கறது நல்லாவா இருக்கு சொல்லு“
“அம்மா நான் எந்த தப்பும் பண்ணலை….தப்பாவும் பேசலை. நவீனுக்கு அவா சித்தி என்னை சொல்லும் போது இனிச்சுதுல்ல அப்போ அவாள நான் சொல்லும்போது ஏன் கசந்துதாம்? சொல்லப்போனா அவர் தான் எனக்காக அவா சித்தி கிட்ட பேசிருக்கனும்.“
“சரி மா….அப்படியே இருக்கட்டுமே நீ தான் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போயேன்“
“விட்டுக் கொடுத்துன்னா !!!!என்ன சொல்ல வர இப்போ“
“நீ கொஞ்சம் இறங்கி போய் ஒரு சாரி கேட்டுடேன் அதுனால நீ ஒன்னும் கொறஞ்சுப் போயிடமாட்டாய்“
“அம்மா உனக்கு நிறைய விஷயம் தெரியாது …நான் நிறைய தடவை விட்டும் கொடுத்தாச்சு …இறங்கியும் போயாச்சு …இது எங்களுக்குள் நடப்பது அதை நானே பார்த்துக்கறேன். நீ தலையிடாதே சரியா.“
“இல்லடி … எங்களுக்கு இப்படி நீங்க பேசாம மூஞ்சிய திருப்பிண்டு போறதெல்லாம் பார்க்க பார்க்க மனசு கஷ்ட்டப்படறது மா“
“அம்மா இதுல மனசு கஷ்ட்டப்படற அளவுக்கு ஒன்னுமே இல்லை நான் பார்த்துக்கறேன். சரி …நீயும் அப்பாவும் எவ்வளவு சண்ட போட்டிருக்கேங்கள்? பேசாம எல்லாம் இருந்திருக்கேங்கள்!!! அப்போ நான் ஏதாவது சொன்னேனா?”
“அடிப் போடி எங்க சண்டையும் உங்க பிரச்சினையும் ஒன்னா!!!”
“அதென்ன ஒங்களோட சண்ட எங்களோட சண்டைன்னு பிரிச்சுப் பேசற!!! சண்டைன்னா எல்லாமும் சண்டை தான்…சரி வேனுவும், பவினும் எழுந்துண்டு டுவா ஸோ இப்போதைக்கு இந்த சாப்ட்டரை கொஞ்சம் க்ளோஸ் பண்ணு. “
“ஓ ஆமாம் ஆமாம் பவின் இருக்கறத மறந்துட்டேன். அது என்னடி அந்த ப்ரவின் உங்க ரெண்டு பேர் கிட்டேயும் சொல்லாம அங்க வச்சு சொல்லறான்“
“அம்மா விடுமா அவா எல்லாம் அப்படி தான். அவரையும் என்னையும் எவ்வளவு மதிக்கறான்னு எனக்கு நல்லாவே தெரியும் நவீனும் இப்போ தெரிஞ்சுண்டிருப்பார்ன்னு நினைக்கறேன்“
“ஹாய் மிருதுக்கா குட் மார்னிங்“
“குட் மார்னிங் வேனு“
அனைவருமாக முன் தினம் போலவே உணவருந்திய பின் சீட்டு கச்சேரியில் மூழ்கினர். மாலை ஐந்து மணிக்கு நவீன் வரவை நோக்கி காத்திருந்தாள் மிருதுளா. அன்று நவீன் ஐந்து பத்துக்கு தான் வந்தான். கதவு திறந்தே இருந்தது பவினும் வேனுவும் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். நவீன் வண்டியை நிப்பாட்டி விட்டு வீட்டினுள் நுழைந்தான்….
“ஹாய் நவீன் குட் ஈவினிங். ஹவ் வாஸ் தி டே” என்று மலர்ந்த முகத்துடன் கேட்டாள் மிருதுளா அதற்கு பதில் சொல்லாமல் வந்ததும் க்ளாஸுக்கு போவதாக சொல்லிவிட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணச் சென்றான். அதுக்குள் காபி போட்டு கொடுத்தாள். அதை குடித்து விட்டு மீண்டும் தனது மாமனார் மாமியாரிடம் மட்டும் சொல்லிக் கொண்டு கிளம்பிச் சென்றான். அப்போது மிருதுளாவுக்கு கவலையாக இருந்தாலும் ….மனதிற்குள் …..
“போ போ எப்படியும் இங்க தானே வரணும். இன்னைக்கு இதுக்கு ஒரு ஃபுல் ஸ்டாப் வைக்கறேனா இல்லையான்னு பாரு” என சபதம் எடுத்தாள். பிறகு வேனுவையும் பவினையும் வீட்டிலிருக்கச் சொல்லிவிட்டு தன் பெற்றோரை வாக்கிங் கூட்டிச் செல்ல தயார் ஆனாள்…
“மன்னி இங்க டிவி இல்லை எங்களுக்கு போரடிக்கும். நாங்களும் உங்க கூடவே வரோமே“
“ஆமாம் மிருதுக்கா இங்க உட்கார்ந்துண்டு என்னப் பண்ணுவோம் சொல்லு“
“சரி சரி நீங்க பாட்டுக்கு நடங்கோ எங்கள தொந்தரவு செய்யக் கூடாது சரியா“
“ஓகே இதோ நாங்களும் ரெடி“
“மிருது நைட்டுக்கு என்ன டிஃபன் பண்ணப்போற ? ஒன்னும் நீ செய்தா மாதிரி தெரியலையே“
“உனக்கு சாதமிருக்கு. நாங்க டாபா ல சாப்பிட்டுட்டு நவீனுக்கும் வாங்கிண்டு வந்துட்டா போச்சு. என்ன பசங்களா டாபா ல சாப்பிடலாமா“
“ஓ எஸ்“
என்று ஒருமித்து சொன்னார்கள் பவினும் வேனுவும். அதைக் கேட்ட மிருதுளா…
“ஏன் டா பசங்களா என்னோட சமையல் உங்களுக்கு பிடிக்கலையா“
“அப்படி இல்ல மன்னி“
“அக்கா டாபா ல தர ரொட்டி சப்ஜீ எல்லாம் நம்ம ஊர்ல கிடைக்காது இல்லையா. அதுவும் இல்லாம இது எங்களுக்கு புது வகையான உணவு அதுனால தான் சொன்னோம். நீ சூப்பரா தான் சமைக்கற. அடுத்த தடவை நாங்க வர்றத்துக்குள்ள இந்த நார்த் இந்தியன் குக்கிங் எல்லாம் கத்துக்கோ.“
“அப்படியே ஆகட்டும் தம்பிகளா. இப்போ எல்லாரும் வெளியே போங்கோ நான் கதவ பூட்டிட்டு வரேன்.“
அனைவருமாக நடக்கலானார்கள். பவினையும் வேனுவையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு அம்மாவையும் பொண்ணையும் பின்னால் வரச்சொல்லிவிட்டு நடந்தார் ராமானுஜம்.
அதை கவனித்த அம்புஜம்…
“அட உங்க அப்பா கூட என்னோட அவஸ்த்தைய புரிஞ்சிண்டு பசங்கள அவரோட கூட்டிண்டு முன்னாடி போயிட்டாரே!!! பரவாயில்லை இன்னைக்கு குஜராத்துல மழை தான் போ“
“அவஸ்த்தையா அது என்னன்னு சொல்லேன் கேட்கறேன்“
“நேத்து கொள்ளப்பக்கத்துல கேட்டேனே அதேதான் நான் வேற என்னத்த புதுசா கேட்கப்போறேன்.“
“அம்மா மனுஷான்னா நிறை குறைகளோட தான் இருப்பா. என்ன என் மாமியாருக்கு ஏனோ என்ன கண்டாலே ஆக மாட்டேங்கறது. அதுனால நொடுக்கு நொடுக்குன்னு ஏதாவது குறை சொல்லிண்டே தான் இருக்கா.“
“அதை நம்ம வேனு அப்பவே சரியா சொன்னான் தெரியுமோ !!!அது என் மனச அரிச்சுண்டே இருந்தது. என் பொண்ணு என்ன கஷ்ட்டப் படறாளோ ன்னு பக் பக்ன்னு இருந்தது“
“அப்படி என்ன வேனு சொன்னான்!!! அத கேட்டு நீ சங்கடப் பட?”
“அன்னைக்கு உங்க ஆத்துக்கு வந்தபோது அவன் கவனிச்சிருக்கான். அவன் சொன்னான் ….மிருதுக்கா மாமியாருக்கு நம்ம மிருதுவைப் பிடிக்கலைப் போல அதுதான் மிருதுக்கா என்ன சொன்னாலும் அதுக்கு ஜஸ்ட் ஆப்போஸிட்டா தான் பேசறான்னு“
“பரவாயில்லை மா அவனுக்கும் தெரிஞ்சிருக்கு பாரேன்!!!“
“அப்படின்னா!!!“
“அப்படின்னா அப்படி தான்…சரி அதெல்லாம் நீ மனசுல போட்டு குழப்பிக்காதே…அதுதான் நான் இங்க வந்துட்டேன் இல்லையா….ஆனா ஒரு விஷயம் மா ….என் சித்திகள் பேச்சையும் என் தோழி பேச்சையும் கேட்டு நான் அவர் கூட இங்க வந்தேனோ பொழச்சேன்… நீ சொன்னத கேட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கிண்டு அங்க இருந்திருந்தேன் என் வாழ்க்கையையே தொலைச்சிருப்பேன் தெரியுமா “
“எல்லாம் அந்த அம்பாள் செயல் மிருது நம்ம கையில என்ன இருக்குச் சொல்லு… உனக்கு அவர் தான்னு அம்பாளே பூ கொடுத்து உத்தரவு தந்தா…பின்ன எப்படி தப்பாகும்“
“அப்புறம் ஏன் உன் மனசு சங்கடப்பட்டுதாம்?”
“நான் சாதாரண மனுஷி தானே மா. பொண்ணுக்கு கஷ்டம்ன்னா அம்மாவோட மனசு பதறத்தான் செய்யும். அதை நீ அம்மா ஆகும் போது தெரிஞ்சுப்ப. சரி உன் முகத்தைப் பார்த்தா எனக்கென்னவோ….உனக்கு நாள் தள்ளிப் போயிருக்கா மிருது?”
“ஆமாம் இந்த மாசம் இன்னும் ஆகலை“
“அப்போ உடனே டாக்டரைப் போய் பாரும்மா. அவர் கிட்ட சொல்லிக் கூட்டிண்டு போகச் சொல்லு“
“மொதல்ல இந்த ரம்யா சித்திப் பிரச்சினக்கு ஒரு முடிவு கட்டணும். அப்புறம் தான் என்னால மத்ததைப் பத்தி எல்லாம் யோசிக்க முடியும்.“
“அதெல்லாம் சரியாகும். நீ தேவையில்லாத கவலைகளை எல்லாம் மனசுல ஏத்திக்காத. நாளையிலேந்து நான் சமைக்கறேன். நீ நல்லா ரெஸ்ட் எடு.“
“அம்மா ரெஸ்ட் எடுக்கற அளவுக்கு நான் என்ன வேலை செய்தேனாம்“
“நாள் தள்ளி போயிருக்குன்னு சொல்லற அப்போ நீ நல்லா ரெஸ்ட் எடுக்கத் தான் வேணும். எனக்கு வந்து உன் முகத்தை பார்த்ததும் என் மனசுலப் பட்டது..அதுதான் கேட்டுட்டேன்.“
“பார்ப்போம் பார்ப்போம்” என புன்னகைத்தாள் மிருதுளா.
“இன்னும் எவ்வளவு நேரம் நடக்கப் போறோம் மன்னி? அண்ணா வர நேரமாச்சு“
“இதோ அத்திம்ஸே வர்றார். அவர் நம்மள பார்க்கலை. பவின் அவரை கூப்பிடேன்“
“அண்ணா ….நவீன் அண்ணா“
நவீன் திரும்பிப் பார்த்து வண்டியை நிப்பாட்டி…
“ஏய் எல்லாரும் எங்க போயிண்டிருக்கேங்கள்?”
“அத்திம்பேர் நாங்க வாக்கிங் பண்ண ஆரம்பிச்சு இரண்டு மணிநேரமாகறது“
“அப்போ யாரும் இன்னும் சாப்பிடலயா?”
“இதோ அப்படியே டாபாக்கு போகலாம்ன்னு மன்னி சொன்னா“
“ஓ அப்போ சரி வாங்கோ நானும் உங்களோடவே வரேன்“
அனைவரும் டாபாவிற்குள் சென்று அமர்ந்தனர். அப்போது மிருதுளா நவீனிடம்…
“அவா எல்லாரும் அந்த டேபிளில் ஒன்னா உட்காரட்டும் நாம ரெண்டு பேரும் நம்மளோட யூஷுவல் டூ சீட்டர் ல உட்காரலாம் ப்ளீஸ்“
நவீன் மறுப்பேதும் சொல்லாமல் அமர்ந்தான். மற்றவர்களை அவர்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்ய சொல்லிவிட்டு இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தனர். அப்போது பவின்…
“அண்ணா நீங்க ரெண்டு பேரும் இன்னும் ஆர்டர் பண்ணலையே“
“பவின் அதை நாங்க பார்த்துக்கறோம் பா நீ சாப்பிடுப் பா. எங்களை கொஞ்ச நேரம் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் ப்ளீஸ்” என்று சொல்லிவிட்டு நவீனைப் பார்த்து
“என்ன உங்களுக்கு என் மேல இருக்கும் கோபம் இன்னும் குறையவில்லை யா? இல்லை குறையவே குறையாதா? எனக்கு இப்படி நீங்க முகத்தை திருப்பிண்டு போறதும் சொல்லிக்காம போறதும் எல்லாம் பிடிக்கலை“
“நீ நேத்து சித்தியை பேசினது தப்பு. பெரியவாள்ட்ட எப்படி நீ அப்படி பேசலாம்? எனக்கு அது பிடிக்கலை“
“சரி நான் பேசினது தப்பாவே இருந்துட்டுப் போட்டும். அவா பேசினது சரியா அத மட்டும் உங்க மனசாட்சிய கேட்டு சொல்லுங்கோ“
“அது அது …“
“என்ன அது அதுன்னு இழுக்கறேங்கள். பதில் சொல்லுங்கோ“
“இங்க பாரு மிருது …அவா பெரியவா அப்படித் தான் பேசுவா ஏன்னா அவா வளர்ந்த சூழல் அப்படி அதுக்காக நீயும் அப்படி பேசணுமா சொல்லு“
“உண்மைச் சொல்லனும்னா நான் தான் உங்க கிட்ட கோவிச்சிண்டுருக்கனும் தெரியுமா!!“
“நான் என்ன பண்ணினேன்“
“அவா பெரியவா அப்படி பேசறா ஆர் அப்படித்தான் பேசுவான்னு உங்களுக்கு தெரியும் போது நீங்க ஏன் எனக்காக பேசலை. நான் உங்க குடும்பத்துக்குள்ள வந்து பல வருஷம் ஆகலை நாலு மாசம் தான் ஆச்சு….அவா அப்படி சொன்னதும் நான் உங்களைத் தான் பார்த்தேன் நீங்க சிரிச்சிண்டிருந்தேங்கள் அதனால எனக்கு கோபம் வந்தது …அப்பவும் அதை அடக்கிண்டு நிதானமா தானே சொன்னேன். சரிப்பா தப்பா சொன்னேன்னே இருக்கட்டும் அதுக்கு உங்க சித்தி எல்லார் முன்னாடியும் அப்படி தான் வெடுக்குனு எழுந்து போவாளா? அவா சொல்லும் போது நான் எழுந்து போயிருந்தா !!! அப்பவும் என் மேல தான் பழி போடுவேங்கள் இல்லையா?”
“இங்க பாரு மிருது அவா பேசினது சரின்னு நான் சொல்லலை “
“இது எப்போ உங்களுக்கு தெரிஞ்சுது? இப்போ நான் இவ்வளவு எடுத்துச் சொன்னதுக்கப்புறமா இல்லை நேத்து அங்கேயே வா“
“நேத்தே“
“சும்மா சொல்லாதீங்கோ நவீன்….அப்போ ஏன் என்ன மொறச்சுண்டே இருந்தேங்கள்? பஸ்ஸில சீட்டை ஏன் மாத்தினேங்கள்? காலையிலேந்து ஏன் முகம் கொடுத்துக்கூட பேசலை?”
“அது ஐ டிடின்ட் எக்ஸ்பெக்ட் தட் ஃப்ரம் யூ!!! அதுனால தான் என்னால ஏத்துக்க முடியலை“
“ஐ டூ டிடின்ட் எக்ஸ்பெக்ட் தட் ஃப்ரம் யூ!!! அதுக்காக நான் அப்படியா நடந்துண்டேன்?”
“சரி இப்போ என்ன சொல்ல வர நீ பேசினது தப்பில்லைங்கறயா?”
“அப்படி தானே நீங்களே கொஞ்ச முன்னாடி சொன்னேங்கள்….ஓகே லெட் மீ ஃபினிஷ் திஸ் ப்ளேம் கேம். இங்க பாருங்கோ நவீன் பெரியவாளா இருந்தாலும் சரி சின்னவாளா இருந்தாளும் சரி தப்பா பேசினா தப்புதான்னு ஒன்னு நீங்க கேட்கணும் இல்லை என்னையாவது கேட்க விடனும். உங்க அம்மா என்னை என்னென்ன சொன்னா அதுவும் உங்க முன்னாடியே !!! நீங்க எனக்காக பேசுவேங்கள்ன்னு அங்க இருந்தவரைக்கும் காத்திருந்தேன்… அப்போ என்ன எனக்காக நீங்க பேசினேங்களா? இல்லையே !!!அதுக்கு நான் முகத்தை திருப்பிண்டேனா? இல்லையே !!! அப்படீன்னா நீங்க எனக்கு செய்யறது சரியில்லை. எனக்கு ஒரு டவுட்….உங்க ரம்யா சித்தி போன தடவை நம்ம கிட்ட அப்படி எதுமே பேசலையே!!! நல்லா தானே ஜென்டிலா பழகினா!!! இப்போ எங்க பேரன்ட்ஸோட போனப்போது ஏன் வித்தியாசமா பிஹேவ் பண்ணினா? என் அப்பா அம்மாவை ரம்யா சித்தி அவா ஆத்துக்கு இன்வைட் பண்ணினாளா“
“சீ எங்காத்துல நடந்தது நாம கல்யாணமாகி ஜஸ்ட் இரண்டு வாரம் தான் அங்கிருந்தோம். நீயும் என்கிட்ட எதுவும் தப்புன்னு சொல்லாததுனால எனக்கு எதுவும் தப்பாவே தெரியலை. ரம்யா சித்தி என்னிடம் இன்வைட் பண்ணலை. அவா என் பேரன்ட்ஸ்ட்ட சொல்லிருக்கா அவா தான் எனக்கு ஆபீஸுக்கு கால் பண்ணி சொன்னா.“
“நான் ஆத்துல நடந்தது எதையுமே உங்ககிட்ட கம்பளேயின்ட் பண்ணாததால உங்களுக்கு தப்பாவே படலைங்கறது என்னால நம்ப முடியலை பட் லெட்ஸ் லீவ் தட் தேர். இனி அங்க போகும் போது அப்படி நடந்தா! நடக்கும்… அப்போ உங்ககிட்ட நிச்சயம் சொல்லறேன் என்ன பண்ணறேங்கள்ன்னு அப்போ பார்ப்போம்….உங்க சித்திக்கு உங்க நம்பர் தெரியும் தானே அப்போ ஏன் உங்ககிட்ட சொல்லாம உங்க பேரன்ட்ஸ்ட்ட சொல்லிருக்கா? அதுவுமில்லாமல் அவாளுக்குள்ள என்ன டிஸ்கஷன் நடந்துதோ !!!! சித்தியோட அந்த பிஹேவியர் மே பீ அதுனால கூட இருக்கலாம்ன்னு என்னோட யூகம். எது எப்படியோ இனி இப்படி பண்ணாதீங்கோ. நீங்க இப்படி செய்ததினால் என் பேரன்ட்ஸ் காட் வரீடு!!! தெரியுமா. “
“ஓ !!!!நான் அவ்வளவு எல்லாம் யோசிக்கலை இப்போ ஏதோ புரியறா மாதிரி இருக்கு. நான் உன் பேரன்ட்ஸ்கிட்ட நல்லா தானே பழகறேன்“
“என்கிட்ட மூஞ்சிய காட்டிட்டு அவாகிட்ட நல்லா பழகினா எப்படி அவா நிம்மதியா இருப்பா நவீன்…என்னை நினைச்சுத் தானே கவலைப்படுவா“
“ஓகே ஐ வில் பீ நார்மல் ஃப்ரம் நவ்”
“அப்பாடா நான் என்னுள் சபதம் எடுத்தேன்….இந்த பிரச்சினையை இன்றோடு முடிப்பேன்னு. தாங் காட் ஃபார் ஹெல்பிங் மீ“
அன்று டாபா உணவால் வயிறு நிறைந்ததோ இல்லையோ ஆனால் மிருதுளாவுக்கும் அவள் பெற்றோருக்கும் அவர்கள் மனம் நிறைந்தது. மிருதுளா நிதானமாக யோசித்து கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கிடைத்தாக வேண்டுமென அவள் வலியுறுத்தவில்லை ஆனால் நவீனின் மனது பதில்களைத் தேட அவளது கேள்விகள் வித்தானது.
சண்டையிட்டு மண்டையுடைத்துக்கொள்ளாமல்
டைவர்ஸ் கேட்டு கோர்ட் படி ஏறாமல்
தனக்குத் தானே கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களை தன் கணவனையே தேட வைக்க முயற்சிக்கும் மிருதுளாவை மனமாற வாழ்த்துவோமாக. பொறுமையும் நிதானமுமிருந்தால் நமது பேச்சு எங்கும் எடுப்படும் அல்லது எடுபட வைக்க முடியும் என்பதற்கு இவர்கள் வாழ்வின் இந்த நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இருபத்தி நான்கு மணி நேர கோபம் உட்கார்ந்து பேசியதில் ஒரு மணி நேரத்தில் காணாமல் போனது.
பெண்ணே நீ பூமாதேவி தான்
எல்லாவற்றுக்கும் பொறுத்துப் போவதற்காக அல்ல
எல்லாவற்றையும் பொறுமையோடு கையாள்வற்காக
பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது பழைய மொழி அல்ல அது உண்மையானது. காலதாமதம் ஆகலாம் ஆனால் என்றுமே தவறாகாது.
பொறுமை, நிதானம் இரண்டும் நம் மூளையை சிறப்பாக இயக்க முக்கிய கருவிகளாகும்
பொறுமையுடன் நிதானமாக சிந்தித்து செயல் படுவோம். வெற்றி காண்போம்.
தொடரும்…..