RTA பார்க்கிங்
ஒரு வழியாக பல படிகளை தாண்டி கடைசி இரு படிகளுக்கு வந்து சேர மூன்று மாதங்கள் எடுத்தது. இன்னும் ஒரு மாதம் தான் RTA அளித்த லர்னிங் பர்மிட் செல்லுபடியாகும். அதற்குள் லைசென்ஸ் கிடைக்காவிட்டால் மீண்டும் பணம் செலுத்தி அதை புதுப்பிக்க வேண்டுமென்று டிரைவிங் இன்ஸ்டிடியூட்டில் கூறினர். ஒரு மாசம் இருக்கே பார்க்கலாம் என்ற தைரியத்தில் RTA பார்க்கிங் பரீட்சைக்கு பதிவு செய்தேன். பார்க்கிங் பரீட்சைக்கு முன் தினம் இரண்டு மணி நேர வகுப்புக்கு பதிவு செய்து பயிற்சி எடுக்க சொல்லி அறிவுறுத்தினர் நண்பர்கள். சரி அவர்கள் அறிவுரையை அலட்சியம் பண்ண மனமின்றி அதற்கும் பதிவு செய்தேன்.
இரண்டு மணி நேர வகுப்பு சென்றேன்.
“நன்றாக பார்க் செய்கிறீர்கள். இப்படியே நாளையும் எந்தவித பதற்றமும் இன்றி செய்து ஒரே அட்டெம்ட்டில் பாஸ் ஆகி விடுங்கள். ஆல் தி பெஸ்ட்”
என்று எனது பயிற்றுவிப்பாளரின் ஆசிர்வாதத்துடன் முடிந்தது பார்க்கிங் வகுப்பு. அன்றைய தினம் முழுவதும் ஏதோ சொல்ல முடியாத ஒரு தவிப்பு. பாஸ் ஆகி விடுவோமா மாட்டோமா! என்ற குழப்பம் நீடித்ததில் பார்க்கிங் ஜுரம் நூறை தாண்ட அன்று சரியாக சாப்பிடவில்லை, அன்றிரவு சரியாக தூங்கவில்லை.
மறுநாள் காலை விடிந்தது. விருட்டென எழுந்து காலை கடமைகளை முடித்துக் கொண்டு ஒரு கையில் ஒரு கப் காபி மறுகையில் கைபேசியுடன் அமர்ந்தேன். RTA பார்க்கிங் வீடியோக்களை யூடியூப்பில் போட்டுப் போட்டுப் பார்த்துக் கொண்டு இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. கணவர் வந்து காலை உணவு என்ன என்று கேட்ட போது நேரத்தைப் பார்த்தேன். கடிகாரம் ஒன்பதரை என்று காட்ட உடனே அடுப்படிக்கு சென்று அவருக்கு தோசையை சுட்டுக் கொடுத்து விட்டு அடுப்பை அணைத்து விட்டேன். அதைப் பார்த்த என் கணவர்.
“ஏன் இன்னைக்கு இவ்வளவு பதற்றம்? உனக்கு ப்ரேக்ஃபாஸ்ட் வேண்டாமா? அடுப்பை ஆஃப் பண்ணிட்ட? இன்னைக்கு இன்னொரு பார்க்கிங் கிளாஸ் தான் போக போறன்னு நினைச்சு போ. டோன்ட் டேக் இட் டூ சீரியஸ். புரியுதா? நீ போ நான் உனக்கு தோசை சுட்டு தரேன்.”
என்ற ஆறுதல் வார்த்தைகளை கூறினாலும் என் மனதில் ஒரு கலக்கம் இருக்கத்தான் செய்தது. பரீட்சை மதியம் மூன்று மணிக்கு இருந்தது. ஆனால் இரண்டரை மணிக்கெல்லாம் சென்று அடையாள அட்டையை அங்கிருக்கும் வரவேற்பாளரிடம் கொடுக்க வேண்டும் என்பதால் குறித்த நேரத்தில் RTA பார்க்கிங் பரீட்சைக்கு சென்றேன். அங்கே சென்றால் எப்போதும் அங்கிருக்கும் வரவேற்பாளர் இருக்கவில்லை ஏனெனில் அவர் அந்த டிரைவிங் இன்ஸ்டிடியூட்டின் வரவேற்பாளர் என்பதால் அவர் மாலை அஸஸ்மெண்ட் பரீட்சையின் போது தான் அங்கு அமர்ந்திருப்பார். RTA பரீட்சைக்கு அரபு நாட்டை சேர்ந்தவர் ஒருவர் அமர்ந்திருந்தார். நேராக அவரிடம் சென்று பார்க்கிங் பரீட்சைக்கு வந்திருப்பதாக கூறினேன். அவர் அவரின் கனத்த குரலில் எமிரேட்ஸ் ஐடி என்று கேட்க உடனே கைபையில் இருந்த ஐடியை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அதை வாங்கிக்கொண்டு, என்னை சற்று நேரம் அமர்ந்திருக்கும் படி கூறினார்.
மனதில் பதற்றம் வெளியே புன்னகை என்று அமர்ந்திருந்தேன். அவர் சொன்னது போலவே சற்று நேரத்தில் எனது பெயரை சொல்லி அழைத்து கார் எண் 7 ஐ பார்க்கிங் செய்து காட்ட சொல்லி, வாழ்த்துக்களையும் கூறினார். அன்று பரீட்சைக்கு ஏனோ வேறு யாருமே இருக்கவில்லை போலும். நான் மட்டும் தான் இருந்தேன்.
வரவேற்பு அறையின் கதவை திறந்து பார்க்கிங் யார்டுக்குள் (இதற்கு முன் மூன்று முறை சென்று வந்த இடம். முதல் முறை பகலில்…) சென்றேன். அங்கே ஒரு செக்யூரிட்டி நின்றுக் கொண்டிருந்தார். அவரிடம் கார் எண் 7 என்று கூறினேன். என்னை அழைத்துக் கொண்டு கார் எண் 7 அருகே சென்று
“ஆல் தி பெஸ்ட் மேடம்”
என்று கூறினார். நானும் நன்றியை தெரிவித்துக் கொண்டு அந்த ஸ்மார்ட் காருக்குள் ஏறி அமர்ந்ததும் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை செய்து முடித்து எனது வலது புறம் இருந்த பெரிய டேப்லட்டுக்கு மேல் பொருத்தப்பட்டிருந்த காமெராவிடம் நான் ரெடி என்று கட்டை விரலை உயர்த்தி தம்ஸ்அப் காட்டினேன். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. சரி நான் தான் ஏதாவது சம்பிரதாயத்தை செய்ய தவறிவிட்டேனோ என்று எண்ணி ஒரு முறை அனைத்தையும் சரி செய்துக் கொண்டு மீண்டும் அந்த காமிரா முன் நான் தயார் என்று சொன்னேன். அப்போதும் கார் ஸ்டார்ட் ஆகவில்லை.
உடனே இறங்கி போய் சொல்லலாம் என்று சீட் பெல்ட்டை கழற்ற முற்பட்ட போது…பார்க்கிங் பரீட்சைக்கு என்று காரில் ஏறி விட்டால் அதை முடிக்கும் வரை காரை விட்டு வெளியே வரக்கூடாது என்று எனது ஆய்வாளர் கூறியது நினைவுக்கு வர, சட்டென சீட் பெல்ட்டில் இருந்து கைகளை எடுத்து காருக்கு முன் வெளியே நின்றிருந்த செக்யூரிட்டியிடம் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை என்று ஆக்ஷனில் கூற அவர் யாரிடமோ ஃபோனில் ஏதோ கேட்க பின் என்னிடம் ஃபைவ் மினிட்ஸ் என்று கை விரல்களை காட்டி சொல்ல. என்னடா இந்த பார்வதிக்கு வந்த சோதனை என்று நினைத்துக் கொண்டிருக்கையில் கார் ஸ்டார்ட் ஆனது. உங்கள் பார்க்கிங் பரீட்சை தொடங்குகிறது என்ற குரல் காருக்குள் ஒலித்தது.
காரை ரிவர்ஸ் கியரில் போட்டேன். வண்டியை அதன் பார்க்கிங்கில் இருந்து வெளியே எடுத்தேன். பார்க்கிங் பரீட்சைக்கு ஓட்டிச் சென்றேன். முதலில் ஹில், பின் பாரலல், எமர்ஜென்சி, ஆங்கிள் கடைசியில் கராஜ் பார்க்கிங் என்று அனைத்தையும் செய்து முடித்ததும் காரை எங்கிருந்து எடுத்தேனோ அதே பார்க்கிங்கில் கொண்டு வந்து பார்க் செய்து விட்டு வரவேற்பு அறைக்குள் நுழைந்தேன். அங்கிருந்த மண்ணின் மைந்தன் வரவேற்பாளர் சற்று நேரம் அமரும் படி கூறினார். எல்லாம் சரியாக செய்த திருப்தியில் அமர்ந்திருந்தேன்.
சற்று நேரம் ஆனதும் இன்னும் மூன்று நபர்கள் பார்க்கிங் பரீட்சை எடுக்க வந்து காத்திருந்தனர். அவர்களுக்கு ஒரு ஹாய் சொல்லி பேச்சை ஆரம்பித்த போது வரவேற்பாளர் எனது பெயரை சொல்லி அழைத்தார். எழுந்து அவர் அமர்ந்திருந்த மேஜை அருகே சென்றேன். அவர் ஒரு காகிதத்தை என்னிடம் நீட்டி
“நீங்கள் ஹில் மற்றும் கராஜ் ஃபெயில் மற்ற மூன்றிலும் பாஸ். டூ ட் வெல் நெக்ஸ்ட் டைம். ஆயுஷ்”
என்று அடுத்த மாணவரை அழைத்தார். நானோ கையில் அந்த பேப்பருடன் சற்று நேரம் அங்கேயே நின்றுக் கொண்டிருந்தேன். அடுத்தடுத்து ஆட்கள் பரீட்சையை எடுக்க யார்டுக்குள் சென்றார்கள். அங்கேயே நின்றிருந்த என்னை வரவேற்பாளர் அழைத்தார். சென்றேன். அவர் பக்கத்தில் இருந்த டிவியை பார்க்க சொன்னார். நானும் பார்த்தேன். அதில் நான் வண்டி ஓட்டிய வீடியோ போடப்பட்டிருந்தது. பாஸ் ஆனதை எல்லாம் ஓட்டிவிட்டு ஃபெயில் ஆன பார்க்கிங்கை மட்டும் போட்டுக் காட்டினார். முதலில் ஹில் டெஸ்ட்டில் பீப் சத்தம் வருவதற்கு முன்னதாகவே வண்டியை நிறுத்தி விட்டேன். அடுத்ததாக கராஜ் பார்க்கிங், இதில் வண்டியை பார்க் செய்யும் போது லைட்டாக கோட்டில் டையர் பட்டுவிட்டது. மேலும் வண்டியை நான் செய்த கராஜ் பார்க்கிங்கில் இருந்து வெளியே எடுக்கும் போது சிக்ஸ் பாயிண்ட் செக் எனப்படும் ஓர் சம்பிரதாயத்தை செய்யாது எடுத்துவிட்டேன். இரண்டு தவறுகளையும் பார்த்து விட்டு அவரிடம் தாங்க்ஸ் என்று கூறி இன்ஸ்டிடியூட்டிற்கு வெளியே காத்திருந்த எனது கணவரிடம் வந்து நடந்ததை கூறினேன். அவரும் வழக்கம் போல என்னை தேற்றினார்.
பரீட்சையை நன்றாக செய்தேன், முதல் முயற்சியிலேயே RTA பார்க்கிங் பரீட்சையில் பாஸ் ஆகி விடுவேன் என்று பரீட்சையை முடித்ததும் நம்பிக்கையில் இருந்த எனக்கு, உன் நினைப்பு தவறு… என்ன தான் சரியாக செய்திருந்தாலும் உனக்கே அறியாமல் சில சின்ன சின்ன தவறுகள் செய்துள்ளாய் என்று அந்த ஸ்மார்ட் கார் படம் பிடித்ததை போட்டு காட்டியபோது தான் உணர்ந்தேன்.
காரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த நேரத்தில், அன்று அந்த பார்க்கிங் பரீட்சையில் நடந்ததை மனதில் அசைப்போட்டு பார்த்துக் கொண்டே வந்ததில் ஒன்று நன்றாக புரிந்தது என்னவென்றால் எப்படி எனக்கே தெரியாது செய்த சிறிய தவற்றை அந்த ஸ்மார்ட் கார் படம் பிடித்து என்னை ஃபெயில் ஆக்கியதோ அதே போல் தான் நாம் நம் வாழ்க்கையிலும் நமக்கே தெரியாது செய்யும் தவறுகளை நமக்கு உணர்த்திடவே அவ்வப்போது சில தோல்விகள், இழப்புகள், வருத்தங்கள் ஆகியவை வந்து போகிறது. உணர்ந்தால் அவற்றை திருத்திக் கொண்டு வாழ்க்கையையும்/வண்டியையும் சரியான முறையில் நல்வழியில் ஓட்டிச் செல்லலாம். அப்படி இல்லையென்றால் தொடர் தோல்விகளை சந்திக்க வேண்டியது தான். எவ்வளவு முயன்றாலும் நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னு புலம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை.
தவறு செய்வது மனித இயல்பு
தவற்றை தவறு என்று உணர்ந்தும் அதையே செய்வது இறுமாப்பு
தவற்றை உணர்ந்ததும் திருந்தி/ திருத்தி கொள்வது இயல்பிருப்பு
இல்லையா!
ஒரு கார் பார்க்கிங் டெஸ்ட் தானே! ஒரு சாதாரண இன்டர்வியூ தானே! அதில் என்ன பிரமாதம் அது ஒரு சின்ன போட்டி தானே! இதிலென்ன பிரமாதம் என்றெல்லாம் பலர் நினைக்கலாம்/கூறலாம். ஆனால் அவை ஒவ்வொன்றும் நமக்கு கற்று தரும் பாடங்கள் ஏராளம்! தோல்விகள் வெற்றிக்கான முதல் படின்னு ஏன் சொல்றாங்க தெரியுமா? ஏன்னா தோல்வி அப்படிங்கறது நம் சிந்தனை, நமது பார்வை, நமது எண்ணம், ஒரு விஷயத்தை எதிர்கொள்ளும் விதம், பொறுமை, தன்னடக்கம், தன்னம்பிக்கை, தைரியம் போன்ற பல குணாதிசயங்களை நமக்குள் வரவழைக்கும். நம்மை நாம் மாற்றிக்கொள்ள வாய்ப்பளிக்கும்.
இந்த தோல்வி என்னை வெற்றிக்கு நகர்த்தி சென்றதா? இரண்டாவது முயற்சியில் RTA பார்க்கிங் பரீட்சையில் பாஸ் ஆனேனா இல்லையா என்பதை அடுத்த பதிவில் காண்போம்.
🚗பயணம் தொடரும்…🚗