இரண்டாயிரத்து இருபது – இனிமையான இடைவேளை

“ராதா அன்ட் ராஜு ரெண்டு பேரும் வாங்கோ இங்க….டைம் பண்ணண்டு ஆக போறது. நான் விளக்கேத்தப் போறேன்”
“வந்துட்டேன் மா”
“உன் அப்பா எங்கடி? அவரையும் வரச்சொல்லு”
“அம்மா நீ கத்தினது நிச்சயம் அப்பாக்கும் கேட்டிருக்கும் வருவா சித்த வெயிட் பண்ணு”
“நாழி ஆகறது சீக்கிரம் வாங்கோளேன்”
“வந்துட்டேன் ராஜம் வந்துட்டேன்”
“நன்னா ரெண்டு பேரும் வேண்டிக்கோங்கோ. இந்த வருஷம் நல்லபடியா எல்லாத்தையும் நடத்திக்குடுத்ததுக்கு நன்றி ஆண்டவா இனி வரப்போற இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டையும் நல்லபடியா அமைச்சுக் குடும்மா தாயேன்னுட்டு வேண்டிக்கோங்கோ”
“அம்மா அதுதான் நீயே சொல்லிட்டயே அதுவே அம்பாளுக்கு நன்னா கேட்டிருக்கும்.”
“எதுக்கெடுத்தாலும் ஏட்டிக்கு போட்டியா பேசுடி பேசு”
“அம்மா புது வருஷம் மா ஞாபகம் வச்சுக்கோ”
“ஓ!!! கடவுளே கடவுளே எல்லாரையும் ஷேமமா வச்சுக்கோப்பா”
“அம்மா உன் பூஜை ஆயாச்சு இப்போ கேக் கட் பண்ணலாமா?”
“ஓகே!! நீ ரெடி பண்ணு இதோ வந்துட்டேன்.”
“அப்பா வா நம்ம போவோம் அம்மா வரட்டும்”
“விஷ் யூ போத் அ ஹாப்பி 2020 மை டியர் அப்பா அன்ட் அம்மா”
“தாங்க்ஸ் மா. ஹாப்பி நியூ இயர் டா ராதா கண்ணா. ஹாப்பி நியூ இயர் மை டியர் வைஃப்”
“நன்றி ராதா அன்ட் மை நாதா. என் கணவருக்கும் மகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்”
“வாரே வா!!! கலக்கல் அம்மா”
என்று கேக்கை ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டும், வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதன் பின்னர் ராதா அவள் நண்பர்களுடனும், ராஜு அவர் நண்பர்களுடனும் ஃபோனில் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டிருந்தனர். ராஜம் மீதமிருந்த அந்த கேக்கை ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு அவளது தோழிகளுக்கு வாழ்த்துக்களை அனுப்பிவிட்டு, விளக்கை சாந்தப் படுத்திய பின் உறங்கச் சென்றாள்.
மறுநாள் முதல் அவரவர் வேலைகள் மற்றும் நண்பர்கள் என முழ்கினர். ராஜம் வழக்கம் போல சமையல் அடுப்படி என்றிருந்தாள்.
ஜனவரி ஐந்தாம் தேதி ராதா அவளது இரண்டாம் வருட இஞ்சினியரிங் படிப்பின் இரண்டாவது செமஸ்டரை முடிக்க கனடா நாட்டுக்குச் செல்ல ஆயத்தம் ஆனாள். ராஜம் மகளுக்கு வேண்டிய புளிக்காய்ச்சல், பருப்புப் பொடி, ஊறுகாய்கள் என தயார் செய்வதில் மும்முரமானாள். அனைத்தும் பேக் செய்து இரண்டு பெட்டிகளை காரில் ஏற்றி ஏர்போர்ட் சென்றார்கள். அங்கே ராதா தன் பெற்றோரை கட்டி அணைத்து “பை” சொல்லிவிட்டு இமிக்ரேஷனுக்கு உள்ளே செல்லவதற்கு முன் சற்று நின்று திரும்பி தன் அம்மாவையும் அப்பாவையும் பார்த்து கை அசைத்தாள். ராஜம் தன்னைச் சுற்றி ஆட்கள் நிற்கிறார்கள் என்ற உணர்வே இல்லாமல் அவள் கண்ணிலிருந்து ராதா மறையும் வரை அதே இடத்தைப் பார்த்தபடி நின்று அழுதாள். உடனே ராஜு தன் மனைவி தோளில் கையைப் போட்டு தட்டிக் கொடுக்க சுயநினைவுக்கு வந்தாள் ராஜம். பின் இருவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். இது கடந்த இரண்டு வருடங்களாக ராதா ஒவ்வொரு முறை விடுமுறைக்கு வந்து செல்லும்போதும் நடைப் பெரும் நிகழ்வே. ஆனால் இந்த முறை ராஜத்தின் அழுகை ஒரு நாள் ஆகியும் நிற்கவில்லை. அதை பார்த்த ராஜு..
“என்ன ராஜம் நம்ம ராதா படிக்க தானே போயிருக்கா!! ஏன் இப்படி ஒவ்வொரு தடவையும் அழுற? அதுவும் இந்த தடவை ஜாஸாத்தி வருத்தப் படுற!!!”
“ஆமாம் ராஜு ஏதோ சொல்ல முடியாத கவலை என் மனச போட்டு அழுத்தறது. ஏதோ தப்பு நடக்கப் போறா மாதிரியே இருக்கு. இருங்கோ நான் அந்த அம்பாளுக்கு வேண்டிண்டு காசு முடிஞ்சு வச்சுட்டு வந்துடறேன்”
என்று கூறிவிட்டு அம்பாள் படத்திற்கு முன் நின்று மனதார வேண்டிக்கொண்டு காசை முடிந்து வைத்து விட்டு சற்று நேரம் அமைதியாக அமர்ந்தாள்.
மறுநாள் ராதா நல்லபடியாக அவளது கல்லூரி ஹாஸ்டலுக்கு சென்று விட்டாள் என அவளிடமிருந்து ஃபோன் வந்த பிறகு சற்று ஆசுவாசமானாள் ராஜம்.
ராஜுவிற்கு ஆபிஸ் வேலைக்காக மார்ச் மாதம் கனடா போகவேண்டி வந்தது அப்போது அவருடன் ராஜமும் சேர்ந்து போய் அவர்கள் மகளுடன் வசந்த கால விடுமுறை ஒரு வாரத்தை செலவழிக்க முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள்.
பிப்பரவரி மாதம் இறுதியில் கொரோனா என்ற கொடிய நச்சுயிரி உலகெங்கும் பரவி வருவதாகவும் அதனால் பல லட்சம் மக்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் வெளிவந்துக் கொண்டே இருந்தன.
அந்த நச்சுயிரி பரவாமல் இருப்பதற்காக பல நாடுகள் கதவடைத்து வருவதாக செய்திகள் வெளியாகத் துவங்கியதும் ராஜு அவர்களின் கனடா பயணத்தை தவிர்த்து ஆக வேண்டும் என்று முடிவு செய்து அனைத்து ஏற்பாடுகளையும் ரத்து செய்தார்.
ராதாவிற்கு திரும்பி ராஜு, ராஜம் வசிக்கும் நாட்டிற்கு வருவதற்கு ஏப்ரல் முப்பதாம் தேதிக்கு டிக்கெட் புக் செய்திருந்தார்கள். இந்த செய்திகளைப் பார்த்ததும்… மார்ச் பண்ணிரெண்டாம் தேதி ராதாவுடன் பேசியபோது டிக்கெட்டை அவள் பரீட்சை முடியும் நாளான ஏப்ரல் இருபத்தி ஐந்தாம் தேதிக்கு மாற்றி சீக்கிரம் வீட்டிற்கு வரும்படி சொன்னார்கள்.
ஆனால் ராதாவுக்கு ஏதோ ரிசர்ச் சம்மந்தமான வேலை இருபத்தி எட்டாம் தேதி இருப்பதால் அதுவரை அங்கு இருந்தாக வேண்டும் என்று சொல்லி முப்பதாம் தேதி டிக்கெட்டை இருப்பத்தி எட்டாம் தேதிக்கு மாற்ற முயற்சித்தாள். அது செய்ய முடியாது ஏனென்றால் நிறைய டிக்கெட் ரத்துக்களும் மாற்றங்களும் உலகெங்கும் செய்யப்படுவதால் கையிலிருக்கும் டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு புதிதாக தான் டிக்கெட் பதிவு செய்ய இயலும் என்று ராதா டிக்கெட் பதிவு செய்த வலைத்தளம் குறிப்பிட வேறு வழியின்றி முப்பதாம் தேதி பயணச்சீட்டை ரத்து செய்து புதிதாக இருப்பத்தி எட்டாம் தேதிக்கு அவள் அங்கே கேம்பஸில் வேலைப் பார்த்து சம்பாதித்த பணத்தை வைத்து மீண்டும் பதிவு செய்தாள். ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டின் காசு இரண்டு வாரங்களில் அக்கௌன்டில் வந்து சேரும் என்று அச்சிடப்பட்டிருந்தது அந்த வலைத்தளத்தில்.
பதிமூன்றாம் தேதி செய்தித்தாள் படித்ததும் அதிர்ச்சி அடைந்தார்கள் ராஜுவும் ராஜமும். அவர்கள் வசிக்கும் நாட்டில் மார்ச் பதினேழாம் தேதி முதல் அனைத்து வகை விசாக்களையும் காலவரையின்றி நிறுத்தி வைக்கப் போவதாக அச்சிடப்பட்டிருந்தது. பலர் விசாக்கள் நிறுத்திவைக்க துவங்கி விட்டார்கள் எனக் கூறிவும் அதிர்ந்து போனார்கள் இருவரும்.
அப்படி விசாக்கள் வழுங்குவதை காலவரையின்றி நிறுத்திவிட்டால் ராதாவால் இருபத்தி எட்டாம் தேதி அவள் பெற்றோர் வசிக்கும் நாட்டிற்குள் நுழைய முடியாது ஏனெனில் அவளது விசா முடிவடைந்ததை அவர்கள் யாருமே கவனிக்கவில்லை ஆகையால் ஏப்ரல் மாதம் விசா ஆன் அரைவலில் வந்துவிட்டு பின் மீண்டும் விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றிருந்தனர். ஆனால் விசாவை நிறுத்தி விட்டால் அவள் பெற்றோருடன் இருக்க முடியாது அவளை இந்தியாவிற்கு அவள் தாத்தா பாட்டியிடம் அனுப்பலாம் என்றும் யோசித்தார்கள் ஆனால் இந்தியாவிலும் கதவடைப்பு செய்யப்பட்டிருந்தது.
செய்வதறியாது ராஜுவும் ராஜமும் தவித்துக் கொண்டிருந்த வேளையில் ராதா அவர்களை வீடியோ காலில் அழைத்தாள். அவள் அழைக்கும் போது ராஜு தம்பதியினருக்கு மணி காலை எட்டரை ராதாவிற்கு நள்ளிரவு பண்ணி ரெண்டு.
“ஹலோ அப்பா. எப்படி இருக்கேங்கள் ரெண்டு பேரும். அங்க லாக்டவுன் ஏதும் இல்லையே?”
“என்னம்மா உனக்கு டைம் பண்ணண்டு ஆயிருக்குமே இன்னுமா தூங்காம இருக்க?”
“இன்னைக்கு கல்லூரிக்கு கடைசி நாள் அப்பா அதனால நண்பர்கள் அனைவருமாக டின்னருக்கு சென்று வந்தோம். அதுதான் இவ்வளவு லேட் ஆயிடுத்து”
“அங்க ஒண்ணும் உனக்கு பிரச்சினை இல்லையே ஏன்னா கனடா ல நிறைய யூனிவெர்ஸிட்டீஸ் ஆன் லைன் ல க்ளாஸஸ் ஆரம்பிக்க போறான்னுட்டு நியூஸ் பார்த்தேன். உங்க காலேஜ் என்ன பண்ண போறா?”
“அதப்பத்தி சொல்லத்தான் இப்போ கால் பண்ணினேன். எங்க காலேஜும் இந்த ஸ்ப்ரிங் ப்ரேக்குக்கு ஊருக்கு போற ஸ்டூடன்ட்ஸை திரும்பி வரவேண்டாம்ன்னும் க்ளாஸஸ் ஆன் லைன்ல நடத்தப் போறான்னும் இன்னைக்கு மத்தியானம் எங்க எல்லாருக்கும் காலேஜ் ப்ரெஸிடென்ட் கிட்ட இருந்து ஈமெயில் வந்தது. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் அவாஅவா ஊருக்கு நாளை மறுநாள் அதாவது பதினைந்தாம் தேதி கிளம்பிப் போகப்போறாளாம் டின்னரில் டிஸ்கஸ் பண்ணினா. அது தான் நானும் வந்திடலாமா இல்லை இங்கேயே இருக்கலாமான்னு யோசிக்கறேன்”
“இதுல என்ன யோசிக்க இருக்கு ராதா பேசாம நீயும் உன் இருபத்தி எட்டாம் தேதி டிக்கெட்டை பதினைந்தாம் தேதிக்கு மாத்திண்டு இங்க எங்கள்ட்டயே வந்துடுமா”
“ஆனா அப்படி எங்க ஸ்டூடன்ட் வெப்சைட்டில் ப்ரீபோன்ட் பண்ண முடியாது பா. கான்ஸல் பண்ணிட்டு புதுசா தான் பூக் பண்ணணும்.”
“சரி அதை பண்ணு”
“அம்மா நான் ஃபர்ஸ்ட் செஞ்ச கேன்ஸலேஷனுக்கே இன்னும் காசு திரும்பி என் அக்கௌன்ட்க்கு வரலை.”
“அது வரும்போது வரட்டும் நீ இப்போ இந்த டிக்கெட்டையும் கான்ஸல் பண்ணிட்டு புதுசா புக் பண்ணிடு”
“அம்மா என் கிட்ட புது டிக்கெட் புக் செய்யற அளவுக்கு அக்கௌன்டில் பணமில்லை…நீங்க எனக்கு பணம் ட்ரான்ஸ்பர் செய்தாலும் அது என் அக்கௌன்ட்டுக்கு வரத்துக்கு செவ்வாய்க்கிழமை ஆகிடும்”
“சரி அப்போ ஒண்ணு பண்ணறேன் நான் டிக்கெட் பார்க்கறேன் கிடைச்சா உன் ஈமெயில் ஐடி கொடுத்து புக் பண்ணறேன் சரியா”
“அம்மா என் ஃப்ரெண்ட்ஸ் பாரிஸ் வழியா வர்ற ஃப்ளைட் புக் பண்ணிருக்கா எனக்கும் அதுல இருக்கான்னுட்டு பாரு”
“சாரி ராதா அந்த ஃப்ளைட் ஃபுல் ஆகிடுத்து. ஃப்ராங்ஃபர்ட் வழியா வர்ற ஃப்ளைடில் சீட் இருக்கு பண்ணவா?”
“சரி சரி சீக்கிரம் பண்ணு அதுவும் ஃபுல்லாக போறது”
“ஓகே பண்ணிட்டேன் உனக்கு ஈமெயில் வந்திருக்குமே”
“ஆங் வந்தாச்சு”
“சரி உன் ரூம்ல இருக்கற திங்க்ஸ் எல்லாத்தையும் என்ன பண்ணப் போற?”
“எங்க ஃப்ரெண்ட் ஆன்ட்ரியா வீட்டு பேஸ்மென்ட் ல வைக்க போறோம். அவா எல்லாம் பேக்கிங் ஆரம்பிச்சுட்டா. நான் டிஸிஷன் தெரியாம வெயிட் பண்ணிண்டிருந்தேன். இதோ நானும் பேக் பண்ணப் போறேன்”
“முக்கியமா வேண்டியதை மட்டும் எடுத்துண்டு வா போறும்”
“சரி நான் எல்லாத்தையும் பேக் பண்ணட்டும் பை.”
“ஓகே பை ராதா”
“ஓகே ராஜம் டிக்கெட் புக் பண்ணிட்டே ஆனா ராதாவோட விசா ரின்யூ பண்ணிட்டில்லையே….இங்க வேற பதினேழாம் தேதி முதல் எல்லா விசாவையும் ஸ்டாப் பண்ணப்போறா…இன்னைக்கு இங்க லீவு… ஸோ ஒண்ணும் பண்ண முடியாது நாளைக்கு காலை ல தான் என் ஆபிஸ் டிராவல்ஸ் ல பேசி ஏற்பாடு பண்ணணும்”
“ஓ அது வேற இருக்கே!!! ரின்யூ பண்ணலைன்னு நான் ஞாபகப் படுத்தும்போதெல்லாம் எங்களுக்கு தெரியும்ன்னுட்டு இப்போ எப்படிப் பட்ட இக்கட்டான நிலைமை ல நிக்கறோம்ன்னு பாருங்கோ.”
“இப்போதான் குத்திக் காமிக்கற நேரமா? நாளைக்கு காலை ல ஏழு மணிக்கெல்லாம் ப்ராஸஸை ஸ்டார்ட் பண்ணிடணும்”
“ராதா நாளன்னைக்கு கிளம்பறா பதினாறாம் தேதி ராத்திரி பதினோரு மணிக்கு இங்க வந்திடுவா அப்போ அவள் கிட்ட விசா இருக்கணுமே…ஒரே நாள்ல விசா கிடைச்சுடுமா?”
“லெட் அஸ் ட்ரை.”
“பகவானே என்னப்பா இந்த சோதனை”
“ஒரு சோதனையும் இல்லை ராஜம். பீ கூல். எல்லாம் நல்லபடியாக தான் நடக்கும். வர்றியா லஞ்ச்சுக்கு வெளியே போகலாம்”
“எப்படிப்பா உங்களால இவ்வளவு ஈசியா எடுத்துக்க முடியறது? சப்போஸ் விசா கிடைக்கலைன்னா நம்ம பொண்ணு ஏர்போர்ட்லையே மாட்டிப்பா”
“அப்படி எல்லாம் ஒண்ணுமே நடக்காது. நீ வேணும்ன்னா பாரு எல்லாமே ஸ்விஃப்ட்டா நடக்கும்”
அன்று முழுவதும் மனக்கவலையில் ராஜம் ஒன்றும் சாப்பிடாமலும் சரியாக தூங்காமலும் தவித்துக்கொண்டிருந்தாள். ஆனால் ராஜு எல்லாம் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில் நன்றாக டிவி பார்த்துவிட்டு உறங்கலானார். அவர் உறங்குவதைப் பார்த்து ராஜம் மனதிற்குள்….
“இந்த மனுஷனா ல எப்படி இப்படி நிம்மதியா தூங்க முடியறதுன்னே எனக்கு புரியலை….சரி அவராது தூங்கட்டும் பாவம்”
மறுநாள் பதினான்காம் தேதி விடிந்ததும் சீக்கிரம் எழுந்து தயாராகி ஆபிஸ் சென்று ட்ராவல்ஸிடம் விவரத்தைக் கூறி ஏற்பாடுகளை செய்தார் ராஜு. அவற்றை எல்லாம் அவ்வப்போது ஃபோன் போட்டு கேட்டுக்கொண்டே இருந்தாள் ராஜம். அங்கே ராதா அனைத்துப் பொருட்களையும் பேக் செய்து வைத்து விட்டு தன் அம்மாவுடன் பேசினாள்.
“அம்மா இதோ பார் பத்து கார்டன் பாக்ஸ் ல போட்டு எல்லாத்தையும் ரெடி பண்ணியாச்சு நாளைக்கு காலை ல ஒரு கார் வாடகைக்கு எடுத்து அதுல எங்க மூணு பேரோட திங்க்ஸையும் லொடு பண்ணி ஆன்ட்ரியா வீட்டுல வைக்கணும்”
“என்னடி பத்து டப்பாவா!!!”
ராஜம் அவளது தவிப்பு, மற்றும் விசா பிரச்சினை எதையுமே ராதாவிடம் காட்டிக்கொள்ளாமல் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போலவே பேசினாள்.
“ஆமாம்”
“சரி உனக்கு இப்போ டைம் மூணு ஆகிருக்குமே போய் தூங்கு ராதா”
“இப்போ தான் எல்லாத்தையும் ஃபுல் பேக்கிங் முடிச்சேன் சரி உன்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு தூங்கப்போலாமேன்னு கூப்பிட்டேன்”
“அது தான் நாளன்னைக்கு வந்திடுவயே அப்போ பேசிக்கலாம் இப்போ போய் தூங்கு”
“சரி மா பை”
ராஜம் ராதாவுடன் பேசி முடித்ததும் ராஜுவின் கால் வந்தது. அதில் அவர் ஆபிஸ் ட்ராவல்ஸ் ஒரே நாளில் விசா கிடைக்க முயற்சிப்பதாக சொன்னார்கள் என்று சொல்ல….
“என்னப்பா முயற்சிக்கிறோம் என்று சொல்கிறார்களே கிடைக்குமா!!!கிடைக்காதா!!! கிடைத்தால் சந்தோஷம், கிடைக்காவிட்டால் நம்மகிட்டயும் வரமுடியாது, இந்தியாவிற்கும் செல்ல முடியாமல் ஏர்போர்ட்டில் மாட்டிக்கொள்வாளே நம்ம பொண்ணு”
என்ற மனவேதனை ராஜத்தின் மனநிம்மதி, தூக்கம், பசி என அனைத்தையும் பாதித்தது. அங்கே இவர்கள் மகள் அனைத்து பொருட்களையும் அவள் தோழி வீட்டில் வைத்துவிட்டு பயணத்திற்கு தயாராகினாள்.
இந்த இக்கட்டான நிலையில் மொத்தம் இரண்டாயிரத்தி மூன்னூறு டாலர் பணம் அந்த டிக்கெட்டிங் வலைதளத்தில் மாட்டியிருந்தது.
பதினைந்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மத்தியம் பண்ணி ரெண்டு மணி வரை ராதாவின் விசா பற்றிய எந்தவித தகவலும் வராததால் மூன்றாவது முறையாக ஃபோன் செய்து கேட்டார் ராஜு அப்போதும் ஆகிவிடும் என்று சொன்னார்களே தவிர எப்போ என்று சொல்லவில்லை. அன்றிரவு எட்டரை மணிக்கு (அதாவது ராஜு வசிக்கும் நாட்டின் டைம் பதினாறாம் தேதி விடியற் காலை நாலரை மணி) ராதாவிற்கு ஃப்ளைட். ராஜம் தோழி ஒருத்தி ராதா வரும் ஏர்லைன்ஸில் பணிப்புரிவது ஞாபகம் வர அவளுக்கு ஃபோன் செய்தாள். அவளிடம் விசா கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள் என அனைவரும் கூறுகிறார்களே அது உண்மையா என்றும் தன் மகள் பதினாறாம் தேதி இரவு பதினோரு மணிக்கு வருவாள் உள்ளே அழைத்து வர என்ன வழி என்றும் கேட்டாள் ராஜம். அவள் தோழி சொன்ன பதில் ராஜத்துக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. விசா வழங்குவதை பதினேழாம் தேதி முதல் தான் நிறுத்த போகிறார்கள் எதற்கும் ஏர்போர்ட் சென்று அந்த ஏர்லைன்ஸ் கௌன்டரில் நேராக விசாரித்துக் கொள்ளும்படி கூறினாள். உடனே ராஜம் ராஜுவை அலைபேசியில் அழைத்து விவரத்தைக் கூற அவரும் ஆபிஸில் வேலை ஓடவில்லை என்று கிளம்பி வந்து ராஜத்தையும் அழைத்துக் கொண்டு ஏர்போர்ட் சென்று ஏர்லைன்ஸ் கௌன்டரில் விசாரித்தனர்.
விசா ஆன் அரைவல் பதினாறாம் தேதி கிடைக்கும் ஆனால் அது செல்லுபடியாகும் பதினான்கு நாட்கள் முடிந்ததும் அந்த விசாவை புதுப்பிக்க முடியாது என்றும் முடிந்தால் லாங் டெர்ம் விசா எடுக்கும்படியும் கூறினார் அந்த ஏர்லைன்ஸ் ஊழியர். ராஜுவிற்கும் ராஜத்திற்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை. அந்த டென்ஷன், இரண்டு நாட்களாக சரியாக சாப்பிடாதது, தூங்காதது என்று அனைத்தும் ஒருசேர ராஜத்திற்கு சற்று தலைச்சுற்றலை தந்தது.
ராஜு அவளை தாங்கிப் பிடித்துக்கொண்டு அங்கே இருந்த இருக்கையில் அமர வைத்து தண்ணீர் வாங்கி வந்து கொடுத்தார். மீண்டும் ஒரு முறை அந்த டிராவல்ஸ்க்கு ஃபோன் போட்டுக் கேட்டதில் அதே பதில் தான் கிடைத்தது. இனி ஏர்போர்ட்டில் அமர்ந்திருந்து ஒண்ணும் ஆக போவதில்லை என்று வீட்டிற்கு வந்து சேரும் போது மணி மூன்றரை அதற்கு மேல் என்னத்த சாப்பிட என்று இருவரும் காபி போட்டு குடித்து விட்டு அமர்ந்திருந்தார்கள். ராஜம் மீண்டும் சாமி படங்கள் முன் அமர்ந்து அவர்களின் அந்த இக்கட்டான நேரத்தில் ஏதாவது ஒரு வழி காட்டி காப்பாற்ற வேண்டி மனமுருகி நின்றாள்.
ராஜு வசிக்கும் நாட்டின் நேரம் மாலை ஆறு மணிக்கு (ராதாவுக்கு காலை பத்து மணி) மகள் ஃபோன் செய்து விசா வந்ததா என்று கேட்க ராஜுவும்
“வந்து விடும், வந்ததும் மின்னஞ்சலில் அனுப்பிவைக்கிறேன்” என்று கூறினார்.
விசா இல்லாமல் பயணித்தால் அங்கே இமிக்ரேஷனில் கேள்வி எழும் ஆகையால் ராதா அங்கிருந்து கிளம்பும் முன் அவளுக்கு ராஜு விசாவை அனுப்பிவைக்க வேண்டும். இல்லாததை எங்கிருந்து அனுப்புவது என்று பரிதவித்தார்கள் ராஜுவும் ராஜமும். இரவு அவர்கள் நேரம் பத்து மணிக்கு ராஜுவின் மின்னஞ்சலுக்கு விசா வந்தது உடனே அதை அவர்கள் மகளுக்கு ஃபார்வேர்டு செய்தபின் தான் அவர்களால் நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது.
பதினாறாம் தேதி மாலை ஒரு எட்டு மணியளவில் மெது வடை, சட்னி, சாம்பார், வெண்பொங்கல் எல்லாம் செய்து ஹாட்பேக்கில் போட்டு வைத்து விட்டு ஏர்போர்ட்டுக்கு கிளம்பிச் சென்றனர் ராஜுவும் ராஜமும். அங்கே அவர்கள் மகள் வெளியே வந்து அவர்களை கட்டி அணைத்துக் கொண்டதன் பின் தான் அவர்களுக்கு உயிர் திரும்பியது போல் இருந்தது. வீட்டிற்கு வந்து ராதா குளித்து விட்டு வருவதற்குள் ராஜம் சூடாக இட்டிலி செய்து டேபிளில் அனைத்து சாப்பாடு வெரைட்டி களையும் வைத்துவிட்டாள். ராதா வந்ததும் மூவரும் அமர்ந்து மூன்று நாட்கள் கழித்து அப்போதுதான் நிம்மதியாக சாப்பிட்டனர்.
பிப்ரவரியிலிருந்தே இருந்து வந்த மனக்கவலை மற்றும் மார்ச் பதிமூன்றாம் தேதி தொடங்கிய பதற்றமான சூழல் மார்ச் பதினாறாம் தேதி இரவு பதினொன்றரை மணிக்கு தான் நிதானத்திற்கு வந்தது. அவர்கள் வசிக்கும் நாட்டிலும் லாக்டவுன் செய்யப்பட்டதால் ராஜு வீட்டிலிருந்தே வேலை பார்க்கத் துவங்கினார். காலை டிபன், மத்திய சாப்பாடு தயார் செய்து வைத்துவிட்டு, மகளுக்கு ஒரு வாரம் விடுமுறை என்பதால் ராஜமும் ராதாவும் வீடியோ கேம்ஸ் விளையாடினார்கள். இரவில் டின்னர் முடிந்ததும் மூவரும் ஊனோ எனும் கார்ட் விளையாட்டை விளையாடிய பின் தான் உறங்கச் சென்றார்கள். ஒரு வாரம் விடுமுறை முடிந்ததும் காலையில் ராஜு வேலைப் பார்த்தார் மாலையில் ராதா கல்லூரி ஆன்லைன் வகுப்புகளை அட்டென்ட் செய்தாள். ராஜம் அவளது அடுப்படி வேலைகள் என அவரவர்களின் நேரத்தில் அவரவர் பணியை செவ்வனே செய்யத் துவங்கினர்.
மாலை ராஜு ஆபிஸ் வேலை முடிந்தது, ராதா வகுப்பு துவங்குவதற்கு முன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஸ்னாக்ஸ் செய்து கொடுத்து அதை இருவரும் ரசித்து உண்பதைப் பார்த்து மகிழ்ந்தாள் ராஜம். இப்படியே ஜூன் மாதம் வரை விதவிதமான சாப்பாடு வகைகள், ஸ்னாக்ஸ் வகைகள் என்று செய்வதும் சாப்பிடுவதும், வீடியோ கேம்ஸ், திரைப்படங்கள் என காலை நேரமும், கார்ட்ஸ், ஊனோ என்று இரவு நேரமும் மிகவும் மகிழ்ச்சியாக கழித்தனர் ராஜு குடும்பத்தினர்.
ஜூலை முதல் ராஜு ஆபிஸுக்கு செல்ல ஆரம்பித்தார். ராதாவிற்கு ஆகஸ்ட்டில் கல்லூரி துவங்க உள்ளதால் அவரை அனுப்ப வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வி எழுந்தது. அப்போது அவர்கள் கல்லூரியிலிருந்து வந்த மின்னஞ்சல் அவர்களுக்குள் இருந்து வந்த குழப்பத்தை நீக்கியது. மீண்டும் ஆன்லைன் வகுப்புகளே தொடர்ந்தது, அவர்களின் வழக்கமான சமையல், சாப்பாடு, விளையாட்டும் தொடர்ந்தது.
இரண்டு வருடங்களுக்கு பின் அவர்கள் மூவரும் இந்த வருடம் தான் எல்லா பண்டிகை தினங்களிலும் ஒன்றாக சேர்ந்திருக்கிளார்கள் என்பதனால் எல்லா பண்டிகையையும் சிறப்பாக கொண்டாடினார்கள். இந்த வருடம் பலருக்கு பலவகையான அனுபவங்களை கொடுத்துள்ளது. ராஜு குடும்பத்தினருக்கு ஆரம்பத்தில் சற்று பதற்றம், குழப்பம், கவலை என இருந்தாலும் இறுதியில் மகிழ்ச்சியையே தந்துள்ளது.
வெளியே எங்கும் போகாமல் எவர் முகத்தையும் பாராமல் வீட்டிற்குள்ளேயே அடைப்பட்டுக்கிடந்தாலும் சந்தோஷத்திற்கு எந்த வித குறையுமில்லாமல் அற்புதமாக கிடைத்த அந்த நேரத்தை மிக மிக அழகான தருணங்களாக மாற்றி செவ்வனே அவரவர் வேலைகளை செய்துக்கொண்டும், வீடியோ கேம்ஸ் மற்றும் போர்ட் கேம்ஸ், சீட்டு விளையாட்டு போன்ற விளையாட்டுகளை விளையாடிக் கொண்டும், பலவகையான தலைப்புகளை எடுத்து அதை பற்றி கலந்துரையாடிக் கொண்டும் செலவிட்டு வந்ததில் அவர்களுக்குள் இருந்த குடும்ப பிணைப்பு எனப்படும் family bonding இன்னும் வலிமை பெற்று பல நல்ல தருணங்களை பரிசளித்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்.
அவர்களின் வழக்கமான வாழ்க்கையிலிருந்து இந்த இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு அவர்களுக்கு கொடுத்த இந்த இனிமையான இடைவேளைக்கு நன்றி தெரிவித்தாள் ராஜம்.
நமக்கு கிடைப்பதை/நடப்பது (நல்லதோ கெட்டதோ) ஏற்றுக்கொண்டு அதிலிருக்கும் துன்பங்களை, கஷ்ட்டங்களை அல்லது தீயவைகளை நீக்கி நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அதை வளர்த்துக் கொண்டால் நாமும் நம்மைச் சுற்றி உள்ளவர்களும் நன்றாக வாழ ஏதுவாக இருக்கும்.
“இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்”
என்ற திருக்குறளுக்கு ஏற்ப சோதனைகளை/துன்பங்களை/கஷ்டங்களைக் கண்டுக் கலங்காமல் அதை வெல்லக்கூடிய மகிழ்ச்சியை, நம்பிக்கையை மனதில் வளர்த்துக்கொண்டோமேயானால் அவை அனைத்தும் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
மனதில் நல்லெண்ணத்தை பயிரிடுவோம் நன்மையை அறுவடை செய்வோம்.
❤️முற்றும்❤️