அத்தியாயம் 33: சந்தோஷமும் சங்கடமும்

 காலை சூரியனின் கதிர்களில் ஒன்று மிருதுளாவின் இமைகளை தட்டி திறந்து கண்களால் தன்னைப் பார்க்கும் படி மிகவும் தொந்தரவு செய்ய அவளும் அதிலிருந்து நகர்ந்து படுத்தும்,  போர்வையை கொண்டு முகத்தை மூடியும் உறக்கத்தை தொடர நினைத்து கடைசியில் சூரியக்கதிரிடம் தோற்றுப்போய் விழித்து கடிகாரத்தைப் பார்த்தாள். மணி எட்டு காட்டியது. விரைந்து எழுந்தாள். கட்டிலின் எதிரில் தரையில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த நவீனிடம்….

“குட் மார்னிங் நவீ. என்னப்பா என்னை எழுப்பிருக்கலாம் இல்லையா!! மணி எட்டாச்சே”

“ஸோ வாட்? நீ நல்லா தூங்கிண்டிருந்த அதனால எழுப்பலை…இப்போ அப்படி சீக்கிரம் எழுந்து என்ன பண்ணணும் உனக்கு?”

“இல்ல இவ்வளவு நேரம் தூங்கிட்டேனேன்னு இருக்கு”

“இட்ஸ் ஓகே மிருது. நீ போய் ப்ரஷ் பண்ணிட்டு வா காபி போட்டுத் தர்றேன்.”

“நீங்க குடிச்சாச்சா?”

“ஓ! குடிச்சிட்டேன்”

ப்ரஷ் செய்து முகம் கழுவி விட்டு டவலில் முகத்தைத் துடைத்துக் கொண்டே …

“நவீ நீங்க எப்போ எழுந்துண்டேங்கள்?”

“நான் ஒரு ஏழு மணிக்கு எழுந்து கொஞ்ச நேரம் சும்மா படுத்துண்டே இருந்துட்டு அப்பறம் ஏழரைக்கு கட்டிலை விட்டு இறங்கி ஃப்ரெஷ் ஆகி காபி போட்டு குடிச்சிட்டு நியூஸ் பேப்பர் படிக்க உட்கார்ந்தேன் நீ எழுந்துண்ட்ட. சரி சரி இந்தா என் காபி குடிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு”

“என்னமோ ஃபர்ஸ்ட் டைம் போடறா மாதிரி கேட்கறேங்கள்!”

“ஒவ்வொரு தடவையும் கேட்டா என்ன தப்பு. ஏன் நீ சொல்ல மாட்டியா?”

“ஓகே ஓகே!!! இருங்கோ குடிச்சுட்டு சொல்லறேன்”

“அப்படி வா வழிக்கு”

“சூப்பரா இருக்கு நவீ. தாங்க்ஸ்….ஊப்ஸ் தாங்க்ஸ் வாப்பஸ் வாங்கிக்கறேன்”

“சரி இன்னைக்கு நாம வெளில போகலாமா?”

“எங்க போகணும். எனக்கு என்னவோ ரொம்ப சோம்பலா இருக்கு. இன்னைக்கு வேண்டாமே. சாயந்தரமா ஒரு வாக் போகலாம் என்ன சொல்லறேங்கள்?”

“டன். காலை ல டிஃபன் என்ன?”

“என் அம்மா இருந்திருந்தா இந்த நேரம் ப்ரேக் ஃபாஸ்ட் ரெடி ஆகிருக்கும்…ம்..‌என்ன பண்ண!! மாவு இருக்கு தோசை சுடவா? கொத்தமல்லி சட்னி ஃப்ரிட்ஜில் இருக்கு. அத தொட்டுண்டு சாப்பிடலாம்.”

“நான் சுட்டுத் தரட்டுமா தோசையை?”

“நீங்க இதுக்கு முன்னாடி தோசை சுட்டுருக்கேங்களா?”

“இல்லை”

“அப்போ ஏன் விஷப் பரீட்சை. எனக்கு பசி வேற அதனால நானே ரெண்டு பேருக்கும் தோசையை வார்த்து எடுத்துண்டு வரேன் அதுவரை நீங்க உங்க நியூஸ் பேப்பரை படிங்கோ..”

மிருதுளா தோசையை வார்த்து தட்டிலிட்டு நவீனிடம் கொடுத்தாள். அவனும் செய்தித்தாள் படித்தவாறே தோசையை உண்டான். நான்கு சாப்பிட்டதும் போதும் என எழுந்து தட்டை அடுப்படியில் பாத்திரங்கள் கழுவும் தொட்டியில் போட போனபோது மிருதுளா அவனிடமிருந்து தட்டைவாங்கி அதில் அவளுக்கான மூன்று தோசையை சுட்டு போட்டுக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்து சாப்பிடும் போது நவீன் அவளிடம்…

“ஏய் மிருது தட்டை அலம்பி தந்திருப்பேன் ல.”

“ஏன் நீங்க சாப்ட்ட தட்டை அலம்பாம சாப்ட்டா என்ன ஆயிடுமாம்? அட போங்கோப்பா எனக்கு பாத்திரம் கழுவுவதில் ஒரு தட்டு குறையுமோ இல்லையோ அதுக்குத்தான்.”

“ஓகே”

“ஆமாம் தலையில ஏன் துண்டால முண்டாசு கட்டிருக்கேங்கள்? எழுந்ததும் பார்த்தேன் அப்பவே கேட்கனும்ன்னு நினைச்சேன் மறந்துட்டேன்”

“அது வந்து மிருது”

“ஏன் இழுக்கறேங்கள். என்ட்ட சொல்ல என்ன தயக்கம் உங்களுக்கு? சொல்லுங்கோ”

“நான் ஹேர் டிரான்ஸ்ப்ளான்ட் பண்ணிருக்கேன்னு உன்னை பொண் பார்க்க வந்த போதே சொன்னேன் இல்லையா?”

“ஆமாம் ஆமாம் யூ நோ ஒன் திங் நவீ. நான் சொல்ல மறந்தே போயிட்டேன். ஒரு ஜோக். “

“என்ன சொல்லற மிருது”

“என் அம்மா என்ட்ட உங்க ஹேர் பத்தி கேட்டா. அவாளுக்கு என்னன்னு புரியாததால் அது என்னமோ பிரச்சினைன்னு நினைச்சுண்டு அதால எந்த பாதிப்பும் இல்லையேன்னு என்ட்ட கேட்டா பாருங்கோ!!! என்னால சிரிப்ப அடக்கிக்கவே முடியலை. அப்பறம் சொல்லிப் புரிய வைத்தேன்…சரி அதுக்கும் இந்த முண்டாசுக்கும் என்ன சம்மந்தம்”

“நான் அதை ரிமூவ் பண்ணி க்ளீன் பண்ணி வச்சிருக்கேன் அதனால தான் துண்டை முண்டாசு மாதிரி கட்டிண்டிருக்கேன்”

“ஓகே அதை என்ட்ட ஏன் மறைக்கணும்? தலையிலிருந்து அந்த துண்டை கழட்டுங்கோ நான் பார்க்கட்டும்.”

மெல்ல மனதில் ஒரு வகையான தாழ்வு மனப்பான்மையோடு துண்டை எடுத்தான் நவீன். உச்சந்தலையில் முடியில்லாத நவீனை அன்று தான் பார்த்தாள் மிருதுளா. அவளுக்கு நவீனின் தயக்கம் எதனால் என்பது புரிந்தது. முதலில் அவனிடமிருந்து அந்த எண்ணத்தை துடைத்தெறிய முடிவெடுத்து எதுமே வித்தியாசமாக தெரியாதது போல …

“இதுக்கு ஏன் பா துண்டெல்லாம் கட்டிண்டு. என்ன கேட்டா இனி அந்த ஆர்ட்டிபிஷியல் ஹேர் எல்லாம் வேண்டாம். இப்படியே இருங்கோ. நீங்க இப்படி இருக்கறதால எனக்கு எந்த விதத்திலும் சங்கடமோ, பிரச்சினையோ துளி கூட கிடையாது. நீங்க எதையும் மறைக்காம என்கிட்ட இந்த விஷயத்தை சொல்லி என் விருப்பத்தை கேட்ட உங்களோட நேர்மைக்கு  தான் உங்களை கல்யாணம் பண்ணிண்டேன். ஸோ இனி இது தேவையில்லை சரியா! எதுவாக இருந்தாலும் நான் இருக்கேன் உங்களோட.”

“எனக்கு தெரியும் ஆனாலும்…..”

“என்னதுக்கு ஆனாலும் எல்லாம்..இந்த டிரான்ஸ்ப்ளான்ட்டை எப்போ பண்ணிண்டேங்கள்?”

“உன்ன பொண் பார்க்க வர்றத்துக்கு ஒரு ஆறு மாசம் முன்னாடி தான் பண்ணிண்டேன்”

“அப்புறமென்ன எனக்கே ப்ராப்ளம் இல்லங்கும் போது வேற யாருக்காக யோசிக்கறேங்கள்?”

“இல்ல மிருது உனக்காக தான் யோசிச்சேன் இப்ப நீயே வேண்டாம்னு சொன்னதுக்கு அப்புறம் இனி இது எனக்கும் தேவையில்லை. லவ் யூ மிருது”

“ஐ லவ் யூ டூ நவீ”

அன்று நவீனின் தாழ்வு மனப்பான்மை உடைந்து சில்லு சில்லாக சிதறிப் போனது. அதுவரை தன் மனைவி என்ன நினைப்பாள், எப்படி எடுத்துக்கொள்வாள் என்றெல்லாம் நான்கு மாதங்களாக அவன் மனதை அறுத்துக் கொண்டிருந்த விஷயத்தை மிருதுளா சட்டென சர்வசாதாரணமாக துடைத்தெறிந்தது நவீனுக்கு சற்று வியப்பாக இருந்தாலும் அவன் மனதில் மிருதுளா கோபுரமாக உயர்ந்து நின்றாள். 

தனது வாழ்க்கைத் துணையாக இருப்பவர் /ள் என்ன நினைப்பார்களோ? இதை சொன்னால் என்ன செய்வார்களோ? எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்றெல்லாம் தனக்குத்தானே எண்ணிக் கொண்டு பலர் பல விஷயங்களை மனம் விட்டு பேசாமலே இருப்பதற்கு ஒன்று அவரவர் அடுத்தவர் மீதுள்ள அச்சம் காரணமாக இருக்கும் மற்றொன்று அந்த கூடயிருப்பவர்களும் ஒரு காரணம் ஆவர். கூடயிருப்பவர் தங்களின் துணைக்கு நம்பிக்கைக் கொடுக்க வேண்டும். எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அந்த சூழலும் நம்பிக்கையும் இவர்களுக்குள் உருவாக நான்கு மாதங்கள் எடுத்துள்ளது. 

கணவன் மனைவி அவர்களுக்குள் ஒரு விஷயம் ஒத்துப் போய் ஒரு முடிவெடுத்து ஒன்றை செய்தாலும் சுற்றிலுமிருப்பவர்கள் சும்மா இருப்பார்களா!!! 

அன்று மாலை இருவருமாக பேசிக்கொண்டே வாக்கிங் சென்றனர். மிருதுளா நவீனிடம்…

“நேத்து நாம ரெயில்வே ஸ்டேஷன்ல இருந்து திரும்பியதும் அப்பா அம்மாட்ட ஃபோன்ல பேசினேங்களே அவாள்ட்ட சொன்னேங்களா பசங்களையும் என் அப்பா அம்மாவையும் ரெயில் ஏத்தி விட்டாச்சுன்னு? நான் அதப்பத்தி கேட்கவே மறந்துட்டேன் இப்போ இந்த ஃபோன் பூத் பார்த்ததும் தான் ஞாபகம் வந்தது. என்ன சொன்னா அவா?”

“ஒண்ணும் சொல்லலை. சரின்னு சொன்னா அவ்வளவு தான்”

“என்ன பத்தி ஒண்ணும் கேட்கலையா?”

“அப்பா மட்டும் கேட்டா. அதுக்கு நல்லா இருக்கன்னு சொன்னேன். வேற ஒண்ணும் நானும் சொல்லலை அவாளும் கேட்கலை”

என்று பேசிக்கொண்டே நடக்கையில் வழியில் எதிரே நவீனின் நண்பன் சதீஷ் நவீனைப் பார்த்து…

“ஹேய் நவீன் என்ன மறுபடியும் பழைய ஹேர் ஸ்டைலுக்கு போயிட்ட?”

“எனக்கு இந்த நவீனை தான் பிடிச்சிருக்குன்னு நான் சொன்னதும் என் நவீன் அவரை மாத்திக்கிட்டார். ஒல்ட் ஈஸ் கோல்டு இல்லையா  சதீஷ்”

“வாவ் சூப்பர் மிருதுளா. சாரி மா நான் வழக்கம் போல அவனை கலாய்ச்சிட்டேன்.”

“அதனால என்ன சதீஷ். நீங்க அவரோட நண்பர் உங்களுக்கில்லாத உரிமையா. ஆனா அது உங்களுக்குள்ள மட்டும் இருந்தா நல்லாயிருக்கும் அவ்வளவு தான்.”

“டேய் நவீன் யூ ஆர் லக்கி டா.  சரி அம்மா அப்பா தம்பிங்க எல்லாரும் ஊருக்கு போயாச்சா?”

“நேத்து தான் ரெயில் ஏத்தி விட்டோம் சதீஷ். நாளைக்கு காலை ல ஊர் ல ரீச் ஆவாங்க. உன் சொந்தக்காரங்க எல்லாரும் எப்போ ஊருக்கு கிளம்பறாங்க?”

“எல்லாரும் அடுத்த வெள்ளிகிழமை கிளம்பறாங்க நவீன். சரி என் வைஃப் சில மளிகை சாமான்கள் வாங்கிட்டு வர சொன்னா நான் பாட்டுக்கு உங்க கூட அரட்டை அடிச்சுக்கிட்டு இருக்கேன். ஓகே நீங்க என்ஜாய் பண்ணுங்க நான் கிளம்பறேன் பா. பை நவீன் அன்ட் மிருதுளா”

“பை டா சதீஷ்”

“பை சதீஷ்”

மீண்டும் நடையை தொடர்ந்த போது நவீன் மிருதுளாவின் வலதுகையை தனது இடது கையால் கோர்துப் பிடித்துக் கொண்டான். மிருதுளாவும் நவீனின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு நடந்தாள். அன்றிரவு மன அமைதி, நிறைவு இருவருக்குள்ளும் நிறைந்திருந்தது. 

திங்கட்கிழமை காலை விடிந்ததும் எழுந்து குளித்து, டிஃபன் சாப்பிட்டு ஹாஸ்பிடல் சென்று வர  தயார் ஆனார்கள் நவீனும் மிருதுளாவும் ஆனால் மணியோ எட்டு தான் ஆகியிருந்தது. ஆனாலும் இருவரும் கிளம்பி ஹால்பிடலுக்கு எட்டரை மணிக்கெல்லாம் சென்றனர். டாக்டர் ஒன்பதரை மணிக்கு தான் வருவார்கள் என தெரிய வர சற்று மனம் தளர்ந்து போனாள் மிருதுளா. அவளின் முகம் வாடியதைக் கண்ட நவீன்…

“மிருது இன்னும் ஒரு ஃபார்டிஃபைவ் மினிட்ஸ் தானே டோன்ட் வரி.”

என கூறிக்கொண்டிருக்கையில் டாக்டர் ரூமிலிருந்து மிருதுளா நவீன் என்று நர்ஸ் கூப்பிட உடனே எழுந்து உள்ளே சென்றனர். 

“நீங்க தான் மிருதுளா வா?”

“ஆமாம் சிஸ்டர். டாக்டர் வந்தாச்சா?”

“இல்லை மா இன்னும் ஒரு ஹாஃபனார் ல வந்திடு வாங்க. அவங்க வர்றத்துக்குள்ள நீங்க போய் இந்த டெஸ்டெல்லாம் குடுத்துட்டு வாங்க. டாக்டர் நேத்தே உங்களுக்கு இதெல்லாம் எழுதி வச்சிட்டாங்க. “

“ஓ அப்படியா. சரி சிஸ்டர் இதெல்லாம் குடுக்க எங்க போகணும்?”

“இப்படியே நேரா போயிட்டு ரைட் எடுங்க அங்க லேப் எல்லாம் இருக்கு அங்க சொல்லுவாங்க”

“ஓகே சிஸ்டர் தாங்க்யூ”

மிருதுளா நர்ஸ் சொன்ன மாதிரியே டாக்டர் எழதிக் கொடுத்த எல்லா டெஸ்டும் கொடுத்துவிட்டு வந்தமர்ந்தாள். அப்போது நவீன்…

“எல்லாம் ஆச்சா மிருது?”

“எஸ் நவீ ஆல் டன்”

“ஓகே குட். டீ குடிக்கறயா?”

“வேண்டாம் பா.”

டாக்டர் வந்தார். மிருதுளா டாக்டரைப் பார்த்து புன்னகைத்தாள். டாக்டரும் தலையசைத்து விட்டு அவர் ரூமுக்குள் சென்றார். மிருதுளாவிற்கு பின் வந்தவர்களை நர்ஸ் ஒவ்வொருவராக அழைக்க நவீனுக்கு சற்று நிதானம் இழந்து  நர்ஸிடம் கேட்டான்…

“என்ன சிஸ்டர் இப்ப வந்தவங்களை எல்லாம் உள்ளே அனுப்பறீங்க. நாங்க இங்க கிட்ட தட்ட மூணு மணி நேரமா உட்கார்ந்துட்டிருக்கோம் என் மனைவியை கூப்பிடவே மாட்டேங்கறீங்க”

“சார் உங்க மனைவி ரிப்போர்ட்ஸ் காக வெயிட் பண்ணறோம்”

என்று நர்ஸ் சொல்லிக்கொண்டிருக்கையிலே கம்பௌண்டர் வந்து ஒரு கவரை நர்ஸிடம் நீட்டினார். அதைப் பார்த்ததும் நர்ஸ் நவீனிடம்..

“இதோ ரிப்போர்ட்ஸ் வந்தாச்சு ஒரு ஃபைவ் மினிட்ஸ் இருங்க. உள்ள இருக்குற பேஷன்ட் போனதும் உங்க மனைவியை கூப்பிடுவாங்க”

அதே போல மிருதுளா பெயரை கூப்பிட இருவரும் டாக்டர் ரூமிற்குள் சென்று அமர்ந்து டாக்டரைப் பார்த்துக் கேட்க நவீன் முயற்சிக்கும் போது டாக்டர் உடனே..

“வாழ்த்துக்கள் நவீன் அன்ட் மிருதுளா இட்ஸ் கன்பார்ம்டு. உங்க இருவருக்கும் பெற்றோர் பிரமோஷன் கிடைத்திருக்கிறது.”

“தாங்க்ஸ் டாக்டர்”  என நவீனும் மிருதுளாவும் ஒருமித்து சொன்னார்கள்.

“எல்லா ரிப்போர்ட்ஸையும் பார்த்தேன். எவ்ரிதிங் ஈஸ் ஃபைன். சில வைட்டமின் டாப்லெட்ஸ் எழுதறேன் அதை மட்டும் எடுத்துக்கோங்க மிருதுளா. நல்லா சத்தான ஆகாரம் சாப்பிடனும் சரியா. டேக் கேர் ஆஃப் ஹெர் நவீன். இனி நீங்க எப்பப்போ செக்கப் வரணும்ங்கறத நர்ஸ் ஒரு அட்டவணை ல எழுதிக் கொடுப்பாங்க அந்த டேட்ஸ் ல தவறாம செக்கப்புக்கு வந்திடணும் சரியா. பி ஹாப்பி ஆல்வேஸ்”

மீண்டும் நன்றியை தெரிவித்து நர்ஸிடம் டாக்டர் சொன்ன அட்டவணையை வாங்கிக் கொண்டு ஹாஸ்பிடல் விட்டு வெளியே வந்ததும் நவீன் மிருதுளாவை சற்று நேரம் வண்டிப் பக்கத்தில் நிற்க சொல்லிவிட்டு கடைக்குச் சென்று வந்தான். பின் இருவருமாக வீட்டிற்கு வந்தனர். வீட்டினுள் நுழைந்ததும் நவீன் மிருதுளாவைப் பார்த்து…

“மிருது வீ ஆர் கோயிங் டு பி பேரன்ட்ஸ் சூன். இந்தா உனக்கு ரொம்ப பிடிச்ச காட்பெரிஸ் டையரிமில்க் சாக்லெட்.”

“ஓ ஸோ சுவீட் ஆஃப் யூ நவீ. ஆமாம் எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் அம்மாகிட்ட சொல்லனும் போல இருக்கு.”

“ஆனா அவா ஆத்துக்கு போய் சேர இன்னும் அரைமணி நேரமாகுமே. யூ டோன்ட் வரி இன்னைக்கு நான் ஆபீஸ் போகலை. ஒரு மணி நேரம் கழிச்சு ஃபோன் பூத் போய் எல்லாருக்கும் சொல்லலாம் ஓகே”

“ஓகே. சரி எனக்கு காலை ல இருந்து ஒரு மாதிரி டென்ஷன் ஆனது ரொம்ப அசதியாயிருக்கு நான் கொஞ்ச நேரம் தூங்கட்டுமா?”

“இது என்ன கேள்வி மிருது? தூக்கம் வர்றதுன்னா தூங்கு. நான் சமையலை பார்த்துக்கறேன்”

“இல்லை ஒரு மணி நேரத்துல எழுப்பிடுங்கோ போய் ஃபோன் பண்ணி சொல்லிட்டு வரலாம்”

“ஓகே ஓகே இப்போ நிம்மதியா சந்தோஷமா தூங்கு”

மிருதுளா நன்றாக உறங்கினாள். ஒரு மணி நேரமானதும் நவீன் அவளை எழுப்ப முயன்ற போது அவனுக்கு மனம் வரவில்லை சாதாரண நாட்களிலேயே அவளை தொந்தரவின்றி தூங்க விடும் நவீன் அன்று அவளா எழுந்திரிக்கும் போது எல்லாருக்கும் சொன்னால் போதும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் ஏனெனில் அவள் மட்டுமா உறங்குகிறாள் அவளுள் அவன் பிள்ளையும் அல்லவா உறங்குகிறது. அவளை எழுப்பினால் இருவரும் எழுந்திடுவார்களே என எண்ணி அவனும் அவளருகே படுத்துறங்கிப் போனான். நவீன் உறங்கின சில மணி நேரத்தில் மிருதுளா எழுந்தாள். 

பக்கத்தில் நவீன் உறங்குவதைப் பார்த்தாள். கடிகாரத்தையும் பார்த்தாள். மணி இரண்டாகியிருந்தது. டைமை பார்த்ததும் அவளுக்கு பசி எடுக்க நவீன் ஏதாவது சமைத்து வைத்திருக்கிறானா என்று பார்க்க மெல்ல கட்டிலிலிருந்து இறங்கும் போது நவீன் விழித்துக் கொண்டான். 

“மிருது எங்க போற?”

“மணி என்ன ஆச்சு தெரியுமா? ரெண்டு ஆச்சு. எனக்கு பசிக்கறது.”

“ஊப்ஸ்…. நானும் உன் கிட்ட படுத்துண்டு இவ்வளவு நேரம் தூங்கிட்டேன். நான் போய் டாபாலேந்து சாப்பாடு வாங்கிண்டு ஒரு பத்தே நிமிஷத்துல வந்துடறேன் இரு.”

என்று கூறிக்கொண்டே கிளம்பி சென்றான் நவீன். அவன் சொன்னது போலவே பத்தே நிமிடத்தில் வராவிட்டாலும் சிறிது நேரத்தில் வந்தான். அவன் வருவதற்குள் மிருதுளா இரண்டு தட்டு, குடிக்க தண்ணீர், கரண்டிகள் என எல்லாவற்றையும் ஹாலில் எடுத்து வைத்திருந்தாள். சாப்பாட்டை வாங்கி வந்ததும் இருவரும் சாப்பிட்டார்கள். மிருதுளா பசி அடங்கியப் பின் நவீனிடம்…

“நான் ஒரு மணி நேரத்துல எழுப்பச் சொன்னா நீங்களும் என் கூட நல்லா தூங்கிருக்கேங்கள். சரி வாங்கோ இப்ப போய் சொல்லிட்டு வருவோம்”

“இப்பவா வேண்டாம் மிருது. வெளில வெயில் கொளுத்தறது. சாயந்தரமா வாக் போவோமில்லையா அப்போ போய் சொல்லலாம் சரியா”

“ஓகே ஓகே!! உங்களுக்கு பொண்ணு வேணுமா இல்லை பையன் வேணுமா?”

“உனக்கு என்ன குழந்தை வேணும் மிருது? எனக்கு பொண்ணு தான் வேணும்.”

“எனக்கும் பொண்ணு தான் வேணும் நவீ. உங்களுக்கு ஏன் பொண்ணு வேணும்னு சொல்லறேங்கள்”

“ஆமாம் எங்காத்துல எல்லாம் பசங்க தான் அதுனால நமக்கு பொண்ணு பொறக்கட்டுமேன்னு  ஒரு ஆசை. சரி உனக்கு ஏன் பொண்ணு வேணும்”

“ஏன்னா பொண்ணுகளுக்கு தான் அழகழகான டிரஸ் போட்டுப் பார்க்க முடியும் பசங்களுக்கு என்ன இருக்கு சொல்லுங்கோ”

“அடிப் பாவி டிரஸ் போட்டுப் பார்க்க பொண்ணு வேணுமா உனக்கு”

“ஆமாம். இதில எனக்கொன்னும் தப்பாவே தெரியலையே. “

“தப்புன்னு யார் சொன்னா? உன்னோட காரணம் கேட்க வேடிக்கையா இருக்கு”

இப்படியே குழந்தைப் பற்றி பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியாமல் போனது இருவருக்கும். மாலை நேரமானதும் வழக்கம் போல காபி குடித்து, முகம் கை கால் கழுவி விட்டு சாமிக்கு விளக்கேற்றி கும்பிட்டு சற்று நேரம் வாசல் கதவை திறந்து வைத்து உட்கார்ந்தனர். மணி ஆறரை ஆனதும் மிருதுளா…

“நவீன் ஃபோன் பண்ண போகலாமா ?”

“ஓ போகலாமே.”

ஃபோன் பூத்தை நெருங்கியதும் யார் இதை சொல்வது என்ற பேச்சு வார்த்தை வந்தது. அப்போது மிருதுளா…

“நான் என் பேரன்ட்ஸ்ட்ட சொல்லிட்டு உங்க கிட்ட ஃபோனைத் தரேன். அதே போல நீங்க உங்க பேரன்ட்ஸ்ட்ட சொல்லுங்கோ இன்னுட்டு என்கிட்ட தாங்கோ நான் பேசறேன் டீல் ஓகே வா?”

“ஓகே மா. வா வா”

முதலில் மிருதுளா ஃபோன் பேச அவள் பெற்றோர் வீட்டு நம்பரை டையல் செய்தாள். முதல் ரிங்கிலேயே அம்புஜம் ஃபோனை எடுத்து…

“ஹலோ நான் அம்புஜம் பேசறேன்”

“ஹலோ அம்மா …நான் மிருது பேசறேன்”

“சொல்லு மிருது உன் ஃபோனுக்காக தான் காலையில இருந்து இந்த ஃபோனையே பார்த்துண்டு இருக்கேன். டாக்டர்ட்ட போனேங்களா? டாக்டர் என்ன சொன்னா?”

“அம்மா என்னை கொஞ்சம் பேச விடுமா. டாக்டர்ட்ட போனேன் அவா சில டெஸ்டெல்லாம் எடுத்துட்டு கன்பார்ம் பண்ணிட்டா. ஸோ நீ பாட்டியாக போற.”

“அம்மா தாயே நன்றி மா(என அம்மன் படத்தைப் பார்த்து சொன்னாள்) ரொம்ப சந்தோஷமா இருக்கு மிருது. நீ நல்லா சாப்டு உடம்பை பார்த்துக்கோ. சரி… மாப்ள பக்கத்துல  இருக்காரா?”

“இதோ கொடுக்கறேன். நவீன் இந்தாங்கோ”

“ஹலோ நான் நவீன் பேசறேன்.”

“வாழ்த்துக்கள் அப்பா ஆக போறேங்கள். எங்களுக்கெல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். மிருதுவ நல்லபடியா பார்த்துக்கோங்கோ. இருங்கோ எங்காத்துக்காரர்ட்ட கொடுக்கறேன்”

“வாழ்த்துக்கள் மாப்ள அன்ட் மிருது. ரொம்ப சந்தோஷம் அவள நல்லா பார்த்துக்கோங்கோ”

“ஷுவர் ஷுவர் நிச்சயமா. தாங்க்ஸ். உங்க எல்லாருக்கும் பிரயாணம் எல்லாம் சௌகர்யமா இருந்துதா?”

“நாங்க நல்லா சௌகர்யமா வந்து சேர்ந்தோம். உங்க தம்பிகளை ஆத்துல விட்டுட்டு தான் நாங்க ஆத்துக்கு வந்தோம்”

“ஓகே நான் வச்சுடட்டுமா. இல்ல மிருது வ பேச சொல்லட்டுமா?”

“பரவாயில்லை மாப்ள வச்சுடுங்கோ. பை குட் நைட். மிருதுட்டையும் சொல்லிடுங்கோ”

நவீன் ஃபோனை வைத்து விட்டு மிருதுளாவிடம்…

“உங்க அம்மா அன்ட் அப்பாக்கு என்ன ஒரு சந்தோஷம்”

“பின்ன இருக்காதா தாத்தா பாட்டின்னா சும்மாவா!!! உங்க பேரன்ட்ஸும் அப்படி தான் பேசுவா பாருங்கோ. அவாளுக்கும் ஃபோன் போடுங்கோ”

நவீன் அவன்  பெற்றோர் வீட்டுக்கு ஃபோன் செய்தான். ஒரு அஞ்சு நிமிடம் கழித்து ஃபோனை எடுத்தார் ஈஸ்வரன்…

“ஹலோ”

“ஹலோ நான் நவீன் பேசறேன்”

“ஹாங் நவீன் சொல்லு பவினும்,  ப்ரவினும் வந்தாச்சு”

“ஒகே. ஒரு குட் நியூஸ்.”

“என்னது?”

“நீங்க தாத்தா பாட்டி ஆக போறேங்கள்”

“அப்படியா சந்தோஷம் இதோ பர்வதம் பேசணுமாம் குடுக்கறேன்.”

“ஹலோ”

“மிருதுளா பிரக்னென்ட் ஆகிருக்கா. நாங்க அப்பா அம்மா ஆக போறோம்.”

“ஓ சரி. மிருதுளாட்ட ஃபோனைக் குடு “

நவீன் மிருதுளா பெற்றோரின் சந்தோஷம் தன் பெற்றோரிடமும் எதிர்ப்பார்த்து விஷயத்தை சொல்ல அதற்கு அவர்களின் சுரத்தில்லாத பேச்சு அவனுக்கு ஏன்டா சொன்னோம் என்பது போல அவன் மனம் நினைத்தது முகம் வாடி காட்டிக்கொடுத்ததை கவனித்த மிருதுளா “என்ன ஆயிற்று ” என்று சைகையில் கேட்க ஃபோனை அவளிடம் கொடுத்தான் நவீன். அவளும் வாங்கிக் கொண்டு..

“ஹலோ நான் மிருதுளா பேசறேன்”

“நவீன் சொன்னான்….ஆமாம் அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்?”

என்று ஒரு மிரட்டல் துவனியில் கேட்க…

பால் பொங்கி வரும் வேளை கொஞ்சம் தண்ணீர் தெளித்து அதை பொங்க விடாமல் தடுப்பதுபோல பர்வததின் பேச்சு மிருதுளா மனதில் பொங்கி வழிந்த சந்தோஷத்தில் தண்ணீர் தெளித்தது போல் ஆக அவளின் முகம் சட்டென மாறியது. 

“என்னமா கேட்டேங்கள்?”

“இல்ல ஒரு ரெண்டு மூணு வருஷம் கழிச்சு ஆகிருக்கலாமேன்னு சொன்னேன்” 

எந்த ஒரு அப்பா அம்மாவும் தாத்தா பாட்டி ஆகிவிட்டனர் என தெரிந்தால் பேரானந்தம் கொள்வார்கள்.  அவர்கள் அப்பா அம்மா ஆனபோதிருந்த மகிழ்ச்சியை விட பாட்டி தாத்தா ஆனதில் தான் பெருமகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் இப்படி ஒரு ரியாக்ஷனை துளியும் எதிர் பார்க்காத மிருதுளாவின் மனம் வருந்தியது அதற்கு மேல் பேச்சைத் தொடர விரும்பாமல்…

“சரி நான் நவீன்ட்ட குடுக்கறேன்”

என்று சட்டென ஃபோனை மிருதுளா குடுத்ததிலிருந்தே நவீனுக்கு புரிந்துவிட்டது ஏதோ சரியில்லை என்பது அதனால் ஃபோனை அவளிடமிருந்து பெற்றதும்….

“நான் நவீன் …சரி சரி நாங்க அப்புறமா பேசறோம் பை ” 

என ஃபோனை கட் செய்து நவீன் காசுக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது மிருதுளா வெளியே வந்து வீட்டிற்கு மெல்ல நடக்கலானாள். நவீன் வெளியே வந்து பார்த்ததும் மிருதுளாவை காணவில்லை என தேட பின் வீட்டிற்கு நடந்துச் சென்றுக் கொண்டிருப்பவளை நோக்கி வேகமாக அவள் பின்னால் சென்றான். 

தொடரும்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s