மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் வில்வித்தை கலையை கற்ப்பித்த ஆசான் துரோணாச்சாரியார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவருக்கு அஸ்வத்தாமன் என்ற ஒரு மகன் இருந்தான்.

குழந்தை பிறந்தவுடன் குதிரை போல் கனைத்ததால் அவருக்கு அஸ்வத்தாமன் என்று பெயர் சூட்டினார்கள். “அஸ்வம்” என்றால் சமஸ்கிருதத்தில் “குதிரை ” என்பது பொருள்.

துரோணாச்சாரியாரின் செல்லப்பிள்ளையாக வளர்ந்தான் அஸ்வத்தாமரன். குருவாகிய தன் தந்தையிடம் இருந்து எல்லா வித்தைகளையும் கற்று வில் வித்தையில் சிறந்து விளங்கினான்.

அஸ்வத்தாமனின் தாய் வில்வித்தையில் சிறந்து விளங்கிய கிருபாச்சாரியாரின் சகோதரி ஆவார். கிருபாச்சாரியார் அஸ்வத்தாமனுக்கும், பாண்டவர்களுக்கும் மற்றும் கௌரவர்களுக்கும் வில்வித்தையில் குருவாக இருந்து பல கலைகளை கற்ப்பித்துள்ளார்.

அஸ்வத்தாமன் தன் தாய் மாமாவிடமும், தந்தையிடமும் பாடங்களை படித்து வில்வித்தையில் பல நுணுக்கங்களையும், ரகசியங்களையும் வேகமாக கற்று தேர்ந்து சிறந்த வில்லாளியாக திகழ்ந்தான்.

பாண்டவர்கள் கௌரவர்களால் பகடை ஆட்டத்தில் தோற்க்கடிக்கப்பட்டு காட்டில் இருந்த சமயத்தில் அஸ்வத்தாமன் கிரேஷ்ணனிடமிருந்து ஏதாவது தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் கிருஷ்ணரை பார்க்க சென்றான்.

மாயக்கண்ணனுக்கு அஸ்வத்தாமனின் எண்ணம் தெரியாதா என்ன? இருந்தும் ஒன்றும் தெறியாதது போல் வா அஸ்வத்தாமா வா என்றார்.

தான் ஏதாவது கண்ணனிடம் வாங்கியே தீரவேண்டும் என்று அஸ்வத்தாமன் கூறலானான் ” கிருஷ்ணா என்னிடம் இருக்கும் அஸ்திரங்களில் தலையாயதும் மிக சக்தி வாய்ந்ததும், யார் மீது ஏய்தினாலும் அவர்களை கொன்று விடும் பிரம்மஷீரா அஸ்திரத்தை உனக்கு தருகிறேன் அதற்கு பதிலாக உன்னுடைய சுதர்சன சக்கரத்தை தருவாயா? எனக்காக இதை நீ செய்ய வேண்டும். நான் மிகவும் நன்றியுடன் இருப்பேன்” என்றான்.

 மனதார கண்ணனை நினைத்து வேண்டினாலே நமக்கு வேண்டியதை கேட்காமலேயே அள்ளித்தருவார் அந்த பரந்தாமர். அவரிடம் போய் நான் ஒன்று தருகிறேன் நீ ஒன்று தா என்று சொன்ன அஸ்வத்தாமனை பார்த்தார் கிருஷ்ணர்.

கிருஷ்ணர் தருவாரா இல்லை மறுத்துவிடுவாரா என்ற குழப்பத்தில் நின்றிருந்த அஸ்வத்தாமனை பார்த்து கண்ணனுக்கே உரித்தான புன்முறுவலுடன் “எனக்கு இந்த வர்த்தகம் பிடித்திருக்கிறது. நான் என் சுதர்சன சக்கிரத்துக்கு உன் பிரம்மஷீரா அஸ்திரத்தை மாற்றிக்கொள்ள தயார் ” என்றார். சொல்வதோடு நிறுத்தாமல் “இதோ எடுத்துக்கொள்” என்று அஸ்வத்தாமனிடம் நீட்டினார்.

அஸ்வத்தாமன் சக்கரத்தை எடுக்க முயன்றான் ஆனால் அவனால் கிருஷ்ணனின் கரங்களில் இருந்து தூக்க முடியாமல் திகைத்து நின்றான்.

கிருஷ்ணன் அஸ்வத்தாமனை பார்த்து கேட்டார் ” அஸ்வத்தாமா உன்னால் சுதர்சன சக்கரத்தை தூக்கக்கூட முடியவில்லையே பின்னர் எப்படி அதை உபயோகிப்பாய்”

அஸ்வத்தாமனுக்கு பெருத்த அவமானமாகவும், சங்கடமான தருணமாகவும்  இருந்தது. செய்வதறியாது, கைகளை பிசைந்து கொண்டிருந்தவனை பார்த்து சிறு புன்னகையுடன் கிருஷ்ணர் கூறினார் ..

” உன்னிடம் இருப்பதை கொண்டு திருப்த்தியாக வாழ பழகு. உன்னிடம் உள்ள ஆயுதத்தை உபயோகித்து சண்டையிட்டு வெற்றி காண முயற்சி செய். என்னுடைய ஆயுதம் உனக்கு மிக கனமானதாகும்.” 

இது அஸ்வத்தாமனுக்கு மட்டும் அல்ல நாம் அனைவருக்கும் நல்ல  பாடமே. 

அடுத்தவரின் பொருள் மீதோ அல்லது அடுத்தவர் வாழ்க்கை மீதோ ஆசை கொண்டு அதே நமக்கு வேண்டும் என்றோ அல்லது அதே வாழ்க்கை நாமும் வாழ வேண்டும் என்று நினைத்தால் முடிவு அஸ்வத்தாமனின் நிலைமை தான்  நமக்கும்.

இருப்பதைக்கொண்டு நலமுடன் வாழ்வோம்🙏

❤️முற்றும்❤️