பெண்ணின் அப்பா: வாங்கோ வாங்கோ உட்காருங்கோ. லச்சு மாப்பிள்ளை ஆத்துக்காரா எல்லாரும் வந்துட்டா பாரு.

மாப்பிள்ளையின் அப்பா: நமஸ்காரம் சுப்பிரமணியன். நான் பையனோட அப்பா கேசவன் இவ தான் என் ஆத்துக்காரி ராஜம் பையனோட அம்மா.

பெண்ணின் அப்பா: உங்க ஆத்துக்காரின்னா பையனோட அம்மா தானே…ஹா!ஹா!ஹா!

மாப்பிள்ளையின் அப்பா: அவசியம் அப்படி இருக்கணுமா என்ன? ஹா! ஹா! ஹா! பயந்துட்டேளோ!!

பெண்ணின் அப்பா: லச்சு நம்ம பொண்ணு சரசுவை அழைச்சுண்டு வந்துடு மா.

மாப்பிள்ளையின் அத்தை: முன்னெல்லாம் பொண்ணைப் பார்த்தா மூக்கும் முழியுமா நல்லா லட்சணமா இருக்கான்னு சொல்லுவா…ஆனா இப்போ என்னன்னு சொல்லறது? முகத்தில் பாதியும் மாஸ்க் மறைச்சுண்டிருக்கே!!!!

மாப்பிள்ளையின் அப்பா: பொண்ணு மாஸ்க்கும் முழியுமா லட்சணமா இருக்கான்னு சொல்லிண்டா போறது. காலத்துக்கு ஏத்தா மாதிரி டைலாக்கை மாத்திக்கோங்கோளேன்.. ஹா! ஹா! ஹா!

– பார்வதி நாராயணன்

மாப்பிள்ளை வீட்டார் : எங்களுக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. எங்க புள்ளைக்கும் பிடிச்சிருக்கு. நாம மத்ததைப் பேசலாமா?

பெண்ணின் அப்பா: எங்களுக்கு இருப்பது ஒரு புள்ள ஒரு பொண்ணு அதுனால எங்க பொண்ணுக்கு எல்லாம் நிறைவா செய்வோம். நகையா ஒரு….

மாப்பிள்ளை வீட்டார்: இருங்கோ இருங்கோ அதெல்லாம் உங்க இஷ்டம் அதைப் பத்தி எல்லாம் எங்களுக்கு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லை. ஆனா எங்க சைடுலேந்து ஒரே ஒரு எதிர்பார்ப்பு தான் அதை நீங்க செய்தா போதும்.

பெண் வீட்டார்: என்னது அது தயங்காம சொல்லுங்கோ.

மாப்பிள்ளை வீட்டார்: உங்க பொண்ணுக்கு லைஃப் லாங் தேவையான மாஸ்க், க்ளௌஸ், சானிடைசர், வருஷா வருஷம் கொரோனா தடுப்பூசி, அவா டிராவல் பண்ணும்போதெல்லாம் எடுக்கற பி.சி.ஆர் டெஸ்ட், ஆக்ஸிஜன் சிலிண்டர்ஸ், அப்படியே தொற்று ஏற்பட்டால் அதற்கான ஆஸ்பத்திரி, பெட், மற்றும் இதற செலவுகள்…..அதை எல்லாம் நீங்களே பார்த்துண்டா போதும். ஏன்னா எங்களால ஆஸ்பத்திரிக்கும் பெட்டுக்கும் அலைய முடியாது பாருங்கோ!!! என்ன சொல்லறேங்கள்? 

பெண் வீட்டார்: ஆங்!!!

– பார்வதி நாராயணன்

குடும்பங்களும், நண்பர்களும், இப்பொழுது வாட்ஸ்அப் குழுக்களாக அமைந்து செவ்வனே செயல்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. அம்மா வழி சொந்தங்கள், அப்பா வழி சொந்தங்கள் என்று பிள்ளைகளும், அவர் வழி உறவினர்கள், அவள் வழி உறவினர்கள் என்று தம்பதிகளும் மற்றும் அம்மா, அப்பா, மகன், மகள் தனித்தன்மையான ஒரு குடும்ப பெயருடன் ஒன்றும், பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், அலுவலக நண்பர்கள் என்றும் பலவகை குழுக்கள் உள்ளன எல்லாருடைய அலைபேசியிலும்.

அனைவரது வாட்ஸ்அபிலும் தனி நபரின் எண்(எந்த குழுவிலும் இல்லாதவர்) கடைசியில் தான் வரும் அதுவும் ஏறிப்போனா ஒரு பத்து இருக்கும் அவ்வளவுதான் மிதமுள்ள அனைத்து எண்களும் பல தரப்பட்ட குடும்ப பெயர்கள் கொண்ட குழுக்களில் அல்லது நண்பர்களின் குழுக்களில் ஏதேனும் ஒன்றில் அடங்கும். சில சமயம் ஒரே நபர் பல குழுக்களிலும் இருப்பர். எல்லாருடைய விஷயங்களும் தெறிஞ்சுக்க வேண்டாமா அதுக்கு தான். அப்படிப்பட்ட ஆசாமிகள் ஒரு குழுவில் நடப்பதை அடுத்த குழுவினர்களுக்கு கொண்டு சேர்க்கும் இறக்கை இல்லா பறவை போல அங்கும் இங்குமாக மெஸேஜ்களை தட்டிவிடும் நவீன நாரதராவார்கள்.

இந்த குழுக்களில் பல சுவாரசியமான உரையாடல்கள் நடைப்பெறுவதும் உண்டு. வம்புகள் உருவாவதும் உண்டு.ஒரு குடும்ப வாட்ஸ்அப் குழுவிலிருந்து வெளியேறினால் ஏதோ குடும்பத்தை விட்டே வெளியேறியது போல ஒரு தாக்கத்தை கொடுத்து விடுவார் அந்த குழுவின் நிர்வாகி.

எவரேனும் ஒருவருக்கு மற்றொரு குழு உறுப்பினர் மீது மனஸ்தாபமோ, கோவமோ, வருத்தமோ, ஏன் வயித்தெரிச்சலாக கூட இருக்கலாம்..அப்படி இருக்கும் பட்சத்தில் பல தத்துவங்கள் ..யாரோ ஒரு புண்ணியவான் எழுதியதோ / படமாக்கப்பட்டதோ இணையதளத்தில் சுதந்திரமாக பறந்துக்கொண்டிருபதில் ஒன்றை அவர்கள் மனநிலைக்கேற்ப பகிர்ந்து எவருக்காக போடப்பட்டதோ அவரின் ரியாக்ஷனுக்காக… தூண்டில் போட்டு மீன் எப்போ வந்து மாட்டும் என்று மீன்பிடிப்பவர் தூண்டிலை அடிக்கடி தூக்கிப்பார்ப்பது போல் அலைபேசியை எடுத்து எடுத்து பார்த்துக்கொண்டே காத்திருப்பதில் அவர்களுக்கு தனி சுகம் போலும். முன்பெல்லாம் ஏதாவது விஷேஷங்களில் ஒன்று கூடும்போது நடைபெறும் அரட்டை அதனால் விளையும் வம்புகள் இப்பொழுது அலைபேசியில் நடைபெற்றுவருகிறது.

எந்த நபருக்காக போடப்பட்டதோ அவர் அந்த தூண்டிலில் மாட்டினால் அன்று முழுவதும் குழுவில் தீபாவளி தான். அப்படியே அவர் கழுவுற மீனில் நழுவுற மீனாட்டம் இருந்தாலும்….சில நமத்து போச்சுன்னு எண்ணிக்கொண்டிருக்கும் ஊசி பட்டாசுகள் கூட மெதுவா பட் பட் என்று வெடிக்க ஆரம்பிக்கும் அதனுடன் ஓல வெடி மெல்ல சேர பின் லக்ஷ்மி வெடிகள் சரங்களாக மெஸேஜுகளைக் கோர்க்க… கடைசியில் இந்த சப்தத்தை எல்லாம் அடங்க செய்ய …நம்ம மீன்… ஆட்டம் பாம் போல ஒரு பெரிய மெஸேஜை தட்டிவிட…அதில் ஊசி வெடிகளும், ஓல வெடிகளும் தெறித்து ஓட, சமந்தமே இல்லாத சங்கு சக்கரங்களும், புஸ்வானங்களும் சரசரக்க, சில ராக்கெட்டுகள் குழுவிலிருந்து வெளியேற. தொட்டால் சுட்டு பொசுக்கிவிடும் அளவிற்கு சுட சுட குழு இருக்கும் போது மெதுவாக ஒரு ரோல் கேப் உள்ளேன் ஐயா என்று ரோலாகி வந்து முதலாவது மெஸேஜிலிருந்து பதிலளிக்க.. மீண்டும் அடுத்த ரவுண்டு தொடங்கும். அதில் சம்மந்தமே இல்லாத சில வெளிநாட்டு வெடிகள் உள்நுழைய அனைத்து சூடான உள்நாட்டு வெடிகளும் அவைகள் பக்கம் திரும்ப திரியைக்காணோம் காகிதத்தைக்காணோமென்று வெளிநாட்டு வெடிகளும் குழுவை விட்டு வெளியேற, குழுவின் சமாதானப் புறாக்களான பென்ஸில், மத்தாப்பு தனி தனியாக மெஸேஜ் செய்து தூது போக வெளியேரியவர்கள் அத்துனைபேரும் மீண்டும் குழுவில் சேர்க்கப்படுவர். காரணங்கள் வேறுப்பட்டாலும் இது பெரும்பாலும் எல்லா குழுக்களிலும் நடக்கும் ஒரு அத்தியாயம் ஆகும்.

இதில் உன்னித்து பார்த்தோமேயானால் மீனவன் ஒரே ஒரு தத்துவத்தை கவிதையாகவோ/ மெஸேஜாகவோ/ வீடியோவாகவோ தட்டிவிட்டுட்டு கம்முன்னு தீபாவளி வாணவேடிக்கையை ரசித்துக்கொண்டு இருப்பார். மீனும் தவிர்க்க முயன்று பின் சலசலப்பை அடக்க ஒரே ஒரு மெஸேஜை தட்டிவிட்டுட்டு மீதி எல்லாருடை மெஸேஜையும் படித்தவண்ணமே இருக்கும். இதை குழு உறுப்பினர்களில் சிலர் உணர்ந்து எல்லா நேரங்களிலும் புஸ்ஸான புஸ்வானம் போல பார்வையாளர்களாக மட்டுமே இருப்பார்கள். இன்னும் சிலர் சரவெடியில் முதலிலும் இறுதியிலும் மட்டும் வெடிக்ககூடிய ஊசிவெடிப்போல் காலை வணக்கம் மற்றும் இரவு வணக்கம் மட்டும் சொல்லிக் கொண்டே யார் யார் எப்படி வெடிப்பார்கள், ஏன் வெடிப்பார்கள், எதற்கு வெடிப்பார்கள் என்பதை எல்லாம் உலகநாயகனின் மகளிர்மட்டும் திரைப்படத்தில் வரும் தாத்தாப்போல அனைத்தையும் கிரகித்துக்கொண்டு ஊதுவத்தியாக சரியான நேரத்தில் சரியான பட்டாசை பத்தவைத்துவிடுவார்கள்.

ஆக இந்த தீபாவளி இவ்வளவு சிறப்பாக வாணவேடிக்கைகளுடன் நடந்து முடிந்ததற்கு காரணகர்த்தா யார்?

தூண்டிலிட்டுக்காத்திருந்த மீனவனா? தூண்டிலில் இருந்து நழுவப்பார்த்து பின் தானே போய் சிக்கிக்கொண்ட மீனா? இல்லை தேவையில்லாமல் வெடித்த இதர பட்டாசுகளா?

இதுபோன்ற  மீனவர்கள் வாட்ஸ்அபிலும், வாழ்க்கையிலும், இணையதளத்திலும் அவரவர் மனநிலைக்கேற்ப பலவித மெஸேஜை தூண்டிலாக இட்டு மீன்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். நாம் மீனாக தூண்டிலில் மாட்டாமலும் அனாவசியமாக இதர பட்டாசுகளை போல தேவையில்லாத இடங்களிலும் நேரங்களிலும் வெடிக்காமலும் இருந்தால் பல பிரச்சனைகளை மிக சுலபமாக கடந்து மன அமைதியுடன் வாழலாம்.

ஒரே கல்லூரியில் படித்த தோழிகள் ஒரு வாட்ஸ்அப் குழு அமைத்து அதற்கு பி.ஏ ’98 என பெயர் சூட்டினர். அதில் ஆரம்பத்தில் அவர்கள் பல விஷயங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார்கள். நாட்கள் போக போக குழு அமைதி பூங்காவனமாக மாறியது. யாரும் எதுவும் பகிந்துக் கொள்ளவில்லை.

இப்படி அமைதி நிலவிக்கொண்டிருந்த நேரத்தில் ஒருத்தி அவர்கள் கல்லூரியில் அவர்களுடன் படித்த ஐஸ்வர்யாவை  குழுவில் இணைத்தாள். மீண்டும் குழு விருவிருப்பானது. அனைவரும் ஒருவரையொருவர் அறிமுகம் செய்வதில் தொடங்கி அவர்கள் இன்று என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் வரை அனைத்தும் பகிரந்துக்கொள்ளப்பட்டது. பழைய நினைவுகளில் சில மாதம் ஓடியது பின் மீண்டும் குழு அமைதியானது.

இவ்வாறு புது தோழிகள் சேர்க்கப்படும் போதெல்லாம் குழு விழித்துக்கொள்ளும். குழுவினரும் சோம்பல் முறித்துக்கொண்டு ஒரு ஹாயில் ஆரம்பித்து விசாரிப்புகளும் புகைப்படங்களும் சரமாரியாக பதிப்பிக்கப்படும்  பின் மீண்டும் கும்பகர்ணன் போல நீண்ட கால உறக்கத்தில் ஆழ்ந்துவிடும். 

குழுவில் யாராவது அந்த குழுவில் இல்லாத பழைய தோழியை இணைக்கும் பொழுது யார் ? எவர் ? என்ற விவரங்களை முன்னுரையாக கொடுப்பது வாட்ஸ்அப் குழுவின் சம்பிரதாயம். இது பல குழுக்களில் இணைந்துள்ள நாம் அனைவரும் அறிந்த சடங்காகும். இந்த சடங்கை கடைப்பிடிக்காமல் ஒருவரை நாம் இணைத்துவிட்டோமே என்றால் பாவம் அந்த புது நபர்

 “ஹாய் நான் தான் வள்ளி” 

என தொடங்கி 

என்ன ஞாபகம் இருக்கா?

 என தன்னைத்தானே அறிமுகம் செய்துக்கொள்ள வேண்டிவரும். மேலும் அவர்கள் கல்லூரி ஃபேர்வெலில்  கடைசியாக பார்த்திருப்பார்கள் சில பேருக்கு பெயரைக் கேட்டாலே யார் என்று விளங்கி விடும் சகஜமாக உறையாட தொடங்கி விடுவார்கள் ஆனால் பலருக்கு யாரென்று ஞாபகம் இருக்காது அதனால் 

யார்? எந்த செக்ஷன் ? எந்த பென்ச்? எந்த பஸ்ஸில் கல்லூரிக்கு வருவாய்? 

என பல கேள்விகள் கேட்டு அதற்கான விடையை வைத்து இன்னார் என யூகிக்க முயல்வார்கள்.

இவ்வாறு இந்த பி‌.ஏ’98 குழுவில் பூமிகா எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஒருவரை முன்னுரை ஏதுமின்றி இணைத்தாள்….அவரும் சில நேரம் பூமிகா இன்ட்ரோ செய்வதற்காக  பொருத்திருந்து பின் அவரே ஆரம்பித்தார்…

ஹாய் எவ்விரிஒன் ஹவ் ஆர் யூ ஆல்? ஹோப் யூ ஆல் ஆர் சேஃப்.

லதா: ஹாய் வெல்க்கம். மே ஐ நோ யுவர் நேம்.

வனஜா: ஹாய் உன் பொரோஃபைல் போட்டோவ பார்த்தா…. நீ எங்க செக்ஷன்ல தான் இருந்தனு நினைக்கிறேன்? இஸ் யுவர் நேம் வள்ளி?

கிரிஜா: ஹாய் நீ என்னோட பஸ்ஸில் தானே வருவ?

ரமா: ஹாய் யூ வேர் தி ஒன் ஹூ பிரிங் எக் ரைஸ் ? வாவ் அதோட வாசம் இன்னும் இருக்குப்பா..

பிரியங்கா: ஹே ரமா இது அவ இல்லடி அது நம்ம ரோஸி. இவ நாமகூட  ஐஸ்கிரீம் சாப்பிட வந்துட்டு விலைய பார்த்ததும் தண்ணியை குடிச்சிட்டு வந்தாளே அவ தான்…ஆனா ….பேரு மட்டும் ஞாபகம் வர மாட்டேங்குது…

 மது: ஹேய் பிரி ….தட் இஸ் மீனு …மா..இவ இல்ல. இவள பார்த்தா மாதிரி இருக்கு ஆனா நீ சொல்லர மாதிரி பேரு மட்டும் ஞாபகம் இல்லமா.

வள்ளி: ஹே யாருப்பா ஆட் பண்ணினா ?

லல்லு: நம்ம பூமி தான்.

கலையரசி: ப்ளீஸ்ப்பா ஆட் பண்ணும்போது இன்ட்ரோவும் குடுங்கப்பா…

பார்கவி: அதுதானே…. லல்லு இவள நம்ம லிட் …கிலாஸ்ல பார்த்திருக்கோம்னு நினைக்கிறேன்…

பிரஸீ: எனக்கும் நல்லா பழக்கமானவ மாதிரி தான் இருக்கு. 

மாதவி: ஹே! நியூ கம்மர்… வை டோன்ட் யூ இன்ட்ரோ யுவர் செல்ஃப்? நாங்க எல்லாரும் இப்படி கெஸ்ஸிங் கேம் விளையாடாமா இருப்போம்ல…

மைதிலி: யாருப்பா அந்த மர்ம நபர் நம்ம குரூப்ல…ஏய் பூமி சொல்லேன்டி…

ரம்பா: ரொம்ப நாளா தூங்கிட்டு இருந்த நம்ம குரூப் முழிச்சுடுச்சுனு சந்தோஷப்படரதா இல்ல “யார் நீ” னு கேட்டுட்டே இருக்கறதா…

மனோன்மணி: ஏன்மா புதுசா இணைந்த புண்ணியவதி… பூமி தான் ஏதோ பிஸியா இருக்காப்போல நீயாவது உன்னைப்பத்தி சொல்லலாம்ல…

பூமிகா: ஹலோ கேர்ள்ஸ் என்னப்பா இது?? எல்லாருமா மறந்துட்டிங்க? நான் முன்னுரை கொடுத்திருக்கவேண்டும் அனைவரும் மன்னிக்கவும். 

நான் ஒரு ஹாய் சொன்னா எப்பவாவது உடனே பதில் சொல்லிருக்கீங்களா ? இன்னிக்குனு ஒரு அஞ்சு நிமிஷத்துல இவ்வளவு மெஸேஜஸ்ஸா!!!! 

நான் ஆட் பண்ணியது நம்ம இங்கிலீஷ் பொரொஃபஸர் மிஸ் லில்லி. அம் எக்ஸ்டிரீம்லி சாரி மேம். நான் இன்ட்ரோ கொடுக்க கொஞ்சம் லேட் ஆனது இவ்வளோ விபரீதமாகும்னு நினைக்கலை. ஸோ சாரி. 

என்ற பூமிகா வின் மெஸேஜ்க்கு பிறகு சற்று அமைதி நிலவியது. பின் குழுவில் ஒரே சாரி மெஸேஜஸாக பொழிந்தது.  அதற்கு அவர்கள் லில்லி மேம் “இட்ஸ் ஓகே” என்று  பதிலளித்தும் மீண்டும் சாரி என்று பலர் கூற அதற்கு அவர் பதில்….

லில்லி மேம்: ஹாய் கேர்ள்ஸ் ஏன் எல்லாரும் சாரியை மாரியாய் பொழிகிறீர்கள்? நீங்கள் எல்லோரும் நான் பார்த்து வளர்ந்த என் பிள்ளைகள். உங்கள் அனைவரையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்க்கை எனும்  ஓடு களத்தில் நீங்கள்  அனைவரும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறீர்கள் ஆனால்  எனது வாழ்க்கை நிதானமாகிவிட்டது. 

மறதி என்பது எல்லோருக்கும் வரக்கூடியது தான் அதில் எந்த தவறும் இல்லை ஆனால் நீங்கள் இதிலுள்ள முகியமான பாடத்தை கவனிக்காமல் விட நான் அனுமதிக்க மாட்டேன்.

என்னடா இந்த மேம் இத்தனை வருஷத்துக்கப்புறமும் க்ளாஸ் எடுக்க வந்துட்டாங்கனு நீங்க நினைத்தாலும் பரவாயில்லை, உங்களுக்கு இது என்றாவது உதவாமல் போகாது. வாழ்வில் ……

“எது நடந்தாலும் வேய்ட் ஃபார் அ வைல். டு நாட் ஜம்ப் டூ ரெஸ்பான்ட் ஆர் ரியாக்ட்.”

தினமும் ஏதாவது மெஸேஜஸ் பகிர்ந்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் விஷ் செய்துக் கொள்ளுங்கள்.  ஓகே கேர்ள்ஸ்👍  லவ் யூ ஆல். இதுதான் எனது அலைபேசி எண் அனைவரும் சேமித்து வைத்துக்கொள்ளவும். 

நானும் உங்கள் அனைவருடனும் தொடர்பில் இருப்பேன். எனது நம்பர் உங்கள் அனைவரிடமும் இருப்பதால் உங்களுக்கு எப்போ வேண்டுமானாலும் என்னை அழைத்து உறையாடலாம். சிநேகிதிகளான உங்களுக்குள் டிஸ்கஷன்ஸ் நிறைய இருக்கும் ஸோ ஐ திங்க் ஐ ஷுட் லீவ் திஸ் குரூப்.  நோ ஹார்டு ஃபீலிங்க்ஸ். இட் வாஸ் ஸோ நைஸ் டு ரீட் ஆல் யுவர் மெஸேஜஸ். பை ஆல். டேக் கேர் அன்ட் பி சேஃப் ஆல் ஆஃப் யூ. 

என்று கூறி லில்லி டிச்சர் குழுவை விட்டு வெளியேற மீண்டும் அமைதி நிலவியது..‌. ஆனால் குழுவில் மாற்றங்கள் சில நேர்ந்தது. அன்றிலிருந்து இன்றுவரை அவர்கள் குழு எந்த நாளும் ஒரு மெஸேஜ் கூட இல்லாமல் இருந்ததே இல்லை. குழு நிதானமாக செயல்பட தொடங்கியது. பல கும்பகர்ணிகளை தட்டி எழுப்பி செயல்பட வைத்த லில்லி மேமுடன் “வீ லவ் லில்லி மேம்” என மற்றுமொரு குழு ஆரம்பிக்கப்பட்டது.

❤️முற்றும்❤️