இந்த ரதியாம்பிகாவுக்காகவே பிறந்து வளர்ந்து வந்து என்னை பிடித்திருக்கிறது என்று சொல்வதற்கு முன் தன்னைப் பிடித்திருக்கிறதா என்று எனக்கு முன்னுரிமை கொடுத்த கேசவனை திருமணம் புரிந்து என் புகுந்த வீட்டிற்கு சென்றேன். அங்கே அனைவருடனும் நன்றாக பழகினேன். அவர்கள் அனைவருடனும் உடனே ஒரு இணைப்பு ஏற்பட்டது. மகிழச்சியாக என் திருமண வாழ்க்கை சென்றுக் கொண்டிருந்தது. எங்களுக்கு இரண்டு இரட்டையர்கள் என நான்கு குழந்தைகள் இரண்டு வருட வித்தியாசத்தில் பிறந்தனர். அவர்களுக்கு ராகேஷ், ராஜேஷ், ரம்யா, ராதா என்று பெயரிட்டோம். வருடங்கள் உருண்டோடின. வசதிகள் பெருகியது. குழந்தைகள் பெரியவர்களானார்கள். ஆளுக்கொரு கார், பெரிய பங்களா, வருடத்தில் ஒரு மாதம் வெளிநாட்டுச் சுற்றுலா என்று மிகவும் அற்புதமாக சென்றுக் கொண்டிருந்தது எங்களின் வாழ்க்கை. மூத்த இரட்டையர்கள் அமெரிக்காவில் பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியான கூகுளில் பணியாற்றுகிறார்கள். இரண்டாவது பெண் இரட்டையர்கள் லண்டனில் அவரவர் விருப்பத்திற்கேற்ப ரம்யா ஆடிட்டராகவும், ராதா இன்டிப்பென்டென்ட் ம்யூசிஷியனாகவும் பணி புரிந்துக் கொண்டிருக்கிறார்கள். அவரவர் வாழ்க்கையில் அவரவர் நின்று பேசக்கூட நேரமின்றி வேகமாக ஓடிக் கொண்டிருந்தனர்.
நானும் ஆரம்பத்தில் நிற்க நேரமின்றி எனது பிள்ளைகள், அவர்களின் வகுப்பு பாடங்கள், பாட்டுக் க்ளாஸ், கராத்தே க்ளாஸ் என்று பிள்ளைகளை கொண்டு விடுதல் கூட்டிக் கொண்டு வருதல் என தினம் தினம் ஓட்டத்திலேயே எனது பாதி வாழ்க்கையும் ஓடியது. இப்போது அனைவரும் நன்றாக அவரவர் வாழ்க்கையில் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் செட்டிலாகி விட்டனர். நால்வருக்கும் திருமணமாகி நான்கு பேரப்பிள்ளைகளும் உள்ளனர். ஆறு மாதங்கள் அமெரிக்காவில் இரண்டு மகன்களுடனும் இரண்டு பேரப்பிள்ளைகளுடனும் மூன்று மாதங்கள் லண்டனில் இரண்டு மகள்களுடனும் இரண்டு பேரப்பிள்ளைகளுடனும் மூன்று மாதங்கள் இந்தியாவில் தனிக்குடித்தனம் என்று எங்கள் இருவரின் வாழ்க்கை நகர்ந்தது.
இப்படியே சென்றுக் கொண்டிருந்த எங்களது வாழ்க்கையில் எங்களுக்கு சதாபிஷேகம் செய்து அழகுப் பார்க்க வேண்டி எங்களது பிள்ளைகள் அனைவரும் இந்தியா வந்திருந்தனர். மிகவும் கோலாகலமாக நடந்தேறியது எங்களின் சதாபிஷேகம். அன்று முழுவதும் நானும் கேசவனும் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருந்தோம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகிவிடும் என்பதற்கு ஏற்றார் போல அன்றிரவு உறக்கத்திலேயே என்னைத் தனியாக விட்டு விட்டு இறைவனடி சேர்ந்தார் கேசவன். ஒரு நாள் முன் மகிழ்ச்சி வெள்ளத்திலிருந்த வீடு அடுத்த நாளே துக்கத்தில் ஆழ்ந்திருந்தது. வாழ்க்கை என்றால் நம்மோடு எப்போதும் இருப்பவர்கள் நம்முடனே கடைசி வரை வருவார்கள் என்ற நினைப்பில் இருந்த எனக்கு கேசவனின் மரணம் உண்மையை புரியவைத்தது. எனது வாழ்க்கையே வெருச்சோடிப் போனது போல உணர்ந்தேன். பிள்ளைகள் அவர்களின் கடமைகளை செய்து முடித்ததும் அவரவர் நாட்டிற்கு செல்ல தயாராகினர். அதற்கு முன்பு என்னையும் அவர்களுடன் வரும்படி வற்புறுத்தினர். ஆனால் நான் மறுத்துவிட்டேன். அப்போது எனது இளைய மகன் ராஜேஷ் என்னைப் பார்த்து
“அம்மா நீ தனியா இங்கே இருந்து என்ன பண்ணப் போற? பேசாம கிளம்புமா. உனக்கு யார் கூட இருக்கணுமோ அவங்க கூடவே போய் இருந்துக்கோமா. நீ எங்க இருந்தாலும் நாங்க எல்லாரும் உன்னை அடிக்கடி வந்து பார்த்துக்கறோம் மா. ப்ளீஸ் எங்க கூட கிளம்புமா”
“இல்ல கண்ணா நீங்க எல்லாரும் கிளம்பிக்கோங்கப்பா உங்களுக்கெல்லாம் வேலையிருக்கு, பிள்ளைகளுக்கு ஸ்கூல் இருக்கு. என்னை மட்டும் இங்கேயே விட்டுடங்கப்பா. நானும் கேசவனுமா சென்று வந்த இடங்களின் இந்த ஃபோட்டோஸ், அவரும் நானுமா சேகரித்து வைத்திருக்கும் இந்த க்ராக்கரிஸ், இதோ இதைப் பாரேன் இது கேசவன் ரொம்ப ஆசைப்பட்டு சுவிட்சர்லாந்தில் வாங்கின பெல், அந்த சேர் இந்தோனேசியா ல ஆர்டர் பண்ணி வாங்கினார். இப்படி இந்த வீட்டுல என் கேசவனோட நினைவுகளோட நான் இருந்துக்கறேன்ப்பா. நீங்க எல்லாரும் கிளம்பி பத்திரமா ஊருக்குப் போயிட்டு வாங்க சரியா. சாரி கண்ணா. அம்மாவால இந்த தடவை உங்களுக்கெல்லாம் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச சுவீட்ஸ் அன்ட் ஸ்னாக்ஸ் எல்லாம் பண்ணித்தர முடியாம போயிடிச்சி.”
என்று நான் சொன்னதும் ராகேஷ் என்னைப் இறுக்கி அணைத்துக் கொண்டு
“அம்மா என்ன பேசற நீ? இப்பவும் நீ எங்களைப் பத்தி தான் நினைக்குற… பேசுற…நாங்க உன்னை நினைச்சுத் தான் கவலைப்படறோம் மா. நீ எப்படி தனியா இங்கே…அதெல்லாம் சரி வராதுமா. எங்களால நிம்மதியா அங்க எங்க வேலையைப் பார்க்க முடியாது. புரிஞ்சுக்கோயேன் ப்ளீஸ்.”
“அதெல்லாம் எந்த கவலையும் உங்க யாருக்குமே வேண்டாம்ப்பா. நானும் கேசவனுமா இங்கே பக்கத்துல இருக்குற ஒரு ஓல்ட் ஏஜ் ஹோம் ல எங்க பெயர்களைப் பதிவு செய்து வச்சிருந்தோம். அது அவருக்கு தேவைப்படலை ஆனா எனக்குத் தேவைப்படும் போது உங்ககிட்ட எல்லாம் சொல்லிட்டு அங்க போறேன். நீங்க எனக்கு அடிக்கடி ஃபோன் போட்டுப் பேசுங்கப்பா அது போதும். அதுவுமில்லாம அதே கேம்பஸ்லயே ஒரு ஆர்ஃபனேஜ் இருக்கு அங்கே நானும் உங்க அப்பாவும் அடிக்கடிப் போய் அந்த பிஞ்சுக் குழந்தைகளுக்கு நிறைய கிஃப்ட்ஸ் மற்றும் சாப்பாடு எல்லாம் குடுத்து அவங்களோட ஒரு வாரம் டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு வந்துக்கிட்டிருந்தோம். அதை நான் தொடர்ந்து செய்யணும்னு நினைக்கிறேன். வயசாயிடுச்சு இல்லப்பா…நீங்க சொல்லறா மாதிரி எல்லாம் இனி தனியா பயணம் பண்ணறதுங்கறது கொஞ்சம் கஷ்டம் தான். புரிஞ்சுக்கோங்க.”
அப்போது குறுக்கிட்டு பேசிய என் இளைய மருமகள் விசித்ரா
“அத்தை நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே”
“என்ன விசித்ரா? நான் என்னைக்கு நீ சொன்னதை தப்பா எடுத்துக்கிட்டிருக்கேன்! நீயும் என் மகள் தானே அதனால் நீ எதையுமே தப்பா கேட்டதுமில்லை இனி கேட்க போவதுமில்லைன்னு எனக்கு நல்லா தெரியும் மா. அதனால தயங்காம கேளுமா.”
“இவ்வளவு பெரிய வீடு முழுக்க பல வகையான கைவினைப் பொருட்கள், கலைப் பொருட்கள், அப்படி இப்படினு இவ்வளவு சாமான்களை சேர்த்து வச்சிருக்கீங்களே இதை எல்லாம் எப்படி துடைச்சு பார்த்துக்கப் போறீங்க?”
“அதுக்கு தான் வேலையாட்கள் இருக்காங்களேமா. அவங்க பார்த்துப்பாங்க. ம்…இருங்க உங்களுக்கு சேரவேண்டியதை தந்திடறேன்”
என்று எனது அறைக்குச் சென்று எங்கள் லாக்ரைத் திறந்தேன். அதிலிருந்த எனது நகைகளை எல்லாம் எடுத்து வந்து என் மகன்கள் மற்றும் மகள்களுக்கும் மருமகள்களுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் என பகிர்ந்துக் கொடுத்தேன். அப்போது என் மகள் ரம்யா என்னைப் பார்த்து
“அம்மா இவ்வளவு நாள் நீ லாக்ர்ல பூட்டி வைத்திருந்ததை எல்லாம் எங்க தலையில கட்டிட்ட இல்ல…இப்போ நாங்க எங்க பாங்க் லாக்ர்ல இதை எல்லாம் வைச்சுட்டு ஊருக்குப் போகப் போறோம். இதுக்காகவா விழுந்து விழுந்து இவ்வளவு நகைகளை சேர்த்த?”
“என்ன பண்ண ரம்யா நானும் பெண் தானே!”
“அம்மா இதெல்லாம் நீ ஆசை ஆசையா பார்த்துப் பார்த்து வாங்கினது. எங்களுக்கு இதெல்லாம் வேண்டாம். இந்தா நீயே வச்சுக்கோ. உனக்கு இதை வச்சு என்ன பண்ணணும்னு தோணுதோ பண்ணிக்கோ. எங்களுக்கு தரவேண்டியதனைத்தையும் நீயும் அப்பாவும் நிறையவே தந்திருக்கீங்க எங்களுக்கு அது போதும் மா. இந்தா புடி…இல்ல…குடு… நானே உன் லாக்ர்ல வச்சுட்டு வரேன். நீ மறுபடியும் மாடிப்படி ஏறி போக வேண்டாம். என்னப்பா சொல்லுறீங்க நீங்க எல்லாரும்?”
“எஸ் ரம்யா நீ சொல்லறது தான் சரி. அம்மா நீயும் அப்பாவும் எங்களுக்கு கல்வி, அன்பு, பாசம், குடும்பம்ங்கற நிரந்தரமான சொத்துக்களைக் கொடுத்திருக்கீங்க அதுவே எங்களுக்குப் போதும்.”
என்று ராகேஷும்
“ஆமாம் மா அண்ணணும் ரம்யாவும் சொல்லறது தான் சரி. எங்களுக்கு எதுவும் வேண்டாம் மா.”
என்று ராஜேஷும்
“எஸ் மா தே போத் ஆர் வெரி கரெக்ட். எனக்கும் வேண்டாம் மா. எங்களுக்கு நீ ஆரோக்கியமா, சந்தோஷமா, நிம்மதியா இருந்தாலே போதும் மா.”
என்று ராதாவும் கூறியதைக் கேட்டதும் என் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. அதைத் துடைக்க எட்டுக் கரங்கள் ஓடி வந்தன. அன்று என் மனம் நிறைந்திருந்தது. ஏனெனில் எங்கள் பிள்ளைகளை நாங்கள் சரியாக வளர்த்துள்ளோம் என்று பல தருணங்களில் உணர்ந்திருந்தாலும் அன்று சற்று பெருமிதமாகவும் இருந்ததால் மனம் பூரித்தது. ஆனால் அதைப் பகிர்ந்துக் கொள்ள கேசவனில்லையே என்ற வருத்தம் என் மனதைப் பிசைந்தது. பிள்ளைகள் அவரவர் ஊர்களுக்குச் சென்றனர். நான் ஒரு ஆறு மாதங்கள் அங்கேயே என் கேசவனின் நினைவுகளுடனும், பேரன் பேத்திகளுடன் வீடியோ கால்களும் என்று சுற்றி சுற்றி வந்தேன். ஊருக்கு செல்வதற்கு முன் ரம்யா என்னிடம் சொன்னது என் மனதின் ஓரத்தில் இருந்திருக்கிறது போலும். ஓர் நாள் அந்த குழந்தைகள் காப்பகத்திற்கு சென்றேன். அங்கே ஒரு குழந்தை என்னிடம் வந்து
“பாட்டி நீங்க உங்க வீட்டுல நிறைய தோடு வச்சிருக்கீங்களா?”
“ஏம்மா கேக்கற?”
“இல்ல பாட்டி நீங்க ஒவ்வொரு தடவை வரும் போதும் ஒவ்வொரு கலர்ல தோடு போட்டுட்டு வர்றீங்களே அது தான் கேட்டேன்”
அப்போது என் மனதின் ஓரத்திலிருந்த
என் ரம்யாவின் பேச்சு அன்று என் மனதில் மீண்டும் உதிக்கச் செய்தது. எதற்காக நான் இவ்வளவு பொருட்களை சேர்த்து வைத்தேன்? யாருக்காக இவைகளை வாங்கி இப்படி அழகாக அடுக்கி வைத்தேன்? இவைகளுக்காக எவ்வளவு செலவு செய்துள்ளேன்? இதற்கு பதிலாக இன்னும் அந்த ஆசிரமத்திலிருக்கும் ஒரு இருபது குழந்தைகளைப் படிக்க வைத்திருக்கலாமே! என்ற எண்ணங்கள் என்னை அன்று முழுவதும் தூங்க விடாது படுத்தி எடுத்ததில் நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.
மறுநாள் எழுந்ததும் என் பிள்ளைகளை கான்பரன்ஸ் காலில் வரச்சொல்லி அதைச் சொன்னேன். அதைக் கேட்டதும் நால்வரும்
“அம்மா ஏன்மா? இங்க வாயேன் மா.”
“அம்மா நீ ஏன் அந்த ஓல்டேஜ் ஹோம்ல போய் இருக்கணும்? நாங்க எல்லாரும் உனக்கு இருக்கோமே மா”
“அம்மா திஸ் இஸ் டூ மச். எதுக்காக இப்போ நீ இப்படி ஒரு டிஸிஷன் எடுத்திருக்க?”
“அம்மா உன்னைத் தாங்கறதுக்கு நாங்க நாலு பேர் காத்திருக்கும் போது ஏன் மா நீ முதியோர் இல்லம் போறேன்னு சொல்லற?”
என்று நாலவரும் என்னிடம் மாறி மாறி கேள்விக் கேட்டனர். அவர்கள் அனைவரும் பேசி முடிக்கும் வரை காத்திருந்த பின்
“எல்லாரும் பேசி முடிச்சாச்சா? இப்போ நான் பேசலாமா? உங்க எல்லாரோட தவிப்பும் அக்கறையும் எனக்கு நல்லா புரியுது. ஆனால் ப்ராக்டிக்கலா யோசிச்சுப் பாருங்க. நீங்க எல்லாருமே வேலைக்குப் போறீங்க. உங்க பசங்க ஸ்கூல், கிளாஸ்ன்னு போறாங்க. நீங்க உங்களுக்குள்ளேயே உட்கார்ந்து பேச நேரமில்லாமல் ஓடிக்கிட்டிருக்கீங்க… இதுல நான் வந்து அங்க உட்கார்ந்துக்கிட்டு என்ன பண்ணப்போறேன்? அதுவுமில்லாம நீங்களும் சற்று நின்னு நிதானமா யோசிங்க…எதுக்காக? எதை சாதிக்க இப்படி குடும்பம் பிள்ளைகள் எல்லாரையும் விட்டுட்டு இப்படி ஓடிக்கிட்டிருக்கீங்கன்னு…பசங்க வளர்ந்துட்டா அப்புறம் அவங்க …அவங்க வாழ்க்கை, அவங்க ஃப்ரெண்ட்ஸ் ன்னு அவங்க உலகமே வேற ஒண்ணா மாறிடும். நீங்க அவங்களோட இருக்க வேண்டிய தருணங்களில் இப்படி ஓடிக்கிட்டே இருந்தீங்கன்னா அப்புறம் உங்களுக்குன்னு நேரம் கிடைக்கும் போது அவங்க உங்ககிட்ட இருக்க மாட்டாங்க. அதுனால முடிஞ்ச வரை உங்களோட இந்த ஓட்டத்துக்கு இடையில உங்க பசங்களோடவும் டைம் ஸ்பென்ட் பண்ணுங்க. அது தான் உங்க வயசான காலத்துல உங்க கூடவே வரப்போற பசுமையான நினைவுகளாயிருக்கும். அது தான் உங்களுக்கு அந்த வயதில் நீங்கள் நகர்ந்துச் செல்ல டானிக்காக இருக்கும். வாழ்க்கையை ஓடிப்பார்க்க நினைக்காதீங்க கொஞ்சம் நிதானித்துக் கொண்டு நடந்து தான் பாருங்களேன் அப்போ அதிலிருக்கும் அமைதி, அழகு, நிம்மதி, சந்தோஷம் எல்லாம் புரிஞ்சுக்கலாம். நானும் உங்க அப்பாவும் அப்படித் தான் வாழ்ந்திருக்கிறோம் அதுனால தான் இப்போ அந்த பழைய நினைவுகள் என்னை நகர்த்திக்கிட்டிருக்கு. அதுவே எனக்குப் போதும் கண்ணுகளா. அதுவுமில்லாம அங்க இருக்குற பெத்தவங்க இல்லாத அந்த குழந்தைகளுக்கு படிப்பு, கைவேலை, எல்லாம் கத்துக் கொடுத்து அவங்களையும் உங்களைப் போல சிறந்த பிள்ளைகளா உருவாக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு. நீங்க ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டோ இல்ல பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டோ எது புக் பண்ணினாலும் இனி என்னால அவ்வளவு தூரம் பிரயாணம், இந்த நேரம் மாற்றம் எல்லாத்துக்கும் அட்ஜஸ்ட் செய்துக்கொள்ள முடியாதுப்பா...என் உடலும் அதுக்கு ஒத்துழைக்காது. இப்போ உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நம்புறேன். உங்களுக்கு என்னைப் பார்க்க வேண்டுமா என்னுடன் இருக்க வேண்டுமா வாங்க சந்தோஷமா இருக்கலாம். என்ன சொல்லுறீங்க?”
கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. ராகேஷ் பேசி அந்த நிசப்தத்தை உடைத்தெறிந்தான்
“அம்மா நீ சொல்லறது எல்லாமே கரெக்ட் தான் மா. சரி நீ அங்கேயே போய் இருந்துக்கோ. நாங்க மாறி மாறி வந்து உன்னைப் பார்த்துக்கறோம். அப்படி நீ அங்கப் போனேன்னா இப்ப இருக்குற வீடு அதிலுள்ள பொருட்கள் எல்லாத்தையும் என்ன பண்ணப்போற?”
“ம்…இது நல்ல கேள்வி. அதை அப்படியே வைக்கறேன். நீங்க வந்து ஏதாவது பண்ணிக்கோங்க.”
“இல்லமா…எனக்கு அதுக்கெல்லாம் டைமில்ல…”
“எங்களுக்கும் நேரமில்லை மா.”
“அப்படின்னா நான் இதை எல்லாம் வித்துடவா?”
“அம்மா அதெல்லாம் நீயும் அப்பாவுமா வாங்கின சொத்துக்கள் அதனால் அதை என்னவேண்டுமானாலும் பண்ண உன்னைத் தவிர வேறு யாருக்குமா ரைட்ஸ் இருக்கு! சொல்லு.”
“அப்போ சரி சொல்லிட்டீங்க இல்ல இனி நான் பார்த்துக்கறேன்.”
“பத்திரமா இருமா. நான் ஒரு மூணு மாசம் கழிச்சு வந்து உன்னைப் பார்க்கறேன்.”
“அம்மா நாங்க தீபாவளிக்கு வர்றோம்”
“சரி கண்ணுகளா. உங்களால எப்ப முடியுதோ அப்போ வாங்க நோ ப்ராப்ளம். சரி நான் அப்போ இந்த மாசமே அங்கே ஷிப்ட் பண்ணிடறேன் சரியா.”
“ம்….சரி மா. உன் விருப்பத்துக்கு நாங்க குறுக்கே நிற்க மாட்டோம். கோ அஹெட் ரதியா மா”
“நன்றி குழந்தைகளா. சரி சரி இப்போ என் பேரப்பிள்ளைகளைப் பேச சொல்லுங்க”
என்றதும் அவர்கள் வந்தனர். அவர்களுடன் பேசிவிட்டு ஃபோனை வைத்ததும் அந்த ஹோமுக்குக் கால் செய்து விவரங்களைச் சொன்னேன். அவர்களும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றார்கள். அடுத்த நாளே ரியல் எஸ்டேட் காரர் ஒரு வரை வரவழைத்து பேசினேன். அவரும் எங்கள் வீட்டை விற்றுத் தர ஏற்பாடு செய்வதாக கூறினார். எங்களுக்கு இன்னுமொரு சிறிய வீடு இருந்தது. அதில் நானும் கேசவனுமாக சேகரித்து வைத்திருந்த பொருட்களில் முக்கியமான சில வற்றை கொண்டுச் சென்று ஆட்களை வைத்து அடுக்கி ஒரு ம்யூசியம் போல வைத்தேன். வீடு விற்கப்பட்டது. எனக்குப் பிடித்த ஓரிரண்டு நகைகளைத் தவிர மீதமிருந்த அனைத்து நகைகளையும் விற்றேன்.
பணம் என் வங்கியில் போடப்பட்டது. அவ்வளவு பொருட்களின் சொந்தக்காரி, மூன்று பீரோ முழுக்க அடுக்கப்பட்டிருந்த உடைகளுக்கு உரிமைக்காரி, நகைகள் நிரம்பிய லாக்கருக்கு எஜமானி… அன்று… கையில் வெரும் இரண்டு சிறியப் பெட்டிகளுடன் அந்த ஆசிரமத்திற்குச் சென்றேன்.
அங்கேயிருந்த அந்த பிஞ்சுக் குழந்தைகள் என்னைப் பாரத்ததும் ஓடி வந்தன நானும் அவர்களை என் இரு கரங்களில் வாரிக் கட்டி அணைத்துக் கொண்டேன். அந்த ஆசிரமத்தில் நானும் ஒருத்தியானேன். என்னிடம் இருந்த பணம் நகை பொருட்கள் எதுவுமே என் பிள்ளைகளுக்கு தேவையில்லை ஏனெனில் அவர்களுக்கு அவை அனைத்தையும் தாங்களே வாங்கிக்கொள்ளும் அளவிற்கு ஆளாக்கியுள்ளோம். ஆகையால் என்னிடமிருந்த பணத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்து ஒன்றை மட்டும் வங்கியில் போட்டேன். இரண்டாவது பங்கை என் பேரப்பிள்ளைகள் பெயரில் எஃப் டியில் போட்டேன். மூன்றாவது பங்கை எங்களுக்காக அத்துனை வருடங்கள் வேலைப்பார்த்தவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தேன். நான்காவது பங்கை வைத்து ஆசிரமத்தை விரிவுப்படுத்தினேன். வசதிகளைப் பெருக்கிக் கொடுத்தேன். அங்கிருந்த பிள்ளைகள் படிப்பதற்காக பண்ணிரெண்டாம் வகுப்பு வரையிலான பள்ளிக்கூடத்தைக் கட்டினேன். அங்கேயிருந்த சிறிய முதலுதவி கூடத்தை அனைவருக்கும் பயன்படும்படியான க்ளினிக்காக மாற்றியமைத்தேன். வங்கியில் போட்டிருந்த எனது பங்கிலிருந்து வந்த வட்டியே எனது மாத செலவுக்கு போதுமானதாக இருந்தது. அதை வைத்து அங்கிருந்த முதியவர்கள், பிள்ளைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள் ஆகிய தினங்களை விமர்சையாக இல்லாவிட்டாலும் நல்ல உணவு, புதிய உடை அளித்து மகிழ்ச்சியாக கொண்டாடினோம். என் பிள்ளைகளும் அவ்வப்போது வந்து என்னுடன் இருந்து அவர்களால் ஆன உதவிகளை அந்த இடத்திற்கும் அங்கிருந்தவர்களுக்கும் செய்து வந்தனர். அவர்கள் எங்கள் பெயரிலே ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து அதில் பணத்தைப் போட்டு அதன் மூலம் அந்த இடத்தையும், மருத்துவமனையையும், பள்ளிக்கூடத்தையும் பராமரித்து வந்தனர். பேரப்பிள்ளைகளும் வந்து அங்கிருந்த பிள்ளைகளுடன் ஓடியாடி விளையாடிச் சென்றனர்.
சம்பாத்தியம் என்பது நாம் வாழ்வதற்கு முக்கியமானது தான். ஆனால் அதற்கும் எல்லையை வகுத்துக் கொண்டோமேயானால் நமது வாழ்க்கை அழகானதாக அமைதியானதாக நிம்மதியானதாக இருக்கும். ஓட வேண்டிய வயதில் தான் ஓட முடியுமென்றெண்ணி ஓட்டத்தைத் தவிர வேறெதுவுமே காணதவாறு நமது வாழ்க்கைக்கு நாமே திரையிட்டுக்கொள்ளாது நின்று நிதானமாக ஓடியும், நடந்தும், ஓய்வெடுத்தும் நமது வாழ்க்கையைக் கடந்துச் சென்றால்…வாழ்க்கை நமக்கு பல அற்புதமான அனுபவங்களை, பாடங்களை, பரிசுகளை, நட்புக்களை நமக்களிப்பதில் தவறுவதில்லை. அவற்றை நாமும் வேகமாக கடந்திடாது ரசித்து வாழ முடியும்.
அந்த ஆசிரமத்தின் பள்ளியில் படித்த பிள்ளைகள் பெரிய பெரிய கம்பெனிகளில் பணிப்புரிந்தனர். அவர்கள் அங்கிருந்து வெளியேச் சென்றாலும் அந்த ட்ரஸ்ட்டுக்கு பணம் அனுப்புவதையும், மாதம் ஒரு முறையாவது வந்து அங்கிருந்த அனைவருடனும் நேரம் செலவிடுவதையும் தவறாது செய்து வந்தனர். அந்த கடவுள் என் மூலம் விதைத்த ஒரு சிறிய விதையானது இன்று பெரிய வானுயர விருட்சமாக ஓங்கி வளர்ந்து கம்பீரமாக நிற்கின்றது.
ஒவ்வொரு நாள் இரவும் அன்று நடந்த அனைத்து விஷயங்களையும் எனது டைரியில் குறிப்பெழுதி வைத்து கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு உறங்கச் செல்வேன். அன்றிரவும் குறிப்பெழுதி வைத்துவிட்டு கடவுளுக்கு நன்றிச் சொல்லிவிட்டு மனநிறைவோடு படுத்துறங்கினேன்.
பல வருடங்களாக என்னைப் பிரிந்திருந்த கேசவன் வந்தார் தன் கரங்களை நீட்டி என் கரம் பிடிக்க காத்திருப்பதாக சொன்னார். நானும் என் கரம் நீட்டி அவர் கரங்களைப் பற்றிக் கொண்டேன். இருவரும் வானில் புதிய பறவைகளைப் போல வட்டமடித்துப் பறந்துக் கொண்டே வெகு தூரம் பயணிக்க ஆரம்பித்தோம். அந்தப் பயணத்தின் போது கேசவன் என்னிடம்
“ரதியா நீ நல்ல காரியம் செய்துள்ளாய். நீ இதுவரை செய்துள்ள நல்ல விஷயங்கள் தான்… எந்த பாவப் பொதிளையும் சுமக்காது, எந்த வித வலி வேதனையுமின்றி உனக்கு இவ்வாறான ஒரு இனிய பயணத்தை அளித்துள்ளது.”
என்றார். அதைக்கேட்டதும் நான் இன்னும் மகிழ்ச்சியானேன். என் மறைவினால் நான் பெற்றெடுத்த பிள்ளைகள் மட்டுமின்றி நான் வளர்த்தப் பிள்ளைகளும் என் ஆசிரமத்து நண்பர்களும் என அனைத்து நல்லுள்ளங்களும் எங்களுக்காக வடித்த ஒவ்வொரு சொட்டுக் கண்ணீருக்கும் நாங்கள் இருவரும் நன்றி சொல்லிக்கொண்டே இருப்போம்.
எங்கள் பெற்றவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறோம்… எதைக் கொண்டு வந்தோம் நாம் எடுத்துச் செல்வதற்கு. வெறும் ஆறடி இடமிருந்தாலே போதுமென்று. அது அந்தக் காலம். இப்போது அந்த ஆறடியும் சொந்தமில்லை நமக்கு. மின்சார தகனம் செய்து சில மணிநேரத்தில் எல்லாம் ஒரு பிடி சாம்லுடன் திரும்பிச் சென்று விடுகிறார்கள் நம் சொந்தங்கள்.
நாம் இந்த உலகை விட்டுப் பிரிந்து வேறுலகம் செல்லும் போது நாம் எதையுமே எடுத்துச் செல்ல முடியாது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து உள்ளது. நாம் வாழும் காலத்தில் ஓடோடி சேர்த்துவைக்கும் பொருட்களையும், பொன்னையும், சொந்தங்களையும், நட்புக்களையும் தான் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் நாமும் நம்முடன் எடுத்துச் செல்ல சிலவற்றை அதாவது கண்ணுக்கு தெரியாத, உருவமில்லாத சிலவற்றை சேர்த்து வைத்தோமே என்றால் அவை நாம் இவ்வுலகிலிருந்து பிரிந்து செல்லும் போது நம் கரம் பிடித்து கேசவன் என்னிடம் சொன்னது போல எந்த வித வலி வேதனையுமின்றி ஒரு இனிமையான பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும். அது தான் நாம் வாழும் காலத்தில் சம்பாதித்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான சொத்தாகும். அது வேறெதுவுமில்லை புண்ணியம் தான் அது.
நாங்கள் சேர்த்து வைத்த பொன், பொருள், வீடு, வாசல் எங்களுடைய இந்த இனிய பயணத்திற்கு சிறிய வகையில் உதவியிருந்தாலும் பெரியதாக உதவியவை எவை தெரியுமா?… நாங்கள் எங்கள் கடமைகளை சரிவரச் செய்தது, எங்கள் பிள்ளைகளுக்குத் தேவையானதனைத்தையும் செய்து முடித்தது, இந்த சமுகத்திற்கு நல்ல மனிதர்களை உருவாக்கிக் கொடுத்தது, அனைவருக்கும் நல்லதையே நினைத்தது, எங்களால் முடிந்த வரை அனைத்து நல்ல காரியங்களையும் செய்தது ஆகியவையாகும். அவைகளை செய்யும் போது அவைகள் அனைத்தும் விண்ணுலகில் எங்களைக் காக்கப் போகும் துவார பாலகர்கள் என்றறிந்திடாது செய்தோம். கேசவன் எனக்கு முன்னே அறிந்துக் கொண்டுவிட்டார் ஆனால் நான் அன்று தான் அதை அறிந்துக் கொண்டேன்.
பணம், பொன், பொருள், பதவி அகியவை மண்ணுலகத்தில் நாம் மேற்கொள்ளும் பயணங்களுக்குத் தான் உதவியாக இருக்கும்.
நாம் அவைகளை வைத்து செய்யும் புண்ணியக் காரியங்கள் தான் நமது விண்ணுலகப் பயணத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
எங்களால் அந்த புண்ணிய பணியை விட மனமில்லாததால் நானும் கேசவனும் இணைந்து அந்த இடத்திலேயே அவர்களுக்கு பாதுக்காப்பாகவும், அவ்வப்போது எங்களாலான… ஆனால் அவர்களின் கண்களுக்குத் தெரியாதவாறு சில சிறிய உதவிகளையும் செய்து வந்ததில் மரணமில்லா மகிழ்ச்சியைப் பெற்று வந்தோம்.
உயிருடன் இருந்தாலும்,
உயிரற்றுப் போனாலும்,
நம்முடனே வருவதும்,
நம்மால் செய்ய முடிந்ததும்
புண்ணியக் காரியங்களே!
பணம், பொன், பொருள்களுக்கு எல்லை நம் மரணம்
புண்ணியக் காரியங்களுக்கு எல்லை என்பது இன்னும் வகுக்கப்படவில்லை!
முடிந்த வரை புண்ணியக் காரியங்களில்
ஈடுபடுங்கள்
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.
மண்ணுலகின் பிரதி பிம்பமே விண்ணுலகம். மண்ணுலகில் எதை விதைக்கிறீர்களோ அது தான் விண்ணுலகில் உங்களுக்கு நன்மைத் தரக்கூடிய விருட்சமாகும். ஆகையால் நல்லதே எண்ணுங்கள், நல்லவைகளையே செய்திடுங்கள், இரு உலகிலும் நன்மையையே பெற்றிடுங்கள்.
எங்களுக்குக் கிடைத்த இந்த இரு உலகப் பயணத்திலும் நாங்கள் நன்றாகவே பயணித்தோம், பயணித்துக் கொண்டும் இருக்கிறோம் என்ற மன நிறைவுடன்.
உங்கள்
ரதியாம்பிகா கேசவன்.
🙏நன்றி🙏
Family
அம்மா
அவனிதனிலே நாம் பவனி வர காரணமானவள்
அன்பு, அக்கறை, அரவணைப்பின் பெட்டகமானவள்
தன்னலமற்ற தகழியாக குடும்பத்தை ஒளிரவைப்பவள்
பொன்னும், பொருளும் அள்ளிக் கொடுத்தாலும் கிள்ளிக்கூட எடுக்க எண்ணாதவள்
ஈன்ற பிள்ளைகளின் வளர்ச்சி, ஆரோக்கியம், மகிழ்ச்சிக்காக மட்டுமே நித்தம் நித்தம் ஆண்டவனை வேண்டும் தெய்வமானவள்
பிள்ளைகள் என்றும் பற்றிக்கொள்ளும் நம்பிக்கை கரமானவள்
மூன்று எழுத்தில் மூவுலகத்தையும் சுவாசிக்க செய்பவள்
அம்மா
அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்
❤️நன்றி❤️
இ4
இரண்டாயிரத்து இருபது – இனிமையான இடைவேளை

“ராதா அன்ட் ராஜு ரெண்டு பேரும் வாங்கோ இங்க….டைம் பண்ணண்டு ஆக போறது. நான் விளக்கேத்தப் போறேன்”
“வந்துட்டேன் மா”
“உன் அப்பா எங்கடி? அவரையும் வரச்சொல்லு”
“அம்மா நீ கத்தினது நிச்சயம் அப்பாக்கும் கேட்டிருக்கும் வருவா சித்த வெயிட் பண்ணு”
“நாழி ஆகறது சீக்கிரம் வாங்கோளேன்”
“வந்துட்டேன் ராஜம் வந்துட்டேன்”
“நன்னா ரெண்டு பேரும் வேண்டிக்கோங்கோ. இந்த வருஷம் நல்லபடியா எல்லாத்தையும் நடத்திக்குடுத்ததுக்கு நன்றி ஆண்டவா இனி வரப்போற இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டையும் நல்லபடியா அமைச்சுக் குடும்மா தாயேன்னுட்டு வேண்டிக்கோங்கோ”
“அம்மா அதுதான் நீயே சொல்லிட்டயே அதுவே அம்பாளுக்கு நன்னா கேட்டிருக்கும்.”
“எதுக்கெடுத்தாலும் ஏட்டிக்கு போட்டியா பேசுடி பேசு”
“அம்மா புது வருஷம் மா ஞாபகம் வச்சுக்கோ”
“ஓ!!! கடவுளே கடவுளே எல்லாரையும் ஷேமமா வச்சுக்கோப்பா”
“அம்மா உன் பூஜை ஆயாச்சு இப்போ கேக் கட் பண்ணலாமா?”
“ஓகே!! நீ ரெடி பண்ணு இதோ வந்துட்டேன்.”
“அப்பா வா நம்ம போவோம் அம்மா வரட்டும்”
“விஷ் யூ போத் அ ஹாப்பி 2020 மை டியர் அப்பா அன்ட் அம்மா”
“தாங்க்ஸ் மா. ஹாப்பி நியூ இயர் டா ராதா கண்ணா. ஹாப்பி நியூ இயர் மை டியர் வைஃப்”
“நன்றி ராதா அன்ட் மை நாதா. என் கணவருக்கும் மகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்”
“வாரே வா!!! கலக்கல் அம்மா”
என்று கேக்கை ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டும், வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதன் பின்னர் ராதா அவள் நண்பர்களுடனும், ராஜு அவர் நண்பர்களுடனும் ஃபோனில் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டிருந்தனர். ராஜம் மீதமிருந்த அந்த கேக்கை ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு அவளது தோழிகளுக்கு வாழ்த்துக்களை அனுப்பிவிட்டு, விளக்கை சாந்தப் படுத்திய பின் உறங்கச் சென்றாள்.
மறுநாள் முதல் அவரவர் வேலைகள் மற்றும் நண்பர்கள் என முழ்கினர். ராஜம் வழக்கம் போல சமையல் அடுப்படி என்றிருந்தாள்.
ஜனவரி ஐந்தாம் தேதி ராதா அவளது இரண்டாம் வருட இஞ்சினியரிங் படிப்பின் இரண்டாவது செமஸ்டரை முடிக்க கனடா நாட்டுக்குச் செல்ல ஆயத்தம் ஆனாள். ராஜம் மகளுக்கு வேண்டிய புளிக்காய்ச்சல், பருப்புப் பொடி, ஊறுகாய்கள் என தயார் செய்வதில் மும்முரமானாள். அனைத்தும் பேக் செய்து இரண்டு பெட்டிகளை காரில் ஏற்றி ஏர்போர்ட் சென்றார்கள். அங்கே ராதா தன் பெற்றோரை கட்டி அணைத்து “பை” சொல்லிவிட்டு இமிக்ரேஷனுக்கு உள்ளே செல்லவதற்கு முன் சற்று நின்று திரும்பி தன் அம்மாவையும் அப்பாவையும் பார்த்து கை அசைத்தாள். ராஜம் தன்னைச் சுற்றி ஆட்கள் நிற்கிறார்கள் என்ற உணர்வே இல்லாமல் அவள் கண்ணிலிருந்து ராதா மறையும் வரை அதே இடத்தைப் பார்த்தபடி நின்று அழுதாள். உடனே ராஜு தன் மனைவி தோளில் கையைப் போட்டு தட்டிக் கொடுக்க சுயநினைவுக்கு வந்தாள் ராஜம். பின் இருவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். இது கடந்த இரண்டு வருடங்களாக ராதா ஒவ்வொரு முறை விடுமுறைக்கு வந்து செல்லும்போதும் நடைப் பெரும் நிகழ்வே. ஆனால் இந்த முறை ராஜத்தின் அழுகை ஒரு நாள் ஆகியும் நிற்கவில்லை. அதை பார்த்த ராஜு..
“என்ன ராஜம் நம்ம ராதா படிக்க தானே போயிருக்கா!! ஏன் இப்படி ஒவ்வொரு தடவையும் அழுற? அதுவும் இந்த தடவை ஜாஸாத்தி வருத்தப் படுற!!!”
“ஆமாம் ராஜு ஏதோ சொல்ல முடியாத கவலை என் மனச போட்டு அழுத்தறது. ஏதோ தப்பு நடக்கப் போறா மாதிரியே இருக்கு. இருங்கோ நான் அந்த அம்பாளுக்கு வேண்டிண்டு காசு முடிஞ்சு வச்சுட்டு வந்துடறேன்”
என்று கூறிவிட்டு அம்பாள் படத்திற்கு முன் நின்று மனதார வேண்டிக்கொண்டு காசை முடிந்து வைத்து விட்டு சற்று நேரம் அமைதியாக அமர்ந்தாள்.
மறுநாள் ராதா நல்லபடியாக அவளது கல்லூரி ஹாஸ்டலுக்கு சென்று விட்டாள் என அவளிடமிருந்து ஃபோன் வந்த பிறகு சற்று ஆசுவாசமானாள் ராஜம்.
ராஜுவிற்கு ஆபிஸ் வேலைக்காக மார்ச் மாதம் கனடா போகவேண்டி வந்தது அப்போது அவருடன் ராஜமும் சேர்ந்து போய் அவர்கள் மகளுடன் வசந்த கால விடுமுறை ஒரு வாரத்தை செலவழிக்க முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள்.
பிப்பரவரி மாதம் இறுதியில் கொரோனா என்ற கொடிய நச்சுயிரி உலகெங்கும் பரவி வருவதாகவும் அதனால் பல லட்சம் மக்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் வெளிவந்துக் கொண்டே இருந்தன.
அந்த நச்சுயிரி பரவாமல் இருப்பதற்காக பல நாடுகள் கதவடைத்து வருவதாக செய்திகள் வெளியாகத் துவங்கியதும் ராஜு அவர்களின் கனடா பயணத்தை தவிர்த்து ஆக வேண்டும் என்று முடிவு செய்து அனைத்து ஏற்பாடுகளையும் ரத்து செய்தார்.
ராதாவிற்கு திரும்பி ராஜு, ராஜம் வசிக்கும் நாட்டிற்கு வருவதற்கு ஏப்ரல் முப்பதாம் தேதிக்கு டிக்கெட் புக் செய்திருந்தார்கள். இந்த செய்திகளைப் பார்த்ததும்… மார்ச் பண்ணிரெண்டாம் தேதி ராதாவுடன் பேசியபோது டிக்கெட்டை அவள் பரீட்சை முடியும் நாளான ஏப்ரல் இருபத்தி ஐந்தாம் தேதிக்கு மாற்றி சீக்கிரம் வீட்டிற்கு வரும்படி சொன்னார்கள்.
ஆனால் ராதாவுக்கு ஏதோ ரிசர்ச் சம்மந்தமான வேலை இருபத்தி எட்டாம் தேதி இருப்பதால் அதுவரை அங்கு இருந்தாக வேண்டும் என்று சொல்லி முப்பதாம் தேதி டிக்கெட்டை இருப்பத்தி எட்டாம் தேதிக்கு மாற்ற முயற்சித்தாள். அது செய்ய முடியாது ஏனென்றால் நிறைய டிக்கெட் ரத்துக்களும் மாற்றங்களும் உலகெங்கும் செய்யப்படுவதால் கையிலிருக்கும் டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு புதிதாக தான் டிக்கெட் பதிவு செய்ய இயலும் என்று ராதா டிக்கெட் பதிவு செய்த வலைத்தளம் குறிப்பிட வேறு வழியின்றி முப்பதாம் தேதி பயணச்சீட்டை ரத்து செய்து புதிதாக இருப்பத்தி எட்டாம் தேதிக்கு அவள் அங்கே கேம்பஸில் வேலைப் பார்த்து சம்பாதித்த பணத்தை வைத்து மீண்டும் பதிவு செய்தாள். ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டின் காசு இரண்டு வாரங்களில் அக்கௌன்டில் வந்து சேரும் என்று அச்சிடப்பட்டிருந்தது அந்த வலைத்தளத்தில்.
பதிமூன்றாம் தேதி செய்தித்தாள் படித்ததும் அதிர்ச்சி அடைந்தார்கள் ராஜுவும் ராஜமும். அவர்கள் வசிக்கும் நாட்டில் மார்ச் பதினேழாம் தேதி முதல் அனைத்து வகை விசாக்களையும் காலவரையின்றி நிறுத்தி வைக்கப் போவதாக அச்சிடப்பட்டிருந்தது. பலர் விசாக்கள் நிறுத்திவைக்க துவங்கி விட்டார்கள் எனக் கூறிவும் அதிர்ந்து போனார்கள் இருவரும்.
அப்படி விசாக்கள் வழுங்குவதை காலவரையின்றி நிறுத்திவிட்டால் ராதாவால் இருபத்தி எட்டாம் தேதி அவள் பெற்றோர் வசிக்கும் நாட்டிற்குள் நுழைய முடியாது ஏனெனில் அவளது விசா முடிவடைந்ததை அவர்கள் யாருமே கவனிக்கவில்லை ஆகையால் ஏப்ரல் மாதம் விசா ஆன் அரைவலில் வந்துவிட்டு பின் மீண்டும் விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றிருந்தனர். ஆனால் விசாவை நிறுத்தி விட்டால் அவள் பெற்றோருடன் இருக்க முடியாது அவளை இந்தியாவிற்கு அவள் தாத்தா பாட்டியிடம் அனுப்பலாம் என்றும் யோசித்தார்கள் ஆனால் இந்தியாவிலும் கதவடைப்பு செய்யப்பட்டிருந்தது.
செய்வதறியாது ராஜுவும் ராஜமும் தவித்துக் கொண்டிருந்த வேளையில் ராதா அவர்களை வீடியோ காலில் அழைத்தாள். அவள் அழைக்கும் போது ராஜு தம்பதியினருக்கு மணி காலை எட்டரை ராதாவிற்கு நள்ளிரவு பண்ணி ரெண்டு.
“ஹலோ அப்பா. எப்படி இருக்கேங்கள் ரெண்டு பேரும். அங்க லாக்டவுன் ஏதும் இல்லையே?”
“என்னம்மா உனக்கு டைம் பண்ணண்டு ஆயிருக்குமே இன்னுமா தூங்காம இருக்க?”
“இன்னைக்கு கல்லூரிக்கு கடைசி நாள் அப்பா அதனால நண்பர்கள் அனைவருமாக டின்னருக்கு சென்று வந்தோம். அதுதான் இவ்வளவு லேட் ஆயிடுத்து”
“அங்க ஒண்ணும் உனக்கு பிரச்சினை இல்லையே ஏன்னா கனடா ல நிறைய யூனிவெர்ஸிட்டீஸ் ஆன் லைன் ல க்ளாஸஸ் ஆரம்பிக்க போறான்னுட்டு நியூஸ் பார்த்தேன். உங்க காலேஜ் என்ன பண்ண போறா?”
“அதப்பத்தி சொல்லத்தான் இப்போ கால் பண்ணினேன். எங்க காலேஜும் இந்த ஸ்ப்ரிங் ப்ரேக்குக்கு ஊருக்கு போற ஸ்டூடன்ட்ஸை திரும்பி வரவேண்டாம்ன்னும் க்ளாஸஸ் ஆன் லைன்ல நடத்தப் போறான்னும் இன்னைக்கு மத்தியானம் எங்க எல்லாருக்கும் காலேஜ் ப்ரெஸிடென்ட் கிட்ட இருந்து ஈமெயில் வந்தது. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் அவாஅவா ஊருக்கு நாளை மறுநாள் அதாவது பதினைந்தாம் தேதி கிளம்பிப் போகப்போறாளாம் டின்னரில் டிஸ்கஸ் பண்ணினா. அது தான் நானும் வந்திடலாமா இல்லை இங்கேயே இருக்கலாமான்னு யோசிக்கறேன்”
“இதுல என்ன யோசிக்க இருக்கு ராதா பேசாம நீயும் உன் இருபத்தி எட்டாம் தேதி டிக்கெட்டை பதினைந்தாம் தேதிக்கு மாத்திண்டு இங்க எங்கள்ட்டயே வந்துடுமா”
“ஆனா அப்படி எங்க ஸ்டூடன்ட் வெப்சைட்டில் ப்ரீபோன்ட் பண்ண முடியாது பா. கான்ஸல் பண்ணிட்டு புதுசா தான் பூக் பண்ணணும்.”
“சரி அதை பண்ணு”
“அம்மா நான் ஃபர்ஸ்ட் செஞ்ச கேன்ஸலேஷனுக்கே இன்னும் காசு திரும்பி என் அக்கௌன்ட்க்கு வரலை.”
“அது வரும்போது வரட்டும் நீ இப்போ இந்த டிக்கெட்டையும் கான்ஸல் பண்ணிட்டு புதுசா புக் பண்ணிடு”
“அம்மா என் கிட்ட புது டிக்கெட் புக் செய்யற அளவுக்கு அக்கௌன்டில் பணமில்லை…நீங்க எனக்கு பணம் ட்ரான்ஸ்பர் செய்தாலும் அது என் அக்கௌன்ட்டுக்கு வரத்துக்கு செவ்வாய்க்கிழமை ஆகிடும்”
“சரி அப்போ ஒண்ணு பண்ணறேன் நான் டிக்கெட் பார்க்கறேன் கிடைச்சா உன் ஈமெயில் ஐடி கொடுத்து புக் பண்ணறேன் சரியா”
“அம்மா என் ஃப்ரெண்ட்ஸ் பாரிஸ் வழியா வர்ற ஃப்ளைட் புக் பண்ணிருக்கா எனக்கும் அதுல இருக்கான்னுட்டு பாரு”
“சாரி ராதா அந்த ஃப்ளைட் ஃபுல் ஆகிடுத்து. ஃப்ராங்ஃபர்ட் வழியா வர்ற ஃப்ளைடில் சீட் இருக்கு பண்ணவா?”
“சரி சரி சீக்கிரம் பண்ணு அதுவும் ஃபுல்லாக போறது”
“ஓகே பண்ணிட்டேன் உனக்கு ஈமெயில் வந்திருக்குமே”
“ஆங் வந்தாச்சு”
“சரி உன் ரூம்ல இருக்கற திங்க்ஸ் எல்லாத்தையும் என்ன பண்ணப் போற?”
“எங்க ஃப்ரெண்ட் ஆன்ட்ரியா வீட்டு பேஸ்மென்ட் ல வைக்க போறோம். அவா எல்லாம் பேக்கிங் ஆரம்பிச்சுட்டா. நான் டிஸிஷன் தெரியாம வெயிட் பண்ணிண்டிருந்தேன். இதோ நானும் பேக் பண்ணப் போறேன்”
“முக்கியமா வேண்டியதை மட்டும் எடுத்துண்டு வா போறும்”
“சரி நான் எல்லாத்தையும் பேக் பண்ணட்டும் பை.”
“ஓகே பை ராதா”
“ஓகே ராஜம் டிக்கெட் புக் பண்ணிட்டே ஆனா ராதாவோட விசா ரின்யூ பண்ணிட்டில்லையே….இங்க வேற பதினேழாம் தேதி முதல் எல்லா விசாவையும் ஸ்டாப் பண்ணப்போறா…இன்னைக்கு இங்க லீவு… ஸோ ஒண்ணும் பண்ண முடியாது நாளைக்கு காலை ல தான் என் ஆபிஸ் டிராவல்ஸ் ல பேசி ஏற்பாடு பண்ணணும்”
“ஓ அது வேற இருக்கே!!! ரின்யூ பண்ணலைன்னு நான் ஞாபகப் படுத்தும்போதெல்லாம் எங்களுக்கு தெரியும்ன்னுட்டு இப்போ எப்படிப் பட்ட இக்கட்டான நிலைமை ல நிக்கறோம்ன்னு பாருங்கோ.”
“இப்போதான் குத்திக் காமிக்கற நேரமா? நாளைக்கு காலை ல ஏழு மணிக்கெல்லாம் ப்ராஸஸை ஸ்டார்ட் பண்ணிடணும்”
“ராதா நாளன்னைக்கு கிளம்பறா பதினாறாம் தேதி ராத்திரி பதினோரு மணிக்கு இங்க வந்திடுவா அப்போ அவள் கிட்ட விசா இருக்கணுமே…ஒரே நாள்ல விசா கிடைச்சுடுமா?”
“லெட் அஸ் ட்ரை.”
“பகவானே என்னப்பா இந்த சோதனை”
“ஒரு சோதனையும் இல்லை ராஜம். பீ கூல். எல்லாம் நல்லபடியாக தான் நடக்கும். வர்றியா லஞ்ச்சுக்கு வெளியே போகலாம்”
“எப்படிப்பா உங்களால இவ்வளவு ஈசியா எடுத்துக்க முடியறது? சப்போஸ் விசா கிடைக்கலைன்னா நம்ம பொண்ணு ஏர்போர்ட்லையே மாட்டிப்பா”
“அப்படி எல்லாம் ஒண்ணுமே நடக்காது. நீ வேணும்ன்னா பாரு எல்லாமே ஸ்விஃப்ட்டா நடக்கும்”
அன்று முழுவதும் மனக்கவலையில் ராஜம் ஒன்றும் சாப்பிடாமலும் சரியாக தூங்காமலும் தவித்துக்கொண்டிருந்தாள். ஆனால் ராஜு எல்லாம் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில் நன்றாக டிவி பார்த்துவிட்டு உறங்கலானார். அவர் உறங்குவதைப் பார்த்து ராஜம் மனதிற்குள்….
“இந்த மனுஷனா ல எப்படி இப்படி நிம்மதியா தூங்க முடியறதுன்னே எனக்கு புரியலை….சரி அவராது தூங்கட்டும் பாவம்”
மறுநாள் பதினான்காம் தேதி விடிந்ததும் சீக்கிரம் எழுந்து தயாராகி ஆபிஸ் சென்று ட்ராவல்ஸிடம் விவரத்தைக் கூறி ஏற்பாடுகளை செய்தார் ராஜு. அவற்றை எல்லாம் அவ்வப்போது ஃபோன் போட்டு கேட்டுக்கொண்டே இருந்தாள் ராஜம். அங்கே ராதா அனைத்துப் பொருட்களையும் பேக் செய்து வைத்து விட்டு தன் அம்மாவுடன் பேசினாள்.
“அம்மா இதோ பார் பத்து கார்டன் பாக்ஸ் ல போட்டு எல்லாத்தையும் ரெடி பண்ணியாச்சு நாளைக்கு காலை ல ஒரு கார் வாடகைக்கு எடுத்து அதுல எங்க மூணு பேரோட திங்க்ஸையும் லொடு பண்ணி ஆன்ட்ரியா வீட்டுல வைக்கணும்”
“என்னடி பத்து டப்பாவா!!!”
ராஜம் அவளது தவிப்பு, மற்றும் விசா பிரச்சினை எதையுமே ராதாவிடம் காட்டிக்கொள்ளாமல் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போலவே பேசினாள்.
“ஆமாம்”
“சரி உனக்கு இப்போ டைம் மூணு ஆகிருக்குமே போய் தூங்கு ராதா”
“இப்போ தான் எல்லாத்தையும் ஃபுல் பேக்கிங் முடிச்சேன் சரி உன்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு தூங்கப்போலாமேன்னு கூப்பிட்டேன்”
“அது தான் நாளன்னைக்கு வந்திடுவயே அப்போ பேசிக்கலாம் இப்போ போய் தூங்கு”
“சரி மா பை”
ராஜம் ராதாவுடன் பேசி முடித்ததும் ராஜுவின் கால் வந்தது. அதில் அவர் ஆபிஸ் ட்ராவல்ஸ் ஒரே நாளில் விசா கிடைக்க முயற்சிப்பதாக சொன்னார்கள் என்று சொல்ல….
“என்னப்பா முயற்சிக்கிறோம் என்று சொல்கிறார்களே கிடைக்குமா!!!கிடைக்காதா!!! கிடைத்தால் சந்தோஷம், கிடைக்காவிட்டால் நம்மகிட்டயும் வரமுடியாது, இந்தியாவிற்கும் செல்ல முடியாமல் ஏர்போர்ட்டில் மாட்டிக்கொள்வாளே நம்ம பொண்ணு”
என்ற மனவேதனை ராஜத்தின் மனநிம்மதி, தூக்கம், பசி என அனைத்தையும் பாதித்தது. அங்கே இவர்கள் மகள் அனைத்து பொருட்களையும் அவள் தோழி வீட்டில் வைத்துவிட்டு பயணத்திற்கு தயாராகினாள்.
இந்த இக்கட்டான நிலையில் மொத்தம் இரண்டாயிரத்தி மூன்னூறு டாலர் பணம் அந்த டிக்கெட்டிங் வலைதளத்தில் மாட்டியிருந்தது.
பதினைந்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மத்தியம் பண்ணி ரெண்டு மணி வரை ராதாவின் விசா பற்றிய எந்தவித தகவலும் வராததால் மூன்றாவது முறையாக ஃபோன் செய்து கேட்டார் ராஜு அப்போதும் ஆகிவிடும் என்று சொன்னார்களே தவிர எப்போ என்று சொல்லவில்லை. அன்றிரவு எட்டரை மணிக்கு (அதாவது ராஜு வசிக்கும் நாட்டின் டைம் பதினாறாம் தேதி விடியற் காலை நாலரை மணி) ராதாவிற்கு ஃப்ளைட். ராஜம் தோழி ஒருத்தி ராதா வரும் ஏர்லைன்ஸில் பணிப்புரிவது ஞாபகம் வர அவளுக்கு ஃபோன் செய்தாள். அவளிடம் விசா கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள் என அனைவரும் கூறுகிறார்களே அது உண்மையா என்றும் தன் மகள் பதினாறாம் தேதி இரவு பதினோரு மணிக்கு வருவாள் உள்ளே அழைத்து வர என்ன வழி என்றும் கேட்டாள் ராஜம். அவள் தோழி சொன்ன பதில் ராஜத்துக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. விசா வழங்குவதை பதினேழாம் தேதி முதல் தான் நிறுத்த போகிறார்கள் எதற்கும் ஏர்போர்ட் சென்று அந்த ஏர்லைன்ஸ் கௌன்டரில் நேராக விசாரித்துக் கொள்ளும்படி கூறினாள். உடனே ராஜம் ராஜுவை அலைபேசியில் அழைத்து விவரத்தைக் கூற அவரும் ஆபிஸில் வேலை ஓடவில்லை என்று கிளம்பி வந்து ராஜத்தையும் அழைத்துக் கொண்டு ஏர்போர்ட் சென்று ஏர்லைன்ஸ் கௌன்டரில் விசாரித்தனர்.
விசா ஆன் அரைவல் பதினாறாம் தேதி கிடைக்கும் ஆனால் அது செல்லுபடியாகும் பதினான்கு நாட்கள் முடிந்ததும் அந்த விசாவை புதுப்பிக்க முடியாது என்றும் முடிந்தால் லாங் டெர்ம் விசா எடுக்கும்படியும் கூறினார் அந்த ஏர்லைன்ஸ் ஊழியர். ராஜுவிற்கும் ராஜத்திற்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை. அந்த டென்ஷன், இரண்டு நாட்களாக சரியாக சாப்பிடாதது, தூங்காதது என்று அனைத்தும் ஒருசேர ராஜத்திற்கு சற்று தலைச்சுற்றலை தந்தது.
ராஜு அவளை தாங்கிப் பிடித்துக்கொண்டு அங்கே இருந்த இருக்கையில் அமர வைத்து தண்ணீர் வாங்கி வந்து கொடுத்தார். மீண்டும் ஒரு முறை அந்த டிராவல்ஸ்க்கு ஃபோன் போட்டுக் கேட்டதில் அதே பதில் தான் கிடைத்தது. இனி ஏர்போர்ட்டில் அமர்ந்திருந்து ஒண்ணும் ஆக போவதில்லை என்று வீட்டிற்கு வந்து சேரும் போது மணி மூன்றரை அதற்கு மேல் என்னத்த சாப்பிட என்று இருவரும் காபி போட்டு குடித்து விட்டு அமர்ந்திருந்தார்கள். ராஜம் மீண்டும் சாமி படங்கள் முன் அமர்ந்து அவர்களின் அந்த இக்கட்டான நேரத்தில் ஏதாவது ஒரு வழி காட்டி காப்பாற்ற வேண்டி மனமுருகி நின்றாள்.
ராஜு வசிக்கும் நாட்டின் நேரம் மாலை ஆறு மணிக்கு (ராதாவுக்கு காலை பத்து மணி) மகள் ஃபோன் செய்து விசா வந்ததா என்று கேட்க ராஜுவும்
“வந்து விடும், வந்ததும் மின்னஞ்சலில் அனுப்பிவைக்கிறேன்” என்று கூறினார்.
விசா இல்லாமல் பயணித்தால் அங்கே இமிக்ரேஷனில் கேள்வி எழும் ஆகையால் ராதா அங்கிருந்து கிளம்பும் முன் அவளுக்கு ராஜு விசாவை அனுப்பிவைக்க வேண்டும். இல்லாததை எங்கிருந்து அனுப்புவது என்று பரிதவித்தார்கள் ராஜுவும் ராஜமும். இரவு அவர்கள் நேரம் பத்து மணிக்கு ராஜுவின் மின்னஞ்சலுக்கு விசா வந்தது உடனே அதை அவர்கள் மகளுக்கு ஃபார்வேர்டு செய்தபின் தான் அவர்களால் நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது.
பதினாறாம் தேதி மாலை ஒரு எட்டு மணியளவில் மெது வடை, சட்னி, சாம்பார், வெண்பொங்கல் எல்லாம் செய்து ஹாட்பேக்கில் போட்டு வைத்து விட்டு ஏர்போர்ட்டுக்கு கிளம்பிச் சென்றனர் ராஜுவும் ராஜமும். அங்கே அவர்கள் மகள் வெளியே வந்து அவர்களை கட்டி அணைத்துக் கொண்டதன் பின் தான் அவர்களுக்கு உயிர் திரும்பியது போல் இருந்தது. வீட்டிற்கு வந்து ராதா குளித்து விட்டு வருவதற்குள் ராஜம் சூடாக இட்டிலி செய்து டேபிளில் அனைத்து சாப்பாடு வெரைட்டி களையும் வைத்துவிட்டாள். ராதா வந்ததும் மூவரும் அமர்ந்து மூன்று நாட்கள் கழித்து அப்போதுதான் நிம்மதியாக சாப்பிட்டனர்.
பிப்ரவரியிலிருந்தே இருந்து வந்த மனக்கவலை மற்றும் மார்ச் பதிமூன்றாம் தேதி தொடங்கிய பதற்றமான சூழல் மார்ச் பதினாறாம் தேதி இரவு பதினொன்றரை மணிக்கு தான் நிதானத்திற்கு வந்தது. அவர்கள் வசிக்கும் நாட்டிலும் லாக்டவுன் செய்யப்பட்டதால் ராஜு வீட்டிலிருந்தே வேலை பார்க்கத் துவங்கினார். காலை டிபன், மத்திய சாப்பாடு தயார் செய்து வைத்துவிட்டு, மகளுக்கு ஒரு வாரம் விடுமுறை என்பதால் ராஜமும் ராதாவும் வீடியோ கேம்ஸ் விளையாடினார்கள். இரவில் டின்னர் முடிந்ததும் மூவரும் ஊனோ எனும் கார்ட் விளையாட்டை விளையாடிய பின் தான் உறங்கச் சென்றார்கள். ஒரு வாரம் விடுமுறை முடிந்ததும் காலையில் ராஜு வேலைப் பார்த்தார் மாலையில் ராதா கல்லூரி ஆன்லைன் வகுப்புகளை அட்டென்ட் செய்தாள். ராஜம் அவளது அடுப்படி வேலைகள் என அவரவர்களின் நேரத்தில் அவரவர் பணியை செவ்வனே செய்யத் துவங்கினர்.
மாலை ராஜு ஆபிஸ் வேலை முடிந்தது, ராதா வகுப்பு துவங்குவதற்கு முன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஸ்னாக்ஸ் செய்து கொடுத்து அதை இருவரும் ரசித்து உண்பதைப் பார்த்து மகிழ்ந்தாள் ராஜம். இப்படியே ஜூன் மாதம் வரை விதவிதமான சாப்பாடு வகைகள், ஸ்னாக்ஸ் வகைகள் என்று செய்வதும் சாப்பிடுவதும், வீடியோ கேம்ஸ், திரைப்படங்கள் என காலை நேரமும், கார்ட்ஸ், ஊனோ என்று இரவு நேரமும் மிகவும் மகிழ்ச்சியாக கழித்தனர் ராஜு குடும்பத்தினர்.
ஜூலை முதல் ராஜு ஆபிஸுக்கு செல்ல ஆரம்பித்தார். ராதாவிற்கு ஆகஸ்ட்டில் கல்லூரி துவங்க உள்ளதால் அவரை அனுப்ப வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வி எழுந்தது. அப்போது அவர்கள் கல்லூரியிலிருந்து வந்த மின்னஞ்சல் அவர்களுக்குள் இருந்து வந்த குழப்பத்தை நீக்கியது. மீண்டும் ஆன்லைன் வகுப்புகளே தொடர்ந்தது, அவர்களின் வழக்கமான சமையல், சாப்பாடு, விளையாட்டும் தொடர்ந்தது.
இரண்டு வருடங்களுக்கு பின் அவர்கள் மூவரும் இந்த வருடம் தான் எல்லா பண்டிகை தினங்களிலும் ஒன்றாக சேர்ந்திருக்கிளார்கள் என்பதனால் எல்லா பண்டிகையையும் சிறப்பாக கொண்டாடினார்கள். இந்த வருடம் பலருக்கு பலவகையான அனுபவங்களை கொடுத்துள்ளது. ராஜு குடும்பத்தினருக்கு ஆரம்பத்தில் சற்று பதற்றம், குழப்பம், கவலை என இருந்தாலும் இறுதியில் மகிழ்ச்சியையே தந்துள்ளது.
வெளியே எங்கும் போகாமல் எவர் முகத்தையும் பாராமல் வீட்டிற்குள்ளேயே அடைப்பட்டுக்கிடந்தாலும் சந்தோஷத்திற்கு எந்த வித குறையுமில்லாமல் அற்புதமாக கிடைத்த அந்த நேரத்தை மிக மிக அழகான தருணங்களாக மாற்றி செவ்வனே அவரவர் வேலைகளை செய்துக்கொண்டும், வீடியோ கேம்ஸ் மற்றும் போர்ட் கேம்ஸ், சீட்டு விளையாட்டு போன்ற விளையாட்டுகளை விளையாடிக் கொண்டும், பலவகையான தலைப்புகளை எடுத்து அதை பற்றி கலந்துரையாடிக் கொண்டும் செலவிட்டு வந்ததில் அவர்களுக்குள் இருந்த குடும்ப பிணைப்பு எனப்படும் family bonding இன்னும் வலிமை பெற்று பல நல்ல தருணங்களை பரிசளித்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்.
அவர்களின் வழக்கமான வாழ்க்கையிலிருந்து இந்த இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு அவர்களுக்கு கொடுத்த இந்த இனிமையான இடைவேளைக்கு நன்றி தெரிவித்தாள் ராஜம்.
நமக்கு கிடைப்பதை/நடப்பது (நல்லதோ கெட்டதோ) ஏற்றுக்கொண்டு அதிலிருக்கும் துன்பங்களை, கஷ்ட்டங்களை அல்லது தீயவைகளை நீக்கி நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அதை வளர்த்துக் கொண்டால் நாமும் நம்மைச் சுற்றி உள்ளவர்களும் நன்றாக வாழ ஏதுவாக இருக்கும்.
“இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்”
என்ற திருக்குறளுக்கு ஏற்ப சோதனைகளை/துன்பங்களை/கஷ்டங்களைக் கண்டுக் கலங்காமல் அதை வெல்லக்கூடிய மகிழ்ச்சியை, நம்பிக்கையை மனதில் வளர்த்துக்கொண்டோமேயானால் அவை அனைத்தும் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
மனதில் நல்லெண்ணத்தை பயிரிடுவோம் நன்மையை அறுவடை செய்வோம்.
❤️முற்றும்❤️
அத்தியாயம் 34: மகப்பேறு காலம் ஆரம்பம்

மனதில் வருத்தம், கண்களில் கண்ணீர் நடையில் வேகம் என சென்றுக் கொண்டிருந்த மிருதுளாவின் பின்னால் வேகமாக நடந்தும் ஓடியும் அவளை பிடிக்க சென்றான் நவீன். அவள் நேராக வீட்டின் வாசலில் சென்று அமர்ந்தாள். ஒரு இரண்டு நிமிடங்களில் நவீனும் வீட்டிற்கு வந்து சேரந்தான். வாசலில் அமர்ந்திருந்த மிருதுளாவிடம்..
“ஏய் என்ன மிருது இவ்வளவு வேகமா நடந்துண்டேயிருக்க. நான் வர்றேனா இல்லையான்னு கூட பார்க்காம நீ பாட்டுக்கு வந்துண்டிருக்க!! என்ன ஆச்சு ஏன் இப்போ உன் கண்லேருந்து கண்ணீர் வர்றது? சரி ஆத்துக்குள்ள ஃபர்ஸ்ட் வா.”
என்று கதவைத் திறந்தான் நவீன். மிருதுளா வேகமாக வீட்டினுள் நுழைந்து நேராக கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள். என்ன நேர்ந்தது என்று புரியாமல் “என்ன ஆச்சு?” என்ற கேள்வியை அவளிடம் இரண்டு மூன்று முறை கேட்டும் பதில் இல்லாததால் நவீனும் பேசாமல் அவளருகே அமர்ந்தான். சிறுது நேரம் மௌனத்திற்கு பிறகு எழுந்து நவீனைப் பார்த்து …
“ஏன் நவீ நான் கன்சீவ் ஆனதில் உங்களுக்கு சந்தோஷம் தானே?”
“இது என்ன கேள்வி மிருது?”
“ப்ளீஸ் சொல்லுங்கோ”
“ஆஃப்கோர்ஸ் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் தான். நானும் அப்பா ஆக போறேன்னு எனக்கு சந்தோஷம் இருக்காதா என்ன! இப்போ ஏன் உனக்கு சடன்னா இப்படி ஒரு டவுட்டு”
“இல்ல இன்னிக்கு நான், நீங்க, என் பேரன்ட்ஸ் எல்லாருமே அந்த செய்திக்காக எதிர்ப்பார்த்து தெரிஞ்சதும் எவ்வளவு ஹாப்பியானோம் … இவ்வளவு ஏன் அதை சொல்லும் போது டாக்டரும் கூட எவ்வளவு சந்தோஷமா சொன்னா… எல்லாருக்கும் மகிழ்ச்சி கொடுத்த விஷயம் ஏன் உங்க ஆத்துல யாருக்குமே பிடிக்கலை?”
“ஆமாம் நானும் கவனிச்சேன் ஏதோ சொல்லனுமேன்னு “சந்தோஷம்ன்னு” சொன்னா…அதுக்கு நீ ஏன் கவலை படணும்? ஏன் கண்கலங்கின?”
“அதோட நிப்பாட்டிருந்தா எனக்கும் பெரிசா சங்கடம் இருந்திருக்காது ஆனா உங்க அம்மா வெடுக்குன்னு …”
“என்ன சொன்னா ? அதை தானே அப்போலேந்து கேட்டுண்டிருக்கேன்!”
“”என்னத்துக்கு இவ்வளவு அவசர பட்டே” ன்னு கேக்கறா!!! எனக்கு எப்படி இருந்திருக்கும் சொல்லுங்கோ. எந்த ஒரு அப்பா அம்மாவும் அவா தாத்தா பாட்டி ஆக போறான்னா சந்தோஷமா தான் ஃபீல் பண்ணுவா ஆனா இவா என்னடான்னா என்னத்துக்குன்னு கேட்கறா. உங்க ரம்யா சித்திக் கூட நாம ஃபர்ஸ்ட் டைம் போனபோது ப்ளானிங் ன்னு எல்லாம் குழந்தைய தள்ளிப் போடாதீங்கோ மாக்ஸிமம் ஒரு ஆறு மாசம் நம்மளுக்குன்னு எடுத்தா போறும்ன்னு சொன்னா தெரியுமா!! உங்க அம்மாக்கு நான் பிடிக்காத மாட்டுப்பொண்ணாவே இருந்துட்டுப் போறேன் ஆனா எப்படி அவா பேரக் குழந்தை வரப்போறத கூட என்னை அசிங்க படுத்தவே யூஸ் பண்ணறா…ச்சீ …என்னை வந்த நாள்லேருந்து என்னென்னவோ சொல்லிருக்கா … நான் எதையாவது உங்ககிட்ட வந்து சொல்லிருக்கேனா? இல்லை அவா கிட்டதான் சண்டைக்கு போனேனா? இத என்னால தாங்க முடியலை…இப்படியுமா பழிவாங்கறதுக்காக பேசுவா? நான் அப்படி என்ன தான் அவாளுக்கு செய்துட்டேன்? எனக்கு ஆற மாட்டேங்கறது!!!”
“அது ஒண்ணுமில்லை நான் உன்னை கல்யாணம் பண்ணிண்டது அவாளுக்கு பிடிக்கலை. அவா உன்னை வேண்டாமன்னு சொல்லியும் நான் உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லி அத செய்தது அவாளுக்கு கோபம். சொன்னா சொல்லிட்டுப் போறா விட்டுத்தள்ளு மிருது. நாம சந்தோஷமா இருக்கோமா அது தான் முக்கியம் புரிஞ்சுதா!!”
“அதெல்லாம் உங்களுக்குள்ள அதுல என் தப்பு என்ன சொல்லுங்கோ? நாம என்ன லவ் பண்ணியா கல்யாணம் பண்ணிண்டோம்? என் மேல ஏன் அந்த வெறுப்ப கொட்டணும்? எப்படி அப்படி ஈசியா விட்டுட சொல்லறேங்கள் நவீ ? ஏதாவது மூணா மனுஷா சொல்லிருந்தா விட்டுடலாம் ஆனா சொன்னது உங்க அம்மா …இந்த வலி என் வாழ்நாள் முழுவதும் இருக்கும் நவீ”
“புரியறது மிருது சொல்லிட்டா இப்போ அள்ளவா முடியும்?”
“அவாளால அள்ளவும் முடியாது என்னால மறக்கவும் முடியாது. அவா சொல்படி நான் அவசரப்பட்டு வந்த என் குழந்தையைப் பத்தி இனி நான் அவா கிட்ட எதையுமே ஷேர் பண்ணமாட்டேன். நீங்களும் என்னை சொல்ல சொல்லி வற்புறுத்தக் கூடாது. ஓகே வா?”
“அவா அப்படி பேசி அவா உரிமைய இழந்துட்டா ஸோ நான் உன்னை வற்புறுத்த மாட்டேன். நீ மொதல்ல கண்ணை தொட மிருது. அழறத நிப்பாட்டு ப்ளீஸ்”
“ஓகே ஓகே”
வெளியே குல்ஃபி வண்டி மணி ஓசை கேட்டதும் …
“உன் ஃபேவரைட் வண்டி வந்துடுத்து மிருது. என் வீட்டு பெரிய குழந்தை அழறதேன்னு குல்ஃபிகாரன் நம்ம ஆத்து வாசலேருந்து நகராம இங்கேயே நிக்கறான் பாரேன் !!! நாம வாங்காம நகர மாட்டான் போல….இரு நான் போய் ரெண்டு குல்ஃபி வாங்கிண்டு வந்துடறேன்”
“இரண்டு கேசர் குல்ஃபி குடுப்பா. நாளைலேருந்து இப்படி இங்கேயே நின்னா நாங்க வாங்குவோம்ன்னு நினைக்காதே சரியா. வேணும்னா நாங்களே வாசலில் நிப்போம்.”
“இந்தா மிருது உனக்கு பிடிச்ச கேசர் குல்ஃபி”
“என்ன குல்ஃபி குடுத்து ஐஸ்ஸா!!!”
“அச்சசோ அதெல்லாம் ஒண்ணுமில்லைமா… ஏதோ அவன் இந்த நேரம் பார்த்து வந்தான் …சரி உனக்கும் பிடிக்குமேனுட்டு வாங்கினேன். குல்ஃபி குடுத்து குழந்தை அழறத நிப்பாட்டலாமேன்னு ஒரு நல்ல எண்ணத்தில் தான் வாங்கினேன்”
“எந்த குழந்தை அழறதாம் இங்க?”
“ம்….என் மாமியார் அம்புஜத்தின் குழந்தை மிருது பாப்பா தான் வேற யாரு?”
“ம்…ம்… அப்படியா அப்போ இந்த பாப்பா சாப்பிட்ட குல்ஃபி ஐஸ் குச்சியை பாப்பாக்கிட்டேருந்து வாங்கிண்டு போய் டஸ்ட்பின்ல போடுங்கோ பார்ப்போம்”
“போட்டுட்டா போச்சு!! அதுக்கு பாப்பா எனக்கு ஒரு உம்மா தருமாமே”
“ஐய்யே அதை எல்லாம் உன் பொண்டாட்டி மிருதுளான்னு இருக்கா ல அவகிட்ட கேளு போ போ”
ஹா! ஹா! ஹா! ஹா! ஹா! ஹா!
என இருவருமாக சிரித்து நடந்ததை சற்று மறந்து உறங்கினார்கள்.
செவ்வாய்க்கிழமை விடிந்ததும் வழக்கம் போல் நவீன் ஆபீஸுக்கு கிளம்பினான். அப்போது மிருதுளா..
“என்னப்பா நீங்களும் ஆபீஸுக்கு போயிட்டா வீடே வெறுச்சோடி இருக்குமே”
“நல்லாருக்கே அதுக்காக நான் லீவெடுக்க முடியுமா பெண்ணே!!! சரி நீ ஒழுங்கா சாப்பிடு. மாத்திரையை கரெக்டா போட்டுக்கோ. நான் வரட்டுமா. நீ டிவி பாரு இல்லாட்டி உன் படிப்பை கன்டின்யூ பண்ணு. கீப் யுவர் செல்ஃப் பிசி. ஓகே வா. சிரிச்ச முகத்தோட வழியனுப்பு மிருது. இந்த உம்மு மூஞ்சி உனக்கு செட் ஆகலை”
“ஈ.ஈ.ஈ.ஈ.ஈ.ஈ போறுமா”
“அம்மாடியோ இது கொஞ்சம் ஓவரா இருக்கே”
“சரி சரி பத்திரமா ஆபீஸ் போயிட்டு வாங்கோ. பை நவீ”
“பை மிருது டேக் கேர்”
நவீன் ஆபீஸ் சென்றதும் கதவை தாழிட்டு உள்ளே வந்தவளுக்கு தனது அம்மா அப்பா தம்பிகள் எல்லாரும் அமர்ந்திருப்பது போல தோன்ற சற்று கண்ணில் கண்ணீர் வடிந்தது. வேகமாக அதை துடைத்துக்கொண்டு அடுப்படிக்குள் சென்று வேலைகளை முடித்து பின் குளித்து சற்று நேரம் படித்துக்கொண்டே உறங்கிப்போனாள். சட்டென பசியால் கண்விழித்து பார்த்தாள் மணி இரண்டாகியிருந்தது. மெல்ல கட்டிலில் இருந்து இறங்கி சென்று சாப்பாடு சாப்பிட்டு பின் டிவியை போட்டாள் அதில் திரைப்படம் ஒடிக்கொண்டிருந்தது. அப்படியே தலையணையை தரையில் போட்டு படுத்தவாறே திரைப்படத்தைப் பார்த்து முடிக்கவும் மணி நாலாகவும் சரியாக இருக்க எழுந்து முகம் கை கால் கழுவி விளக்கேற்றி வாசல் கதவைத் திறந்து வைத்து வெளிய வாசல் படியிலிருந்து கேட் வரை நடந்துக்கொண்டே நவீனுக்காக காத்திருந்தாள். அப்போது பக்கத்து வீட்டு லதா மிருதுளாவிடம்..
“என்ன மிருதுளா ஹஸ்பன்ட்டுக்காக வெயிடிங் ஆ!!”
“ஆமாம் லதா அக்கா.”
“என்ன முகமெல்லாம் பிரகாசமா இருக்கே. எனி குட் நியூஸ் மிருதுளா?”
“ஆமாம் லதா அக்கா நான் கன்சீவ் ஆகிருக்கேன்”
“வாவ்!! வாழ்த்துக்கள்”
“அம்மா அம்மா என்னோட ரெக்கார்ட் புக்க பார்த்தயா நான் டியூஷன் போறதுக்கு நேரமாச்சு”
“சரி மிருதுளா நாம அப்பறம் பேசலாம் அவன டியூனுக்கு அனுப்பனும் நான் வரேன். டேக் கேர்”
“ஓகே லதா அக்கா”
“ஹேய் மிருது வாசல்ல என்ன பண்ணிட்டு இருக்க?”
“உங்கள் வரவுக்காக தான் வெயிட்டிங்”
“இரு பைக்கை நிப்பாட்டிட்டு வந்துடறேன்”
“வாங்கோ. இந்தாங்கோ காபி. இன்னைக்கு ஏன் லேட்? க்ளாஸ் வேற போகணுமில்லையா!”
“ஆமாம் மிருது இன்னைக்கு கொஞ்சம் வர்க்லோடு அதிகம் அதுதான் லேட் ஆயிடுத்து. க்ளாஸுக்கும் நேரமாகிடுத்து. எப்பவும் போல காபி சூப்பர். நான் க்ளாஸுக்கு போயிட்டு வரேன் பத்திரமா இரு. பை”
“ஓகே பை”
க்ளாஸ் முடிந்து வந்ததும் இருவருமாக இரவுணவு உண்டபின் கணக்கு பார்க்க அமர்ந்தனர். ஊரிலிருந்து வந்தவர்களை வெளியே கூட்டிக்கொண்டு சென்றது, சுற்றுலா ஏற்பாடு செய்தது, அவர்களுக்கு டிரஸ் எடுத்துக்கொடுத்தது மற்றும் அவர்களுடன் வெளியே சாப்பிட்டது என எல்லாவற்றையும் கூட்டி அவற்றை கையிருந்த பணத்திலிருந்து கழித்தால் கையில் மீண்டும் ஐநூறே மிஞ்சியது. அதுவும் அது ஜூலை மாத ஆரம்பம் தான் ஆகியிருந்தது.
ஒரு மாதம் அவர்கள் அந்த ஐநூறில் தான் குடும்பத்தை ஓட்ட வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கையிலே மிருதுளா அடுப்படிக்குள் சென்று ஒரு ஐநூறு ரூபாய் எடுத்து வந்தாள். எங்கிருந்து வந்தது அந்த ஐநூறு என நவீன் கேட்க அது தனது அப்பாவும் அம்மாவும் ஊருக்கு செல்லும்முன் வற்புறுத்தி அவள் கையில் திணித்த பணம் என்றும் அதை அஞ்சறைப் பெட்டியினுள் போட்டு வைத்தது ஞாபகம் வந்ததென்றும் கூறி நவீனிடம் கொடுத்து …
“மளிகை ஜாமான்கள் மீதமிருக்கு மாதாமாதம் வாங்குவது போல வாங்க வேண்டியிருக்காது. காய்கறிகள் அப்பா வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்தது ஒரு இரண்டு வாரததுக்கு வரும்… ஆக வெளியே செல்வது சாப்பிடுவதை மட்டும் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்தால் போறும்… என்ன சொல்லறேங்கள் நவீ”
“ஓகே நீ சொன்னா அதுக்கு அப்பீலே கிடையாது மேடம். அப்படியே ஆகட்டும். ஆனா அதுக்காக உனக்கு ஏதாவது சாப்பிடனும்னு தோணித்துன்னா காசில்லையேன்னு எல்லாம் யோசிக்காம கேட்கனும் சரியா”
“ஷுவரா கேட்கறேன்”
ஜூலை மாதத்தை மிகவும் ஜாக்கிரதையாக செலவழித்து கழிக்க முடிவெடுத்து அதுபடியே நடந்துக்கொண்டனர் இருவரும். ஆகஸ்டு மாதம் வந்தது கையில் மீதமிருந்தது முன்னூறு ரூபாய். அந்த மாதம் சம்பளம் எல்லா பிடிப்பும் போக ஐயாயிரம் வந்தது. ஆனால் அந்த மாதம் எல்லா மளிகையும் அரிசி உற்பட வாங்க வேண்டியிருந்தது. பால், காய்கறி, பழங்கள், என எல்லா செலவுகளும் போக கையிருப்பு அதே ஆயிரம் தான். அந்த மாதம் திருமணத்திற்கு பின் முதல் முறை இருபதாம் தேதி மிருதுளாவின் பிறந்தநாள் வந்தது. அதற்கு அவளுக்கு விலைவுயர்ந்த பரிசுப் பொருள் வாங்கிக்கொடுக்க மனமிருந்தும் பணமில்லாமல் போனது நவீனுக்கு. அன்றைய தினம் அவளை கோவிலுக்கு கூட்டிச் சென்று தலைநிறைய பூ வாங்கிக் கொடுத்து வைத்துக்கொள்ளச் செய்து வீட்டுக்கு வந்ததும் அவளுக்கென அவளுக்கு பிடித்த ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் ஒரே ஒரு பீஸ் மட்டும் வாங்கிக்கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெறிவித்தான் நவீன்….மிருதுளாவும் மகிழ்ச்சியாக அதை கட் செய்து நவீனுக்கு ஒரு பீஸ் ஊட்டிவிட்டு தானும் சாப்பிட்டாள். அதைப் பார்த்த நவீன்…
“ஏன் ஒரே ஒரு பீஸ் கேக் தான் வாங்கிருக்கேங்கள்ன்னு கேட்க மாட்டியா மிருது. ஆர் யூ அப்செட் வித் மீ”
“நாட் அட் ஆல் நவீ. நம்ம நிதி நிலவரம் தெரிந்தும் நான் எப்படி அப்படி கேட்பேன்னு நீங்க நினைக்கலாம்? உங்க கிட்ட நிறைய பணமிருந்து எனக்கு செய்யலைன்னா கேட்டிருப்பேன். நாம ரெண்டு பேருமா தானே வரவு செலவெல்லாம் பார்த்துக்கறோம் அப்புறம் என்ன கேள்வி இது”
“சரி சாரி”
“என்னது”
“ஓகே மை சாரி வாப்பஸ் வாங்கிக்கறேன். இப்போ நாம ரெண்டு பேருமா நம்ம கேன்டீன் பக்கத்துல இருக்கற டாபாக்கு போய் டின்னர் சாப்பிடலாம் வா”
“ஆர் யூ ஷுவர் அபௌட் ஹாவிங் டின்னர் அவுட் சைட்? நவீ!!”
“அதுக்கு வேணும்ன்னு தான் நான் கேக்கை கட் ஷாட் பண்ணிட்டேன். வா போயிட்டு வந்துடலாம்”
இருவருமாக சென்று உணவருந்தியதும் நவீன் …
“ஹேய் மிருது உங்க அப்பா அம்மாட்ட பேசணுமா”
“பேசலாம் ஆனா”
“என்ன ஆனா. வா பேசிட்டே போகலாம். மீட்டர்ல ஒரு கண்ணு வச்சுக்கோ எழுபத்தி அஞ்சு ரூபாய் வரைக்கும் நோ ப்ராப்ளம்”
“எனக்கே வா…ஓகே ஓகே நான் பார்த்துக்கறேன்.”
என கூறி அந்த கண்ணாடி ரூமிற்குள் சென்று பேசலானாள். சரியா ஐம்பது ரூபாயை எட்டியதும் பை சொல்லி ஃபோனை கட் செய்து வெளியே வந்து…
“உங்களை விசாரிச்சதா சொல்ல சொன்னா”
“இன்னும் இருபத்தி அஞ்சு ரூபாய்க்கு பேசிருக்கலாமே ஏன் அவசரம் அவசரமா கட் பண்ணிட்ட?”
“என்னத்த அதே தான் …பத்திரமா இரு, ஒழுங்கா சாப்பிடு, உடம்பை பார்த்துக்கோ இப்போ நீ தனி ஆள்ளில்லை இரண்டு பேருக்கு சாப்பிடனும்ன்னு சொன்னா எல்லாரும் நல்லாயிருக்காலாம் நாமும் நல்லா இருக்கோம்ன்னு சொன்னேன் அவ்வளவு தான் மீதி நேர்ல பார்க்கும் போது பேசிக்க வேண்டியது தான்”
“ஓ ஓகே தென் வீட்டுக்கு போகலாமா?”
“எஸ் போகலாம்”
அன்றிரவு தூக்கத்தில் மிருதுளா எழுந்து நவீனிடம் சாதமும் அவியலும் வேணுமென்று சொல்ல நவீன் செய்வதறியாது மறுநாள் விடிந்ததும் செய்து தருவதாக சொல்லி தண்ணீர் குடிக்க வைத்து அவளை தூங்க வைத்தான்.
மறுநாள் காலை எழுந்து காபி குடித்ததும் வாந்தி எடுத்தாள் மிருதுளா. அதைப் பார்த்ததும் என்ன ஆச்சோ ஏதாச்சோ என்று பயந்துப் போனான் நவீன் அப்போது டாக்டர் சொன்னது அவனுக்கு ஞாபகம் வந்தது உடனே அவள் நெற்றியை பிடித்துக் கொண்டான். இதே போல் காலை காபி குடித்ததும், குக்கர் திறந்ததும் என ஒவ்வொரு முறையும் வாந்தி எடுத்து எடுத்து எதுவும் சரியாக சாப்பிடாமலானாள் மிருதுளா. மகப்பேறு காலத்தின் ஆரம்ப கால பிரச்சனைகளைப் பார்த்த நவீன் அதை தனது ரம்யா சித்தியிடம் கூற அவரும் மிருதுளாவிற்கு பிடித்த இனிப்பு பலகாரம் எது என்று நவீனிடம் கேட்டு அதேபோல தெறட்டிப்பால் செய்து எடுத்துக் கொண்டு மிருதுளாவை பார்க்க வந்தார்.
“ஹை ரம்யா சித்தி வாங்கோ வாங்கோ. எவ்வளவு நாளாச்சு உங்கள பார்த்து”
“ஹேய் மிருதுளா வாழ்த்துக்கள். அம்மா ஆக போற. நவீன் நேத்து ஃபோன் பண்ணிருந்தான். ஆமாம் நீ சரியாவே சாப்பிடறதில்லையாம். என்ன யாம்…பார்த்தாலே தெரியறதே..ஆளு பாதியாகிருக்க. இங்க பாரு மிருது வாந்தி எல்லாம் அப்படி தான் வரும் அதுக்காக சாப்பிடாம இருக்கக் கூடாது புரியறதா. நீ இப்படி இருந்தா பாவம் நவீனுக்கு எவ்வளவு கஷ்டம்…புரிஞச்சுக்கோமா”
“ஓகே சித்தி டிரை பண்ணறேன். காபி யா டீ யா எது போடட்டும்”
“ஒண்ணும் வேண்டாம் இதோ இந்த ஐஸ் வாட்டர் போறும். நான் கிளம்பறேன் என் பொண்ணுகளும், சித்தப்பாவும் வீட்டுக்கு வர்ற நேரமாச்சு மா. நான் வரட்டுமா. நவீன்ட்ட சொல்லு. இன்னொரு நாள் நாங்க எல்லோருமா வர்றோம். பை”
நவீன் தனது மாமியாரிடமும் மிருதுளா படும் பாட்டை ஃபோன் போட்டு சொல்ல அம்புஜத்திற்கு இருப்பு கொள்ளாமல் தனது கணவன் மற்றும் மகனிடம் ….தான் குஜராத் சென்று மிருதுளாவை ஒரு மாசம் பார்த்துக்கொண்டு அவளுக்கு வேண்டியதை செய்து கொடுத்துவிட்டு வருவதாகவும் அந்த ஒரு மாதம் கணவரும் மகனும் அட்ஜஸ்ட் செய்யுது கொள்ளமுடியுமா என்றும் கேட்டாள். அதற்கு வேனு..
“அம்மா நாங்க ரெண்டு பேரும் இருந்துப்போம் நீ போய் மிருதுக்காவுக்கு என்ன வேணுமோ செய்து கொடும்மா நாங்க எங்களைப் பார்த்துக்கறோம் என்னப்பா உனக்கும் ஓகே தானே?”
“எனக்கும் ஓகே தான். ஆனா அடுத்த மாசம் என்ன பண்ணுவா”
“இந்த மாசம் தான் வாந்தி எல்லாம் ரொம்ப இருக்கும் அடுத்த மாசத்துக்கு அடுத்த மாசம் தீபாவளிக்கு இங்க வந்துடுவாளே.”
“ஓ சரி சரி அப்போ எப்போ டிக்கெட் புக் பண்ணணும்?”
“வர்ற சனிக்கிழமை கிளம்பட்டுமா”
“சரி அப்போ சனிக்கிழமைக்கே புக் பண்ணிடுறேன். நாளைக்கு மாப்ளைக்கும் ஃபோன் போட்டு சொல்லிடறேன். நீ சம்மந்திட்ட சொல்லிடு”
“சரி அப்படியே செய்துடறேன். டேய் வேனு பத்திரமா இருடா. அவனுக்கு வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பாடு கொடுங்கோ”
“அம்மா அதெல்லாம் நானும் அப்பாவும் பார்த்துக்கறோம். நீ நிம்மதி யா போய் அக்காவ பார்த்துக்கோ”
மறுநாள் காலை ராமானுஜம் நவீனின் ஆபீஸுக்கு ஃபோன் போட்டு உதவிக்கு அம்புஜம் புறப்பட்டு வருவதாக கூற அதற்கு நவீன் தனது நன்றியை தெரிவித்தான். அம்புஜம் பர்வததிற்கு ஃபோன் போட்டு தான் மீண்டும் குஜராத் செல்லவிருப்பதை கூற அதற்கு பர்வதம் ..
“இன்னும் ரெண்டே மாசம் கழிச்சா அவாளே வர்றப் போறா அப்புறம் என்னத்துக்கு இப்போ போறேங்கள்?”
“இல்ல மாமி மிருதுக்கு வாந்தி, தல சுத்தல் எல்லாம் ஜாஸ்த்தியா இருக்காம். சரியா சாப்ட மாட்டேங்கறாளாம். மாப்ளைக்கும் லீவு போட முடியலையாம். இந்த ஒரு மாசம் மட்டும் போய் பார்த்துண்டுட்டு வந்திடலாம்ன்னு இருக்கேன். பாவம் கொழந்தை எவ்வளவு கஷ்டப்படறாளோ.”
“அப்படி எதுவும் எங்ககிட்ட அவன் சொல்லலையே….சரி சரி நீங்க குஜராத் போயிட்டா அப்போ உங்காத்து மாமாவையும் வேனுவையும் யார் பார்த்துப்பா?”
“அவா ரெண்டு பேரையும்..அவாளே பார்த்துப்பா. ஒரு மாசம் தானே. நான் மிருது படற கஷ்டத்தை சொன்னதும் ரெண்டு பேருமே மொதல்ல போய் அவளப் பார்த்துக்கோன்னு தான் சொன்னா”
“ஓ அப்படியா. சரி எப்போ கிளம்பறேங்கள்”
“வர்ற சனிக்கிழமை நைட். அதுதான் உங்ககிட்டயும் ஒரு வார்த்த சொல்லிடலாம்ன்னு ஃபோன் பண்ணினேன் மாமி. மாமா கிட்டயும் சொல்லிடுங்கோ.”
“சரி சரி போயிட்டு வாங்கோ உங்க பொண்ணாத்துக்கு. நான் ஃபோனை வச்சுடவா”
“சரி மாமி. உங்க புள்ளட்ட இல்ல மிருதுட்ட ஏதாவது சொல்லணுமா….”
என்று அம்புஜம் கேட்டதுக்கு பதில் ஏதும் கூறாமல் ஃபோனை கட் செய்தாள் பர்வதம். அதிலிருந்தே அம்புஜத்திற்கு புரிந்தது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பது. ஆனால் அதை எல்லாம் பார்த்தால் தன் மகள் தான் கஷ்டப்படுவாள் என்று மனதில் எண்ணிக்கொண்டு ஃபோனை வைத்து விட்டு ஊருக்கு கிளம்ப தயார் ஆனாள்.
அன்று மாலை நவீன் ஆபீஸிலிருந்து வந்ததும்
“மிருது….நீ சந்தோஷப் படறா மாதிரி ஒரு நியூஸ் கொண்டு வந்திருக்கேன்”
“என்னது நவீ?”
“வர்ற திங்கட்கிழமை காலை ல உன்ன பார்த்துக்க… உனக்கு பிடிச்சதெல்லாம் செய்து தர …ம்…ம்…நீ கேட்ட அவியல் செய்து தர உன் அம்மா இங்கே வரப் போறா”
“ஹேய் என்னப்பா சொல்லறேங்கள் நிஜமாவா!!”
“ஆமாம் இன்னைக்கு காலை ல உன் அப்பா ஃபோன் பண்ணிச் சொன்னார்”
“அப்போ அப்பாவையும் வேனுவையும் யார் பார்த்துப்பா? அம்மா இங்க வந்துட்டான்னா?”
“அவா ரெண்டு பேருமே அவாள பார்த்துக்கறோம்ன்னு சொல்லி உங்க அம்மாவை உனக்காக அனுப்பி வைக்கறா. தே ஆர் கிரேட்”
“ஒரு பக்கம் அம்மா வராளேன்னு சந்தோஷமா இருந்தாலும் …. அப்பாவையும் வேனுவையும் நினைச்சா பாவமாயிருக்கு”
“லெட்ஸ் வெயிட் ஃபார் மன்டே”
சனிக்கிழமை வந்தது அம்புஜத்தை ரெயிலில் ஏற்றி விட்டனர் ராமானுஜமும் வேனுவும். அதுவரை தனியாக எந்த வெளி மாநிலத்துக்கும் (வெளியூருக்கு கூட) பிரயாணம் செய்திராத அம்புஜம் ஏதோ பெண்ணை பார்க்க வேண்டும் அவளுக்கு பிடித்ததை எல்லாம் செய்துக் கொடுத்து அவளை தேற்ற வேண்டுமென்ற ஆசையில் ரெயில் ஏறிவிட்டாள். ரெயிலும் புறப்பட்டது.
தொடரும்….
அத்தியாயம் 33: சந்தோஷமும் சங்கடமும்

காலை சூரியனின் கதிர்களில் ஒன்று மிருதுளாவின் இமைகளை தட்டி திறந்து கண்களால் தன்னைப் பார்க்கும் படி மிகவும் தொந்தரவு செய்ய அவளும் அதிலிருந்து நகர்ந்து படுத்தும், போர்வையை கொண்டு முகத்தை மூடியும் உறக்கத்தை தொடர நினைத்து கடைசியில் சூரியக்கதிரிடம் தோற்றுப்போய் விழித்து கடிகாரத்தைப் பார்த்தாள். மணி எட்டு காட்டியது. விரைந்து எழுந்தாள். கட்டிலின் எதிரில் தரையில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த நவீனிடம்….
“குட் மார்னிங் நவீ. என்னப்பா என்னை எழுப்பிருக்கலாம் இல்லையா!! மணி எட்டாச்சே”
“ஸோ வாட்? நீ நல்லா தூங்கிண்டிருந்த அதனால எழுப்பலை…இப்போ அப்படி சீக்கிரம் எழுந்து என்ன பண்ணணும் உனக்கு?”
“இல்ல இவ்வளவு நேரம் தூங்கிட்டேனேன்னு இருக்கு”
“இட்ஸ் ஓகே மிருது. நீ போய் ப்ரஷ் பண்ணிட்டு வா காபி போட்டுத் தர்றேன்.”
“நீங்க குடிச்சாச்சா?”
“ஓ! குடிச்சிட்டேன்”
ப்ரஷ் செய்து முகம் கழுவி விட்டு டவலில் முகத்தைத் துடைத்துக் கொண்டே …
“நவீ நீங்க எப்போ எழுந்துண்டேங்கள்?”
“நான் ஒரு ஏழு மணிக்கு எழுந்து கொஞ்ச நேரம் சும்மா படுத்துண்டே இருந்துட்டு அப்பறம் ஏழரைக்கு கட்டிலை விட்டு இறங்கி ஃப்ரெஷ் ஆகி காபி போட்டு குடிச்சிட்டு நியூஸ் பேப்பர் படிக்க உட்கார்ந்தேன் நீ எழுந்துண்ட்ட. சரி சரி இந்தா என் காபி குடிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு”
“என்னமோ ஃபர்ஸ்ட் டைம் போடறா மாதிரி கேட்கறேங்கள்!”
“ஒவ்வொரு தடவையும் கேட்டா என்ன தப்பு. ஏன் நீ சொல்ல மாட்டியா?”
“ஓகே ஓகே!!! இருங்கோ குடிச்சுட்டு சொல்லறேன்”
“அப்படி வா வழிக்கு”
“சூப்பரா இருக்கு நவீ. தாங்க்ஸ்….ஊப்ஸ் தாங்க்ஸ் வாப்பஸ் வாங்கிக்கறேன்”
“சரி இன்னைக்கு நாம வெளில போகலாமா?”
“எங்க போகணும். எனக்கு என்னவோ ரொம்ப சோம்பலா இருக்கு. இன்னைக்கு வேண்டாமே. சாயந்தரமா ஒரு வாக் போகலாம் என்ன சொல்லறேங்கள்?”
“டன். காலை ல டிஃபன் என்ன?”
“என் அம்மா இருந்திருந்தா இந்த நேரம் ப்ரேக் ஃபாஸ்ட் ரெடி ஆகிருக்கும்…ம்..என்ன பண்ண!! மாவு இருக்கு தோசை சுடவா? கொத்தமல்லி சட்னி ஃப்ரிட்ஜில் இருக்கு. அத தொட்டுண்டு சாப்பிடலாம்.”
“நான் சுட்டுத் தரட்டுமா தோசையை?”
“நீங்க இதுக்கு முன்னாடி தோசை சுட்டுருக்கேங்களா?”
“இல்லை”
“அப்போ ஏன் விஷப் பரீட்சை. எனக்கு பசி வேற அதனால நானே ரெண்டு பேருக்கும் தோசையை வார்த்து எடுத்துண்டு வரேன் அதுவரை நீங்க உங்க நியூஸ் பேப்பரை படிங்கோ..”
மிருதுளா தோசையை வார்த்து தட்டிலிட்டு நவீனிடம் கொடுத்தாள். அவனும் செய்தித்தாள் படித்தவாறே தோசையை உண்டான். நான்கு சாப்பிட்டதும் போதும் என எழுந்து தட்டை அடுப்படியில் பாத்திரங்கள் கழுவும் தொட்டியில் போட போனபோது மிருதுளா அவனிடமிருந்து தட்டைவாங்கி அதில் அவளுக்கான மூன்று தோசையை சுட்டு போட்டுக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்து சாப்பிடும் போது நவீன் அவளிடம்…
“ஏய் மிருது தட்டை அலம்பி தந்திருப்பேன் ல.”
“ஏன் நீங்க சாப்ட்ட தட்டை அலம்பாம சாப்ட்டா என்ன ஆயிடுமாம்? அட போங்கோப்பா எனக்கு பாத்திரம் கழுவுவதில் ஒரு தட்டு குறையுமோ இல்லையோ அதுக்குத்தான்.”
“ஓகே”
“ஆமாம் தலையில ஏன் துண்டால முண்டாசு கட்டிருக்கேங்கள்? எழுந்ததும் பார்த்தேன் அப்பவே கேட்கனும்ன்னு நினைச்சேன் மறந்துட்டேன்”
“அது வந்து மிருது”
“ஏன் இழுக்கறேங்கள். என்ட்ட சொல்ல என்ன தயக்கம் உங்களுக்கு? சொல்லுங்கோ”
“நான் ஹேர் டிரான்ஸ்ப்ளான்ட் பண்ணிருக்கேன்னு உன்னை பொண் பார்க்க வந்த போதே சொன்னேன் இல்லையா?”
“ஆமாம் ஆமாம் யூ நோ ஒன் திங் நவீ. நான் சொல்ல மறந்தே போயிட்டேன். ஒரு ஜோக். “
“என்ன சொல்லற மிருது”
“என் அம்மா என்ட்ட உங்க ஹேர் பத்தி கேட்டா. அவாளுக்கு என்னன்னு புரியாததால் அது என்னமோ பிரச்சினைன்னு நினைச்சுண்டு அதால எந்த பாதிப்பும் இல்லையேன்னு என்ட்ட கேட்டா பாருங்கோ!!! என்னால சிரிப்ப அடக்கிக்கவே முடியலை. அப்பறம் சொல்லிப் புரிய வைத்தேன்…சரி அதுக்கும் இந்த முண்டாசுக்கும் என்ன சம்மந்தம்”
“நான் அதை ரிமூவ் பண்ணி க்ளீன் பண்ணி வச்சிருக்கேன் அதனால தான் துண்டை முண்டாசு மாதிரி கட்டிண்டிருக்கேன்”
“ஓகே அதை என்ட்ட ஏன் மறைக்கணும்? தலையிலிருந்து அந்த துண்டை கழட்டுங்கோ நான் பார்க்கட்டும்.”
மெல்ல மனதில் ஒரு வகையான தாழ்வு மனப்பான்மையோடு துண்டை எடுத்தான் நவீன். உச்சந்தலையில் முடியில்லாத நவீனை அன்று தான் பார்த்தாள் மிருதுளா. அவளுக்கு நவீனின் தயக்கம் எதனால் என்பது புரிந்தது. முதலில் அவனிடமிருந்து அந்த எண்ணத்தை துடைத்தெறிய முடிவெடுத்து எதுமே வித்தியாசமாக தெரியாதது போல …
“இதுக்கு ஏன் பா துண்டெல்லாம் கட்டிண்டு. என்ன கேட்டா இனி அந்த ஆர்ட்டிபிஷியல் ஹேர் எல்லாம் வேண்டாம். இப்படியே இருங்கோ. நீங்க இப்படி இருக்கறதால எனக்கு எந்த விதத்திலும் சங்கடமோ, பிரச்சினையோ துளி கூட கிடையாது. நீங்க எதையும் மறைக்காம என்கிட்ட இந்த விஷயத்தை சொல்லி என் விருப்பத்தை கேட்ட உங்களோட நேர்மைக்கு தான் உங்களை கல்யாணம் பண்ணிண்டேன். ஸோ இனி இது தேவையில்லை சரியா! எதுவாக இருந்தாலும் நான் இருக்கேன் உங்களோட.”
“எனக்கு தெரியும் ஆனாலும்…..”
“என்னதுக்கு ஆனாலும் எல்லாம்..இந்த டிரான்ஸ்ப்ளான்ட்டை எப்போ பண்ணிண்டேங்கள்?”
“உன்ன பொண் பார்க்க வர்றத்துக்கு ஒரு ஆறு மாசம் முன்னாடி தான் பண்ணிண்டேன்”
“அப்புறமென்ன எனக்கே ப்ராப்ளம் இல்லங்கும் போது வேற யாருக்காக யோசிக்கறேங்கள்?”
“இல்ல மிருது உனக்காக தான் யோசிச்சேன் இப்ப நீயே வேண்டாம்னு சொன்னதுக்கு அப்புறம் இனி இது எனக்கும் தேவையில்லை. லவ் யூ மிருது”
“ஐ லவ் யூ டூ நவீ”
அன்று நவீனின் தாழ்வு மனப்பான்மை உடைந்து சில்லு சில்லாக சிதறிப் போனது. அதுவரை தன் மனைவி என்ன நினைப்பாள், எப்படி எடுத்துக்கொள்வாள் என்றெல்லாம் நான்கு மாதங்களாக அவன் மனதை அறுத்துக் கொண்டிருந்த விஷயத்தை மிருதுளா சட்டென சர்வசாதாரணமாக துடைத்தெறிந்தது நவீனுக்கு சற்று வியப்பாக இருந்தாலும் அவன் மனதில் மிருதுளா கோபுரமாக உயர்ந்து நின்றாள்.
தனது வாழ்க்கைத் துணையாக இருப்பவர் /ள் என்ன நினைப்பார்களோ? இதை சொன்னால் என்ன செய்வார்களோ? எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்றெல்லாம் தனக்குத்தானே எண்ணிக் கொண்டு பலர் பல விஷயங்களை மனம் விட்டு பேசாமலே இருப்பதற்கு ஒன்று அவரவர் அடுத்தவர் மீதுள்ள அச்சம் காரணமாக இருக்கும் மற்றொன்று அந்த கூடயிருப்பவர்களும் ஒரு காரணம் ஆவர். கூடயிருப்பவர் தங்களின் துணைக்கு நம்பிக்கைக் கொடுக்க வேண்டும். எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அந்த சூழலும் நம்பிக்கையும் இவர்களுக்குள் உருவாக நான்கு மாதங்கள் எடுத்துள்ளது.
கணவன் மனைவி அவர்களுக்குள் ஒரு விஷயம் ஒத்துப் போய் ஒரு முடிவெடுத்து ஒன்றை செய்தாலும் சுற்றிலுமிருப்பவர்கள் சும்மா இருப்பார்களா!!!
அன்று மாலை இருவருமாக பேசிக்கொண்டே வாக்கிங் சென்றனர். மிருதுளா நவீனிடம்…
“நேத்து நாம ரெயில்வே ஸ்டேஷன்ல இருந்து திரும்பியதும் அப்பா அம்மாட்ட ஃபோன்ல பேசினேங்களே அவாள்ட்ட சொன்னேங்களா பசங்களையும் என் அப்பா அம்மாவையும் ரெயில் ஏத்தி விட்டாச்சுன்னு? நான் அதப்பத்தி கேட்கவே மறந்துட்டேன் இப்போ இந்த ஃபோன் பூத் பார்த்ததும் தான் ஞாபகம் வந்தது. என்ன சொன்னா அவா?”
“ஒண்ணும் சொல்லலை. சரின்னு சொன்னா அவ்வளவு தான்”
“என்ன பத்தி ஒண்ணும் கேட்கலையா?”
“அப்பா மட்டும் கேட்டா. அதுக்கு நல்லா இருக்கன்னு சொன்னேன். வேற ஒண்ணும் நானும் சொல்லலை அவாளும் கேட்கலை”
என்று பேசிக்கொண்டே நடக்கையில் வழியில் எதிரே நவீனின் நண்பன் சதீஷ் நவீனைப் பார்த்து…
“ஹேய் நவீன் என்ன மறுபடியும் பழைய ஹேர் ஸ்டைலுக்கு போயிட்ட?”
“எனக்கு இந்த நவீனை தான் பிடிச்சிருக்குன்னு நான் சொன்னதும் என் நவீன் அவரை மாத்திக்கிட்டார். ஒல்ட் ஈஸ் கோல்டு இல்லையா சதீஷ்”
“வாவ் சூப்பர் மிருதுளா. சாரி மா நான் வழக்கம் போல அவனை கலாய்ச்சிட்டேன்.”
“அதனால என்ன சதீஷ். நீங்க அவரோட நண்பர் உங்களுக்கில்லாத உரிமையா. ஆனா அது உங்களுக்குள்ள மட்டும் இருந்தா நல்லாயிருக்கும் அவ்வளவு தான்.”
“டேய் நவீன் யூ ஆர் லக்கி டா. சரி அம்மா அப்பா தம்பிங்க எல்லாரும் ஊருக்கு போயாச்சா?”
“நேத்து தான் ரெயில் ஏத்தி விட்டோம் சதீஷ். நாளைக்கு காலை ல ஊர் ல ரீச் ஆவாங்க. உன் சொந்தக்காரங்க எல்லாரும் எப்போ ஊருக்கு கிளம்பறாங்க?”
“எல்லாரும் அடுத்த வெள்ளிகிழமை கிளம்பறாங்க நவீன். சரி என் வைஃப் சில மளிகை சாமான்கள் வாங்கிட்டு வர சொன்னா நான் பாட்டுக்கு உங்க கூட அரட்டை அடிச்சுக்கிட்டு இருக்கேன். ஓகே நீங்க என்ஜாய் பண்ணுங்க நான் கிளம்பறேன் பா. பை நவீன் அன்ட் மிருதுளா”
“பை டா சதீஷ்”
“பை சதீஷ்”
மீண்டும் நடையை தொடர்ந்த போது நவீன் மிருதுளாவின் வலதுகையை தனது இடது கையால் கோர்துப் பிடித்துக் கொண்டான். மிருதுளாவும் நவீனின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு நடந்தாள். அன்றிரவு மன அமைதி, நிறைவு இருவருக்குள்ளும் நிறைந்திருந்தது.
திங்கட்கிழமை காலை விடிந்ததும் எழுந்து குளித்து, டிஃபன் சாப்பிட்டு ஹாஸ்பிடல் சென்று வர தயார் ஆனார்கள் நவீனும் மிருதுளாவும் ஆனால் மணியோ எட்டு தான் ஆகியிருந்தது. ஆனாலும் இருவரும் கிளம்பி ஹால்பிடலுக்கு எட்டரை மணிக்கெல்லாம் சென்றனர். டாக்டர் ஒன்பதரை மணிக்கு தான் வருவார்கள் என தெரிய வர சற்று மனம் தளர்ந்து போனாள் மிருதுளா. அவளின் முகம் வாடியதைக் கண்ட நவீன்…
“மிருது இன்னும் ஒரு ஃபார்டிஃபைவ் மினிட்ஸ் தானே டோன்ட் வரி.”
என கூறிக்கொண்டிருக்கையில் டாக்டர் ரூமிலிருந்து மிருதுளா நவீன் என்று நர்ஸ் கூப்பிட உடனே எழுந்து உள்ளே சென்றனர்.
“நீங்க தான் மிருதுளா வா?”
“ஆமாம் சிஸ்டர். டாக்டர் வந்தாச்சா?”
“இல்லை மா இன்னும் ஒரு ஹாஃபனார் ல வந்திடு வாங்க. அவங்க வர்றத்துக்குள்ள நீங்க போய் இந்த டெஸ்டெல்லாம் குடுத்துட்டு வாங்க. டாக்டர் நேத்தே உங்களுக்கு இதெல்லாம் எழுதி வச்சிட்டாங்க. “
“ஓ அப்படியா. சரி சிஸ்டர் இதெல்லாம் குடுக்க எங்க போகணும்?”
“இப்படியே நேரா போயிட்டு ரைட் எடுங்க அங்க லேப் எல்லாம் இருக்கு அங்க சொல்லுவாங்க”
“ஓகே சிஸ்டர் தாங்க்யூ”
மிருதுளா நர்ஸ் சொன்ன மாதிரியே டாக்டர் எழதிக் கொடுத்த எல்லா டெஸ்டும் கொடுத்துவிட்டு வந்தமர்ந்தாள். அப்போது நவீன்…
“எல்லாம் ஆச்சா மிருது?”
“எஸ் நவீ ஆல் டன்”
“ஓகே குட். டீ குடிக்கறயா?”
“வேண்டாம் பா.”
டாக்டர் வந்தார். மிருதுளா டாக்டரைப் பார்த்து புன்னகைத்தாள். டாக்டரும் தலையசைத்து விட்டு அவர் ரூமுக்குள் சென்றார். மிருதுளாவிற்கு பின் வந்தவர்களை நர்ஸ் ஒவ்வொருவராக அழைக்க நவீனுக்கு சற்று நிதானம் இழந்து நர்ஸிடம் கேட்டான்…
“என்ன சிஸ்டர் இப்ப வந்தவங்களை எல்லாம் உள்ளே அனுப்பறீங்க. நாங்க இங்க கிட்ட தட்ட மூணு மணி நேரமா உட்கார்ந்துட்டிருக்கோம் என் மனைவியை கூப்பிடவே மாட்டேங்கறீங்க”
“சார் உங்க மனைவி ரிப்போர்ட்ஸ் காக வெயிட் பண்ணறோம்”
என்று நர்ஸ் சொல்லிக்கொண்டிருக்கையிலே கம்பௌண்டர் வந்து ஒரு கவரை நர்ஸிடம் நீட்டினார். அதைப் பார்த்ததும் நர்ஸ் நவீனிடம்..
“இதோ ரிப்போர்ட்ஸ் வந்தாச்சு ஒரு ஃபைவ் மினிட்ஸ் இருங்க. உள்ள இருக்குற பேஷன்ட் போனதும் உங்க மனைவியை கூப்பிடுவாங்க”
அதே போல மிருதுளா பெயரை கூப்பிட இருவரும் டாக்டர் ரூமிற்குள் சென்று அமர்ந்து டாக்டரைப் பார்த்துக் கேட்க நவீன் முயற்சிக்கும் போது டாக்டர் உடனே..
“வாழ்த்துக்கள் நவீன் அன்ட் மிருதுளா இட்ஸ் கன்பார்ம்டு. உங்க இருவருக்கும் பெற்றோர் பிரமோஷன் கிடைத்திருக்கிறது.”
“தாங்க்ஸ் டாக்டர்” என நவீனும் மிருதுளாவும் ஒருமித்து சொன்னார்கள்.
“எல்லா ரிப்போர்ட்ஸையும் பார்த்தேன். எவ்ரிதிங் ஈஸ் ஃபைன். சில வைட்டமின் டாப்லெட்ஸ் எழுதறேன் அதை மட்டும் எடுத்துக்கோங்க மிருதுளா. நல்லா சத்தான ஆகாரம் சாப்பிடனும் சரியா. டேக் கேர் ஆஃப் ஹெர் நவீன். இனி நீங்க எப்பப்போ செக்கப் வரணும்ங்கறத நர்ஸ் ஒரு அட்டவணை ல எழுதிக் கொடுப்பாங்க அந்த டேட்ஸ் ல தவறாம செக்கப்புக்கு வந்திடணும் சரியா. பி ஹாப்பி ஆல்வேஸ்”
மீண்டும் நன்றியை தெரிவித்து நர்ஸிடம் டாக்டர் சொன்ன அட்டவணையை வாங்கிக் கொண்டு ஹாஸ்பிடல் விட்டு வெளியே வந்ததும் நவீன் மிருதுளாவை சற்று நேரம் வண்டிப் பக்கத்தில் நிற்க சொல்லிவிட்டு கடைக்குச் சென்று வந்தான். பின் இருவருமாக வீட்டிற்கு வந்தனர். வீட்டினுள் நுழைந்ததும் நவீன் மிருதுளாவைப் பார்த்து…
“மிருது வீ ஆர் கோயிங் டு பி பேரன்ட்ஸ் சூன். இந்தா உனக்கு ரொம்ப பிடிச்ச காட்பெரிஸ் டையரிமில்க் சாக்லெட்.”
“ஓ ஸோ சுவீட் ஆஃப் யூ நவீ. ஆமாம் எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் அம்மாகிட்ட சொல்லனும் போல இருக்கு.”
“ஆனா அவா ஆத்துக்கு போய் சேர இன்னும் அரைமணி நேரமாகுமே. யூ டோன்ட் வரி இன்னைக்கு நான் ஆபீஸ் போகலை. ஒரு மணி நேரம் கழிச்சு ஃபோன் பூத் போய் எல்லாருக்கும் சொல்லலாம் ஓகே”
“ஓகே. சரி எனக்கு காலை ல இருந்து ஒரு மாதிரி டென்ஷன் ஆனது ரொம்ப அசதியாயிருக்கு நான் கொஞ்ச நேரம் தூங்கட்டுமா?”
“இது என்ன கேள்வி மிருது? தூக்கம் வர்றதுன்னா தூங்கு. நான் சமையலை பார்த்துக்கறேன்”
“இல்லை ஒரு மணி நேரத்துல எழுப்பிடுங்கோ போய் ஃபோன் பண்ணி சொல்லிட்டு வரலாம்”
“ஓகே ஓகே இப்போ நிம்மதியா சந்தோஷமா தூங்கு”
மிருதுளா நன்றாக உறங்கினாள். ஒரு மணி நேரமானதும் நவீன் அவளை எழுப்ப முயன்ற போது அவனுக்கு மனம் வரவில்லை சாதாரண நாட்களிலேயே அவளை தொந்தரவின்றி தூங்க விடும் நவீன் அன்று அவளா எழுந்திரிக்கும் போது எல்லாருக்கும் சொன்னால் போதும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் ஏனெனில் அவள் மட்டுமா உறங்குகிறாள் அவளுள் அவன் பிள்ளையும் அல்லவா உறங்குகிறது. அவளை எழுப்பினால் இருவரும் எழுந்திடுவார்களே என எண்ணி அவனும் அவளருகே படுத்துறங்கிப் போனான். நவீன் உறங்கின சில மணி நேரத்தில் மிருதுளா எழுந்தாள்.
பக்கத்தில் நவீன் உறங்குவதைப் பார்த்தாள். கடிகாரத்தையும் பார்த்தாள். மணி இரண்டாகியிருந்தது. டைமை பார்த்ததும் அவளுக்கு பசி எடுக்க நவீன் ஏதாவது சமைத்து வைத்திருக்கிறானா என்று பார்க்க மெல்ல கட்டிலிலிருந்து இறங்கும் போது நவீன் விழித்துக் கொண்டான்.
“மிருது எங்க போற?”
“மணி என்ன ஆச்சு தெரியுமா? ரெண்டு ஆச்சு. எனக்கு பசிக்கறது.”
“ஊப்ஸ்…. நானும் உன் கிட்ட படுத்துண்டு இவ்வளவு நேரம் தூங்கிட்டேன். நான் போய் டாபாலேந்து சாப்பாடு வாங்கிண்டு ஒரு பத்தே நிமிஷத்துல வந்துடறேன் இரு.”
என்று கூறிக்கொண்டே கிளம்பி சென்றான் நவீன். அவன் சொன்னது போலவே பத்தே நிமிடத்தில் வராவிட்டாலும் சிறிது நேரத்தில் வந்தான். அவன் வருவதற்குள் மிருதுளா இரண்டு தட்டு, குடிக்க தண்ணீர், கரண்டிகள் என எல்லாவற்றையும் ஹாலில் எடுத்து வைத்திருந்தாள். சாப்பாட்டை வாங்கி வந்ததும் இருவரும் சாப்பிட்டார்கள். மிருதுளா பசி அடங்கியப் பின் நவீனிடம்…
“நான் ஒரு மணி நேரத்துல எழுப்பச் சொன்னா நீங்களும் என் கூட நல்லா தூங்கிருக்கேங்கள். சரி வாங்கோ இப்ப போய் சொல்லிட்டு வருவோம்”
“இப்பவா வேண்டாம் மிருது. வெளில வெயில் கொளுத்தறது. சாயந்தரமா வாக் போவோமில்லையா அப்போ போய் சொல்லலாம் சரியா”
“ஓகே ஓகே!! உங்களுக்கு பொண்ணு வேணுமா இல்லை பையன் வேணுமா?”
“உனக்கு என்ன குழந்தை வேணும் மிருது? எனக்கு பொண்ணு தான் வேணும்.”
“எனக்கும் பொண்ணு தான் வேணும் நவீ. உங்களுக்கு ஏன் பொண்ணு வேணும்னு சொல்லறேங்கள்”
“ஆமாம் எங்காத்துல எல்லாம் பசங்க தான் அதுனால நமக்கு பொண்ணு பொறக்கட்டுமேன்னு ஒரு ஆசை. சரி உனக்கு ஏன் பொண்ணு வேணும்”
“ஏன்னா பொண்ணுகளுக்கு தான் அழகழகான டிரஸ் போட்டுப் பார்க்க முடியும் பசங்களுக்கு என்ன இருக்கு சொல்லுங்கோ”
“அடிப் பாவி டிரஸ் போட்டுப் பார்க்க பொண்ணு வேணுமா உனக்கு”
“ஆமாம். இதில எனக்கொன்னும் தப்பாவே தெரியலையே. “
“தப்புன்னு யார் சொன்னா? உன்னோட காரணம் கேட்க வேடிக்கையா இருக்கு”
இப்படியே குழந்தைப் பற்றி பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியாமல் போனது இருவருக்கும். மாலை நேரமானதும் வழக்கம் போல காபி குடித்து, முகம் கை கால் கழுவி விட்டு சாமிக்கு விளக்கேற்றி கும்பிட்டு சற்று நேரம் வாசல் கதவை திறந்து வைத்து உட்கார்ந்தனர். மணி ஆறரை ஆனதும் மிருதுளா…
“நவீன் ஃபோன் பண்ண போகலாமா ?”
“ஓ போகலாமே.”
ஃபோன் பூத்தை நெருங்கியதும் யார் இதை சொல்வது என்ற பேச்சு வார்த்தை வந்தது. அப்போது மிருதுளா…
“நான் என் பேரன்ட்ஸ்ட்ட சொல்லிட்டு உங்க கிட்ட ஃபோனைத் தரேன். அதே போல நீங்க உங்க பேரன்ட்ஸ்ட்ட சொல்லுங்கோ இன்னுட்டு என்கிட்ட தாங்கோ நான் பேசறேன் டீல் ஓகே வா?”
“ஓகே மா. வா வா”
முதலில் மிருதுளா ஃபோன் பேச அவள் பெற்றோர் வீட்டு நம்பரை டையல் செய்தாள். முதல் ரிங்கிலேயே அம்புஜம் ஃபோனை எடுத்து…
“ஹலோ நான் அம்புஜம் பேசறேன்”
“ஹலோ அம்மா …நான் மிருது பேசறேன்”
“சொல்லு மிருது உன் ஃபோனுக்காக தான் காலையில இருந்து இந்த ஃபோனையே பார்த்துண்டு இருக்கேன். டாக்டர்ட்ட போனேங்களா? டாக்டர் என்ன சொன்னா?”
“அம்மா என்னை கொஞ்சம் பேச விடுமா. டாக்டர்ட்ட போனேன் அவா சில டெஸ்டெல்லாம் எடுத்துட்டு கன்பார்ம் பண்ணிட்டா. ஸோ நீ பாட்டியாக போற.”
“அம்மா தாயே நன்றி மா(என அம்மன் படத்தைப் பார்த்து சொன்னாள்) ரொம்ப சந்தோஷமா இருக்கு மிருது. நீ நல்லா சாப்டு உடம்பை பார்த்துக்கோ. சரி… மாப்ள பக்கத்துல இருக்காரா?”
“இதோ கொடுக்கறேன். நவீன் இந்தாங்கோ”
“ஹலோ நான் நவீன் பேசறேன்.”
“வாழ்த்துக்கள் அப்பா ஆக போறேங்கள். எங்களுக்கெல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். மிருதுவ நல்லபடியா பார்த்துக்கோங்கோ. இருங்கோ எங்காத்துக்காரர்ட்ட கொடுக்கறேன்”
“வாழ்த்துக்கள் மாப்ள அன்ட் மிருது. ரொம்ப சந்தோஷம் அவள நல்லா பார்த்துக்கோங்கோ”
“ஷுவர் ஷுவர் நிச்சயமா. தாங்க்ஸ். உங்க எல்லாருக்கும் பிரயாணம் எல்லாம் சௌகர்யமா இருந்துதா?”
“நாங்க நல்லா சௌகர்யமா வந்து சேர்ந்தோம். உங்க தம்பிகளை ஆத்துல விட்டுட்டு தான் நாங்க ஆத்துக்கு வந்தோம்”
“ஓகே நான் வச்சுடட்டுமா. இல்ல மிருது வ பேச சொல்லட்டுமா?”
“பரவாயில்லை மாப்ள வச்சுடுங்கோ. பை குட் நைட். மிருதுட்டையும் சொல்லிடுங்கோ”
நவீன் ஃபோனை வைத்து விட்டு மிருதுளாவிடம்…
“உங்க அம்மா அன்ட் அப்பாக்கு என்ன ஒரு சந்தோஷம்”
“பின்ன இருக்காதா தாத்தா பாட்டின்னா சும்மாவா!!! உங்க பேரன்ட்ஸும் அப்படி தான் பேசுவா பாருங்கோ. அவாளுக்கும் ஃபோன் போடுங்கோ”
நவீன் அவன் பெற்றோர் வீட்டுக்கு ஃபோன் செய்தான். ஒரு அஞ்சு நிமிடம் கழித்து ஃபோனை எடுத்தார் ஈஸ்வரன்…
“ஹலோ”
“ஹலோ நான் நவீன் பேசறேன்”
“ஹாங் நவீன் சொல்லு பவினும், ப்ரவினும் வந்தாச்சு”
“ஒகே. ஒரு குட் நியூஸ்.”
“என்னது?”
“நீங்க தாத்தா பாட்டி ஆக போறேங்கள்”
“அப்படியா சந்தோஷம் இதோ பர்வதம் பேசணுமாம் குடுக்கறேன்.”
“ஹலோ”
“மிருதுளா பிரக்னென்ட் ஆகிருக்கா. நாங்க அப்பா அம்மா ஆக போறோம்.”
“ஓ சரி. மிருதுளாட்ட ஃபோனைக் குடு “
நவீன் மிருதுளா பெற்றோரின் சந்தோஷம் தன் பெற்றோரிடமும் எதிர்ப்பார்த்து விஷயத்தை சொல்ல அதற்கு அவர்களின் சுரத்தில்லாத பேச்சு அவனுக்கு ஏன்டா சொன்னோம் என்பது போல அவன் மனம் நினைத்தது முகம் வாடி காட்டிக்கொடுத்ததை கவனித்த மிருதுளா “என்ன ஆயிற்று ” என்று சைகையில் கேட்க ஃபோனை அவளிடம் கொடுத்தான் நவீன். அவளும் வாங்கிக் கொண்டு..
“ஹலோ நான் மிருதுளா பேசறேன்”
“நவீன் சொன்னான்….ஆமாம் அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்?”
என்று ஒரு மிரட்டல் துவனியில் கேட்க…
பால் பொங்கி வரும் வேளை கொஞ்சம் தண்ணீர் தெளித்து அதை பொங்க விடாமல் தடுப்பதுபோல பர்வததின் பேச்சு மிருதுளா மனதில் பொங்கி வழிந்த சந்தோஷத்தில் தண்ணீர் தெளித்தது போல் ஆக அவளின் முகம் சட்டென மாறியது.
“என்னமா கேட்டேங்கள்?”
“இல்ல ஒரு ரெண்டு மூணு வருஷம் கழிச்சு ஆகிருக்கலாமேன்னு சொன்னேன்”
எந்த ஒரு அப்பா அம்மாவும் தாத்தா பாட்டி ஆகிவிட்டனர் என தெரிந்தால் பேரானந்தம் கொள்வார்கள். அவர்கள் அப்பா அம்மா ஆனபோதிருந்த மகிழ்ச்சியை விட பாட்டி தாத்தா ஆனதில் தான் பெருமகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் இப்படி ஒரு ரியாக்ஷனை துளியும் எதிர் பார்க்காத மிருதுளாவின் மனம் வருந்தியது அதற்கு மேல் பேச்சைத் தொடர விரும்பாமல்…
“சரி நான் நவீன்ட்ட குடுக்கறேன்”
என்று சட்டென ஃபோனை மிருதுளா குடுத்ததிலிருந்தே நவீனுக்கு புரிந்துவிட்டது ஏதோ சரியில்லை என்பது அதனால் ஃபோனை அவளிடமிருந்து பெற்றதும்….
“நான் நவீன் …சரி சரி நாங்க அப்புறமா பேசறோம் பை ”
என ஃபோனை கட் செய்து நவீன் காசுக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது மிருதுளா வெளியே வந்து வீட்டிற்கு மெல்ல நடக்கலானாள். நவீன் வெளியே வந்து பார்த்ததும் மிருதுளாவை காணவில்லை என தேட பின் வீட்டிற்கு நடந்துச் சென்றுக் கொண்டிருப்பவளை நோக்கி வேகமாக அவள் பின்னால் சென்றான்.
தொடரும்….
அத்தியாயம் 32: மீண்டும் இருவர் மட்டும்

ஊருக்கு கிளம்ப மீதமிருந்த ஐந்து நாட்களும் பசங்க மூவரும் சுற்றுலா கதையையே மிருதுளாவிற்கும் நவீனிற்கும் விவரித்துக் கொண்டிருந்தனர். அம்புஜம் மகளுக்கு வேண்டிய புளி காய்ச்சல், ஊறுகாய்கள் என மகள் கேட்டுக்கொண்டதை எல்லாம் செய்து டப்பாக்களில் போட்டு வைப்பதில் மும்முரமாக இருந்தாள். நவீன் ஆபிஸ் க்ளாஸ் என்று ஓடிக்கொண்டே இருந்தான். ராமானுஜம் பக்கத்திலிருக்கும் கடைக்கு தினமும் சென்று அவருக்கு தெரிந்த ஹிந்தியில் பேசி காய்கறிகள், பழங்கள் என வாங்கி வந்து அதை அலம்பி வெட்டி காய்களை ஃப்ரிஜில் கவர்களில் போட்டும் பழங்களை அன்றன்றே நறுக்கி அனைவருக்கும் கொடுத்தார். இதனால் மிருதுளா தினமும் நிறைய பழங்கள் சாப்பிட்டு வந்தாள்.
வெள்ளிக்கிழமை நவீன் ஆபீஸுக்கு லீவுப் போட்டு காலை உணவருந்திய பின் அனைவரையும் அழைத்துக்கொண்டு பக்கத்திலிருக்கும் மார்க்கெட்டுக்கு சென்றனர் மிருதுளாவும் நவீனும். அங்கே ஒரு கடையினுள் சென்று மூன்று பசங்களிடமும் அவர்களுக்கு வேண்டிய டிரஸ் எடுத்துக்க சொன்னார்கள். அதில் வேனு ஒரு செட், பவின் ஒரு செட் என எடுத்துக்கொண்டனர் ஆனால் ப்ரவின் மட்டும் அனைத்து துணிகளையும் ஆராய்ந்து புரட்டிப்போட்டு இரண்டு செட் எடுத்து வந்தான். அதைப் பார்த்த மிருதுளா வேனுவிடமும் பவினிடமும் இன்னும் ஒரு செட் டிரஸ் எடுத்துக்கச் சொன்னாள் அதற்கு இருவரும் அவர்களுக்கு ஒரு செட் போதும் என்று கூற நவீன் பில் செட்டில் பண்ணி விட்டு
அவரவர் துணிப் பையை அவரவரிடம் கொடுத்தான். கொஞ்ச நேரம் மற்ற கடைகளை எல்லாம் பார்த்துக் கொண்டே நடந்தவர்களை மற்றுமொரு கடைக்குள் நுழையச் சொன்னாள் மிருதுளா. அது புடவைக் கடை அதில் தனது அம்மாவை செலக்ட் செய்ய சொல்ல அதற்கு அம்புஜம் மறுக்க பின் மிருதுளாவே நல்ல காட்டன் புடவை இரண்டு ஒரே மாதிரி டிசைன் ஆனால் கலர் வேறு வேறாக எடுத்து அதையும் பில் போட்டுப் பெற்றுக்கொண்டு பக்கத்துக் கடைக்குள் சென்றனர். அங்கிருந்து ஒரே மாதிரியான இரண்டு சட்டைகள் வெவ்வேறு நிறத்தில் எடுத்துக்கொண்டு பின் அங்கேயிருந்த டாபாவில் மத்திய உணவருந்தினர். அம்புஜத்திற்கு வெறும் சாதமும் தயிரும் மட்டும் வாங்கிக் கொடுத்தாள் மிருதுளா. அம்புஜம் அதற்கு தொட்டுக்கொள்ள அவள் செய்த ஊறுகாயிலிருந்து கொஞ்சத்தை ஒரு சின்ன டப்பாவில் போட்டு எடுத்து வந்திருந்தாள் அதைத் தொட்டுக்கொண்டு சாப்பிட அனைவரும் சிரித்துக்கொண்டே அவரவர் ஆர்டர் செய்ததை ரசித்து ருசித்து உண்டனர். சாப்பிட்டதுக்கு பில் செட்டில் செய்யும் போது வேனு..
“அத்திம்ஸ் எங்க அம்மா சாப்பாட்டுக்கு தான் ஜாஸ்த்தி சார்ஜ் பண்ணிருப்பா பாருங்கோ”
என கூறியதும் அனைவரும் சிரித்தனர். அப்போது ப்ரவின்…
“மாமி ஸ்பெஷல் ஐட்டம் இல்லையா சாப்ட்டுருக்கா.”
என்று கேலியும், கிண்டலும், சிரிப்புமாக அனைவரும் ஒரு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தனர். சற்று நேரம் அவர்கள் வாங்கின டிரெஸ் எல்லாம் பார்த்தனர் பின் அவரவர் பெட்டியில் வைத்து அடுக்கத்துவங்கினர். அப்போது மிருதுளா ப்ரவினிடம் ஒரு பையை கொடுத்து அதையும் சேர்த்து பேக் பண்ண சொன்னாள் அதற்கு ப்ரவின்…
“என்னது இது மன்னி?”
“இது இந்த ஊரு ஸ்பெஷல் சுவீட்ஸ் மோஹன்தால் அன்ட் சூரத்தி காரி. இரண்டு சுவீட்டுமே சூப்பரா இருக்கும். அப்பறம் அம்மா அப்பாக்கு புடவை அன்ட் ஷர்ட் இருக்கு இதை எல்லாம் அம்மாட்ட குடுத்துடு”
“மிருதுக்கா சுவீட் ஒன்லீ ஃபார் மாமியாரா. எங்களுக்கு இல்லையா?”
“இதோ இது உனக்கும் அப்பா அம்மாவுக்கும் வச்சுக்கோ இதையும் சேர்த்து பேக் பண்ணிடுமா. இருங்கோ அந்த சுவீட்ஸ் எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சுக்க இதோ இந்த டப்பாவை திறங்கோ எல்லாருமா சாப்பிடலாம்”
என்று கூறி சுவீட் டப்பாவை நவீனிடம் கொடுத்தாள் மிருதுளா. அதை வாங்கி திறந்து அனைவருக்கும் கொடுத்தான் நவீன்.
“வாவ் சூப்பரா இருக்கு இந்த சுவீட் மிருதுக்கா”
“ஆமாம் மன்னி செம டேஸ்ட்டியா இருக்கு.”
“அம்மா நீயும் சாப்பிடலாம். இதில் எஸன்ஸ் எதுவுமில்லை.”
“சரி ஒரு சின்ன பீஸ் குடு சாப்ட்டு பார்க்கறேன்”
“நல்லாருக்கே இந்த சுவீட். நாம எப்பவும் சாப்டுற நம்ம ஊரு சுவீட்லேந்து ஒரு வித்தியாசமான சுவீட்டா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.” என்றார் ராமானுஜம்
“அட ஆமாம் நல்லா தான் இருக்கு” என அம்புஜம் இன்னொரு பீஸ் கேட்டு வாங்கி சாப்பிட்டாள்.
ஊருக்கு போட்டுக்கொண்டு போக வேண்டிய டிரஸை மட்டும் வெளியே வைத்துவிட்டு மற்றவைகளை பெட்டிகளில் அடுக்கி எல்லா பேக்கிங்கையும் தயார் செய்து ஒரு ஓரத்தில் வரிசையாக பேக் மற்றும் பெட்டிகளை அடுக்கி வைத்து விட்டு இரவு உணவருந்தி விட்டு அனைவரும் எழுந்ததும் மிருதுளாவும் அம்புஜமும் சாப்பிட அமர்ந்தனர். அப்போது அம்புஜம்..
“மிருது டைம்க்கு சாப்பிடு. நல்லா சாப்பிடு. உடம்ப பார்த்துக்கோ. திங்கட்கிழமை உன்ட்ட இருந்து வர போற நல்ல செய்திக்காக நான் ஆவலா காத்துண்டிருப்பேன் மறக்காம ஃபோன் பண்ணிச் சொல்லு”
“அது என்ன திங்கட்கிழமை செய்தி மாமி?” என்று ப்ரவின் கேட்க உடனே நவீன்
“அவா ஏதோ பேசிக்கறா உனக்கென்ன டா. நீ ஏன் அவா பேசறதுல உன் மூக்கை நுழைக்கற. பேசாம டிவியைப் பாரு”
வெளியே ஏதோ மணி அடிக்கும் சத்தம் கேட்டதும் பவினும் வேனுவும் கதவைத்திறந்து பார்த்தனர். உள்ளே வந்து வேனு….
“மணி சத்தம் வேற எதுவும் இல்லை குல்ஃபி வண்டி வந்திருக்கு. எல்லாரும் குல்ஃபி சாப்பிடலாமா? யார்யாருக்கு வேணும்ன்னு சொல்லுங்கோ”
“இந்தா டா வேனு. ஒரு பத்து வாங்கிண்டு வா. வேணுங்கறவா எடுத்துக்கட்டும் மீதியிருந்தா ஃப்ரிஜ்ல வச்சுக்கலாம்” என்று ராமானுஜம் வேனுவிடம் காசு கொடுத்து அனுப்ப வேனுவும் தன் அப்பா சொன்னது போலவே பத்து வாங்கிவந்து அனைவருக்கும் கொடுத்தான். மீதமிருந்த அஞ்சு குல்ஃபியை ஃப்ரிஜில் வைத்துக்கொண்டே….
“அம்மா அன்ட் மிருதுக்கா உங்க ரெண்டு பேரோடதும் சேர்த்து உள்ள வைக்கறேன். நீங்க சாப்ட்டுட்டு எடுத்துக்கோங்கோ”
“தாங்கஸ் டா வேனு. நாங்க அப்பறமா எடுத்துக்கறோம். அம்மா நீ எதுவும் நினைச்சு கவலைப் படாதே. நிச்சயம் ஃபோன் பண்ணறேன். என்ன நீங்க எல்லாரும் போயிட்டா வீடே வெறுச்சோடி இருக்கும்.”
“அதுக்கென்ன பண்ண முடியும் மா. அப்பாக்கு ஆபிஸ் போகணும். வேனுக்கு காலேஜ் போகணும். என்ன பண்ண!”
இருவருமாக பேசிக்கொண்டே உணவருந்தி பின் குல்ஃபியை சாப்பிட்டுக்கொண்டிருக்கையில்….
“மிருதுக்கா ஒரு கேம் கார்ட்ஸ் விளையாடலாமா”
“டேய் வேனு மணி ஒன்பதாச்சுடா”
“அம்மா நாளைக்கு இந்த நேரம் ரெயில்வே ஸ்டேஷன்ல இருப்போம். இன்னைக்கு மட்டும் ஒரு பத்து மணி வரைக்கும் விளையாடலாமே”
“சரி டா வேனு நான் வறேன்” நவீன் சொல்ல
“நாங்களும் வறோம்” என்றனர் பவினும் ப்ரவினும்.
மெஜாரிட்டி ஆண்கள் பக்கம் என்பதால் மிருதுளாவும் அம்புஜமும் வேறு வழியின்றி விளையாட சம்மதித்து அவர்களின் சீட்டாட்ட குழுவில் சேர்ந்துக்கொண்டனர். அனைவருமாக இரவு பத்து மணி வரை விளையாடிவிட்டு பின் உறங்க படுத்துக்கொண்டாலும் சில மணி நேரம் அரட்டை அடித்த பின்னரே உறங்கலானார்கள்.
மறுநாள் சனிக்கிழமை அன்று அம்புஜம் விருந்து சமையல் சமைத்தாள். சாம்பார், ரசம், அவியல், இரண்டு பொறியல், பாயசம் என அனைத்தும் சமைத்து ராமானுஜத்திடம் வாழை இலை வீட்டின் பின்னாலிருந்து வெட்டி வரச்சொல்லி அனைவருக்கும் வாழை இலைப் போட்டு சாப்பாடு பரிமாறினாள். அப்போது மிருதுளா…
“என்ன மா இன்னைக்கு ஊருக்கு போற குஷி ல சும்மா சூப்பரா சமச்சிருக்க…இவ்வளவு ஐட்டம்ஸ் பண்ணிருக்க.”
“இல்லமா இன்னைக்கு போனா இனி எப்போ மறுபடியும் வர வாய்ப்பு கிடைக்கும்ன்னு தெரியலை அதுனால என் பொண்ணுக்கும் மாப்ளைக்கும் இப்படி சமைச்சேன் நல்லாருக்கில்லையா!!”
“சூப்பரா இருக்கு மாமி. நீங்க அண்ணா மன்னிக்கு மட்டும் சமச்சேங்கள்ன்னா ஏன் எங்களுக்கும் பரிமாறினேங்கள்” என பவின் கேட்க
“எல்லாருக்குமாக செய்தேன் போறுமா. நன்னாயிருக்கோனோ எல்லாரும் நல்லா சாப்டுங்கோ.”
அனைவரும் சாப்பிட்டப்பின் சற்று நேரம் ஓய்வெடுத்தனர். மாலை நான்கு மணிக்கெல்லாம் காபி குடித்து விட்டு பிரயாணத்துக்கு வேண்டிய சாப்பாட்டை செய்து ஹாலில் கொண்டு வந்து வைத்தாள் அம்புஜம். அவற்றை ஐந்து ஐந்து பொட்டலங்களாக கட்டி, பாட்டில்களில் தண்ணீர் நிறப்பி, வடாமை ஒரு கவரில் போட்டு கட்டி, எல்லாவற்றையும் ஒரு கட்டப்பையில் அடுக்கி வைத்தார் ராமானுஜம்.
ஒருவர் பின் ஒருவராக குளித்து கிளம்ப சரியாக இருந்தது. நவீன் தனது நண்பன் ஓம்னி வேனை எடுத்து வந்து அதில் பெட்டிப் படுக்கைகள் என அனைத்து சாமான்களையும் ஏற்றினார்கள் பவின், ப்ரவின் மற்றும் வேனு. எல்லாரும் தயார் ஆனதும் வேனில் ஏறி ரெயில்வே ஸ்டேஷனை எழரை மணிக்கு சென்றடைந்தனர். அங்கே ஸ்டான்டில் வண்டியை பார்க் செய்து விட்டு அவரவர் சாமான்களை அவரவர் தூக்கிக்கொண்டு அவர்கள் செல்லவிருக்கு ரெயில் நிற்கும் ப்ளாட்பாரத்திற்கு எட்டு மணிக்கு சென்றனர். அங்கே அவர்கள் ரெயில் நின்றுக்கொண்டிருந்தது. அதில் பொருட்களை ஏற்றி செட் செய்தப்பின் வண்டியிலிருந்து அனைவருமாக கீழே இறங்கி வண்டி கிளம்ப பதினைந்து நிமிடங்கள் இருப்பதால் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது மிருதுளா தனது அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு மௌனமாக இருந்தாள். அவள் கண்களில் கண்ணீர் மடை திறக்க காத்திருக்கும் நதி போல உருண்டோட காத்திருந்தது. அதை கவனித்த அம்புஜம் தன் மகளின் கையை தட்டிக் கொடுத்துக் கொண்டே ….
“சரி மா… சரி ரெண்டு பேரும் நல்லா சந்தோஷமா இருங்கோ. மாப்ள எங்க பொண்ண நல்லா தான் பார்த்துக்கறேங்கள். இதே போல எப்பவும் அவள பார்த்துக்கோங்கோ. அவள சந்தோஷமா வச்சுக்கோங்கோ.”
ரெயில் கிளம்ப போகிறது என்பதற்கான சங்கு ஊத அனைவரும் வேகமாக ரெயிலில் ஏறி அவரவர் இருக்கையில் அமர்ந்ததும் ரெயில் மெல்ல நகர ஆரம்பித்தது….
“பை அண்ணா மன்னி “
“அப்பா அம்மாவ கேட்டதா சொல்லுங்கோ பவின் அன்ட் ப்ரவின்” என்றாள் மிருதுளா
“பை மிருதுக்கா.. பை அத்திம்ஸ்”
“பை டா வேனு. டேக் கேர்.”
“அம்மா அம்மா அம்மா பை !! அப்பா பை!”
“பை மா மிருது. பை மாப்ள” என்றாள் அம்புஜம் கண்ணில் கண்ணீரோடு
“நாங்க போயிட்டு வறோம் மாப்ள. வறோம் மா மிருது” என்று கறகறத்த குரலில் சொன்னார் ராமானுஜம்.
“ஓகே எந்த கவலையும் இல்லாம போயிட்டு வாங்கோ” என்றான் நவீன் தனது மாமனார் மற்றும் மாமியாரிடம்.
ரெயில் கொஞ்சம் வேகம் எடுக்க மெல்ல மிருதுளா கைகளிலிருந்து அவள் அம்மாவின் கை நழுவியது. அம்புஜம் முடிந்த வரை தனது கையை ஜன்னல் வெளியே விட்டு ஆட்டிக்கொண்டே சென்றாள். சிறிது நேரத்தில் கும்பலாக இரந்த அந்த ப்ளாட்பாரம் ஆள் நடமாட்டமில்லாமல் ஆனது. அதுவரை மிருதுளா அங்கேயே அமர்ந்து அழ அவளை சமாதானம் படுத்த மிகவும் சிரம பட்ட நவீன்….
“மிருது எல்லாரும் போயாச்சு ப்ளாட்பாரமே காலியா இருக்கு. ரெயில் போய் இருபது நிமிஷமாச்சு. அது தான் இன்னும் மூணு மாசததுல நாமளே ஊருக்கு போக போறோமே அப்பறம் என்ன!! வா கண்ண தொடச்சுக்கோ. மணி வேற ஆகறது. நாம வந்த வண்டியை திருப்பிக்குடுக்கனுமில்லையா. எழுந்திரி மிருது போகலாம்.”
மிருதுளா சமாதானம் ஆகாவிட்டாலும் வீட்டுக்கு போயாக வேண்டுமே என்றோ!!! இல்லை தங்களுக்குதவிய நண்பனின் வண்டியை திருப்பி நேரத்துக்கு குடுக்க வேண்டுமென்றோ!! இரவுநேரம் வேற ஆகிறதென்றோ!!! ஏதோ ஒரு காரணத்தினாலோ அல்லது இவ்வனைத்து காரணத்தினாலோ சட்டென கண்களைத் துடைத்துக்கொண்டு நவீனுடன் வீட்டுக்கு புறப்பட்டாள் ஆனால் அவள் கண்கள் வற்றவில்லை அதில் கண்ணீர் பெருக்கெடுத்துக்கொண்டே தான் இருந்தது.
அவர்கள் கேம்ப்புக்குள் வந்ததும் நேராக வண்டியை நவீன் நண்பனிடம் ஒப்படைத்து விட்டு இருவருமாக நடந்து வீட்டுக்குச் செல்லும் போது …மிருதுளா …
“இவா எல்லாரும் ஏன் வரணும், நாம எல்லாருமாக ஏன் அவ்வளவு ஜாலியா இருந்திருக்கனும் அப்பறம் ஏன் இப்படி நம்மள அம்போன்னு விட்டுட்டு அவா எல்லாரும் கிளம்பி போகணும்?”
“அது தான் மா லைஃப் மிருது. இனி இப்படி தான் எப்பவாவது எல்லாருமா நம்மள பார்க்க, நம்மளோட இருக்க வருவா அப்புறம் கிளம்பி போவா. நீ அவா வந்துட்டு போற ஒவ்வொரு தடவையும் இப்படி தான் அழப்போறயா என்ன?”
“மனசு ரொம்ப சங்கடப்படறது நவீ. எனக்கு வீட்டுக்குள்ள போகவே என்னவோ மாதிரி இருக்கு. யாருமே இல்லாத வீடு போல தோணும்”
” மூணு வாரத்துக்கு முன்னாடி வரை நம்ம ரெண்டு பேரு மட்டும் தானே இருந்தோம் அப்போ பிடிச்சிருந்தது இல்ல அது மாதிரிதான் இப்போவும். இங்க பாரு மிருது யாரு வேணும்னாலும் நம்ம லைஃப் ல வரலாம் போகலாம் ஆனா கடைசி வரைக்கும் இனி நாம மட்டும் தான் புரியறதா?”
“அதெல்லாம் புரியறது ஆனா மனசு அதை ஏத்துக்க மாட்டேங்கறது நவீ”
“இப்போ அப்படி தான் இருக்கும் இன்னும் சில வருஷம் போனா மனசு புரிஞ்சுக்கும் அதை ஏத்துக்கவும் செய்யும் அதுவரை கொஞ்சம் காத்திருக்க தான் வேணும். உன் மனசும் நானும்”
“ஆமாம் ஆமாம் பார்ப்போம் பார்ப்போம்”
என்று கூறினாலும் அவள் கண்களிலிருந்து கண்ணீர் பல நாட்களாக ஸ்டாக் வைத்திருந்தது போல பொல பொலவென உரண்டோடிக்கொண்டே தான் இருந்தது. அதை பார்த்த நவீன் மீண்டும்…
“என்ன மிருது உனக்குள்ளேயே நிறைய உறுப்புகள் சரியான குவார்டினேஷனே இல்லாம இருக்கு !!!! வாய் பார்க்கலாம்ன்னு சொல்லறது ஆனா கண்ணு அதை ஏத்துக்காம நிக்காம மழை பொழிஞ்சிண்டே இருக்கே. சரி மன்டே காலை ல டாக்டர்ட்ட போகணும் ஞாபகம் இருக்கா?”
என்று பேச்சை திசைத் திருப்ப வீடும் வந்தது. வீட்டைத் திறந்தான் நவீன். இருவருமாக உள்ளே நுழைய மிருதுளாவிற்கு அவள் அப்பா அம்மா மற்றும் தம்பிகள் ஹாலில் உட்கார்ந்துக் கொண்டு இருப்பது போல தெரிய மீண்டும் அவள் கண் கலங்கினாள். ஆனாலும் அதை துடைத்துக் கொண்டே…
“ஓ!!! நல்லா ஞாபகம் இருக்கே. ஐ ஆம் வேயிட்டிங் ஃபார் மன்டே நவீ”
இருவரும் முகம் கை கால் அலம்பி விட்டு சற்று நேரம் டிவி பார்த்தப் பின் அம்புஜம் அவர்களுக்கும் சுட்டு வைத்திருந்த சப்பாத்தியையும் மசாலாவையும் சாப்பிட்டனர். அதே குல்ஃபி காரன் மணி அடிக்க அதைக் கேட்ட மிருதுளா…
“ஹேய் நவீ நேத்து வேனு வாங்கின குல்ஃபி ப்ரிஜ்ல இருக்கு சாப்பிடலாமா!”
“ஓ எஸ்” என கூறிக்கொண்டே ஃப்ரிஜை திறந்துப் பார்த்தான் நவீன் ஆனால் அதில் குல்ஃபி இருக்கவில்லை.
“அட இங்கே ஒரு குல்ஃபி கூட இல்லை மிருது எப்போ யாரு சாப்ட்டானே தெரியலையே நாமளும் இங்கே இருந்திருக்கோம் பாரேன்!”
“ஓ !!! ஆமாம் ஆமாம் இன்னைக்கு மத்தியானம் பசங்க சாப்ட்டா. சாரி நான் தான் மறந்துட்டேன்”
“சரி இரு நான் போய் ரெண்டு வாங்கிண்டு வரேன்”
நவீன் குல்ஃபி வாங்கி வர… மிருதுளாவும் நவீனுமாக திரைப்படம் பார்த்துக்கொண்டே அதை உண்டு முடித்து பின் உறங்க படுத்துக்கொண்டனர். மிருதுளா திரும்பி படுத்துக் கொண்டு மெல்ல அழுவதை கவனித்த நவீன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு ….
“டோன்ட் வரி மிருது ஜஸ்ட் மூணு மாசம் தான் வீ வில் கோ தேர் அன்ட் பி வித் தெம். நீ சமாதானம் ஆயிட்டன்னு நினைச்சேன் மறுபடியும் ஆரம்பிக்கற. ப்ளீஸ் ஜஸ்ட் ரிலாக்ஸ் அன்ட் ஸ்லீப்.”
என கூற மிருதுளாவும் கண்களைத் துடைத்துக்கொண்டு நவீனை கட்டிக்கொண்டு உறங்கினாள்.
ஆக மீதமிருந்த ஐந்து நாட்களும் விருந்தினருடன் சந்தோஷமாக கழித்ததாலும் ஸ்பெஷல் விருந்தினரான பவின் அன்ட் ப்ரவினும் ஏதும் அனாவசியமாக பேசாததினாலும் வாசகர்களாகிய நமக்கு சுவாரஸ்யம் கொஞ்சம் குறைந்தது போல இருந்தாலும்… உணர்ச்சிகள் பொங்கி வழிந்ததை நம்மால் உணர முடிந்தது இந்த வாரம். உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத சுமையாகிவிடும், ரசனை இல்லாமல் போய் விடும் பின் நல்லவை நமது கண்களுக்கு புலப்படாமல் இருந்துவிடும். நவீன் கூறியது போல திருமணம் என்ற பந்தம் ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் கடைசி வரை வரக்கூடிய ஒரே பந்தமாகும்.
இவர்களும் அது போலவே இருந்தால் நல்லது தான் இல்லையா?
தொடரும்…….
அத்தியாயம் 31: பயணமும் தனிமையும்

பசங்க மூணு பேரும் டிரிப் போகும் போது வழியில் உண்பதற்கு சிப்ஸ் மற்றும் சில நொறுக்கு தீணிகளை கடையிலிருந்து வாங்கி வந்தனர். வீட்டில் இருந்துக்கொண்டு இது போன்ற தீணிகளை உண்பதற்கும் வெளியே சுற்றுலா போகும் போது உண்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்பது பசங்களின் அபிப்பிராயம் மட்டுமில்லை நமக்கே அப்படிதான் இல்லையா நண்பர்களே. ஆனால் அதை பார்த்த ராமானுஜம்…
“ஏன்டா பசங்களா இங்க நம்ம ஊர்லேந்து கொண்டு வந்த நொறுக்கு தீணிகளே இருக்கு இதில இன்னும் வேற வாங்கிண்டு வந்திருக்கேங்கள்! அதே போறாதோ?”
“அப்பா அதையே தான் மூணு வாரமா சாப்பிட்டோம். ஒரு நாளைக்கு சேஞ் இருக்கட்டுமே”
“ஆமாம் மாமா வேனு சொல்லறா மாதிரி முறுக்கு, ரிப்பன் பக்கோடா, மிச்சர் சாப்ட்டு சாப்ட்டு போர் அடிச்சுப்போச்சு. எங்களுக்காக ஒரு நூறு ரூபாய் செலவழிக்க மாட்டேளா என்ன!”
“செலவழிக்கறத பத்தி நினைச்சிருந்தேனா வேனுட்ட காசு குடுத்தனுப்பியிருக்கவே மாட்டேனே!!! ஆத்துல பட்சணங்கள் இருக்கும் போது ஏன் வெளியே வாங்கினேங்கள் ன்னு தான் கேட்கறேன்….சாப்ட்டு அலுத்துப்போச்சுன்னு சொல்லறேங்கள் ஓகே ஒத்துக்கறேன். எங்களுக்கெல்லாம் கிடைச்சா மாதிரி வருஷத்துல ஒரு தடவை மட்டுமே பட்சணம் செய்து கொடுத்தா அது அலுத்துப்போகாது அதவிட்டுட்டு எப்ப வேணுமோ அப்போ எல்லாம் கிடைச்சா இப்படிதான் இருக்கும். உங்கள சொல்லி தப்பே இல்லை.”
“அப்பா உங்க காலம் வேற. அப்போ எல்லாம் ஒரு குடும்பத்தில கொறஞ்சது ஏழு அல்லது எட்டு பேர் இருந்தேங்கள் அத்தனை பேருக்கும் அடிக்கடியா பட்சணங்கள் பண்ணித்தர முடியும்? அதனால வருஷத்துல ஒரு தடவை செஞ்சா …ஆனா இப்போ ஒரு குடும்பதுல நாலு பேரு தான் ஸோ எப்போ தோணறதோ அப்போ எல்லாம் செய்து சாப்படறா”
“அது வாஸ்தவம் தான்”
“சரி சரி எல்லாரும் சீக்கிரம் சாப்ட்டு தூங்கினாதானே நாளைக்கு காலங்காத்தால எழுந்துக்க முடியும். இப்படி பேசிண்டே இருந்தா அப்பறம் எல்லாருமா தூங்கிப் போயிடுவேங்கள் இல்லாட்டி ரெண்டு இடம் பார்த்ததும் டையர்டா ஆகிடுவேங்கள். அம்மா நீ இன்னும் கிட்சன்ல என்ன பண்ணிண்டிருக்காய்? உனக்கும் தான் சொல்லறேன்”
“இதோ ஆயிடுத்து வந்துடறேன். வந்தாச்சு போறுமா”
“என்ன மெனு கட்டிண்டு போற மா நீ”
“காலைக்கு இட்டிலியும் கொத்தமல்லி சட்னியும், மத்தியானத்துக்கு புளியோதரையும் தயிர் சாதமும், வடாமும் கட்டிண்டிருக்கேன். எதுக்கும் எக்ஸ்ட்ராவா நாலு பொட்டலமும் எடுத்துண்டிருக்கேன்….இவாளுக்கு யாருக்காவது வேணும்னாலும் கொடுக்கலாமேன்னு…உங்களுக்கும் சட்னி சாதமெல்லாம் இருக்கு. இட்டிலி மட்டும் காலைல வச்சுக்கோ. வடாம் அந்த நீல கலர் மூடி போட்ட டப்பால போட்டு வச்சிருக்கேன். ஒண்ணும் செஞ்சிண்டிருக்க வேண்டாம். காபி அன்ட் டீ மட்டும் போட்டுக்கோ போறும்.”
“அம்மா நீ என்னத்த கட்டிண்டிருக்கன்னு தானே மிருதுக்கா கேட்டா!!!! நீ என்னடான்னா எல்லாருக்கும் செய்து எடுத்துண்டு வர மாதிரி தெரியறது”
“டேய் அது தான் டா நம்ம அம்மா!!”
“மாமி நாங்க அவா தர்ற ரொட்டி சப்ஜீ எல்லாம் சாப்பிடுவோமே என்னத்துக்கு எங்களுக்கும் எடுத்துக்கறேங்கள்?”
“சரி பா நீங்க எல்லாரும் அதையே சாப்டுங்கோ நான் இதை தான் சாப்பிடனும்னு யாரையும் வற்புறுத்தலையே. ஒரு வேள அது நல்லா இல்லாட்டி உங்கள எல்லாரையும் விட்டுட்டு நான் மட்டும் சாப்ட முடியுமா?”
“ஆமாம் சாப்பிடனும். அவா தான் அவளோ பேசறா இல்லையா. அப்போ நீங்க உங்களுக்கு மட்டும் எடுத்துக்கணும் . கேட்டாலும் கொடுக்காதீங்கோ”
“டேய் பசங்களா நாளைக்கு சப்போஸ் அவா சாப்பாடு பிடிக்கலைன்னா அப்பறம் பட்டினியாதான் சுத்த வேண்டி வரும் அதனால பேசாம எங்க அம்மா எடுத்துக்கறதை எடுத்துக்கட்டும் வேணும்ன்னா சாப்பிடுங்கோ இல்லாட்டி அது கெட்டு ஒண்ணும் போகாது வந்துட்டு சாப்பிட்டுக்கோங்கோ”
“மிருதுக்கா நீ சொல்லறதும் கரெக்ட் தான் அம்மா நீ எடுத்துக்கறத எடுத்துக்கோ மா. நாங்க ஒண்ணுமே சொல்ல மாட்டோம் என்ன சொல்லறேங்கள் பவின் அன்ட் ப்ரவின்?”
“ஆமாம் ஆமாம் மாமி நீங்க எடுத்துக்கறத எடுத்துக்கோங்கோ.”
“அது!!! எதையுமே பேசறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசுங்கப்பா..சரி சரி ஆல் ஆஃப் யூ குட் நைட்”
“குட் நைட்” என எல்லாரும் கூறினர்.
“யாராவது அலாரம் வச்சிருக்கேங்களா?” என்றான் ப்ரவின்
“என்னோட அலாரம் என் மண்டைக்குள்ள இருக்கு டான்னு எல்லாரையும் எழுப்பிடறேன் கவலை படாம தூங்குங்கோ” என்றார் ராமானுஜம்.
அவர் கூறியது போலவே மூன்று மணிக்கெல்லாம் எழுந்து அம்புஜத்தையும் எழுப்பி இருவரும் ஒருவர் பின் ஒருவராக குளித்து முடித்ததும் பசங்களை எழுப்பினார்கள். அவர்களும் ஒவ்வொருவராக குளித்து வந்ததும் நவீனும் மிருதுளாவும் எழுந்து பல் துலக்கி ஃப்ரெஷ் ஆகியதும் அனைவருக்கும் காபி போட்டுக் கொடுத்தாள் அம்புஜம். எல்லோருமாக குளித்து, காபி அருந்தி முடித்து கிளம்ப சரியாக மணி நாலரை ஆனது. பஸ்ஸில் ஏறுவதற்காக மெயின்கேட்டுக்கு நடக்கலானார்கள். அவர்களை வழியனுப்ப நவீனும் மிருதுளாவும் வீட்டின் கதவை தாழிட்டு அவர்களுடன் கிளம்பினார்கள். கேட் ஐ சென்றடையும் போது மணி நாலே முக்கால். பஸ் காத்துக்கொண்டிருந்தது. இவர்கள் பஸ் ஸ்டாப் சென்றடைவும் நவீனின் நண்பன் சதீஷும் அவர் குடும்பத்தினருடன் அங்கு வரவும் சரியாக இருந்தது. நவீன் அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தப் பின் தனது குடும்பத்தினரையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளும் படி சதீஷிடம் சொல்ல அவனும் நவீனிடம் அதை பற்றி எல்லாம் கவலையின்றி இருக்குமாறு சொல்லிக்கொண்டிருக்கையில் பஸ் டிரைவர் அனைவரையும் பஸ்ஸினுள் ஏறச் சொன்னார். எல்லோருமாக ஏறி அவரவருக்கு பிடித்த இடத்தில் அமர்ந்தனர். நவீனுக்கும் மிருதுளாவும் அனைவரும் டாட்டா காட்ட பஸ் புறப்பட்டுச் சென்றது.
நவீனும் மிருதுளாவும் வீட்டை நோக்கி பேசிக்கொண்டே மெல்ல நடந்தார்கள். அப்போது நவீன்…
“உனக்கு போக முடியலையேன்னு கவலையா மிருது?”
“நோ நாட் அட் ஆல் நவீ. அதவிட முக்கியமான சந்தோஷத்துக்காக நான் காத்துண்டு இருக்கும் போது இதுக்கெல்லாம் கவலை ஏன் படணும். ஏன் உங்களுக்கு போயிருக்கலாம்ன்னு தோணறதோ?”
“நோ!! நோ !!! எனக்கு மூணு வாரத்துக்கப்பறம் இப்போ தான் என் வைஃப் கூட மட்டும் இருக்க டைம் கிடைச்சிருக்கு… இதை விட்டுட்டு நான் ஏன் போகணும்னு நினைக்கப்போறேன்”
“ஹேய் ஆமா இல்ல!!!! ஸோ இன்னைக்கு நாம மட்டும் தான் இருக்கப் போறோம். வாவ்!! இந்த மூணு வாரமா நாம விலகி இருந்தது ஏதோ பல வருஷம் பிரிஞ்சு இருந்த மாதிரி ஒரு ஃபீல்.”
“ஆமாம். ஸோ ட்ரூ. லெட் அஸ் செலிப்ரேட் திஸ் டே டுகெதர்.”
“டாக்டர் சொன்னது ஞாபகம் இருந்தா நல்லது”
“ஹேய் அதெல்லாம் நல்லாவே ஞாபகம் இருக்கு மேடம்.”
“எவ்வளவு ஆச்சர்யமா இருக்கு நமக்குள்ளேயிருந்து நமக்குன்னு ஒரு புது உயிர் உருவாகி அது இந்த பூமிக்கு வந்து நம்மை பார்த்து சிரித்து, அழுது, விளையாடி, வளர்ந்து !!! வாவ்!!! காட் ஈஸ் ரியலீ கிரேட் பா. என்ன அழகான ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதில் மனிதர்களை ஒரு இயந்திரம் போல படைத்து அவர்களுக்கு எல்லா வகையான உணர்வுகளும் கொடுத்து மெல்ல மெல்ல நம்மை பரமபதம் காய்கள் போல நகர்த்தி ஒரு அழகான ஆட்டம் ஆடுகிறார்? இல்ல!!!”
“ஏய் சூப்பர் எக்ப்ளநேஷன் ஃபார் காட்ஸ் க்ரியேஷன் மிருது!! ஆசம்!!!”
“என்னை புகழ்ந்தது போதும் ஆம் வந்தாச்சு கதவ தொறங்கோ!”
“உண்மையா மா. நீ கொடுத்த இந்த விரிவாக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.”
இருவருமாக பல நாள் கழித்து அவர்களுக்கென்று கிடைத்த தனிமையை அனுபவித்து பின் குளித்து காலை உணவு சாப்பிட அமர்ந்தனர். மிருதுளா சுட சுட ஆவி பறக்க இரு தட்டுகளில் நாலு நாலு இட்டிலியும் அவள் அம்மா செய்து வைத்திருந்த கொத்தமல்லி சட்டினியும் போட்டுக்கொண்டு ஹாலுக்கு வந்து ஒன்றை நவீனிடம் கொடுத்துவிட்டு மீண்டும் அடுப்படிக்குள் சென்று இட்டிலி வைத்திருந்த பாத்திரத்தை எடுத்து வந்து கீழே வைத்து விட்டு சாப்பிடலானாள். அப்போது நவீன்….
“இட்டிலி செம சாஃப்ட்டா இருக்கு”
“ஹலோ இட்டிலினா சாஃப்ட்டா தான் இருக்கும்”
“எங்க ஆத்துல சாப்ட்டயே அது சாஃப்ட்டாவா இருந்தது. இவ்வளோ வருஷமா அது மாதிரி தான் நான் சாப்டிருக்கேன் ஆனா இது உண்மையாவே பஞ்சு மாதிரி இருக்கு மிருது.”
“உளுந்து அளவு கம்மியான இட்டிலி கல்லு மாதிரி தான் ஆகும். நம்ம ஆத்துல!!! அச்சோ!!! அந்த ஒரு இட்டிலய தேங்காய் சட்னில ஊர வச்சும் அது அப்படியே தான் இருந்தது. இப்படி பஞ்சு மாதிரி இட்டிலிய நான் இருப்பத்திரண்டு வருஷமா சாப்பிட்டு கல்யாணத்துக்கப்பறம் உங்க அம்மா பண்ணின இட்லியோட ப்ரூசிலீ மாதிரி ஃபைட் பண்ணி ரொம்ப சிரமப்பட்டுப் போயிட்டேன் அத சாப்பிட. ஆனா அத சொன்னா உங்க அம்மா மனசு கஷ்ட்டப்படுமேன்னுட்டு சொல்லாம விட்டுட்டேன்”
“இது என்ன சட்டினி சொன்னா உங்க அம்மா?”
“கொத்தமல்லி சட்டினி. ஏன் கேட்கறேங்கள்?”
“இதுவும் ரொம்ப சூப்பரா இருக்கு. இது மாதிரி சட்னி நான் சாப்ட்டதே இல்லை. யூ அன்ட் வேனு ஆர் லக்கி”
“இதை என் அம்மா கேட்டா சந்தோஷப்படுவா. நான் உங்களுக்கு வித வித மா செய்துத்தறேன் யூ டோன்ட் வரி மை ஹப்பி. யூ டூ ஆர் லக்கி டூ ஹாவ் மீ…எப்புடி”
“நன்றி வைஃபி. ஷுவர் ஆம் நவ் லக்கி டூ. நீயும் சாப்பிடு”
“இதோ சாப்டுண்டே தானே பேசறேன்”
உணவருந்திய பின் இருவருமாக டிவியில் ஒளிபரப்பான திரைப்படத்தைப் பார்த்தனர். வீட்டுக்கு டிவி வந்த நாளிலிருந்து அன்று தான் அவர்கள் கையில் ரிமோர்ட் கிடைத்துள்ளது. அதுவரை பவின் தான் எப்போழுதும் அதை வைத்திருந்தான். அவன் தூங்கும் போது தான் அது டிவி அருகே இருக்கும். அன்றிரவு ஒரு எட்டு மணி போல மீண்டும் ஒரு நடை நடந்து அந்த வளாகத்தின் கேட் அருகே சென்று அங்கேயே நடந்துக்கொண்டே டூர் போனவர்கள் திரும்பி வர காத்திருந்தனர். பஸ் சரியாக எட்டரை மணிக்கு வந்து சேர்ந்தது. அனைவரும் குஷியாக இறங்கினார்கள். பஸ்ஸினுள் ஒரே பேச்சு சத்தமும் சிரிப்பு சத்தமும் தான் கேட்டது. அனைவரும் இறங்கியதும் ஒன்றாக கோரஸாக டிரைவருக்கும் அவர் அஸிஸ்ட்டென்டுக்கும் நன்றி தெரிவித்தனர். சதீஷ் நவீனைப் பார்த்து…
“நவீன் இதோ உன் குடும்பத்தினரை உன்ட்ட பத்திரமா ஒப்படைச்சிட்டேன் பா.”
“ஹேய் ரொம்ப ரொம்ப தாங்கஸ் டா”
“இதுக்கெல்லாம் எதுக்கு டா தாங்க்ஸ் சொல்லிகிட்டு. நான் சும்மா ஜோக் அடிச்சேன். ஆனா ஒரு விஷயம் உன்ட்ட சொல்லணும் நவீன். உன் இன் லாஸ் மூணு பேரும் ரொம்ப நல்லவங்க பா. யூ ஆர் ரியலி கிஃப்ட்டெட் டூ ஹாவ் தெம் இன் யூவர் லைஃப். உன் தம்பிகளும் நல்ல பசங்க தான் …..உண்மைய சொல்லனும்னா அவங்க கொஞ்சம் செல்ஃபிஷோன்னு மனசுக்கு படுதுப்பா. நாங்க எல்லாரும் சூப்பரா என்ஜாய் பண்ணினோம். அன்ட் மாமி செய்து கொண்டு வந்த சாஃப்ட் இட்டிலி அன்ட் அந்த சட்னி வாஸ் ஆசம். வீ ஆல் லவ்டு இட். சரி சரி நாம அடுத்த வாரம் ஆபீஸ்ல மிச்சத்த பேசிக்கலாம் இப்போ அவங்க கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு நாங்க எங்க வீட்டுக்கு கிளம்பறோம் வா”
என அனைவரும் ஒருவருக்கொருவர் பை சொல்லி விடைப்பெற்று அங்கிருந்து அவரவர் வீட்டிற்கு நடக்கலானார்கள். அப்போது நவீன் அம்புஜத்திடம்…
“என்ன உங்க கொத்தமல்லி சட்னி செம ஃபேமஸ் ஆயிடுத்துப் போல”
“அப்படியா சொல்லறேங்கள்”
“ஆமாம் அத்திம்ஸ் காலை ல அவா பூரியும் சப்ஜியும் கொடுத்தா ஆனா நாலு நாலு தான் தந்தா ஸோ அம்மா கொண்டு வந்த இட்டிலியையும் சட்னியையும் எல்லாருமா ஷேர் பண்ணிண்டோம்.”
“நேத்து என்னவோ சில பேரு கிண்டல் அடிச்சா!!! அவா எல்லாம் எங்க போணா இப்போ?” என்று மிருதுளா கேட்க அதற்கு பவின்
“அவாளும் லைன்ல நிண்ணு இட்டிலியும் சட்னியும் வாங்கி சாப்ட்டா”
என்று சொல்ல அனைவரும் சிரிப்பு மழையில் நனைந்தனர்.
“சரி அம்மா நீ கொண்டு போன சாப்பாட்டில் மிச்சமிருக்கா ஏன்னா அதை தானே நைட்க்கு எல்லாரும் சாப்பிடறதா சொன்னா!! அதுனால கேட்டேன்”
“ஒண்ணும் மிச்சமாகலை எல்லாம் தீர்ந்துடுத்து. அப்போ நைட்டுக்கு என்னவாக்கும் டின்னர்?”
“மிருதுக்கா ஷால் வீ கோ டூ அவர் ரோஹித் டாபா?”
என்று வேனு கேட்டதும் மிருதுளா நவீனைப் பார்த்தாள் அவனும் சம்மதிக்க அனைவருமாக டாபா சென்றனர். அங்கே மிருது அம்புஜத்தைப் பார்த்தே…
“அம்மா நீ என்னத சாப்பிடுவ?”
“எனக்கு ஒண்ணும் வேண்டாம் மா. மத்தியானம் சாப்ட் புளிசாதமே எறுக்களிச்சிண்டிருக்கு.”
“மிருதுக்கா …இல்லாட்டி நம்ம அம்மா அப்படியே ரொட்டி சப்ஜீ எல்லாம் சாப்ட்ருவா பாரு…அட போ க்கா”
“அதுவும் சரிதான் டா வேனு”
“எனக்கு ஒரு லைம் சோடா கிடைக்குமா? அது மட்டும் போதும்”
“நிச்சயம் கிடைக்கும் இருங்கோ நான் ஆர்டர் பண்ணறேன்” என நவீன் ஆர்டர் பண்ணிக் கொடுத்தான்.
அனைவரும் சென்று பார்த்த இடங்களைப் பற்றியும், பிரயாணம் பற்றியும் டாபாவில் பேச ஆரம்பித்து வீட்டிற்குச் சென்று உறங்கும் வரை அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மிருதுளா ப்ரவினிடம்….
“என்ன ப்ரவின் இப்போ உன் நண்பர்கள்ட்ட சொல்லிக்க விஷயம் கிடைத்திருக்குமே. ஹாப்பியா”
“ஓ எஸ் !!! நிறையா பார்த்தேன் அன்ட் நிறையா விஷயங்கள் இருக்கு சொல்ல”
“அப்பாடா ப்ரவின் இனி திருப்தியா ஊருக்கு கிளம்புவான்” என்றான் நவீன்.
“என்ன இன்றய டே என்ட் முடிவில் நான் தான் டாப்பிக் ஆஃப் டிஸ்கஷனா. பேசாம எல்லாரும் தூங்குங்கப்பா. குட் நைட்”
தொடரும்…..
அம்மா பகிரும் மகனதிகாரம்!!

முதன் முதலில் பள்ளிக்கு எனது ஒரே மகனை அனுப்பியது இன்றும் என் கண்முன்னே இருக்கிறது. அது ஆகிவிட்டது பதினெட்டு வருடங்கள் ஆனாலும் இன்றும் பசுமையான நினைவுகளாக என் மனம் அசைப்போட்டுக்கொண்டே தான் இருகிறது.
பள்ளிக்கு சென்று அவனை வகுப்பறையில் அமரவைத்து நான் வெளியே வந்ததும் என் மகன் பின்னாலேயே ஓடிவந்து அம்மா…அம்மா….என்ன விட்டுட்டு போகாதே அம்மா….என்று கதறி அழுதது, அவனது ஆசிரியை என்னை அங்கு நிற்காமல் செல்லும் படி கூறியது, என்னைச் சுற்றி ஆட்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வே இல்லாமல் நானும் என் மகனைப் பார்த்து அழுத வண்ணம் நின்றது எல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கையில் மனதிற்குள் சிரிப்பு வருகிறது ஆனால் அன்று அந்த கணம் நான் நொறுங்கி போனேன்.
என் குழந்தை சாப்பிட்டதா? டாய்லட் போக அனுமதி கேட்க சொல்லிக்கொடுத்தேனே ஒழுங்கா கேட்க தெரியுமா இல்லை பயத்தில் கேட்காமல் உட்கார்ந்திருப்பானா, மற்ற குழந்தைகளுடன் விளையாடுவானா? என்றெல்லாம் பல கேள்விகள் உதித்து என் நிம்மதியை குலைத்தது.
என் கணவரிடம் அடிக்கடி அவன் இன்னமும் அழுதுக்கொண்டிருப்பானா? சாப்பிட்டிருப்பானா? சண்டையிடாமல் மற்ற பிள்ளைகளுடன் விளையாடுவானா? என்று தொனதொனக்க அவர் என் புலம்பல்கள் கேட்டு …..
“இதெல்லாம் நீ அந்த பள்ளில வேலை செய்தால் உன் புள்ள பக்கத்திலிருந்தே தெரிஞ்சுக்கலாம். என்ன கேட்டா நானும் உன்ன மாதிரி இங்க தானே இருக்கேன்.”
சாயங்காலம் அவன் வந்ததுக்கப்பரம் கேட்டு தெரிஞ்சுக்கலாம். இப்போ போய் வேற வேலைய பாரு என்று கடுப்படித்தார். பாவம் அவரும் பிள்ளை நினைப்பில் தான் இருந்திருப்பார் ஆனால் என்னைப்போல காட்டிக்கொள்ள வில்லை அவ்வளவுதான்.
ஆனால் அவர் சொன்னதில் ஒரு விஷயம் என் மனதில் பதிந்தது “நீ அந்த பள்ளியில் வேலை செய்தால்” பிள்ளையை பிரிய மனமில்லாமல் அதே பள்ளியில் ஆரம்ப பள்ளி ஆசிரியை வேலைக்கு விண்ணப்பித்தேன்.
இன்டர்வியூ நாள் வந்தது அங்கே என்னை நோக்கி பாய்ந்த முதல் கேள்வி….
“இது உங்கள் படிப்பிற்கு ஏற்ற வேலை அல்லவே… நீங்கள் போஸ்ட் கிராஜுவேட் முடித்துள்ளீர்கள் பின்பு ஏன் விண்ணப்பித்தீர்கள் என்பதை தெரிந்துக் கொள்ளலாமா?” என்று கேட்டார்கள்.
என் மகனுக்காக! மகனுடன் இருப்பதற்காக சேர்ந்தேன் என்று கூறமுடியுமா!! ஏதோ ஆசிரியை ஆக ஆசை அது இது என்று சொல்லி ஒரு வழியாக என் மகன் பள்ளி செல்ல ஆரம்பித்த ஒரு மாதத்திற்குள் நானும் ஆரம்ப பள்ளி ஆசிரியை ஆனேன். முன்னனுபவம் ஏதுமின்றி. அதுவும் எல்.கே.ஜி வகுப்பு எனக்கு தரப்பட்டது. என் மகனுக்காக ஆசிரியை ஆனாலும் அந்த பிஞ்சு முகங்களை தினமும் பார்ப்பதில் பேரானந்தமாக இருந்ததை உணர்ந்தேன்.
ஆசிரியை ஆயாச்சு என் மகனுடன் ஒன்றாக பள்ளிக்கு சென்று வரலாம் என்று எண்ணினேன். ஆனால் வேலையில் சேர்ந்த பிறகு தான் தெரிந்தது ஆசிரியர்கள் பள்ளி முடிந்த நேரத்திலிருந்து ஒரு மணிநேரம் ஆன பின்னரே வீட்டுக்கு செல்ல முடியும் என்பது. அந்த ஒரு மணிநேரம் என் மகனை எங்கே விடுவது என்ற கேள்வி எழுந்தது.
பள்ளியில் அவனை சேர்க்க….. அவனை பிரிய மனமில்லாமல் நான் ஆசிரியையாக சேர….. பின் எனக்காக அவன் ஒரு மணிநேரம் பள்ளியில் காத்திருக்க வேண்டியிருந்தது. அவனுக்காக காலை மத்திய உணவு போக தனியாக மாலை உண்பதற்கு ஏதாவது தினமும் எடுத்து செல்வேன். இதோடு எல்லாம் முடிந்தது இனி சுபமே என்று பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த சிக்கல் வந்தது.
என் மகன் தனது வகுப்பிலிருந்து ஓடிவந்து எனது வகுப்பில் அமர ஆரம்பித்தான். அம்மாவின் வகுப்பில் தான் அமருவேன் என்று ஒரே அழுகை வேறு. அந்த பள்ளி தலைமை ஆசிரியை முன் நானும் என் மகனும் நின்றோம். எங்கள் பிரச்சினையை முன் வைத்தோம். அவர் என் மகன் என் வகுப்பில் அமர அனுமதித்தார். அவன் என் வகுப்பில் அமர சில நிபந்தனைகளை நான் அவன் முன் வைத்தேன். நல்ல பிள்ளையாக அவை அனைத்தையும் கடைபிடித்து எனக்கு ஒத்துழைத்தான் என் மகன்.
வகுப்பில் மேடம் என்று தான் அழைப்பான் அம்மா என்று ஒருபோதும் அழைத்ததில்லை. தனது அம்மா தானே என்று எந்த வித சலுகைகளையும் அவனும் எதிர்ப்பார்க்கவில்லை நானும் கொடுக்கவில்லை. இப்படியே எல்.கே.ஜியும், யூ.கே.ஜியும் இருவரும் ஓன்றாக ஒரே வகுப்பறையில் படித்தோம். ஆம் அவன் படித்ததோ பாடப்புத்தகம் ஆனால் எனது வகுப்பில் இருந்த முப்பது குழந்தைகளும் என் மகன் உள்பட எனக்கு முப்பது வாழ்க்கை பாட புத்தகங்கள் ஆனார்கள்.
குழந்ததைகளுடன் நாம் இணைந்து பயணிக்கும் பயணத்தில் பல பாடங்களை நமக்கு மிக சுலபமாக கற்று தந்து விடுவார்கள்.
கவலை என்பது அடுத்த நிமிட நிகழ்வில் மறக்க வேண்டும்,
அழுதாலும் நம்மால் மற்றொருவரின் பேச்சைக்கேட்டு சிரிக்கவும் முடியும்,
ஒன்றாக இருந்தால் சந்தோஷம் பெருகும்,
ஏதேனும் மறந்தாலும் அதை அழகாக கதை போல சொல்லி கவர்வது,
வெளிப்படையாக போலித்தனமில்லாமல் பேசுவது என்று பலவற்றை நாம் அவர்களோடு இருந்தால் கற்றுக்கொள்ளலாம். நானும் கற்றுக் கொண்டேன்.
பெற்றோர்கள் என்னிடம் வந்து எங்கள் பிள்ளைகளுக்கு நீங்க ன்ன ரொம்ப பிடிக்கும் மேடம்…..எங்க மேம் அது சொன்னாங்க இது சொன்னாங்க என்று எப்ப பார்த்தாலும் சொல்லிக்கிட்டே இருக்காங்க என்று கூறும்போது சற்று சங்கோஜமாகவும் அதே சமயம் சந்தோஷமாகவும் இருந்தது. இதுவே என் முப்பது செல்வங்களும் எனக்களித்த முப்பது அவார்டாக கருதிக்கொண்டு இருக்கையிலே…. பிஞ்சுகளால் நான் அந்த ஆண்டின் பள்ளி ஆண்டுவிழாவில் சிறந்த ஆசிரியை பரிசுப்பெற்றேன். என் வகுப்பு பிள்ளைகளும் நிறைய போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றனர்.
எனது மகன் ஒன்றாம் வகுப்புக்கு தேர்ச்சி ஆனான். அவனின் பாதை நண்பர்கள், படிப்பு, விளையாட்டு என்று மெல்ல மாற துவங்கியது. நானும் என் பாதையை மாற்றி அமைத்துக்கொண்டேன். +1 மற்றும் +2 வகுப்பு பிள்ளைகளுக்கு அக்கௌன்டன்ஸி மற்றும் காமர்ஸ் ஆசிரியையாக ஆர்மி ப்பளிக் பள்ளியில் நியமிக்கப்பட்டேன். என் படிப்பிற்கும் வேலைக்கும் அன்று சம்பந்தத்தை ஏற்ப்படுத்திக்கொண்டேன். அன்று யோசித்துப்பார்த்தேன்…. மகன் தான் சிறுப்பிள்ளை என்றால் நானும் சிறுப்பிள்ளை தனமாக இருந்ததை உணர்ந்தேன். என் சிறுப்பிள்ளை தனம் என்னை எனக்கே புரியவைக்க கடவுள் கொடுத்த ஒரு நல்ல, சிறந்த வாய்ப்பாக நான் கருதினேன்.
எனது இந்த உணர்வு எல்லா தாய் மார்களும் அவர்கள் பிள்ளைகள் பள்ளி செல்லும் முதல் நாள் அனுபவித்திருப்பார்கள்.
இன்று என் மகன் வெளிநாட்டில் இஞ்சினியரிங் படித்து வருகிறார். அவரை கல்லூரியில் சேர்க்க நானும் என் கணவரும் அவருடன் சென்றிருந்தோம். ஒரு வாரம் ஹோட்டலில் தங்கியிருந்தோம். மூன்று நாட்கள் ஓரியன்ட்டேஷன் என்று ஓடியது. ஒரு நாள் காலேஜ் ஹாஸ்டல் ரூமை அவருக்கு செட் செய்து கொடுப்பதில் கழிந்தது. ஒரு நாள் ஊரை சுற்றிப்பார்ப்பதில் சென்றது. ஆறாவது நாள் கல்லூரி வகுப்புகள் ஆரம்பம் ஆனது.
ஏழாவது நாள் நாங்கள் ஊருக்கு திரும்பும் நாள் ….காலை உணவு அருந்திவிட்டு நேராக கல்லூரிக்கு சென்று எங்கள் மகன் வகுப்பு முடிந்து வரும் வரையில் காத்திருந்தோம். அவர் வந்தார் நாங்கள் மூவரும் மத்திய உணவு ஒன்றாக அமர்ந்து அருந்தினோம். ஏதோ என் மனதில் ஒரு கலக்கம். முதல் முறையாக மகனை தூரதேசத்தில் விட்டுவிட்டு பிரியபோகிறோமே என்றா… சொல்ல முடியாத ஒரு தவிப்பு….அப்பாவும் மகனும் மும்முரமாக வகுப்புகள், லெக்சரர்கள், கல்லூரி, பாடம் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். நான் என் மகனை பார்த்துக்கொண்டே இருந்தேன் ஏதும் பேசாமல். அவரும் என்னை அடிக்கடி பார்த்தார் ஆனால் பேசவில்லை. பின் கேட்டார் “என்ன அம்மா பார்த்துண்டே இருக்க?”
நான் என் மகனைப்பார்த்து….
“இப்போ உன்னுடன் உன் கல்லூரியில் தான் இருப்பேன், உன் வகுப்பறையில் தான் அமர்வேன் என்னை கூட்டிக்கொண்டு போகதான் வேண்டும்”
என்று நான் இப்போ அடம்பிடித்தால் என்ன ஆகும் என்றேன்.
மகன் பதில் அளிப்பதற்கு முன் என் கணவர் முந்திக்கொண்டு
“அம்மா தாயே விட்டா நீ உன் பையன் பின்னாடியே இஞ்சினியரிங் காலேஜ் லெக்சரரா போயிடுவ…..நான் ஒருத்தன் இங்கே இருக்கேன் மா…. மனமிறங்கி வா தாயீ”
என்றதும் மூவருக்கும் சிரிப்பு மழையில் அன்று முழுவதும் ஊருக்கு கிளம்பும் வரையில் பழைய நினைவுகளால் நனைந்தோம்.
அன்றும் அழுதேன் என் மகனைப் பிரியும் பொழுது. அதே மாதிரி சிந்தனை பழக்கமில்லாத நாட்டில் மகனை தனியே விட்டுவிட்டு போகபோகிறோமே! என்ன செய்வாரோ!!!! என்றல்ல எங்கள் மகன் இன்று இவ்வளவு படித்து, பல திறமைகளை வளர்த்துக்கொண்டு, இப்படி ஒரு கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்து அதை தைரியமாக ஏற்று தனித்திருந்து சாதிக்க போகிறார் என்ற பெருமிதத்தில் வந்த ஆனந்த கண்ணீர் ஆகும்.
முதன் முதலில் மகனை
பள்ளியில் சேர்த்தபோதும் கண்கள் கலங்கின
கல்லூரியில் சேர்த்தபோதும் கண்கள் கலங்கின
இரண்டு தருணங்களிலும் கண்களில் வடிந்தது கண்ணீர்
முதலாவது முறை பரிதவிப்பினால்
இரண்டாவது முறை ஆனந்தத்தினால்
கண்ணீர் ஒன்று தான்
ஆனால் காரணங்கள் வேறுபட்டது
பரிதவிப்பு என்னை ஆசிரியையாக மாற்றியது
ஆனந்தம் என்னை எழுத்தாளராக மாற்றியது.

கட்டை விரல்

“எங்கள் அக்கா துளசி நம் கையில் இருக்கும் கட்டைவிரல் போல யாருடனும் ஒட்டாதவள் ஆகையால் மற்ற நான்கு விரல்களாகிய நாங்கள் அவளை ஒதுக்கி வைத்துள்ளோம்”
என்று ருக்குமணியும், பாமாவும் அவர்கள் சொந்தகாரர் திருமணத்தின் போது கூறியதை கேட்டு அதிர்ந்து போனாள் துளசியின் சிநேகிதி லதா. ஆம் இவர்கள் கூறும் அந்த கட்டைவிரலாகிய இவர்களின் அக்கா துளசி எப்படிப்பட்டவள் என்பதும், இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதும் லதா நன்கு அறிந்தவள் ஆவாள்.
துளசிக்கு….ரமா, பாமா, ருக்கு, கார்த்திகா என நான்கு தங்கைகளும் சூரியா என்ற அண்ணனும் இருக்கிறார்கள். சூரியாவிற்கு திருமணம் ஆகவில்லை. அண்ணன் சூரியா சூப்பர் மார்கெட் நடத்தி வருகிறார். தந்தை இல்லாத இந்த குடும்பம் சூரியாவின் உழைப்பில் தான் ஓடிக்கொண்டிருந்தது. சூரியா தனது மூத்த தங்கை துளசி அவள் கணவன் நடராஜனின் உதவியோடு நான்கு தங்கைளுக்கும் திருமணம் முடித்து வைத்தார்.
கார்த்திகா திருமணம் முடிந்த சில வருடங்களில் அவர்கள் அம்மாவும் இறைவனடி சேர்ந்தார். அடுத்த ஆறு மாதங்களில் சூரியாவும் மாரடைப்பால் காலமானார். வருடங்கள் உருண்டோடின.
துளசி நடராஜன் தம்பதியினருக்கு ஒரு மகள் வீணா ஒரு மகன் விக்னேஷ். தங்களால் முடிந்த உதவிகளை இரு வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் செய்து தன்னிறைவான வாழ்வை வாழ்ந்து வரும் அளவான அழகான குடும்பம்.
ரமா அவள் கணவர் நீலமேகத்துடனும் பெண் குழந்தை நிஷாவுடனும் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்.
பாமாவும் அவள் கணவர் கமலனும் திருச்செந்தூரில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. வருமானமும் அவ்வளவாக இல்லை. ஆகையால் அடிக்கடி துளசி கணவரிடம் கடனாக பணம் வாங்குவதும் கொடுப்பதுமாக இருந்து வந்தாள். ஒரு முறை பணக்கஷ்டம் அதிகமாக… துளசியிடம் உதவி கேட்டாள் அந்த சமையம் நடராஜனுக்கே பணம் சற்று தட்டுப்பாடு இருந்தது அதனால் கொடுக்க மறுத்துவிட்டார். தற்செயலாக நடந்ததை… துளசி தான் தர மறுக்கிறாள் என எண்ணிக்கொண்டு துளசியை பழிவாங்க நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
ருக்குமணியின் கணவர் நரசிம்மன் குடி போதையில் கீழே விழுந்து காலில் ஃப்ராக்சர் ஆனதால் ஆறு மாதம் துளசி வீட்டில் தான் இரு குழந்தைகளுடன் இருந்து வந்தாள். துளசி வீட்டிலிருந்து தன் கணவனுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரி போவதும் வருவதுமாக இருந்து ஒரு வழியாக கால் சரியாகி துளசி வீட்டுக்கு பக்கத்திலேயே வீடு பார்த்தபின் குடியேறினர் அதுவரை அவர்களை பார்த்துக்கொண்டு வேண்டியதை செய்துக்கொடுத்தது எல்லாமும் துளசியும், நடராஜனும் ஆவர். ருக்குவுக்கு தனது அக்கா துளசி மீது அதீத பொறாமை இருந்தது. துளசி கணவருக்கு எந்த விதமான கெட்ட பழக்கங்களும் இல்லை வருடத்தில் ஒரு முறை வெளியூர்களுக்கு டூர் போவார்கள், நகை வாங்குவார்கள். ஆனால் ருக்கு வீட்டுக்காரர் அவளையும் அவள் பிள்ளைகளையும் எங்கேயுமே கூட்டிக்கொண்டு போனது கிடையாது. தனது இந்த பொறாமை குணத்தை வெளிக்காட்டாமல் துளசியுடன் உறவாடிக்கொண்டே தக்க சமையத்துக்காக காத்திருத்தாள். அவளது பொறாமை ஆறு மாசம் துளசி அவர்களை உட்கார வைத்து சோறு போட்டதை கூட மறக்கச் செய்தது.
கார்த்திகா இளமாறன் தம்பதியினர் திருமணம் முடிந்ததும் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டனர்.
அனைவரும் துளசி மகள் வீணா திருமணத்திற்கு வந்திருந்தனர். வீணாவின் திருமணத்திற்கு வாங்கியிருந்த நகைகளை பார்த்து எங்கு எவ்வளவு என விசாரித்து அதே போல் தனக்கும் வேண்டும் என்று அதே கடைக்கு சென்றாள் கார்த்திகா ஆனால் அதே போல் கிடைக்கவில்லை ஆகையால் தன்னிடம் இருக்கும் பணத்திமிரால் துளசியிடம் வீணாவுக்கு வேறு நகைகள் வாங்க பணம் தருவதாகவும் அவளுக்கு வாங்கிய நகைகள் தனக்கு பிடித்திருப்பதால் தனக்கே தருமாறு கூறினாள். அந்த நகைகள் அனைத்தும் வீணா அவளுக்காக பார்த்து பார்த்து எடுத்திருப்பது அதனால் கார்த்திகாவிற்கு தர மறுத்து விட்டாள் துளசி. இதனால் துளசி மீதும் வீணா மீதும் தேவையே இல்லாமல் கோபம் கொண்டாள் கார்த்திகா.
வீணாவின் திருமண நாள் அன்று ரமாவை தவிர மற்ற மூன்று சகோதரிகளும் அதுதான் சரியான சமையம் துளசியை பழிவாங்க என எண்ணி துளசியைப்படாத பாடு படுத்தினார்கள். இதில் கார்த்திகா தனது மகனை மாப்பிள்ளை அழைப்பு காரில் ஏற்ற வில்லை என ஒரு பெரிய சண்டைப்போட அவளுடன் பாமாவும், ருக்குமணியும் கைகோர்த்துக்கொண்டு துளசியை பந்தாடினார்கள்.
இவர்கள் திருமணமே துளசி நடராஜன் இல்லாவிட்டால் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதை மறந்துவிட்டனர்.
ஒருபக்கம் தன் வீட்டு ஆட்களின் ஆட்டம் என்றால் மறுபக்கம் தனது மாமியாரை பேத்தி திருமணத்திற்கு கூட வரவிடாமல் தடுத்த துளசியின் நாத்தனார்.
எப்படியோ இவர்களின் பிரச்சனைகளுக்கு நடுவில் துளசி நல்லபடியாக தன் மகள் திருமணத்தை முடித்தாள். எல்லாருக்கும் நல்லதை மட்டுமே நினைத்து நல்லது மட்டுமே செய்த துளசி நடராஜனுக்கு அவர்கள் மகளின் திருமணத்திற்கு அவர்கள் உதவிய சொந்தங்கள் எவருமே துணை நிற்கவில்லை. இது தான் இன்றைய சொந்தங்களின் லட்சணம். மனித உதவி இல்லாவிட்டால் என்ன ? அவர்கள் செய்த நல்லவை அவர்களுக்கு அனைத்தையும் நன்றாக சிறப்பாக நடத்த உதவியது. கடவுள் இருக்கிறார் என்பதை அன்று உணர்ந்தேன்.
இவ்வளவும் தெரிந்த லதா கோபப்பட்டு ருக்கு மற்றும் பாமா பேசிக்கொண்டிருந்த இடத்துக்கு வேகமாக சென்றாள் ….
“ஆமாம் ஆமாம் கரெக்ட் வெரி வெரி கரெக்ட் ருக்குமணி!!!! துளசி கட்டை விரலே தான் அதில் எந்த வித சந்தேகமும் இல்லை”
“பார்த்தாயா பாமா நான் சொன்னதையே தான் துளசி சிநேகிதி லதாவும் சொல்லறா!! இதுக்கு மேல யார் சொல்லனும்”
“இரு இரு ருக்குமணி கொஞ்சம் பொறுமை. நீ சொல்லும் விதமான கட்டைவிரல் அல்ல நான் சொல்லப்போவது. உங்கள் கைகளை நன்றாக பாருங்கள் கட்டைவிரல் மட்டுமே மற்ற நான்கு விரல்களையும் வளைந்து தொட முடியும். ஒற்றுமையாக தெரியும் மற்ற நான்கு விரல்களால் எல்லா விரல்களையும் தொட முடியாது. கட்டை விரலோடு இணைந்திருக்கும் சதையின் உதவியோடு அந்த கட்டை விரல் மற்ற நான்கு விரல்களுக்கும் உண்டான வேலைகளை செவ்வனே செய்ய உதவுகிறது. கட்டைவிரலின்றி மற்ற நான்கு விரல்களும் சின்ன வேலையை செய்யக்கூட மிகவும் சிரமப்படும். மகாபாரத துரோணர் கூட ஏகலைவனின் கட்டைவிரலைத்தான் குருதட்சணையாக கேட்டார் மற்ற விரல்களை அல்ல. கட்டை விரல் இல்லை என்றால் மற்ற விரல்கள் இருந்தும் பிரயோஜனமில்லை. கட்டைவிரலை யாரும் ஒதுக்கி வைக்க முடியாது என்பது புரிந்திருக்குமே!!! அது விலகி நின்றாலும் மற்ற விரல்களுக்கு என்றும் உதவுகிறது. கை இல்லாதவர்கள் கூட வாழ்கிறார்கள் இந்த உலகில். ஆனால் கையிருந்தும் கட்டைவிரலின்றி வாழ்வது மிகவும் கஷ்டம். என்ன சொன்ன ருக்குமணி கட்டைவிரலாட்டம் துளசியை ஒதுக்கி வச்சிருக்கேங்களா? ஹா! ஹா! ஹா! எங்கே உன் கட்டை விரலை ஒரு நாளைக்கு செலோடேப் போட்டு ஓட்டிட்டு நீ சொன்ன ஒற்றுமையான நான்கு விரல்களோடு எல்லாவற்றையும் செய்து தான் பாரேன்.!!!. அது மட்டுமில்லாமல் மனிதனை மனிதன் ஒதுக்கி வைப்பதில் எந்த வித ஆச்சர்யமும் இல்லை ஆனால் நமது தீய செயல்களாலும் தீய எண்ணங்களாலும் கடவுள் நம்மை ஒதுக்கி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்லது செய்தவர்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை தீமையோ, துரோகமோ மட்டும் செய்து விடாதீர்கள் அதன் தண்டனையை கடவுள் நிச்சயம் ஏதாவது ஒரு வழியில் வழங்குவார். இப்போதாவது கட்டை விரலாகிய எனது சிநேகிதி துளசியின் மகிமை புரிந்திருக்கும் என நினைக்கிறேன். புரியலை என்றால் ஏதாவது வழியில் கடவுள் உங்களுக்கு புரியவைப்பார். வரட்டுமா ஆள் காட்டி மற்றும் மோதிர விரல்களே “
என்று டாக்டர் லதா தனது சிநேகிதிக்காக சற்று நேரம் வக்கீலாக மாறி ருக்குமணிக்கும் பாமாவுக்கும் நல்ல பதிலடி கொடுத்தாள். 🙂
❤️முற்றும்❤️

ஊரடங்கும் வேனுகாந்தனும்

வேனு என்கிற வேனுகாந்தன் நமது இந்திய தலைநகரில் உள்ள ஓர் பிரபலமான கல்லூரியில் படிக்க ஆசைப்பட்டு அதற்காக நன்றாக படித்து பல பரீட்சைகளில் முழு மதிப்பெண்கள் பெற்று. அதில் சேருவதற்காக விண்ணப்பித்து அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டதிற்கான பதில் மின் அஞ்சலுக்காக காத்திருந்தான். அவனின் கடின உழைப்பும், நம்பிக்கையும் வீணாகவில்லை. அவன் விரும்பி எதிர்ப்பார்த்த கல்லூரியிலேயே அவனுக்கு ஓர் இடம் கிடைத்தது.
தந்தை சேகர் ஒரு தனியார் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். தாய் வள்ளியம்மை இல்லத்தரசி. தங்கை மீனு ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். இவர்கள் திண்டுக்கல்லில் வசித்து வருகின்றனர். சேகரின் சம்பாத்தியத்தில் தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. சேகரும், வள்ளியம்மையும் தங்கள் பிள்ளைகளுக்கு எந்த ஒரு கஷ்ட்டமும் தெரியாதவாறு வளர்த்து வந்தனர். வேனுவும், மீனுவும் பெற்றவர்களின் நிலையை அறிந்து அதற்கேற்ப அனாவசியமாக எந்த செலவுகளும் செய்யாமல் நல்ல பொறுப்புள்ள பிள்ளைகளாகவே இருந்தனர்.
வேனுவிற்கு சிறந்த கல்லூரியில் இடம் கிடைத்ததில் சேகருக்கும், வள்ளியம்மைக்கும் சந்தோஷமும் பெருமிதமும் இருந்தாலும் கல்லூரி செலவுகளுக்கான பணத்தை எப்படி புரட்டுவது என்ற கவலையும் கூடவே தொற்றியது. பிள்ளையின் கனவை கலைக்க அவர்களுக்கு மனமில்லை. அதற்காக அவன் எவ்வளவு முயற்சி எடுத்துள்ளான் என்பது அவர்கள் நன்கு அறிந்தவர்களாயிற்றே!!!!வேனு தனது தந்தையின் பாரத்தை குறைக்க எண்ணி கல்லூரி ஃபீஸ் மட்டும் தந்தையை தருமாறும் மற்ற இதர செலவுகளை எல்லாம் தான் ஏதாவது வேலைப்பார்த்து சம்மாளித்துக்கொள்வதாகவும் கூறினான். சேகருக்கு சற்று வருத்தமாகவே இருந்தாலும் அரை மனதுடன் சம்மதித்தார்.
அவன் பயணிப்பதற்கு வேண்டியதை எல்லாம் வள்ளியம்மை செய்து கொடுத்தாள். பதினேழே வயதான தனது மகன் எப்படி தனியாக தெரியாத ஊரில் சென்று இருக்கப்போகிறானோ என்ற பதற்றமும், அச்சமும் இருந்தாலும் வெளிக்காட்டிக்கொண்டால் மகனின் மனது கஷ்ட்டப்படுமே என்று எண்ணி அதை மனதிற்குள் பூட்டி வைத்தாள் மகனின் ஆசையை நிறைவேற்ற.
வேனுவின் அறிவுக்கான தேடல் அவனை புதுதில்லி கொண்டு சென்றது. தனது குடும்பத்தை பிரிந்து வந்ததில் அவனுக்கும் சற்று வருத்தமாக தான் இருந்தது ஆனாலும் படிப்பு மீதிருந்த ஆர்வம் அவனை சமாதானம் செய்தது.
வீட்டில் எந்த வேலையும் செய்யாத வேனு கல்லூரி அருகே ஓர் உணவகத்தில் வேலைப்பார்த்துக்கொண்டே படிக்கலானான். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அருகே இருக்கும் ஒரு டியூஷன் சென்ட்டரில் சென்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து தன் செலவுகளுகானதை ஓரளவு மாதாமாதம் தேற்றினான். முதல் அரை ஆண்டு விடுமுறை டிசம்பர் மாதம் வந்தது. தனது எல்லா நண்பர்களும் விடுமுறைக்கு அவரவர் ஊர்களுக்கு சென்றனர். வேனுவிற்கும் தனது குடும்பத்தினரை பார்க்க, அம்மா கையால் உணவருந்த ஆசைதான் ஆனால் ஒரு பதினைந்து நாட்களுக்காக அதுவும் பயணத்திலேயே போக மூன்று வர மூன்று என்று ஆறு நாட்கள் போய்விடும்…ஏன் அவ்வளவு செலவு செய்யவேண்டும் அந்த பணமிருந்தால் அடுத்த ஒரு மாதத்திற்கான செலவுக்கு உதவும் என்று போகாமல் கல்லூரி விடுதியிலேயே தனியாக இருந்தான்.
அவனைப்போல் இன்னும் சிலர் இருப்பதைப் பார்த்து சந்தோஷப்பட்டான். அவர்களுடன் உரையாடி அவர்களைப்பற்றி அறிந்துக்கொண்டான். அப்பா, அம்மா, தங்கையுடன் தினமும் சிறிது நேரமே பேசினாலும் வேனுவிற்கு அன்று முழுவதும் ரீச்சார்ஜ் ஆனதுப்போலிருக்கும். அவன் அங்கு தனிமையிலிருப்பதை வீட்டினருடன் பகிர்ந்தால் அவர்கள் சங்கடப்படுவார்கள் என்று கூறாமல் மறைத்தான். அந்த தனிமை அவனுக்கு நிறைய கற்றுக்கொடுத்தது.
மீண்டும் ஜனவரியில் கல்லூரி திறந்தது தனது நண்பர்களைப்பார்த்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தான் வேனு. மறுபடியும் படிப்பு வேலை என்று வாழ்க்கை நகர ஆரம்பித்தது. பிப்ரவரி மாத கடைசியில் எல்லா நாடுகளிலும் ஒரு வைரஸ் பரவுவதாகவும் அதனால் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவு போட்டதாகவும் செய்திகள் வரத்தொடங்கின. இந்தியாவிலும் இது நிகழும் என்பதை வேனு எதிர்ப்பார்க்கவில்லை. கல்லூரி அவர்கள் மாணவர்கள் அனைவருக்கும் ஓர் மின் அஞ்சல் அனுப்பியது. டங் என்று வேனுவின் அலைபேசி சப்தம் எழுப்பியது. அந்த கடிதத்தை படித்ததும் வேனுவிற்கு தூக்கி வாரிப்போட்டது. ஏனென்றால் காலவரையின்றி கல்லூரி முடப்போவதாகவும், வகுப்புகள் அனைத்தும் இணையதளம் மூலம் நடைபெறும் என்றும் அனைவரும் கல்லூரி விடுதிகளை காலி செய்யுமாறு மாணவர்களிடம் கல்லூரி கேட்டுக்கொண்டுள்ளது.
நிலவரத்தை செய்தித்தாள்களிளும், தொலைக்காட்சி செய்திகளிளும் தெரிந்துக்கொண்ட சேகரும், வள்ளியம்மையும் துடித்துப்போனார்கள். உடனே எப்படியாவது கிளம்பி வரச்சொல்லி வேனுவிடம் கூறினார்கள்.
ஆனால் வேனு ஒரு முடிவெடுப்பதற்குள் அனைத்து போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டது. நாடே ஸ்தம்பித்தது. நண்பர்களை அவர்கள் வீடுகளிலிருந்து கார்கள் வந்து அழைத்துச்சென்றது. அதில் ஒரு நண்பன் வேனுவை தன்னுடன் வருமாறு கூறினான். எத்தனை நாள் நண்பன் வீட்டில் தங்குவது என்று எண்ணி மறுத்துவிட்டான் வேனு. தான் எங்கு செல்வது எங்கே தங்குவது என்ன செய்வது என்று பல கேள்விகள் அவனுள் உதித்தது.
பெட்டியுடன் கல்லூரிக்கு வெளியே வந்தவன் ஒரு சுவரொட்டியைப்பார்த்தான். அதில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துமனைக்கு தன்னார்வத் தொண்டர்கள் தேவை இருக்க இடம் மற்றும் உணவு வழங்கப்படும் என்று அச்சிடப்பட்டிருந்தது. மனதிற்குள் ஒரு தெம்பு வந்தது வேனுவிற்கு. நேராக அதில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்றான். ஓர் நேர்காணல் நடந்தது. வேனு அதில் தேரச்சிப்பெற்று தனது சேவையை தொடங்கினான். அங்கு பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்தான். பணம் படைத்த தனவான்கள் பலர் முன் வந்து உதவுவதைப்பார்த்து தானும் நாளை படித்து பெரிய ஆளாகி இப்படி நம்மால் முடிந்ததை மக்களுக்கு செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்தான். ஒரு நச்சுயிரின் வெறியாட்டத்தை தன் கண்களால் காண நேர்ந்தது வேனுவிற்கு. அவன் கண்கள் கலங்கின. இரண்டு நாள் உணவும் உட்க்கொள்ளவில்லை. இதை கவனித்த மற்றொரு தன்னார்வ தொண்டர் ஒருவர் வேனுவிடம் ….நன்றாக உணவு அருந்தவில்லை என்றால் பின்பு எப்படி மற்றவர்களுக்கு உதவ முடியும் என்று கூறினார்.
மீண்டும் தன் சேவைகளில் இறங்கினான். இப்படியே இரண்டு மாதங்கள் ஓடியது. ஒரு நாள் மீண்டும் ரெயில் சேவை தொடங்கப்பட்டதாக செய்தி வர வேனு நேராக தன்னார்வத் தொண்டர்கள் தலைவரிடம் சென்று தான் ஊருக்கு போவதற்கு அனுமதிக்கேட்டான். அவரும் அவனது இரண்டு மாத சேவைக்கு நன்றி தெரிவித்து பயணத்திற்கு கொஞ்ம் பணமும் கொடுத்து அனுப்பிவைத்தார். இவை அனைத்தையும் தனது தந்தையிடம் கூறி தன் வரவை தெரிவித்தான்.
மனதிற்குள் தனது குடும்பத்தினரை காணப்போகும் சந்தோஷத்தில் வேகமாக நடந்தே ரயில் நிலையம் சென்றான். அங்கு எல்லா ரெயில்களிலும் மக்கள் நிரம்பி வழிந்தனர். அவர்கள் எவரும் முககவசம் அணிந்திருக்கவில்லை. எல்லாரும் அவரவர் ஊர்களுக்கு திரும்பும் ஆர்வத்தில் இப்படி கூடிச்சென்றால் அந்த நச்சுயிர் மிக சுலபமாக தன்னினத்தை பெருக்கி விடுமே அதிலிருந்து தப்பித்து அனைவரும் பத்திரமாக குடும்பத்துடன் சேர்ந்திட வேண்டுமே என்று மனதார வேண்டிக்கொண்டு ரயில் ஏறினான் வேனு.
ரயிலில் ஒரு கட்டிட தொழிலாளியுடனும் அவர் குடும்பத்தினருடனும் உரையாட வாய்ப்பு கிடைத்ததும் அவர்களைப்பற்றியும் அந்த ஊரடங்கினால் அவர்கள் பட்ட வேதனைகளையும் அவர்கள் சொல்லக் கேட்டதும் தனது கஷ்ட்டங்கள் ஓன்றுமே இல்லை என்ற எண்ணம் வேனு மனதில் தோன்றியது.
மூன்று நாட்கள் பயணத்தில் வேனு வெரும் தண்ணீரும், டியும், பிஸ்கெட்டும் உண்டு வந்தான். மூன்றாவது நாள் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறங்கியதும் அவனுள் சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சி பொங்கியது. சேகர் ரயில் நிலையம் வந்து தனது மகனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.
வள்ளியம்மை ஆரத்தி தட்டுடன் வாசலில் அமர்ந்திருந்தாள். சேகரின் வண்டி வந்து நின்றதும் முதலில் வள்ளியம்மையும் மீனுவும் வேனுவிற்கு ஆரத்தி எடுத்தனர் அதற்கு வேனு
“என்ன போருக்கா போயிட்டு வந்திருக்கேன் ஆரத்தி எல்லாம் எடுக்குறீங்க” என்று நகைத்தான்.
சேகர் : உண்மையிலே இதுவும் ஒரு வகை போர் தாம்பா. நாங்க பதரின பதரல், பயந்தது, எல்லாம் உனக்கு புரியாதுப்பா. பத்திரமாக திரும்பி வந்திருக்க அதற்கு தான் இந்த ஆரத்தி. வா வா உள்ள போகலாம்.
வள்ளியம்மை: எப்படிப்பா இந்த இரண்டு மாதம் சம்மாளிச்ச? ரொம்ப கஷ்டப்பட்டியோ? ரொம்ப மெலிஞ்சிட்டயே !! சரியா சாப்பிடலயா??
சேகர்: அவன் குளிச்சிட்டு வரட்டும் அப்புரம் வெச்சுக்கோ உன் கேள்விகளை…நீ போப்பா குளிச்சிட்டு சாப்பிட வா… முதல்ல பிள்ளைக்கு சாப்பாடு எடுத்து வை வள்ளி.
தனது மாற்று துணி எடுத்துக்கொண்டு குளியலறையை நோக்கி சென்றான். மீனு ஒடிவந்து அண்ணனுக்கு துண்டு கொடுத்தாள். வள்ளியம்மை அடுப்படியிலிருந்து அப்பளம் பொறித்துக்கொண்டே
“உடுத்திருக்கற துணிகள அப்படியே பக்கெட்டில போட்டூப்பா நான் துவைச்சுக்கறேன்” என்றாள்
குளித்தபின்பு நேராக பூஜை அறைக்கு சென்று விபூதி பூசிக்கொண்டு உணவருந்த குடும்பத்தினருடன் அமர்ந்தான். தனது குடும்பத்தினரின் அன்பிலும், சுட சுட சாதத்தில் அம்மா செய்த சாம்பார் ஊற்றியதும் எழுந்த வாசத்திலும் அவன் கல்லூரி சென்ற நாளிலிருந்து திண்டுக்கல் ரயில் நிலையம் வந்து சேரும் வரை பட்ட அத்தனை கஷ்ட்டங்களும் காணாமல் போனது வேனுவிற்கு.
அறிவு தாகத்தினால் திண்டுக்கல்லிருந்து தில்லி வரை பயணம் மேற்கொண்டு பல இன்னல்களுக்கு ஆளாகினாலும் வாழ்க்கை வேனுவிற்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது. சிறு வயதில் நமக்கு நேரும் சிரமங்களையும் கஷ்ட்டங்களையும் பாடங்களாக ஏற்று அதையும் நன்கு படித்து வாழ்க்கை எனும் பல்கலைக்கழகத்தின் பரீட்சையில் தேர்ச்சி பெற்றோமேயானால் நம்மை வெல்ல எவராலும் முடியாது.
❤️முற்றும்❤️

தவுட்டுபெண்ணும் தகரபெண்ணும்
பூங்கரை ஒரு அழகான பசுமையான கிராமம். இந்த கிராமம் புலிவனம் எனும் அடர்ந்த காட்டுக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. ஊர் மக்களின் கூற்றுப்படி காட்டிற்குள் புலிகள் நடமாட்டம் அதிகம் இருந்ததால் அப்பெயர் பெற்றது. இவ்வாறு பசுமை செழிப்பான கிராமத்தில் இரு அழகான பெண்கள் வசித்து வந்தார்கள். இருவரும் பக்கத்து வீட்டு காரர்கள் ஆவர். அவர்களில் ஒருத்தியை தவுட்டுபெண் என்றும் இன்னொருத்தியை தகரபெண் என்றும் ஊர் மக்கள் அனைவரும் அழைப்பார்கள். இவர்களுக்கு ஏன் இப்படி ஒர் பெயர் வந்தது? என்று நினைக்க தோன்றுகிறது அல்லவா? வாருங்கள் மக்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
முதலில் தவுட்டுபெண்ணின் பெயர் ரகசியத்தையும் அவள் குடும்பத்தினரையும் தெரிந்து கொள்ளலாம். இவளுக்கு திருமணமாகி 10 வயதில் மகன் இருக்கிறான். அழகான நாம் இருவர் நமக்கொருவர் என்று வாழும் குடும்பம். இவளது கணவன் வேலை காரணமாக வெளியூரில் தங்கிவருகிறான். ஏதாவது விஷேஷ நாட்களுக்கு மற்றும் மாசத்துக்கு ஒரு முறை மட்டுமே வந்து மனைவி மகனுடன் நேரம் செலவிட்டு அடுத்து தான் திரும்பி வரும் வரையில் தேவையான பணத்தை செலவுக்காக மனைவியிடம் கொடுத்து செல்வான். அவளும் சிக்கனமாக இருந்து அதில் சேமித்தும் வந்தாள். அவள் பெரும்பாலும் தவிடு எடுத்து வந்து அதில் தனது வீட்டின் பின்புறம் தோட்டத்திலிருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி அதனுடன் சேர்த்து தேவையான உப்பு மற்றும் தண்ணீர் கலந்து அடை வார்த்து தனது மகனுக்கும் கணவருக்கும் கொடுத்து தானும் உண்டு வந்ததால் அவளை தவுட்டுபெண் என்று ஊர் மக்கள் அழைத்தனர்.
இப்போது தகரபெண்ணின் பெயர் பற்றியும் குடும்பம் பற்றியும் அறிந்துக் கொள்ளலாம். இவளுக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் 10 வயதில் ஒரு மகனும் 5 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். இவளது கணவன் பக்கத்து ஊரில் பணியாற்றி வருகிறான். வாரம் ஒருமுறை வீட்டிற்கு வந்து மனைவி குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு பின் குடும்ப செலவிற்கு பணம் கொடுத்து செல்வான். இவளும் சிக்கனமாக குடும்பம் நடத்தி வாழ்ந்து வந்தாள். கணவன் ஊருக்கு சென்றால் இவள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு காட்டிற்குள் சென்று தகர (திகரை) இலைகளை பறித்து வந்து அதைவைத்து தான் சமையல் செய்வாள். இப்படி தகர இலையை வைத்து சமைத்து வந்ததால் இவளுக்கு தகரபெண் என்ற பெயர் வந்தது.
ஒரு வழியாக ஊர் மக்களிடம் விசாரித்து பெயர் ரகசியத்தையும் குடும்ப விவரங்களையும் அறிந்துக் கொண்டு விட்டோம். மேலும் கதைக்குள் பயணிக்க தங்களின் இருக்கை வார்ப்பட்டையை அணிந்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்☺️
இப்படியாக இருவரும் அவரவர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் வீட்டில் வேலைகள் அதிகமாக இருந்ததால் தகரபெண் தகர இலையை பறிப்பதற்காக காட்டிற்குள் செல்ல சற்று தாமதமானது அதனால் திரும்பி வருவதற்கும் தாமதமாகலாம் என்று எண்ணி தவுட்டுபெண்ணிடம் பள்ளியிலிருந்து வரும் தன் பிள்ளைகளை தான் வரும்வரை பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு கிளம்பி சென்றாள். அவள் காட்டிற்குள் சென்று இலைகளை தேடி கண்டுப்பிடிப்பதற்கே மாலை நேரம் ஆகிவிட்டது. அது பனிக்காலம் என்பதால் சீக்கிரமே இருட்டியது. எப்பொழுதும் சாப்பாடு கட்டிக்கொண்டு வருபவள் அன்று அவசரத்தில் மறந்துபோனாள். இருளில் எப்படி வந்த வழி மாறாமல் ஊருக்குள் செல்வது என்ற குழப்பத்தில் இருக்கும்போது தூரத்தில் ஒரு ஒளி தெறிந்தது. தகரபெண் அதை நோக்கியபடி நடந்து சென்றால். தான் செல்லும் வழிநெடுக தனது சேலையை சிறிது சிறிதாக கிழித்து கையில் பட்ட செடிகளில் அல்லது மரப்பட்டைகளில் சொருகி வைத்துக்கொண்டே சென்றாள். சேலை தாவணியானது அவள் அந்த ஒளி வந்த இடத்தை சென்றடைவதற்குள். அந்த அடர்ந்த காட்டின் நடுவில் ஒரு அழகான பெரிய வீடு அதன் வாசலில் வைத்திருந்த விளக்கின் வெளிச்சமே நம் தகரபெண் நோக்கி வந்த ஒளி. சற்று பசி, பயம், பதற்றம் ஆகியவற்றுடன் மெல்ல கதவை தட்டினாள். யாரும் திறக்கவில்லை மீண்டும் தட்டினாள் பதில் இல்லை. கடைசியாக ஒருமுறை தட்டிப் பார்ப்போம் பதில் இல்லையெனில் வீட்டு வாசலின் தின்னையில் படுத்துறங்கி காலை விடிந்ததும் வீட்டிற்கு செல்லலாம் என்று எண்ணி கதவைத் தட்ட கையை உயர்த்தினாள் கதவு திறந்தது.
கதவு திறந்ததும் ஆச்சர்யமானாள் தகரபெண். ஏனெனில் கதவை திறந்தது ஒரு 80 வயது மூதாட்டி. காட்டிற்குள் உள்ள வீட்டில் இவ்வளவு வயதான பாட்டியா! அவர் தனியாக இருக்கிறாரா இல்லை வீட்டினுள் வேறு யாரேனும் இருக்கிறார்களா! அப்படி இருந்தால் அவர்கள் கதவை திறக்காமல் ஏன் இந்த வயதான பாட்டி வரவேண்டும்!!! என்ற பல சந்தேகங்கள் அவள் மனதில் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றியபடி இருக்க “யாரது” என்றாள் பாட்டி. உடனே சுதாரித்துக் கொண்டு தான் யார் என்பதையும் ஏன்?, எப்படி? அங்கு வந்தாள் என்பதையும் சொல்ல தொடங்கியதும் …”உள்ள வந்து உட்கார்ந்து சொல்லுமா. என்னால ரொம்ப நேரம் நிற்க முடியாது” என்றால் பாட்டி. உடனே வீட்டிற்குள் சென்றாள் தகரபெண். வீடு அலங்கோலமாக கிடந்தது ஒரு கெட்ட நாற்றம் வேற….”
தபெ: பாட்டி இந்த காட்டிற்குள் நீங்க தனியாவா இருக்கீங்க?
பாட்டி: ஆமாம் மா தனியாக தான் இருக்கேன் ஏன் கேக்கறே? சரி என்ன விடு.. இந்த காட்டுக்குள்ள இந்த நேரத்துல உனக்கு என்ன வேலை அத சொல்லு.
தபெ: நடந்தவற்றை எல்லாம் கூறினாள்.
பாட்டி :அச்சச்சோ குழந்தைகள் உன்ன தேடாதோ
தபெ : அதுதான் எனக்கும் வருத்தமா இருக்கு பாட்டி. இதுவரை அவங்களை நான் இப்படி தனியா விட்டு இருந்ததே இல்லை. என் தோழி தவுட்டுபெண் நல்லாதான் பார்த்துப்பா ஆனாலும் மனசு கேட்க மாட்டேங்குது. உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்??
பாட்டி: எனக்கு யாரும் இல்லை மா. நான் தனி ஆளாக தான் இந்த காட்டுக்குள்ள பல வருஷங்களா இருந்துட்டு இருக்கேன். இந்த காடு தான் எனக்கு எல்லா உறவுகளும். நான் சொல்லுவது எல்லாம் கேட்கும். என்னை பாதுகாப்பாக இத்தனை வருஷம் பார்த்துக்கிட்டு வருதுனா பாரேன்.
இப்படி பாட்டி கிட்ட பேச்சு குடுத்துக்கொண்டே அவர்கள் இருந்த அறையை சுத்தம் செய்தாள் தகரபெண். பாட்டி சுற்றும் முற்றும் பார்த்தாள்.
பாட்டி: அடடே என் வீடா இது பளிச்சுன்னு இருக்கே. பலே!! வாய் பேசும் போதே கை வீட்டு வேலைகள் எல்லாம் பார்த்திடுச்சே. என் வீட இப்படிப்பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு. வயசாயிடுச்சுல்ல என்னால வேலைகள் எல்லாம் செய்ய முடியலையே.
தபெ: யாரையாவது துணைக்கு வச்சுக்கலாம் இல்லையா பாட்டி.
பாட்டி :இந்த காட்டுக்குள்ள எனக்கு வேலை செய்துதர யாருமா வருவா?
தபெ: நாளையிலிருந்து நான் காட்டுக்கு இலை பறிக்க வரும்போது உங்களை வந்து விசாரித்து வீடு சுத்தம் செய்து தந்துவிட்டு போறேன் பாட்டி கவலை படாதீங்க.
பாட்டி: உனக்கு நல்ல மனசு மா. சரி நீ ஏதாவது சாப்பிட்டாயா??
தபெ: இல்லை பாட்டி. நீங்க சாப்பிடிங்களா?
பாட்டி: இதோ இன்று இந்த பழம் தான். சமையல் கட்டில் எல்லா பொருட்க்களும் இருக்கு ஆனா சமைக்க ஆளில்லை என்ன செய்ய!!
தபெ: நான் சமைக்கட்டுமா பாட்டி?
பாட்டி: ஓ தாராளமா!! நானும் நல்ல சாப்பாடு சாப்பிட்டு பல வருஷம் ஆச்சு.
தகரபெண் சமையலறைக்குள் சென்றாள். அவளுக்கு தலை சுற்றியது. எல்லாப் பொருட்களும் சிதறி, கொட்டி கிடந்தன. காய்கள் எல்லாம் அழுகி இருந்தது. பாத்திரங்கள் எதுவும் கழுவாமல் குமிந்திருந்தது. உடனே வேலையில் இறங்கினாள். சமையலறை பளிச்சிட்டது. தான் பறித்து வந்து தகர இலை வைத்து சிறிது நேரத்தில் சுட சுட சாப்பாடு தயாரித்து பாட்டியை சாப்பிட அழைத்தாள். பாட்டி அதற்குள் தூங்கிவிட்டாள். தகரபெண் பாட்டியை எழுப்பி உணவு பரிமாறினாள். பாட்டி தகரபெண்ணையும் உணவு அருந்துமாறு கூறினாள். ஆனால் தகரபெண் மறுத்து விட்டாள். ஏனென்றால் அவள் கொண்டு வந்த இலை கொஞ்சம் தான் அதை வைத்து சமைத்துள்ளாள். பாட்டி வேற… நல்ல சாப்பாடு சாப்பிட்டு பல வருஷமாச்சுன்னு சொன்னதினால் அவள் பாட்டி உண்டபின் மீதமுள்ளதை உண்ணலாம் என்றிருந்தாள். ஆனால் சாதம் மட்டுமே மீந்தது. பாட்டியிடம் ஒரு குவளை நீரும் ஒரு பாத்திரமும் கொடுத்து கைகளை கழுவ சொன்னாள். பின் பாட்டி தனது சாய்வு நாற்காலியில் சென்று அமர்ந்தார். தகரபெண் மீதமான சாதத்தில் தண்ணீர் ஊற்றி மூடி வைத்தாள். இட்டிலிக்கு மாவு, பருப்பு ஊற வைத்துவிட்டு இருந்த பழங்களை உண்டு பாட்டி அருகில் வந்து அமர்ந்தாள். பாட்டி அவளையே பார்த்துக்கொண்டு இருந்தார்.
தபெ: ஏன் பாட்டி அப்படி பாக்குறீங்க?
பாட்டி: இப்பத்தான் வயிறும் மனசும் ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் நெறஞ்சிருக்கு. ருசியான சாப்பாடு. நன்றி மா. ஆமாம் ருசில அளவு பாக்காம சாப்பிட்டு விட்டேன.. உனக்கு??
தபெ: பரவாயில்லை பாட்டி நான் பழங்கள் எல்லாம் சாப்பிட்டேன். அதுவே போதும். நாளைக்கு வீட்டுக்கு போய் சமைத்து பிள்ளைகளுக்கும் கொடுத்து நானும் சாப்பிட்டா போச்சு.
பாட்டி: சரி மா….நல்ல உணவு உண்டதில் என்க்கு நல்ல உறக்கம் வருது. உனக்கு தூக்கம் வரலையா.
தபெ: தூங்கனும் பாட்டி ஆனா என் பிள்ளைகள் சாப்பிட்டாங்களோ இல்லையோ என்ற கவலை தூக்கத்தை கலைக்கிறது என்ன செய்ய.
பாட்டி: சரி நான் தூங்க போகிறேன். உனக்கு தூக்கம் வந்தால் அந்த அறையில் போய் தூங்கு. அங்கு தேக்கினால் செய்த கட்டிலில் பஞ்சு மெத்தை போட்டிருக்கும் அதற்கு பட்டுத் துணி விரித்திருக்கும். நன்றாக உறக்கம் வரும்.
தபெ: அச்சச்சோ !!! பாட்டி எனக்கு அதிலெல்லாம் படுத்து பழக்கம் இல்லை. ஒரு பாய் போதும் இப்படியே தரையில் படுத்துக்கறேன்.
பாட்டி: அப்படியா சரி அப்போ அதுக்கு பக்கத்து அறையில் பாய் இருக்கு அங்க போய் தூங்கிக்கோ. சரியா நான் உறங்க போறேன். காலை பார்ப்போம்.
என்று சொல்லி பாட்டி உறங்க சென்றாள். தகரபெண்ணுக்கு உறக்கம் வரவில்லை. அவள் பாட்டி சொன்ன அறைக்குள் சென்று பார்த்தாள். அங்கு ஒரு பாய் இருந்தது ஆனால் அந்த அறை முழுவதும் பஞ்சு பறந்து கிடந்தது. ஊசி நூல் எல்லாம் சிதறிய படி கிடந்தன. அவள் அந்த பஞ்சை எல்லாம் ஒரு துணி கொண்டு ஒன்றுசேர்த்து அவற்றை அங்கு கிடந்த காலி தலையனை உறைக்குள் நிறப்பி பின் ஊசி நூல் கொண்டு தைத்து அழகான தலையனைகளை செய்து அடுக்கி வைத்து அறையை சுத்தம் செய்தாள். பின் ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பை ஆட்டுக்கள்ளில் அறைத்து மாவாக்கி மூடி வைத்தாள். அழுகாத காய்களை தனியாக எடுத்து வைத்தது அவளுக்கு ஞாபகம் வர உடனே அவற்றை நன்றாக நீரில் அலம்பி ஒரு கூடையில் போட்டு வைத்தாள். பூஜை அறையை சுத்தம் செய்தாள். இப்படியே ஒன்றன் பின் ஒன்றாக வேலை செய்து கொண்டே இருந்ததில் சற்று கண் அசந்து போனாள். பொழுது விடிந்தது. உடனே எழுந்து வீட்டின் வாசலை கூட்டி, கழுவி கோலமிட்டாள். பின் காலை உணவுக்கு இட்டிலி, சட்டினி, சாம்பார் செய்தாள். பாட்டி எழுந்து வந்தாள்.
பாட்டி: என்ன ஒரு அருமையான சாப்பாட்டின் வாசனை. என்னை படுக்கையறையிலிருந்து இழுத்து வந்துள்ளது.
தகரபெண் தான் கிளம்ப வேண்டும் என்பதை சொல்ல வந்தாள் அதற்குள் பாட்டி குறுக்கிட்டு …
பாட்டி: இரு இரு நான் குளித்து விட்டு வரேன் இருவரும் ஒன்றாக உணவு அருந்தலாம்.
என்று கூறி உள்ளே சென்றாள்.
தகரபெண்ணுக்கு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அதற்கு இப்போது கிளம்பினால் தான் சரியாக இருக்கும் என்ற கவலை இருந்தாலும் பாட்டிக்காக காத்திருந்தாள்.
“ஆஹா ஆஹா என் வீடு தெய்வீக மணம் கமழுதே. மிக சுத்தமாக இருக்கிறதே. மகிழ்ச்சியாக இருக்குமா.” என்று சொல்லிக்கொண்டே இட்டிலியை சட்டினி சாம்பார் போட்டு சாப்பிட்டாள். நீயும் சாப்பிடுமா என்றாள் பாட்டி.
தகரபெண் : பாட்டி நீங்கள் சாப்பிட்டு முடிப்பதற்காக தான் காத்திருந்தேன். நான் உடனே கிளம்ப வேண்டும். என் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். உங்களுக்கு மத்திய உணவும் செய்து வைத்துள்ளேன். சாப்பிடுங்கள். நான் விடைபெற விரும்புகிறேன். நாளை மீண்டும் வருகிறேன்.
பாட்டி: புரிகிறது மா. உன் அவசரம் புரிகிறது. சரி போவதற்கு முன் அதோ ஒரு அறை இருக்கிறதே அதில் நிறைய பெட்டிகள் இருக்கு. அதிலிருந்து ஏதாவது பெட்டியை என் பரிசாக நீ எடுத்துக்கோ.
தபெ: வேண்டாம் பாட்டி நான் சென்று நாளை வரும்போது எடுத்துக்கொள்கிறேனே.
பாட்டி: இந்தா சாவி. போய் எடுத்துக்கொண்டு கிளம்பு.
என்றாள் அதட்டலாக. உடனே வீட்டின் ஞாபகத்தில் வேகமாக சாவியை வாங்கி அறையை திறந்து ஆக சிறிய பெட்டியை எடுத்துக்கொண்டு மீண்டும் அறையை பூட்டி சாவியை பாட்டியிடம் கொடுத்து
தபெ: நான் எடுத்துக்கொண்டேன் பாட்டி சந்தோஷமா. இப்பொழுது கிளம்பட்டுமா
பாட்டி: இது சிறிய பெட்டியாச்சே பெரிசு எடுத்திருக்கலாமே சரி சரி உன் விருப்பம் அதுவானால் நான் என்ன சொல்ல ..சரி இப்படியே கிழிந்த புடவையுடனா போக போகிறாயா?பெட்டி எடுத்த அறைக்கு பக்கத்தில் தான் எனது அறை இருக்கிறது போய் உனக்கு வேண்டிய புடவையை எடுத்து உடுத்திக்கொண்டு வா. பட்டுப்புடவைகள் நிறைய இருக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கோ. இனி எங்க நான் பட்டுப்பீதாமரமா உடுத்திக்க போகிறேன். அப்படியே அங்கு ஒரு பெட்டியில் எனது நகைகளும் இருக்கும். அதிலிருந்தும் வேண்டியதை எடுத்துக்கொள்.
தகரபெண் வீட்டிற்கு போக தவிக்கிறாள். இந்த பாட்டி என்னடான்னா அது செய் இது செய் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாள். தகரபெண்ணும் ஒன்றும் மறுத்துப்பேசாமல் பாட்டி அறைக்கு சென்றாள். மறுத்து பேசினால் பாட்டி இன்னும் தாமதமாக்குவாரோ என்ற பயம். வேகமாக ஒரு நூல் புடவையை எடுத்து உடுத்திக்கொண்டு ஒரேஒரு சங்கிலி மட்டும் அணிந்து கொண்டு ஓடி பாட்டியிடம் வந்து தான் கிளம்பியாக வேண்டும் என்று கெஞ்சாத குறையாக சொன்னாள்.
பாட்டி அவளது அவசரம் புரியாததுபோல் ஏன் பட்டுப்புடவை உடுத்திக்கொள்ளவில்லை? ஏன் ஒரேஒரு சங்கிலி தான் அணிந்து “பத்திரமாக சென்று வா பெண்ணே நாளை சந்திப்போம் என கூறி விடை கொடுத்தாள்”
ஒரு வழியாக பாட்டி வீட்டிலிருந்து கிளம்பினாள் தகரபெண். அவள் தான் வழிநெடுக போட்ட புடவை கிழிசல்களை தொடர்ந்து ஊருக்கு போய் சேர்ந்தாள். நேராக தவுட்டுபெண் வீட்டின் கதவை தட்டினாள். கதவு திறந்ததும் தன் பிள்ளைகளை பற்றி விசாரித்தாள்.
தவுட்டுபெண் : இரு இரு என்ன அவசரம் உனக்கு?? அவர்கள் எழுந்து பால் அருந்துகின்றனர். ஆமாம் நீ எங்கே சென்றாய்? இரவெல்லாம் எங்கிருந்தாய் ?
தகரபெண்: அந்த விவரம் எல்லாம் என் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வந்து சொல்கிறேன்.
என்று கூறிக்கொண்டே தன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்கு போனாள். பின் வேகமாக காலை உணவு செய்து பிள்ளைகளுக்கு கொடுத்து, பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பியதும் அப்பாடா என்றிருந்தது அவளுக்கு. சற்று நேரம் படுத்துக்கொண்டாள். அப்பொழுதுதான் அவளுக்கு அந்த பாட்டி பரிசாக தந்த பெட்டியின் ஞாபகம் வந்தது. பிள்ளைகளை கிளப்பும் அவசரத்தில் மறந்தே போனாள். உடனே அதை எடுத்து திறந்ததும் அதிர்ச்சியுற்றாள். ஏனென்றால் அந்த பெட்டி முழுவதும் தங்க காசுகளும், வைர வைடூர்யங்களின் ஒளி கண்ணைப் பறித்தது. அப்படியே பிரமையில் ஆழ்ந்தாள். கதவை யாரோ தட்டும் சத்தம் அவளை பிரமையிலிருந்து மீட்டு வந்தது. கதவை திறந்தாள்.
தவுட்டுபெண்: என்னடி கதவை திறக்க இவ்வளவு நேரம்? என்ன செய்து கொண்டிருந்த? சரி நேற்று முழுவதும் எங்க இருந்த? அத கேட்க தான் வந்தேன்.
தகரபெண் : வா வா நானே உன் வீட்டுக்கு வந்திருப்பேன். உனக்கு ஒன்னு காட்டுகிறேன் நீ அசந்துடுவ.
தவுட்டுபெண் : நான் என்ன கேக்கறேன் நீ என்ன சொல்லுற!!!!
என்று கூறிக்கொண்டே தகரபெண் காட்டிய பெட்டியை பாத்து வாயடைத்து போனாள்.
தவுபெ: என்னப்பா இது இவ்வளவு ஜொலிக்கிறது. ஏது உனக்கு? அவ்வளவும் நிஜமாகவே தங்கமும் வைரமுமா? இதை எடுக்கதான் போயிருந்தாயா? சொல்லிருந்தால் நானும் வந்திருப்பேன் இல்லையா!! இதை வைத்து நம் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழலாமே!! நம் கணவர் இப்படி வெளியூரில் கஷ்டப்பட வேண்டியதில்லை!!
தகபெ: நீ இப்படி கேள்வி மேல கேள்வி கேட்டுட்டே போற!!! என்னை பதில் சொல்ல விடு.
என்று சொல்லிக்கொண்டே தகரபெண் நடந்தவற்றை கூறி முடித்ததும்….
தவுபெ: அட அசடே எடுத்தது தான் எடுத்த கொஞ்சம் பெரிய பெட்டியா எடுத்திருக்கலாமில்லையா!!
தகபெ: எனக்கு இதை தூக்கிகிட்டு வரத்துக்கே கஷ்டமாக இருந்தது. பாவம் வயசான பாட்டி தனியா இருக்காங்க. நாளைக்கு வரேன் என்று சொல்லியுள்ளேன் ஆனால் என்னால் போக முடியாது. என் கணவர் நாளை வருவார். இப்போதான் ஞாபகம் வந்தது. இரண்டு நாள் கழித்து போகனும். சரி இந்தா இதிலிருந்து நீயும் கொஞ்சம் எடுத்துக்கொள்.
தவுட்டுபெண் அதிலிருந்து பாதி பொருளை எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கு போனாள். அதிலிருந்து எடுத்து வந்த நகையை போட்டு அழகு பார்த்தாள். அப்பொழுது அவளுள் பேராசை எழுந்தது. தானும் ஒரு பெட்டி எடுத்து வரவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இப்பொழுதே சென்றால் வேலையும் அவ்வளவாக இருக்காது ஏனெனில் தகரபெண் எல்லா வேலைகளையும் சுத்தமாக செய்பவள் என்பது ஊர் அறிந்ததே அதனால் பாட்டியின் வீடு பளிச்சிடும் மேலும் மாவாட்டி வைத்திருப்பதால் சட்டென்று உணவும் பாட்டிக்கு கொடுத்திடலாம் என்றெல்லாம் யோசித்து மனதிற்குள் ஒரு திட்டமிட்டு தகரபெண்ணிடம் சென்று தனது ஊர்க்காரர் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லை அதனால் தான் உடனே போகவேண்டும் தனது பிள்ளையை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு புறப்பட்டு சென்றாள் காட்டிற்குள்.
தகரபெண் சொன்ன வழியாக சென்றாள். சிறுது நேரத்தில் தகரபெண்ணின் புடவை கிழிசல்களை பார்த்தாள். அதே வழியில் பயணித்தாள். மாலையானது இருளும் படிந்தது, வீடும் தெறிந்தது. மகிழ்ச்சியாக கதவை தட்டினாள். தகரபெண் கூறியது போல் இரண்டு முறையும் கதவு திறக்கவில்லை. மூன்றாவது முறை திறந்தது. பாட்டி “யாரது” என்று கேட்டாள். உடனே தவுட்டுபெண் உள்ள போய் பேசலாம் பாட்டி வாங்க என்று பாட்டிக்கு முன் அவர் வீட்டிற்குள் சென்றாள். சென்றவள் கெட்ட நாற்றம் தாளாமல் ஒடி வெளியே போனாள். தகரபெண் வீட்டை சுத்தம் செய்து முழுசா ஒரு நாள் கூட ஆகவில்லை அதற்குள் வீடு அலங்கோலமாகவும் கெட்ட நாற்றத்துடனும் இருக்கே!!!! தகரபெண் பொய் சொல்லியிருப்பாலோ!!!! என்றெல்லாம் பல எண்ணங்கள் தோன்றியது தவுட்டுபெண்ணுக்கு. பாட்டி உள்ளே இருந்து ” ஏம்மா ஓடிட்ட” என்று கேட்டாள். உடனே சுதாரித்துக் கொண்டு வீட்டை சுற்றிப்பார்க்க போனதாக சொல்லி சமாளிக்க நினைத்தாள் ஆனால் பாட்டி விடுவாரா!!!
பாட்டி: அதற்கு ஏன் ஓடின ஏதோ என் வீடு இடியபோறாமாதிரி? நிதானமாக சுற்றி பார்க்க வேண்டியது தானே!! அதுவும் வெளியே இந்த இருட்டில் என்னத சுற்றி பார்ப்ப வா உள்ள வா. நீ யாரு ? எப்படி இங்கே வந்த ? இந்த விவரங்கள் எல்லாம் சொல்லு கேட்போம்.
தவுபெ: இதோ வரேன். சொல்லுங்க பாட்டி. சாப்பிட ஏதாவது வச்சிருக்கேங்களா?? இல்லை மாவெல்லாத்தையும் முடிச்சிட்டிங்களா??
பாட்டி: என்னது!!! ஏதோ நீ தான் நேற்று வந்து மாவு அறைத்து வச்சிட்டு போன மாதிரி கேக்கறே?
தவுபெ: வீடுன்னா இட்டிலிக்கு மாவாட்டி வைத்திருப்பது சகஜம் தானே அதனால கேட்டேன் !!
என்று சொல்லிக்கொண்டே நாலாபுறமும் அவள் கண்கள் சுழன்றது
பாட்டிக்கு இவள் எப்படி அங்கு வந்தாள்? ஏன் வந்திருக்கிறாள்? எதை அவள் கண்கள் சுழன்று தேடுகிறது என்பதெல்லாம் புரிந்தும் புரியாததுபோல தனக்கு பசிப்பதாகவும் சமைத்து தரும் மாறு தவுட்டுபெண்ணிடம் கூறினாள். அதற்கு தவுட்டுபெண் பாட்டிக்கு வயசாகிவிட்டதால் பழம் மட்டும் சாப்பிடுமாறு கூறிவிட்டு தனக்கு தூக்கம் வருவதாகவும் எங்கே படுத்துரங்க வேண்டும் என்று கேட்டாள். பாட்டியும் தகரபெண்ணிடம் சொன்னது போலவே இரண்டு அறைகளைப்பற்றி சொல்லி முடிப்பதற்குள் தான் தேக்கு கட்டிலில் படுத்துக்கொள்வதாக கூறினாள். சரி என்று பாட்டி அறையை காண்பிக்க ஓடீ சென்று மெத்தையில் படுத்துருண்டாள். நன்றாக உறங்கினாள். காலை விடிந்து பல மணிநேரம் ஆகியும் எழாமல் உறங்கிக்கொண்டிருந்த தவுட்டுபெண்ணை எழுப்பினார் பாட்டி. வேகமாக எழுந்தாள். வீட்டிற்கு போக வேண்டும் என்றாள். பாட்டி புன்முறுவலுடன் “சரி சரி அந்த கடைசி அறைல பெட்டிகள் அடுக்கி இருக்கும் நீ போய் உனக்கு வேண்டியதை என் பரிசாக எடுத்துக்கொள்” என்று கூறி முடிப்பதற்குள் சாவியை பறித்து கொண்டு போய் அறையை திறந்து இருப்பதிலேயே பெரிய பெட்டியை தூக்க முடியாமல் இழுத்துக்கொண்டு வந்தாள். இதை பார்த்ததும்…
பாட்டி : இது போதுமா?
தவுபெ: இதைவிட பெரிய பெட்டி இருக்கா?
பாட்டி: இல்லை இதை இப்படி வீடு வரை இழுத்துக்கொண்டே போக போறயா?? சரி உன் பாடு சென்று வா.
தவுட்டுபெண் யோசித்தாள் “என்ன இந்த பாட்டி பொசுக்கென்று போயிட்டு வா என்று சொல்லுது அப்போ பட்டுப்புடவை…அதையும் விட கூடாது”
தவுபெ : ஏன் பாட்டி உங்க கிட்ட புடவைகள் நிறைய இருக்குமே இத்தனை வருஷமாக சேர்த்து வச்சிருப்பேங்களே!!!
பாட்டி: அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை மா. இந்த காட்டுக்குள்ள எனக்கு யாரு புடவை எடுத்து தர போறா!!! சரி உனக்கு நேரமாகுதில்ல. கிளம்ப வில்லை?
தவுட்டுபெண் மனதிற்குள் ” போச்சு பட்டுப்புடவை போச்சு இந்த கிழவி தராது போல… பரவாயில்லை இந்த பெட்டில இருக்கறத வச்சு நாமளே வாங்கிக்கலாம்”
பாட்டி: என்னடிமா யோசனை??
தவுபெ: ஒன்னுமில்லை!! நான் சென்று வருகிறேன்
பெரிய பெட்டியை தூக்கவும் முடியாமல் இழுக்கவும் முடியாமல் கஷ்டப்பட்டு ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தாள். அவள் பிள்ளையை பற்றி சிந்தனையே இல்லாமல் இருந்தாள். வேகமாக கதவை திறந்து வீட்டிற்குள் சென்று அவசர அவசரமாக பெட்டியை திறந்தாள். அதனுள் பாம்பு, பூரான், தேள் எல்லாம் நிரம்பி வழிந்தன. பயந்து போனாள் தவுட்டுபெண். தகரபெண் மீது கோபம் கொண்டாள். அவள் தன்னிடம் பொய் சொன்னதாக கருதினாள்.
இவ்விடத்தில் தவுட்டுபெண்
பேராசையால் பொறாமை கொண்டு பொறாமையால் கோபம் கொண்டு மதியிழந்தாள். செய்வதறியாது தகரபெண் தான் தனது இந்த நிலைமைக்கு காரணம் என்று மதிகெட்டு நினைத்து அந்த பெட்டியை தகரபெண் வீட்டின் பின்புறம் கொண்டு போய் போட்டாள். அந்த பெட்டி தகரபெண் வீட்டின் பின்புறம் மண் தரையில் விழுந்த வேகத்தில் திறந்து கொண்டது. அதனுள்ளே பாம்பு தேள்களுக்கு பதில் தங்கமும் வைரமும் ஜொலித்து.
அதிர்ச்சியடைந்த தவுட்டுபெண் வேகமாக தகரபெண் வீட்டின் கதவை ஓடிபோய் தட்டினாள். தகரபெண் கதவை திறந்து நலம் விசாரித்தாள். அதற்கு பதில் சொல்லாத தவுட்டுபெண் தனது பெட்டி ஒன்று தகரபெண் வீட்டின் பின்புறம் விழந்ததாகவும் அதை எடுக்க வந்ததாகவும் கூறிக்கொண்டே பின்புறம் கதவை திறந்து தகரபெண் பார்ப்பதற்குள் வேகமாக பெட்டியை மூடி அதை அவள் வீட்டுப் பக்கமாக வேலியின் அடிவழியாக தள்ளிவிட்டு சென்றுவருவதாக கூறி தன் மகனையும் அழைத்துக்கொண்டு அவள் வீட்டுக்கு பின்புறம் போய் பெட்டியை இழுத்து வந்து வீட்டினுள் வைத்து திறந்தாள் மீண்டும் பாம்பும், தேளும் நெளிந்தது. குழம்பி போன தவுட்டுபெண் தன் பிள்ளையை கூட கவனிக்காமல் மீண்டும் தகரபெண் வீட்டினுள் பெட்டியை போட்டாள் பொன்னும் வைரமுமாக மின்னியது. பின் தனது வீட்டினுள் எடுத்து வந்தால் மீண்டும் பாம்பாக மாறியதில் தவுட்டுபெண்ணுக்கு பித்து பிடித்தது. இதைப்பார்த்த அவள் மகன் அழுது கொண்டே எந்த பெட்டியால் தனது தாய் இப்படி ஆனாளோ அந்த பெட்டியை தகரபெண் வீட்டின் பின்புறம் போட்டு விட்டு தன் தாயை அழைத்துக்கொண்டு அப்பாவிடம் போய் அங்கேயே இருந்தார்கள். தகரபெண் தனது வீட்டின் பின்புறம் சென்று பார்த்தாள் பாட்டி வீட்டில் பார்த்த அதே பெட்டி கிடந்தது. அப்பொழுது தான் அவளுக்கு எல்லாம் புரிந்தது. தன் கணவரிடம் நடந்தவற்றை கூறி இருவரும் பாட்டி வீட்டிற்கு காட்டிற்குள் சென்றார்கள். அங்கு அப்படி எந்த வீடும் இருந்ததுக்கான அறிகுறியும் இல்லை. அந்த வீடு இருந்த இடத்தை தொட்டு கண்ணில் ஒத்திக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு வீடு வந்த தம்பதியர் மெல்ல பெட்டியை திறந்தார்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.
இத்துடன் இந்த பயணம் இனிதே நிறைவுற்றது. உங்கள் இருக்கை வார்ப்பட்டையை இத்துடன் அவிழ்த்து விடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
❤️முற்றும்❤️

வெள்ளரிக்கா பட்டினம்
கோமு என்ற ஒரு வாலிபன் முருங்கைக்கரை என்ற ஊரில் வசித்து வந்தான். அவனது தொழில் வேட்டையாடுதல். காட்டுக்குள் சென்று விலங்குகள், பறவைகள் போன்றவற்றை வேட்டையாடி அவற்றை ஊர் மக்களிடம் விற்பனை செய்து காசு சம்பாதித்து வாழ்ந்து வந்தான். காட்டுக்குள் கிடைக்கும் அரிய வகை மூலிகைகள் பொருட்கள் ஆகியவற்றையும் சேகரித்து அதை ஏலத்தில் விட்டு அதையும் காசாக்கிவிடுவான். நல்ல கெட்டிக்காரன், திறமைசாலி, யாருக்கும் கெடுதல் நினைக்காத நல்ல உள்ளம் படைத்தவன். கடவுள் பக்தி உடையவன். அவன் அந்த ஊர் தலைவர் ஆகவேண்டும் என்று பல நாள் ஆசை பட்டு அதற்கு பல வழிகளில் முயற்சியும் செய்துப்பார்த்து பயனில்லாமல் போனது. கடவுளிடம் கோபம் கொண்டான். அந்த ஆசையை அப்படியே மனதினுள் பூட்டி வைத்து விட்டு தனது வேலையை பார்த்தான்.
ஒரு நாள் வேட்டைக்கு சென்றவன் ஊர் திரும்பவில்லை. அனைவரும் அவனுக்காக காத்திருந்து காத்திருந்து பின் அவரவர் வீட்டுக்கு சென்றனர். காட்டுக்குள் சென்ற கோமுவை வனவிலங்குகள் தாக்கியதில் அவன் மூக்கு பாதியாக அறுப்பட்டு போனது. அவன் பல மூலிகைகளை காயம் பட்ட இடங்களில் போட்டு தனக்கு தானே வைதியம் பார்த்துக்கொண்டு அங்கு கிடைத்த பழங்களை உண்டு இருந்தான். விலங்குகளிடமிருந்து தப்பிப்பதற்காக அவன் ஓடியதில் வழி மாறி போய்விட்டான். எங்கு இருக்கின்றான் என்பது அவனுக்கே தெரியாது.
காயங்கள் எல்லாம் மாய்ந்து கொஞ்சம் உடலில் சக்தி வந்ததும் எழுந்து மீண்டும் நடக்கலானான் தன் ஊரைத் தேடி முறிந்த அரை மூக்குடன். பல நாள் நடந்தும் அவனால் காட்டை விட்டு வெளியேற முடியவில்லை ஏனெனில் அவன் காட்டின் நடுவில் சிக்கிக்கொண்டுள்ளான். அவ்வளவு தூரம் காட்டிற்குள் அவன் சென்றதில்லை. ஊருக்கு வழி தெரியாததால் குழப்பம், வலியால் வேதனை, நல்ல உணவுக்காக ஏக்கம், மூக்கு அறுப்பட்டு பாதியானதில் கோபம், ஊர் தலைவர் பதவி ஆசை இப்படி பல உணர்ச்சிகளால் சூழப்பட்டு அதில் சிக்கி செய்வதறியாது கடவுளை திட்டித்தீர்தான். ஏன் தனக்கு இப்படி கஷ்டங்களையும் தோல்விகளையும் கொடுத்து வாட்டி வதைக்கிறார் என்ற ஆத்திரத்தில் கத்தினான். காடே அதிர்ந்தது. எங்கடா மீண்டும் காட்டு விலங்குகள் தனது சப்தத்தில் வந்து மீதமுள்ள மூக்கையும் தின்று விடுமோ என்று பயந்து சற்று நேரம் ஒளிந்து கொண்டான். பின்னர் வலது புரம் திரும்பிபார்த்தான் ஏதோ ஒரு ஒளி தெறிந்தது. ஒளியின் பிரகாசத்தை நோக்கியே நடக்கலானான். தனது ஊர் என்று எண்ணி மனதுக்குள் மகிழ்ச்சி அடைந்தான்.
அவன் நடந்து நடந்து களைத்து விட்டதால் ஒரு மரத்தாலான கம்பம் ஒன்றில் சாய்ந்தான். சற்று நேரம் கழித்து தான் எதன் மேல் சாய்ந்துள்ளோம் என்று தலையை தூக்கிப் பார்த்தான். பெரிய பெயர் பலகை தெரிந்தது அதில் வெள்ளரிக்கா பட்டினம் என்று எழுதியிருந்தது. தனது ஊர் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு ஊரை அடைந்தது அவனுக்குள் மகிழ்ச்சியை அளித்தது. ஊருக்குள் சென்றான் அதிர்ச்சியுற்றான். ஏனெனில் அந்த ஊர் மக்களுக்கு யாருக்குமே மூக்கு என்ற ஒரு உறுப்பு முகத்தில் இல்லை. அதற்கு பதில் சிறு இரு துவாரங்கள் மட்டுமே இருந்தது. ஏதோ வித்தியாசமான ஊருக்குள் நுழைந்து விட்டோம் ஏதோ விபரீதம் தனக்கு நடக்க போகிறது, இன்னொரு சோதனை தனக்காக அந்த கடவுள் கொடுத்து ரசிக்கிறார் என்ற பல எண்ணங்கள் அவனுள் பறந்தன. வெள்ளரிக்கா பட்டின மக்கள் கோமுவைப்பார்த்து அதிசயித்துப் போனார்கள் ஏனென்றால் அவர்கள் அரை மூக்குடன் இருக்கும் மனிதனை அன்று தான் முதல் முதலில் காண்கிறார்கள். அவர்கள் காட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாதவர்கள். அவர்கள் ஊருக்குள் நுழைந்த முதல் அரை மூக்குடைய வேற்று ஆள் நமது கோமு தான்.
வெள்ளரிக்கா பட்டினத்துக்கு ஒரு வயதான ராஜா இருக்கிறார் அவருக்கு வாரிசுகள் இல்லாததால் அடுத்து யார் தங்கள் ஊரை ஆளப்போகிறார் என்ற குழப்பம் ஊர் முழுவதும் நிலவி இருந்தது. ராஜா உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். மக்களும் வருத்தத்தில் ஆழ்ந்திருந்தனர். அந்த ஊரில் வெள்ளரிக்காய் செடியிலும் கொடியிலும் காய்த்து ஊர் முழுவதும் பரவி கிடந்தது. இது போக மா, பலா, தென்னை மரங்களும் தெருக்களின் ஓரங்களில் நெடு நெடுவென காய் கனிகளோடு அழகாக வளர்ந்திருந்தது. அவர்கள் தோட்டத்தில் தங்கமும் வைரமும் சாதாரண கற்கள் போல கிடந்தன. ஊரின் மேற்கு எல்லையில் ஒரு பெரிய கிணறு உள்ளது. அதிலுள்ள நீர் அமிர்தம் போல் இருக்கும். காட்டிற்குள் இப்படி ஒரு தன்னிறைவு பசுமை கிராமம் இருப்பதே யாருக்கும் தெரியாது. கோமுவை போல் வழிதவறி வந்தவர்கள் இந்த ஊரின் வளத்தை கண்டு பேராசைக்கொள்ள..அவர்கள் காட்டு விலங்குகளுக்கு இறையாக வெட்டி வீசப்பட்டனர். இதெல்லாம் நமது கோமுவுக்கு தெரியாதல்லவா. அவன் செய்வதறியாது நின்றான்.
நாட்டு மக்கள் அவனை தூக்கிக்கொண்டு அரசரிடம் சென்றார்கள். அரசரும், அவரது மந்திரியும் அரைமூக்கனை ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். கோமுவை பார்த்து யார், எப்படி இங்கு வந்தாய் என்று கேட்டார்கள். கோமு நடந்ததை கூறினான். ராஜா அவனுக்கு ஒரு வீடு கொடுத்து அதில் இருக்கச்சொன்னார். அவனும் ஆரம்பத்தில் சற்று பயத்துடன் இருந்தான். ஏனென்றால் அது புது ஊர் அதுவும் அடர்ந்த காட்டிற்குள். மூக்கில்லாத வித்தியாசமான மனிதர்கள். தனக்கு நல்லது செய்கிறார்களா இல்லை தன்னை பலி கொடுக்க நல்ல நாளுக்காக விட்டுவைத்திருக்கிறார்களா என்ற குழப்பத்தில் இருந்தான். மீண்டும் கடவுளை மனதில் திட்டினான்.
சில நாட்கள் கடந்தது அந்த நாட்டு மக்கள் கோமுவிடம் நன்றாக பழகினார்கள் கோமுவும் அவர்கள் ஊரில் சில மாற்றங்களை செய்து அழகாகினான். புதுப்புது உணவு வகைகளை செய்தும் கொடுத்தான், செய்முறையை கற்றும் கொடுத்தான். குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தான். வெளி உலகம் பற்றி நிறைய விஷயங்களை மக்களுடன் பகிர்ந்து கொண்டான். ஆனால் அவன் அங்கு இருக்கும் தங்கத்துக்கும், வைரத்துக்கும், அந்த நாட்டின் வளத்துக்கும் ஆசைப்படவே இல்லை ஏனென்றால் அவன் உயிரோடு வாழ்வதே அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அரசருடனும் கோமு நன்றாக பழக ஆரம்பித்தான். இப்படியே பல மாதங்கள் ஓடிவிட்டது. ஒரு நாள் ராஜா இறந்துவிட்டார். ஊரே கவலையில் ஆழ்ந்தது.
அடுத்து யார் தங்களுக்கு ராஜாவாக இருந்து வழி நடத்தப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. மந்திரி எழுந்தார் மக்களை பார்த்தார் ” நமது நாட்டிற்கு வந்து சில காலங்களே ஆனாலும் நம் அனைவரையும், நம் பழக்கவழக்கங்களையும், நம் முறைகளையும் நன்கு புரிந்துகொண்டு, கற்றுக்கொண்டு மேலும் நம் நாட்டு நலனுக்காக பல திட்டங்களை வகுத்து தந்து, கல்வி என்ற ஒன்றை நம் பிள்ளைகளுக்கு கற்ப்பித்து நமது அரசரின் செல்ல பிள்ளையாக இருந்த முறிமூக்கனை நமது ஊரின் ராஜாவாக்க முடிவெடுத்துள்ளோம் இதில் யாருக்கேனும் மாற்றுக் கருத்து இருந்தால் கூறலாம்” என்று கூறி அமர்ந்தார். சற்று நேரம் அமைதி நிலவியது. பின் மக்கள் அனைவரும் முறிமூக்கன் ராஜா வாழ்க !! முறிமூக்கன் ராஜா வாழ்க!! வாழ்க!! என கோஷம் எழுப்பினர். நடப்பவை அனைத்தும் கனவா இல்லை நிஜமா என்று தன்னைத்தானே கிள்ளிப் பார்த்துக்கொண்டு திகைத்து நின்றான்.
ஒரு ஊருக்கு தலைவராக ஆசைப்பட்ட கோமு இப்பொழுது காட்டிலிருக்கும் ஊருக்கு ராஜா ஆனான். அன்றிரவு அவன் தனக்கு நடந்தவைகளை நினைத்துப்பார்த்தான். ஒவ்வொரு முறை அவனுக்கு கெடுதல் நடந்த போதும் அவன் கடவுளை திட்டியது ஞாபகம் வந்தது. இப்போது அவனுக்கு புரிந்தது கடவுள் அவனுக்கு கொடுத்த கஷ்டங்கள் எல்லாமுமே அவனை இப்படி ஓர் இடத்தில் அமர வைத்து அழகு பார்ப்பதற்கே என்று. அந்த ஊரில் ஒரு கோவில் கூட அவன் பார்க்கவில்லை என்பதும் அவன் நினைவிற்கு வந்தது. மறுநாள் மக்களிடம் அவன் கற்ற பாடத்தை கூறி ஒரு கோவில் கட்ட ஆலோசனை கேட்டான். மந்திரிகளும் மக்களும் அமோதிக்க உடனே கட்டுமானம் தொடங்கப்பட்டது. சில மாதங்களில் கோவில் கட்டி முடிக்கப்பட்டது.
அவனது கோமு என்ற பெயர் மாய்ந்து போனது. மூக்கில்லா ராஜ்ஜியத்தில் முறிமூக்கன் ராஜாவாக சிறப்புடன் நல்லாட்சி புரிந்து வந்தான். நல்ல சிந்தனைகளும், நேர்மறை எண்ணங்களும், பொருமையும் இருந்தால் நமக்கு நல்லதே நடக்கும் என்பதற்கு கோமு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்தான். அவன் நினைத்திருந்தால் தப்பி செல்ல முயன்றிருக்கலாம் ஆனால் அவன் அதை செய்யாமல் கிடைத்தை ஏற்றுக்கொண்டு பொறுமையுடன் தனது காலத்தை மற்றவர்களுக்கு தீங்கு நினைக்காமல்/செய்யாமல் முடிந்தவரை உதவிகள் செய்து கடவுளை மனதில் திட்டினாலும் அவர் மீது வைத்த நம்பிக்கையை விடாமல் நல்லதே நடக்கும் என்று நம்பியதால் அவனுக்கு நல்லதே நடந்தது.
வாழ்க்கை என்பது நமக்கு கடவுள் வழங்கிய விசித்திர பரிசுப் பெட்டகம். ஆம் ஒவ்வொரு முறை நாம் திறக்கும்போது ஒவ்வொரு அனுபவங்களை கொடுத்து நமக்கு பாடம் கற்ப்பிக்கும் மந்திரம் நிறைந்த பெட்டிகள் கொண்ட பெட்டகமே. நமது வாழ்வில் நடப்பவை எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும். காரணமின்றி எந்த காரியமும் நடந்திராது. உதாரணமாக நமது குடுபம்பத்தை கெடுப்பதற்க்கும் நிம்மதியை குலைப்பதற்கும் என்றும் சில பொறாமை கார்கள் நமக்கு பின்னால் அவர்களைப் போன்றே எண்ணமுடையவர்களோடு கைக்கோர்த்து பல வேலைகளை செய்வார்கள். அது அவர்களின் குணம். அவர்கள் மீது கோபப்பட்டு அல்லது ஆத்திரப்பட்டு ஒன்றும் ஆகபோவதில்லை. நமது வாழ்வில் அப்படி ஒரு சங்கடம் நடக்க வேண்டும் என்றிருந்தால் அது நடந்தே தீரும். கெட்டவை கெட்டவர்கள் மூலம் தான் நடக்கும். சிலர் கஷ்டப்படும் காலங்களில் கடவுளை திட்டித்தீர்ப்பார்கள் ஆனால் அவர்களுக்கே நல்லது நடந்தால் நன்றி கூறுபவர்கள் விரல்விட்டு எண்ணும் அளவில் தான் இருப்பார்கள் நம் கோமுவைப்போல் சிலர். கஷ்டமோ நஷ்டமோ சந்தோஷமோ துக்கமோ எதுவாயினும் நாம் தான் கடந்து ஆகவேண்டும். அவ்வாறு நடப்பவைகளை நேர்மறை எண்ணங்களுடன் அணுகினால் வாழ்க்கையை சிறப்பாக வாழ முடியும் என்பதை உணர்ந்திடவே வெள்ளரிக்கா பட்டினம் சென்று வந்தோம்.
உங்களின் இந்த வெள்ளரிக்கா பட்டினம் வரையிலான பயணம் இனிதே முடிந்தது.
❤️முற்றும்❤️

ஜான் பல்லனும் முழம் பல்லனும்
பசும்பொன் என்ற ஒரு கிராமம். பெயரை கேட்டதுமே உங்களுக்கு புரிந்திருக்கும் ஏன் அப்படி ஒரு பெயர் வைத்திருப்பார்கள் என்று. ஆம் பசுமையான வயல்கள் அதிலே பொன்னிற நெல் கதிர்கள். பார்ப்பதற்கு பச்சையும் பொன்னிறமுமான பட்டுக்கம்பளம் விரித்தது போல் இருக்கும்.
இப்படிப்பட்ட கிராமத்தில் ஜான் பல்லன், முழம் பல்லன் என்று இருவர் வசித்து வந்தனர். கிராமத்திற்கு அதன் அழகை கண்டு எப்படி பெயர் வந்ததோ அதே போல் இவ்விருவரின் பற்களை கண்டு இவர்களை சிறு வயதிலிருந்தே அப்படி அழைத்தனர் கிராம வாசிகள். பின்னர் அதுவே அவர்கள் பெயரும் ஆனது.
ஜான் பல்லனுக்கு பற்கள் ஒரு ஜான் அளவிற்கும், முழம் பல்லனுக்கு பற்கள் ஒரு முழம் அளவிற்கும் நீட்டிக்கொண்டு இருப்பதால் அவர்கள் அப்பெயரை பெற்றனர்.
இருவரும் நல்ல நண்பர்கள். அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தனர்.
முழம் பல்லன் அவனால் ஆன உதவிகளை ஊருக்கும் ஊர் மக்களுக்கும் செய்து வந்தான். நல்ல குணம் படைத்தவன். அவனால் முடிந்தால் உதவுவான் இல்லை என்றால் ஒதுங்கி கொள்வான். அவனுடைய கொள்கையானது யாருக்கும் உதவாவிட்டாலும் உபத்ரவமாக இருக்கக்கூடாதென்பதே. அவன் உண்டு அவன் வேலையுண்டு என்று அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.
ஜான் பல்லன் வெளி உலகிற்கு நல்லவன் வேஷம் போடும் வேஷதாரி. சரியான வடி கட்டின கஞ்சன். யாருக்கும் எந்த உதவியும் செய்யாவிட்டாலும் முழம் பல்லன் செய்வதை எல்லாம் தான் செய்ததாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆசாமி. யாரையாவது புகழ்ந்தால் இவனுக்கு பிடிக்காது. அவனை யாராவது புகழ்ந்தால் புலங்காகிதம் கொள்வான். அதிலும் முழம் பல்லனை யாரேனும் புகழ்ந்தாலோ இல்லை நல்லதாக நாலு வார்த்தை சொன்னாலோ இவனுக்கு இருப்புக்கொள்ளாது அவர்களிடம் காரணமின்றி சண்டையிடுவான். அவனுக்கு முழம் பல்லனை ஊரார் போற்றுவது சற்றே பொறாமையை கொடுத்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வாழ்ந்து வந்தான்.
இப்படியாக வாழ்க்கை ஒடிக்கொண்டிருந்த சமையத்தில் முழம் பல்லன் தன் பக்கத்து ஊரில் இருக்கும் நண்பனின் திருமணத்திற்கு போக வேண்டிய சூழ்நிலை வந்தது. பிரயாணத்திற்கு சாப்பாடு பொட்டலம் எல்லாம் கட்டிக்கொண்டு கிளம்பினான். முழம் பல்லனின் தாய் ருசியாக சமைப்பார்கள். தன் நண்பன் ஜான் பல்லனிடம் கூறி விட்டு புறப்பட்டான். ஜான் பல்லனுக்கு மனதில் ஒரே கொண்டாட்டம் இனி ஊர் மக்கள் அவனிடம் தான் உதவி கேட்பார்கள், சில நாட்கள் இனி முழம் பல்லனை போற்றி பேச மாட்டார்கள் என்று.
அந்தக்காலத்தில் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு நடந்தே செல்வார்கள். இடையிடையே கிடைத்த இடத்தில் இளைப்பாறி பின் மீண்டும் பயணத்தை மேற்கொள்வார்கள். அதுபோல் நம் முழம் பல்லன் ஒரு நதியின் கரையில் இளைப்பாற முடிவு செய்தான். சூரியன் வானுக்குள் மறைந்தார். நிலவு மெல்ல மேலே எழ ஆரம்பித்தார். நாள் முழுவதும் நடந்த களைப்பால் அவனை மேலும் நடக்க அனுமதிக்கவில்லை அவனது கால்கள். எனவே அங்கேயே அமர்ந்தான். முகம், கை, கால்களை கழுவி விட்டு கட்டிக்கொண்டு வந்த புளியோதரையில் கொஞ்சம் சாப்பிட்டு மீதியை மீண்டும் கட்டி பையினுள் வைத்து விட்டு கைகளை நதியில் கழுவினான். மிதமான தென்றல் வீசியது, இரவு உணவும் ஆனது, தனது மேல் துண்டை தரையில் விரித்தான் நன்றாக உறங்கினான்.
நடுஇரவில் ஏதோ சப்தம் கேட்டது. அவன் அசையாமல் கண்களை மட்டும் திறந்து சப்தம் வந்த திசை பார்த்தான்……….தேவதைகள் போல் இரு உருவம் அவன் பையில் இருந்த புளியோதரையை சாப்பிட்டுக்கொண்டிந்ததை கண்டான். ஏதோ பயணிகள் பசியினால் தன் உணவை சாப்பிடுகிறார்கள் இந்த வேளையில் தான் எழுந்தால் அவர்கள் பயத்தில் சாப்பிட மாட்டார்கள் என்று எண்ணி அவர்களை காணாதது போல் மீண்டும் நித்திரையில் ஆழ்ந்தான்.
பொழுது விடிந்ததும் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தான் அவ்விருவரும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணவில்லை. சரி புறப்பட்டுச் சென்றிருப்பார்கள் என்று அவனுக்குள் சொல்லிக்கொண்டான். நதியில் குளித்து பின் பயணத்தை தொடர வேண்டும் என்று முடிவு செய்து நீருக்குள் செல்வதற்கு முன் முகத்தை கழுவுவதற்கு கைகளில் நீர் எடுக்க குனிந்தான் நீரில் அவன் முகத்தை பார்த்து அதிர்ச்சியுற்றான். மீண்டும் பார்த்தான் அவனால் நம்ப முடியவில்லை. அவனது முகத்தில் ஒரு மாற்றம். அவனது முழம் பற்கள் எல்லாம் மாய்ந்து அழகான பல் வரிசையுடன் முகம் மிளிர்ந்தது. மேலும் அவன் சாப்பாட்டு பையில் பொன்னும், வைரமும், வைடூர்யமும் மின்னின. மகிழ்ச்சியில் வேகம் கூடியது அவன் நடையில். தன் தாயிடமும் நண்பனிடமும் கூற வேண்டும் என்ற ஆர்வத்தில் தனது ஊருக்கே திரும்பி சென்றான். கிராம மக்கள் எல்லோரும் எப்படி இந்த அதிசயம் நடந்தது என்று வினவினார்கள். அவனும் நடந்தவற்றை ஒளிவு மறைவு இன்றி அப்படியே கூறினான்.
இதை அனைத்தையும் கேட்ட ஜான் பல்லன் உடனே இரண்டு பையில் உணவு பொட்டலங்கள் கட்டிக்கொண்டு நண்பனிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டு சென்றான்.
அதே நதிக்கரையை பொழுது சாயும் வேளையில் சென்றடைந்தான். ஒரு பையிலிருந்த உணவை உண்டு மற்றொரு பையை சற்று தள்ளி வைத்து விட்டு உறங்காமல் அவ்விரு உருவங்களுக்காக காத்திருந்தான். நள்ளிரவில் சப்தம் கேட்டது மெல்ல திரும்பி பார்த்தான் அதே தேவதைகள் போல இருவர் பையை திறந்து பார்த்தனர் ஆனால் அதில் நல்ல உணவு இல்லாததால் அவர்கள் உண்ணாமல் எழுந்து ஜான் பல்லனை பார்த்து “பாவம் இம் மானிடன் நல்ல உணவும் இல்லை பற்களும் இவ்வளவு நீளமாக இருக்கிறதே” என்று
அவர்களுக்குள் உரையாடினர். இதை அனைத்தையும் பார்த்தும் கேட்டும் கொண்டிருந்த ஜான் பல்லனுக்கு கோவம் ஏனெனில் அந்த தேவதைகள் உணவை உண்ணாததால் வைரமும், வைடூரியமும் வைக்கவில்லையே என்று. தேவதைகள் கூறிக்கொண்டனர் “உணவு தான் இல்லை வந்ததற்கு அவன் பல்லையாவது சரி செய்துவிட்டு செல்வோம்” என்று கூறிக்கொண்டே அவன் அருகில் சென்றனர். ஜான் பல்லனுக்கு பொன்னும் பொருளும் கிடைக்கவில்லையே என்ற கோபம் ஒருபுறம் ..எங்கே இவர்கள் தன் பற்களை முழம் பல்லனை போல் அழகாக்காமல் போய் விடுவார்களோ என்ற எண்ணம் மறுபுறம். இந்த சிந்தனை அவனை பொருமை இழக்க செய்தது. தவளை தன் வாயால் கெடும் என்பது போல் ….ஜான் பல்லன் சும்மா இல்லாமல் “அவன் பல்லைப்போல எம்பல்லும்” என்று கூற தேவதைகள் சட்டென்று மறைந்தனர். ஜான் பல்லனும் மயங்கி விட்டான்.
மறுநாள் சூரியன் உதயம் ஆகி பல மணிநேரம் ஆனபிறகு எழுந்தான் ஜான் பல்லன். உடனே வேகமாக நதியில் முகம் பார்க்க ஓடினான். நீரில் முகம் பார்க்க குனிந்தான் அதிர்ச்சியுற்றான். முன்னிருந்த ஜான் பல்லுடன் முழம் பல்லும் சேர்ந்து ஒரு அடி நீளத்திற்கு பல் இருந்தது. கவலையில் ஆழ்ந்தான். ஊருக்கு சென்றான். அனைவரும் சிரித்தனர். முன்னாள் முழம் பல்லன் ஓடி வந்து வினவினான்.
விம்மி விம்மி அழுதுகொண்டே ஜான் பல்லன் நடந்தவற்றை கூறினான். இப்பொழுது அழுது என்ன பயன். முன்னாள் முழம் பல்லன் அவனை சமாதானம் செய்தான். அவனுக்கு கிடைத்த வைரம், வைடூர்யங்களை ஜான் பல்லனுடன் பகிர்ந்து கொண்டான். ஜான் பல்லன் தன் நண்பனை கட்டி கொண்டு “நண்பா உன்னைப் போல ஒரு நல்லுள்ளம் படைத்தவன் மீது நான் பொறாமை கொண்டதாலும், அதன் காரணமாக உன்னை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று நினைத்ததாலும், இந்த ஊர் மக்கள் உன்னை பழித்து என்னை உயர்த்தி பேச வேண்டும் என்று எண்ணியதாலும் வந்த விளைவு தான் இந்த ஒரு அடி நீள பற்கள். நான் கற்றுக் கொண்ட இந்த பாடத்தை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.” என்று கூறியதுடன் விடாமல் வாழ்ந்தும் காட்டினான்.
ஜான் பல்லனைப் போல் பட்டால் தான் திறுந்துவேன் என்று இல்லாமல் பெரியவர் சொல்கேட்டு அல்லது இது போன்ற கதைகள் கேட்டு /படித்து நம்மை திருத்திக் கொண்டால் வாழ்வில் எந்தவிதத்திலும் நஷ்டப்படாமல் நிம்மதியாக வாழலாம்.
பொறாமை குணம் கொண்டால் நஷ்டமும் சில நேரங்களில் அழிவும் நிச்சயமே. மல்லிகைப்பூ தாமரையை கண்டு பொறாமை கொண்டால் தன்னிடம் இருக்கும் சுகந்தம் என்ற குணத்தை மறக்கின்றது, தன்னை தலையில் சூடி அழகு பார்ப்பார்கள் என்பதை மறக்கின்றது. அதுபோல ஒருவர் மற்றொருவர் மீது பொறாமை கொண்டால் தனது நற்குணங்களை தானே மறந்து விட நேரிடும். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் தனித்தன்மைகள், குணாதிசயங்கள் எல்லாம் வேறுபடும். அதில் நல்லதும் கெட்டதும் கலந்துதான் இருக்கும். அன்னப்பறவை எப்படி பாலையும் நீரையும் கலந்து கொடுத்தால்…பாலை மட்டும் குடிக்குமோ அதுபோல நல்லதை உணர்வோம், அதை மட்டும் பின்பற்றுவோம். வாழ்க்கையை சிறப்பாக வாழ்வோம்!
❤️முற்றும்❤️
