பலர் பலவிதமாக முகநூல் பற்றி தொடர்ந்து எழுதி /விவாதித்து / கருத்து தெரிவித்து வருகிறார்கள். முகநூல் பழக்கத்தால் பலர் வாழ்க்கையே மாறியுள்ளது என்றும், பலருக்கு தொழில் அபிவிருத்தி அடைந்திருக்கிறது என்றும், இதனால் சிலர் வாழ்க்கை வீணாகிறது என்றும் பல வகையான பதிவுகளை நாம் வாசிக்க நேர்கிறோம். அவை அனைத்தும் அவரவர் கோணத்தில் இருந்து பார்க்கும் போதும் சரி, படிக்கும் போதும் சரி நூறு சதவீதம் உண்மையாக தோன்றலாம். நியாயமாகவும் தோன்றலாம். நன்மையும் தீமையும் கலந்தது வாழ்க்கை மட்டுமல்ல முகநூலும் / சமூக ஊடகங்கள் அனைத்தும் தான். பிரித்தறிய தெரிந்தால் வாழ்க்கையும் முகநூலும் /சமூக ஊடகங்களும் சிறப்பானதாகவே அமையும். ஏன் நான் வாழ்க்கையையும் முகநூலையும் இணைத்து எழுதியுள்ளேன் என்பது உலகறிந்த விஷயம்!

அது ஒரு புறம் இருக்கட்டும். இப்போது இருக்கும் பல முகநூல் குழுமத்தில் ஏதாவது ஒரு தலைப்புக் கொடுத்து அதை ஒட்டி எழுதச் சொல்வது அல்லது ஏதாவது ஒரு கேள்வி கேட்டு அதற்கு விடையளிக்க சொல்வது மற்றும்  சினிமா/ சினிமா பாடல்கள் பற்றிய பல போட்டிகள் என களைகட்டி வருகிறது.

அதில் பலர் கலந்துக் கொண்டு பல பதில்களை அளித்து உற்சாகத்தோடு பங்கேற்கிறார்கள். ஆனால் ஒரு குழுவில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு வெகு சிலரே பதிலளித்துள்ளனர். ஏன் இதற்கு சிலர் மட்டும் பதிலளித்துள்ளனர்? என்ற கேள்வியை என் மனம் என்னிடம் கேட்டது.

மேலும் ஒருவர் அவரை நினைத்து அவரே பெருமை பட்டுக்கொண்ட தருணங்கள் /விஷயங்கள் என்று பலருக்கு பல இருக்கலாம். அவ்வாறு ஒருவர் அவரைப் பற்றியே பெருமை பட்டுக்கொள்வது சரியா? இல்லை தவறா? என்ற கேள்வி ஒரு குழுவில் “உங்களை நினைத்து நீங்களே பெருமைப்படும் ஒரு விஷயம் என்ன?” என்று கேட்டபோது என் மனதில் எழுந்தது. இதில் என்ன தவறு. நம் பெருமை நமக்கு அறியா விடில் பின் எவர் அறிவார் என்ற பதிலும் பட்டென உதித்தது.

நாம் செய்யும் ஒரு நற்செயல் அல்லது நாம் உரைக்கும் நற்சொல் நமக்கு ஒரு வகையான புத்துணர்ச்சி அளிக்கும். ஏதோ ஒரு உத்வேகம் தரும். இன்னும் இதே போல் நிறைய செய்ய வேண்டும் அல்லது பேச வேண்டுமென்று தோன்ற வைக்கும். தீயது மட்டும் போதை அல்ல நல்லதை செய்வதும்/நல்லவர்களாக இருப்பதும் ஒரு வகையான போதை தான். அதை நம் வாழ்வில் ஒரு முறை கடைப்பிடித்து விட்டால் அதன் பின் அது நம்மை தொடர்ந்து செய்ய தூண்டும் என்பது எனது கருத்து. இவ்வகையான போதை நம்மை மேம்படுத்துவதோடு நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. அதுவே நல்லவற்றின் நற்பண்பு. மற்றவர்களுக்கு உதவி செய்யவும், மற்றவர்களை உயர்த்திப் பேசவும் தயக்கம் காட்டாத நாம்! (அதனைச் செய்யாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களை விட்டுவிடுவோம்) ஏன் நமக்காக நாமே ஒரு விஷயத்தை செய்து கொள்வதற்கோ அல்லது நம்மை பற்றி நாமே உயர்வாக நினைப்பதற்கோ அல்லது  பேசுவதற்கோ மட்டும் அடுத்தவர்களிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்கின்றோம்! ஏனென்றால் அப்படி செய்தாலோ / பேசினாலோ நாலு பேர் நம்மை பற்றி என்ன சொல்லி விடுவார்களோ! நம்மைப் பற்றி அந்த நாலு பேர் தவறாக நினைத்து விடுவார்களோ போன்ற எண்ணங்கள் தான் நம்மை பற்றி நாமே சொல்லிக் கொள்ள விடாமல் தடுத்து விடுகிறது.

அப்படியே பேசி விட்டாலோ அல்லது எழுதி பதிவிட்டாலோ உடனே தற்பெருமை என்று சிலர் கூற வாய்ப்புகள் நிறைய இருக்கிறது (பல முகநூல் பக்கங்களில் எழுதப்படும்  பின்னூட்டங்களை படித்த அனுபவம்). அவர்களை சொல்லி தவறில்லை.
ஆனால் ஒருவரின் அருமை பெருமைகளை அவரவரே தெரிந்து வைத்து கொள்வதால் நம்மை நாமே அறிந்துக் கொள்வதற்கும், அதை எண்ணி மனமகிழ்வதற்குமான ஓர் நல்வாய்ப்பாகும் என்பதை மறுக்கலாகாது.  நம்மை பற்றி நாம் பெருமை படக்கூடிய விஷயங்களை நாமே அறிந்து வைத்துக் கொள்ளாமல் இருந்தால் எப்படி மற்றவர்கள் நம்மை பெருமை படுத்த வேண்டுமென்று நாம் எதிர்பார்க்க முடியும்!

ஒரு வேலைக்கான நேர்காணலில் உங்களை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டால் அவர் சொல்வார்… இல்லை இவர் சொல்வார்… அல்லது எனது அருமை பெருமைகளை என் நண்பனை வைத்து கூற வைக்கிறேன் என்ற பதில் உரைத்தால் வேலை கிடைக்குமா? அப்போது அந்த நாலு பேரை பற்றிய சிந்தனை ஏதுமின்றி கடகடவென நம்மைப் பற்றி நாமே பேசுவதில்லையா என்ன?

பெண்ணாக பிறந்ததற்கு எனக்குள் எப்போதுமே ஒரு பெருமை உண்டு. ஏதோ முன்பொரு ஜென்மத்தில் மாதவம் செய்ததால் கிடைத்த இந்த பிறப்பை எண்ணி பெருமை கொள்ளாமல் எப்படி இருப்பது! பொறந்தாலும் பொம்பிளையா பொறக்கக்கூடாது…அப்படின்னு எல்லாம் நான் பாடியதும் இல்லை இனி பாட போவதும்  இல்லை.

நல்லதை தட்டிக்கொடுத்து வளர்த்து, தீயதை தட்டி வைத்து ரூல்ஸ் ராமானுஜி /ஸ்ட்ரிக்ட் சிந்தாமணி (சிலர் கடுப்பில்/ சிலர் எரிச்சலில் / வெகு சிலரே ஆத்மார்த்தமாக கூறுவர்) என்ற பெயர் பெற்றதில்/பெறுவதில் எனக்கு பெருமை தான். வழவழ கொழ கொழ என்றெல்லாம் பேசியதில்லை அவ்வாறு பேசவும் வராது. முகஸ்துதி பாடி பழக்கமில்லை.  புறம் பேசுதல் அறவே பிடிக்காது. அதனாலேயே என்னிடம் பேச ஒன்றுமிருக்காது என்று பல பேர் நெருங்கி பழக மாட்டார்கள். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை மாறாக நான் வித்யாசமானவள் என்ற எண்ணம் தான் எனக்குள் தோன்றும். அதில் தவறென்ன இருக்கிறது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு என்னுடன் பொது விஷயங்கள் பேசுபவர்களோடு மட்டும் பேசி மகிழ்வேன்.

உள்ளதை உள்ளபடி சொல்வதில் சங்கடம் ஆயிரம் இருப்பினும் அப்படி சொல்லிவிட்டால் பிற்காலத்தில் பல சந்தர்ப்பங்களில் அவற்றை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை என்பதை பொய்யுரைக்கும் பலர் அறிந்திராத ரகசியம் என்றே சொல்ல வேண்டும்.

நம்மால் முடிந்த உதவியை செய்து வருவதையும், நல்லதை நாம் செய்தால் நம்மை நாமே தட்டிக் கொடுத்துக் கொள்வதையும், தவறிழைத்தால் (நாம் மனிதப்பிறவி தானே) எவ்வித கூச்சம் /கர்வம்/ தயக்கம் இன்றி அது யாராக இருந்தாலும் (வயதில் சிறியவராக இருந்தாலும்) மன்னிப்பு கேட்பதையும், நாம் நாமாக இருப்பதையும், வெற்றியையும் தோல்வியையும் சமமாக பாவித்து நடந்துக் கொள்வதையும், நமது பொறுமையையும் (இதெல்லாம் மனிதர்களிடமிருந்து மெல்ல மாய்ந்துக் கொண்டிருக்கும் நற்குணங்கள்) எண்ணி நம்மை நாமே ஏன் பெருமையாக எண்ணிக் கொள்ளக்கூடாது!

ஏனெனில் நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்வில் பல தோல்விகள், வெற்றிகள், துரோகங்கள் என கடந்து வந்து இருப்போம் இல்லையா! அப்படி கடந்து வந்த சிலவற்றை/ சிலரை பல முறை பொறுத்து கடந்து சென்றும் இருப்போம். நாட்டுக்கே எல்லை கோடு வகுத்து வைத்திருக்கும் போது நமது பொறுமைக்கும் எல்லை வகுத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை. அதை ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது யாராவது ஒருவர் தாண்ட நேர்ந்தால் அதன் பின் அந்த நிகழ்வு அல்லது அந்த மனிதரிடம் இருந்து எவ்வளவு விலகி நிற்க முடியுமோ அவ்வளவு மெல்ல விலகி சென்று விடுவதே நல்லது என்பது தான் எனது பாலிசி.

என்னைப் பொறுத்தவரை முதல் முறை செய்தால் அறியாமை, இரண்டாம் முறை செய்தால் தவறு, மூன்றாவது முறையும் அதையே செய்தால்/சொன்னால் அது தவறுக்கும் மேலே (வேண்டுமென்றே செய்வது). இது உண்மையா இல்லையா?

அவ்வாறு  பிரச்சினை வேண்டாம் என்று ஒதுங்கி செல்பவர்கள் பலரின் விமர்சனங்களுக்கு ஆளாவார்கள்.  அப்படி இருந்தால் நமக்கென நாலு பேர் இருக்க மாட்டார்கள் என்றும், நாம் தனித்து விடப்படுவோம் என்றெல்லாம் கூற பலர் இருப்பார்கள். 

அவ்வாறு சொல்பவர்களில் பலர் தனக்கென தனித் திறமையும், சிந்தனையும், கருத்தும் இருந்தாலும் ஒரு கொடி போல் அடுத்தவரை சார்ந்தே (அந்த நாலு பேருக்காக) அனைத்தையும் செய்வதால் தனி மரமாக வளர முடியாது கொடி போல் தனக்கு தேவையானவர்கள் மீது தொத்திக் கொண்டு படர்வதோடு, தனித்திருக்கும் மரத்தின் மீதும் படர்ந்து அதை வேரோடு சாய்க்க முயல்வர்.  அத்தகையோர் சொல்லை நாம் என்றுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

மேலும், யார் அந்த நாலு பேர்? நல்லது செய்தால் /பிரச்சினையை தவிர்க்க ஒதுங்கி செல்வதால் தனித்து விடப்படுவோமெனில் நான் தனித்து பயணிக்கவே விரும்புவேன். நீங்கள் எப்படி என்று பின்னூட்டம் இடுங்கள்?

“துஷ்டனைக் கண்டால் தூர விலகு” என்று நம் முன்னோர் கூறிய காலத்தில் துஷ்டர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்துள்ளனர். ஆனால் இப்போது!!!

நமது நல்ல குணங்கள் என நாம் பெருமைப்பட்டுக் கொள்வது நம்மை நாமே ஓரளவு அறிந்து வைத்துக் கொண்டுள்ளதற்கான சான்றாக தான் நான் கருதுகிறேன். இதில் தவறேதும் இருப்பின் நம்மைப் படைத்த அந்த கடவுள்/ நம்மைப் பெற்றெடுத்த நம் தாய் தந்தை/ நாம் பெற்ற நம் பிள்ளைகள்/ காலநேரம் / நம்மைச் சுற்றியுள்ள நல்லுள்ளங்கள் உணர்த்தினால் அல்லது எடுத்துரைத்தால் அவற்றை மறுபரிசீலனை செய்து இன்னும் நம்மை பற்றி நாம் அறிந்துக் கொண்டு, நம்மை நாம் நல்வழியில் செதுக்கிக் கொள்வோம்! நம்மை நினைத்து நாமே பெருமை பட வேண்டிய பட்டியலில் இணைத்தும் கொள்வோம்.😊

இவ்வாறு நாம் ஒவ்வொருவரும் அவரவரிடம் இருக்கக்கூடிய நல்லதை எண்ணி மார்தட்டிக் கொண்டும், தீயதை மாற்றி கொண்டும், நம்மை நாமே நல்வழி படுத்திக்கொண்டால் நம் வீடும் நாடும் சிறந்து விளங்கும். நம் வாழ்க்கை நம் கையில்.🙏

– நா. பார்வதி