வளைந்திருப்பதால் வளையல் என்றானதா!
இல்லை வளையாதிருப்பதால் வளையல் என்றானதா!
கையில் மாட்டும் வளையம் போல் இருப்பதால் வளையல் என்றானதோ!
எதுவாக இருந்தால் என்ன!
வளையல் கையில் வளைய வருவதே ஓர் அழகு
குந்தன் கற்கள் பதித்த வளையல் என்றால் பளபள
பட்டு நூல் வளையல் என்றால் வழவழ
தங்க வளையல் என்றால் தகதக
வைர வளையல் என்றால் ஜொலிஜொலிப்பு
கண்ணாடி வளையல் என்றால் கலகல
மொத்தத்தில்
வண்ணமையமான வகைவகையான வளையல்கள் அணிவதால்
பெண்களுக்கு ஓர் தனியழகு
அதுவே வளையல்களுக்கான தனி சிறப்பு.

சுதந்திரம் வேண்டும் 

சுதந்திரம் வேண்டும்

சுதந்திரம் பெற்று எழுபத்தி மூன்று ஆண்டுகளுக்கு பின்பும்

சுதந்திரம் வேண்டும் 

சுதந்திரம் வேண்டும் 

தியாகிகள் பெற்றுத்தந்த சுதந்திரத்தை

தினமும் எண்ணாவிட்டாலும் அது பெற்ற

தினத்திலாவது எண்ணிப்பாருங்கள்

திடீரென கிடைத்ததல்ல என்பது புரியும்

எத்தனை எத்தனை போராட்டங்கள்

எத்தனை எத்தனை தியாகங்கள்

எத்தனை எத்தனை உயிரிழப்புகள்

எத்தனை எத்தனை இழப்புகள்

அத்தனையையும் சுயநலத்தால்

அத்தனையையும் அதிகாரத்தால்

அத்தனையையும் பணத்தாசையால்

அத்தனையையும் பேராசையால்

அத்தனையையும் ஊழலால்

மெல்ல மெல்ல அழித்து விட்டு 

மெல்ல மெல்ல நமக்கே தெரியாமல்

நம்மவர்களுக்கே அடிமையாகி

பெற்ற சுதந்திரத்தை தாரை வார்த்துவிட்டு

சுதந்திரம் கிடைத்தும் என்ன பயன் 

என்று அலுத்துக் கொள்வதோ

அதற்கு சுதந்திரம் இல்லை

இதற்கு சுதந்திரம் இல்லை 

என போராட்டத்தில் ஈடுபடுவதோ

எந்த விதத்தில் நியாயம்!!!!

முக கவசம் மிக அவசியம்

நம்மை மறைத்து கொள்ள அல்ல

நம்மை காத்து கொள்ள

முக கவசம் மிக அவசியம்

பேசும் போது தெறிக்கும் மழைச்சாரலில்

குடைப்போல செயல்பட

முக கவசம் மிக அவசியம்

நான்கு மாதம் அழகு நிலையம் செல்லாத

அழகிய முகத்தை மறைத்து கொள்ள

முக கவசம் மிக அவசியம்

உதட்டு சாயங்கள் உபயோகிக்காமல்

உதடுகளை பேணி காக்க

முக கவசம் மிக அவசியம்

நமது வாயின் திரைச்சீலையாக இருந்து

துர்நாற்றத்தை மற்றவர்கள் நுகராமல் தடுத்திட

முக கவசம் மிக அவசியம்

நம்முள் தூசி மற்றும் கிருமிகள்

நுழைந்திடாமல் தடுத்திட

முக கவசம் மிக அவசியம்

நமது வாயிற்கதவாக செயல்பட்டு

வார்த்தைகளை அளந்து பேசிட

முக கவசம் மிக அவசியம்

நம்மால் மற்றவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க

முக கவசம் மிக அவசியம்

நச்சுயிர்கள் நம்முள்

நுழைந்திடாமல் தடுத்திட

முக கவசம் மிக அவசியம்

சில நகைச்சுவை காரணங்களுக்காக

எள்ளி நகையாடும் நாம்

எப்படி தலை கவசம் அணிந்து தன்னுயிர் காத்துக்கொள்கிறோமோ

அதே போல் முக கவசம் அணிந்து நுண்ணுயிர் பரவாமல் தடுத்திடுவோம்

விழித்திடுவோம்! விழித்திருப்போம்!

நம்மையும் நம்மவர்களையும் காத்திடுவோம்.

கண்களுக்கு தெரியாத கொரோனா என்ற நச்சுயிர்

நம்முள் ஊடுருவி

நம் உடல் உறுப்புக்களை தன்வசப்படுத்தி நம்மையே எதிர்க்க செய்து

நம்முயிர் குடிக்க ஆவலாக இருப்பது போல்

கண்களுக்கு நன்றாக தெரிகின்ற மனிதர்கள்

 நம்முடனே பயணிக்கின்றவர்கள்

நச்சுயிரின் பிரதிநிதிகள் போல் பல செயல்களை செவ்வனே செய்து வருகின்றனர்

கொரோனாவிற்கு கூட தடுப்பு மருந்து

கண்டுபிடித்து விடலாம்

மனித கொரோனாக்களை தடுக்க மருந்தேதும் இருந்தால்

மனிதம் காக்கப்படும்.

முக கவசம் உன் அழகிய இதழ்களை மறைத்தாலும்

கூரான மூக்கை மறைத்தாலும்

உன் மீன் போன்ற விழிகளை அழகாக எடுத்துக்காட்டுகின்றது

முக கவசமின்றி நீ பேசும் போது

உன்  மூக்கும் இதழும் என் மனதை திசைதிருப்பும்

முக கவசத்துடன் நீ பேசும் போது

கவனச்சிதறலின்றி கண்களை மட்டும் காண்கிறேன்

ஆஹா அதில் தான் எவ்வளவு உணர்வுகள்உன் மனதினை உன் கண்களில் படிக்கும்  புதிய மாணவனானேன்

கடவுள் உண்டு என்பார் பலர்

கடவுள் இல்லை என்பார் சிலர்

கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும் என்பார் பகுத்தறிவாளர்

நாமே கடவுள் என்பார் படிப்பாளர்

ஒரு திரைப்படத்தை அல்லது நிறுவனத்தை இயக்க இயக்குனர் தேவை எனும்போது

இந்த பரபஞ்சத்தை இயக்க இயக்குனர்  தேவை இல்லையா!

விஞ்ஞானம் என்பார் விஞ்ஞானிகள்

அறிவியல் என்பார் அறிவாளிகள்

இவ்விரண்டும் இயங்குவது யாராலே?

நமக்கும் மேல் ஓர் சக்தி நம்மை இயக்குகிறது

எல்லாமும் அதுவே

இதை நாம் உணர்ந்தால்

உண்டு, இல்லை, இருந்தால், நாமே என்ற விவாதங்களும் வித்தியாசங்களும் எழாது

வானவில்லின் ஏழு நிறங்களை ரசிக்கிறார்கள்

வண்ணமயமான மலர்களை கண்டு புத்துணர்வு பெறுகிறார்கள்

வண்ணத்துப்பூச்சிகளின் வண்ணங்களில் மெய்சிலிர்க்கிறார்கள்

உடைகளை பல வண்ணங்களில் உடுத்தி மகிழ்கிறார்கள்

மனிதர்களிலும் உண்டு பல நிறத்தவர்கள்

இதை ஏன் ஏற்க மறுக்கிறது சில உள்ளங்கள்

மனகண்களை திறந்து வைப்போம்

அனைத்து நிறங்களையும் ரசிப்போம்

கூட இருப்பவரை தாழ்த்தி

தன்னை உயர்த்தி

மற்றவரை வீழ்த்தி

தன்னை நிலைநிறுத்தி

வாழும் வீரர்களின் வெற்றியானது

எந்த உயரத்தையும் எட்டாது

என்றும் நிலைத்தும் இருக்காது

அம்மா  என்பவள் தன்னலமற்றவள்

அம்மா என்பவள் அன்பானவள்

பிள்ளைகள் மீது அக்கறையுள்ளவள் 

பாசத்தின் அட்சயப்பாத்திரமானவள்

பிள்ளையின் நலனை மட்டுமே சிந்திப்பவள்

தனக்குள் நம்மை பேணி காத்தவள்

அதற்காக என்றுமே எதையுமே எதிர்பாராதவள்

தாய்மை  தூய்மையானது

இந்த நாள் மாத்திரமல்ல நம் வாழ்நாள் முழுவதும் வாழ்த்தி வணங்கி போற்றிடுவோம்

வாழ்க தாய்மை! வாழ்க தாய்மார்கள்!

வாழ்க்கை ரசிப்பதற்க்கே….

அதி காலை வானத்தை துளைத்து வரும் முதல் கதிர் முத்துக்கள்

மலைகளின் மேல் சற்று ஓய்வெடுத்து பயணிக்க ஆயத்தம் ஆகும் மேகங்கள்

காலை பனித்துளியில் சிளிர்த்து சோம்பல் முறித்து துளிர்க்கும் செடி, கொடி, மரங்கள்

நாணத்தால் பாதி மலர்ந்தும், இயற்கையால் முழுவதுமாக விரிந்து மலர்ந்த மலர்கள்

கோழியின் கூவல், வண்டுகளின் ரீங்காரம், பறவைகளின் சலசலப்பு என்று நாளை துவங்கும் விலங்குகள் மற்றும் பறவைகள்

காலையில் நீர் தெளித்த வாசலில் வெள்ளை அரிசி மாவினால் பளிச்சிடும் அழகான கோலங்கள்

சுட சுட ஆவி பறக்கும் காபி அதனுடன் ஜோடியாக துடிக்கும் செய்தித்தாள்கள்

மகிழ்வுடன் நமது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிரும் காலை வணக்கங்கள்

இவை யாவுமே நமது தினசரி மகிழ்ச்சியான தருணங்களின் மணி முத்துக்கள்

வாழ்க்கையை ரசித்தால் நீயும் கவியே

வாழ்க்கை வாழ்வதற்க்கே…..

எளிமையை  எழுச்சிக்கு வித்தாக்கி

வலிகளை வலிமைக்கு வித்தாக்கி

பொருமையை அணுகுமுறைக்கு வித்தாக்கி

முயற்சியை லட்சியத்துக்கு வித்தாக்கி

பாசத்தை அன்புக்கு வித்தாக்கி

வாழ்ந்தால் வாழ்க்கை வாழ்வதற்க்கே …

வாழ்க்கை  பூச்செண்டு அல்ல அது ஒரு பூங்காவனம் 

வாழ்க்கை  வணிகம் அல்ல அது ஒரு வரம்

வாழ்க்கை வீழ்வதற்க்கல்ல வாழ்வதற்க்கே

நம் வாழ்க்கை நம் கையில்

ரசித்து வாழ்வோம்! வாழ்வை ரசிப்போம்!

கொரோனா வந்தது 

கொத்து கொத்தாய் மனிதர்களை கொண்டு சென்றது

கொரோனா வந்தது

ஓய்வின்றி ஓடிய மனிதர்களை வீட்டுக்குள்ளே முடக்கியது

கொரோனா வந்தது

தீவுகளாய் வாழ்ந்த குடும்ப உறுப்பினர்களை ஒன்றுபடுத்தி நேரம் செலவிட செய்தது

கொரோனா வந்தது

சாதாரணமாக இருந்து வந்த தும்மல், இருமல்,  ஜுரம் இன்று அனைவரையும் அச்சுருறுத்துகிறது

கொரோனா வந்தது

மீம்ஸ் மற்றும் டரோல் கிரியேட்டர்ஸுக்கு நன்றாக தீனி போட்டது.

கொரோனா வந்தது 

இதுவும் கடந்து போகும் என்று உள்ளம் கூறுகிறது.

சுத்தம், சுகாதாரம், ஒழுங்கான உணவு முறை, ஒழுக்கம், ஆரோக்கியம் இவைகளே நம் வாழ்வின் தாரக மந்திரமாக இருந்தால் எதையும் நேர்கொண்டு போராடி வெற்றி பெறலாம்.

ஒற்றுமையினால் சிறகடித்து பறந்தன பறவைகள் வேடனின் வலையிலிருந்து

ஒற்றுமையினால் சுதந்திரமாக நீந்தின மீன்கள் மீனவனின் வலையிலிருந்து

வேர்-மண் ஒற்றுமையினால் வானளவு ஓங்கி வளர்கிறது மரங்கள்

 உடல் பாகங்களின் ஒற்றுமையினால் நடமாடி கொண்டிருகின்றன அனைத்து உயிர்கள்

ஒற்றுமையால் பலன்கள் பலகோடி என்றுனர்ந்தும் மானிடர்கள்  ஒற்றுக்கொள்ளாமல் ஒதுக்கி வைப்பது ஏன்!!!!

ஒன்றுபடுவோம் உயர்ந்திடுவோம்.

அன்பை சுரப்பது தான் இதயம்

அன்பு சுரக்கா விட்டால் அழிந்திடும் மனிதநேயம்.

இதயமே உன்னை ஆராதிக்கிறேன்

உன்னாலே அன்பை சுவாசிக்கிறேன்.

இதயமே நீ பழுதானால் உண்டு மாற்று அறுவை சிகிச்சை

அதனால் நீ விடு உன் பெரும் மூச்சை.

இதயமே நீ காதலுக்கு ஒரு போதும் சொந்தம் இல்லை

இருந்திருந்தால் அம்பு விட்டு உன்னை கிழித்து கொடுப்பார்களா தொல்லை.

இதயமே உன்னை பேணி காப்பவர்களுக்கு நீ சிறந்த உழைப்பாளி

நீ இருப்பதை மறந்து வாழ்பவர்களுக்கு கொடுப்பாய் வலி

இதயமே உன்னை மக்களவையில் வேட்ப்பு மனுதாக்கல் செய்தாகிவிட்டது 

தேர்ந்தெடுக்கப்பட்டால் அனைவருக்கும் தெரிந்திடும் நீ இருப்பது.

சீனாவில் பிறந்து தழைத்த சீன அழகியே

ஐரோப்பாவில் குடி புகுந்து மிரளவைத்தாயே

அமேரிக்காவிர்க்கு இடம்பெயர்ந்து உன் இறக்கைகளை விரித்து சுதந்திர தேவி போல் பறக்கிறாயே

பல நாடுகள் சுற்றி உன் இனத்தை விருத்தி செய்து பெரிய எதிர்பார்ப்புடன் இந்தியா  வந்தாயே

நீ செல்லும் வழியெல்லாம் ..மக்களை புதிய யுக்திகளை கையால வைக்கிறாயே

உன்னால் மனித இனத்திற்கு உயிர் இழப்பு மற்றும் பொருளாதார வீழ்ச்சசியே

அனைத்து சொந்தங்களும் உன்னிடமிருந்து அண்டை நாடுகளுக்கு குடியேற வைத்தாயே

முற்றிலுமாக அழிக்க நினைத்து தன் தலையிலேயே கையை வைத்துக்கொள்கிறாயே

அழகியே அடுத்தவர்களை அழித்து நீ மட்டும் வாழவேண்டும் என்று நினைத்தாயே

தானும் வாழவேண்டும் அடுத்தவர்களையும் வாழவிடவேண்டும் என்பதை  நாடுகள் ஒருவரொக்கொருவர் உதவுவதை பார்த்தாவது உணர்வாயே!!!! 

முகவரி வேண்டும்

நாம் வசிக்கும் இடத்திற்கு

முகவரி வேண்டும்

நாம் வணங்கும் இறைவனின் கோயில்களுக்கு

முகவரி வேண்டும்

நம் திறமைகளுக்கு

முகவரி வேண்டும்

நாம் சென்றடைய வேண்டிய இலக்குகளுக்கு

முகவரி தேடி அல்லது முகவரியின்றி வாழும் மனிதர்களுக்கு

அவர்களின் தன்னம்பிக்கையே சிறந்த முகவரி.

மீன்களின் முகவரி குளம் அல்லது ஏரி

கடல்சார் உயிர்களின் முகவரி கடல்

மிருகங்களின் முகவரி காடு

பறவைகளின் முகவரி மரம் 

அவைகள் யாவும் நமது முகவரியை அழிக்க நினைத்ததில்லை

நாம் நமது முகவரிக்காக இவைகளின் முகவரியை அழிக்க நினைத்ததால் இயற்கை அன்னையின் சீற்றத்துக்குள்ளாகியுள்ளோம்

இதை உணர்ந்து வாழ்வோம்! வாழவிடுவோம்!