ஏதேதோ படங்கள் வெப் சீரிஸ்களை பற்றி எல்லாம் பரபரப்பான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. ஆனால் உண்மையில், நல்ல படங்களும் வெப் சீரிஸ்களும் பற்றி ஏன் அதிகமாக சமூக வலைத்தளங்களில் எவ்வித பதிவுகளும் வலம் வருவதில்லை! என்ற கேள்வி என்னுள் எழுந்தது. ஒரு வேளை என் கண்ணில் அப்பேற்பட்ட கருத்துகளோ பதிவுகளோ தென்படவில்லையோ என்னவோ! என்ற பதிலும் தோன்றியது. அதன் விளைவு தான் இந்த பதிவு. என்னைப் போல் பதிவுகளை தவறவிட்டவர்களுக்காக (நல்ல வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களை பற்றிய பதிவு போட தவறியவர்களுக்காகவும்)  இதோ  “ராக்கெட் பாய்ஸ்” வெப் சீரிஸ் பற்றிய எனது கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Sony liv- இல் 2022 (சீசன் 1) மற்றும் 2023 (சீசன் 2) ஆம் ஆண்டுகளில் வெளிவந்த “ராக்கெட் பாய்ஸ்” என்னும் வெப் சீரிஸ் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படைப்பாகும். நமது இந்திய நடிகர் நடிகைகள் மற்றும் விளையாட்டு வீரர்களை பற்றிய படங்களை எல்லாம் விட… நம் நாட்டுக்கான முன்னேற்ற பாதையை வழிவகுத்து நம்மையும் நம் நாட்டையும் தலைநிமிர்ந்து நிற்க வைத்த நமது அறிவியலாளர்கள் /விஞ்ஞானிகள் பற்றிய முப்பது/ நாற்பது ஆண்டின் வரலாற்று சம்பவங்களை மிகவும் நேர்த்தியாக  விறுவிறுப்பு குறையாது இனிமையான (ரசிக்கும் வண்ணம்) பின்னணி இசையோடு கதைதயை நகர்த்தி நம்மை நம் இருக்கையோடு கட்டிப்போடுகின்றனர் நமது “ராக்கெட் பாய்ஸ்”.

இது விண்வெளி நாயகர்களின் வெறும் வரலாற்று கதை மட்டுமல்ல.  அறிவியல் தகவல்கள், அன்றைய அரசியல் தகவல்கள், எதிரி நாடுகளின் சூழ்ச்சிகள், அதற்கு பலியான நம்மவர்கள் என்று இந்த வெப் சீரிஸ் ஒரு தகவல் பெட்டகமாகவும் திகழ்கிறது.

அறிவால் ஒளிர்ந்த மகத்தான சிந்தனையாளர்களான மதிப்பிற்குரிய திரு. சி.வி. ராமன், திரு. ஹோமி ஜே. பாபா, திரு. விக்ரம் சாராபாய், திரு. சாந்தி ஸ்வரூப் பட்நாகர் மற்றும் நமது டாக்டர் திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் தங்கள் வாழ்நாளை முழுவதுமாக அறிவியல் என்ற தங்கள் ஒரே விருப்பத் துறையின் மூலம் நாட்டை கட்டியெழுப்ப அர்ப்பணித்ததற்கான ஒரு பொருத்தமான மரியாதை அஞ்சலியாகவும் இந்த தொடர் அமைந்துள்ளது.

தங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும், அது நட்பை ஒருபோதும் இழக்கச் செய்திடாது என்பதற்கு எடுத்துக்காட்டாகவும், சிறந்த நட்புக்கு இலக்கணமாகவும் திகழ்ந்த திரு. ஹாமி பாபா மற்றும் திரு. சாராபாய் நண்பர்களின் பாதை வெவ்வேறாக இருந்தாலும் பயணம் ஒன்றாகவே இருந்துள்ளது.

என்ன தான் இருவரும் வசதியான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்றாலும்,  லண்டன் கேம்ப்ரிட்ஜில் படித்தவர்கள் என்றாலும் இருவரின் கனவும் மெய்ப்பட, அவர்கள் பல தடைகளை எதிர்கொண்டும், பல ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருக்கவும் செய்துள்ளனர். அவரவர் பாதையில் பயணித்த போது எழுந்த தடைகளை இருவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து அவற்றை கடந்து வந்ததை நாம் இந்த படைப்பின் மூலம் அறிய வரும் போது நம்மையும் அறியாமல் அவர்கள் நட்புக்கு நம் மனம் மணிமகுடம் சூட்டி மகிழ்கிறது.

பல தோல்விகளை சந்தித்தாலும் மனம் தளராமல் நமது நாட்டுக்காக மீண்டும் முயற்சித்த நமது அன்றைய அறிவியலாளர்கள்/அரசியல்வாதிகள்/ விஞ்ஞானிகளின் உடல் மற்றும் மனப்போராட்டங்களை வெளிப்படுத்தும் உணர்ச்சிப்பிரவாகம்.

ஒரு நல்ல நாடு/நல்ல வீடு எதுவானாலும் நன்றாக வளர்ந்து வருமே என்றால் அதை வீழ்த்த எதிரிகள் வலம் வரத்தான் செய்வார்கள். அவ்வாறு அப்போது (இப்போதும்) வலம் வந்த நம் அண்டை நாட்டு எதிரிகளையும் அமெரிக்க நாட்டையும் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதையும், அதில் எப்படி வெற்றிக் கண்டார்கள் என்பதையும் பார்வையாளர்களான நம்மை நகத்தை கடித்துக்கொண்டு நாற்காலியின் முன் வந்து அமர்ந்து பார்க்கும் வண்ணம் காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

எட்டப்பன் ஒருவனால் உயிரிழக்கிறார் திரு. ஹோமி. அவர் உயிரிழந்தாலும் அவர் விதைத்தது அறுவடை செய்யப்படுகிறது. இந்தியா பலம் பொருந்திய நாடாக இன்றும் வலம் வருகிறது.
அதற்கு காரணமான நம் அறிவியலாளர்களையும் விஞ்ஞானிகளையும் என்றென்றும் கருத்தில் கொள்வோம். அவர்களையும் போற்றி வணங்குவோம்.

கட்டபொம்மன் வம்சாவளியினர் இருந்து வருவதை போலவே எட்டப்பனின் வம்சாவளியினரும் இன்னமும் இருந்து வருகிறார்கள்.

நம் நாட்டை பாதுகாப்பது ராணுவ வீரர்களின் கடமை மட்டுமல்ல அது இந்திய நாட்டின் பிரஜைகளான நமதும் ஆகும். கடமை உணர்ந்து செயல்படுவோம்.

நமது சுதந்திரத்திற்காக நம் முன்னோர்கள் சிந்திய வியர்வையும் உதிரமும் விலைமதிப்பில்லா பொக்கிஷம் என்பதை நாமும் நன்குணர்ந்து நமது சந்ததியினருக்கும் உணர்த்துவோம். நம் நாட்டை உயர்த்துவோம்.

முதல் அணுக்கரு உலை (nuclear reactor), முதல் ராக்கெட், முதல் தூர்தர்ஷன் நிகழ்ச்சி, முதல் ஆட்டம் பாம் என்ற நிகழ்வுகளை ஒன்றன் பின் ஒன்றாக கோர்த்து பின்னி அழகான மாலையாக நமது “ராக்கெட் பாய்ஸ்” க்கு சமர்ப்பித்துள்ள படக்குழுவினர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளும் அவரவர் கதாப்பத்திரமாகவே வாழ்ந்துள்ளனர் என்று தான் சொல்ல தோன்றுகிறது.

ஒளிப்பதிவாளரின் கைவண்ணம் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கிறது.

அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

“ராக்கெட் பாய்ஸ்” – விண்வெளியை சென்றடைந்து விட்டாலும்,  வானிலும் நம் மனதிலும் இன்றும் ஒளிரும் விண்மீன்கள்.

நன்றி 🙏

நா. பார்வதி

சீசன் 1&2

சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 1 பார்வையாளர்களை சுழற்றியது போலவே தற்போது வெளிவந்துள்ள சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2 பார்வையாளர்களை சுழற்றுவது நிச்சயம்.

முதல் சீசனான “சுழல்” பாலியல் வன்கொடுமைகள் பெரும்பாலும் நமக்கு நெருக்கமானவர்களால் தான் நடைப்பெறும் என்றும், அதனால் உறவினர்கள் தானே என்று குழந்தைகளை அவர்களிடம் அலட்சியமாக விட்டுவிட வேண்டாம் என்றும், எப்போதும் அவர்கள் மீது ஒரு கண் இருக்க வேண்டும் என்றும்,  அவ்வாறு இல்லாததால் நேரும் ஒரு பெண்ணின் இறப்பும் அதற்காக அவளைப் போலவே பாதித்த மற்றொரு பெண் வழங்கும் தண்டனையையும் ஒரு இன்வெஸ்டிகேஷன் சீரிஸாக மட்டுமின்றி அங்காளியின் மயானக் கொள்ளை பூஜை மற்றும் திருவிழாவையும் தெய்வ வழிபாட்டையும் இணைத்து மிக அழகாக கதையை சுவாரஸ்யம் குறையாது காட்சியாக்கப்பட்டிருந்த விதம் எட்டு எபிசோடுகளையும் பார்த்தாக வேண்டுமென்ற எண்ணத்தை பார்வையாளர்களுக்குள் எழச்செய்தது.

அதை போலவே…சொல்லப் போனால் அதைவிட இன்னும் விறுவிறுப்பாக யார்! யார்! என்றும் யாராக இருக்கக்கூடும் என்றும் பார்வையாளர்களை சக்கரை என்கிற இன்ஸ்பெக்டர் சக்ரவர்த்தியுடன் நம்மையும் தேட வைத்திருப்பது சிறப்பு. ஒரு கட்டத்தில் இவர் தான் என்று நாம் எண்ணிக் கொண்டு பார்த்தால் அவர் இல்லை என்று பதில் சொல்லும் அடுத்து வரும் எபிசோட். சரி கதை  எதைப் பற்றியது? நெறி தவறுதல் பற்றியதோ என்று நாம் நினைத்துப் பார்த்தோமேயானால் அடுத்த எபிசோடில் சைல்டு அப்யூஸ் பற்றியது என்று நம்மை சொல்ல வைக்கும். ஆனால் அதுக்கும் அடுத்த எபிசோட்  நம் எண்ணம் தவறு என்று கூறுவது போல் வேறொரு விஷயம் நம் கண்முன் காட்சியாக விரிந்து, அப்போ நாம நெனச்சது இல்லையா! என்று நம்மை நாமே கேட்க வைப்பதோடு என்னவாக இருக்கும் என்று யோசிக்கவும் வைக்கிறது. இறுதியில் கதையின் புதிர்களுக்கான விடைகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

சுழல் ஒன்றில் போலீசாரிடம் சரணடைந்து ஜெயிலில் இருக்கும் நந்தினியின் வழக்கில் இருந்து ஆரம்பிக்கிறது சுழல் 2.  அவர் விடுவிக்கப் படுவாரா இல்லையா என்பது ஒரு பக்கம் விறுவிறுப்பை ஏற்றும் அதே நேரம் அவரின் வழக்கை எடுத்து நடத்தும் வழக்கறிஞர் இறந்து விடுகிறார். அவரின் இறப்பு தற்கொலையா இல்லை கொலையா என்று தொடர்கிறது இரண்டாம் பாகம். மேலும் அவரை கொன்றதாக கூறி எட்டு பெண்கள் போலீசாரிடம் சரணடைகின்றனர். அவர்கள் யார்? ஏன் கொலையா! தற்கொலையா! என்ற ஒரு முடிவுக்கு வராத நிலையில் எட்டு பெண்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க வேண்டும்? முதல் பாகத்தில் வரும் நந்தினி கதாப்பாத்திரத்திற்கும் இரண்டாம் பாகத்தில் வரும் இந்த எட்டு பெண்களுக்கும் தொடர்பு இருக்கிறதா இல்லையா? இதில் யார் தான் வில்லன்?
என்று நாம் கேட்கும் அளவிற்கு மிகவும் நேர்த்தியாக பலரை நம் சந்தேக லிஸ்ட்டில் இடம்பெறச் செய்திருக்கும் கதாசிரியர்களுக்கும் இயக்குனர்களுக்கும் சபாஷ் சொல்லியே ஆக வேண்டும்.

சமூக அக்கரை கொண்ட கதைக்களத்தில் இந்த சீசனிலும் அஷ்ட காளி திருவிழா என்ற தெய்வ வழிபாட்டை கதையோடு இணைத்திருக்கும் விதமும், அவ்வப்போது விழா மூலம் பார்வையாளர்களுக்கு கதைக்கான குறிப்பு அளித்திருக்கும் பாணியும் அருமை.

இந்த வெப் சீரிஸின் பின்னணி இசையையும், பாடல்களையும் மிகவும் கச்சிதமாக பொருந்தச் செய்திருக்கும் இசையமைப்பாளரை பாராட்டியே ஆக வேண்டும். சில இடங்களில் இசை கதையாக ஒலிக்கிறது. டைட்டில் பாடலில் தொடங்கி பல இடங்களில் மிரட்டவும் செய்கிறது.

நடிகர்கள் தேர்வும் அவர்கள் அனைவரின் நடிப்பும் அபாரம். இரண்டாம் பாகத்தில் வரும் திரு லால் அவர்கள் மட்டும் எடுபடவில்லை என்று தோன்ற வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் பல இடங்களில் அவரின் வசன உச்சரிப்பு சரியில்லாததால் மீண்டும் ரீவைண்ட் செய்து பார்க்க வேண்டி இருக்கும். அது மட்டும் ஏதோ ஒரு எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வேகத்தடை போடுவது போல அமைந்துவிட்டது. தமிழில் நடிகர்களுக்கா பஞ்சம்🤔 நடிகர் திரு. பசுபதி அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

சமூக அக்கறை கொண்ட படமாக இருந்தாலும் எவ்வித தேவையற்ற முழக்கங்கள்/பிரசங்கங்கள் இன்றி, நீண்ட வீராவேசமான வசனங்கள் இன்றி, அறிவுரைகள் ஏதும் இன்றி,  நடப்பவைகளையோ அல்லது நடந்தவைகளையோ  பின்னணியில் விவரிக்கும் (இடைஞ்சலான) குரல் ஏதுமின்றி கதையோடு கதையாகவே பார்வையாளர்கள் மனதில் கடத்தி இருப்பது, ஓ போட வைக்கிறது.

கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் நாயகன் அந்தஸ்து கொடுத்தால் வெற்றி நிச்சயம் என்பதை இந்த வெப் சீரிஸ் உணர்த்தியுள்ளது.

சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2 –
சுவாரஸ்யமான கதையால் சுழன்று பார்வையாளர்கள் மனதை வென்று
தன்னுள் இழுத்து செல்லும் சுழல்
சூப்பர்.

2024 ஆம் ஆண்டு வெளி வந்த 1000 பேபிஸ் (ஆயிரம் குழந்தைகள்) என்ற மலையாள வெப் சீரிஸின் சீசன் ஒன்று பற்றிய எனது கருத்துக்களை பகிர்ந்துள்ளேன். பிடித்திருந்தால் இந்த வெப் சீரிசை பார்க்கவும்.

முதல் மூன்று எபிசோட்களில் கதை எதை நோக்கி நகர்கிறது? அவற்றில் வரும் மனநிலை சரியில்லாத  மூதாட்டி சுவற்றில் என்ன எழுதுகிறார்? ஏன் எழுதுகிறார்? அந்த மூதாட்டியிடம் தான் கதை உள்ளது என்பது நமக்கு புரிந்தாலும்… அது என்ன கதை? அவருக்கு ஏன் குழந்தைகள் அழுகுரல் கேட்கிறது? அவர் உண்மையில் மனநிலை பாதிக்கப்பட்டவர் தானா? இல்லை அவ்வாறு நடிக்கிறாரா? போன்ற பல கேள்விகளை பார்வையாளர்கள் மனதில் எழ வைத்துள்ள கதாசிரியர்  நான்காவது எபிசோட் முதல் அதற்கான விடைகளை அந்த மூதாட்டி  தன் மகனுக்கு கறி விருந்து அளித்து அவன் உண்பதை பார்த்து ரசித்து விட்டு விளக்குகிறார்.

அதை கேட்ட அவர் மகன் சாப்பாட்டு தட்டை தட்டி விட்டு ஓடி அந்த மூதாட்டி அறைக்குள் சென்று சுவற்றில் அவள் வரிசையாக ஏதோ எழுதி வைத்திருந்ததில் வேக வேகமாக எதையோ தேடுகிறான். அப்போது டைனிங் அறையில் அமர்ந்திருந்த மூதாட்டி பலமாக சிரிக்கிறாள். அவளின் சிரிப்பொலி அவள் மகனை அவளிடம் அழைத்து வருகிறது. அங்கு வந்த மகன் அவளை ஓங்கி அடிக்கிறான். அவள் நாற்காலியில் அமர்ந்தபடியே தரையில் மல்லாந்து விழுகிறாள். அப்போதும் சிரிப்பதை அவள் நிறுத்தவில்லை. அவளின் தலைக்கு பின்னால் இருந்து ரத்தம் வழிந்தோடுகிறது.

அவள் மருத்துவமனையில் மருத்துவர் முன் தலையில் கட்டுடன் படுத்திருக்கிறாள். கண்களை மெல்ல திறந்து பார்த்தவள் தனக்கு சர்க்கிள் இன்ஸ்பெக்ட்டரையும் ஜூடிசியரியையும் காண வேண்டும் என்று கூறுகிறாள். பின் அங்கிருந்த ஒரு நர்சிடம் அவளின் பக்கத்து வீட்டு காரர்கள் பெயர்களை சொல்லி அவர்களை வரவழைக்கிறாள்.

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மருத்துவமனை வந்து மூதாட்டியை சந்திக்கிறார். அப்போது அவள் ஒரு கவரை அவர் கையில் கொடுக்கிறாள். மற்றொன்றை ஜூடிசியரியின் ஆளிடம் கொடுக்கிறாள். அந்த கவரை முதலில் பிரித்து படிக்கும் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அதிர்ந்து போகிறார். உடனே அந்த ஏரியா எஸ்.பியிடம் விவரங்களை தெரிவித்து அந்த லெட்டரை கொடுக்கிறார். அதிர்ச்சியான எஸ்.பி அந்த லெட்டர் ஜூடிசியரியிடம் போகாது தடுக்க வேண்டுமென்று வேகமாக நீதிபதி அலுவலகத்துக்கு இருவரும் செல்கிறார்கள். ஆனால் அதற்குள் அந்த லெட்டர் அந்த நீதிபதியின் கையில் சென்றடைகிறது. வேறு வழியின்றி சர்க்கிள் இன்ஸ்பெக்ட்டரும் எஸ்.பியும் நீதிபதியிடம் கடிதத்தில் இருந்த விவரங்களை கூறுகின்றனர். நீதிபதிக்கு எழுதப்பட்டிருந்த கடிதத்திலும் அதே விவரங்கள் இருக்க, இருபது வருடங்களுக்கு முன் நடந்த அந்த க்ரைமின் விவரங்களை இப்போது வெளியிட்டால் அது சமூகத்தில் பெரியளவில் பலரின் வாழ்க்கையை பாதிக்கும் என்றும் அதை எதிர்கொள்வது மிகவும் கடினம் என்றும் யோசித்து மூவர் மட்டுமே அறிந்த அந்த உண்மையை அப்படியே மறைத்து விடுகின்றனர்.

அப்படி என்ன அந்த கடிதத்தில் அந்த மூதாட்டி எழுதியிருக்கிறார்? என்ற யோசனையில் அடுத்த எபிசோடை பார்த்தால் அதில் ஒரு நடிகையின் கொலை விசாரணை பற்றி நகர்கிறது கதை. இதற்கும் முதல் நான்கு எபிசோடுகளுக்குமான சம்மந்தம் என்ன? என்ற கேள்விக்கான விடை, அந்த நடிகையின் கொலையை விசாரணை செய்து அதில் வெற்றி காணும் ஆஜி குரியன் என்ற போலீஸ் அதிகாரி… நடிகையின் கணவனிடமிருந்து பெறும் வாக்குமூலத்தில் முளைக்கிறது.

அதிலிருந்து அன்று வரை அதாவது கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்களாக மூவரால் மூடி மறைக்கப்பட்ட அந்த மூதாட்டி கடிதத்தின் விவரங்கள் நான்காவதாக ஆஜி குரியனுக்கும் தெரிய வருகிறது.

நடிகையின் கொலைக்கும் மூதாட்டியின் கடிதத்திற்கும் லிங்க் உள்ளதா? அப்படி அந்த கடிதத்தில் என்ன தான் எழுதப்பட்டிருந்தது. எப்படி ஒரு நடிகையின் கொலை விசாரணை ஆஜியை மூதாட்டி கடிதத்தின் விவரங்களுக்கு அழைத்து செல்கிறது! போன்று பல திருப்பங்களை கொண்டு மிகவும் கவனமாக பின்னப்பட்டிருக்கும் கதைக்களம் நம்மை இருந்த இடத்தில் இருந்து எழவிடாது நம்மையும் விசாரணையில் இணைந்திருக்க செய்த அரௌஸ் இர்ஃபான் மற்றும் நஜீம் கோயா ஆகிய இரு திரைக் கதையாளர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும். 

இந்த வெப் சீரிசில் வரும் பல காட்சிகள் மறைமுகமாக பல விவரங்களை பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கிறது. அதை புரிந்து கொள்பவர்கள் குறை கூறமாட்டார்கள். புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு எல்லாம் குறையே.

இதன் கிளைமாக்ஸ் கொஞ்சம் அவசர அவசரமாக எடுத்தது போல் இருந்தாலும் அது அடுத்த சீசனுக்கான லீட் என்று எடுத்துக் கொண்டால் அதுவும் சரியே என்று பார்வையாளர்களுக்கு புரியும்.

இதில் வரும் சில காட்சிகளுக்கான பதில் சீசன் இரண்டில் விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூதாட்டி சாராவாக நீனா குப்தா, அவரின் சிறுவயது சாராவாக ராதா கோமதி, அவரின் மகனாக சஞ்ஜு  சிவராம் மற்றும் ஆஜி குரியனாக ரகுமான் என்று களை கட்டியுள்ளது இந்த 1000 பேபிஸ்.

விறுவிறுப்பான கதை மற்றும் திரைக்கதை, சிறப்பான நடிப்பு, காட்சி அமைப்புகள், லொகேஷன்ஸ் என்று அனைத்துமே இந்த வெப் சீரிஸின் ப்ளஸ்.

நிஜத்தில் இது சாத்தியமா? இது போல் நடக்கக் கூடுமா? என்றெல்லாம் ஆராயாமல் கதையை கதையாக கண்டு மகிழ ஆயிரம் பேபிஸ் ஓர் சிறந்த படைப்பாகும்.

1000 Babies – புனரபி ஜனனம், புனரபி மாற்றம்.

வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போகலன்னு நீலாம்பரி ’99 ல சொன்னது 2024 ல கூட நம்ம சூப்பர் ஸ்டாருக்கு பொருந்துகிறது. அதுனால தான் அவர் இன்னமும் சூப்பர் ஸ்டார். இத் திரைப்படத்திலும் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அவர் கனகச்சிதமாக செய்துள்ளார். அவரின் வயதுக்குரிய கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பது சிறப்பு. நடிப்பில் நிதானம், முதிர்ச்சி இரண்டையுமே மிக அழகாகவும் அளவாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார் நம்ம சூப்பர் ஸ்டார்.

மஞ்சு வாரியர் ரஜினி காம்போ நன்று. பகத் பாசில் மிக அழகாக அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதாப்பாத்திரத்தில் பொருந்தி இருக்கும் விதம் பாராட்டுக்குரியது. ரஜினி பகத் காம்போவின் ஒரு காட்சியில் நம்மை இருவருமே கண்கலங்க வைக்கிறார்கள்.

ரோகிணி, ராணா, அபிராமி, கிஷோர், ரித்திகா, துஷாரா விஜயன், ரமேஷ் திலக் ஆகியோர் ஏற்று நடித்திருக்கும் கதாப்பாத்திரங்கள் மனதில் நிற்கும் வண்ணம் அமைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஏனோ அமிதாப் அவர்களின் கதாப்பாத்திரம் ஏற்புக்குரியதாக அமையவில்லை. அதற்கு டப்பிங் ஒரு முக்கிய/ பெரும் காரணம் என்றே படம் பார்த்த அனைவருக்கும் கூற தோன்றும் முதல் மற்றும் அப்பட்டமாக தெரியும் பெரிய குறை. அவர் திரைப்படத்தோடும் கதாப்பாத்திரத்தோடும்  ஒட்டவில்லை. தனித்தே இருக்கிறார்.

அனிருத் இசையில் மாற்றம் ஏதுமின்றி அதே ஒரே இசை தான் ஒலிக்கிறது. மனதில் நிற்கும் படி பாடல்கள் ஏதும் சரியாக அமைக்கவில்லை.  காட்சிக்கு தகுந்தாற் போல் இசையமைக்காது சூப்பர் ஸ்டாருக்காக மட்டுமே இசையமைத்திருப்பதால் திரைப்படத்தின் பின்னணி இசை வெறும் இரைச்சல்! பார்வையாளர்களுக்கு தரும் எரிச்சல்!. அனிருத் அவர்களின் அடுத்த படத்திலாவது இசையில் மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையுடன் இருப்பவர்களில் நானும் ஒருத்தி. மொத்தத்தில் இத்திரைப்படத்தின் இசை – இம்சை.

என்கவுண்டர் நல்லதா கெட்டதா! இருக்கலாமா! இருக்கக்கூடாதா! இது தான் கதைச் சுருக்கம். இதை விளக்கும் விதமாக  மனிதாபிமானம், கார்ப்பரேட் மோசடி , தனி மனித உரிமை என பல விஷயங்களால் பின்னப்பட்டிருக்கும் கதை தான் “வேட்டையன்”.  முதல் பாதியில் கதை நகர்ந்த விதம் நம்முள்… அட என்னடா மறுபடியும் கற்பழிப்பு தான் கதைக்கான மோட்டிவா என்ற  அலுப்பு மனதில் எழும் தருணத்தில் சட்டென கதை களம் நம் நினைப்பை அப்படியே புரட்டிப்போடுகிறது.

போலீசுக்கு கொலைக்கான மோட்டிவ் வேணும் என்பதால் கற்பழிப்பு தான் சரியானதாக இருக்கும்  என்று  வில்லன் கூறும் போது, அட போலீசுக்கு மட்டுமில்லப்பா இப்போ வெளிவர பல படங்களின் கதைக்கான மோட்டிவே அதுவாகத்தான் இருக்கிறது என்ன செய்ய என்று நம்மை சொல்ல வைக்கும் விதம் அந்த வசனம் அமைந்திருக்கிறது. அது அமைந்ததா இல்லை அமைக்கப்பட்டதா! யாம் அறியோம் பராபரமே.

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.பி அதியன் (சூப்பர் ஸ்டார்) பல குற்றவாளிகளை குறிவைத்து  குழியில் விழவைக்கிறார். அதற்காக அவரின் தேடல்கள் மற்றும் அவர் அமைக்கும் வியூகம் ஆகியவைகளை சுருக்கமாக சில காட்சிகளில் புரிய வைத்து சட்டென கதைக்குள் பார்வையாளர்களின் கவனத்தை திருப்பி இருக்கிறார் இயக்குனர். மேலும் கதை ஒரு கோணத்தில் சென்று கொண்டிருக்கும் வேளையில் சட்டென கதையில் பெரும் திருப்பம் ஒன்றை கொடுத்து கதையை அப்படியே வேறு கோணத்தில் கொண்டு சென்று விறுவிறுப்பு குறையாமல் காட்சிகளை அமைத்திருக்கும் இயக்குனர் திரு. ஞானவேல் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

நடிப்பு பாதி ஹீரோயிசம் மீதி என்று கலந்து செய்த கலவை தான் அதியன் கதாப்பாத்திரம். யானைக்கும் அடி சறுக்கும் என்பதற்கு ஏற்றார் போல் நேர்மைக்கு பெயர் போன எஸ்.பி. அதியன் ஓரிடத்தில் தவறிழைத்து விடுகிறார். அது என்ன தவறு? ஏன் தவறானது? அதை எப்போது! எப்படி! யாரால் உணர்கிறார்? தவற்றை திருத்திக் கொள்ள அவர் எடுக்கும் நடவடிக்கை என்ன? போன்ற கேள்விகளின் பதில்களை தேடும் வேட்டையில் இறங்கி திரையரங்கம் சென்று திரையில் “வேட்டையன்” வேட்டையை கண்டு களியுங்கள்.

“வேட்டையன்” – துப்பாக்கியால் குற்றவாளிகளையும் நடிப்பால் ரசிகர்களின் மனதையும் வேட்டையாடும் வேட்டையன் நம் டிக்கெட் பணத்திற்கு பங்கம் விளைவிக்காதவன்.

இத்திரைப்படத்தை என்னமோ தெரியவில்லை பார்க்க வேண்டுமென்ற எண்ணம் கூட தோன்றவில்லை. மேலும்… கஷ்டப்பட்டு உழைத்த காசை  தியேட்டர் சென்று இப்படத்தை கண்டு வீணடிக்க என் மனம் ஏற்கவில்லை. ஓ.டி.டியில் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன்.  போன ஞாயிற்றுக்கிழமை மதியம் இப்படத்தை பார்க்கலாமென்று அமர்ந்தேன். படம் ஆரம்பம் முதலே கதை & திரைக்கதை இயக்கம் எல்லாம் திரையில் சரிவர ஒட்டாதது போலவே இருந்தது. 

மிகவும் கஷ்டப்பட்டு ஒருவழியாக படத்தை பார்த்து விட்டேன். ஆனால் இப்படத்தைப் பற்றி என்ன எழுதுவது என்ற யோசனையில் மூழ்கினேன்.

எப்போதும் நல்ல திரைப்படங்களை தேர்வு செய்து பார்ப்பதும் அதிலிருக்கும் நல்லவற்றை எடுத்து காட்டி, குறைகளை மேலோட்டமாக விமர்சித்து எழுதுவதும் என்று இருந்த எனக்கு இப்படம் ஒரு சவாலாக இருந்தது. ஏனெனில் இப்படத்தை பற்றி எழுதுவதற்கு நல்லதா ஒரு விஷயம்…

எங்கே எங்கே எங்கே என்று தேடிப் பார்த்தேன் 

அது எங்கேயும் இல்ல! 

என்று நொந்து கொண்டது தான் மிச்சம். ஒரு திரைப்படம் எடுப்பது என்பது இமாலய சாதனை போன்றது என்று நமக்கு நன்றாக தெரிந்த விஷயம். ஆனால் அதற்கான எவ்வித முன்னேற்பாடுமின்றி ஏனோ தானோ என்று எடுத்தது போல் இருப்பது வருத்தம் தருகிறது. 

சில படங்களை நன்றாக எடுத்து பெயர் வாங்கி விட்டால்… எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம் அதை ரசிகர்கள் ஆதரிப்பார்கள் என்ற மிதப்பில் இருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும்  இப்படம் பெரும் ஏமாற்றத்தை தவிர வேறெதுவும் தராது என்பது உறுதி. இனி வரும் கலைஞர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை என்றும் எடுத்துக்கொள்ளலாம். 

பெரிய பட்ஜெட் படம், பெரிய நடிகர் பட்டாளம், ஆடம்பரம், விளம்பரம் என்று ஆர்ப்பாட்டம் செய்த படக்குழுவினர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்,

 “தயவுசெய்து ரசிகர்களை முட்டாள்கள் என எண்ணி விட வேண்டாமென்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.”

நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் என்று சொல்ல தொடங்கி பல ஆண்டுகள் ஆன போதிலும் இந்த படத்தில் அப்பேர்ப்பட்ட இளைஞர்கள் ஒரு முதியவரை தேடி செல்வது நெருடல். வயதானால் தொணதொணவென பேசிக் கொண்டிருப்பார்கள் என்ற உலகறிந்த உண்மையை படம் போட்டு காண்பித்திருக்கிறார்கள். 

ஒரு படத்தில் கருடபுராணம் இதில் வர்மம். 

கருடபுராணம் கலக்கல் 

வர்மம் வழுக்கல்

ஒரு படத்தில் “மே” இதில் “மியாவ்”

“மே” மாஸ்

“மியாவ்” மிஸ்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒலி மற்றும் ஒளிப்பதிவு, நடிப்பு, நடிகர்கள், ஒப்பனை, எடிட்டிங், பாடல்கள் என்று எடுத்துக் கொண்டோமேயானால்…

இசை வெறும் இரைச்சல்

தரும் பெரும் எரிச்சல்!

இயக்கத்தில் இல்லை இறுக்கம்

ஆதலால் பாதியில் எழுந்து போக வைக்கும்!

கதையும் திரைக்கதையும் பெரும் சொதப்பல்

மூழ்கியது இந்தியன் 2 கப்பல்!

நடிப்பிலும் நடிகர்களிடமும் ஏதோ ஒரு வகை குழப்பம் 

புது முக நடிகர்கள் போல் இருக்கும்! (உலக நாயகன் உட்பட)

இந்தியன் தாத்தா ஒப்பனை

ஒப்பவில்லை 

எதுவுமே சரியாக ஒட்டவில்லை!

கருத்து பெருத்துப்போச்சு

படம் சருகாச்சு 

இந்தியா திரும்பும் இந்தியன் தாத்தா சென்ட்ரலை மட்டும் தான் தாக்குவாரோ! ஏன் ஸ்டேட்டை விட்டுவிட்டார்? 

அவசரத்தில் சொல்லப்பட்ட கதை. 

அரைகுறையான திரைக்கதை.

பாதி படம் எடுத்து முடித்து பார்த்ததும்… இந்தியன் கம் பேக் என்று வரவைத்து தவறு செய்துவிட்டோமோ என்று எண்ணினார்களோ என்னவோ தெரியவில்லை அவர்களே இந்தியன் கோ பேக் என்றும் கூறி தங்களின் திரைப்படத்தின் விமர்சனத்தை படத்திலேயே காட்டிவிடும் நேர்மை மற்றும் தைரியத்திற்கு சல்யூட். 

சண்டை காட்சி மற்றும் மோனோ சைக்கிளிங் சீக்குவன்ஸ் எல்லாமே நம்மை பத்து வருடம் பின்நோக்கி  அழைத்து செல்வது உறுதி.  இவ்வளவையும் பார்த்து முடித்ததும் கடைசியில் இந்தியன் தாத்தா “ஐ வில் பி பேக்” என்று சொல்லி முடித்த விதம், 

“என்னது மறுபடியும் மொதல்லேந்தா! ஐயா சாமி போதும்டா சாமி. உங்க படத்துல சொன்னா மாதிரியே… ப்ளீஸ் கோ பேக்… அன்ட் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் நெவர் எவர் கம் பேக்” 

என்று படம் பார்ப்பவர்களை சொல்ல வைக்கும். 

இந்தியன் 2 – இம்மியளவும் ஏற்க முடியாத இம்சை அரசன். 

-நா. பார்வதி

இத்திரைப்படத்தின் போஸ்டரில் ப்ரித்விராஜின் கெட்அப் பார்த்ததும் இப்படத்தை பார்த்தாக வேண்டுமென்ற எண்ணம் என்னுள் உதித்தது. அடுத்து வெளிவந்த டீசர் அதை மேலும் உறுதி செய்யும் விதம் அமைந்திருந்தது. நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் அப்பறம் வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்கும் இல்லையா‌! அதனால் தான் என்னவோ இப்படத்தை பார்க்க நேரமும் காலமும் நேற்று தான் கூடி வந்தது. பார்த்து விட்டேன், ஆனால் இன்னும் அந்த திரைப்படத்தில் இருந்து என் மனம் வெளிவரவில்லை.  அத்தகைய ஓர் தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை பார்க்கும் அனைவர் உள்ளத்திலும் இந்த உணர்வு உதிப்பது நிச்சயம்.

மலையாள எழுத்தாளர் திரு பென்யாமின் அவர்களின் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில்
நஜீப் கதாப்பாத்திரத்திற்கு ப்ரித்விராஜை தேர்வு செய்த இயக்குனர் திரு. ப்ளெஸி அவர்களுக்கு எனது முதல் பாராட்டு. ஏனெனில் மனுஷன் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் திரைப்படம் பார்ப்போருக்கு சொல்ல தோன்றும். 

திருமணமாகி இன்னும் சில மாதங்களில் அப்பாவாக இருக்கும் நஜீப் தனது மனைவி மற்றும் பிறக்க இருக்கும் குழந்தைக்கு வசதி வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென்று அங்கும் இங்கும் பணத்தை புரட்டி தங்கள் ஊர்க்காரர் ஒருவர் மூலம் ஒரு ஏஜெண்டிடம் கொடுத்து மனதில் பல கனவுகளுடன் சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.  நஜீப்பின் பக்கத்து ஊர் பையன்  ஹக்கீமும் இவருடன் சேர்ந்து பயணிக்கிறார்.

மலையாள மொழியைத் தவிர வேறெந்த மொழியும் தெரியாத நஜீப், அறைகுறை ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்த ஹக்கீம் ஆகிய இருவரும் சவுதி அரேபிய மண்ணில் கால் வைத்ததும் திரைப்படம் நம்மை பாலைவனத்திற்கு அழைத்து சென்று அங்கேயே நம்மை இரண்டரை மணிநேரம் கட்டிப்போட்டு விடும் கதைக்கு எனது இரண்டாவது பாராட்டு.

அந்நாடு நஜீப்பையும் ஹக்கீமையும் பிரித்து விட தவித்துப் போகிறார் நஜீப். ஓரே வேலைக்காக சவுதி சென்று இறங்கும் இவர்களை ஏன் பிரிக்கின்றனர்? யார் பிரிக்கிறார்கள்? எதற்காக? என்பதை படம் பார்த்து தெரிந்துக் கொள்வதே நன்று. மொழியும் தெரியாது தனித்து விடப்பட்ட நஜீப்பை சவுதி நாட்டை சேர்ந்த ஒருவர் ஓர் இடத்துக்கு அழைத்து செல்கிறார். அவ்விடத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நஜீப், தான் யாரென்றும் எதற்காக சவுதி வந்திருப்பதாகவும் மலையாளத்தில் விளக்க முயற்சிக்கிறார். ஆனால் அவையனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கின் சப்தம் போல் ஒலிக்க…விதி இது தான் என்று மதி சொன்னாலும் மனம் அதை கேட்காது அங்கிருந்து தப்பித்து செல்ல பல முயற்சிகளை மேற்கொள்ள வைக்கிறது. கடைசியில் அனைத்து முயற்சிகளும் மணலோடு மணலாக…விதி வென்றது.  அந்த வாழ்க்கையை ஏற்க விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு வழியின்றி மெல்ல ஏற்க துவங்கும் நேரத்தில் ஹக்கீமை காண நேர்கிறது.  அதிலிருந்து திரைப்படம் நம்மை ஒரு வகையான பதற்றத்திலேயே பயணிக்க வைக்கிறது.

பாலைவனத்தில் ஓர் சோலை வனம் போல் அவ்வப்போது சரியான தருணத்தில் வந்து மறையும் ஃப்ளாஷ்பேக் நஜீப்புக்கும் பார்வையாளர்களுக்கும் அழகான ஓர் காட்சி விருந்து எனலாம்.

தண்ணீரிலேயே வாழ்ந்த ஒருவர் தண்ணீரின்றி தவிக்கும் காட்சியமைப்புகளும் கதையின் ஓட்டமும் அருமை. 

இறுதியில் நஜீப்பும் ஹக்கீமும் தாய்நாட்டுக்கு திரும்பி வருகிறார்களா? பாலைவனத்தில் இருந்து வெளியேறுகிறார்களா? என்பதை விறுவிறுப்பாக விவரிக்கும் ஆடுஜீவிதம் எந்த ஒரு மனிதனும் கடந்து வரக்கூடாத ஓர் ஜீவிதம். ஆனால் கட்டாயம் அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டிய ஓர் மனிதரின் மறக்க முடியாத ஜீவிதம்.

ஆடுகளும், ஒட்டகங்களும் காட்டும் அன்பிலும் பாசத்திலும் பாதியாவது மனிதர்களுக்கு இருக்குமேயானால் மனிதம் பிழைத்திருக்க வாய்ப்பிருக்கும் என்பதை உணர்த்தும் திரைப்படம்.  நல்லுள்ளம் கொண்டர்களும், சுயநலவாதிகளும், தீயகுணமுடையவர்களும்  கலந்திருப்பது தான் நாடும் வீடும் என்பதை காட்சிகளின் மூலம் உணர வைத்துள்ளனர்.

பணம், பொருள், வசதி வாய்ப்பு இவைகளை வெளிநாடு சென்று ஏற்படுத்திக்கொண்டு ஓரிரு ஆண்டுகளில் ஊருக்கு திரும்பி விடலாம் என்று எண்ணி பயணிக்கும் விட்டில் பூச்சிகளுக்கான எச்சரிக்கை அறிவிப்பு இந்த படம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

நஜீப் என்ற மனிதர் கடந்து வந்த கடினமான பாதையை காட்சிகளாக்கி நம்மையும் அவருடன் பயணிக்க செய்துள்ளனர் படக்குழுவினர்.

ப்ரித்விராஜ் சுகுமாரன் அவர்களின் நடிப்பு திறமை இத்திரைப்படம் முழுவதும் ஜொலிக்கிறது.

இக்கதையில் அமலா பால் அவ்வப்போது வந்து மறையும் அழகிய மின்மினி பூச்சி. 

நஜீப்பின் அம்மா, ஹக்கீம், ஹக்கீமின் நண்பனாக வரும் இப்ராஹிம் கத்ரி மற்றும் சவுதி அரேபியர்கள் கஃபீல், ஜசர் ஆக நடித்துள்ளவர்கள், சிறிது நேரம் வலம் வந்தாலும் பெரிய தாக்கத்தை உருவாக்கும் ஹிந்தி காரர் என்று அனைவரும் அவரவர் பாத்திரத்தை சிறப்பாக செய்து படத்தில் நம்மோடு பயணிக்கின்றனர்.

ஜாதி, மதம், அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம், பழிக்குப்பழி என்று ரசிகர்களின் ரசனையை மாற்ற முயற்சிக்கும் விதம் சில காலங்களாக ஒரே பாதையில் பயணித்து வரும் இத்திரையுலகில்… நிறைய நிறை மற்றும் சில குறை என்று இரண்டையும் ஏந்தி திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் வலம் வரும் ஓர் திருப்புமுனை “ஆடு ஜீவிதம்”. இது போலும் படம் எடுக்கலாம், இதையும் ரசிகர்கள் ரசிப்பார்கள் /ஆதரிப்பார்கள் என்பதற்கு ஓர் சிறந்த உதாரணம் இத்திரைப்படம்.

“ஆடுஜீவிதம் – பார்வையாளர்கள் மனதை ஆட்டி வைக்கும் ஓர் மனிதனின் ஜீவிதம்.”

-நா. பார்வதி

படத்தின் தலைப்பை படித்ததும் ஏதோ ஒரு பக்திப் படமா இருக்குமோ என்று நினைத்துவிட வேண்டாம். இது முழுக்க முழுக்க நகைச்சுவையில் நம்மை மூழ்க செய்து வாய் விட்டு சிரிக்க வைக்கும் நல்ல திரைப்படம்.

பல த்ரில்லர், சஸ்பென்ஸ், சீரியஸ் மற்றும் ஆக்ஷன் படங்களில் பார்த்த ப்ரித்விராஜை இந்த படத்தில் அப்படியே ஒளித்து வைத்து அவரின் நகைச்சுவை நடிப்பு பக்கத்தை  வெளிச்சமிட்டு காட்டியுள்ளனர்.

முன் கோபியான கதாநாயகன் அனந்தன் (ப்ரித்விராஜ்) தன் மனைவி மற்றும் மகனை பிரிந்து தனித்து வாழ்ந்து வருகிறார் . அவர் பெற்றோர் அவரின் தங்கைக்கு திருமண ஏற்பாடுகளை செய்கின்றனர்.  துபாயில் பணிபுரியும் மாப்பிள்ளை விணுவுக்கும் (பாசில் ஜோசப்) மைத்துனர் அனந்தனுக்கும் இருக்கும் நட்பு மிக நெருக்கமானது! ஏனெனில் விணுவை அவனின் காதல் தோல்வியில் இருந்து  வெளி கொண்டு வந்தவர் ஆனந்தன் ஆவார். அதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட பாசப் பிணைப்பு படிக்கட்டு போல் அவர்களை அந்த பந்தத்தில் உயர் நிலைக்கு கொண்டு செல்கிறது. அதை அடுக்கடுக்கான நகைச்சுவை காட்சிகளாலும் வசனங்களாலும் நம்மை சிரிக்க வைத்தே புரிந்துக் கொள்ள வைத்துள்ளனர்.

மேலும் தனக்கு உதவிய அனந்தனுக்கு தானும் ஏதாவது உதவி புரிய வேண்டுமென்று எண்ணிய விணு துபாயில் இருந்து கொண்டே அனந்தனிடம் பேசி பேசியே பிரிந்திருந்த கணவன் மனைவியை சேர்த்து வைக்கிறான். அதிலும் காமெடியை தெரிக்க விட்டிருக்கின்றனர்.  அதை தொடர்ந்து வரும் காட்சியில் ப்ரித்விராஜ் ஒரு நொடி  மோகன்லாலை போல் பேசி நடித்திருப்பது அபாரம். இறுதி காட்சியில் குருவாயூரப்பன் டச் அற்புதம்.

திருமணத்திற்காக துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்து இறங்கும் விணு தன் முன்னாள் காதலியை தான் துளியும் நினைத்துப் பார்க்காத ஓர் இடத்தில், தருணத்தில் சந்திக்கிறான். எங்கே? ஏன்? எப்படி? அவன் திருமணம் நிச்சயித்த படி குருவாயூர் அம்பலநடையில் நடைபெறுகிறதா? அவர்கள் காதல் ஏன் முறிந்தது?  முதல் பாதியில் ஹீரோவாக வலம் வரும் ப்ரித்விராஜ் இரண்டாம் பாதியில் தலைகீழாக மாறுவது ஏன்? எதற்காக? போன்ற கேள்விகளுக்கான விடையை பல முன்னணி நடிகர் பட்டாளத்தை கொண்டு மிக அழகாக கோர்க்கப்பட்ட நகைச்சுவை கதையை, அற்புதமான காட்சி அமைப்பில், மிக நேர்த்தியான மாலையாக்கி…குருவாயூர் அம்பலநடையில்  மாலை சாற்றினான் விணு மாலை மாற்றினான் என்று பாட வைத்து இருக்கிறார்களா இல்லையா? என்பதை
திரைப்படம் பார்த்து,
வயிறு குலுங்க சிரித்து,
மகிழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.

“குருவாயூர் அம்பலநடையில்” – குதூகலம், கும்மாளம், கொண்டாட்டம்.

-நா. பார்வதி

அமேசான் பிரைமில் ஏதாவது நல்ல படம் இருந்தால் பார்க்கலாமே என்று ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்ததில் “ரோஜர் பெடரர் – டுவல் பைனல் டேஸ்” என்ற ஆவணப்படம் ஒன்றின் போஸ்டரை பார்த்தேன். அட நம்ம ரோஜர் படத்தில் நடித்து இருக்கிறாரா! என்ற எண்ணம் தோன்றவே அந்த போஸ்டரை க்ளிக் செய்து அந்த ஆவணப்படம் எதைப்பற்றியது என்ற synopsis என்று சொல்லக்கூடிய ஆய்வு சுருக்கத்தை படித்துப் பார்த்தேன். பிடித்துப் போகவே அதை பார்க்கத் தொடங்கினேன். நான் பார்த்தது எனது பார்வையில்…இதோ உங்களுக்காக…

டென்னிஸ் கோர்ட்டில் ball boy என்றழைக்கப்படும் சிறுவனாக பந்துகளை எடுத்துக் போட்டுக் கொண்டிருந்த ரோஜர் பெடரர் ஜூனியர் சேம்பியன்ஷிப்பில் ஆரம்பித்து பின்னாளில் பெரிய டென்னிஸ் வீரராக உலகையே கலக்கி பல உள்ளங்களை வென்றவர், டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டனில் லேவர் கோப்பைக்கான போட்டியின் போது உலகிற்கு அறிவித்தார். அத்தகைய ஓர் அறிவிப்புக்கு பன்னிரண்டு நாட்கள் முன் அவரின், அவர் குடும்பத்தினரின் மற்றும் நண்பர்களின் உணர்ச்சி பிரவாகம் தான் இந்த 127 நிமிட ஆவணப்படம், “ரோஜர் பெடரர் – டுவல் பைனல் டேஸ்”

ஒரு விளையாட்டு, தொழில், பயிற்சி இப்படி எதுவாக இருந்தாலும் அதில் தனது முழு கவனம், ஆற்றல், மூச்சுப் பேச்சு, ஊண்உறக்கம் என்றனைத்தையும் அதற்காகவே தியாகம் செய்து அதையே தனதாக்கிக் கொண்டு வாழ்ந்தவர் ஓர் நாள் அதிலிருந்து விலக வேண்டி வரும்போது… அந்த நபருக்குள் ஏற்படும் உணர்வலைகளின் தொகுப்பு இந்த ஆவணப்படம் எனலாம்.

இந்த படத்தை பார்த்தால் ரோஜர் சிறந்த விளையாட்டு வீரர் மட்டுமல்ல நல்ல சிறந்த மனிதர் என்பதும் அறியாத பலரும் அறிவர்‌.

பிஜார்ன் போர்க், மெக்கன்ரோ, ரஃபேல் நடால், முரே, ஜோவிக், என்று பல டென்னிஸ் ஜாம்பவான்கள் இப்படத்தில் அவரவர்களின் நினைவலைகளை மிக அழகாக பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.

டாக்ஷிடோவுடன் போட வேண்டிய சட்டையை ரோஜர் சூட்டுடன் அணிந்து வருவதை பிஜார்ன் சுட்டிக்காட்ட, ரோஜர் உடனே சென்று சட்டையை மாற்றுவது போன்ற காட்சிகள் மிக எதார்த்தமாக காட்சியாக்கப்பட்டுள்ளது.

நடால் மற்றும் ரோஜர் என்ற இரு வீரர்கள், நட்பு வேறு விளையாட்டு வேறு என்ற வேறுபாட்டை உலகிற்கு எடுத்துரைத்த தோடு… விளையாட்டில் எதிராளியாக இருந்தாலும் சிறந்த நண்பர்களாகவும் இருக்க முடியும் என்பதை நிரூபித்து, அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியுள்ளனர். வாழ்ந்தும் வருகின்றனர்.

பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கையிலும், அவர்கள் இருவருமாக இணைந்து ஆடிய இறுதி ஆட்டமான லேவர் கோப்பை விளையாட்டு முடிந்தவுடனும் நடால் அழுகிறார். இருவரும் நட்புக்கு சிறந்த இலக்கணம் ஆவர்.

அவர் ஏன் டென்னிஸ் விளையாட்டை விட்டு வெளியேறினார் என்பது நாம் பத்திரிகைகளில் படித்து தெரிந்துக் கொண்டவை தான் ஆனால் அத்தகைய ஒரு முடிவை எடுப்பதற்கும், அதை கடந்து வருவதற்கும். மீண்டும் விளையாட அவர் எடுத்த முயற்சிகளையும். அதற்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினரையும், நண்பர்களையும் பற்றிய விரிவான மற்றும் சுவாரஸ்யமான படைப்பு தான் இந்த படம்.

ஆவணப்படம் என்று புறக்கணிகாது அனைவரும் காண வேண்டிய படம். ஏனெனில் அவ்வளவு அழகாக ரோஜரின் எண்ண ஓட்டங்களையும், அவரின் ஆரம்ப காலம் முதல் 2022 வரையிலான பல மேட்சுகளின் காட்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளனர். அவ்வாறு வழங்கிய விதம் பாராட்டுக்குரியதாகும்.

டென்னிஸ் என்றால் ரோஜர் பெடரர் என்றிருந்த உலகிற்கு இனி நான் இல்லை என்று கூறுவதற்கு அவர் எத்தனை நாட்கள் யோசித்து இருப்பார் என்பதை இந்த படம் பார்க்கும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் நிச்சயம் தோன்றும். அப்படி தோன்றிய சில மணித்துளிகளில் அவரின் அந்த செய்தியை அவர் வாசிக்க நாம் கேட்கும் போது நம் கண்களின் ஓரத்தில் கண்ணீர் உருண்டோடுவதை நம்மால் தவிர்க்க முடியாது.

இந்த படத்தில் ஒரு வரி வரும் “sportsman dies twice” அதாவது விளையாட்டு வீரர்களுக்கு இறப்பு என்பது இருமுறை வரக்கூடிய ஒன்று என்று. என்னைப் பொறுத்தவரை தான் விரும்பி ஏற்றுக்கொண்டு பயணிக்கும் எந்த துறையினருக்கும் இந்த வாசகம் பொருந்தும்.

ரோஜர் பெடரர் – டுவல் பைனல் டேஸ் – விளையாட்டில் இருந்து
விடை பெறுதல் விளையாடும்
விஷயமல்ல.
-நா. பார்வதி

நடிகனாக வேண்டுமென்ற ஓர் தந்தையின் நிறைவேறாத ஆசையை, அவர் தன் மகன் மூலம் நிறைவேற்றிக்கொள்ள நினைத்து சிறு வயது முதல் மகனின் மனதில் நடிப்பை விதைக்கிறார். அந்த பிஞ்சு மனதில் விதைத்த விதை மெல்ல வளர்ந்து விருட்சமாக, பல ஆசை, கனவு, லட்சியம் கொண்ட ஓர் இளைஞனை உருவாக்குகிறது. மகன் வெற்றியடைந்தால் அப்பாவும் வெற்றி பெற்றதற்கு சமம் என்றிருக்கும் சூழலில் மகன் வெற்றி பெறுகிறாரா? என்பது தான் “ஸ்டார்” திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.

இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் மிக அருமையாகவும் எதார்த்தமாகவும் நடித்துள்ளார்கள். கதாநாயகனின் தாய், அக்கா, மாமா, அப்பா, நண்பன் என அனைவரும் நாயகனுக்கு தோள் கொடுத்துள்ளனர். நாயகன் கலையின் (கவின்) நடிப்பு சிறப்பு. கதாநாயகிகள் இருவருமே படத்துடன்/கதையுடன் ஏனோ ஒட்டவில்லை.

கனவு கண்டால் மட்டும் வாய்ப்பு என்னும் கதவுகள் திறந்து விடாது
அதற்கான  கடும் உழைப்பு, முயற்சி, தேடல் இருந்தால் தான் நினைத்தது நடக்கக் கூடும் என்பதையும்,

அடுக்கடுக்கான தோல்விகளை எதிர் கொள்பவனால் தான் வெற்றியின் நுழைவாயிலை எட்டியாவது பார்க்க முடியும். ஏனெனில் தோல்விகள் அனைத்தும் முயற்சியின் விளைவுகள் என்பதையும்

வாழ்க்கையில் எவ்வித மாற்றங்கள் நேர்ந்தாலும் குறிக்கோள் மாறாது இருத்தலும் வெற்றிக்கான முயற்சிகளில் ஒன்று என்பதையும்

உணர்த்த முயன்ற “ஸ்டார்” வெற்றியின் வாசல் வரை சென்று யூ டர்ன் போட்டுள்ளார்.

ஏற்கனவே “முகவரி” ஸ்டார் ஆனதால் “ஸ்டார்” முகவரி இழக்கிறார்.

கதையை பல இடங்களில் கரைந்து போகவிடாமல்
தேவையற்ற காட்சிகளை கத்தரித்து
கதை கரு கலைந்து விடாது பார்த்து கொண்டிருந்தால்
பார்வையாளர்களுக்கு “எப்படாப்பா படம் முடியும்!” என்ற எண்ணம் தோன்றாது இருந்திருக்கக் கூடும்.

“ஸ்டார்” – வானில் மினுமினுக்க வேண்டிய நட்சத்திரம் சில மேகங்களால் மறைந்து விடுகிறது.
-நா. பார்வதி





சிறு வயது நந்தினி அழகில் மனதை மயக்கும் மோகினி

குந்தவை – அக நக அக நக முக நகையே!!

ஐஸ் – இந்த தடவை நடிப்பில் கொஞ்சம் நைஸ்!!

மதுராந்தகன் – மந்தம். மனிதர் இன்னும் கொஞ்சம் நன்றாக நடித்திருக்கலாம்.

செம்பியன் மாதேவி – இந்த காட்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அனாயாசமாக நிற்கும் இறுதி காட்சி எடுபடவில்லை.

பூங்குழலி – அழகும் வீரமும் ஒருங்கே அமையப்பெற்றவள் ஆனால் படத்தில் ஒன்றை மட்டும் பிரதானப்படுத்தியது ஏனோ! அவள் சேந்தன் அமுதனிடம் ராணியாக வேண்டுமென்று சொல்வதை கல்கியின் கதையை படிக்காதவர்கள் மனதில் “ஓடக்கார பெண்ணிற்கு பேராசையை பாரு” என்ற எண்ணம் எழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் உண்மை அது அல்ல. அவளுக்கென்றொரு கதை இருக்கிறது அதற்கு திரையிடப்பட்டிருக்கிறது!

வந்தியதேவன் – வருத்தெடுத்தாலும் வந்து நிற்கும் வல்லவரையன்.

பார்த்திபேந்திர பல்லவன் – வந்தியதேவனும் ஆதித்த கரிகாலனுக்கு மிகவும் நெருக்கமானவன் என்று நன்கறிந்தும் திடிரென வல்லவரையன் மீது ஏன் பழிபோடுகிறார்! என்பதை கதை படித்தவர்கள் நன்கறிவார்கள். படம் பார்ப்பவர்கள் மனதில் கேள்வி எழ வாய்ப்புகள் அதிகம்.

ஆதித்த கரிகாலன் – விக்ரம் நடிப்பு அபாரம். ஆதித்த கரிகாலனாக அவரது கோபம், நக்கல், காதல், சங்கடம், தவிப்பு அனைத்தையுமே மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். திரையில் இவரின் இறப்பு பெரிய சொதப்பல் அப்பு!

அருள்மொழிவர்மன் – வாம்மா மின்னல் என்ற நகைச்சுவை காட்சியை போல் அவர் வரும் காட்சிகள் வேகமாக வந்து மறைந்தது. மனதில் நிற்க வில்லை. 

வானதி – அடிக்கடி மயங்கி விழும் கோழை பெண்ணான வானதியும் வீரம் மிகுந்தவள் ஆவாள் என்பதை திரைப்படம் காட்ட தவறியது ஏனோ! முதல் பாகத்தில் குந்தவையுடனே சுற்றிக் கொண்டிருந்த வானதி இரண்டாவது பாகத்தில் ஏன்? எப்படி? தனியாக இருக்கிறாள்?? என்ற கேள்வி திரைப்படம் பார்ப்போருக்கு எழலாம் ஆனால் கதை படித்தவருக்கு தான் விவரம் தெரியும்.

பழுவேட்டரையர்கள்  – வந்ததே சில காட்சிகள் தான். அதிலும் அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா? என்று பார்ப்போருக்கு குழப்பம் எழச் செய்கிறது திரைப்படம்.

கதையில் மாற்றம் ஏமாற்றம்!
காட்சிகள் பின்னப்பட்டதில் தடுமாற்றம்!
சில விவரங்கள் காட்சி ஆக்காததால் கதைப் படிக்காதவர்களுக்கு எழும் சந்தேகம்
அதனால் முடிவு குழப்பம்
கதை படிக்காதவர்கள் மனதில் எழும் பல கேள்விகளுக்கு பதில் இன்றி முடிந்த திரைப்படம்.

கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது அதை ஏந்தி நடித்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலேயே முழு கவனம் செலுத்தியதால் கடைசியில் பூங்குழலி, சேந்தன் அமுதன், வானதி, அநிருத்தர், நம்பி ஆகிய கதாபாத்திரங்கள் வலுவிழந்து போயின.

இதை அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் என்று பாராது இயக்குனர் திரு மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் என்று வேண்டுமானால் பார்க்கலாம்.
ஆனால் மனதில் பல கேள்விகள் எழலாம்.
மீண்டும் கதையை தேடி செல்ல வேண்டி வரலாம்.
அமரர் கல்கியா இயக்குனர் மணியா என்ற குழப்பம் எழலாம்!

-நா. பார்வதி

நான் பகிர்ந்துள்ள கருத்துக்கள் அனைத்தும் நான் நேற்றுப் பார்த்த பொன்னியின் செல்வன் திரைப்படம் பற்றி என் மனதில் தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே.

இப்போ நாம திரு. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் கதை மற்றும் கதாபாத்திரங்களுக்குள் செல்வோம்.
நான் முப்பதாம் தேதியிலிருந்து இந்த திரைபடத்தின் விமர்சனங்கள் எல்லாவற்றையும் படித்து வந்தேன். புத்தகம் வாசிக்காதவர்களுக்கு படம் புரியாது, குழப்பமாக இருக்கும் அப்படி இப்படி என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தவண்ணம் இருந்தது. ஆனால் உண்மையில் அப்படி எதுவுமே இல்லை. படம் நன்றாக தெளிவாக தான் எடுத்திருக்கிறார்கள். காட்சிகள் ஒவ்வொன்றும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருந்தது. வந்தியத்தேவனும், ஆழ்வார்கடியானும் மறைந்திருந்து சூழ்ச்சியை பார்க்கும் காட்சி புத்தகத்தில் வந்ததைப் போலவே காட்சியாக்கப்பட்டிருந்ததாக தான் நான் கருதுகிறேன். இது போல சில காட்சிகளை சொல்லலாம். ஆனால் என்றுமே புத்தகத்தில் வந்த ஒரு கதை திரைப்படமாக்கப்பட்டால் அதில் சில மாற்றங்கள் இருக்கத்தான் செய்யும். அவர்களே அதை பொறுப்பு துறப்பில் சுவாரஸ்யத்திற்காக சில காட்சிகளை மாற்றி அமைத்திருக்கிறோம் என்று எழுதிக் காட்டுகிறார்களே! அதற்கு பின்பும் நாம் கல்கியின் கதையை அப்படியே திரையில் எதிர்பார்ப்பது முறையல்ல.

இப்படி நமது சோழ வரலாற்றையே மறந்துப்போக கூடிய ஒரு சந்ததி உருவாகும் என்று அந்த பகவான் எண்ணியதாலோ என்னவோ அதை மறந்திடாது வாழ்ந்த மக்கள் இருந்த காலங்களில் எல்லாம் அதை பல முறை முயற்சித்தும் படமாக்க முடியாது போயிற்று போல!! என்று தான் நினைக்கத்தோன்றுகிறது. ஒரு திரைப்படம் நமது சோழ வரலாற்றின் மீது ஓர் ஈர்ப்பை இப்போதிருக்கும் சந்ததியினருக்குள் புகுத்தியுள்ளதை நான் வரவேற்கிறேன். அதுவும் தமிழர்கள் மட்டுமல்லாது உலகளவில் நமது சோழர்கள் பற்றி பறைசாற்றும் விதமாக இப்படம் அமைந்துள்ளது அம்மண்ணில் பிறந்த நமக்கும் பெருமை சேர்க்கத்தான் செய்கிறது.

இசை எடுபடவில்லை. ஓரிரு இடங்களைத் தவிர காட்சிகளுடன் சேர்ந்து பயணிக்காது அது பாட்டுக்கு தனி டிராக்கில் ஓடிக்கொண்டிருந்தது வருத்தத்தை அளிக்கிறது. இளையராஜா இசையமைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்குமோ என்ற யோசனையை வரவழைக்கிறது.

வசன உச்சரிப்பில் கவனம் செலுத்தாது சற்று வருத்தத்தை அளிக்கிறது. உதாரணத்திற்கு “சோழ நாடு” என்பதை சோள நாடு என்று உச்சரிப்பது கேட்போரை முகம் சுளிக்க வைக்கிறது.

திரைப்படத்தில் நடித்த ஆண் நடிகர்கள் தொன்னூற்று ஒன்பது சதவீதம் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல கச்சிதமாக இருந்தனர் ஆனால் வானதி, நந்தினி கதாபாத்திரத்திற்கு ஒட்டவே இல்லை.

ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக இருக்கலாம் ஆனால் நந்தினியாக அவர்களை மனம் ஏற்கவில்லை. ஏன்னெனில் அவர் ஒரு அழகு பதுமை போல வலம் வந்தாரே அன்றி திரு. மணிரத்னம் அவர்கள் வடிவமைத்த வில்லிக்கேத்த முகபாவங்கள் ஒன்றுமே திரையில் பிரதிபலிக்கவில்லை. அரியணையை பார்க்கும் காட்சியை தவிர வேறெந்த காட்சியிலும் அவர் நடிக்க முயற்சிக்கக்கூட இல்லை என்பது வேதனையளிக்கிறது.

துளியும் பாவம் இல்லா முகம் அது
அதில் வில்லத் தனத்தை நாம் எங்கு தேடுவது? (வாசமில்லா மலரிது பாடல் போல பாடித்தான் பாருங்களேன்😜)

பாண்டியனுடன் நந்தினியை பார்த்ததும் கரிகாலரின் நடிப்பு சபாஷ் போட வைக்கும் ஆனால் எந்த உணர்ச்சியும் இல்லாத நந்தினியின் நடிப்பு அந்த முழுக் காட்சியையும் நூலறுந்த காற்றாடி போல சுவாரஸ்யத்தை குன்றச் செய்துள்ளது.

நந்தினி வந்த காட்சிகள் எதுவுமே திரைப்படத்தின் மற்ற காட்சிகளோடு துளியும் ஒட்டவில்லை. அவர் வந்த காட்சிகளில் எல்லாம் ஏதோ ஒரு பெரிய குறை இருப்பதை படம் பார்ப்பவர்கள் நிச்சயம் உணர்வார்கள்.

பழுவேட்டரையர்கள் இருவருமே பக்காவாக பொருந்தி இருந்தனர். ஆனால் பெரிய பழுவேட்டரையர் நந்தினியை கட்டியணைக்கும் போது ஏதோ கடனே என்று செய்ததைப் போல் இருந்தது. அதில் உணர்ச்சி துளியும் இருக்கவில்லை.

ஆழ்வார்கடியான் நம்பியாக நடித்த ஜெயராம், சொல்லிக்கொடுத்தை அப்படியே செய்திருக்கிறார். அவர் நடை உடை பாவனை எல்லாமே நன்றாக இருந்தது. மேலும் அவர் நந்தினியிடம் ஒரு செய்தியை தனக்காக கூறும் படி வந்தியத்தேவனிடம் கூறுவதாக தான் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அடுத்த காட்சியில் இருவரும் மீண்டும் சந்திக்கும் போது வந்தியத்தேவன் நம்பியிடம் ஓலைச்சுவடி பற்றி கேட்பான். அந்த இடம், காட்சி மற்றும் வசனத்தில் தவறு இருப்பதாக எனக்கு தோன்றியது. இதை மறுபடியும் பார்த்து தெளிவுபெற வேண்டுமென என் மனதின் எதிரொலி எனக்கு கேட்டது . பார்ப்போம் அதற்கான நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டியது தான். திரு. ஜெயராம் போன்ற சிறந்த நடிகரை இன்னும் நன்றாக உபயோகித்துக் கொண்டிருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.

குந்தவையையும் அழகு பதுமையாகவே காட்டப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே நடிப்பும் எட்டிப்பார்க்க முயற்சித்துள்ளது என்பதில் மகிழ்ச்சியே. நந்தினி – குந்தவை சந்திப்பில் குந்தவைக்கே என் மதிப்பெண்கள். மேலும் குந்தவையாக நடித்தவர் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்ததாலோ என்னவோ கதாபாத்திரத்தோடு ஒத்துப் போகிறார். அந்த ஒற்றுதல் நந்தினியிடம் மிஸ்ஸிங்.

பூங்குழலியாக நடித்தவரும் நன்றாக நடித்துள்ளார்.

வந்தியத்தேவனாக கார்த்தி, கொடுத்த கதாபாத்திரத்திற்கேற்ப நன்றாக நடித்துள்ளார். ஆகவே குறை ஒன்றுமில்லை வந்தியத்தேவா. உன் புன்முறுவலும், கேலி, கிண்டலும் ரசிக்கும் படியாகவே இருந்தது.

ஆதித்த கரிகாலனாக நடித்த திரு விக்ரம் நடிப்பில் நம்மை சபாஷ் போட வைக்கிறார் என்றால் அது மிகையாகாது. நம்பி, அன்னியன், ரெமோ, கிருஷ்ணாவுக்கு இந்த கதாபாத்திரமும் மிகப் பொருத்தமாக இருந்தது. அவரும் அதற்கான நியாயத்தை நடிப்பின் மூலம் வழங்கியுள்ளார். ஆனால் அவர் முன்னாள் கதையை சொல்லும் போது தேவையில்லாமல் கேமிராவை ஆட்டோ ஆட்டென்று அட்டியதாக நான் உணர்ந்தேன். அதை தவிர்த்திருக்கலாமோ!!

இப்போது நமது ஹீரோகிட்ட வருவோம். பொன்னியின் செல்வரும் கைத்தட்டும் விதம் அவரது கதாபாத்திரத்தை நன்றாகவே செய்திருந்தார். சும்மா அவரைப் பார்த்ததால் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். உண்மையிலேயே அவர் வந்த காட்சிகளில் எல்லாம் அவரைச்சுற்றி பலர் இருந்தும் நம் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்துள்ளார்.

இதெல்லாம் சரிங்க இதுல ஹைலைட்டே எனக்கு வந்த சந்தேகம் தான். திரு. கல்கி அவர்கள் எழுதி நான் படித்த பொன்னியின் செல்வன் கதையில் வந்த நம்ம பொன்னியின் செல்வன் பெயர் அருள்மொழி வர்மன் என்று படித்ததாக தான் ஞாபகம். ஆனால் படத்திலும் சரி அதன் கீழே ஓடிக்கொண்டிருந்த ஆங்கில வசன வரிகளிலும் சரி அருள்மொழி என்று திரு. கல்கி அவர்கள் வைத்த பெயரை அருண்மொழி என்று தான் கூறுகிறார்கள் எழுதியும் காட்டுகிறார்கள்! அது ஏன்? என்று நான் எங்களுடன் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்த பொன்னியின் செல்வரிடமே இடைவேளை நேரத்தில் கேட்டேன். எனது அந்த கேள்வி சில மணித்துளிகள் அவருடன் உரையாட ஓர் நல்ல வாய்ப்பாக அமைந்தது. அதற்குள் திரையரங்கிற்கு அவர் வந்திருப்பதை அறிந்த பலர் புகைப்படம் எடுக்க கூடினர். உடனே நான் அவரைப் பார்த்து அத்துனை நேரம் என்னோடு உரையாடியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு

“வேயிட்டிங் ஃபார் யூவர் என்ட்ரி” என்று நான் கூறியதும் உடனே அவர்

“இடைவேளை முடிந்ததும் நான் வருவேன் மிஸ் பண்ணாம பாருங்க” என்றார்.

அதற்கு நானும் “ஷுவர் ஷுவர்” என்று கூறிவிட்டு இருக்கையில் அமர்ந்தேன். ஆனால் அதன்பின் என் மனம் திரையில் இல்லை. என்னடா நாம படிச்சப்போ அருள்மொழி வர்மனா இருந்தவரு திரைபடத்துல நடிச்சதும் அருண்மொழி என்று மற்ற நடிகை நடிகர்களுக்கு இயக்குனர்கள் திரைப் பெயர் வைப்பதைப் போல செய்து விட்டாரோ இயக்குனர்!! என்ற எண்ணம் என்னை ஆட்கொண்டது. உடனே கூகுளில் தேடினேன். எல்லா இடங்களிலும் அருள்மொழி வர்மன் என்று தான் பதிவிடப்பட்டிருந்தது. அப்போது நான் படித்தது சரிதான் என்ற முடிவுக்கு வந்து திரையை நிமிர்ந்துப் பார்த்தால் அருள்மொழி மன்னிக்கவும் திரு மணிரத்னத்தின் அருண்மொழி வர்மன் வந்தியத்தேவனுடன் மும்முரமாக வாள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.

அதன் பின் முழு படத்தையும் பார்த்துவிட்டு ஜெயம் ரவி அவர்களுக்கு ஒரு தம்ஸ்அப் காட்டிவிட்டு திரையரங்கில் இருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை என் கணவரிடம் அந்த பெயர் மாற்றத்தைப் பற்றியே புலம்பிக்கொண்டு வந்தேன்.

வீட்டிற்கு வந்ததும் கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புத்தகத்தை எடுத்து பெயரை சரி பார்த்தேன். அப்பாடா நாம சரியாதான் கேட்டு இருக்கோம். ஆனால் இயக்குனர் ஏன் அப்படி அருண்மொழி என்று திரையில் கூறியிருக்கிறார் என்ற குழப்பம் எழ உடனே மீண்டும் கூகுள் பாட்டியிடம் கேள்வியை மாற்றிக் கேட்டேன் அவளோ “அருண்மொழி /அருள்மொழி பெயர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் இயக்குனர் மணிரத்னம்” என்ற தலைப்பை பளிச்சிட்டாள். ஓ!!! இது ஏற்கனவே கேட்கப்பட்டுவிட்டதா!!! நாம் தான் கவனிக்காம படிக்கத் தவறிட்டோமென்று எண்ணிக்கொண்டே… அப்படி அவர் என்ன தான் சொல்லி இருக்கிறார் என்று படித்துப் பார்த்தேன். அவர் எதோ சோழர் செப்புத்தகடில் அருண்மொழி வர்மன் என்று தான் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் தான் அவ்வாறு வைத்துள்ளார் என்றும் மேலும் அவர் அளித்த விளக்கத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர் என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது. இதை சரி பார்க்க என்னால் ரூபாய் நாற்பதாயிரம் செலவழித்துக்கொண்டு இந்தியா வந்து ஆராய்ச்சி செய்ய இப்போது தோதுபடாது🙂 அப்படியே வைத்துக்கொண்டோமே/ ஏற்றுக்கொண்டோமே என்றால் திரு. கல்கி அவர்கள் அருள்மொழி என்று எழுதியிருப்பது தவறா!!!! இல்லை அவர் கதையை அச்சடித்து புத்தகமாக தந்தவர்கள் மீது தவறா? இதை யாரிடம் கேட்பது? யாம் அறியோம் பராபரமே!!

இயக்குனரான அவர் அதற்கான என்ன விளக்கம் அளித்திருந்தாலும் சரி, திரு. கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புதினக் கதா நாயகன், நான் படித்த அருள்மொழி வர்மன் என்ற பெயர் தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதுவே மனதிலும் நிலைத்திருக்கிறது. கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் அருள்மொழி வர்மன் வாழ்க வாழ்க!!

ஒரு திரைப்படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதிலும் இது போன்ற கதைகளை திரைக்கு கொண்டு வருவதென்பது இமாலய முயற்சி. அதை நன்றாகவே செய்திருக்கிறார் இயக்குனர். அப்படிப்பட்ட முயற்சிக்கு பலே என்று தான் சொல்ல வைத்திருக்கிறது திரைப்படம்.

– நா. பார்வதி

தண்டட்டி அணிந்திருந்தவளுக்கு உரிமையானவன்
இறுதியில் அந்த தண்டட்டிக்காவது உரிமையாவான் என்று எண்ணினேன்!

ஆனால்,

அவன் ஆசைப் பட்ட அவள்
அவனிடமிருந்து பிரித்து இழுத்துச் செல்லப்படுகிறாள்!
அவள் ஆசைப்பட்டு கேட்டு,
முதலும் கடைசியுமாக அவன் அவளுக்கு வாங்கிக் கொடுத்த தண்டட்டியையும்
அவன் அவளுடனேயே அனுப்பி வைத்தான்.

தங்கத்தால் ஆனது தண்டட்டி
அதைக் கைப்பற்றிட அலைகிறது பிள்ளைகள் என்னும் கொள்ளைக் கூட்டமடி!
அதைப் பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்துதடி!

வழக்கமான காதல் கதையை உருக்கி, சற்று மெருகேற்றி
அதை தண்டட்டிக்குள் வைத்து வழங்கியிருக்கும் விதம் அழகோ அழகடி.

தண்டட்டி அதன் உலோக தன்மையில் மட்டுமன்றி
கதையிலும்
காட்சியமைப்புகளிலும்
சொக்க தங்கமடி❤️
– நா. பார்வதி

தீவிர ரஜினி ரசிகையான நான் எப்போதும் போலவே அவருக்காகவே/அவரை திரையில் பார்ப்பதற்காகவே இந்த படத்தை பார்க்க சென்றேன். அவரும் எப்போதும் போலவே என்னைப் போன்ற ரசிகர்/ரசிகைகளை ஏமாற்றவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆமாங்க யாரு வேணும்னாலும் என்ன வேணும்னாலும் சொல்லட்டும் இந்த வயசுலையும் அவரு திரையில் வந்தா அங்க வேற யாரையும் நம்ம கண் பார்க்காது. படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை விசில் சத்தமும், கைத்தட்டல்களும், தலைவா என்ற கோஷமும் தான் திரையரங்கம் முழுவதும் ஒலித்தது. என்னைப்  பொறுத்தவரை எழுபத்து ரெண்டு வயதிலும் இப்படி ஒரு வரவேற்பு, இனி எந்த நடிகருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை.

வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னை விட்டு போகலன்னு நீலாம்பரி இருபத்தி நான்கு வருடங்களுக்கு முன்னால் சொன்னது இரண்டாயிரத்து இருபத்தி மூன்றாம் ஆண்டான இன்றும் இந்த படத்தில் அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது.

சரி, இப்போ நம்ம இயக்குனர் திரு. நெல்சன் அவர்களின் ஜெயிலர் தியைப்படத்திற்கு வருவோம்.

இந்தப் படத்தில் ரஜினியின் ஆரம்ப காலத்திலிருந்து அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் பலவற்றின் பிரதிபலிப்பு இருக்கிறது. அபூர்வ ராகங்கள் படத்தில் கேட்டை திறந்துக் கொண்டு வரும் பாண்டியன், ஆறிலிருந்து அறுபது வரை சந்தானம், தம்பிக்கு எந்த ஊரு பாலு, அண்ணாமலை என அடுக்கிக்கொண்டே போகலாம்.

தாத்தாவும் பேரனுமாக அடிக்கும் லூட்டி காண்போரை ரசிக்க வைக்கிறது. பேரனாக நடிக்கும் சிறுவன் ரித்விக் மிக அருமையாக நடித்திருக்கிறார். இயக்குனர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்திருக்கிறார்.

தனது மகன் இனி இல்லை என்று அறிந்த அந்த தருணம் தலைவர் நடிப்பு தனித்துவம். மேலும் அதனால் உறக்கமின்றி பழிவாங்க புறப்படும் அப்பா அபாரம். யோகிபாபுவுடனான  காம்பினேஷன் கலக்கல். இறுதியில் தப்பு யார் செஞ்சாலும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை எடுத்துரைக்கும் காட்சியில் அவரின் நடிப்பில், தான் செய்தது சரி என்றும் அதே நேரம் பாசத்தின் வெளிபாடும் கலந்து வெளிப்பட்டதும் அரங்கத்தில் கரகோஷம் அடங்கவே சற்று நேரம் எடுத்தது. 

அனிருத் இசை அரங்கை அதிர வைக்கிறது.

இடைவேளை வரை விருவிருவென நகர்ந்த படம் அதன் பின் சற்று இழுபறியாக இருக்கிறது என்பது எனது கருத்து. படத்தில் தலைவரின் ஃபிளாஷ் பேக் மிக அழகாகவும் சுருக்கமாகவும் காட்டப்பட்டிருக்கிறது.  ஃபிளாஷ் பேக்கில் ரஜினியின் மேக் கப் பிரமாதம்.

கதை என்னவோ மகனின் இழப்புக்கு பழிவாங்கும் தந்தையின் கதை போல் தான் நகரும். ஆனால் அதன் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராதது. அந்த ட்விஸ்ட்டை இன்னும் கொஞ்சம் ஆழமாக பதிய வைத்திருக்கலாம் ஆனால் அதை மேலோட்டமாக காண்பித்து முடித்து விட்டுவிட்டது ஏதோ கதையில் பெரும் தவறு போல் தோன்றுகிறது. மொத்தத்தில் கதையில் ஆங்காங்கே சில கேள்விகள் எழத்தான் செய்கிறது.

அனைத்து ஹீரோக்களையும் வைத்து படம் எடுக்கணும்…
ஆனா தனித்தனியா இல்ல ஒரே கதையில் எல்லாரும் வரணும் அப்படீங்கறத்துக்காகவே கதை பின்னப்பட்டிருக்கிறது அப்பட்டமாக தெரிகிறது. மார்வெல் படங்களில் வருவது போல…

திரு. ஜாக்கி ஸ்ராப், திரு. ஷிவ ராஜ்குமார் மற்றும் திரு. மோகன்லால் ஆகியோர் சிறிய வேடங்கள் ஏற்று நடித்திருந்தாலும் அவர்களுள் திரு. லால் தான் மனசில் நிற்கிறார்.

திரு. யோகிபாபு அவர்களின் நடிப்பு எதார்த்தம் மற்றும் எகத்தாளம்  நிறைந்ததாக இருக்கிறது. அவர் பாரதியார் சொன்னதாக சொல்வது காமெடியாக இருந்தாலும் அவரை எப்படி அப்படி சொல்ல விட்டார் இயக்குனர் என்று எண்ணி முடிக்கும் போது அதற்கு தக்க பதில் கொடுக்கிறார் தலைவர். அப்போது வாயை மூடும் யோகிபாபு அதன் பின் பாரதியை தொந்தரவு செய்யவில்லை.

வில்லனாக வரும் வர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகர் திரு. வினாயகன் நடிப்பு சிறப்பு. தரமான வில்லன் தர்மம் கேட்டு பத்து ரூபாய் வாங்கி நிமிர்ந்து பார்க்கும் பார்வையில் வெளிப்படுத்தும் வஞ்சம் அபாரம்.

ஒரே ஒரு பாடலுக்காகவும், மூன்று சீன்களுக்காகவும் மட்டுமே வரும் தமன்னா அவருக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை குறையேதுமின்றி சிறப்பாக செய்துள்ளார். இருந்தும் பாவம் படத்தோடு ஒட்டவில்லை.

இங்கு நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு விஷயம் என்னன்னா…
இந்த படம் வெளிவருவதற்கு முன்னால் தமன்னா வரும் அந்த பாடல் “காவாலயா” பெரும் ஹிட் ஆச்சு இல்லையா. அப்போ ஒரு தோழர் அந்த பாடலையும் அதில் திரு ரஜினி அவர்களின் டான்ஸையும் கேலி செய்து ஒரு வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். ஆக்சுவலி ஏன் ரஜினி அப்படி ஒரு ஸ்டெப் போடுகிறார் என்றும் அந்த பாட்டில் ஏன் அவர் அப்படி ஒட்டாது இருக்கிறார் என்றும் படத்தைப் பார்த்தால் நமக்கு புரியும்.

ரம்யா கிருஷ்ணன் இன்னும் கொஞ்சம் நடித்திருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு எப்படின்னு படம் பார்த்தவர்கள் பதிவிடுங்கள். வேற ஒன்னும் சொல்லுறதுக்கில்ல.

ரஜினியின் மகனாக நடித்திருக்கும் வசந்த் ரவியும் என்னைப் பொருத்தவரை அந்த கதாபாத்திரத்தில் ஒட்டவில்லை.

திரு சரவணன் மிக அனாயாசமாக அவர் கதாபாத்திரத்தை செய்திருக்கிறார். ஆனால் அவர் அந்த சிலை கடத்தல் கூட்டத்திற்கு கொடுக்கும் பில்ட் அப் கொஞ்சம் கதையிலும் இருந்திருக்கலாம். கதையை மேலோட்டமாக சொல்லியிருப்பது ஏற்றுக்கொள்ளும் படி இல்லை… சரி என்ன செய்ய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நபர்களுக்கு முக்கியத்துவம் குடுக்க வேண்டுமெனில் சற்று கதையை மேலோட்டமாக தான் காட்ட முடியும் போல!

விடிவி கணேஷ் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை சரியாக செய்துள்ளார். ஆனால் அவர் வரும் இடத்தில் கதை தான் நம்பும் படி இல்லை. மேலும் ரஜினியின் குடும்பத்தினர் எந்த கேள்வியும் கேட்காது இருந்தது நம்முள் பல கேள்விகளை எழுப்புகிறது. நடந்தே பெங்களூர் சென்றுவிட்டதாக கூறுவதையும், வில்லன் வந்து கதவை தட்டி பத்து ரூபாய் பிட்சை கேட்டதையும்  எவ்வித கேள்வியும் எழுப்பாமல் சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள்! இப்படியுமா இருப்பார்கள்!

படம் என்ன சொல்ல வருகிறது
மகனின் இழப்புக்கு பழிவாங்கும் தந்தையை பற்றியா
சிலை கடத்தல் கும்பல் பற்றியா
ஆந்திரா கோவிலில் இருக்கும் அந்த கிரீடத்தின் வரலாறு பற்றியா
பக்கத்து மாநிலங்களின் ஹீரோக்கள் பற்றியா
இல்லை ஜெயிலர் ஆக இருந்தால் அனைத்து பெரும் ரவுடிகளுடன் எளிதாக கனெக்ட் ஆக முடியும் என்பது பற்றியா?

மொத்தத்தில் திரு நெல்சன் எழுதி இயக்கிய ஜெயிலரிடம்
லாஜிக் இருக்கு ஆனா இல்ல!
கட்டாயம் மேஜிக் இருக்கு
அந்த மெஜிஷியன் நம்ம தலைவர் தான்.
ஏன்னா மூன்று மணிநேரம் போனதே தெரியலையே!

இது போல் இனி வரும் படங்களில் முக்கிய குணசித்திர கதாபாத்திரம் ஏற்று நடித்து அதில் இன்றைய இளைய தலைமுறை நடிகர்களுக்கும் வாய்ப்பளித்து அவர்களுடன் இணைந்து திரு அமிதாப் போல் நடித்து வந்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற ஐயம் இனி இயக்குனர்களுக்கு துளியும்  வேண்டாம். நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். தாத்தாவாக காண்பித்தும் ஏற்றுக் கொண்டு விட்டோமே பின்பு எதற்கு ஐயம்.
தாத்தா ஆனாலும் சரி கொள்ளு தாத்தா ஆனாலும் சரி தலைவர் எப்பவுமே தலைவர் தான். அவருக்கு நாங்க எப்பவுமே ரசிகர்கள் தான்.

ஜெயிலர் ஜெயிப்பார்.

-நா. பார்வதி

கணவன் இறந்த பிறகு நிலங்களை விற்று, ஊறுகாய் வியாபாரம் செய்து எப்படியாவது தனது ஒரே மகனை வளர்த்து ஆளாக்க அரும்பாடு படுகிறார் கண்ணம்மா.

அவளின் கஷ்டங்களை சிறிதும் புரிந்துக் கொள்ளாத / புரிந்துக் கொள்ள விரும்பாத மகனாக தனது மகன் இருந்தாலும்,
தாய்மை அவளை பாசம் என்னும் சிறைக்குள் அடைத்து வைக்கிறது.
பெற்றவளை தன் வீட்டு வேலைக்காரி என்று பள்ளி நண்பர்களிடம் கூறிய மகனையும் மன்னிக்க வைக்கிறது.
தன்னையும் தன் ஊறுகாய் வியாபாரத்தையும் மகன் வெறுத்தாலும் அவனை எவரிடமும் விட்டுக்கொடுக்காத தாயாக கண்ணம்மா.

வேதனைகளை மனம் என்னும் கூண்டுக்குள் போட்டு பூட்டி வைத்துக்கொண்டு வெளியே அப்பத்தாவாக கிராமத்தில் அனைவருக்கும் தன்னால் ஆன உதவிகளை செய்து வருகிறார்.

மகன் நன்றாக படித்து சென்னையில் பெரிய உத்தியோகத்தில் சேர்ந்து தன் தாயிடம் கூட சொல்லாமல் தன்னுடன் பணிபுரியும் ஒரு வடமாநில பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்.

தனது மகன் மீது வைத்திருக்கும் பாசத்தால் எதிர்த்து ஏதும் பேசாது அதையும் ஏற்றுக் கொண்டு, பேரப்பிள்ளை பிறந்ததும் ஓடிச் சென்று குழந்தையை பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பியவள் அதன் பின் மகன் வீட்டிற்கு போகவில்லை. அவனும் தன் அம்மாவை வரச் சொல்லி அழைக்கவும் இல்லை.

ஊரில் யார் கேட்டாலும் மகன் ரொம்ப பிசி என்றும் தினமும் இரவில் ஃபோனில் தன்னுடன் பேசுவதாகவும் கூறி ஊர் வாயை அடைக்க அவள் பேசும்போது அவளின் மனம் அழுவதை நம்மால் உணரமுடிகிறது.

பின்ன ஊர்வசின்னா சும்மாவா. அவங்க நடிப்பு அப்படி.

இப்படியாக ஊருக்கு வேஷம் போட்டுக்கொண்டு உள்ளுக்குள் குமுறும் அப்பத்தாவை திடீரென சென்னைக்கு வரும்படி அழைக்கிறான் மகன்.

தனது ஊறுகாய் வியாபாரத்தை தனது தோழியிடம் விட்டுவிட்டு பத்து வருடங்கள் கழித்து
மகனையும், மருமகளையும், பேரப்பிள்ளையையும் காண போகும் ஆசையை, ஆவலை பலகாரங்களாகவும் ஊறுகாய்களாகவும் கட்டி சுமந்துக் கொண்டு செல்கிறாள் அப்பத்தா.

அங்கே சென்றதும் தான் அவளுக்கு தெரிய வருகிறது அவளை சென்னைக்கு மகன் அழைத்ததற்கான காரணம். அதிர்ந்து போகிறாள். ஆனாலும் அசரவில்லை.

மகனின் வீட்டிற்கும் அவன் வீட்டின் நாய்க்கும் காவலாளி ஆகிறாள் அப்பத்தா. அவளின் சிறு வயதில் அவளை நாய் கடித்ததால் நாய்கள் என்றாலே ஓட்டம் எடுக்கும் அப்பத்தா என்கிற கண்ணம்மா தன் மகன் வீட்டில் வளர்க்கப்படும் நாயுடன் தனியாக எப்படி இருக்கப் போகிறாள் என்பது தான் கதை.

அதை மிக சிறப்பாக கையாண்டு நகைச்சுவையோடு புதைந்து கிடந்த மனச் சுமையை கலந்து மனதில் பதிய வைத்திருக்கிறார்கள். எந்த நாயை கண்டு அப்பத்தா பயந்து ஓடினாளோ கடைசியில் அதுதான் அவளுடன் செல்கிறது.

சில அப்பார்ட்மெண்ட் நகைச்சுவை காட்சிகள் நமக்கு ஏற்கனவே ஒரு படத்தில் பரிட்சயமான காட்சிகள் தான்.
அதில் முதியவர் இதில் மூதாட்டி! பழைய வீட்டுக்கு அடிக்கப்பட்ட புதிய நிற சாயம் அவ்வளவே.

திரைப்படத்தில் நடித்த அனைவருமே கச்சிதமாக அவரவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்துக்கு ஏற்ப அளவாக நடித்து ரசிக்க வைத்துள்ளனர்.

கிராமத்து காட்சிகள் அனைத்தும் மலையாளப் படம் பார்க்கும் உணர்வை அளிக்கிறது. அதற்கு காரணம் இயக்குனர் பிரியதர்ஷன். இயற்கை நம்மை கண்ணில் ஒத்திக் கொள்ள வைக்கும் ஓவியமாக காட்சியளிக்கிறது.

நன்கு படித்து நல்ல வேலையில் இருக்கும் மகன் என்னத்தான் வெறுப்பு இருந்தாலும் பொதுவில் அப்படி நடந்துக் கொள்வாரா? ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்பது இந்த காட்சிக்கு கட்சிதமாக பொருந்தும். அது படிப்பு, பதவி, இடம், காலம் என எதுவும் பார்க்காது போல! என்று தான் நம்மை நினைக்க வைக்கிறது.

பாசம் வைத்தால் மோசம் போவோம் என்று ஒரு பேச்சு உண்டு.

ஆனால் தன்னலமற்ற உண்மையான பாசம்
என்றுமே மோசம் போகாது என்பதற்கு இந்த படம்
ஒரு சிறந்த உதாரணம்.

மகனுக்காக மெழுகு போல் உருகும்
அப்பத்தா அன்பின் அடையாளம்.

-நா. பார்வதி. பார்வதி



ஒரு கதை கதாநாயகனாக இருந்தால் அந்த திரைப்படம் மணிமகுடம் சூடும் என்பதை எடுத்துரைத்துள்ளார் “மகாராஜா”.

கதையை நகர்த்திய விதம், காட்சிகள் பின்னப்பட்ட விதம், அதை நூடுல்ஸ் போல் சிக்கல்கள் ஏதுமின்றி கோர்வையாக வழங்கிய விதம் என்று ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் பார்வையாளர்களுக்கு விருந்தளித்துள்ளார் “மகாராஜா”.

“மகாராஜாவிடம்” நான் கொடுக்க நினைக்கும் மனு ஒன்று தான். அது என்னவென்றால் கதை நன்றாக நகர்ந்தாலும் காரணம் அதே பழைய பல்லவியாக இருப்பது சற்று வருத்தத்தை தருகிறது என்பதாகும். காரணத்தையும் மாற்றியமைத்து இருக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

ஒருவருக்கு குப்பையாக/தேவையற்றதாக தோன்றும் ஒரு பொருள் அல்லது விஷயம் வேறொருவருக்கு மிகவும் முக்கியமான பொக்கிஷமாக இருக்கக்கூடும் என்பதையும் “மகாராஜா” உணர்த்தியுள்ளார்.

விஜய் சேதுபதி என்றாலே வித்தியாசம். அவர் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.
பீட்சாவில் தொடங்கிய பயணம் அவரை மகாராஜாவாக மகுடம் சூட்டிக் கொள்ள வைத்ததிருப்பது அவர் தேர்ந்தெடுத்த கதைகள் என்பது எவராலும் மறுக்க முடியாததாகும்.

நடிகனை கொண்டாடுவதை விடுத்து
கதையை கொண்டாடினால் இன்னும் பல நல்ல திரைப்படங்களை திரையில் காணலாம்.

“மகாராஜா” மனம் என்னும் வனத்தின் அரிமா.
-நா‌. பார்வதி