🎬 சினிமா, நாடகம், தொலைக்காட்சி போன்ற சக்திவாய்ந்த ஊடகங்கள் கருத்துகளை விதைக்கவும், மாற்றங்களை உருவாக்கவும் வல்லமை கொண்டவை. அதே நேரம், கருத்து சொல்லுகிறோம் என்ற பெயரில் ❌ தவறான எண்ணங்கள் அல்லது 👶 குழந்தைகள் மற்றும் 👥 சமூகத்தைப் பாதிக்கக்கூடிய விஷயங்கள் வெளிப்படுத்தப்படும் போது, அவற்றை “போட்டி” என்ற பெயரில் 🌟 புகழ்ந்து, பாராட்டி 🏆, பரிசளித்து 🎁 ஊக்குவிப்பது நம்மை ஒரு கணம் சிந்திக்க வைக்க வேண்டிய விஷயமாகிறது.
இந்த உண்மையைச் சொன்னால், “பூமர்” 🌿, “பழைய பஞ்சாங்கம்” 📜, “பாராட்டத் மனமில்லாதவர்” 😐, “முற்போக்கு சிந்தனை இல்லாதவர்” 🤔 என்ற முத்திரைகள் உடனே குத்தப்படும்.
ஆனால் முகஸ்துதிக்காக 😏 “சோ ஸ்வீட்” 🍬, “க்யூட்” 😍, “வாவ்” 😲, “ஆஹா” 😄, “ஓஹோ” 😮 என்று புகழ்ந்து தள்ளிவிட்டு, பின்னால் சென்று “இதெல்லாம் ஒரு சினிமாவா / நாடகமா / நிகழ்ச்சியா / போட்டியா!” 🎭 “இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ?” 🤷♂️ என்று சொல்லிக்கொள்பவர்களே, இந்த நவநாகரீக சமுதாயத்தில் அறிவுஜீவிகள் 🧠 மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்களாக💡 கருதப்படுகின்றனர்.
🔥 “தீயது தீ போலப் பரவும். நல்லதும் நீர் போலப் பரவ வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது” 🌊
எனவே, இந்த சமூக ஊடகங்கள் நிறைந்த காலத்தில், நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோம், எப்படி வெளிப்படுத்துகிறோம், எதைப் பரப்புகிறோம் என்பதில் நமக்குள்ள பொறுப்பை 📌 சிந்தித்து செயல்படுத்த வேண்டிய அவசியம் அத்தகைய சக்திவாய்ந்த ஊடகங்களை சேர்ந்த அனைவருக்கும் இருத்தல் வேண்டும்.
திரை 🎬 அல்லது மேடையை 🎭 விட, வாழ்க்கையில் மேலே குறிப்பிட்டுள்ள அறிவுஜீவிகள் 🧠 மற்றும் முற்போக்குவாதிகளின் 💡 நடிப்புதான் உண்மையில் அபாரம் 👏👏👏
தவறான கருத்துக்கு மன்னனே பரிசளிக்க இருந்த போதும், “குற்றம் குற்றமே” ⚖️ என்று சிவபெருமானிடமே துணிந்து சொன்ன நக்கீரர் 🏛️ இருந்த மண்ணில்… இன்று அத்தகைய நக்கீரர்கள் மறைந்துவிட்டனரா⁉️, இல்லை உண்மையைச் சொன்னால் சுட்டுப் பொசுக்கி விடும் 🔥 நெற்றிக்கண்கள் 👀👀👀👀 அதிகமாகிவிட்டனவா⁉️
ஆயிரம் கண்ணுடையாள் சமயபுரத்தாள். அத்தகைய அம்மன் கோவிலில் அராஜகம். அவள் கண்களுக்கு இவை தென்படவில்லையா? தர்ம தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் என்று இரு வழிகள் எல்லா கோவில்களிலும் இருக்கும் முறை. தர்ம தரிசன வரிசையில் கூட்டம் அதிகமாக இருந்தால் கட்டண தரிசனத்தை தேர்ந்தெடுப்பது வழக்கம். அவ்வாறு கட்டணம் செலுத்தி முறையாக வரிசையில் சென்று கொண்டிருக்கும் போது…அம்பாள் நடைக்கு முன் ஒரு கதவு இருக்கும் (இது சமயபுரம் சென்று வருபவர்களுக்கு நன்றாக தெரியும்) அதற்கு சற்று முன்னே வலது புறம் வழியாக தடதடவென ஒரு ஐம்பது நபர்கள் திடீரென எங்கள் வரிசையில் இடித்து பிடித்துக் கொண்டு நுழைந்தனர். அவர்களை அழைத்து வந்து ஒழுங்காக சென்று கொண்டிருந்த வரிசையினூடே நுழைத்து விட்ட நபரிடம்,
“ஏன் இப்படி செய்யறீங்க நாங்க இத்தன மணி நேரமா நுழைவாசல்லேந்து வரிசையில நின்னுட்டு வரோம். இது என்ன புது வழி?”
என்று அனைவரும் கேள்வி எழுப்ப… அழைத்து வந்த ஆசாமி அப்ஸ்காண்ட் ஆனார். இடையில் வந்து நுழைந்த அந்த ஐம்பது நபர்களில் இரண்டு மூன்று பேர்
“நாங்களும் காசு கொடுத்து தான் வந்திருக்கோம்”
என்று குரல் உயர்த்தி கூற. அதற்கு எங்கள் பின்னால் இருந்தவர்
“அப்ப நாங்க என்ன சும்மாவா நின்னுட்டு வர்றோம். ஒரு கட்டண வரிசை தானே இருக்கு. இது என்ன சைடு கட்டண வரிசையா! கடவுள பாக்கறதுலேயும் குறுக்கு வழியா! அம்மா இதெல்லாம் நீயும் பாத்துட்டு தானே இருக்க”
என்று கூற… அந்த லோக நாயகி முன் பெரிய வாக்குவாதம் நடைப்பெற்றது. இறுதியில் வரிசைனூடே நுழைந்தவர்களை போகட்டும் என்று அனைவரும் விட்டுவிட அவர்களும் முன்னே சென்றனர். அம்பாள் கர்ப்பக் கிரக முன் வாசலின் வலது புறத்தில் இருந்து இன்னும் ஒரு பத்து நபர்களை அதே ஆசாமி எங்கள் வரிசையில் இணைத்து விட…முதலில் இணைந்த அந்த ஐம்பதில் பத்து பேர் அதை கடிந்து பேசி சப்தம் எழுப்ப. அதை பார்த்த எங்கள் வரிசையில் முதலில் கடிந்து பேசிய நபர் இப்போது சத்தமாக
“அம்மா தாயி நீ இருக்க மா. நீ இருக்க.”
என்று கூற…இன்னொரு இளைஞர் அவருடன் சேர்ந்துக் கொண்டு
என்று கூறியதும் முதலில் எங்கள் வரிசையில் இணைந்த அந்த ஐம்பது நபர்களும் பேசாமல் அமைதியாக அவர்கள் முன் இணைந்து கொண்டவர்களுக்கு வழி விட்டனர்.
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்றொரு பழமொழி அந்த இடத்தில் பொய்யானது.
அங்கு நடந்தவைகளை கண்ட நாங்கள் அங்கிருந்த குருக்களிடம் புகார் அளிக்க. அவர்களோ யாமறியோம் பராபரமே என்று கைவிரிக்க. காவலாளிகளே இச்செயலை செய்வதால் அவர்களிடம் கூறி பயனில்லை என்றெண்ணி நாங்கள் கோவில் அலுவலகம் சென்று புகார் கொடுத்துவிட்டு வந்தோம். ஆனால் அடுத்த முறை சென்ற போதும் எவ்வித மாற்றமின்றி அதே கூற்று நடந்தேறியது! இனி யாரிடம் புகார் கூறுவது என்று எங்களுக்கு தெரியவில்லை. தெரிந்தவர் சொல்லவும்.
சமயபுரம் கோவில் அதிகாரிகளே! நிர்வாகிகளே! தயவுசெய்து இது போன்றோர்களை கண்டித்து இனியும் இது போல் நடக்காது பார்த்துக் கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வேண்டுமென்றால் தனவான்களுக்கென இன்னுமொரு கட்டண வரிசையை அமல் படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
மக்களே! கடவுளை காண்பதில் எதற்கு அவசரம். நின்று நிதானமாக சென்று தரிசனம் பெற்று வந்தால் தான் என்ன? உங்களுக்கு காசு கொடுத்த கடவுளை காசு கொடுத்து பாருங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை ஆனால் அதிலும் ஏன் ஒரு குறுக்கு வழியை தேர்ந்தெடுக்குறீர்கள்? அக்கோவிலில் பலர் அங்குமிங்குமாக ஐநூறு கொடுங்கள் ஆயிரம் கொடுங்கள் நாங்கள் உங்களை நேராக கற்ப்பகிரகத்துக்குள்ளேயே அழைத்து செல்கிறோம் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் கோவில் நிர்வாகம் மக்களுக்காக இரு வரிசைகளை தான் ஏற்படுத்தி வைத்துள்ளது. அதை தான் நாங்கள் பின்பற்றுவோம் என்ற முடிவை நாம் ஒவ்வொருவரும் எடுத்து அது படியே நடந்து வந்தால் இது போன்ற ஆசாமிகள் காணாமல் போய் விடுவர்.
ஒருத்தருக்கு உடம்பு சரியில்லாமல் போனது. அப்போது அவருடன் அதே அறையில் தங்கியிருந்த நபர் தானாகவே முன் வந்து டீ போட்டு கொடுக்கிறார். உடம்பு சரியில்லாத நபரும் அந்த டீயை வாங்கி குடித்து விட்டு தனது நன்றியை தெரிவித்து கொள்கிறார். அத்துடன் மனதார வாழ்த்தவும் செய்கிறார். இவை அனைத்தும் இவர்கள் இருவருக்குள் நடந்த விஷயம் மற்றும் அவர்கள் இருவர் மட்டுமே அறிந்த விஷயம்.
அந்த டீ போட்டு கொடுத்த நபர் அத்துடன் விட்டிருந்தால் அது உதவி செய்தவருக்கும் உதவி பெற்றவருக்கும் மனநிறைவை கொடுத்திருக்கும்.
ஆனால் உதவி செய்த நபரின் மன நிறைவு… அதை ஒரு நாலாயிரம் நபர்களிடம், இன்னாருக்கு உடல்நலம் சரியில்லாமல் போன காரணத்தினால்… அடுப்பு பத்த வைத்து ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அது கொதித்ததும் அதில் இஞ்சி, ஏலக்காய், டீத்தூள் சேர்த்து அவையனைத்தும் நன்றாக கொதித்ததும் அதில் பால் மற்றும் சக்கரை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி வடிகட்டி ஒரு டம்பளரில் ஊற்றி அவருக்கு சூடான டீ போட்டுக் கொடுத்தேன் என்று சொல்லி கொள்வதில் தான் இருக்கிறது. இது தான் இந்த நவநாகரீக யுகத்தின் பெருந்தன்மை மிகுந்த செயல்!
இவ்வாறான செயல் உதவி பெற்றவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் மேலும் உதவி புரிந்தவரின் உண்மையான மனநிலையை சமுதாயத்துக்கு எடுத்துக்காட்டும்.
நாம் செய்யும் உதவி மற்றவருக்கு உதவியாக இருக்க வேண்டுமே அன்றி உறுத்தலாக ஒரு போதும் இருந்துவிடக்கூடாது.
வேறு சிலர் தண்டோரா ஏதும் போடாது பல உதவிகளை செய்வார்கள் ஆனால் அவர்கள் உதவிய நபர் அவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென்று எண்ணுவார்கள். உதவி பெற்றவர் நன்றியுடன் இருக்கா விட்டால் அவ்வளவு தான் உதவி புரிந்தவரின் உண்மையான சுயரூபம் வெளிவரும். நான் அவ்வளவு செய்தேன் ஆனால் அவன் நன்றிக் கெட்டவன் என்றெல்லாம் தூற்றுவார்கள். புலம்புவார்கள். இதுவும் தவறே.
உன்னால் மட்டுமே இந்த நிலையை சரி செய்ய முடியும் அல்லது உன்னால் மட்டுமே இன்னாருக்கு உதவ முடியும் என்று நம்மை இயக்குபவர் நம்மை படைத்த அந்த பகவான். நம்மை உதவும் நிலையில்/உதவி பெறும் நிலையில் வைத்திருப்பதும் அவர் தான். அவர் தான் நம்மில் சிலரை உதவி செய்ய வைக்கிறார். அவ்வளவே! என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்தோமேயானால் நம்முள் இது போன்ற குணங்கள் ஒரு போதும் தலைதூக்காது.
வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்று நம் முன்னோர் சொன்னதில் இருக்கும் தத்துவம் இந்த சமூக ஊடக காலத்தில் மூழ்கி இருப்பவர்களுக்கு புரியுமா? இல்லை புரிந்தும் புரியாதது போல் இதெல்லாம் “சகஜமப்பான்னு” இருக்கிறார்களா!
“உதவி” ஓர் உன்னதமான சொல் மற்றும் செயல். ஊடகங்களால் “உதவி”கே உதவி தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது என்று தான் சொல்ல தோன்றுகிறது.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே உண்மை, நீதி, நெறி, அறம் மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே.. “கடவுள்” இருக்கிறான் மறந்திடாதே.
இசைஞானி இளையராஜா அவர்களின் வயதோ எழுபத்து ஆறு அவரின் இசையோ என்றும் பதினாறு
அன்பு, பாசம், காதல், அக்கறை, பொறுப்பு, ஒற்றுமை என்ற வகையிலும்
குரோதம், கோபம், துக்கம், பொறாமை, அதிர்ச்சி என்ற வகையிலும்
கிண்டல், கேலி, வம்பு, சண்டை, போட்டா போட்டி என்ற வகையிலும்
கும்மி, கதக், பரதம், குச்சிப்புடி, கதகளி, கரகம் என்ற வகையிலும்
அவர் இசையமைத்த பாடல்கள் ஆயிரம் ஆயிரம் அவையனைத்தும் நம் மனதில் பிடித்தது நீங்கா இடம்
இசையே இசைஞானி இசைத்ததால் தான் இன்னிசை என்றானதோ!
இசைஞானி பாடியதால் பாட்டும் தென்மேற்கு பருவ காற்றாக வீசியதோ!
பூ மாலையே தோள் சேர வா போன்ற பல பாடல்கள் நம் தோள்களை வருடி சென்ற இளம் தென்றல்
ஒரு பூங்காவனம் புதுமணம் போன்ற பல பாடல்கள் நம்மை அமர்த்தியது இசை என்னும் பூங்காவனத்தில்
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல, ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது, தென்றல் வந்து என்னை தொடும், சுந்தரி கண்ணால் ஒரு சேதி, தூங்காத விழிகள் ரெண்டு, தேனே தென்பாண்டி மீனே இசை தேனே, கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு, வானிலே தேன்னிலா, இது ஒரு பொன் மாலை பொழுது, பூங்கதவே தாழ்திறவாய், கண்மணியே காதல் என்பது கற்பனையோ, இளைய நிலா பொழிகிறது இதயம் வரை நனைகிறது, வழிநெடுக காட்டு மல்லி போன்ற பல ஆயிரம் பாடல்களின் இசையால் நம்மோடு என்றும் உறவாடும் ஓர் ஞானி நம் இசைஞானி அவர்கள்.
இசை, மொழி, குரல் ஒன்றென கலந்தால் அது பாட்டு அத்தகைய பாட்டுக்கு ஓர் தலைவர் அவர் மொழியின்றி, குரலின்றி மௌன ராகம், புன்னகை மன்னன், நாயகன், அக்னி நட்சத்திரம், தளபதி போன்ற படங்களின் பின்னணி இசையால் நம்மை கட்டிப்போட்டவர். இன்றும் நம்முள் பலரின் கைபேசியின் அழைப்பு ஒலியாக ஒலித்துக் கொண்டிருக்கச் செய்தவர்.
நம் மனதுக்கு மருந்தாக நம் துக்கத்துக்கு துணையாக நம் தூக்கத்துக்கு தூணாக நம் மகிழ்ச்சிக்கு மத்தாப்பாக நம் வீட்டு விஷேங்களுக்கு விருந்தாக நம் நட்புக்கு நந்தவனமாக நம் அன்புக்கு அரவணைப்பாக அவர் இசை ஒலித்து கொண்டிருந்தது ஒலித்து கொண்டிருக்கிறது இந்த பிரபஞ்சம் உள்ள வரையில் இசைஞானியின் இசை எங்கும் என்றும் ஒலித்துக் கொண்டே தான் இருக்கும்.
வகை வகையாக ஆயிரம் இசை வந்தாலும் இசைஞானியின் இசையை மறைக்கவும் முடியாது மறக்கவும் முடியாது🛑
பழைய மொழி என்றாலும் இப்போது நம்மூர் உணவகங்களின் உணவுப்பட்டியல் அட்டையில் முளைத்திருக்கும் இதன் வகைகளை பார்க்கும் போது “அட ஆமாம்” என்று தான் சொல்ல தோன்றுகிறது.
ஒரு பத்து வருடங்களுக்கு முன் தேங்காய் சட்டினி என்றால் அதில் தேங்காய், பொட்டுக்கடலை, பச்சைமிளகாய் மற்றும் உப்பு தான் இருந்தது. மெல்ல அதில் பூண்டு சேர்க்கப்பட்டது. இப்போது நம்மூரில் இருக்கும் பெரும்பாலான உணவகங்களில் இந்த பூண்டு தேங்காய் சட்டினி தான் எல்லா பதார்த்தங்களுக்கும் பரிமாறப்படுகிறது. அதை நம்மவர்கள் பெருமிதத்தோடு ஏற்றுக்கொண்டு விட்டார்களா? இல்லை வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்களா!
பின்பு மெல்ல வட இந்திய உணவான சென்னா மசாலா உள் நுழைந்தது. அதனை தொடர்ந்து சாட் ஐட்டம்ஸ், சப்ஜி, ரொட்டி, நான் வகைகள் என பின்னாளில் அதுவே நமது உணவகங்களின் உணவுப்பட்டியல் அட்டையை ஆக்கிரமிப்பு செய்தது. இப்போது உணவகங்கள் மட்டுமின்றி பல திருமண நிகழ்வுகளில் கூட இவைகளே வழங்கப்படுகிறது.
ஆனால் நாம் வட இந்தியாவிற்கு சென்றோமேயெனில் ஒரு சில நகரங்களை தவிர மற்ற எங்குமே நமது தென்னிந்திய உணவு கிடைப்பது மிக மிக அரிதான ஒன்றாகும். எங்கு சென்றாலும் அவர்கள் ஊர் பதார்த்தங்கள் தான் கிடைக்கும். அதே போல் அவர்கள் திருமண விழாக்களில் நமது தென்னிந்திய உணவு வகைகளை புகுத்தாது அவர்களின் பாரம்பரிய உணவு வகைகளையே இன்றளவும் வழங்கி வருகிறார்கள். அவ்வாறு அவர்களின் பாரம்பரிய உணவு வகைகளை வழங்குவதில் அவர்கள் யாரும் கௌரவ குறைச்சல் என்று எண்ணாததால் தான் இன்றளவும் மாறாமல் இருக்கிறார்களோ? சிந்திக்க வேண்டிய விஷயம்…
வட இந்திய உணவை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன் இடம்பெற ஆரம்பித்த இந்த “காளான்”, தனது முதல் அடியை சூப்பில் இருந்து துவங்கியது. பின் அதற்கான தனி இடத்தை உணவகங்களின் உணவு பட்டியலில் பெற்றது. இப்போது எங்கும் “காளான்” எதிலும் “காளான்” என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. சென்ற மாதம் நமது சென்னையில் பல கிளைகள் வைத்து இயங்கி வரும் பிரசித்தமான உணவகம் ஒன்றில் மத்திய உணவு உண்ண சென்றிருந்தோம். அனைவருக்கும் மீல்ஸ் ஆர்டர் செய்து காத்திருந்தோம். மீல்ஸ் வந்தது. அதில் ஒன்றில் இந்த மஷ்ரூம் எனப்படும் காளான் இருந்தது. உடனே அந்த ஹோட்டல் மேலாளரை அழைத்து “முதலில் தேங்காய் சட்டினியில் பூண்டு சேர்த்தீர்கள் , பின் வட இந்திய உணவுகளை திணித்தீர்கள் அவைகளை தட்டிக் கேட்காததால் இந்த காளானை இணைக்க துவங்கியுள்ளீர்களா?” என்று கேட்டதற்கு, “காளான் ஒரு வெஜிடபிள் என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது அதனால் தான் நாங்கள் உணவில் சேர்த்தோம்” என்றார்.
இது என்ன அந்நியாயம்? இதை யாரும் கேட்கவில்லையா? பூண்டு, வட இந்திய உணவு, காளான் ஆகிய உணவு வகைகளை சாப்பிடக் கூடாது என்றோ அல்லது அவை உணவகங்களில் விற்பனை செய்யக்கூடாது என்றோ நான் கூறவில்லை. ஆனால் அவற்றை சேர்ப்பதற்கு முன் உணவருந்த வருபவர்களிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு பறிமாறலாமே என்று தான் சொல்ல விழைகிறேன்.
இன்னமும் நமது தென்னிந்திய பாரம்பரிய உணவு வகைகளை மதிப்பவர்களும், உண்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று அந்த மேலாளரிடம் சொல்லிவிட்டு உண்ணாமல் எழுந்து வந்தோம். இதை, பூண்டு உள் நுழைந்ததும் செய்திருக்க வேண்டுமோ?
கண்ட இடத்தில் கண்டபடி வளர்ந்து வந்த காளானுக்கு கை கால் முளைக்கச் செய்து சமையலில் ஒரு அந்தஸ்த்தை கொடுத்து கௌவுரவப்படுத்தி வருகின்றனர் நம்ம ஊர் உணவகங்கள். காளான் வளரும் இடத்தை வைத்து அதற்கு வட இந்தியர்கள் வைத்திருக்கும் பெயர் “குக்குர்முத்தா” (இதன் அர்த்தம் தெரியாதவங்க கேட்டு தெரிஞ்சுக்கோங்க).
நமது நாட்டில் நல்ல காய்கறிகளுக்கு பஞ்சம் வந்துவிட்டதா? இல்லை நம்மூர் காய்கறிகள் உண்டு அலுத்து விட்டதா? நாம் ஏன் நமது பாரம்பரிய உணவு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்? இல்லை நமது பாரம்பரிய உணவு உட்கொள்வதை கௌரவ குறைச்சலாக நினைக்க வேண்டும்?
பாரம்பரிய உணவுகளையும், முறைகளையும், கலாச்சாரத்தையும் மாற்றி அமைத்துக் கொள்ள முயன்றால் அங்குமில்லை இங்குமில்லை என்ற திரிசங்கு நிலைமை தான் உருவாகும்.(அது உருவாகி சில ஆண்டுகள் ஆகிவிட்டன என்று உங்கள் உள்ளக் குமுறல் கேட்கிறது) அதற்காக இவைகளை உண்ணக்கூடாது என்றோ இல்லை சுவைக்க கூடாதென்றோ நான் கூறவில்லை. அதை எல்லாருக்கும் திணிக்காதீர்கள் என்று தான் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அந்தந்த ஊர் அதன் சீதோஷ்ண நிலை எல்லாம் வைத்துதான் அந்தந்த ஊருக்கான உணவு பழக்கவழக்கங்களை நம் முன்னோர் வகுத்து வைத்துள்ளனர். நாகரீகம் என்ற பெயரில் முன்னோர் வாக்கு, முன்னோர் பழக்கவழக்கங்களை புறக்கணித்து விட்டு இப்போது குதிரைவாலி அரிசி, ராகி என்று கட்டிப்புறல்வதும் ஏனோ! அவற்றை விளம்பரபடுத்தி அதிலும் கலப்படம் செய்ய முயல்வதும் ஏனோ!
தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்ட இந்த “காளான்” நமது உணவகங்களை ஆக்கிரமிப்பு செய்திருப்பது நல்லதா?
வீட்டு உணவே மருந்து. அதை வீட்டில் சமைத்து உண்பதே அருமருந்து.
கதையின் நாயகியான செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனதும் உற்றார் உறவினருக்கு ஐநூறு மைல் தூரத்தில் தன்னந்தனியாக அவளின் உயிரற்ற உடலுடன் இருந்த பிரமநாயகத்துக்கு வியர்வை மழை போல் மேனி முழுவதும் பொழிந்தது அது பெருக்கெடுத்து ஏரியை உடைத்து பாய்ந்து வரும் ஆறாகவும் மாறியது இருந்தாலும் அதை துடைத்துக் கொண்டு சகதர்மிணியின் மரணப் பிரிவினால் நிலைகுலையாது தன்னவளுக்கு அவளின் துன்பச் சுமையில் இருந்து விடுதலை கிடைத்ததை எண்ணி அவர் மனம் நிம்மதி பெருமூச்சு விட்டது.
அப்படி என்ன அவளின் துன்பச் சுமை? எதனால் அவர் அவ்வாறு எண்ணுகிறார்? என்பதை விளக்கும் கதை தான் செல்லம்மாள்.
அவ்வாறு எண்ணி நிம்மதியடைய பிரமநாயகம் யோகியோ அல்லது போதி மரத்தடியின் ஞானியோ அல்ல வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளை கடந்து வந்ததில் அவருக்கு ஏற்பட்ட மன பக்குவம் அவரை அந்நிலையிலும் நிலை குலையாமல் இருக்கச் செய்துள்ளது.
கதை மெல்ல பிரமநாயகத்தின் குடும்ப விவரங்களை விவரிக்கிறது. குடும்பத்தில் நான்காவது பிள்ளையான பிரமநாயகம் படிப்பில் சுட்டி என துவங்கி அவரது பால்ய பருவத்தை சற்றே மேற்கோளிட்டு காட்டி அப்படியே செல்லம்மாளை கரம் பிடித்த நாளுக்கு நகர்கிறது.
திருமணமான சில நாட்களில் பிரமநாயகத்தின் தகப்பனார் இறைவனடி சேர்கிறார். சொத்தை பங்குப்பிரித்தல் என எக்காலத்திலும் நடக்கக்கூடிய விஷயங்களை ஒரே பத்தியில் மிக அழகாக விளக்கி, அவர் செல்லம்மாளுடன் சென்னை வந்து சேர்ந்ததும் பிரமநாயகத்தின் பிறந்த வீட்டின் கதை அத்துடன் நிறைவுறுகிறது.
அதன் பின் பிரமநாயகம் செல்லம்மாள் தம்பதியரின் சென்னை வாழ்க்கை, அதில் அவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள், துன்பங்கள், ஏற்ற தாழ்வுகள் மற்றும் செல்லம்மாளின் வியாதி என அனைத்தும் ஒரு சேர அவர்களை அக்னி பரீட்சை செய்ததாக எழுத்தாளர் ஒவ்வொரு விஷயங்களையும் சம்பவங்களையும் குறிப்பிட்டு இருப்பதை வாசிக்க வாசிக்க வாசகர்களும் அவ்விருவரின் உணர்வுகளை உணரும் விதமாக கதை இருக்கிறது.
அதனை தொடர்ந்து, நோய்வாய் பட்டிருக்கும் தன் மனைவியின் எண்ண ஓட்டங்கள் அவர்களுக்குள்ளே நடக்கும் பேச்சு வார்த்தைகள், கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் உபசரனைகள், கணவனுக்கு எதுவும் செய்ய முடியாது இப்படி நோய்வாய்ப்பட்டு கிடக்கிறோமே என்கிற செல்லம்மாளின் மனத்தவிப்பு, அதெல்லாம் ஒன்றுமே இல்லை உனக்கு நான் இருக்கிறேன் என்று அந்த கணவனின் கவனிப்பு வாசிப்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.
பிரமநாயகத்தின் முதலாளி மற்றும் அவர் பிரமநாயகத்துக்கு செய்யும் உதவிகள் பற்றிய விவரங்களையும், மருத்துவர் வருகை, அந்த காலத்தில் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு எப்படி ஊசி போடுவார்கள் போன்ற தகவல்களையும் இக்கதை நமக்கு உரைக்கிறது.
செல்லம்மாள் என்ற பெண்ணை அக்னியை வலம் வந்து மண முடித்த நாளில் இருந்து அவள் தலைக்கு மேல் அக்னி விளகொன்று ஏற்றி வைத்து, அவள் உயிருடன் இருந்த போதும் அவளுக்கான பணிவிடைகளை செய்த பிரமநாயகம் அவள் உயிரற்ற உடலுக்கும் செய்யவேண்டிய உன்னதமான பணிவிடைகளை செவ்வனே செய்து அன்று வரை அனைத்தும் அவளென அவளுக்காக வாழ்ந்து கதையின் தலைப்பையும் செல்லம்மாளுக்கு தாரைவார்த்து கொடுத்தாலும் வாசகர்கள் மனதில் பிரமநாயகம் தான் பிரம்மிப்பூட்டும் வகையில் இடம்பெற செய்துள்ளார் எழுத்தாளர்.
மேலும், ஒரு பெண்ணை திருமணம் செய்து அவள் வாழ்வு நறுமணமாவதற்கு ஒவ்வொரு ஆணும் வெளியே அவர்கள் படும் பாட்டையும் அதை மனைவியிடம் வெளிப்படுத்திக் கொள்ளாது அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்ள நினைக்கும் அவர்களின் மனதையும் அந்த பயணத்தில் அவர்களுக்கு ஏற்படும் ஏற்ற தாழ்வுகளையும் அவற்றை எதிர்கொள்வதனால் அவர்கள் மனம் அடையும் பக்குவத்தையும் அதனால் அவளுக்கு அவன் செய்யும் பணிவிடைகளையும் அது அவளின் இறுதி காலம் வரை நிலைத்திருப்பதையும் மிக மிக அழகாக எழுதி சிறப்பான சிறுகதையாக நமக்கு வழங்கி நமது வாசிப்பை ஓர் உணர்வு பிரவாகமாக மாற்றும் நம் புதுமைப்பித்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் சமர்ப்பிக்கின்றேன்.
இந்த கதையை படிப்பவர்களின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீராவது நிச்சயம் வரும். இந்த காலத்து பிள்ளைகள் இதை படித்தல் நல்லது. ஏனெனில் இந்த கதை அவர் எழுதியது 1933 டூ 1948க்குள் இருக்கும். அந்த காலத்திலேயே ஒரு பெண்ணை/ மனைவியை எப்படி நடத்த வேண்டும் என்று சொல்லாமல் சொல்லும் கதை இது. இது நிச்சயம் அவர் அறிவுரையாக சொல்வது போல் கதைப் படித்த எனக்கு தெரியவில்லை. அந்த காலத்தில் இப்படித்தான் நடத்தியிருப்பார்கள் அதை பார்த்ததால் தான் அவர் இவ்வாறு எழுதி இருப்பார் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
இந்த காலத்திலும் அதாவது 2024 ல் கூட மனைவியை எப்படி நடத்த வேண்டும் பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்றெல்லாம் மேடைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. பகிர்ந்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் இந்த கதை எழுதி சுமார் 75 அல்லது 90 ஆண்டுகள் ஆகிறது. அப்போதே தன்னை நம்பி கரம் பிடித்தவளை இயற்கை பிரிக்கும் வரையும் அவளை இயற்கையோடு இணைக்கும் வரையும் அவளை மணமுடித்தவன் நடந்துக்கொள்ளும் பாங்கை மிக எளிய உரைநடையில் சில வர்ணனைகளுடன் ஓடைநீர் போல் அமைதியாக அவ்வப்போது சில சலசலப்புடன் நகரும் கதை இது.
வாசித்தால் நேசிக்க வைக்கும். பாசத்தால் யோசிக்க வைக்கும். யோசித்தால் தற்கால நடப்புகளை எண்ணி வருந்த வைக்கும். வருந்தினால் மனம் திருந்த வைக்கும். திருந்தினால் வாழ்க்கையை சிறக்க வைக்கும்.
என்று புதுமைப்பித்தன் கதைகள் என்ற நூலில் இருந்து நான் படித்த செல்லம்மாள் என்ற கதையை பற்றிய என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளேன். படித்து பிடித்திருந்தால் பகிர்ந்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்வது உங்கள் சகோதரி நா. பார்வதி.
பலர் பலவிதமாக முகநூல் பற்றி தொடர்ந்து எழுதி /விவாதித்து / கருத்து தெரிவித்து வருகிறார்கள். முகநூல் பழக்கத்தால் பலர் வாழ்க்கையே மாறியுள்ளது என்றும், பலருக்கு தொழில் அபிவிருத்தி அடைந்திருக்கிறது என்றும், இதனால் சிலர் வாழ்க்கை வீணாகிறது என்றும் பல வகையான பதிவுகளை நாம் வாசிக்க நேர்கிறோம். அவை அனைத்தும் அவரவர் கோணத்தில் இருந்து பார்க்கும் போதும் சரி, படிக்கும் போதும் சரி நூறு சதவீதம் உண்மையாக தோன்றலாம். நியாயமாகவும் தோன்றலாம். நன்மையும் தீமையும் கலந்தது வாழ்க்கை மட்டுமல்ல முகநூலும் / சமூக ஊடகங்கள் அனைத்தும் தான். பிரித்தறிய தெரிந்தால் வாழ்க்கையும் முகநூலும் /சமூக ஊடகங்களும் சிறப்பானதாகவே அமையும். ஏன் நான் வாழ்க்கையையும் முகநூலையும் இணைத்து எழுதியுள்ளேன் என்பது உலகறிந்த விஷயம்!
அது ஒரு புறம் இருக்கட்டும். இப்போது இருக்கும் பல முகநூல் குழுமத்தில் ஏதாவது ஒரு தலைப்புக் கொடுத்து அதை ஒட்டி எழுதச் சொல்வது அல்லது ஏதாவது ஒரு கேள்வி கேட்டு அதற்கு விடையளிக்க சொல்வது மற்றும் சினிமா/ சினிமா பாடல்கள் பற்றிய பல போட்டிகள் என களைகட்டி வருகிறது.
அதில் பலர் கலந்துக் கொண்டு பல பதில்களை அளித்து உற்சாகத்தோடு பங்கேற்கிறார்கள். ஆனால் ஒரு குழுவில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு வெகு சிலரே பதிலளித்துள்ளனர். ஏன் இதற்கு சிலர் மட்டும் பதிலளித்துள்ளனர்? என்ற கேள்வியை என் மனம் என்னிடம் கேட்டது.
மேலும் ஒருவர் அவரை நினைத்து அவரே பெருமை பட்டுக்கொண்ட தருணங்கள் /விஷயங்கள் என்று பலருக்கு பல இருக்கலாம். அவ்வாறு ஒருவர் அவரைப் பற்றியே பெருமை பட்டுக்கொள்வது சரியா? இல்லை தவறா? என்ற கேள்வி ஒரு குழுவில் “உங்களை நினைத்து நீங்களே பெருமைப்படும் ஒரு விஷயம் என்ன?” என்று கேட்டபோது என் மனதில் எழுந்தது. இதில் என்ன தவறு. நம் பெருமை நமக்கு அறியா விடில் பின் எவர் அறிவார் என்ற பதிலும் பட்டென உதித்தது.
நாம் செய்யும் ஒரு நற்செயல் அல்லது நாம் உரைக்கும் நற்சொல் நமக்கு ஒரு வகையான புத்துணர்ச்சி அளிக்கும். ஏதோ ஒரு உத்வேகம் தரும். இன்னும் இதே போல் நிறைய செய்ய வேண்டும் அல்லது பேச வேண்டுமென்று தோன்ற வைக்கும். தீயது மட்டும் போதை அல்ல நல்லதை செய்வதும்/நல்லவர்களாக இருப்பதும் ஒரு வகையான போதை தான். அதை நம் வாழ்வில் ஒரு முறை கடைப்பிடித்து விட்டால் அதன் பின் அது நம்மை தொடர்ந்து செய்ய தூண்டும் என்பது எனது கருத்து. இவ்வகையான போதை நம்மை மேம்படுத்துவதோடு நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. அதுவே நல்லவற்றின் நற்பண்பு. மற்றவர்களுக்கு உதவி செய்யவும், மற்றவர்களை உயர்த்திப் பேசவும் தயக்கம் காட்டாத நாம்! (அதனைச் செய்யாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களை விட்டுவிடுவோம்) ஏன் நமக்காக நாமே ஒரு விஷயத்தை செய்து கொள்வதற்கோ அல்லது நம்மை பற்றி நாமே உயர்வாக நினைப்பதற்கோ அல்லது பேசுவதற்கோ மட்டும் அடுத்தவர்களிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்கின்றோம்! ஏனென்றால் அப்படி செய்தாலோ / பேசினாலோ நாலு பேர் நம்மை பற்றி என்ன சொல்லி விடுவார்களோ! நம்மைப் பற்றி அந்த நாலு பேர் தவறாக நினைத்து விடுவார்களோ போன்ற எண்ணங்கள் தான் நம்மை பற்றி நாமே சொல்லிக் கொள்ள விடாமல் தடுத்து விடுகிறது.
அப்படியே பேசி விட்டாலோ அல்லது எழுதி பதிவிட்டாலோ உடனே தற்பெருமை என்று சிலர் கூற வாய்ப்புகள் நிறைய இருக்கிறது (பல முகநூல் பக்கங்களில் எழுதப்படும் பின்னூட்டங்களை படித்த அனுபவம்). அவர்களை சொல்லி தவறில்லை. ஆனால் ஒருவரின் அருமை பெருமைகளை அவரவரே தெரிந்து வைத்து கொள்வதால் நம்மை நாமே அறிந்துக் கொள்வதற்கும், அதை எண்ணி மனமகிழ்வதற்குமான ஓர் நல்வாய்ப்பாகும் என்பதை மறுக்கலாகாது. நம்மை பற்றி நாம் பெருமை படக்கூடிய விஷயங்களை நாமே அறிந்து வைத்துக் கொள்ளாமல் இருந்தால் எப்படி மற்றவர்கள் நம்மை பெருமை படுத்த வேண்டுமென்று நாம் எதிர்பார்க்க முடியும்!
ஒரு வேலைக்கான நேர்காணலில் உங்களை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டால் அவர் சொல்வார்… இல்லை இவர் சொல்வார்… அல்லது எனது அருமை பெருமைகளை என் நண்பனை வைத்து கூற வைக்கிறேன் என்ற பதில் உரைத்தால் வேலை கிடைக்குமா? அப்போது அந்த நாலு பேரை பற்றிய சிந்தனை ஏதுமின்றி கடகடவென நம்மைப் பற்றி நாமே பேசுவதில்லையா என்ன?
பெண்ணாக பிறந்ததற்கு எனக்குள் எப்போதுமே ஒரு பெருமை உண்டு. ஏதோ முன்பொரு ஜென்மத்தில் மாதவம் செய்ததால் கிடைத்த இந்த பிறப்பை எண்ணி பெருமை கொள்ளாமல் எப்படி இருப்பது! பொறந்தாலும் பொம்பிளையா பொறக்கக்கூடாது…அப்படின்னு எல்லாம் நான் பாடியதும் இல்லை இனி பாட போவதும் இல்லை.
நல்லதை தட்டிக்கொடுத்து வளர்த்து, தீயதை தட்டி வைத்து ரூல்ஸ் ராமானுஜி /ஸ்ட்ரிக்ட் சிந்தாமணி (சிலர் கடுப்பில்/ சிலர் எரிச்சலில் / வெகு சிலரே ஆத்மார்த்தமாக கூறுவர்) என்ற பெயர் பெற்றதில்/பெறுவதில் எனக்கு பெருமை தான். வழவழ கொழ கொழ என்றெல்லாம் பேசியதில்லை அவ்வாறு பேசவும் வராது. முகஸ்துதி பாடி பழக்கமில்லை. புறம் பேசுதல் அறவே பிடிக்காது. அதனாலேயே என்னிடம் பேச ஒன்றுமிருக்காது என்று பல பேர் நெருங்கி பழக மாட்டார்கள். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை மாறாக நான் வித்யாசமானவள் என்ற எண்ணம் தான் எனக்குள் தோன்றும். அதில் தவறென்ன இருக்கிறது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு என்னுடன் பொது விஷயங்கள் பேசுபவர்களோடு மட்டும் பேசி மகிழ்வேன்.
உள்ளதை உள்ளபடி சொல்வதில் சங்கடம் ஆயிரம் இருப்பினும் அப்படி சொல்லிவிட்டால் பிற்காலத்தில் பல சந்தர்ப்பங்களில் அவற்றை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை என்பதை பொய்யுரைக்கும் பலர் அறிந்திராத ரகசியம் என்றே சொல்ல வேண்டும்.
நம்மால் முடிந்த உதவியை செய்து வருவதையும், நல்லதை நாம் செய்தால் நம்மை நாமே தட்டிக் கொடுத்துக் கொள்வதையும், தவறிழைத்தால் (நாம் மனிதப்பிறவி தானே) எவ்வித கூச்சம் /கர்வம்/ தயக்கம் இன்றி அது யாராக இருந்தாலும் (வயதில் சிறியவராக இருந்தாலும்) மன்னிப்பு கேட்பதையும், நாம் நாமாக இருப்பதையும், வெற்றியையும் தோல்வியையும் சமமாக பாவித்து நடந்துக் கொள்வதையும், நமது பொறுமையையும் (இதெல்லாம் மனிதர்களிடமிருந்து மெல்ல மாய்ந்துக் கொண்டிருக்கும் நற்குணங்கள்) எண்ணி நம்மை நாமே ஏன் பெருமையாக எண்ணிக் கொள்ளக்கூடாது!
ஏனெனில் நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்வில் பல தோல்விகள், வெற்றிகள், துரோகங்கள் என கடந்து வந்து இருப்போம் இல்லையா! அப்படி கடந்து வந்த சிலவற்றை/ சிலரை பல முறை பொறுத்து கடந்து சென்றும் இருப்போம். நாட்டுக்கே எல்லை கோடு வகுத்து வைத்திருக்கும் போது நமது பொறுமைக்கும் எல்லை வகுத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை. அதை ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது யாராவது ஒருவர் தாண்ட நேர்ந்தால் அதன் பின் அந்த நிகழ்வு அல்லது அந்த மனிதரிடம் இருந்து எவ்வளவு விலகி நிற்க முடியுமோ அவ்வளவு மெல்ல விலகி சென்று விடுவதே நல்லது என்பது தான் எனது பாலிசி.
என்னைப் பொறுத்தவரை முதல் முறை செய்தால் அறியாமை, இரண்டாம் முறை செய்தால் தவறு, மூன்றாவது முறையும் அதையே செய்தால்/சொன்னால் அது தவறுக்கும் மேலே (வேண்டுமென்றே செய்வது). இது உண்மையா இல்லையா?
அவ்வாறு பிரச்சினை வேண்டாம் என்று ஒதுங்கி செல்பவர்கள் பலரின் விமர்சனங்களுக்கு ஆளாவார்கள். அப்படி இருந்தால் நமக்கென நாலு பேர் இருக்க மாட்டார்கள் என்றும், நாம் தனித்து விடப்படுவோம் என்றெல்லாம் கூற பலர் இருப்பார்கள்.
அவ்வாறு சொல்பவர்களில் பலர் தனக்கென தனித் திறமையும், சிந்தனையும், கருத்தும் இருந்தாலும் ஒரு கொடி போல் அடுத்தவரை சார்ந்தே (அந்த நாலு பேருக்காக) அனைத்தையும் செய்வதால் தனி மரமாக வளர முடியாது கொடி போல் தனக்கு தேவையானவர்கள் மீது தொத்திக் கொண்டு படர்வதோடு, தனித்திருக்கும் மரத்தின் மீதும் படர்ந்து அதை வேரோடு சாய்க்க முயல்வர். அத்தகையோர் சொல்லை நாம் என்றுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
மேலும், யார் அந்த நாலு பேர்? நல்லது செய்தால் /பிரச்சினையை தவிர்க்க ஒதுங்கி செல்வதால் தனித்து விடப்படுவோமெனில் நான் தனித்து பயணிக்கவே விரும்புவேன். நீங்கள் எப்படி என்று பின்னூட்டம் இடுங்கள்?
“துஷ்டனைக் கண்டால் தூர விலகு” என்று நம் முன்னோர் கூறிய காலத்தில் துஷ்டர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்துள்ளனர். ஆனால் இப்போது!!!
நமது நல்ல குணங்கள் என நாம் பெருமைப்பட்டுக் கொள்வது நம்மை நாமே ஓரளவு அறிந்து வைத்துக் கொண்டுள்ளதற்கான சான்றாக தான் நான் கருதுகிறேன். இதில் தவறேதும் இருப்பின் நம்மைப் படைத்த அந்த கடவுள்/ நம்மைப் பெற்றெடுத்த நம் தாய் தந்தை/ நாம் பெற்ற நம் பிள்ளைகள்/ காலநேரம் / நம்மைச் சுற்றியுள்ள நல்லுள்ளங்கள் உணர்த்தினால் அல்லது எடுத்துரைத்தால் அவற்றை மறுபரிசீலனை செய்து இன்னும் நம்மை பற்றி நாம் அறிந்துக் கொண்டு, நம்மை நாம் நல்வழியில் செதுக்கிக் கொள்வோம்! நம்மை நினைத்து நாமே பெருமை பட வேண்டிய பட்டியலில் இணைத்தும் கொள்வோம்.😊
இவ்வாறு நாம் ஒவ்வொருவரும் அவரவரிடம் இருக்கக்கூடிய நல்லதை எண்ணி மார்தட்டிக் கொண்டும், தீயதை மாற்றி கொண்டும், நம்மை நாமே நல்வழி படுத்திக்கொண்டால் நம் வீடும் நாடும் சிறந்து விளங்கும். நம் வாழ்க்கை நம் கையில்.🙏
“women empowerment” என்ற இந்த இரு சொற்கள் சமீப காலமாக எல்லா மேடைகளிலும், நிகழ்வுகளிலும் சந்திப்புகளிலும் பலரால் பேசப்படும் ஒன்று. அப்படியென்றால் என்ன? அதாவது மகளீரை சமுதாய மற்றும் பொருளாதார அடிப்படையில் மேம்படுத்துதல் என்று கூறி வருகிறார்கள். மகளீரை மேம்படுத்தவோ இல்லை அவர்களுக்கான மதிப்பு மரியாதையை அளிக்கவோ மற்றவர்கள் யார்? இல்லை அவற்றை ஏன் மகளீர் கேட்டு பெறவேண்டும்? மேடைகளில் பேசி பெற வேண்டும்? ஒரு பெண் தான் நடந்துக்கொள்ளும் விதத்திலும் பேசி பழகும் விதத்திலும் அவளுக்கு உண்டான மதிப்பும் மரியாதையும் பெற வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அவ்விடமிருந்து விலகி நிற்கும் தைரியமும் துணிச்சலும் வேண்டும்.
ஐந்து பெண்கள் கொண்ட குழு ஒன்றில் இந்த தலைப்பு பேசப்பட்டது. அதிலிருந்த பெண்கள் அனைவரும் ஒரு பெண்ணுக்கு பொருளாதார சுதந்திரம் வேண்டுமென்றும் அது இருந்தால் அவள் எதையும் சாதிக்கலாம் என்றெல்லாம் பேசினார்கள். அதே போல வேறொரு நிகழ்வில் எழுத்தாளர் மற்றும் சமூக சேவகி ஒருவர் இதை போலவே எந்த பெண்ணும் நாலு காசு சம்பாதித்தால் அவளுக்கு அவள் வீட்டிலும் வெளியேவும் கிடைக்கும் மரியாதையே தனி என்றார். அதை கேட்டதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. (அப்படியெனில் அவர்கள் யாரும் அவரவர் குடும்பத்தில் படிக்காத அம்மாக்களையோ அல்லது பெரியம்மாக்களையோ மதித்ததில்லையா!!) என்னது!! என்று எழுந்து கேட்க தோன்றியது. சபை நாகரீகம் கருதி ஏதும் பேசாது எழுந்து அவ்விடத்திலிருந்து வெளியேறினேன். எத்தனை எத்தனை பெண்கள் சுயதொழில் செய்தும், அலுவலகங்களில், பள்ளிகளில், கல்லூரிகளில் எல்லாம் பணிபுரிகிறார்கள். அவர்கள் அத்துனை பேரும் empowered women என்று கூறிவிட முடியுமா? மேலும் ஒரு பெண்மணி கூறுகிறார் “ஒரு பெண் சம்பாதிக்க ஆரம்பித்தால் அவள் எதற்கும் கணவனிடமோ தந்தையிடமோ நிற்க தேவையில்லை”. நல்லது. ஆனால் அவர்கள் யார்? நம் குடும்பத்தினர் தானே. நாம் வேறு எவரோ மூன்றாம் மனிதர்களிடமா கேட்கிறோம்?
இன்னொரு பெண்மணி கூறுகிறார், உலகத்திலேயே பிள்ளையைப் பெற்று வளர்ப்பது என்பது மிக சுலபமான வேலையாம் அதை விட கடினமானது பணம் சம்பாதிப்பதும் அதை சேமிப்பதுமாம். ஒரு பெண்ணுக்கு சம்பாதியம் இருந்தால் போதுமாம். அவளால் எதையும் சாதிக்க முடியுமாம். அடுத்து வளர்ந்து வரும் பெண் குழந்தைகளிடம், தானே சம்பாதித்து எதற்கும் யாரிடமும் நிற்க கூடாதென்று கற்றுக்கொடுக்க வேண்டுமாம். நல்லது தான். அதை ஏன் பணத்துடன் ஒப்பிட்டு சொல்லிக் குடுக்க வேண்டும்? பெற்றோர்களாகிய நாம் நமது அன்றாட வாழ்க்கையில் எதற்கும் எவரிடமும் சென்று உதவி கேட்டு நிற்காது வாழ்க்கையை வாழ்ந்து வந்தோமே என்றால் அதை நம் பிள்ளைகள் பார்த்து அவர்களாகவே கற்றுக்கொள்ள போகிறார்கள். இதற்கு, நீ சம்பாதித்து யாரிடமும் நிற்காதே என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே! கேட்கவும் கூட்டத்தோடு கூட்டமாக கைத்தட்டவும் ஆட்கள் இருக்கும் வரை இது போன்றோர் பேச்சுக்கு மௌசு இருக்க தான் செய்யும்.
நான் சம்பாதிக்கிறேன் இது என்னுடையது நீ சம்பாதிக்கிறாய் அது உன்னுடையதும் என்னுடயதும். நான் எங்கு வேண்டுமானாலும் சென்று வருவேன் அது என் சுதந்திரம் அதில் நீ தலையிடக்கூடாது ஆனால் நீ எங்கு செல்வதாக இருந்தாலும் என்னிடம் கூறவேண்டும். நம் பிள்ளைகளை வாரத்தில் மூன்று நாட்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் இரண்டு நாட்கள் நீ பார்த்துக் கொள்ள வேண்டும் ஏனெனில் நான் வேலைக்கு போகிறேன். சமையலை நீ பார்த்துக் கொள் ஏனெனில் நான் வேலைக்கு போகிறேன் என்றெல்லாம் பெண்கள் சுதந்திரம் என்ற போர்வையில் அவர்களின் பொறுப்புகளில் இருந்து அவர்கள் தப்பிப்பதற்கு கூறும் காரணங்களாக தான் தோன்றுகிறது. ஏனெனில் அந்த காலத்திலும் பெண்கள் பலர் வேலைகளுக்கு சென்று வந்துள்ளனர். தம்பதிகள் பலர் ஒருவரையொருவர் புரிந்துக் கொண்டு குடும்ப ஒற்றுமைக்காக வளைந்துக் கொடுத்து (ஆணும் சரி பெண்ணும் சரி) வாழ்க்கை என்னும் சாகரத்தை கடந்து வந்துள்ளனர். (நடிகை, பேச்சாளர், பாடகி ரேவதி சங்கரன் அவர்களின் பேட்டியை பார்த்தால் புரியும்) இந்த காலகட்டத்தில் ஆண் பெண் இருவரும் சம்பாதித்தாக வேண்டுமென்பது காலத்தின் கட்டாயமாகி விட்டது என்பது எவராலும் மறுக்க முடியாத ஒன்றாகும். ஆனால் பணமிருந்தால் படைபலம் வரும் என்ற தவறான நம்பிக்கையை அடுத்த சந்ததியினரிடம் விதைக்காதிருங்கள். நல்ல குணமிருந்தால் மன நிம்மதியுடன் அமைதியான அழகான வாழ்க்கையை வாழலாம் என்றவிதையை தூவுங்கள், அவை வளமான செடி, மரங்களாகி மானிடம் உயிர்ப்பித்திருக்க ஏதுவாக இருக்கட்டும்.
ஆக பணம் அல்லது பொருளாதார சுதந்திரமிருந்தால் மட்டும் ஒரு பெண் அதிகாரம் பெற்றவள் அல்லது சக்தி பெற்றவளாகி விடுவாள் என்பது என்னை பொறுத்தவரை தவறான கருத்தாகும்.
இன்னொரு கூட்டத்தில் வெளிநாட்டில் ஒரு பணியில் இருக்கும் இந்திய பெண் கூறுவதாவது, நாம் எங்கு பணி புரிகிறோம் எந்த ஊரில் இருக்கிறோம் என்பதற்கு ஏற்றார் போல் உடையணிந்துக் கொள்ள வேண்டுமாம் இல்லையென்றால் நாம் ஒதுக்கி வைக்கப்படுவோமாம். இது என்ன அபத்தம். (குளிர், வெயில் அல்லது பனி பிரதேசத்துக்கு ஏற்றார் போல் உடை அணிந்து கொள்ள வேண்டும் என்றால் அதில் ஒரு அர்த்தம் உள்ளது) முதலில் நாம் நமது தேசிய உடைகளை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். நமக்கு அதன் அருமை பெருமை அறிந்திருக்க வேண்டும். நமக்கு நம்மீதும் நமது திறமை மீதும் நம்பிக்கை இருந்தால் உடை என்பது எப்போதுமே தடையாகாது. சில தருணங்களில் தடையாக மற்றவர் பார்வையில் தோன்றினாலும் அதை தகர்த்தெறிய வேண்டியது நாம் தான். நமது செயல் தான். ஒரு மேல் நாட்டு பெண் நம் நாட்டின் ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் சில காலம் பணிப்புரிய வந்தாலும் அவர் என்றுமே நமது நாட்டு உடையை அணிந்து அலுவலகம் வருவதில்லையே!! அது ஏன்? அதை ஏன் நம் மக்கள் (குறிப்பாக பெண்கள்) விமர்சிப்பதில்லை. அவர்கள் பணி நிமித்தம் வந்திருப்பதோ இந்தியா! அப்படி இருந்தும் அவர்கள் ஏன் புடவையோ அல்லது சல்வாரோ அணிவதில்லை. ஆனால் நமது இந்திய பெண்கள் வெளிநாடுகளில் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதென்றாலே ஏதோ அவர்கள் பொறந்து வளர்ந்ததே அந்நாட்டில் தான் என்பதைப் போல உடை அணிந்துக் கொள்வார்கள். ஏன் வெளிநாடு வரை செல்ல வேண்டும் நமது இந்தியாவிலேயே இது தானே நடந்து வருகிறது. புடவையோ, சல்வாரோ அல்லது சுடிதாரோ அணிந்து செல்வதனால் எவ்விதத்திலும் நாம் எவருக்கும் குறைந்தவர்களாக போவதில்லை. உடை என்பது அவரவர் விருப்பம் என்றெல்லாம் கொடிப்பிடிப்போரே!!! அதை யாரும் மறுக்கவில்லை ஆனால் அதே நேரம் நமது நாட்டு உடைகள் அணிபவர்களை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை ஏளனமாக பார்ப்பதை தவிர்க்கலாமே!
ஆக women empowerment என்பது நாம் அணியும் ஆடைகளில் இல்லை. நாம் எவ்வித உடை அணிந்தாலும் அது எதற்கும் தடையாக இருக்க போவதும் இல்லை.
பெண்கள் கேட்டு பெறுவதில்லை “Women Empowerment” அவளுக்கென அவளே உருவாக்கி அல்லது செதுக்கிக் கொள்ளும் திறன்.
உன்னையும் என்னையும் இந்த பூமிக்கு கொண்டுவந்தவளே பெண் தானடா. பின் அவளுக்கு அதிகாரம் கொடுப்பதற்கோ, மறுப்பதற்கோ இல்லை தட்டிப் பறிப்பதற்கோ நீ யாராடா.
பெண்ணே உன்னால் ஒரு உயிரை இந்த உலகிற்கு அளிக்க முடியுமெனில் உன்னால் இது/அது முடியாதென்பவர் மூடர்களே!
உனக்கான அதிகாரத்தை ஏன் வெளியில் தேடுகிறாய்? ஏன் மேடையில் முழக்கமிட்டு செவிடர்கள் காதில் சங்கு ஊதுவதைப் போல் உன் ஆற்றலை வீணடிக்கிறாய்? பெண்ணே உனக்கான அதிகாரம், சுதந்திரம் எதுவாக இருந்தாலும் அதை இந்த சமுதாயமோ பொருளாதாராமோ தந்துவிடாது. எனவே பெண்ணே தைரியத்தை வளர்த்துக் கொள். உனது எண்ணத்தை உரக்க சொல்ல பழகி கொள்.
தவராக இருந்தால் திருத்திக் கொள் இல்லையேல் மனத் திருப்த்திக் கொள்.
நமக்கு நாமே, உனக்கு நீயே என்ற நிதர்சனத்தை ஏற்றுக் கொள். நீயே உனக்கான உனது முதுகெலும்பாவாய். எனவே பெண் விடுதலை, பெண் சுதந்திரம் என்ற ஓட்டத்தில் உனது குடும்பத்தினரை விட்டுவிடாதே/தொலைத்து விடாதே. ஏனெனில் அவர்களும் முதுகெலும்பான உன்னை சேர்த்துப் பிடித்து நிமிர்த்த உதவும் சிறிய எலும்புகளாவார்கள் என்பதை நீ மறந்து விடாதே.
பெண் சக்தி என்பது இவை அனைத்தும் ஒருசேர இருப்பதே. எனவே தனித்தனியாக பிரித்து அதில் எனக்கு அதிகாரம்/சுதந்திரம் வேண்டும், இதில் வேண்டுமென்றெல்லாம் எவரிடமும் கேட்காதே.
உன்னை நீயே குறைத்து மதிப்பிடாதே. நமது பண்பு, குணம், கலாச்சாரம், அன்பு, பாசம், அக்கறை, தைரியம், மனோபலம் ஆகியவற்றை பெண் அதிகாரம்/சுதந்திரம் வேண்டி தொலைத்து விடாதே. இவ்வுலகில் சுதந்திர தேவிக்கு தான் சிலை உள்ளது எந்த சுதந்திர தேவனுக்கும் இல்லை என்பதை மறந்து விடாதே! உனது சுதந்திரம் (அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி) அடுத்தவருக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்தலாகாது என்பதை மட்டும் நினைவில் கொள். உனக்கே உரித்தான உனது பெண்மை என்ற சிறகுளை விரித்துடு, பறந்திடு.
RTA வில் இருந்து வந்த குறுஞ்செய்தியை திறந்து பார்த்தேன். அதில் நான் எட்டாம் தேதி பதிவு செய்திருந்த ரோட் டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகவும். அந்த டெஸ்ட்டை மார்ச் 13 ஆம் தேதி எடுக்கும் படியும் இருந்தது. அதைப் பார்த்ததும் “அச்சச்சோ அதுக்கு இன்னும் அஞ்சு நாளு இருக்கே! அதுக்குள்ள எல்லாத்தையும் மறந்துட்டேன்னா!!!என்று எண்ணி அதற்கு முன்னதாக ஏதாவது டேட் கிடைக்கிறதா என்று பார்ப்போம் என்று கூறிக்கொண்டே வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்தேன். விவரத்தை கூறி ஏன் எனது பரீட்சை தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று முதலில் கேட்டேன். அதற்கு அந்த பக்கமிருந்த பெண்மணி ஏதோ RTA வில் சிஸ்டம் இஷுஸ் என்று கூற…சரி என்னவோ இருக்கட்டும், எனக்கு 13 ஆம் தேதிக்கு முன்னாடி ஏதாவது ஸ்லாட் கிடைக்குமா என்று கேட்க அனைத்து ஸ்லாட்டுகளும் ஃபுல் என்றும் வேண்டுமெனில் அதற்கு அடுத்த ஸ்லாட்டான பதினாறாம் தேதி பதிவு செய்துக் கொள்லாம் என்று கூறினாள். அதை கேட்டதும் வேக வேகமாக “இல்லை இல்லை பதிமூன்றாம் தேதியை இருக்கட்டும். பரவாயில்லை. தாங்க்ஸ்” என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டு கணவரை பார்த்தேன். அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவர். “பரவாயில்லை அதெல்லாம் ஒண்ணும் மறக்க மாட்ட. சைக்கிள், சுவிம்மிங், கார் இதெல்லாம் ஒரு தடவ காத்துண்டா எப்போதும் மறக்காது. ஸோ ஜஸ்ட் சில்” என்று கூறி சென்றார். வேற என்ன பண்ணுவது? பதிமூன்றாம் தேதிக்கு காத்திருந்தேன்.
மார்ச் பதிமூன்றாம் தேதி வந்தது. இம்முறை பரீட்சை காலை எட்டு மணிக்கு பதிவாகி இருந்தது. இந்த தடவை வேறு ஒரு முக்கியமான கால் இருப்பதால் என் கணவர் வரவில்லை. என் மகன் தான் அவரின் காரில் அழைத்துச் சென்றார். நான் ஏழரை மணிக்கெல்லாம் பெண்களுக்கான காத்திருப்பு அறையில் சென்று அமர்ந்தேன். மணி எட்டு ஆனது. மகனிடமிருந்து ஒரு மெஸேஜ் வந்தது. டெஸ்ட் ஸ்டார்ட்டட்டா? என்று. அதற்கு நான் இன்னும் இல்லை காத்துக் கொண்டிருக்கிறேன் என்று பதிலளித்தேன். உடனே “நோ டென்ஷன். கம் அவுட் வித் லைசென்ஸ். ஆல் தி பெஸ்ட்” என்று மீண்டும் ஒரு மெஸேஜ் அனுப்பினார். நானும் “தாங்க்ஸ். வில் டூ மை பெஸ்ட்” என்று டைப் செய்து அனுப்பியதும் என் பெயரை அழைத்தார் அரபு நாட்டு பெண் ஆய்வாளர். உடனே எழுந்து “எஸ்” என்று கூறினேன். அன்று போலவே இன்னும் இருவர் பெயர்களை அழைத்தார். ஆனால் மூவரில் இருவர் மட்டுமே இருந்தோம். அந்த ஆய்வாளர் மூன்றாவது நபருக்காக காத்திருக்காது எங்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு கார் பார்க்கிங்கிற்குள் சென்றார்.
அங்கே போனதும் என்னுடன் வந்திருந்த பெண்மணியை முதலில் காரை ஓட்ட சொன்னார். என்னை இரண்டாவதாக ஓட்டச் சொன்னார். அதை கேட்டதும் அப்பாடா! என்று எனக்கு இருந்தது. அந்த பெண் முதலில் காரில் ஏறியதும் சில மணி துளிகள் ஆய்வாளர் அவரிடம் மிகவும் சகஜமாக பேச்சுக் கொடுத்தார். பிறகு காரை வெளியே எடுக்க சொன்னார். அந்த பெண்ணும் நிதானமாக காரை வெளியே எடுத்து ஓட்டத் துவங்கினாள். அவரை உள் சாலைகளில் எல்லாம் ஒரு பத்து நிமிடங்கள் ஓட்ட வைத்துவிட்டு காரை ஓரமாக நிப்பாட்ட சொன்னார். பின் நெக்ஸ்ட் என்று கூறியதும். அந்த பெண் பின்னால் வந்து அமர நான் முன்னால் டிரைவர் சீட்டில் அமர்ந்து செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை செய்து கொண்டிருக்கையில் ஆய்வாளர் என்னிடம் நான் அணிந்திருந்த டிரஸ் நன்றாக இருப்பதாகவும் அதை எங்கு வாங்கினேன் என்றும் கேட்டார். நானும் இந்தியாவில் வாங்கினேன் என்று பதில் கூற, அவரோ வாவ். இட்ஸ் வெரி நைஸ் டாப்ஸ் என்று கூறி வண்டியை எடுக்க சொன்னார். அவருடனான அந்த சில மணித் துளி உரையாடல் என் பதற்றத்தை குறைத்தது. அதற்காக தான் அவர் பேச்சுக் கொடுத்தாரோ என்னவோ!!
அதன் பின் வண்டியை எடுத்தேன். உள் சாலைகளில் சற்று நேரம் இடது வலது என்று திருப்பி திருப்பி ஓட்ட வைத்தவர் நேராக பிரதான சாலையில் சென்று இணையும் படி கூறினார். நானும் வகுப்பில் கற்றுக் கொண்டது போலவே ஓட்டினேன். அறுபது ஸ்பீடில் ஓட்டிக் கொண்டிருந்த என்னிடம் சட்டென ரைட் லேனுக்கு மாறும் படி கூறினார் ஆய்வாளர். நானும் மாறினேன். பின் ரைட் கட் எடுத்து பிரதான சாலையில் இருந்து உள் வழி சாலைக்கு போக சொன்னார். போனேன். பத்து நிமிடங்கள் ஓட்டி முடித்ததும் கடைசியில் “டேக் ரைட் ப்ளீஸ்” என்றார், பார்த்தால் எங்கிருந்து புறப்பட்டோமோ அதே இன்ஸ்டிடியூட் வாசலில் வந்து விட்டோம். காரை எடுத்த இடத்தில் கொண்டு போய் நிப்பாட்டும்படி சொன்னார். நானும் நிப்பாட்டினேன்.
வண்டியை நிப்பாட்டியதும் அவர் எங்கள் இருவரையும் பார்த்து “நீங்கள் இருவரும் நன்றாக ஓட்டினீர்கள். தவறுகள் எதுவும் இழைக்காததால் இருவருமே பாஸ். முதல் தளத்திற்கு சென்று உங்கள் லைசென்ஸை பெற்றுக் கொள்ளுங்கள்”
என்று கூறினார். அதைக் கேட்டதும் நாங்கள் இருவருமே மகிழ்ச்சியில் அந்த ஆய்வாளருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டதோடு நாங்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டோம். பின் அங்கிருந்து நேராக என் மகன் அமர்ந்திருந்த வரவேற்பு அறைக்கு சென்று
“ஆதி! அம்மா பாஸ் ஆயிட்டேன்”
என்று கூறி கட்டிக்கொண்டேன் அவரும்
“வாழ்த்துக்கள் மா”
என்று என்னை தட்டிக் கொடுத்தார். பின் இருவரும் முதல் தளத்திற்கு சென்று கட்ட வேண்டிய பணத்தை செலுத்தியதும் “நியூ டிரைவர்” என்ற ஸ்டிக்கரை என் கையில் தந்து, ஒரு டோக்கனையும் தந்து அமர்ந்திருக்கும் படி கூறினர். நாங்களும் அமர்ந்திருந்தோம். அப்போது என் கணவருக்கு ஒரு மெஸேஜ் அனுப்பி நான் பாஸ் ஆனதை தெரிவித்தேன். சற்று நேரமானதும் எனது டோக்கன் நம்பர் பளிச்சிட்டது. உடனே சென்று எனது அடையாள அட்டையை கொடுத்தேன். சில நொடிகளில் என் கையில் பிரிண்ட்டரில் இருந்து சுட சுட லைசென்ஸை தந்தனர். அதை பெற்றுக் கொண்டு அதில் எனது பெயர் மற்றும் லைசென்ஸ் எக்ஸ்பிரேஷன் தேதி போன்றவற்றை சரி பார்த்து நன்றி தெரிவித்துக் கொண்டு அங்கிருந்து வெளியே வந்தேன். என் மகனிடம் லைசென்ஸை கொடுத்தேன். அவரோ அதை ஃபோட்டோ எடுத்து அவர் அப்பாவுக்கு அனுப்பி வைத்தார்.
இருவருமாக இன்ஸ்டிடியூட்டில் இருந்து வெளியே வந்தோம். என் மகன் அவரின் காரில் “நியூ டிரைவர்” ஸ்டிக்கரை ஒட்டினார். பிறகு என்னை அவரின் காரை ஓட்ட சொன்னார்.
என்று கூறி அவர் டிரைவர் சீட் பக்கத்தில் இருக்கும் இருக்கையில் அமர்ந்துக் கொண்டார். எனக்கோ தயக்கம்! ஏனெனில் எங்கள் வீடு இருபது கிலோமீட்டர் தள்ளி இருக்கிறது மேலும் துபாய் ஷேக் சாயத் ரோடு வழியாக தான் எங்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும். அந்த ரோட்டில் ஸ்பீடு லிமிட் நூற்றி இருபது. இவை எல்லாத்தையும் மனதில் அசைப்போட்டுக் கொண்டே காருக்கு வெளியே நின்றிருந்த என்னிடம் காரின் கதவை திறந்த என் மகன்,
“அம்மா உன்னால ஓட்ட முடியும்ன்னு தானே லைசென்ஸ் குடுத்திருக்கா. அப்புறம் என்னமா. வா மா ஓட்டு பயப்படாதே!”
என்றார். அவரின் வார்த்தைகள் ஒரு தெம்பு கொடுத்தது உடனே சரி என்று டிரைவர் சீட்டில் அமர்ந்தேன். வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.
அன்று வரை அதே ஷேக் சாயத் ரோட்டில் கணவர் அல்லது மகன் காரை ஓட்ட நான் அமர்ந்து சென்றது தான் அதிகம். அந்த ரோட்டில் நான் கார் ஓட்டுவேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் நடந்துக் கொண்டிருந்தது. காலையில் நாங்கள் நேராக பரீட்சைக்கு சென்றதால் பிரேக்பாஸ்ட் அருந்தவில்லை. எனவே நேராக என் மகனுக்கு மிகவும் பிடித்த பிக்கானேர் வாலா ரெஸ்டாரன்ட்டுக்கு ஓட்டிச் சென்றேன். அதை பார்த்த மகன்
“அம்மா எங்க போற?”
என்று கேட்க.
“ம்…உனக்கு ட்ரீட் தர தான். வா… வா”
என்று அவரை அழைத்துக் கொண்டு சென்று அவருக்கும் எனக்கும் பிடித்த உணவை ஆர்டர் செய்தோம். அப்போது அலுவலக காலில் இருந்த என் கணவர் அது முடிந்ததும் எங்களது மெஸேஜை பார்த்து என்னை கைப்பேசியில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருக்கு பிடித்த உணவையும் பார்சல் செய்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு நேராக வீட்டுக்கு ஓட்டிச் சென்று எங்கள் அப்பார்ட்மெண்ட் பார்க்கிங்கில் காரை பார்க் செய்தேன். பின் என் மகனிடம்
“எப்படி ஓட்டினேன்”
என்று கேட்டேன். அவரோ
“சூப்பரா ஓட்டின”
என்று கூறியதும் மனதில் மகிழ்ச்சி இரட்டிப்பானது.
இதற்கு முன் பல பரீட்சைகள் எழுதியுள்ளேன். பல போட்டிகளில் கலந்துக் கொண்டுள்ளேன். ஆனால் அப்போதெல்லாம் வராத பதற்றம் ஏன் இந்த கார் டிரைவிங் பரீட்சைகளில் வந்தது? என்று யோசித்தேன். அதன் விளைவாக ஒன்றை கற்றுக் கொண்டேன். அது என்னவென்றால் ஒரு விஷயத்தை நாம் செய்ய முற்படும்போது பலர் பலவிதமான அபிப்பிராயங்களை கூறுவர் ஆனால் அதை கேட்டுக் கொண்டு அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது இல்லை அதில் எவ்வளவு நமக்கு வேண்டியது உள்ளது என்பதை மட்டும் பிரித்தறிந்துக் கொண்டோமே என்றால் வாழ்க்கை சிறக்கும். அதை விடுத்து கேட்டது அனைத்தையும் மனதில் ஏத்திக் கொண்டோமே என்றால் குழப்பம் தான் நீடிக்கும்.
கார் டிரைவிங் லைசென்ஸ் எடுக்கப் போகிறேன் என்று சொன்னதுமே பலர் என்னிடம் அது மிகவும் கஷ்டம், அவ்வளவு எளிதில் லைசென்ஸ் கிடைத்து விடாது. பணமும் நேரமும் தான் விரயம் ஆகும், போன்ற அபிப்பிராயங்களை பகிர்ந்துக் கொண்டனர். அது அவர்கள் கடந்து வந்த பாதையாக இருக்கலாம் அல்லது அவர்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள் சொல்லி கேட்டிருக்கலாம் இல்லையா! அவற்றை பிரித்து பார்க்காது அவை அனைத்தையும் மனதிற்குள் பதிய வைத்ததால் பயம் என்னும் வேதாளம் என் மேல் தொற்றிக் கொண்டது. அதனால் பதற்றம் ஏற்பட்டது. பதற்றம் ஆனதால் பல முறை தோல்வியுற்றேன். ஆனால் விடா முயற்சியால் வெற்றியும் கண்டேன்.
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார், முயன்றால் முடியாதது என்று ஒன்றுமில்லை, முயற்சி திருவினையாக்கும் ஆகிய அனைத்து வாக்கியங்களும் என் விஷயத்தில் நிரூபணமானது.
எனக்கு இருந்த பயத்திற்கு இன்னுமொரு முக்கிய காரணம் நான் அந்த வகுப்புகளுக்கும் பரீட்சைகளுக்குமாக செலவழித்த பணம். கஷ்டப்பட்டு சம்பாதித்தது வீணாகிவிடக் கூடாதே என்ற எண்ணம் பயத்தை கொடுத்தது. பயம் பதற்றத்தை கொடுத்தது. பதற்றம் பல முறை தோல்வியுறச் செய்தது. இறுதியில் உழைத்த காசு என்றும் வீணாவதில்லை என்ற உண்மையை மீண்டும் புரிய வைத்தது.
காரணமின்றி காரியமில்லை. கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த மார்ச் மாதம் வரை நான் மேற்கொண்ட டிரைவிங் வகுப்புகள் மற்றும் பரீட்சைகள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் ஏராளம்! வாழ்க்கை நமக்கு பலவிதத்தில் பலவகையான பாடங்களை பல ரூபங்களில் கற்றுக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. அவற்றை கற்றுக் கொண்டு அதற்கேற்றார் போல் வாழ்வதும் சரி இல்லை அதற்கு மாறாக அவற்றை கற்க மறுத்து வாழ்க்கையில் வீழ்வதும் சரி அவரவர் விருப்பம்.
எனது இந்த ஓட்டுனர் உரிமம் கட்டுரையை படித்து என்னுடன் எனது வகுப்புகளிலும் பரீட்சைகளிலும் பயணித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். என் பயணம் தொடரும். உங்கள் அனைவரின் பயணங்களும் இனிதாக அமைந்திட எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.
பிப்ரவரி இருபத்தி மூன்றாம் தேதி வந்தது. அன்று மகனுக்கு கல்லூரியில் வகுப்பு இருந்ததால் அவரால் வர முடியவில்லை. கணவர் அவர் காரில் அழைத்துச் சென்றார். மதியம் 1 மணிக்கெல்லாம் சென்றுவிட்டோம். பரீட்சை 2 மணிக்கு தான். அதுவரை என்ன செய்வது என்று யோசித்தோம். கணவர் அவரின் லேப்டாப்பை திறந்து வேலையில் மூழ்கினார். நானும் சற்று என் வேலையை பார்க்கலாமென்று நினைத்து எனது லேப்டாப்பை திறந்தேன். ஆனால் மனம் முழுவதும் ரோட் டெஸ்ட்டில் மூழ்கி இருந்தது. என்னை கவனித்த என் கணவர். நீ இப்போ வேலையெல்லாம் செய்ய வேண்டாம். பேசாம அமைதியா உட்காரு போதும் என்றார். வேலையில் நாட்டம் இல்லாதிருந்த நானும் லேப்டாப்பை மூடி வைத்து விட்டு சற்று நேரம் அமைதியாக அமரலாம் என்று நினைத்து கண்களை மூடினேன். அப்ப பார்த்து நான் டிரைவிங் வகுப்புகளில் செய்த தவறுகள் ஒவ்வொன்றாக வரிசைக் கட்டிக்கொண்டு நான்… நீ என்று போட்டிப் போட்டுக்கொண்டு கண்முன் வர சட்டென கண்களை விழித்துக் கொண்டேன். கை கடிகாரத்தைப் பார்த்தேன் நேரம் ஒன்றரை என்று காட்டியது உடனே கணவரிடம் சொல்லிக்கொண்டு (போருக்கு போகும் கணவன் மனைவியிடம் சொல்லிக் கொண்டு செல்வது போல்😉) பெண்களுக்கான காத்திருப்பு அறைக்குள் சென்று அமர்ந்தேன்.
பக்கத்தில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் என்னிடம் பேச்சுக் கொடுக்க நானும் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவருடனான அந்த பேச்சு என்னை சற்று நேரம் பரீட்சை பற்றிய எண்ணத்தில் இருந்து விடுவிக்க ஏதுவாக இருந்தது. அப்போது கருப்பு நிற ஹிஜாப் அணிந்திருந்த அரபு நாட்டை சேர்ந்த அழகான பெண்மணி ஒருவர் கண்களில் கூலர்ஸுடன் உள்ளே நுழைந்தார். நுழைந்தவர் முதலில் “பார்வதி” என்று என் பெயரை அழைக்க நான் “எஸ்” என்று எழுந்து அவர் அருகே சென்றதும், அவர் இன்னும் இரண்டு பெண்களின் பெயர்களை அழைக்க அவர்களும் எழுந்து வந்ததும். எங்கள் மூவரையும் அவர் பின்னால் வரச் சொன்னார். நாங்களும் அவர் பின்னால் சென்றோம்.
RTA ரோட் டெஸ்ட்டுக்கான கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது. அங்கே சென்றதும் அவர் எங்கள் பக்கம் திரும்பி “பார்வதி நீங்கள் தான் முதலில் காரை ஓட்ட வேண்டும் அடுத்தது நீங்கள் அதுக்கு அடுத்தது நீங்கள்” என்று எங்களிடம் கூறி ஒரு வண்டியை காட்டி ஏறச் சொன்னார்.
முதலில் நானா!! என்ற எண்ணம் மனதில் தோன்றியதுமே வேதாளம் வந்து என்னை தொற்றிக் கொண்டது. காருக்குள் ஏறி அமர்ந்தேன். அப்போது அந்த அரபு நாட்டு பெண் ஆய்வாளர் எனது அடையாள அட்டையை கேட்க. நான் எனது கைப்பையில் இருந்து அதை எடுத்துக் அவரிடம் கொடுக்கும் போது எனது கை நடுங்கியது. அதை பார்த்த அந்த பெண்மணி
“டோண்ட் பி டென்ஸ்டு. டிரைவ் சேஃப். நீங்கள் தயார் என்றால் வண்டியை எடுக்கலாம்”
என்றார். நானும் வண்டியை எடுப்பதற்கு முன் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை செய்து முடித்ததும். அவர் என்னிடம்
“வெரி குட். நவ் டேக் இட் அவுட்” என்றார்.
நானும் மெல்ல வண்டியை ரிவர்ஸில் எடுத்தேன். அவசரம் ப்ளஸ் டென்ஷனில் சற்று முன்னதாகவே இடது பக்கமாக வண்டியை திருப்ப முயன்றதால் பக்கத்தில் இருக்கும் காரின் மீது இடிக்க போய்விட்டேன். உடனே அவர் என்னை சற்று நேரம் நிறுத்த சொன்னார் (அப்போதே எனக்கு எனது ரிசல்ட் தெரிந்து விட்டது). பின் என்னைப் பார்த்து “என்ன செய்கிறீர்கள்” என்று கேட்டார். நான் “சாரி” என்று கூறி மீண்டும் பார்க்கிங் உள்ளேயே சென்று பின் வெளியே எடுத்தேன். இம்முறை சரியாக எடுத்தேன். ஓட்டிச் சென்றேன். ஆனால் ஏழு நிமிடத்தில் காரை நிறுத்த சொன்னார். நானும் ரோட்டின் சாலிட் லைனை தாண்டி ஓரமாக வண்டியை நிப்பாட்டினேன். அவர் உடனே நெக்ஸ்ட் என்று கூறினார். நானும் எனது சீட் பெல்ட்டை கழற்றிவிட்டு காரில் இருந்து இறங்கி பின்னால் சென்று அமர்ந்துக் கொண்டேன். எனக்கு அடுத்ததாக வரிசையில் இருந்த பெண்மணி காரை அங்கிருந்து ஓட்ட ஆரம்பித்தார்.
பின்னால் அமர்ந்ததும் எனது கணவருக்கு கைப்பேசியில் மெஸேஜ் டைப் செய்ய ஆரம்பித்தேன். கை விரல்கள் அனைத்தும் நடு நடுங்கியது. நடுக்கத்துடனேயே “நான் நிச்சயம் இந்த ரோட் டெஸ்ட்டில் ஃபெயில் ஆகிவிடுவேன்” என்று ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினேன். அவரோ “பரவாயில்லை. பி கூல். அடுத்த தடவை பார்த்துக் கொள்ளலாம்” என்றொரு பதிலை அனுப்பினார். ஆனாலும் எனக்குள் இருந்த பதற்றம் அடங்கவில்லை. எப்படி?!! எடுத்ததும் அப்படி ஒரு தவற்றை செய்தேன் என்று என் மனம் என்னை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தது.
வண்டியில் இருந்த மூவரின் பரீட்சையும் முடிந்தது. மூன்றாவதாக காரை ஓட்டிய பெண்மணி மீண்டும் காரை இன்ஸ்டிடியூட்டிற்குள் ஓட்டி வந்து பார்க் செய்தார். அப்போது அவர் கோணலாக வண்டியை நிப்பாட்ட அதற்கு ஆய்வாளர் சரியாக நிப்பாட்டும் படி உத்தரவிட அந்த பெண் சற்று பதற்றமானாள். பின் இரண்டு முறை முயற்சித்த பின் சரியாக பார்க் செய்தாள். மூவரும் ஆய்வாளரை பார்த்தோம். அவர் நாங்கள் ஒவ்வொருவரும் செய்த தவறுகளை பட்டியலிட்டு மூவருமே ஃபெயில் என்றும், பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்து, நன்றாக பயிற்சி எடுத்துக் கொண்டு, பின் மீண்டும் முயற்சிக்கும் படி கூறிவிட்டு சென்றார். நான் வழக்கம் போல வெளியே காத்திருந்த கணவரிடம் கூற அவரோ வழக்கம் போல் அடுத்த முறை பார்த்துக் கொள் என்று கூற. மீண்டும் வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்து அடுத்த RTA ரோட் டெஸ்ட்டுக்கு டேட் எப்போது கிடைக்கும் என்று கேட்டேன். அவரோ மார்ச் 8 ஆம் தேதி இருப்பதாக கூற உடனே RTA ரோட் டெஸ்ட்டுக்கு மார்ச் 8 ஆம் தேதி பதிவு செய்தேன். அதற்கு முன் 6 மற்றும் 7 ஆம் தேதி என இரண்டு நாட்களுக்கு பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்தேன்.
ஒரு மணி நேரம் பயிற்சி வகுப்பு இரண்டு நாட்களும் சிறப்பாக நடந்தேறியது. நம்பிக்கை கூடியது. RTA ரோட் டெஸ்ட்டில் என்னென்ன செய்ய சொல்வார்களோ அத்தனையையும் செய்து காட்ட சொல்லி பயிற்சி அளித்தார் எனது பயிற்றுவிப்பாளர்.
அதாவது காரை எடுப்பதற்கு முன் செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள், உள் சாலைகளில் வேகம் நாற்பதுக்கு மேல் இருக்கக் கூடாது. பிரதான சாலைகளில் 60 அல்லது 80 என ரோட் சைனில் குறிப்பிடப்பட்டுள்ள வேகத்தை கடைபிடிக்க வேண்டும். அதற்கு மேலும் போகக்கூடாது அதைவிட கம்மியான வேகத்திலும் போகக் கூடாது. லேன் சேஞ்ச் எப்படி எப்போது செய்ய வேண்டும், அது செய்வதற்கு முன் செய்ய வேண்டியவை. வலது, இடது புறம் காரை திருப்புவது. சிக்னலில் எப்படி எப்போது நிறுத்த வேண்டும். சிக்னல் பச்சை ஆனதும் எப்போது புறப்பட வேண்டும். உள் வழி சாலையில் இருந்து பிரதான சாலைகளில் இணையும் போது செய்ய வேண்டியவை. U டர்ன் எப்படி செய்வது. ரவுண்ட் அபௌட்டில் எப்போது நுழைய வேண்டும், எந்த கோட்டிற்குள் எப்போது செல்வது. அதற்கான சிக்னல் எதை எப்போது கொடுப்பது போன்ற அனைத்தையும் பயிற்சி செய்து முடித்ததும். எனது பயிற்றுவிப்பாளர் என்னிடம்
“RTA ரோட் டெஸ்ட்டுக்கு என்று பதிவு செய்திருக்கிறீர்கள்”
என்று கேட்க நானோ
“நாளை. எட்டாம் தேதிக்கு தான் பதிவு செய்திருக்கிறேன்”
என்று கூற. அதை கேட்ட அவர்
“அப்படியா!! இருக்காதே!! உங்களுக்கு RTA வில் இருந்து ஏதாவது மெஸேஜ் வந்ததா?”
“ஆமாம். நேற்று மாலை வந்தது. எட்டாம் தேதி பரீட்சை இருக்கிறது என்று ஒரு ரிமைன்டர் மெஸேஜ் வந்தது.”
என்றேன். அவர் என்னை எதற்கும் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு சரி பார்த்துக் கொள்ளும் படி கூற
“ஏன் என்ன ஆயிற்று? பரீட்சை நடக்காதா?”
என்று பதற்றத்தில் நான் கேட்டேன். அதற்கு அவர், RTA புது ரூல் ஒன்றை அமல் படுத்தி இருப்பதாகவும். முதல் அட்டெம்ட்டில் தேர்ச்சி பெறாவிட்டால் இரண்டாவது முறை பயிற்சி வகுப்பு எடுத்த நாற்பத்தி எட்டு மணிநேரத்திற்கு பிறகு தான் ரோட் டெஸ்ட் எடுக்க முடியும் என்றும் கூறினார். அதன்படி பார்த்தால் நான் மறுநாள் அதாவது எட்டாம் தேதி பரீட்சையை எடுக்க முடியாது. ஏனெனில் எனது பயிற்சி வகுப்பு முடிந்து நாற்பத்தி எட்டு மணிநேரம் முழுமை அடைந்திருக்காது. என்ன செய்வது என்ற யோசனையில் இருந்த என்னிடம் தான் விடைப்பெற்றுக் கொள்வதாகவும் கஸ்டமர் கேருக்கு கால் செய்து பார்க்கும் படியும் கூறியவரிடம் எனது நன்றியை தெரிவித்துக் கொண்டேன். அவரும் எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு என்னை எனது வீட்டில் இறக்கி விட்டுவிட்டு சென்றார். அப்போது எனது கைபேசியை எடுத்துப் பார்த்தேன். அதில் அந்த இன்ஸ்டிடியூட்டில் இருந்து அழைப்பு வந்திருந்தது. கார் டிரைவிங் வகுப்பின் போது கைபேசியை சைலண்ட்டில் போடுவது வழக்கம். அதனால் ரிங் கேட்கவில்லை. உடனே அந்த எண்ணை அழைத்தேன். எவரும் எடுக்கவில்லை. சரி வீட்டுக்கு போன பிறகு மீண்டும் முயற்சிப்போம் என்றும், அதுவே நான் அந்த இன்ஸ்டிடியூட்டில் எடுக்கும் கடைசி பயிற்சி வகுப்பாக இருக்க வேண்டும் ஆண்டவா என்றும் எண்ணிக் கொண்டே லிஃப்ட் பொத்தானை அழுத்திவிட்டு நின்றிருந்த என் முன் லிஃப்ட்டின் கதவு திறந்தது.
வீட்டிற்கு சென்றேன். கணவரிடம் விவரத்தை விவரித்தேன். மீண்டும் ஒரு முறை வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைப்பு விடுத்து பார்க்கலாமென்று கைப்பேசியை எடுத்தேன். அப்போது RTA வில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. அதை திறந்து பார்த்தேன்.
RTA பார்க்கிங் பரீட்சையின் முதல் அட்டெம்ட்டில் தேர்ச்சி பெற முடியாது போனதும் மனம் தளர்ந்து போனது. அப்போது சட்டென நம்ம பாரதியாரோட
“துன்பம் நெருங்கி வந்த போதும் நாம் சோர்ந்துவிட லாகாது பாப்பா!”
என்ற பாட்டு மனதில் உதித்தது. உடனே தெம்பு பிறந்தது.
“மீண்டும் ஓர் முயற்சி செய்வோம் அதில் வெற்றியை மட்டுமே காண்போம்”
என்ற நம்பிக்கையுடன் அடுத்த முயற்சிக்கு பதிவு செய்தேன். வழக்கம் போல் குறித்த நாளில் (புதன்கிழமை) குறித்த நேரத்தில் (3 pm) RTA பார்க்கிங் பரீட்சை நடக்கும் வளாகத்திற்கு சென்றேன்.
இந்த தடவை உள்ளே நுழைந்ததும் அங்கே வரவேற்பு அறையில் அமர்ந்திருந்த அரபு நாட்டவர் மற்றொரு மாணவரிடம் “நீங்கள் பாஸ்” என்று கூறுவதை கேட்டுக் கொண்டே நுழைந்ததில் “நல்ல சகுனம் பார்வதி” என்று என் மனம் கூறியது எனக்கு கேட்க மனதிலும் முகத்திலும் மகிழ்ச்சி பொங்க அடையாள அட்டையை கொடுத்தேன். எனது முறைக்கு காத்திருந்தேன்.
ஏதாவது ஒன்றை நாம் மீண்டும் மீண்டும் செய்தாலோ அல்லது ஏதாவது ஒன்று மீண்டும் மீண்டும் நமக்கு நடந்தாலோ அதை நம் மனம் முதல் தடவை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அடுத்தடுத்த முறை அதுவே பழகி போய்விடுவது போல எனக்கு இந்த தோல்வி என்பது பழக்கமாகி விட்டதாலோ என்னவோ இம்முறை எந்தவித கலக்கமும் இன்றி அமர்ந்திருந்தேன்.
அன்று நிறைய நபர்கள் பரீட்சை கொடுத்துக் கொண்டிருந்தனர். நான் அமர்ந்திருந்த அந்த பதினைந்து நிமிடங்களில் மூன்று நபர்கள் பார்க்கிங் பரீட்சையில் தேர்ச்சி பெற்று சந்தோஷத்தில் துள்ளித் குதித்து சென்றனர். அதைப் பார்த்ததும் என் மனதில் “பாவம் எத்தனை முறை முயற்சித்தார்களோ!” என்று தான் எண்ண தோன்றியது. மேலும் நான் தேர்ச்சி பெற்றால் எப்படி ரியாக்ட் செய்வேன் இல்லை செய்வது என்ற யோசனையை புள்ளி கோலம் போல் வரைந்து பார்க்க முயற்சித்து நாளு புள்ளி வைப்பதற்குள் எனது பெயர் அழைக்கப்பட்டது. உடனே புள்ளிகள் அழிக்கப்பட்டது. கார் எண் 4 என்று கூறப்பட்டது. பார்க்கிங் யார்டுக்குள் செல்லும் கதவு திறக்கப்பட்டது.
அந்த கதவு வழியே பார்க்கிங் யார்டுக்குள் சென்று எனக்கான காரின் கதவை திறந்ததும் விக்ரமாதித்தன் தோளில் தொற்றிக் கொள்ளும் வேதாளம் போல் தொற்றிக் கொண்டது ஒரு வகை பயம் என்னும் வேதாளம். ஏனென்று தெரியவில்லை. வேதாளம் ஏன் தொற்றிக் கொண்டது என்று ஆராய்வதற்கெல்லாம் நேரம் இல்லாததால் அதை சுமந்து கொண்டு காரில் ஏறினேன்.
ஹில் மற்றும் கராஜ் இரண்டில் தேர்ச்சி பெறாததால் அவ்விரண்டையும் தான் செய்ய வேண்டும். அதனால் இம்முறை நிச்சயம் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையையும் சுமந்துகொண்டு நேராக ஹில் பார்க்கிங் செய்து காட்ட சென்றேன். போன முறை பீப் சப்தம் வரும் முன் நிப்பாட்டி விட்டதால் இம்முறை அந்த சப்தத்திற்காக காத்திருந்தேன் அது ஒலித்ததும் சரியாக நிப்பாட்டினேன். பின் கார் என்னிடம், அடுத்த பார்க்கிங் செய்து காட்ட செல்லும் படி கூறியதும் அங்கிருந்து அடுத்ததாக கராஜ் பார்க்கிங் செய்ய காரை ஓட்டிச் சென்றேன்.
போன முறை செய்த தவற்றை இம்முறை செய்யக்கூடாது என்ற கவனம் கூடுதலாக இருக்க, கார் எந்த கோட்டிலும் பட்டுவிடாது மெல்ல பார்க் செய்தேன். எனக்கு தெரிந்து எந்த தவறும் இம்முறை செய்யவில்லை என்ற மனத்திருப்தியில் பார்க் செய்ததும் சில நோடிகள் ஆசுவாசப்படுத்திக் கொண்டு பின் பார்க்கிங் பிரேக் போட்டேன். கார் என்னை அடுத்த பார்க்கிங்கிற்கு செல்ல உத்தரவிட்டது. அப்பாடா எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சுப்பா என்று காரை எங்கிருந்து எடுத்து ஓட்டி சென்றேனோ அங்கேயே ஓட்டி சென்று பார்க் செய்து, காரில் இருந்து இறங்கி நேராக வரவேற்பு அறைக்கு சென்றேன். அங்கிருந்த வரவேற்பாளர் என்னை காத்திருக்கும் படி சொன்னார்.
மனதில் அனைத்து கடவுள்களையும் வேண்டிக்கொண்டு அமர்ந்திருந்த என்னை அழைத்தார். எழுந்து சென்று அவர் மேஜையின் முன் நின்றேன். அவர் என்னைப் பார்த்து
“நீங்கள் நன்றாக தான் பார்க் செய்தீர்கள் ஆனால்… அந்த வீடியோவை பாருங்கள்”
என்று கூறி மீண்டும் அங்கிருந்த டிவியை பார்க்க சொன்னதும்
“போச்சுடா மறுபடியும் அவுட்டா?!!!”
என்று என் மனம் என்னிடம் கேட்க, பதற்றம் தொற்றிக் கொள்ள, வாடிய முகத்துடன் டிவியை பார்த்தேன். முதலில் ஏதாவது கோட்டில் கார் பட்டுவிட்டதா என்று தான் என் கண்கள் தேடின. ஆனால் சரியாக தான் பார்க் செய்திருந்தேன். பின்பு ஏன் அவர் ஆனால் என்று இழுத்தார்!!!! என்ற குழப்பம் முகத்தில் பளிச்சிட அவரை பார்த்தேன். அதைப் பார்த்த அவர் விளக்கமளிக்க துவங்கினார்
“நீங்கள் பார்க்கிங் சரியா செய்தீர்கள் ஆனால் ஏன் ஹேண்ட் பிரேக் போட லேட்டாச்சு? காரை பார்க் செய்ததும் ஹேண்ட் பிரேக் போட வேண்டுமல்லவா?”
அதை கேட்டதும் அதிர்ந்து போனேன். உடனே சுதாரித்துக் கொண்டு
“இல்லை… நான் எந்த கோட்டிலும் படாது பார்க் செய்த மனத்திருப்தியில் சற்று அமர்ந்து விட்டேன். அதுவும் சில நொடிகள் தான் எடுத்துக் கொண்டேன். பின் உடனே பார்க்கிங் பிரேக்கை போட்டு விட்டேனே!”
என்று விளக்கமளித்தேன். அதை கேட்டவர் சிரித்துக் கொண்டே
“ரிலாக்ஸ் மேடம். ரிலாக்ஸ். யூ ஆர் பாஸ்”
என்றார். அதை கேட்டதும் சந்தோஷத்தில் செய்வதறியாது நான் காண்பது கனவா இல்லை நிஜமா என்பது போல் சற்று நேரம் நின்றதும்
“பார்வதி நிஜம் தான் நிஜம் தான் நிஜமே தான்”
என்று திருவிளையாடல் தருமியை போல என் மனம் எனக்கு உணர்த்தியதும் முதலில் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு வேக வேகமாக வெளியே வந்து எனக்காக காத்திருந்த என் மகனிடமும் கணவரிடமும் சொல்லி மகிழ்ந்தேன். அவர்களும் அடுத்ததாக RTA ரோட் டெஸ்ட்டுக்கு உடனே பதிவு செய்ய சொன்னார்கள். ஏனெனில் அதற்கான பரீட்சை தேதி கிடைக்க காலதாமதமாகலாம்.
அவர்கள் இருவரிடமும் என்னை கடைசி நேரத்தில் தொற்றிக் கொண்ட வேதாளத்தை பற்றி கூறியதும். இருவரும் ஒன்றாக
“எதற்கு பயம் ? இட்ஸ் ஜஸ்ட் எ பார்க்கிங் டெஸ்ட் அவ்வளவு தானே.! யூ ஆர் டேக்கிங் இட் டூ சீரியஸ். தேவையே இல்லை. அதுவும் நீ இந்தியால கார் ஓட்டி இருக்க வேற!! அப்புறமென்ன?”
என்று கேட்டதும்.
“ஆமாம்! நீங்க ரெண்டு பேரும் சொல்றது கரெக்ட் தான்…இருந்தாலும் அந்த பார்க்கிங் யார்டுக்குள்ள போனாலே எனக்கு ஏதோ ஒரு மாதிரி ஆயிடுது என்ன பண்ண?!”
“அம்மா அந்த மாதிரி எல்லாம் ரோட் டெஸ்ட் ல ஆகக்கூடாது மா. பார்த்துக்கோ!”
என்று மகன் சொன்னதை தலையசைத்து ஆமோதித்தார் கணவர். நான் சிரித்துக் கொண்டேன். கைபேசியை எடுத்தேன் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைப்பு விடுத்தேன். RTA ரோட் டெஸ்ட்டுக்கு பதிவு செய்தேன். பரீட்சைக்கான நாள் வியாழக்கிழமை, பிப்ரவரி இருபத்தி மூன்றாம் தேதி மதியம் இரண்டு மணி. தேர்ச்சி பெற்றால் உடனே கையில் லைசன்ஸ். சொல்லவும் கேட்கவும் நன்றாக தான் இருக்கும் ஆனால் நடந்தது என்ன? அடுத்த பதிவில்.
ஒரு வழியாக பல படிகளை தாண்டி கடைசி இரு படிகளுக்கு வந்து சேர மூன்று மாதங்கள் எடுத்தது. இன்னும் ஒரு மாதம் தான் RTA அளித்த லர்னிங் பர்மிட் செல்லுபடியாகும். அதற்குள் லைசென்ஸ் கிடைக்காவிட்டால் மீண்டும் பணம் செலுத்தி அதை புதுப்பிக்க வேண்டுமென்று டிரைவிங் இன்ஸ்டிடியூட்டில் கூறினர். ஒரு மாசம் இருக்கே பார்க்கலாம் என்ற தைரியத்தில் RTA பார்க்கிங் பரீட்சைக்கு பதிவு செய்தேன். பார்க்கிங் பரீட்சைக்கு முன் தினம் இரண்டு மணி நேர வகுப்புக்கு பதிவு செய்து பயிற்சி எடுக்க சொல்லி அறிவுறுத்தினர் நண்பர்கள். சரி அவர்கள் அறிவுரையை அலட்சியம் பண்ண மனமின்றி அதற்கும் பதிவு செய்தேன்.
இரண்டு மணி நேர வகுப்பு சென்றேன்.
“நன்றாக பார்க் செய்கிறீர்கள். இப்படியே நாளையும் எந்தவித பதற்றமும் இன்றி செய்து ஒரே அட்டெம்ட்டில் பாஸ் ஆகி விடுங்கள். ஆல் தி பெஸ்ட்”
என்று எனது பயிற்றுவிப்பாளரின் ஆசிர்வாதத்துடன் முடிந்தது பார்க்கிங் வகுப்பு. அன்றைய தினம் முழுவதும் ஏதோ சொல்ல முடியாத ஒரு தவிப்பு. பாஸ் ஆகி விடுவோமா மாட்டோமா! என்ற குழப்பம் நீடித்ததில் பார்க்கிங் ஜுரம் நூறை தாண்ட அன்று சரியாக சாப்பிடவில்லை, அன்றிரவு சரியாக தூங்கவில்லை.
மறுநாள் காலை விடிந்தது. விருட்டென எழுந்து காலை கடமைகளை முடித்துக் கொண்டு ஒரு கையில் ஒரு கப் காபி மறுகையில் கைபேசியுடன் அமர்ந்தேன். RTA பார்க்கிங் வீடியோக்களை யூடியூப்பில் போட்டுப் போட்டுப் பார்த்துக் கொண்டு இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. கணவர் வந்து காலை உணவு என்ன என்று கேட்ட போது நேரத்தைப் பார்த்தேன். கடிகாரம் ஒன்பதரை என்று காட்ட உடனே அடுப்படிக்கு சென்று அவருக்கு தோசையை சுட்டுக் கொடுத்து விட்டு அடுப்பை அணைத்து விட்டேன். அதைப் பார்த்த என் கணவர்.
“ஏன் இன்னைக்கு இவ்வளவு பதற்றம்? உனக்கு ப்ரேக்ஃபாஸ்ட் வேண்டாமா? அடுப்பை ஆஃப் பண்ணிட்ட? இன்னைக்கு இன்னொரு பார்க்கிங் கிளாஸ் தான் போக போறன்னு நினைச்சு போ. டோன்ட் டேக் இட் டூ சீரியஸ். புரியுதா? நீ போ நான் உனக்கு தோசை சுட்டு தரேன்.”
என்ற ஆறுதல் வார்த்தைகளை கூறினாலும் என் மனதில் ஒரு கலக்கம் இருக்கத்தான் செய்தது. பரீட்சை மதியம் மூன்று மணிக்கு இருந்தது. ஆனால் இரண்டரை மணிக்கெல்லாம் சென்று அடையாள அட்டையை அங்கிருக்கும் வரவேற்பாளரிடம் கொடுக்க வேண்டும் என்பதால் குறித்த நேரத்தில் RTA பார்க்கிங் பரீட்சைக்கு சென்றேன். அங்கே சென்றால் எப்போதும் அங்கிருக்கும் வரவேற்பாளர் இருக்கவில்லை ஏனெனில் அவர் அந்த டிரைவிங் இன்ஸ்டிடியூட்டின் வரவேற்பாளர் என்பதால் அவர் மாலை அஸஸ்மெண்ட் பரீட்சையின் போது தான் அங்கு அமர்ந்திருப்பார். RTA பரீட்சைக்கு அரபு நாட்டை சேர்ந்தவர் ஒருவர் அமர்ந்திருந்தார். நேராக அவரிடம் சென்று பார்க்கிங் பரீட்சைக்கு வந்திருப்பதாக கூறினேன். அவர் அவரின் கனத்த குரலில் எமிரேட்ஸ் ஐடி என்று கேட்க உடனே கைபையில் இருந்த ஐடியை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அதை வாங்கிக்கொண்டு, என்னை சற்று நேரம் அமர்ந்திருக்கும் படி கூறினார்.
மனதில் பதற்றம் வெளியே புன்னகை என்று அமர்ந்திருந்தேன். அவர் சொன்னது போலவே சற்று நேரத்தில் எனது பெயரை சொல்லி அழைத்து கார் எண் 7 ஐ பார்க்கிங் செய்து காட்ட சொல்லி, வாழ்த்துக்களையும் கூறினார். அன்று பரீட்சைக்கு ஏனோ வேறு யாருமே இருக்கவில்லை போலும். நான் மட்டும் தான் இருந்தேன்.
வரவேற்பு அறையின் கதவை திறந்து பார்க்கிங் யார்டுக்குள் (இதற்கு முன் மூன்று முறை சென்று வந்த இடம். முதல் முறை பகலில்…) சென்றேன். அங்கே ஒரு செக்யூரிட்டி நின்றுக் கொண்டிருந்தார். அவரிடம் கார் எண் 7 என்று கூறினேன். என்னை அழைத்துக் கொண்டு கார் எண் 7 அருகே சென்று
“ஆல் தி பெஸ்ட் மேடம்”
என்று கூறினார். நானும் நன்றியை தெரிவித்துக் கொண்டு அந்த ஸ்மார்ட் காருக்குள் ஏறி அமர்ந்ததும் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை செய்து முடித்து எனது வலது புறம் இருந்த பெரிய டேப்லட்டுக்கு மேல் பொருத்தப்பட்டிருந்த காமெராவிடம் நான் ரெடி என்று கட்டை விரலை உயர்த்தி தம்ஸ்அப் காட்டினேன். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. சரி நான் தான் ஏதாவது சம்பிரதாயத்தை செய்ய தவறிவிட்டேனோ என்று எண்ணி ஒரு முறை அனைத்தையும் சரி செய்துக் கொண்டு மீண்டும் அந்த காமிரா முன் நான் தயார் என்று சொன்னேன். அப்போதும் கார் ஸ்டார்ட் ஆகவில்லை.
உடனே இறங்கி போய் சொல்லலாம் என்று சீட் பெல்ட்டை கழற்ற முற்பட்ட போது…பார்க்கிங் பரீட்சைக்கு என்று காரில் ஏறி விட்டால் அதை முடிக்கும் வரை காரை விட்டு வெளியே வரக்கூடாது என்று எனது ஆய்வாளர் கூறியது நினைவுக்கு வர, சட்டென சீட் பெல்ட்டில் இருந்து கைகளை எடுத்து காருக்கு முன் வெளியே நின்றிருந்த செக்யூரிட்டியிடம் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை என்று ஆக்ஷனில் கூற அவர் யாரிடமோ ஃபோனில் ஏதோ கேட்க பின் என்னிடம் ஃபைவ் மினிட்ஸ் என்று கை விரல்களை காட்டி சொல்ல. என்னடா இந்த பார்வதிக்கு வந்த சோதனை என்று நினைத்துக் கொண்டிருக்கையில் கார் ஸ்டார்ட் ஆனது. உங்கள் பார்க்கிங் பரீட்சை தொடங்குகிறது என்ற குரல் காருக்குள் ஒலித்தது.
காரை ரிவர்ஸ் கியரில் போட்டேன். வண்டியை அதன் பார்க்கிங்கில் இருந்து வெளியே எடுத்தேன். பார்க்கிங் பரீட்சைக்கு ஓட்டிச் சென்றேன். முதலில் ஹில், பின் பாரலல், எமர்ஜென்சி, ஆங்கிள் கடைசியில் கராஜ் பார்க்கிங் என்று அனைத்தையும் செய்து முடித்ததும் காரை எங்கிருந்து எடுத்தேனோ அதே பார்க்கிங்கில் கொண்டு வந்து பார்க் செய்து விட்டு வரவேற்பு அறைக்குள் நுழைந்தேன். அங்கிருந்த மண்ணின் மைந்தன் வரவேற்பாளர் சற்று நேரம் அமரும் படி கூறினார். எல்லாம் சரியாக செய்த திருப்தியில் அமர்ந்திருந்தேன்.
சற்று நேரம் ஆனதும் இன்னும் மூன்று நபர்கள் பார்க்கிங் பரீட்சை எடுக்க வந்து காத்திருந்தனர். அவர்களுக்கு ஒரு ஹாய் சொல்லி பேச்சை ஆரம்பித்த போது வரவேற்பாளர் எனது பெயரை சொல்லி அழைத்தார். எழுந்து அவர் அமர்ந்திருந்த மேஜை அருகே சென்றேன். அவர் ஒரு காகிதத்தை என்னிடம் நீட்டி
“நீங்கள் ஹில் மற்றும் கராஜ் ஃபெயில் மற்ற மூன்றிலும் பாஸ். டூ ட் வெல் நெக்ஸ்ட் டைம். ஆயுஷ்”
என்று அடுத்த மாணவரை அழைத்தார். நானோ கையில் அந்த பேப்பருடன் சற்று நேரம் அங்கேயே நின்றுக் கொண்டிருந்தேன். அடுத்தடுத்து ஆட்கள் பரீட்சையை எடுக்க யார்டுக்குள் சென்றார்கள். அங்கேயே நின்றிருந்த என்னை வரவேற்பாளர் அழைத்தார். சென்றேன். அவர் பக்கத்தில் இருந்த டிவியை பார்க்க சொன்னார். நானும் பார்த்தேன். அதில் நான் வண்டி ஓட்டிய வீடியோ போடப்பட்டிருந்தது. பாஸ் ஆனதை எல்லாம் ஓட்டிவிட்டு ஃபெயில் ஆன பார்க்கிங்கை மட்டும் போட்டுக் காட்டினார். முதலில் ஹில் டெஸ்ட்டில் பீப் சத்தம் வருவதற்கு முன்னதாகவே வண்டியை நிறுத்தி விட்டேன். அடுத்ததாக கராஜ் பார்க்கிங், இதில் வண்டியை பார்க் செய்யும் போது லைட்டாக கோட்டில் டையர் பட்டுவிட்டது. மேலும் வண்டியை நான் செய்த கராஜ் பார்க்கிங்கில் இருந்து வெளியே எடுக்கும் போது சிக்ஸ் பாயிண்ட் செக் எனப்படும் ஓர் சம்பிரதாயத்தை செய்யாது எடுத்துவிட்டேன். இரண்டு தவறுகளையும் பார்த்து விட்டு அவரிடம் தாங்க்ஸ் என்று கூறி இன்ஸ்டிடியூட்டிற்கு வெளியே காத்திருந்த எனது கணவரிடம் வந்து நடந்ததை கூறினேன். அவரும் வழக்கம் போல என்னை தேற்றினார்.
பரீட்சையை நன்றாக செய்தேன், முதல் முயற்சியிலேயே RTA பார்க்கிங் பரீட்சையில் பாஸ் ஆகி விடுவேன் என்று பரீட்சையை முடித்ததும் நம்பிக்கையில் இருந்த எனக்கு, உன் நினைப்பு தவறு… என்ன தான் சரியாக செய்திருந்தாலும் உனக்கே அறியாமல் சில சின்ன சின்ன தவறுகள் செய்துள்ளாய் என்று அந்த ஸ்மார்ட் கார் படம் பிடித்ததை போட்டு காட்டியபோது தான் உணர்ந்தேன்.
காரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த நேரத்தில், அன்று அந்த பார்க்கிங் பரீட்சையில் நடந்ததை மனதில் அசைப்போட்டு பார்த்துக் கொண்டே வந்ததில் ஒன்று நன்றாக புரிந்தது என்னவென்றால் எப்படி எனக்கே தெரியாது செய்த சிறிய தவற்றை அந்த ஸ்மார்ட் கார் படம் பிடித்து என்னை ஃபெயில் ஆக்கியதோ அதே போல் தான் நாம் நம் வாழ்க்கையிலும் நமக்கே தெரியாது செய்யும் தவறுகளை நமக்கு உணர்த்திடவே அவ்வப்போது சில தோல்விகள், இழப்புகள், வருத்தங்கள் ஆகியவை வந்து போகிறது. உணர்ந்தால் அவற்றை திருத்திக் கொண்டு வாழ்க்கையையும்/வண்டியையும் சரியான முறையில் நல்வழியில் ஓட்டிச் செல்லலாம். அப்படி இல்லையென்றால் தொடர் தோல்விகளை சந்திக்க வேண்டியது தான். எவ்வளவு முயன்றாலும் நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னு புலம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை.
தவறு செய்வது மனித இயல்பு தவற்றை தவறு என்று உணர்ந்தும் அதையே செய்வது இறுமாப்பு தவற்றை உணர்ந்ததும் திருந்தி/ திருத்தி கொள்வது இயல்பிருப்பு
இல்லையா!
ஒரு கார் பார்க்கிங் டெஸ்ட் தானே! ஒரு சாதாரண இன்டர்வியூ தானே! அதில் என்ன பிரமாதம் அது ஒரு சின்ன போட்டி தானே! இதிலென்ன பிரமாதம் என்றெல்லாம் பலர் நினைக்கலாம்/கூறலாம். ஆனால் அவை ஒவ்வொன்றும் நமக்கு கற்று தரும் பாடங்கள் ஏராளம்! தோல்விகள் வெற்றிக்கான முதல் படின்னு ஏன் சொல்றாங்க தெரியுமா? ஏன்னா தோல்வி அப்படிங்கறது நம் சிந்தனை, நமது பார்வை, நமது எண்ணம், ஒரு விஷயத்தை எதிர்கொள்ளும் விதம், பொறுமை, தன்னடக்கம், தன்னம்பிக்கை, தைரியம் போன்ற பல குணாதிசயங்களை நமக்குள் வரவழைக்கும். நம்மை நாம் மாற்றிக்கொள்ள வாய்ப்பளிக்கும்.
இந்த தோல்வி என்னை வெற்றிக்கு நகர்த்தி சென்றதா? இரண்டாவது முயற்சியில் RTA பார்க்கிங் பரீட்சையில் பாஸ் ஆனேனா இல்லையா என்பதை அடுத்த பதிவில் காண்போம்.
பார்க்கிங் பரீட்சையில் எந்த வகை பார்க்கிங்கில் ஃபெயில் ஆகிறோமோ அதை மட்டும் மீண்டும் எடுத்தால் போதுமென்று இரண்டாவது பரீட்சையில் தோல்வியுற்ற பின் அங்கிருந்த எனது சீனியர் மாணவர்கள் (மூன்றாவது முறை பரீட்சை எடுக்க காத்திருந்தவர்கள்) கூற கேட்டதும் இரண்டாவது முயற்சிக்கு முன் என் மனதில் எழுந்த சந்தேகத்திற்கு பதில் கிடைத்தது. அப்பாடா மூன்றாவது முயற்சியில் கராஜ் பார்க்கிங் மட்டும் செய்தால் போதும் என்று எண்ணி என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு அடுத்த நாள் இன்டர்ணல் பார்க்கிங் அஸஸ்மெண்ட் டெஸ்ட்டை மூன்றாவது முறை கொடுக்க சென்றேன்.
இம்முறை ஏழு மணி ஸ்லாட் தான் இருக்கிறது என்று வாடிக்கையாளர் சேவை மையத்தில் கூறினர். நாம ஆறு மணிக்கு புக் செய்தாலும் எட்டு மணிக்கு தான் பரீட்சையை எடுக்க முடியுதுங்கும் போது எதுவா இருந்தா என்னன்னு அந்த ஸ்லாட்டை புக் செய்திருந்தேன். வழக்கம் போல் அவர்களின் விதிமுறைப்படி ஆறரை மணிக்கு சென்று அங்கிருந்த வரவேற்பாளரை பார்த்து ஒரு “ஹாய்” சொல்லிவிட்டு எனது கைபைக்குள் இருந்து அடையாள அட்டையை எடுக்க முற்பட்ட போது
“வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தே….ன் உங்கள் பார்க்கிங் பரீட்சையில் இம்முறை பாஸ் ஆக வந்தே…ன்”
என்று எனது எண்ணம் மனதிற்குள் பாட்டாக ஒலித்தது போல் இருக்க உடனே நிமிர்ந்து வரவேற்பாளரிடம் அடையாள அட்டையை நீட்டினேன். அவருக்குள்ளும் என் மனதில் ஒலித்தது போலவே
ரா ரா… இன்டர்ணல் பார்க்கிங் டெஸ்ட்டுக்கு மீண்டும் ரா..ரா..
என்று அவர்கள் பாஷையில் அது போல ஏதாவது தோன்றியிருக்கும் போல் இருந்தது அவரின் சிரித்த முகத்துடனான வரவேற்பு. அவர் எனது விவரங்களை கணினியில் சரி பார்த்த பின் “ஆல் தி பெஸ்ட்” என்று கூறி பரீட்சை நடக்கும் யார்டுக்கு போக சொன்னார். நானும் வழக்கம் போல நன்றி தெரிவித்துக் கொண்டு அங்கிருந்து யார்டை நோக்கி நடக்கலானேன். நமக்கு நன்றாக பழகி போன பாதை. அதில் பயணிப்பது இதுவே கடைசி முறை. இனி அந்த யார்டுக்குள் RTA பரீட்சை எடுக்கத் தான் செல்ல வேண்டும் என்றெல்லாம் மனதில் பல கணக்கு போட்டுக்கொண்டு சென்று அமர்ந்தேன்.
என் பெயர் அழைக்கப்பட்டது. இருக்கையில் இருந்து எழுந்து நிமிர்ந்து பார்த்தால் எனது முதல் இன்டர்ணல் பார்க்கிங் அஸஸ்மெண்ட் டெஸ்ட்டுக்கு வந்த அதே ஆய்வாளர். அவருக்கு ஒரு “ஹாய்” சொல்ல அவரும்
“ஹாய் பார்வதி. ஆல் தி பெஸ்ட்”
என்று கூறினாலும் “மறுபடியும் நீயா?” என்பது போல அவரின் முக பாவம் இருந்ததாக எனக்கு தோன்றியது. அவர் சாதாரணமாக இருந்திருந்தாலும் எனது இரண்டு முறை தோல்வி என் மனதில் அவ்வாறு ஒரு எண்ணத்தை வரவழைத்தது. அவர் சொன்ன காரில் ஏறினேன். நேராக கராஜ் பார்க்கிங்கிற்கு காரை ஓட்டிச் சென்றேன். ஆய்வாளர் வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டார். பின் என்னை கராஜ் பார்க்கிங் செய்து காட்ட சொன்னார்.
இம்முறை பாஸ் ஆகி அடுத்து RTA பரீட்சைக்கு செல்ல வேண்டும் தாயே உதவி புரிவாயே என்று மனதிற்குள் அம்பாளை வேண்டிக்கொண்டேன். ரிவர்ஸ் கியர் போட்டேன். பார்க் செய்தேன். ஆய்வாளரை கார் ஜன்னல் வழியாக பார்த்தேன். அவர் முகத்தில் சந்தோஷம் தெரிந்ததும் என் முகம் மலர்ந்தது. காருக்குள் ஏறி அமர்ந்தவர் என்னிடம்
“எப்படி இப்போது ஒரே டிரையில் எந்தவித அட்ஜெஸ்ட்மென்ட்டுமின்றி பர்ஃபெக்ட்டா பார்க் செஞ்சீங்க? இதே போல RTA டெஸ்டிலும் ஒரே அட்டெம்ட்ல பாஸ் ஆகுங்க. ஆல் தி பெஸ்ட். யூ ஹாவ் கிளியர்டு தி பார்க்கிங் அஸஸ்மெண்ட் டெஸ்ட்”
என்று சொன்னதும் அப்பாடா என்று ஒரு பெருமூச்சு விட்டு காரை அதன் பார்க்கிங்கில் கொண்டு சேர்த்துவிட்டு, ஆய்வாளரிடம் நன்றியை தெரிவித்துக் கொண்டு நேராக RTA கவுண்டர் சென்று RTA பார்க்கிங் டெஸ்ட்டுக்கு பதிவு செய்ய வேண்டுமென்று கூறினேன்.
பார்க்கிங் இன்டர்ணல் அஸஸ்மெண்ட் டெஸ்ட் முடிவுகள் கணினியில் பதிவேற்றிய பின்னரே RTA பரீட்சைக்கு பதிவு செய்ய முடியும் என்றும், ஆய்வாளர்கள் அனைவரது பரீட்சையையும் முடித்த பின்பு தான் அதை பதிவேற்றம் செய்வார்கள் என்றும், அதற்கு இரண்டு மணிநேரம் ஆகும் என்றும் அந்த கவுண்டரில் இருந்த நபர் கூறினார். சரி மீண்டும் வாடிக்கையாளர் சேவை மையம் மூலமாகவே அதற்கும் பதிவு செய்வோம், அதற்காக இரண்டு மணிநேரம் எல்லாம் காத்திருக்க முடியாது என்று முடிவெடுத்து அங்கிருந்து நகர்ந்து அந்த இன்ஸ்டிடியூட்டின் வரவேற்பரையில் அமர்ந்திருந்த என் மகனிடம் சென்று முதலில் நான் பாஸ் ஆன விஷயத்தை சொல்லி மற்ற விவரங்களையும் விவரித்தேன். பின் மகனுடன் அவரின் காரில் ஏறி வீட்டிற்கு சென்று என் கணவரிடம் விவரத்தை சொன்னதும்
“பரவாயில்லையே சொன்னபடி செய்து காட்டிட்ட! குட். அடுத்தது RTA தானா? இன்னும் இரண்டே இரண்டு படி தான் அதையும் தாண்டிட்டா உன் கையிலும் ஐக்கிய அரபு அமீரக ஓட்டுனர் உரிமம் இருக்கும்.”
“அது எவ்வளவு தடவை எடுக்க வேண்டி இருக்குமோ!! பார்ப்போம்”
“இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு தானே புக் பண்ண முடியும். சரி இன்னைக்கு டின்னர் வெளியே சாப்பிடுவோமா? அப்படியே அந்த டிரைவிங் இன்ஸ்டிடியூட் ப்ராஞ்ச்ல போய் RTA டெஸ்ட்டுக்கும் புக் பண்ணிட்டு வந்திடலாம்.”
என்று நான் சொன்னதும் அதற்கு என்னவரும் எங்களவரும் சம்மதிக்க, ஒரு டென்ஷன் விலகிய மகிழ்ச்சியை கொண்டாட மூவருமாக வெளியே சென்றோம். அவரவருக்கு பிடித்தமான உணவை ஆர்டர் செய்து நன்றாக உண்டோம். RTA பரீட்சைக்கு பதிவு செய்தோம். வீட்டிற்கு திரும்பி வந்தோம்.
இன்டர்ணல் பரீட்சை ஜுரம் குறைந்தது RTA பரீட்சை ஜுரம் ஆரம்பம் ஆனது!
பாகம் 4 முடிந்து ஐந்தாவது பாகம் பதிப்பிக்க காலதாமதமானதற்கு முதல் முயற்சியின் தோல்வியில் இருந்து வெளிவர இவ்வளவு நாட்கள் எடுத்தது என்று நினைத்துக் கொண்டு மன்னிக்கவும்.😅
முதல் இன்டர்ணல் பார்க்கிங் அஸஸ்மெண்ட்டில் தேர்ச்சி பெறாததால் மீண்டும் இரண்டு மணிநேர வகுப்புக்கு சென்றேன். அன்று எனக்கு வந்த பயிற்றுவிப்பாளர் நான் காரை பார்க் செய்வதைப் பார்த்து ,
“நீங்கள் நன்றாக தானே பார்க் செய்கிறீர்கள் பின்பு ஏன் பாஸ் ஆகவில்லை?”
என்று கேட்க. நான் அவரிடம்
“அது என்ன மாயமோ தெரியல! என்ன மந்திரமோ புரியல! அந்த டெஸ்ட் யார்டுக்குள்ள போனாலே தப்பு தப்பா தான் வருது”
என்று சொல்ல அவரும் எனது முந்தைய பயிற்சியாளர் சொன்னது போலவே பயத்தை தவிர்க்க சொன்னார். நானும் சரி என்று தலையை ஆட்டினேன். வீட்டில் கணவர் அல்லது மகன் /மகள் கார் இருந்தால் அதில் பார்க்கிங் பயிற்சி எடுத்துப் பார்க்க சொன்னார். ஓகே என்று கூறி வகுப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றேன்.
முதலில் எனது கணவரிடம் அவரின் காரை சிறிது நேரம் பயிற்சி செய்ய கேட்டேன். அவரது கார் பெரியது என்றும் எங்கள் மகனின் கார் செடான் என்பதால் அதில் பயிற்சி எடுக்குமாறு கூறி விட்டார். நானும் அது சரி தானே என்று எண்ணி மகன் பக்கம் திரும்பினேன். உடனே அவர்
“அம்மா என்னை பார்க்காதே எனக்கு நாளைக்கு காலேஜ் இருக்கு.”
என்று வேகவேகமாக கூற,
“அட போங்கப்பா நான் வகுப்பு போனதை வச்சே பாஸ் ஆனா ஆகிறேன் இல்லைன்னா வேண்டாம்.”
என்று சொல்லி இரண்டாவது இன்டர்ணல் பார்க்கிங் அஸஸ்மெண்ட் டெஸ்ட் பகல் நேரத்தில் எடுக்க முடியுமா என்று கேட்டதற்கு பகல் முழுவதும் RTA பரீட்சை நடக்கும் என்றும் மாலை ஆறு மணிக்கு மேல் தான் பார்க்கிங் யார்டு இன்டர்ணல் டெஸ்ட்டுக்கு கிடைக்கும் என்றும் கூற வேறு வழியின்றி முதல் ஸ்லாட் ஆன ஆறு மணி ஸ்லாட்டை பதிவு செய்தேன். ஏன்னா பக்கபலமாக கொஞ்சம் சூரியன் இருப்பார் என்று நினைத்தேன். மூன்று நாள் கழித்து மீண்டும் நம்பிக்கையுடன் சென்றேன்.
வெளிச்சத்தோட டெஸ்ட் எடுத்தா பாஸ் ஆகிடலாம்ன்னு நெனச்சு போன எனக்கு வருணபகவான் ரூபத்துல ஆப்பு ஆப்போஸிட்டுல ஆட்டம் போட்டுச்சு பாருங்க. ஆட்டம்ன்னா ஆட்டம் அப்படி ஒரு குத்தாட்டம் போட்டுச்சு. அதோட அந்த ஆட்டத்துல ஆறு மணிக்கு இருந்த பரீட்சையை எல்லாம் எட்டு மணிக்கு தள்ளி வச்சுட்டாங்க. அப்படி காத்திருக்க விருப்பமில்லைனா வேற ஒரு நாளுக்கு டெஸ்ட்டை மாத்தி வச்சுக்கலாம்னு சொன்னாங்க. அவ்வளவு தூரம் போயாச்சேன்னும், அன்று அந்த பரீட்சையை முடிச்சிடணும்னும் காத்துகிட்டு இருந்தேன். மணி எட்டாச்சு மழையும் விட்டாச்சு. ஆறு மணி பரீட்சைக்கு புக் செய்தவர்களை அழைத்தார்கள். என்னுடன் சேர்த்து இன்னும் மூன்று பேர் இருந்தனர்.
ஏற்கனவே இரண்டு மணிநேரம் காத்துக் கொண்டிருந்ததில் பதற்றத்தின் அளவு சற்று அதிகமாக இருந்தது. இதில் எனது ஆய்வாளர் என்னிடம் டென்ஷன் இல்லாம ஓட்டுங்கன்னு சொன்னதைக் கேட்டதும் முழிச்சேன் பாருங்க ஒரு முழி. அதை பார்த்து அவரு என்ன நெனச்சாரோ தெரியல உடனே
“ம்…வண்டியை எடுங்க. நேரா ஹில், அடுத்தது ஆங்கிள் நெக்ஸ்ட் கராஜ் ஓகே. ஆல் தி பெஸ்ட்”
என்றவரிடம் சும்மா இல்லாம
“அப்போ பாரலல் அன்ட் எமர்ஜென்சி”
என்று கேட்க போய்
“ஓ!!! உங்களுக்கு மறுபடியும் அந்த ரெண்டு டெஸ்ட்டும் எடுக்கணும்னா எடுங்க எனக்கு நோ ப்ராப்ளம். டூ யூ வான்ட் டு டூ அகெய்ன்?”
என்று கேட்டவரிடம் வேகவேகமாக
“நோ நோ. ஐ வாஸ் ஜஸ்ட் ஆஸ்க்கிங்.”
என்று வெளியே சொல்லிக் கொண்டாலும் உள்ளுக்குள்ளே ஒரு புறம் அப்பாடா என்றும் மறுபுறம் ஏன் அந்த ரெண்டு டெஸ்ட் எடுக்க வேண்டாம்? என்ற குழப்பத்தோடு கிளம்பினேன்.
அவர் கூறிய மூன்றில் இரண்டு முடிந்தது. மூன்றாவதாக கராஜ் பார்க்கிங் செய்ய முற்பட்ட போது சற்று முன்னதாக காரை வலது புறம் திருப்பியதால் ஒரு சிறு தடு மாற்றம் ஏற்பட்டது. ஆனாலும் அதை அவர்கள் அளித்துள்ள ஒரு முறை அட்ஜெஸ்ட்மென்ட் செய்யலாம் என்ற சலுகையை உபயோகிக்க முயற்சித்தேன். பார்க் செய்தேன். வெளியே நின்றிருந்த ஆய்வாளர் காரை அதன் பார்க்கிங்கில் கொண்டு நிப்பாட்ட சொன்னார். நானும் ஓட்டி சென்று நிப்பாட்டி ஹேண்ட் ப்ரேக் போட்டு, கியரை பார்க்கிங்கில் போட்டு, சீட் பெல்ட்டை கழற்றிவிட்டு, எனது கைபையை எடுத்துக் கொண்டு ஒரு வழியா முடிச்சிட்டேன்டாப்பா என்று எண்ணிக்கொண்டு ஆய்வாளரிடம் சென்றால் அவர் என்னிடம்
என்று கூறிவிட்டு அடுத்த ஆட்டின் பெயரை அழைத்துக் கொண்டே உள்ளே சென்றவர் அடுத்த ஆட்டுடன் யார்டுக்குள் நுழைந்தார். அந்த ஆடும் ஆய்வாளர் கூறிக்கொண்டே வந்த விதிமுறைகளுக்கு என்னை போலவே நன்றாக தலையை ஆட்டியது. அதை எல்லாம் பார்த்துக் கொண்டு நின்ற இடத்திலேயே நின்றிருந்த என்னை பார்த்து…
“உங்க பரீட்சை முடிஞ்சிடிச்சு. நீங்க போகலாம். யூ கெட் இன்சைட் தி கார்”
என்று அடுத்த ஆடிடம் சொன்னதும் அதுவரை பிரமயில் இருந்த நான் அதிலிருந்து விடுபட்டு முன்பு ஆட்டியது போலவே மீண்டும் தலையை சரி என்று ஆட்டிவிட்டு நன்றி தெரிவித்துக் கொண்டு வெளியே வந்து எனக்காக காத்திருந்த கணவரிடம்
“மீண்டும் நான் ஃபெயில்”
என்று கூறி எனது வருத்தத்தை தெரிவித்தேன். அப்போது வாடி போயிருந்த என்னிடம்
“உன்னால முடியலனா விடு நோ ப்ராப்ளம்”
என்றார். அதை கேட்டதும் மனதில் ஒரு இனம் புரியாத உத்வேகம் தோன்ற உடனே அவரிடம்
“ஏன் முடியாது? என்னால் முடியும். முடியும் வரை முயற்சிக்க போகிறேன்.”
என்று கூறி மூன்றாவது முறை இன்டர்ணல் அஸஸ்மெண்ட் பரீட்சைக்கு அடுத்த நாளே ஸ்லாட் கிடைத்ததும் சற்றும் யோசிக்காமல் பதிவு செய்தேன்.
முயற்சி திருவினையாக்கும் என்ற கூற்று பலிக்குமா!!! அடுத்த பதிவில்…
“இப்போது இந்த இன்டர்ணல் டெஸ்ட்டுக்கு நீங்கள் இந்த வண்டியை ஓட்ட போவதில்லை இந்த கார் RTA டெஸ்ட்டின் போது தான் உங்களுக்கு தருவார்கள். நீங்கள் RTA டெஸ்ட்டின் போது ஓட்ட வேண்டிய ஸ்மார்ட் காரை பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்வதற்கான ஒரு இருபது நிமிட வகுப்பு தான் இது.”
என்று கூறி வேறொரு காரின் அருகே சென்று
“இந்த கார் இப்போது உங்களுடையது. இதை நீங்கள் வகுப்புகளில் எப்படி ஓட்டினீர்களோ அப்படியே ஓட்டி பார்க் செய்து காட்டுங்கள். இப்போ இந்த இன்டர்ணல் பரீட்சையை இந்த காரில் எடுத்து பாஸ் ஆகுங்கள். ஆல் தி பெஸ்ட்”
என்று அவர் கூறியதை கேட்டதும் “என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன் அதற்கு எந்தவித சேதமுமின்றி கொண்டு வந்து இங்கேயே என்கிட்ட விட்டுடுமான்னு” சிவாஜி ஸ்டைலில் சொன்னது போல் ஒரு நிமிட கற்பனை பளிச்சிட என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன். உடனே அவர் என்னை “என்னடா பரீட்சை எடுக்கறதுக்கு முன்னாடி ஏன் இவங்க இப்படி சிரிக்கிறாங்க? ஒரு வேளை முடிவு தெரிஞ்சிடிச்சோ!!! அப்படிங்கற மாதிரி பார்க்க, சாரி என்று நான் கூறி ரைட் இன்டிகேட்டரை போட்டு காரை ஆங்கிள் பார்க்கிங்கில் இருந்து பின்னால் மெல்ல எடுத்து பின் வளைத்து நேரே சென்றேன்.
முதலில் சுலபமான ஹில் மற்றும் எமர்ஜென்சி பார்க்கிங் முடித்து விடலாம் என்று மனதில் ஒரு கணக்குப் போட்டு அதன்படி முதலில் ஹில் டெஸ்ட் எடுக்க சென்றேன். அந்த மலை மீது இரு கோடுகள் குறுக்கே வரையப்பட்டிருக்கும். நாம் நமது காரை அந்த இரு கோட்டிற்கு நடுவில் நிறுத்தி ஹேண்ட் ப்ரேக் போட வேண்டும். இது தான் சரியான முறை. அதை தான் நான் கற்றும் கொண்டேன். அன்று வரை வகுப்பு பயிற்சிகளில் இந்த வகை பார்க்கிங்கில் எந்த தவறும் இன்றி செய்து வந்ததால் கொஞ்சம் கூடுதல் தன்னம்பிக்கையோடு மலை மீது ஏறினேன். அந்த சிறிய மலை மீது ஏறியதும், முன் சொன்னது போல் கார் அந்த இரண்டு கோடுகளுக்கு நடுவில் வந்ததும் நிறுத்த வேண்டும்.
நான் பரீட்சை எடுத்தது இரவு ஏழரை மணிக்கு. அன்று வரை எந்த வகுப்பும் இரவு நேரத்தில் இருக்கவில்லை. மலை மீது காரை ஏத்தினேன். கண்ணாடிகளில் பார்த்தேன் வெள்ளைக் கோடு தெரிந்தது உடனே காரை நிறுத்தி ஹேண்ட் ப்ரேக் போட்டேன். எனது கார் அருகே வேகமாக வந்த ஆய்வாளர் என்னை சற்று எனது கார் எங்கே இருக்கிறது என்று இறங்கி பார்க்க சொன்னார். நானும் இறங்கினேன். பார்த்தேன்😲 கார் முதல் கோட்டின் மேல் நின்று கொண்டிருந்தது. ஐய்யோ! என்று தூக்கிவாரிப் போட்டது. எப்பிடி டி!!!! அப்படின்னு என் மனம் என்னை கேட்டது. செய்வதறியாது முழித்துக் கொண்டிருந்த என்னிடம் காரை அடுத்த பார்க்கிங்கிற்கு ஓட்டி செல்லும் படி கூறினார் ஆய்வாளர்.
நானும் காருக்குள் அமர்ந்து சீட் பெல்ட் அணிந்து கொண்டு மலையிலிருந்து கீழே இறங்கி அடுத்ததாக எமர்ஜென்சி பார்க்கிங்கிற்கு செல்ல ஆயத்தம் ஆனேன். இன்டர்ணல் ரோட் டெஸ்ட் அஸஸ்மெண்ட்டில் செய்ததைப் போலவே இன்டர்ணல் பார்க்கிங் அஸஸ்மெண்ட்டிலும் எடுத்ததும் தவறிழைத்து விட்டதை எண்ணி என் நெத்தியில் நானே எனது வலது கையால் தட்டிக் கொண்டே எமர்ஜென்சி பார்க்கிங் முன் வந்து சேர்ந்தேன். பின் பயிற்றுவிப்பாளர் கற்று தந்ததை போலவே காரை இருபதுக்கு மேல் இருபத்தி ஐந்துக்குள் ஸ்பீடு இருக்கும் படி ஓட்டிச் சென்றேன். ஆய்வாளர் ஸ்டாப் என்று சொன்னதும் உடனே ப்ரேக்கை முதலில் செய்த தவற்றை மனதில் கொண்டு எனது முழு பலத்தையும் திரட்டி ஒரு மிதி மிதித்து காரை நிறுத்தினேன். ஏனெனில் கார் ப்ரேக் அழுத்தியதும் உடனே அதே இடத்தில் நிற்க வேண்டும் அவ்வளவு பலமாக அழுத்த வேண்டும் இல்லையேல் வண்டி சற்று முன்னால் செல்ல வாய்ப்பிருக்கிறது. அப்படி சென்றால் நாம் அதில் ஃபெயில்!
ஆய்வாளர் நெக்ஸ்ட் என்று சொல்ல உடனே காரை அங்கிருந்து ஆங்கிள் பார்க்கிங்கை நோக்கி ஓட்டி சென்றேன். எனது பயிற்றுவிப்பாளர் சொல்லி கொடுத்ததை போலவே திருப்பினேன். ஆங்கிள் பார்க்கிங் பாக்ஸ்க்குள் காரை சரியாக ஓட்டி சென்று நிறுத்தி ஹேண்ட் ப்ரேக் போட்டு ஆய்வாளர் முகத்தைப் பார்த்தேன். அவர் தலையை இடது வலது புறமாக ஆட்டிக்கொண்டே என்னை காரிலிருந்து வெளியே வர சொன்னார். போச்சுடா!!! இதுவும் அவுட்டா என்று என் மனம் என்னிடம் கேட்டது அவருக்கு தமிழ் தெரிந்திருந்தால் நிச்சயம் புரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஏன்னா அவ்வளவு சத்தமாக மைண்ட் வாயிஸ் என்றெண்ணி நானே சொல்லிவிட்டேன். ஒரு முறை காரை சுற்றி பார்த்தேன். கார் சரியாக தான் பார்க்கிங் பாக்ஸுக்குள் நின்றிருந்ததை பார்த்ததும் அப்பாடா என்று இருந்தது. கார் பார்க்கிங் பாக்ஸுக்குள் தானே நிற்கிறது பின்பு ஏன் என்னை இறங்கி பார்க்க சொன்னார் ஆய்வாளர் என்று என் முகத்தில் ஒரு பெரிய ஆச்சர்ய குறியுடன் அவரை நோக்கினேன்.
என்னருகே வந்து நின்றவர் என்னிடம், நான் சரியாக தான் ஆங்கிள் பார்க்கிங்கிற்குள் வண்டியை ஓட்டி வந்ததாகவும், கார் ஆங்கிள் பார்க்கிங் பாக்ஸுக்குள் நிருத்தியதாகவும் கூறி அதன் பின் ஆனால்…என்று ஒரு இழு இழுத்து….காரை நன்றாக உள்ளே ஓட்டி வந்து பார்க் செய்வதற்கு பதில் சற்று முன்னதாகவே நிறுத்தி பார்க்கிங்கில் வண்டியை போட்டதாக கூறினார். அப்போது மீண்டும் காரை நன்றாக பார்த்தேன் அது சில சென்டிமீட்டர் வித்தியாசத்தில் தான் முன் கோட்டில் இருந்து சற்றே பின்னால் இருந்தது. அதைப் பார்த்ததும் நான் பாஸ் தானே என்ற குழப்பமான முகத்துடன் அவரைப் பார்த்தேன். அதற்கு அவர்
“இப்படி நீங்க RTA பார்க்கிங் டெஸ்ட் ல பார்க் பண்ணுனீங்கன்னா நிச்சம் ஸ்மார்ட் கார் உங்களை ஃபெயில் ஆக்கி விடும்”
என்று கூற
“அச்சச்சோ! மறுபடியும் மொதல்லேந்தா!!” என்ற வடிவேலு டையலாக் தான் அந்த இடத்தில் ஞாபகம் வந்தது. ஆய்வாளர் என்னை மீண்டும் காருக்குள் ஏறி அடுத்த பார்க்கிங் செய்து காண்பிக்க சொன்னார். தெம்பு குறைந்த மனதுடன் காருக்குள் ஏறி அடுத்த கராஜ் பார்க்கிங்கை நோக்கி காரை மெல்ல ஓட்டி சென்றேன்.
காரை ரோட்டின் நடுவே இருக்கும் வெள்ளை நிற கோட்டிற்கு மிக அருகே இருக்கும் படி ஓட்டி சென்று பின் ரிவர்ஸில் சரியான இன்டிகேட்டர் கொடுத்து பின்னால் எடுத்து வந்து சரியாக அந்த கராஜ் பார்க்கிங் பாக்ஸுக்குள் நிறுத்த வேண்டும். நானும் அது படியே செய்து வண்டியை அதன் பாக்ஸிற்குள் நிப்பாட்டி ஹேண்ட் ப்ரேக் போட்டு காருக்கு வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்த ஆய்வாளர் முகத்தை ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். அவர் முகத்தில் எந்தவித ரியாக்ஷனுமின்றி அடுத்த பார்க்கிங்கிற்கு செல்லும் படி கூறினார். அப்பாடா பாஸ் என்று எண்ணிக் கொண்டு அடுத்ததாக என்னை சோதிக்க காத்திருந்த பாரலல் பார்க்கிங்கை நோக்கி காரை ஓட்டி சென்றேன்.
பாரலல் பார்க்கிங்கிற்கு காரை பார்க்கிங் அருகே இருக்கும் வெள்ளைக் கோட்டில் இருந்து ஒரு அடி தள்ளி ஓட்டி சென்று பின் ரிவர்ஸ் கியரில் சரியான இன்டிகேட்டர் கொடுத்து வண்டியை மெல்ல பாரலல் பார்க்கிங் பாக்ஸிற்குள் நுழைத்து வகுப்பில் கற்றுக் கொண்டதை போலவே பார்க் செய்தேன். ஹேண்ட் ப்ரேக் போட்டேன். ஆய்வாளரை பார்த்தேன். அவர் கார் கதவை திறந்து உள்ளே வந்து டிரைவர் சீட்டுக்கு அருகே இருக்கும் சீட்டில் அமர்ந்து சீட் பெல்ட்டை அணிந்துக் கொண்டதும் என்னை நேராக முதன் முதலில் எங்கிருந்து பார்க்கிங் டெஸ்ட்டுக்கு காரை வெளியே எடுத்து வந்தேனோ அதே பார்க்கிங்கிற்கு ஓட்டி சென்று பார்க்க செய்ய சொன்னார். நானும் அவர் கூறிய படியே பாரலல் பார்க்கிங்கில் இருந்து வண்டியை வெளியே எடுக்கும் முன் செய்ய வேண்டிய சிக்ஸ் பாயிண்ட் செக் ஆகிய சம்பிரதாயங்களை செய்து வெளியே எடுத்து அவர் கூறிய பார்க்கிங்கில் காரை பார்க் செய்தேன்.
ஆய்வாளர் என்னைப் பார்த்து ” நீங்கள் ஹில் பார்க்கிங்கில் கோட்டின் மீது காரை நிறுத்தி விட்டீர்கள், ஆங்கிள் பார்க்கிங்கில் சில சென்டிமீட்டர் முன்னதாகவே வண்டியை நிறுத்தி விட்டீர்கள், கராஜ் பார்க்கிங்கில் காரை பாக்ஸிற்குள் சரியாக தாங்கள் கொண்டு வரவில்லை சற்று முன்னதாக வண்டியை திருப்பியதால் கோட்டின் மீது வண்டியின் டயர் ஏறியது. எமர்ஜென்சி பார்க்கிங் அன்ட் பாரலல் பார்க்கிங் மட்டும் தான் பாஸ் ஆகி இருக்கிறீர்கள். எனவே மீண்டும் ஒரு இரண்டு மணி நேர வகுப்பிற்கு புக் செய்து நன்றாக கற்றுக்கொண்ட பின் மீண்டும் இன்டர்ணல் டெஸ்ட் கொடுங்க. ஆல் தி பெஸ்ட்.”
என்றார். அதை கேட்டதும். எங்கோ கேட்ட குரல் போல் இருக்க…
“அட பார்வதி! உனக்கு இந்த கார் ஓட்டுனர் பயிற்சி பள்ளியின் இன்டர்ணல் டெஸ்ட்டில் இரண்டாவது முயற்சியில் தான் பாஸ் ஆக வேண்டுமென்பது எழுதப்படாத விதியோ!!!”
என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு வெளியே எனக்காக காத்திருந்த என் கணவரிடம் சென்று
“நான் ஃபெயில் ஆகி விட்டேன்”
என்று சொன்னதும்
“அதெல்லாம் டிரைவிங்கில் சகஜமப்பா” என்றார்.
அவர் ஏற்கனவே லைசென்ஸ் எடுத்துள்ளதால் அவருக்கு என் கஷ்டம் புரிந்தது. ஆனாலும் எனக்கு அந்த பரீட்சையின் பதற்றம் குறைய சில மணி நேரம் ஆனது.
வீட்டிற்கு வந்து சேர்வதற்குள் சற்று நிதானித்து கொண்டு
“அடுத்த முறை பார்த்துக்கலாம்”
என அடுத்த இரண்டு மணி நேர வகுப்புக்கு கால் சென்டர் எண்ணை அலைபேசியில் அழைத்து பதிவு செய்தேன். நாம எது செய்தாலும் அதில் சில வெற்றிகளும் பல தோல்விகளும் இருப்பது தான் வாழ்க்கை. இல்லையா! இரண்டாவது முயற்சியில் பாஸ் ஆனேனா? இல்லையா!!!! அடுத்த பதிவில் காண்போம்.
ஒரு வழியாக இரண்டாவது முயற்சியில் இன்டர்ணல் ரோட் டெஸ்ட் பாஸ் ஆனதும் நம்பிக்கை பிறந்தது. அடுத்ததாக நான்கு மணிநேரம் பார்க்கிங் வகுப்புக்கு செல்லும் படி கூறினர். சரி என்று சென்றேன். பார்க்கிங்கில் ஐந்து வகை என்று ஆரம்பித்தார் பார்க்கிங் பயிற்றுவிப்பாளர். பாரலல், கராஜ், ஆங்கிள், ஹில் மற்றும் எமர்ஜென்சி பார்க்கிங் என்று நான்கு மணிநேர வகுப்பில் கற்றுத் தந்தார். ஆங்கிள் பார்க்கிங் தவிர மற்ற அனைத்தும் நன்றாக சரியாக செய்தேன். இந்த வகுப்பின் போது தான் பார்க்கிங் டெஸ்ட் ஸ்மார்ட் காரில் எடுக்க வேண்டும் என்ற விஷயம் எனக்கு தெரிய வந்தது. அது என்ன ஸ்மார்ட் கார்? என்று கேட்டேன். அதற்கு அவர், இன்டர்ணல் டெஸ்ட்டின் போது அந்த கார் எப்படி இருக்கும் அதில் நான் எப்படி டெஸ்ட் எடுக்க வேண்டுமென்பதை முதலில் சொல்லிக் கொடுத்துவிட்டு தான் அதில் டெஸ்ட் எடுக்க சொல்வார்கள் என்றார். எல்லாம் ஒரு அனுபவம் தானே! இல்லையா. சரி அதையும் பார்ப்போம் என்று அதற்கான இன்ஸ்டிடியூட்டின் பார்க்கிங் இன்டர்ணல் பரீட்சைக்கு பதிவு செய்தேன். ஏனெனில் இன்டர்ணல் ரோட் டெஸ்ட் போலவே இந்த இன்டர்ணல் பார்க்கிங் டெஸ்ட்டை க்ளியர் செய்தால் தான் RTA பார்க்கிங் டெஸ்ட்டுக்கே அனுப்புவார்களாம்.
சிங்கத்தின் குகைக்குள் போயாச்சு ஒண்ணு அதோட போராடி எப்படியாவது வெளியே வெற்றியோடு வரணும் இல்லையா சத்தமில்லாம அங்கிருந்து ஓடிடணும். இந்த ரெண்டு ஆப்ஷன் தான். தோற்று ஓட மனமில்லை. எனவே போராட முடிவெடுத்து பார்க்கிங் இன்டர்ணல் டெஸ்ட்டுக்கு சென்றேன். அங்கே எனது ஆய்வாளர் என்னை அந்த ஸ்மார்ட் காரில் ஏறி அமரச் சொன்னார். நானும் அம்ர்ந்தேன். முதலில் அவர் அந்த காரை ஓட்டி அது எப்போது என்ன சொல்லும், அப்போ நான் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தார். நான் ஒரு முறை அந்த காரை சுற்றிப் பார்த்தேன். அதன் ஸ்டியரிங் வீலில் பொட்டு பொட்டாக சென்சர்ஸ் இருந்தது. காருக்குள் முன் கண்ணாடி மீது இரண்டு காமிராக்கள், காரின் நடுவில் இரண்டு காமிராக்கள், பின் சீட்டிற்கு மேல் இரண்டு காமிராக்கள், அதை தவிர இன்னும் பல காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. காரினுள் ஏறி டெஸ்ட் எடுக்கத் துவங்கியதும் காரை விட்டு இறங்கவோ இல்லை அனாவசியமாக நிறுத்தவோ கூடாது என்ற எச்சரிக்கை வேறு. டிரைவர் சீட்டுக்கு அருகில் ஒரு பெரிய டேப்லட் பொருத்தப் பட்டிருந்தது.
நாம் காரில் ஏறியதும் செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முடித்த பின் அந்த டேப்லெட் மேல் இருக்கும் காமிராவிடம் நான் டெஸ்ட்டுக்கு தயார் என்று கை கட்டைவிரலை (thumbs up) காட்ட வேண்டும். உடனே நமது அனைத்து விவரங்களும் நமது புகைப்படத்துடன் அந்த டேப்லெட்டில் பளிச்சிடும். அதன் பின் வண்டிக்குள் “உங்கள் பார்க்கிங் டெஸ்ட் ஆரம்பம் ஆகிறது” என்று ஓர் குரல் ஒலிக்கும். உடனே நாம் கார் பார்க்கிங் நோக்கி ஓட்டிச் செல்ல வேண்டும். ஏனெனில் இதற்கு கால அவகாசம் உள்ளது. அந்த ஐந்து பார்க்கிங் டெஸ்ட்டையுமே இருபது நிமிடங்களில் முடிக்க வேண்டும். வண்டியை எடுக்க மற்றும் மீண்டும் எடுத்த இடத்தில் ஓட்டி வந்து நிறுத்த ஏழு நிமிடங்கள், பாரலல் பார்க்கிங்கிற்கு ஐந்து நிமிடங்கள், கராஜ் பார்க்கிங்கிற்கு மூன்று நிமிடங்கள், ஆங்கிள் பார்க்கிங்கிற்கு இரண்டு நிமிடங்கள், ஹில் மற்றும் எமர்ஜென்சி பார்க்கிங்கிற்கு தலா தொண்ணூறு நொடிகள்.
பரீட்சை களத்தில் மூன்று ஆங்கிள் பார்க்கிங், மூன்று கராஜ் பார்க்கிங், இரண்டு பாரலல் பார்க்கிங் ஸ்லாட்டுகள் இருக்கும். மேலும் ஹில் மற்றும் எமர்ஜென்சி பார்க்கிங் தளங்கள் ஒன்று தான் கொடுக்கப்பட்டிருக்கும். பரீட்சை களத்தில் நாம் மட்டுமின்றி இன்னும் பலர் பரீட்சை எடுத்து கொண்டிருப்பார்கள் எனவே நாம் கவனமாக காரை ஓட்டிச் சென்று எப்பெப்போ எந்தெந்த ஸ்லாட் காலியாகிறதோ அப்போது அங்கு சென்று பார்க்கிங் செய்ய வேண்டும். பின் அடுத்த பார்க்கிங் ஸ்லாட்டிற்கு பொறுமையாக செல்ல வேண்டும். இப்படியே அடுத்தடுத்து ஒவ்வொரு பார்ங்க்கிங் டெஸ்ட்டையும் மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பார்க்கிங்கிற்கும் நாம் காரை ஓட்டி செல்லும் அந்த ரோட்டில் சென்சர்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். எனவே நாம் அதன் மீது நமது காரை ஓட்டிச் செல்லும் போது நாம் ஓட்டிச் செல்லும் காருக்குள்(உதாரணத்திற்கு ) “இப்போது நீங்கள் கராஜ் பார்க்கிங் செய்ய போகிறீர்கள்” என்ற குரல் ஒலிக்கும். இதே போல அனைத்து பார்க்கிங் பகுதிக்குள் நாம் செல்லும் போதும் கார் நம்மிடம் எந்த பார்க்கிங் செய்ய இருக்கிறோம் என்பதை கூறும். அதே போல் ஹில் பார்க்கிங் செய்ய மலை போலிருக்கும் அந்த ரோட்டின் மேலே ஏறும் போது பீப்… பீப்… பீப் என்று நமது காருக்குள் சப்தம் வரும் அந்த சப்தம் வந்ததும் காரை பார்க் செய்து ஹேண்ட் ப்ரேக் போட வேண்டும். ஹேண்ட் ப்ரேக் போட்டதும் நமது கார் நம்மிடம் அடுத்த பார்க்கிங் செய்ய அங்கிருந்து கிளம்ப சொல்லும். உடனே அடுத்த பார்க்கிங்கிற்கு செல்ல வேண்டும்.
ஸ்மார்ட் கார் என்ன சொல்லும் நாம் என்ன செய்ய வேண்டும் எப்படி வண்டியை ஓட்டி ஒவ்வொரு பார்க்கிங்காக போட வேண்டும் போன்ற அனைத்தையும் சொல்லிக்கொடுத்த பின் ஆய்வாளர் காரை விட்டு இறங்கி என்னையும் இறங்க சொன்னார். நானும் இறங்கினேன். அனைத்தும் புரிந்ததா என்று கேட்டார். நானும் எல்லாம் புரிந்தது என்று கூறினேன். அதுக்கப்புறம் அவர் சொன்னார் பாருங்க ஒரு விஷயம்…அது என்னன்னா அதுவரை அவர் ஓட்டி காண்பித்த அந்த ஸ்மார்ட் காரில் நான் இன்டர்ணல் அஸஸ்மஎண்ட் டெஸ்ட் எடுக்கப் போவதில்லையாம். அந்த கார் RTA டெஸ்ட்டின் போது தான் தருவார்களாம். மேலும் அப்போதைக்கு நான் பயிற்சி மேற்கொண்ட சாதாரண காரில் தான் பரீட்சையை எடுக்கணும்முன்னு சொன்னார்.
ஒரு விதத்தில் அந்த பல கண்கள் (காமிராக்களை தான் அப்படி சொல்லறேன்) கொண்ட காரை ஓட்ட தேவையில்லை…மேலும் மனிதர்கள் ஆய்வாளர்களாக இருந்தால் கூட கொஞ்சம் கவணிக்க தவற வாய்ப்பிருக்கிறது ஆனால் இந்த மெஷின் அப்படி இல்லையே நாம் இழைக்கும் தவறுகள் அனைத்தையும் படம் பிடித்து விடுமே என்ற பதற்றத்தில் இருந்து தற்காலிகமாக விடுப்பட்டதை எண்ணி அப்பாடா என்றிருந்தது. ஆனால் RTA டெஸ்ட்ட அதில் தானே எடுக்க வேண்டும் என்று மனதின் ஓரத்தில் அசிரீரி ஒலிக்க உடனே என் மனதின் மற்றொரு பக்கம், முதலில் இந்த பரீட்சையில் தேர்ச்சி பெற்றால் தான் அந்த கார் அதனால் இப்போ அதை ஒத்தி வச்சுட்டு இப்ப என்ன செய்யணுமோ அதை செய்ய போ என்று கட்டளையிட உடனே ஓரத்தில் ஒலித்த அசிரீரியும் நானும் அமைதியாக அப்ப நடக்க இருப்பதை நடத்திக் காட்டுவோம் என்று முடிவெடுத்து இரண்டு கண்கள் முன்னிலையில் பரீட்சையை மேற்கொள்ள எனக்கான காரில் ஏறினேன்.
காரை மெல்ல பார்க்கிங்கில் இருந்து எனது பயிற்றுவிப்பாளர் சொல்லிக்கொடுத்தது போலவே வெளியே எடுத்து பின் சர்ரென்று பரீட்சையை எதிர்கொள்ள புறப்பட்டேன்.
எந்தெந்த பார்க்கிங் எப்படி எப்படி செய்தேன். இந்த பார்க்கிங் இன்டர்ணல் பரீட்சையில் பாஸ் ஆனேனா? இல்லையா? போன்ற கேள்விகளின் விடைகளையும் பார்க்கிங் சுவாரஸ்யங்களையும் நாளை பதிவில் காண்போம்.
துபாயில் ஓட்டுனர் உரிமம் பெறுவது என்பது ஒரு மாபெரும் சாதனை புரிவதற்கு இணையானதாகும் என்று அனைவரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அது எவ்வளவு உண்மை என்று இங்கிருக்கும் மக்கள் அனைவரும் நன்கறிந்த விஷயமாகும். இந்தியாவில் கார் ஓட்டி பழக்கம் இருப்பதால் முதன்முதலில் துபாய் வந்த போது இங்கேயும் ஓட்டுனர் உரிமம் எடுத்துவிடலாம் என்ற எண்ணம் தோன்றியது. எனது இந்த விருப்பத்தை நண்பர்களிடம் சொன்ன போது, இங்கு கார் ஓட்டுவது சுலபம், ஏனெனில் லேன் சிஸ்டம். ஆனால் அதற்கான உரிமம் பெறுவது என்பது மிக மிக கடினமான செயல்முறை என்றும், மேலும் பலர் ஒரு வருட காலம் எல்லாம் பயிற்சி பெற்றும் ஓட்டுனர் உரிமம் பெற முடியாமல் உள்ளனர் என்றும் அவர்கள் கூற கேட்டதும் மனதிற்குள் ஓர் அச்சம் எழுந்தது உடனே அந்த எண்ணத்தை ஒத்தி வைத்தேன். முதலில் என் கணவர் கார் ஓட்டுனர் உரிமத்தை பெற்றார். இருபது வருடங்கள் கார் ஓட்டி பழக்கம் இருந்தாலும், அவரை இருபது மணிநேரம் வகுப்பு எடுத்தாக வேண்டும் என்று கூறிவிட்டனர் துபாயின் சாலை போக்குவரத்து ஆணையம். அவரின் அலுவலக பணிக்கு இடையே அவற்றை பூர்த்தி செய்து அவர் அந்த ஓட்டுனர் உரிமத்தை பெற ஐந்து மாதங்கள் எடுத்தது. அதற்கே நண்பர்கள் பலர் “பலே” என்று கூறினர். அப்போதும் என்னடா ஒரு ஓட்டுனர் உரிமம் பெறுவதில் என்ன இருக்கிறது! அதுவும் இந்தியாவில் பல வருடங்களாக கார் ஓட்டி பழக்க இருப்பவர்களுக்கு! என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். துபாயில் ஓட்டுனர் உரிமம் பெறுவது கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது என்று கணவரும் கூற கேட்டதும், முதலில் ஒத்தி வைத்த நான் பின்பு வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து விட்டேன்.
எங்காவது சென்று வர வேண்டுமெனில் டாக்ஸி/ மெட்ரோ வில் சென்று வந்தேன். சில நேரங்களில் கணவர் அழைத்து செல்வார் அல்லது நண்பர்கள் அழைத்து செல்வார்கள். பின்பு மகன் அழைத்துச் சென்றான். இப்படியே ஏழு ஆண்டுகள் உருண்டோடின. கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக வேலை நிமித்தம் அடிக்கடி வெளியே சென்று வர வேண்டியிருப்பதால் கணவர் மற்றும் நண்பர்களை தொந்தரவு செய்ய கஷ்டமாக இருந்தது. நானும் ஓட்டுனர் உரிமம் பெற வேண்டும் என்று முடிவெடுத்தேன். கடந்த டிசம்பர் மாதம் கார் ஓட்டுனர் வகுப்பில் சேர்ந்தேன். சேர்ந்ததும் முதலில் RTA அங்கீகாரம் பெற்ற கண் பரிசோதனை மையம் சென்று கண்களை பரிசோதனை செய்துக் கொள்ள சொன்னார்கள். நானும் சென்றேன் பரிசோதனை முடிந்ததும் அவர்கள் சிஸ்டத்தில் அப்டேட் செய்தனர். தானாக அது RTA ஆப் இல் அப்டேட் ஆனது. மீண்டும் அதே சென்டருக்கு சென்று, கார் ஓட்டி அனுபவம் இருப்பதாக கூறி எனது இந்திய ஓட்டுனர் உரிமத்தை காட்டினேன். இருந்தாலும் வகுப்புகள் எடுத்தாக வேண்டும் என்று கூறினர். நாம் தான் இந்தியாவில் ஓட்டி இருக்கிறோமே! பார்த்துக்கலாம்! என்ற நினைப்பில் தைரியமாக இருந்தேன்.
முதலில் ஆன்லைனில் தியரி கிளாஸ் எட்டு மணிநேரம் எடுத்தாக வேண்டும் என்றனர். சரி என்று அந்த வகுப்பில் கலந்துக் கொண்டேன். அது முடிந்ததும் அதற்கான பரீட்சை தேதி மற்றும் நேரத்தை முடிவு செய்து அதற்கு பதிவும் செய்தேன். குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் துபாய் RTA அலுவலகம் சென்றேன். பெண்கள் அமர்ந்துக் கொள்வதற்தான இடத்தில் அமர்ந்தேன். எனது பெயரை அழைத்தனர். உள்ளே சென்றேன். அங்கே குட்டி குட்டியாய் நிறைய அறைகள் இருந்தன (நம்ம ஊரில் முன்பெல்லாம் இருந்த எஸ்.டி.டி பூத் மாதிரி) அதில் ஒரு அறைக்குள் என்னை அமர்ந்து பரீட்சையை கணினியில் எடுக்கச் சொன்னார்கள். நான் சென்று அமர்ந்து காதில் ஹெட் ஃபோனை வைத்து ஸ்டார்ட் பட்டனை அழுத்தியதும் துவங்கியது பரீட்சை. அரை மணி நேர பரீட்சை, நாற்பது கேள்விகள். பன்னிரண்டு கேள்விகளுக்கு மேல் தவறான பதில் அளித்தால் அந்த நபர் தோல்வி அடைந்து விட்டார் என்று மீண்டும் வகுப்புக்கு அனுப்பப்படுவார்கள். நான் பரீட்சையை முடித்து அந்த கூண்டிற்குள் இருந்து வெளியே வந்ததுமே அங்கு அமர்ந்திருந்த RTA ஊழியர் (பெண்மணி) ஒருவர் வாழ்த்துகள் நீங்கள் ஹை ஸ்கோர் செய்துள்ளீர்கள் என்று சொல்லி ஒரு காகிதத்தை என்னிடம் நீட்டினார். நானும் மகிழ்ச்சியில் நன்றி தெரிவித்து அதை கையில் வாங்கிப் பார்த்தேன். நாற்பதுக்கு முப்பத்தி எட்டு என்றும் தியரி டெஸ்ட் பாஸ் என்றும் அச்சிடப்பட்டிருந்தது. உடனே அதை கைபேசியில் படம் பிடித்து கணவருக்கும் மகனுக்கும் வாட்ஸ்அப் இல் அனுப்பி வைத்தேன்.
அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று அங்கிருந்த வரவேற்பாளரை கேட்டேன். அவர் ஓர் அறையை காட்டி அங்கு சென்று அடுத்ததாக ஓட்டுனர் பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்ய சொன்னார். நானும் சென்றேன். ஆனால் வகுப்புகள் இரண்டு வாரம் தள்ளி தான் உள்ளதாக கூறினர். சரி பரவாயில்லை என்றேன். அடுத்து, உங்களுக்கு பெண் பயிற்றுவிப்பாளர் வேண்டுமா இல்லை ஆண் பயிற்றுவிப்பாளர் வேண்டுமா என்று கேட்டனர். ஆங்!! யாராக இருந்தாலும் சரி நான் சீக்கிரம் லைசென்ஸ் பெற வேண்டும் அவ்வளவு தான் என்றேன். அவர் சிரித்துக் கொண்டே பதிவு செய்து விட்டதாகவும், வகுப்பு அட்டவணை மெஸேஜில் வரும் என்றும் கூறி வேறு எதாவது தெரிந்துக் கொள்ள வேண்டுமா என்றார். மனதிற்குள் அவரின் சிரிப்புக்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்றெண்ணிக் கொண்டே… இல்லை அவ்வளவு தான் நன்றி என்று கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றேன்.
அவர்கள் கூறியது போலவே வகுப்பு அட்டவணை மெஸேஜ் வந்தது. இரண்டு வாரம் கழித்து வகுப்புக்கு சென்றேன். பயிற்றுவிப்பாளருக்கு காலை வணக்கம் சொன்னேன். காரில் அமரும்படி சொன்னார். எனக்கு கார் ஓட்டி பழக்கம் இருப்பதால் முதல் வகுப்பில் எனது பயிற்றுவிப்பாளர் என்னை சற்று நேரம் காரை ஓட்டி காண்பிக்க சொன்னார். நானும் ஓட்டினேன். நிறுத்த சொன்னார். நிறுத்தினேன். “காரில் உள்ள கண்ணாடிகளை பார்க்கும் பழக்கமே இல்லையா? எப்படி நீங்கள் உங்கள் ஊரில் கார் ஓட்டினீர்கள்?” என்று கேட்க, சற்றும் தயங்காமல் “அடுத்தவர் அதை தட்டி உடைத்து விடுவார்கள் என்று எங்கள் ஊரில் நாங்கள் காரின் கண்ணாடிகளை மடக்கி கொண்டு காருக்குள் இருக்கும் சென்டர் மிரரை மட்டும் பார்த்து வண்டி ஓட்டுவோம்.” என்று பதிலளித்தேன். அதைக் கேட்டவர் என்னை பார்த்து, “இங்கே நீங்கள் காரின் வலது, இடது புற கண்ணாடிகள், சென்டர் மிரர், ஷோல்டர் செக் இதெல்லாம் பார்த்து ஒட்டவில்லை என்றால் உங்களுக்கு லைசென்ஸ் கிடைக்காது” என்றார். ஆக இப்படிப்பட்ட சுப வார்த்தைகளால் ஆரம்பித்தது எனது கார் ஓட்டுனர் வகுப்பு.
இரட்டைவால் குருவி / கரிக்குருவி எனப்படும் குருவி மட்டுமே கழுகின் மீது அமர்ந்து பயணிக்கும் தைரியம் உள்ள ஒரே பறவை இனம். இவை பயமறியா பறவை இனம். இது தன்னை விடப்பெரிய பறவைகளைக் கூட தாக்கும் குணம் கொண்டது.
ஆம் இந்த வகைக் பறவை கழுகின் மீது பயணிப்பதோட நின்றிடாது. அது கழுகின் கழுத்தில் அமர்ந்து சவாரி செய்வதோடு கழுகின் கழுத்தை தனது சிறிய கூர்மையான அலகால் கொத்தி கொத்தி புண்ணாக்குமாம். அது தான் அதன் பொழுதுப் போக்கு போல(சில மனிதர்களைப் போல்). சிரமப்படாமல் தன் சிறகுகளுக்கு அதிக வேலைக் கொடுக்காமல் இலவச வான்வழிப் பயணத்துடன் கொத்திக் கொத்தி விளையாடும் விளையாட்டும் கிடைத்தால் கசக்குமா கரிக்குருவிக்கு?
தன் மீது சொகுசு பயணம் மேற்கொள்வதோடு தன்னை ரணமாக்கும் அந்த கரிக்குருவியை கழுகார் ஒன்றுமே செய்ய மாட்டார். அந்த சின்னக் குருவியுடன் சண்டைப் போட்டு தன் நேரத்தையோ தனது சக்தியையோ வீணாக்க அவருக்கு விருப்பமில்லை. அதனால் என்ன செய்வார் தெரியுமா? தனது நீளமான சிறகுகளை வான் முழுவதுமாக விரித்து மெல்ல மெல்ல உயரத்தை அதிகரித்து வானில் உயர்ந்துப் பறப்பாராம். அது தானே அவர் வலிமையே!!
ஆம் மற்றப் பறவைகளைக் காட்டிலும் அதிக உயரம் பறக்கக் கூடியது கழுகு மட்டுமே. கழுகு தனது தனித்திரனால் உயர உயர பறந்து, அதிகமான உயரத்தை எட்டுவதிலேயே அதன் கவனம் இருக்குமாம். சாதாரணமாக மழைக்கு காற்று வீசினாலே மரக்கிளைகளில் ஒதுங்கும் பறவை இனத்தில் நமது கழுகார் புயலிலும் ஜம்பமாக மேகத்தைக் கிழித்துக் கொண்டு பறக்கவே ஆசைப்படும் தனித்துவம் வாய்ந்த பறவை இனமாகும். மற்றப் பறவைகள் அனைத்தும் கூட்டமாகவே பறக்கும். ஆனால் கழுகள் மட்டுமே தனித்தனியாக பறக்கக்கூடியவை.
இவ்வளவு தனித்துவம் வாய்ந்த கழுகின் கழுத்தைக் கொத்திக் கொண்டிருக்கும் குருவியிடம் சண்டையிடாமல் அது தனது உயரத்தை உயர்த்திக் கொண்டே சென்று குருவியையும் கூடவே கூட்டிச் செல்ல ஒரு கட்டத்தில் கரிக்குருவியால் கழுகின் உயரத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் பிராணவாயு குறைவினால் கழுகின் மீதிருந்து வீழ்ந்திடுமாம்.
இந்த சிறிய கரிக்குருவி மற்றும் கழுகிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கிறது. கழுகைப் போல் தன்னம்பிக்கை உடையவர்கள் வாழ்வின் சவால்களை அவர்களாகவே சந்திப்பார்கள் கூட்டம் சேர்க்க மாட்டார்கள். பலவீனமானவர்களே கூட்டத்துடன் அதிகம் காணப்படுவார்கள். மன ஒருமைப்பாடு மற்றும் துல்லியமான இலக்கு இவையே கழுகுகள் தங்கள் இரையை எவ்வளவு தூரத்திலிருந்தாலும் அதை அடையும் சக்தியைக் அதற்கு கொடுக்கிறது.
அது போல நாமும் நமது இலக்கை நோக்கி, மன ஒருமைப்பாட்டுடன் உயர்ந்துக் கொண்டே சென்றோமேயானால் கரிக்குருவியைப் போல நமக்கு இடையூறுகள் செய்ய பலர் வந்தாலும் அவர்கள் எல்லாம் நமது உயரத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் காணாமல் போயிவிடுவர். எல்லா வாதங்களுக்கும் நாம் பிரதிவாதம் வைக்க வேண்டிய அவசியமில்லை. எல்லா விமர்சகர்களுக்கும் நாம் பதிலளிக்க வேண்டிய அவசியமுமில்லை. நாம் நமது குணத்தை, தன்னபிக்கையை, தரத்தை எல்லாவகையிலும் உயர்த்திக் கொள்வோம்.
எதிரிகள், நமக்கு தீங்கிழைக்கக் காத்திருப்பவர்கள், கரிக்குருவி கழுகைக் கொத்துவதுப் போல நமக்குப் பின்னாலிருந்து என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும், செய்துக் கொள்ளட்டும் அதைப் பற்றி சிந்தித்து கவலைக் கொள்ளல் வேண்டாம், அப்படிப் பட்டவர்கள் இருக்க வேண்டிய இடம் அதுதான் என்று விட்டுத்தள்வோம்.
நாம் நமது பயணத்தை மட்டும் கவனத்துடன் மேற்கொண்டு உயரப்பறப்போம்.
நமது நண்பர்கள் அல்லது சொந்தக் காரர்கள் சிலர் வீடுகளுக்குச் சென்றால் பல மணி நேரம் அமர்ந்து பேசிக்கொண்டே இருக்கத் தோன்றும். வெகு நேரம் கழித்து கடிகாரத்தைப் பார்த்து “ஓ நேரம் இவ்வளவு ஆகிவிட்டதா” என்று கடிகாரம் பார்த்தால் தான் உணர்வோம். கிளம்புகிறோம் என்று சொல்ல ஆரம்பித்ததிலிருந்து சுமார் ஒரு மணி நேரம் கழித்தும் கிளம்பாமல் பேசிக்கொண்டே இருப்போம். அப்படிப் பட்ட வீடுகளுக்கு எப்போது போக நினைத்தாலும் உடனே கிளம்பி விடுவோம். எந்த வித சாக்கு போக்கும் சொல்லத் தோணாது. எப்போது மறுபடியும் அவர்கள் வீட்டுக்கு போகலாம் என்று உள்ளம் எதிர்ப்பார்த்திருக்கும்.
அதே நாம் சில நண்பர் அல்லது சொந்தக்காரர் வீடுகளுக்கு செல்வதற்கே மிகவும் யோசிப்போம். அவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டுமென்று இருந்தாலும் அடுத்தவாரம் பார்ப்போம் இல்லையெனில் அடுத்த மாதம் போய்க் கொள்வோம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம். அப்படியே சென்றாலும் அவர்கள் வீட்டிற்குள் சென்றதுமே நம் மனதில் அமைதி குறைந்ததுப் போலவும் ஒரு வகையான சங்கடமும் நம்மை ஆட்கொள்ளும். ஏதோ இனம் புரியாத ஒரு பதற்றம் அங்கிருந்து கிளம்பும் வரை இருந்துக் கொண்டே இருக்கும். சற்று நேரம் அமர்ந்து பேசியதுமே கிளம்பிவிடுவோம். அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் நமக்குள் ஒரு வகையான மனநிம்மதியும், ஏதோ ஒரு பிடியிலிருந்து விடுப்பட்டது போல தோன்றும்.
இது நம்முள் பெரும்பாலானோர் அனுபவித்த உணர்வு என்றாலும் அதை எத்தனைப் பேர் நினைத்து அதன் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துள்ளீர்கள்? ஏன் அப்படி நம்முள் ஒரு மாற்றம் ஏற்படுகிறது என்பதைப் பற்றியது தான் இந்த கட்டுரை. ஏனெனில் இது மாதிரியான நேர்மறை / எதிர்மறை உணர்வுகளை உணர்ந்ததாக பலர் சொல்லிக் கேட்டுள்ளேன். நானும் பல முறை உணர்ந்திருக்கிறேன்.
இந்தப் பதிவு ஒருவர் வீட்டில் நமக்கு அளிக்கப்படும் உபசரிப்பினாலோ அல்லது அவர்கள் நமக்கு அளிக்கும் மரியாதை / மதிப்பினாலோ எழும் மாற்றங்களைப் பற்றியது அல்ல. அந்த வீட்டினில் உள்ள ஆற்றல் /சக்தி எனப்படும் எனர்ஜி தான் எல்லாவற்றிற்கும் காரணமாகும்.
நாம் ஒருவர் வீட்டுக்கு செல்கிறோம் அவர்கள் நம்மை ராஜ உபசாரம் செய்கிறார்கள், நம் மீது அதீத மரியாதை மற்றும் மதிப்புடன் நம்மை நடத்துகிறார்கள் என்றாலும் நமக்கு ஒரு வகையான பதற்றம், சங்கடம், மனதில் அமைதியின்மை போன்ற உணர்வுகள் இருந்துக் கொண்டே இருக்கும். அதே சிலர் வீடுகளில் வெறும் தண்ணீர் குடித்தாலும் மனம் நிம்மதியடையும், மனதில் ஒரு வகையான மகிழ்ச்சிப் பொங்கும். இன்னும் சற்று நேரம் பேசிவிட்டுப் போவோம் என்று நம்மை தூண்டிலிட்டு அமர வைக்கும். இவை நேர்மாறாகவும் நடக்கலாம். அவை அனைத்தும் நாம் சந்திக்கும் நபரின் வீட்டினுள் உள்ள ஆற்றல்/சக்தி செய்யும் வேலையே!
அது என்ன ஆற்றல்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நம் வீட்டுப் பெரியவர்கள் அவர்கள் வீட்டை அவ்வளவு சீக்கிரம் விற்கவோ அல்லது இடித்து புதுபிக்கவோ விடமாட்டார்கள். அதற்கு காரணம் பெரும்பாலும் அது “அவர் கணவர்/மனைவி/அப்பா/ அம்மா வாழ்ந்த வீடு, அதிர்ஷ்டமான வீடு. ராசியான வீடு” என்று பலர் பலவகையாக கூறுவர். ஆனால் அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகம் உள்ளது என்பது தான் உண்மையான காரணமாகும். ஆம் நமக்கு எப்படி நேர்மறை /எதிர்மறை எண்ணங்கள் /சிந்தனைகள் உள்ளதோ அதே போல நாம் வசிக்கும் வீட்டிற்கும் நேர்மறை/எதிர்மறை ஆற்றல் எனப்படும் பாஸிடிவ்/நெகடிவ் எனர்ஜி உள்ளது.
அதைப் பற்றி பலர் பல விதமாக எழுதியும், காணொளியாகவும் பதிவிட்டுள்ளனர். அவைகளை இணையதளத்தில் பறக்கவிட்டு, தங்கள் வீட்டில் இது சரியில்லையோ, நம்ம வீட்டில் இது இருப்பதால் / இல்லாததால் தான் அது நடந்ததோ என்று எண்ணும் அளவிற்கு மக்களை கொண்டுச் சென்றுவிட்டனர். அதற்கு வாஸ்து சரி செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றும், வீட்டில் இதை வாங்கி இந்த இடத்தில் வைத்தால், அதை வாங்கி அந்த இடத்தில் வைத்தால் சரியாகிவிடும் என்றும் பலர் கூறி மக்களைக் குழப்பம் என்னும் குட்டையில் தள்ளிவிட்டு கலங்கச் செய்து அதில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள் பல வழிகளில்.
கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் எல்லா திசைகளிலும் இருப்பார் நமது பிக் பாஸ் வீட்டினுள் உள்ள காமெராக்களைப் போல எங்கும் நிறைந்திருப்பார். அவரிடமிருந்து எவருமே ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்றிருக்கும் அவரையே நம்மக்கள் ஒரு குறிப்பிட்ட திசையை பார்த்து தான் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். ஏன்? எதற்கு?. ஒரு சிலர் கிழக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு என்கிறார்கள், வட இந்தியாவில் மேற்குப் பார்த்து வைக்க வேண்டும் என்கிறார்கள். இதில் நான் படித்த ஒரு கட்டுரையை பற்றி உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன் நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்.
அந்த கட்டுரையில் ஒரு வீட்டின் பூஜை அறையை வடகிழக்கு / தென்கிழக்கு/ கிழக்கு/வடக்கு மூலைகளில் வைத்தால் தான் நமக்கு நல்லது நடக்கும் என்று கட்டுரையின் துவக்கத்தில் எழுதியிருந்தது. அதே கட்டுரையின் முடிவில் நான்கு திசைகளான கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று எல்லா திசைகளிலும் பூஜை அறையை அமைக்கலாம் என்றும் பதிவிடப்பட்டிருந்தது. கட்டுரையை முழுவதும் படிக்காமல் முதல் மூன்று பத்திகளை மட்டும் படித்தால் நாம் நமது வீட்டின் பூஜை அறையை மாற்றி வைக்க வேண்டும் என்னும் அளவிற்கு நம் மனம் எண்ணத் துவங்கிவிடும், அப்படி இருந்தது அந்த கட்டுரையின் ஆரம்பத்திலிருக்கும் மூன்று, நான்கு பத்திகளும். இது நம் வீட்டின் எல்லா அறைகளுக்கும் நமது வீடு முழுவதுக்குமாக நாம் யோசிக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயமாகும். இங்கே ஒரு உதாரணத்திற்காக பூஜை அறையை குறிப்பிட்டுள்ளேன். இவை எல்லாம் சொந்த வீடு வாங்கிய அல்லது இருக்கும் நபர்களுக்கு சரி, ஆனால் வாடகை வீட்டிலிருப்பவர்கள் எப்படி மாற்றி அமைக்க முடியும்? அப்போ அவர்கள் வீடுகளில் எப்பொழுதும் பிரச்சினை என்றோ அல்லது எதிர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும் என்றோ எடுத்துக்கொள்ள முடியுமா என்ன?
அவரவர் பின்பற்றும் முறைகள் அவரவர் தனிப்பட்ட விருப்பமே. அதில் எந்த வித கருத்தையோ/எண்ணத்தையோ/ அபிப்பிராயத்தையோ/பின்பற்றும் முறையையோ தவறென்றோ இல்லை குற்றமென்றோ கூற நமக்கு உரிமையில்லை. ஆனால் எளிதாக சில மாற்றங்களை நம்முள் நாம் கொண்டுவந்தாலே போதுமானது என்று சொன்னால்!! அனைவரும் சற்று சிந்திக்கத் துவங்குவார்கள் இல்லையா? அது போல, சில மிகவும் எளிமையான விஷயங்கள், மாற்றங்கள் நமது வீட்டினில் உள்ள எதிர்மறை ஆற்றல் எனப்படும் நெகடிவ் எனர்ஜியை துறத்தியடிக்க வேண்டியவையாகும். அது சொந்த வீடானாலும் பொருந்தும் வாடகை வீடானாலும் பொருந்தும்.
நல்ல வெளிச்சம் மற்றும் காற்று ஆகிய இரண்டும் நம் வீட்டினுள் நிறைந்திருக்கும் படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுவே மிக முக்கியமான தேவைகளில் ஒன்று.
மற்ற எல்லாவற்றையும் விட நம் வீட்டிலிருக்கும் எதிர்மறை ஆற்றலை துறத்த மிக மிக முக்கியமான அவசியமான ஒன்று என்னவென்றால் அதுநாம் தான். நமது வீடு நம்முடைய பிரதிபலிப்பே ஆகும். வீட்டில் வசதி இருக்கிறதோ இல்லையோ வாஸ்து படி அமைந்திருக்கிறதோ இல்லையோ அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சில மாதங்கள் நமது வீட்டில் ( சொந்த வீடோ/ வாடகை வீடோ)
வெறுப்பு மற்றும் வன்மத்தை வெல்ல அதை மறப்பதே ஆகும்.
மற்றவர்களை நமக்கு போட்டியாக எண்ணாமல் நம்மோடு நாமே போட்டியிட்டு நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ளவேண்டும்.
பொறாமைக்கு ஆதார காரணம் அதீத ஆசை மற்றும் போட்டி. போட்டியைப் பற்றி புரிதல் ஆகிவிட்டது. இல்லையா? ஆசை பட வேண்டும். ஆனால் அது எதற்கு? ஏன்? என்று ஆராய்தலும் வேண்டும். ஆசை நியாயமானதாகவும் இருத்தல் வேண்டும். ஆரோக்கியமான ஆசைகளை, பொறாமையை தூண்டாத ஆசைகளை வளர்த்துக் கொள்ளல் வேண்டும்.
நம்மால் முடிந்தால், நம்மால் முடிந்ததை, நாலு பேருக்கோ, நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ உதவுவோம். எந்த வகை நல்லுதவி ஆனாலும் செய்வோம். அப்படி முடியாத பட்சத்தில் எவருக்கும் உபதிரவம் செய்யாமல் இருப்போம். எவரும் நமக்கு தாழ்ந்தவர்களும் இல்லை, நம்மைவிட உயர்ந்தவர்களும் இல்லை அனைவரையும் ஒரே மாதிரியாக எண்ணுவோம், அதுபடியே நடத்துவோம்.
நமது வீட்டிற்குள் இருக்கும் நேர்மறை / எதிர்மறை ஆற்றல் நம்முள் இருந்து வந்ததே என்பதை உணர்ந்தால் போதும். அதற்கு என்ன செய்ய வேண்டும் / கூடாது என்று நமக்கே புரிந்து விடும். “ஆடத் தெரியாதவர் மேடைக் கோணல்” என்றார் என்பது போல நம்மை நாம் மாற்றிக் கொள்ளாமல் வீட்டைக் குறை சொல்வானேன்!!!
நல்ல சிந்தனைகள், எண்ணங்கள், உண்மை, நம்பிக்கை, பொறுமை, மனநிறைவு ஆகியவைகளை நம் இல்லம் முழுவதும் விதைத்து வாழ்ந்துப் பாருங்களேன் எந்த திசை வீடாக இருந்தாலும் எல்லாப் பக்கங்களிலிருந்தும் நேர்மறை ஆற்றலே நமக்கும் நம் வீட்டுக்கு வருவோருக்கும் மனமுழுவதும் நிறைந்து நம் இல்லம் இனிமையான அனுபவத்தையே தரும் சொர்க்கமாகும்.
குடும்பங்களும், நண்பர்களும், இப்பொழுது வாட்ஸ்அப் குழுக்களாக அமைந்து செவ்வனே செயல்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. அம்மா வழி சொந்தங்கள், அப்பா வழி சொந்தங்கள் என்று பிள்ளைகளும், அவர் வழி உறவினர்கள், அவள் வழி உறவினர்கள் என்று தம்பதிகளும் மற்றும் அம்மா, அப்பா, மகன், மகள் தனித்தன்மையான ஒரு குடும்ப பெயருடன் ஒன்றும், பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், அலுவலக நண்பர்கள் என்றும் பலவகை குழுக்கள் உள்ளன எல்லாருடைய அலைபேசியிலும்.
அனைவரது வாட்ஸ்அபிலும் தனி நபரின் எண்(எந்த குழுவிலும் இல்லாதவர்) கடைசியில் தான் வரும் அதுவும் ஏறிப்போனா ஒரு பத்து இருக்கும் அவ்வளவுதான் மிதமுள்ள அனைத்து எண்களும் பல தரப்பட்ட குடும்ப பெயர்கள் கொண்ட குழுக்களில் அல்லது நண்பர்களின் குழுக்களில் ஏதேனும் ஒன்றில் அடங்கும். சில சமயம் ஒரே நபர் பல குழுக்களிலும் இருப்பர். எல்லாருடைய விஷயங்களும் தெறிஞ்சுக்க வேண்டாமா அதுக்கு தான். அப்படிப்பட்ட ஆசாமிகள் ஒரு குழுவில் நடப்பதை அடுத்த குழுவினர்களுக்கு கொண்டு சேர்க்கும் இறக்கை இல்லா பறவை போல அங்கும் இங்குமாக மெஸேஜ்களை தட்டிவிடும் நவீன நாரதராவார்கள்.
இந்த குழுக்களில் பல சுவாரசியமான உரையாடல்கள் நடைப்பெறுவதும் உண்டு. வம்புகள் உருவாவதும் உண்டு.ஒரு குடும்ப வாட்ஸ்அப் குழுவிலிருந்து வெளியேறினால் ஏதோ குடும்பத்தை விட்டே வெளியேறியது போல ஒரு தாக்கத்தை கொடுத்து விடுவார் அந்த குழுவின் நிர்வாகி.
எவரேனும் ஒருவருக்கு மற்றொரு குழு உறுப்பினர் மீது மனஸ்தாபமோ, கோவமோ, வருத்தமோ, ஏன் வயித்தெரிச்சலாக கூட இருக்கலாம்..அப்படி இருக்கும் பட்சத்தில் பல தத்துவங்கள் ..யாரோ ஒரு புண்ணியவான் எழுதியதோ / படமாக்கப்பட்டதோ இணையதளத்தில் சுதந்திரமாக பறந்துக்கொண்டிருபதில் ஒன்றை அவர்கள் மனநிலைக்கேற்ப பகிர்ந்து எவருக்காக போடப்பட்டதோ அவரின் ரியாக்ஷனுக்காக… தூண்டில் போட்டு மீன் எப்போ வந்து மாட்டும் என்று மீன்பிடிப்பவர் தூண்டிலை அடிக்கடி தூக்கிப்பார்ப்பது போல் அலைபேசியை எடுத்து எடுத்து பார்த்துக்கொண்டே காத்திருப்பதில் அவர்களுக்கு தனி சுகம் போலும். முன்பெல்லாம் ஏதாவது விஷேஷங்களில் ஒன்று கூடும்போது நடைபெறும் அரட்டை அதனால் விளையும் வம்புகள் இப்பொழுது அலைபேசியில் நடைபெற்றுவருகிறது.
எந்த நபருக்காக போடப்பட்டதோ அவர் அந்த தூண்டிலில் மாட்டினால் அன்று முழுவதும் குழுவில் தீபாவளி தான். அப்படியே அவர் கழுவுற மீனில் நழுவுற மீனாட்டம் இருந்தாலும்….சில நமத்து போச்சுன்னு எண்ணிக்கொண்டிருக்கும் ஊசி பட்டாசுகள் கூட மெதுவா பட் பட் என்று வெடிக்க ஆரம்பிக்கும் அதனுடன் ஓல வெடி மெல்ல சேர பின் லக்ஷ்மி வெடிகள் சரங்களாக மெஸேஜுகளைக் கோர்க்க… கடைசியில் இந்த சப்தத்தை எல்லாம் அடங்க செய்ய …நம்ம மீன்… ஆட்டம் பாம் போல ஒரு பெரிய மெஸேஜை தட்டிவிட…அதில் ஊசி வெடிகளும், ஓல வெடிகளும் தெறித்து ஓட, சமந்தமே இல்லாத சங்கு சக்கரங்களும், புஸ்வானங்களும் சரசரக்க, சில ராக்கெட்டுகள் குழுவிலிருந்து வெளியேற. தொட்டால் சுட்டு பொசுக்கிவிடும் அளவிற்கு சுட சுட குழு இருக்கும் போது மெதுவாக ஒரு ரோல் கேப் உள்ளேன் ஐயா என்று ரோலாகி வந்து முதலாவது மெஸேஜிலிருந்து பதிலளிக்க.. மீண்டும் அடுத்த ரவுண்டு தொடங்கும். அதில் சம்மந்தமே இல்லாத சில வெளிநாட்டு வெடிகள் உள்நுழைய அனைத்து சூடான உள்நாட்டு வெடிகளும் அவைகள் பக்கம் திரும்ப திரியைக்காணோம் காகிதத்தைக்காணோமென்று வெளிநாட்டு வெடிகளும் குழுவை விட்டு வெளியேற, குழுவின் சமாதானப் புறாக்களான பென்ஸில், மத்தாப்பு தனி தனியாக மெஸேஜ் செய்து தூது போக வெளியேரியவர்கள் அத்துனைபேரும் மீண்டும் குழுவில் சேர்க்கப்படுவர். காரணங்கள் வேறுப்பட்டாலும் இது பெரும்பாலும் எல்லா குழுக்களிலும் நடக்கும் ஒரு அத்தியாயம் ஆகும்.
இதில் உன்னித்து பார்த்தோமேயானால் மீனவன் ஒரே ஒரு தத்துவத்தை கவிதையாகவோ/ மெஸேஜாகவோ/ வீடியோவாகவோ தட்டிவிட்டுட்டு கம்முன்னு தீபாவளி வாணவேடிக்கையை ரசித்துக்கொண்டு இருப்பார். மீனும் தவிர்க்க முயன்று பின் சலசலப்பை அடக்க ஒரே ஒரு மெஸேஜை தட்டிவிட்டுட்டு மீதி எல்லாருடை மெஸேஜையும் படித்தவண்ணமே இருக்கும். இதை குழு உறுப்பினர்களில் சிலர் உணர்ந்து எல்லா நேரங்களிலும் புஸ்ஸான புஸ்வானம் போல பார்வையாளர்களாக மட்டுமே இருப்பார்கள். இன்னும் சிலர் சரவெடியில் முதலிலும் இறுதியிலும் மட்டும் வெடிக்ககூடிய ஊசிவெடிப்போல் காலை வணக்கம் மற்றும் இரவு வணக்கம் மட்டும் சொல்லிக் கொண்டே யார் யார் எப்படி வெடிப்பார்கள், ஏன் வெடிப்பார்கள், எதற்கு வெடிப்பார்கள் என்பதை எல்லாம் உலகநாயகனின் மகளிர்மட்டும் திரைப்படத்தில் வரும் தாத்தாப்போல அனைத்தையும் கிரகித்துக்கொண்டு ஊதுவத்தியாக சரியான நேரத்தில் சரியான பட்டாசை பத்தவைத்துவிடுவார்கள்.
ஆக இந்த தீபாவளி இவ்வளவு சிறப்பாக வாணவேடிக்கைகளுடன் நடந்து முடிந்ததற்கு காரணகர்த்தா யார்?
தூண்டிலிட்டுக்காத்திருந்த மீனவனா? தூண்டிலில் இருந்து நழுவப்பார்த்து பின் தானே போய் சிக்கிக்கொண்ட மீனா? இல்லை தேவையில்லாமல் வெடித்த இதர பட்டாசுகளா?
இதுபோன்ற மீனவர்கள் வாட்ஸ்அபிலும், வாழ்க்கையிலும், இணையதளத்திலும் அவரவர் மனநிலைக்கேற்ப பலவித மெஸேஜை தூண்டிலாக இட்டு மீன்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். நாம் மீனாக தூண்டிலில் மாட்டாமலும் அனாவசியமாக இதர பட்டாசுகளை போல தேவையில்லாத இடங்களிலும் நேரங்களிலும் வெடிக்காமலும் இருந்தால் பல பிரச்சனைகளை மிக சுலபமாக கடந்து மன அமைதியுடன் வாழலாம்.
முதன் முதலில் பள்ளிக்கு எனது ஒரே மகனை அனுப்பியது இன்றும் என் கண்முன்னே இருக்கிறது. அது ஆகிவிட்டது பதினெட்டு வருடங்கள் ஆனாலும் இன்றும் பசுமையான நினைவுகளாக என் மனம் அசைப்போட்டுக்கொண்டே தான் இருகிறது.
பள்ளிக்கு சென்று அவனை வகுப்பறையில் அமரவைத்து நான் வெளியே வந்ததும் என் மகன் பின்னாலேயே ஓடிவந்து அம்மா…அம்மா….என்ன விட்டுட்டு போகாதே அம்மா….என்று கதறி அழுதது, அவனது ஆசிரியை என்னை அங்கு நிற்காமல் செல்லும் படி கூறியது, என்னைச் சுற்றி ஆட்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வே இல்லாமல் நானும் என் மகனைப் பார்த்து அழுத வண்ணம் நின்றது எல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கையில் மனதிற்குள் சிரிப்பு வருகிறது ஆனால் அன்று அந்த கணம் நான் நொறுங்கி போனேன்.
என் குழந்தை சாப்பிட்டதா? டாய்லட் போக அனுமதி கேட்க சொல்லிக்கொடுத்தேனே ஒழுங்கா கேட்க தெரியுமா இல்லை பயத்தில் கேட்காமல் உட்கார்ந்திருப்பானா, மற்ற குழந்தைகளுடன் விளையாடுவானா? என்றெல்லாம் பல கேள்விகள் உதித்து என் நிம்மதியை குலைத்தது.
என் கணவரிடம் அடிக்கடி அவன் இன்னமும் அழுதுக்கொண்டிருப்பானா? சாப்பிட்டிருப்பானா? சண்டையிடாமல் மற்ற பிள்ளைகளுடன் விளையாடுவானா? என்று தொனதொனக்க அவர் என் புலம்பல்கள் கேட்டு …..
“இதெல்லாம் நீ அந்த பள்ளில வேலை செய்தால் உன் புள்ள பக்கத்திலிருந்தே தெரிஞ்சுக்கலாம். என்ன கேட்டா நானும் உன்ன மாதிரி இங்க தானே இருக்கேன்.”
சாயங்காலம் அவன் வந்ததுக்கப்பரம் கேட்டு தெரிஞ்சுக்கலாம். இப்போ போய் வேற வேலைய பாரு என்று கடுப்படித்தார். பாவம் அவரும் பிள்ளை நினைப்பில் தான் இருந்திருப்பார் ஆனால் என்னைப்போல காட்டிக்கொள்ள வில்லை அவ்வளவுதான்.
ஆனால் அவர் சொன்னதில் ஒரு விஷயம் என் மனதில் பதிந்தது “நீ அந்த பள்ளியில் வேலை செய்தால்” பிள்ளையை பிரிய மனமில்லாமல் அதே பள்ளியில் ஆரம்ப பள்ளி ஆசிரியை வேலைக்கு விண்ணப்பித்தேன்.
இன்டர்வியூ நாள் வந்தது அங்கே என்னை நோக்கி பாய்ந்த முதல் கேள்வி….
“இது உங்கள் படிப்பிற்கு ஏற்ற வேலை அல்லவே… நீங்கள் போஸ்ட் கிராஜுவேட் முடித்துள்ளீர்கள் பின்பு ஏன் விண்ணப்பித்தீர்கள் என்பதை தெரிந்துக் கொள்ளலாமா?” என்று கேட்டார்கள்.
என் மகனுக்காக! மகனுடன் இருப்பதற்காக சேர்ந்தேன் என்று கூறமுடியுமா!! ஏதோ ஆசிரியை ஆக ஆசை அது இது என்று சொல்லி ஒரு வழியாக என் மகன் பள்ளி செல்ல ஆரம்பித்த ஒரு மாதத்திற்குள் நானும் ஆரம்ப பள்ளி ஆசிரியை ஆனேன். முன்னனுபவம் ஏதுமின்றி. அதுவும் எல்.கே.ஜி வகுப்பு எனக்கு தரப்பட்டது. என் மகனுக்காக ஆசிரியை ஆனாலும் அந்த பிஞ்சு முகங்களை தினமும் பார்ப்பதில் பேரானந்தமாக இருந்ததை உணர்ந்தேன்.
ஆசிரியை ஆயாச்சு என் மகனுடன் ஒன்றாக பள்ளிக்கு சென்று வரலாம் என்று எண்ணினேன். ஆனால் வேலையில் சேர்ந்த பிறகு தான் தெரிந்தது ஆசிரியர்கள் பள்ளி முடிந்த நேரத்திலிருந்து ஒரு மணிநேரம் ஆன பின்னரே வீட்டுக்கு செல்ல முடியும் என்பது. அந்த ஒரு மணிநேரம் என் மகனை எங்கே விடுவது என்ற கேள்வி எழுந்தது.
பள்ளியில் அவனை சேர்க்க….. அவனை பிரிய மனமில்லாமல் நான் ஆசிரியையாக சேர….. பின் எனக்காக அவன் ஒரு மணிநேரம் பள்ளியில் காத்திருக்க வேண்டியிருந்தது. அவனுக்காக காலை மத்திய உணவு போக தனியாக மாலை உண்பதற்கு ஏதாவது தினமும் எடுத்து செல்வேன். இதோடு எல்லாம் முடிந்தது இனி சுபமே என்று பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த சிக்கல் வந்தது.
என் மகன் தனது வகுப்பிலிருந்து ஓடிவந்து எனது வகுப்பில் அமர ஆரம்பித்தான். அம்மாவின் வகுப்பில் தான் அமருவேன் என்று ஒரே அழுகை வேறு. அந்த பள்ளி தலைமை ஆசிரியை முன் நானும் என் மகனும் நின்றோம். எங்கள் பிரச்சினையை முன் வைத்தோம். அவர் என் மகன் என் வகுப்பில் அமர அனுமதித்தார். அவன் என் வகுப்பில் அமர சில நிபந்தனைகளை நான் அவன் முன் வைத்தேன். நல்ல பிள்ளையாக அவை அனைத்தையும் கடைபிடித்து எனக்கு ஒத்துழைத்தான் என் மகன்.
வகுப்பில் மேடம் என்று தான் அழைப்பான் அம்மா என்று ஒருபோதும் அழைத்ததில்லை. தனது அம்மா தானே என்று எந்த வித சலுகைகளையும் அவனும் எதிர்ப்பார்க்கவில்லை நானும் கொடுக்கவில்லை. இப்படியே எல்.கே.ஜியும், யூ.கே.ஜியும் இருவரும் ஓன்றாக ஒரே வகுப்பறையில் படித்தோம். ஆம் அவன் படித்ததோ பாடப்புத்தகம் ஆனால் எனது வகுப்பில் இருந்த முப்பது குழந்தைகளும் என் மகன் உள்பட எனக்கு முப்பது வாழ்க்கை பாட புத்தகங்கள் ஆனார்கள்.
குழந்ததைகளுடன் நாம் இணைந்து பயணிக்கும் பயணத்தில் பல பாடங்களை நமக்கு மிக சுலபமாக கற்று தந்து விடுவார்கள்.
கவலை என்பது அடுத்த நிமிட நிகழ்வில் மறக்க வேண்டும்,
அழுதாலும் நம்மால் மற்றொருவரின் பேச்சைக்கேட்டு சிரிக்கவும் முடியும்,
ஒன்றாக இருந்தால் சந்தோஷம் பெருகும்,
ஏதேனும் மறந்தாலும் அதை அழகாக கதை போல சொல்லி கவர்வது,
வெளிப்படையாக போலித்தனமில்லாமல் பேசுவது என்று பலவற்றை நாம் அவர்களோடு இருந்தால் கற்றுக்கொள்ளலாம். நானும் கற்றுக் கொண்டேன்.
பெற்றோர்கள் என்னிடம் வந்து எங்கள் பிள்ளைகளுக்கு நீங்க ன்ன ரொம்ப பிடிக்கும் மேடம்…..எங்க மேம் அது சொன்னாங்க இது சொன்னாங்க என்று எப்ப பார்த்தாலும் சொல்லிக்கிட்டே இருக்காங்க என்று கூறும்போது சற்று சங்கோஜமாகவும் அதே சமயம் சந்தோஷமாகவும் இருந்தது. இதுவே என் முப்பது செல்வங்களும் எனக்களித்த முப்பது அவார்டாக கருதிக்கொண்டு இருக்கையிலே…. பிஞ்சுகளால் நான் அந்த ஆண்டின் பள்ளி ஆண்டுவிழாவில் சிறந்த ஆசிரியை பரிசுப்பெற்றேன். என் வகுப்பு பிள்ளைகளும் நிறைய போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றனர்.
எனது மகன் ஒன்றாம் வகுப்புக்கு தேர்ச்சி ஆனான். அவனின் பாதை நண்பர்கள், படிப்பு, விளையாட்டு என்று மெல்ல மாற துவங்கியது. நானும் என் பாதையை மாற்றி அமைத்துக்கொண்டேன். +1 மற்றும் +2 வகுப்பு பிள்ளைகளுக்கு அக்கௌன்டன்ஸி மற்றும் காமர்ஸ் ஆசிரியையாக ஆர்மி ப்பளிக் பள்ளியில் நியமிக்கப்பட்டேன். என் படிப்பிற்கும் வேலைக்கும் அன்று சம்பந்தத்தை ஏற்ப்படுத்திக்கொண்டேன். அன்று யோசித்துப்பார்த்தேன்…. மகன் தான் சிறுப்பிள்ளை என்றால் நானும் சிறுப்பிள்ளை தனமாக இருந்ததை உணர்ந்தேன். என் சிறுப்பிள்ளை தனம் என்னை எனக்கே புரியவைக்க கடவுள் கொடுத்த ஒரு நல்ல, சிறந்த வாய்ப்பாக நான் கருதினேன்.
எனது இந்த உணர்வு எல்லா தாய் மார்களும் அவர்கள் பிள்ளைகள் பள்ளி செல்லும் முதல் நாள் அனுபவித்திருப்பார்கள்.
இன்று என் மகன் வெளிநாட்டில் இஞ்சினியரிங் படித்து வருகிறார். அவரை கல்லூரியில் சேர்க்க நானும் என் கணவரும் அவருடன் சென்றிருந்தோம். ஒரு வாரம் ஹோட்டலில் தங்கியிருந்தோம். மூன்று நாட்கள் ஓரியன்ட்டேஷன் என்று ஓடியது. ஒரு நாள் காலேஜ் ஹாஸ்டல் ரூமை அவருக்கு செட் செய்து கொடுப்பதில் கழிந்தது. ஒரு நாள் ஊரை சுற்றிப்பார்ப்பதில் சென்றது. ஆறாவது நாள் கல்லூரி வகுப்புகள் ஆரம்பம் ஆனது.
ஏழாவது நாள் நாங்கள் ஊருக்கு திரும்பும் நாள் ….காலை உணவு அருந்திவிட்டு நேராக கல்லூரிக்கு சென்று எங்கள் மகன் வகுப்பு முடிந்து வரும் வரையில் காத்திருந்தோம். அவர் வந்தார் நாங்கள் மூவரும் மத்திய உணவு ஒன்றாக அமர்ந்து அருந்தினோம். ஏதோ என் மனதில் ஒரு கலக்கம். முதல் முறையாக மகனை தூரதேசத்தில் விட்டுவிட்டு பிரியபோகிறோமே என்றா… சொல்ல முடியாத ஒரு தவிப்பு….அப்பாவும் மகனும் மும்முரமாக வகுப்புகள், லெக்சரர்கள், கல்லூரி, பாடம் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். நான் என் மகனை பார்த்துக்கொண்டே இருந்தேன் ஏதும் பேசாமல். அவரும் என்னை அடிக்கடி பார்த்தார் ஆனால் பேசவில்லை. பின் கேட்டார் “என்ன அம்மா பார்த்துண்டே இருக்க?”
நான் என் மகனைப்பார்த்து….
“இப்போ உன்னுடன் உன் கல்லூரியில் தான் இருப்பேன், உன் வகுப்பறையில் தான் அமர்வேன் என்னை கூட்டிக்கொண்டு போகதான் வேண்டும்”
என்று நான் இப்போ அடம்பிடித்தால் என்ன ஆகும் என்றேன்.
மகன் பதில் அளிப்பதற்கு முன் என் கணவர் முந்திக்கொண்டு
“அம்மா தாயே விட்டா நீ உன் பையன் பின்னாடியே இஞ்சினியரிங் காலேஜ் லெக்சரரா போயிடுவ…..நான் ஒருத்தன் இங்கே இருக்கேன் மா…. மனமிறங்கி வா தாயீ”
என்றதும் மூவருக்கும் சிரிப்பு மழையில் அன்று முழுவதும் ஊருக்கு கிளம்பும் வரையில் பழைய நினைவுகளால் நனைந்தோம்.
அன்றும் அழுதேன் என் மகனைப் பிரியும் பொழுது. அதே மாதிரி சிந்தனை பழக்கமில்லாத நாட்டில் மகனை தனியே விட்டுவிட்டு போகபோகிறோமே! என்ன செய்வாரோ!!!! என்றல்ல எங்கள் மகன் இன்று இவ்வளவு படித்து, பல திறமைகளை வளர்த்துக்கொண்டு, இப்படி ஒரு கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்து அதை தைரியமாக ஏற்று தனித்திருந்து சாதிக்க போகிறார் என்ற பெருமிதத்தில் வந்த ஆனந்த கண்ணீர் ஆகும்.
நமது தமிழ், நமது மொழி. மூன்றாம் பகுதி உங்களுக்காக ….
தமிழ் மொழி சாதாரணமாக ஒரு மொழியின் பெயர் மட்டுமல்ல.. அதற்கு அழகு, இனிமை, அமுது என்றெல்லாம் அர்த்தம் உள்ளது. தமிழை தனித்தன்மை வாய்ந்த மிருதுவான அமிழ்தம் என்றும் கூறுவர். தம்+இழ் தமது உடைமை என்றும் பொருள் கூறியுள்ளனர். தம்+இதழ்+மொழி தமிதழ் மொழி பின்னர் தமிழ் மொழி ஆனது என்றும் சிலர் கருதுகின்றனர்.
எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது. இந்த எழுத்து வரக் கூடிய எந்தச்சொல்லும் பெரும்பாலும் அழகையும் , இனிமையையும் குறிப்பதகாவே இருக்கிறது. உதாரணத்திற்கு மழலை,குழல்,அழகு,குழந்தை,கழல்,நிழல்,பழம்,யாழ் இப்படி ‘ழ’வருகிற எல்லாமே நமக்கு விருப்பமானவை அல்லது பிடித்தவைகளே. ஆகவே இனிமையான ‘ழ’வைத் தன்னுள்ளே உடையது ‘தமிழ்’ (தமி+ழ்) என்பதும் ஒரு அழகான விளக்கமாக எனக்குப்பட்டதால் பகிர்ந்துள்ளேன்.
இனிமையான தமிழின் “ழ”கரம் வேறு எந்த மொழியிலும் இல்லை. அப்படியே இருந்தாலும் அது நமது மொழியிலிருந்து பெற்றவையாகும். இப்படி தனித்துவம் வாய்ந்த தமிழ் மொழி நமக்கு தெரியும் என்பதில் பெருமிதம் கொள்வோம்.
“ழ” என்ற எழத்தும், உச்சரிப்பும் நமக்கே உரித்தானது. இனி ஆங்கிலத்திலும் “Tamizh” என்றே நாம் எழுத பழக்கப்படுத்திக்கொள்வோம். இவ்வளவு பெருமைக்குரிய “ழ” வை “ல” என்று உச்சரிக்கும்போது எனது நெஞ்சுப் பொறுக்குதில்லையே….என்று பாரதி போல் சொல்ல தோன்றுகிறது.
அழை என்பதை அலை என்றால் உழு என்பதை உளு என்றால் எழு என்பதை எலு என்றால் கழகம் என்பதை கலகம் என்றால் கிழி என்பதை கிலி என்றால் தமிழுக்கே “கிலி” பிடிக்கும்.
அலகும் அழகு அளகும் அழகு ஆனால் உண்மையான “அழகு” தமிழை அழகாக உச்சரிப்பதில் உள்ளது. எனவே அழகு ..அலகு அல்லது அளகு ஆகவும் வேண்டாம் தமிழ் ..தமில் ஆகவும் அனுமதிக்க வேண்டாம்.
வலைப்பதிவு வாசகர்களுக்கு எனது முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்களும், தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும், தமிழ் பண்பாடும் எங்கெல்லாம் எவ்வாறெல்லாம்பயணித்துள்ளனர்/பயணித்துள்ளது என்பதை பற்றி போனபதிவில் எனக்கு தெரிந்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். அதற்கு விருப்பம் மற்றும் பாராட்டு தெறிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நான் படித்து, கேட்டு, தெரிந்து கொண்ட நம் தமிழ் மொழியின் சுவாரசியமான விஷயங்களின் இரண்டாம் பகுதி இதோ உங்களுக்காக.
உலகில் மிக பழமையான மொழிகளில் ஒன்று நமது தமிழ். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அடிச்சநல்லூர் தொல்பொருள் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் படி பார்த்தால் நம் மொழி சுமார் கி.மு 500 வருடங்களுக்கு முன் தோன்றியது என்றால் ஆச்சர்யம் தொற்றிக்கொள்ளாதா என்ன!!!! கி.மு காலத்தில் வழக்கத்தில் இருந்திருந்தாலும் இன்றும் ஜீவித்திருக்கும் பழமையான மொழி நமது தமிழ் மொழியே. ஆதியில் தோன்றினாலும் மாய்ந்து போகாமல் இன்றும் உலகளவில் பேசப்படும் மொழியாக தமிழ் திகழ்வதில் ஒவ்வொரு தமிழரும் தோள் தட்டி கொள்வோம்.
அறிஞர்கள் தமிழ் மொழியை மூன்று காலக்கட்டங்களாக பிரித்துள்ளனர். பழைய தமிழ் (கிமு 300 – கிபி 700), இடைக்கால தமிழ் (700 – 1600) மற்றும் நவீன தமிழ் (1600 – இன்றுவரை)
ஒரு கடவுளாக உருவகப்படுத்தப்பட்ட ஒரே மொழி நமது தமிழ் மொழி. அக்கடவுளை தமிழ் தாய் என்று அழைப்பர். தமிழ் தாய் கோயில் தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அமைந்துள்ளது. தமிழ்த்தாய்க் கோயிலின் பரிவார தெய்வங்களாக, வள்ளுவரும், இளங்கோவடிகளும், கம்பரும் தனி விமானம் கொண்டு காட்சி தருகின்றனர். தமிழ்த்தாய்க் கோயிலின் நுழைவாயிலின் முன் துவார பாலகிகளாக ஒலித்தாய், வரித்தாய் நிறுவப் பெற்றிருக்கின்றனர். ஒரு மொழிக்கு முக்கியமான ஒலி மற்றும் வரி துவார பாலகிகளாக …ஆகா விவரிக்க வார்த்தைகள் இல்லாமல் நின்றேன்….என்ன அருமையான அமைப்பு. கருவறையில் தமிழ்த்தாயின் வலப்புறம் அகத்தியரும், இடப்புறம் தொல்காப்பியரும் நின்ற நிலையில் விளங்குகின்றனர். தமிழ்த்தாய் நான்கு கைகளுடன் தாமரைப் பீடத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கின்றாள். சேர, சோழ, பாண்டியர்களான மூவேந்தர்களின் தமிழ்ப்பற்றை உணர்த்தும் வகையில் அவர்களின் சின்னங்களான வில், புலி, மீன் ஆகியவை தமிழ்த்தாயின் பின்புறம் உள்ள திருவாச்சியில் பொறிக்கப்பட்டுள்ளன. மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ் தாய் வாழ்த்து தமிழ் தாயான நமது தமிழ் மொழியை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமைந்திருக்கும். இப்பாடல் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். வேறு எந்த மொழிக்காவது இந்த சிறப்புகள் இருக்கிறதா?
நம் மொழியின் சிறப்புகள் என்னை முற்றுப்புள்ளி வைக்க தடை செய்வதனால் மீண்டும் அடுத்த பதிவில் நம் மொழியின் இன்னும் பல சுவாரசியமான தகவல்களுடன் சந்திப்போம். வாழ்க தமிழ்!!
ஒரு குழந்தை பிறந்து மூன்று மாதங்களில் கொடுக்கும் சப்தம் அ என்றே இருக்கும். குழந்தையின் தாய் சாதம் ஊட்டும் போதும் அ…அ…..அம் என்று சொல்லி தான் ஊட்டுவாள். நாம் முதலில் குழந்தையை அ…அ…அ…ம்மா என்றும் அ…அ…அ…அப்பா என்றும் தான் சொல்ல கேட்டு மகிழ்கிறோம். சரஸ்வதி பூஜை அன்று குழந்தைகளை முதல் மதலில் நெல்லை பரப்பி அதில் “அ” என்றே எழுதச்செய்வோம். நாமே எங்காவது இடித்துக்கொண்டாலோ அல்லது கீழே விழுந்தாலோ அம்மா என்று தான் முதலில் கூறுவோம். இப்படி நம் முதல் சப்த்தமும் சரி, எழுத்தும் சரி அகரத்திலேயே தொடங்குகின்றன.
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டே தொடங்குகின்றன. சிறந்த இந்த தமிழ் மொழியானது எங்கெங்கெல்லாம் பயணித்துள்ளது எவ்வாறெல்லாம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம் வாரீர்….
நமது தமிழ் மொழி உலகில் பேசப்படும் மொழிகளில் 20ஆது இடத்தையும், நம் மொழி பேசுபவர்கள் 1.06% விகிதம் உள்ளார்கள் என்று விக்கிப்பீடியாவில் பதிவாகியுள்ளது. ஆனால் நம்முன்னோர்கள் கூற்றுப்படி கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி நம் தமிழ் மொழியாகும்.
கண்டெடுக்கப்பட்ட பல கல்வெட்டுகள் மற்றும் நாணயங்கள் வைத்து நம்மவர் எங்கெல்லாம் பயணித்து நம் மொழியையும் பயணிக்க செய்தனர் என்பதை நாம் தெறிந்து கொள்ள வேண்டும். நான் அறிந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
தமிழானது ஆசியா, ஆப்பிரிக்கா, சீனா, கம்போடியா, எகிப்து மற்றும் இந்தோனேசியா வரை எட்டியுள்ளது. 18ஆம் நூற்றாண்டில் ஃப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலேயர் நம் தமிழ் மக்களை ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள பல நாடுகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால் நம் மொழி மற்றும் கலாச்சாரம் இன்றளவும் பல நாடுகளில் காணமுடிகிறது. உதாரணத்திற்கு மலேசியாவில் இருபது லட்சத்திற்கும் மேலானவர்கள் தமிழ் மொழி பேசுபவர்கள் என்று பதிவாகியுள்ளது என்றால் பாருங்களேன்.
சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் நமது தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகும். ஃப்ரெஞ்ச் காரர்களால் மொரீசியஸில் முதல் முதலில் குடியேறியவர்கள் நம் தமிழ் மக்களே. பின்பு ஆங்கிலேயர்கள் ஃப்ரெஞ்ச் காரர்களை வீழ்த்துவதற்கு மேலும் பல தமிழர்களை மொரீசியஸில் குடியேர செய்தனர். மொரீசியஸ் நாணயங்கள் தமிழ் மொழியில் இருக்கும்.
இவ்வாறு உலகம் முழுவதும் தமிழ் மொழியும், கலாச்சாரமும், பண்பாடும் வளர்ந்துள்ளது. நமது ஹரியானா மாநிலத்தில் தமிழ் மொழி உத்தியோகபூர்வ அங்கிகாரம் பெற்று திகழ்ந்தது 2010 ஆண்டு வரை. அதற்கு பின் பஞ்சாபியாக மாற்றப்பட்டது.
மேலும் தமிழ் மொழி பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை அடுத்த பதிவில் காண்போம்.
எங்களுக்கு இவ்வளவு உணர்த்திய உன்னை மறப்பது எளிதல்ல
உன்னை பிறப்பிக்க காரணமாக இருந்த எதுவானாலும் /எவரானாலும்… அவைகள் / அவர்கள் ஓடி ஒளிந்து கொள்ள நேரம் வந்துவிட்டது
ஏனெனில் நாங்கள் புத்துணர்ச்சியுடன், புதிய எண்ணங்களுடன், புதிய யுக்திகளுடன், மறந்துப்போன பழய பழக்கவழக்கங்களை புதுப்பித்து, புதிய வாழ்க்கை முறையை கையாண்டு புதுப்பொலிவுடன் மிளிர ஆயத்தம் ஆகிவிட்டோம்!!!!
மையின் சாரல்கள் பக்கம் வாசகர்களுக்கு எனது வணக்கங்கள். பல நேரங்களில் நமக்குள் பல கேள்விகள் உதித்து நம்மை அவற்றின் விடைகளை தேட வைக்கும். ஏன், எப்படி, என்று நமக்குள் நாமே கேட்டுக்கொண்டிருப்போம். இப்படி நம்முள்ளே பலருக்கும் விடை கிடைத்தும், கிடைக்காமலும் கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன. இதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் கீழே பகிர்ந்துள்ள குட்டி கதையை படிக்க வேண்டுகிறேன். உங்கள் பதில்களை படிக்க ஆவலோடு காத்திருக்கும் உங்கள் தோழி.
ராமு ஒரு நாள் பத்து விதைகள் வாங்கி வந்தான். அவற்றை தனித்தனியாக நட்டு வைத்து நீர் விட்டு பராமரித்து வந்தான். சில நாட்களில் எட்டு செடிகள் முளைத்தது. முளை விடாத இரண்டு விதைகளை மண்ணிலிருந்து தோண்டி எடுத்து வேறு ஒரு இடத்தில் விதைத்தான். அவ்விரண்டு விதைகளும் செடியாக வளர்ந்தது. ராமு சந்தோஷமடைந்தான்.
முதலில் முளைவிடாத இரண்டு விதைகள் ராமு அவற்றின் இடத்தை மாற்றிய பின் செடியானது. இதிலிருந்து நாம் எதை தெரிந்து கொள்வது…
விதைகள் செடியானது ….ராமுக்கு விதைகள் மேலிருந்த நம்பிக்கை காரணமா அல்லது