விஷாலின் வருகைக்காக கதவோரமாக காத்திருந்த சக்தி, அவன் கார் வருவதை கதவின் அருகே இருந்த ஜன்னல் வழியே பார்த்ததும் சட்டென கதவை திறந்து வெளியே சென்று விஷாலை வரவேற்றாள். இருவரும் வீட்டினுள் வந்ததும் விஷாலை கட்டிக்கொண்டு ஓவென்று அழுதாள். தன் சங்கடத்தை பகிர்ந்துக் கொள்ள ஆள் இல்லாது… அவஸ்தையில் இருந்தவள் விஷாலிடம் ஆறுதல் தேட, அதைக் கண்ட விஷாலுக்கு என்ன செய்வதென்று தெரியாது அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு தட்டிக்கொடுத்து சமாதானப்படுத்த முயன்றான். கொஞ்ச நேரம் மனம் விட்டு அழுதவள் விஷாலின் அரவணைப்பில் சற்று தேறியவளாய் அவனை விட்டு விலகி நின்று கண்களை துடைத்துக்கொண்டே அவனிடம்,
“சாரி வி.
உட்காரு.
சரி…என்ன குடிக்கற?
டீ, காஃபி ஆர் ஜூஸ்?”
என்று ஒன்றும் நடக்காதது போல் கேட்க அதற்கு விஷால் அவளின் சட்டென்ற மாறுதலை கண்டு திகைப்பில் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அதை கவனித்த சக்தி அவன் முன் வந்து நின்று,
“ஹேய் வி. வீ….
ஆர் யூ ஓகே!”
என்று அவன் கண்முன் கைகளை அசைத்து கேட்க அதற்கு உடனே அவன்,
“ஹலோ! மேடம்!
அதை நான் உங்ககிட்ட கேட்கணும்.
என்னது இது!”
“என்னது வி?”
“நான் உள்ள வந்ததும் என்னை கட்டிண்டு அப்படி அழுத.
சட்டுன்னு அப்படியே மாறி ஒண்ணுமே நடக்காதது போல டீயா காஃபியான்னு கேட்கற?
என்ன ஆச்சு தி?
ஏன் அப்படி அழுத?
எப்படி சட்டுன்னு இப்படி உன்னை நீயே மாத்திண்டுட்ட?”
என்று கேட்டுக்கொண்டே அடுப்படிக்குள் சென்ற சக்தியை பின் தொடர்ந்து சென்றான் விஷால். அங்கே அவள் இருவருக்கும் காஃபி போட்டுக் கொண்டே
“நீ ஒண்ணும் சொல்லாததால…
நான் நம்ம ரெண்டு பேருக்குமா காஃபி போடறேன்.
ஈஸ் இட் ஓகே!”
“ஏதோ ஒண்ணு தி.
மொதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”
என்று மீண்டும் கேட்டுக்கொண்டே, இரண்டு கப் காஃபியுடன் ஹாலுக்கு சென்ற சக்தியின் பின்னாலேயே சென்றான். அவள் காஃபி கப் டிரேவை காஃபி டேபிளில் வைத்துவிட்டு அதிலிருந்து ஒரு கப் காஃபியை எடுத்து விஷாலிடம் நீட்டினாள். அவன் கேள்விகளை தவிர்த்த தன்னிடமிருந்து காஃபி கப்பை வாங்காது நின்றிருந்தவனை பார்த்து,
“ஹேய் வி.
கம் ஆன் பா.
மொதல்ல உட்காரு.
இந்தா இந்த காஃபியை பிடி.
எல்லாம் சொல்ல தானே உனக்காக காத்துண்டு இருக்கேன்.
வந்ததும் வராததுமா இவ்வளவு கேள்விகளா!
ப்ளீஸ் உட்காரு வி.”
என்று கையில் எடுத்த காஃபி கப்பை மீண்டும் டிரேவில் வைத்து விட்டு அவனை இழுத்து சோபாவில் அமரச் செய்து அவனின் கையில் காஃபி கப்பை கொடுத்து,
“காஃபி ஆறிடபோறது.
ம்…டேக் எ சிப் மை டியர் வி.”
என்று சொல்ல அதற்கு விஷால் அவளை பார்த்து திரும்பி அமர்ந்துக் கொண்டு காஃபி கப்பை டேபிளில் வைத்து விட்டு,
“ஒருத்தன் வீட்டுக்குள்ள வந்ததும்…
அவனை கட்டிண்டு ஓ..ன்னு ஒருத்தி அழுதா…
நானுன்னு இல்ல…
என் இடத்துல யாரா இருந்தாலும் இப்படி தான் கேட்பா!”
“ஓகே. ஓகே.
டோட்டலி அக்செப்டட்.
சரி நீ காஃபி குடிச்சிண்டே நான் சொல்றதை கேளு.
ஓகே.”
“ம்…ம்…சொல்லு”
என்று காஃபி கப்பை எடுத்து குடித்துக் கொண்டே சக்தி சொன்னது அனைத்தையும் கேட்டு முடித்து காஃபி கப்பை டிரேவில் வைத்துக் கொண்டே,
“நீ ஏன் ப்ளூ பத்தின விஷயத்தை என்கிட்டேந்து மறைச்ச தி?”
“வி…அன்னைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் தரேன்னு சொன்னேனே ஞாபகம் இருக்கா?”
“ஓ அது இந்த ப்ளூ தானா?”
“எஸ்…ஆனா அன்னைக்கு என்னமோ தெரியலை தட்டிப் போச்சு.
ஆனா அப்பவே அவனைப் பத்தி உன்கிட்ட சொல்லாதது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்போ புரியறது.
இத்தனை வருஷமா அவனை பத்திரமா பார்த்துண்டதோடு அவனுக்குள்ள என்னென்ன பொருத்திருக்கேன் தெரியுமா?
இப்போ அவனையும் அவனுக்குள்ள இருக்கறதையும் தெரிஞ்சு கடத்திருக்காளா?
இல்லை வேறெதுக்காகவாவது கடத்திருக்காளா?
மொதல்ல ப்ளூ இங்க இருக்கறது கடத்தினவாளுக்கு எப்படி தெரிஞ்சுது?
அவன் சார்ஜிங் ஸ்டேஷன் பேஸ்மெண்ட்ல இருக்கறது அவாளுக்கு எப்படி தெரிஞ்சுது?
அவனை வச்சு என்ன பண்ண போறா?
அவன் தப்பானவா கையில போயிட்டா அப்பறம்….”
என்று பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே போன சக்தி அந்த கடைசி கேள்வியில் திகைத்து உறைந்து அமர்ந்திருந்தாள். அவளை தட்டிக்கொடுத்து சுயநினைவுக்கு வரவைத்து விஷால் அவளிடம்,
“தப்பானவா கைக்கு ப்ளூ போனா என்ன ஆகும் தி?
எதுவானாலும் இப்பவாவது உண்மையை மறைக்காம சொல்லு.”
அப்படீன்னா அந்த ப்ரொபசர் சேவியர் உன்கிட்ட கொடுத்த பொக்கிஷம் இந்த ப்ளூவா?
அதுனால என்ன ஆகும்?
நீ என்னென்ன மாடிஃபிகேஷன் செஞ்ச்ச?
தி…தி…தீ…”
என்று மூன்று முறை அழைத்தும், மூன்றாவது முறை குரலை உயர்த்தி அழைத்தது தான் அவளின் செவிகளை சென்றடைந்தது. உடனே,
“ஆங்! வி!
என்ன கேட்ட?”
“சரியா போச்சு போ!
அன்னைக்கு நைட்டு அந்த மயானத்துல நடந்ததா நீ சொன்னது…
எல்லாம் உண்மை தானே?
இல்லை வேறெதாவது இன்னும் ரகசியம் வச்சிருக்கியா?”
“ம்…அது வந்து…
அது இருக்கட்டும் வி.
அந்த ப்ரொபசர் சூசைடு பண்ணிண்டுட்டார்ன்னு சொன்னையே…
அது எப்போ எப்படி?”
“ம்…வழக்கம் போல என் கேள்விகளை தவிர்த்துட்டு,
என்கிட்ட பதில்களை எதிர்பார்க்கிற…”
“ப்ளீஸ் வி…சொல்லேன்.”
“நம்ம கெட்டு கெதர் நடந்த அடுத்த வாரமே இறந்துட்டதா தான் நியூஸ் வந்தது.
ஆமாம் அதை ஏன் இப்போ கேட்கிற?”
“இல்லை…
ஒரு வேளை அந்த ப்ரொபசர் உயிரோட இருக்காரோன்னும்…
அவர் தான் ப்ளூவ கடத்திருப்பாரோன்னும்…
ஒரு சின்ன சந்தேகம்…
அதுதான்…”
“தி…உன் சந்தேகத்துல ஒரு நியாயம் வேண்டாமா!
அவரு தான் ப்ளூவ உன்கிட்ட கொடுத்ததே!
சோ… அவருக்கு திருப்பி வேணும்ன்னா உன்கிட்ட கேட்டா நீ குடுத்துட போற…
அப்புறம் எதுக்கு அவர் இப்படி எல்லாம் உன்னையோ இல்ல ப்ளூவையோ கடத்தணும்? சொல்லு.
நீ சந்தேகப்படறதை பார்த்தா…
அப்போ ப்ளூ அவர் உனக்கு கொடுத்ததா நீ சொல்லற பொக்கிஷம் இல்லையா?
அது வேற ஏதோவா?
என்னை நம்பறன்னா…
முழு உண்மையையும் என்கிட்ட சொல்லு தி.
ஹாஃப் பேக்டு விஷயங்களை வச்சு என்னால உனக்கு ஒரு ஹெல்ப்பும் பண்ணமுடியாது.
இல்லை என்னோட ஹெல்ப் எதுவும் உனக்கு வேண்டாம்…
ஜஸ்ட் என்கிட்ட சொல்லி வென்ட் அவுட் ஆனா போறும்ன்னு நெனைச்சேன்னா…அதையாவது சொல்லு…
நான் தேவையில்லாம என்னை குழப்பிக்க மாட்டேன்.”
“வி…ப்ளூ தான் அந்த பொக்கிஷம்.
ஆனா அதுக்குள்ள ஒரு பொக்கிஷமும் இருக்கு.
எனக்கு அந்த ப்ரொபசர் உயிரோடு இருக்கலாம்ங்கற சந்தேகத்தை கிளப்பி விட்டதே நம்ம ஜேம்ஸ் தான்.”
“ஜேம்ஸா! அவனுக்கு எப்படி? எப்போ? இந்த விஷயமெல்லாம் தெரியும்?”
என்று விஷால் கேட்டதும், பக்கத்து வீட்டில் நடந்தவற்றையும், மிஸ்ஸஸ் டேவிட் பற்றியும், அதன் மூலம் பீட்டர் பற்றியும் எல்லாம் தெரிய வந்ததையும்…அதனால் ஜேம்ஸிடம் எல்லா விவரங்களையும் கூறியதையும், அதற்கு ஜேம்ஸ் எழுப்பிய சந்தேகங்களில் ப்ரொபசர் உயிருடன் இருக்கலாம் என்பதும் ஒன்று என்று சக்தி கூறி முடித்ததும், விஷால் அவளிடம்,
“அவன் போலீஸ்காரன்,
அவன் சந்தேகப்படறதுல ஒரு நியாயம் இருக்கு.
ஆனா நமக்கு தான் அவர் இறந்துட்டார்ன்னு தெரியுமே தி. அப்புறமும் ஏன் உனக்கு அந்த சந்தேகம்!”
“எனக்கு அவர் இறந்துட்டார்ன்னு தெரியாதே வி!
நான் அப்போ இங்க இல்லையே!
நீ சொல்லித் தானே எனக்கு தெரியும்.”
“அப்போ என்ன…
நான் சொல்றது பொய்யான தகவல்ன்னு சொல்றயா?”
“அப்படி நான் சொல்லல வி.
ஆனா ஏன் அப்படியும் இருக்கக் கூடாதுன்னு ஜேம்ஸ் கேட்டதால எனக்கும் அப்படி யோசிக்க தோணித்து அவ்வளவு தான்.”
“தி…அவர் இறந்துட்டார்ன்னு இங்க உள்ள எல்லா நியூஸ் பேப்பர்லயும் வந்தது.
நீ வேணும்னா அந்த வீக் நியூஸ் பேப்பரை… லைப்ரரில போய் பாரு.
அப்போ உனக்கு புரியும்.”
“ஓகே. டன்.
அவர் இறந்துட்டார்ன்னே வச்சுக்குவோம்.
அப்படின்னா!
என் ப்ளூவ கடத்தியது யார்?
என்னை கடத்தியது யார்?
ஏன்?
இதுக்கு உன்கிட்ட ஏதாவது பதிலிருக்கா?”
“அதுக்கு…
என்கிட்ட பதில் இப்போ இல்ல…”
“அப்போ எல்லா ஆங்கிளிலும் ஜேம்ஸ் போல யோசிக்கணும் தானே!”
“ஆமாம்.
நான் இல்லன்னு சொல்லலை.
ஆனா இறந்து போனவரை உயிரோடு இருக்கறதா யோசிக்கிறது எல்லாம் கொஞ்சம் டூ மச்சா இல்ல.”
“சரி வி.
இப்படியே அவரை பத்தியே பேசிண்டு இருந்தா எப்படி?
வேற ஏதாவது ஆங்கிள்ல யோசிச்சு நீயே சொல்லேன்.”
“எனக்கென்னவோ இதுல வேற யாரோ பெரிய இடம் சம்மந்தப்பட்டுருக்குமோன்னு தோணறது.
அதுவுமில்லாம ப்ளூ உனக்கும் ப்ரொபசருக்கும் மட்டும் தெரிஞ்சிருந்தா பரவாயில்ல…
ஆனா அதைப் பற்றி பக்கத்து வீட்டு மிஸ்ஸஸ் டேவிட்க்கும் தெரியும்ன்னு நீ சொன்ன விவரங்களேந்து தெரிய வர்றது.
யாருகிட்டேயுமே ப்ளூ பத்தி சொல்லாத நீ…
ஏன் பக்கத்து வீட்டு அந்த அம்மாட்ட மட்டும் சொல்லிருக்க?”
“ஆங்…
நான் இங்க குடி வந்த புதுசுல…
அவங்க ஒரு தடவை எங்காத்துக்கு வந்தா.
அப்போ அவா வந்திருந்தது தெரியாம அந்த ப்ளூ சட்டுன்னு அவா முன்னாடி வந்துடுத்து.
அதுனால சொல்ல வேண்டியதா போச்சு…
அதுவுமில்லாம… அம்மா மாதிரி அவங்கள நெனச்சதால சொன்னேன்.
ஆனா அது நான் தயாரிச்ச ரோபோன்னு தான் அவங்களுக்கு தெரியும்.
வேற எந்த விவரமும் அவங்களுக்கு தெரியாது.”
“ஒரு வேளை அவங்களா கூட இருக்கலாம் இல்லையா தி.”
“அவங்கள அப்படி சந்தேகப்பட தோணலை வி.”
“சரி அப்படி அந்த ப்ளூக்குள்ள என்ன தான் இருக்கு?
அந்த ப்ரொபசர் சேவியர் உன்கிட்ட அந்த பொக்கிஷமான ப்ளூவ எடுத்துக்க சொன்னார் ஓகே.
நீயும் அதை எடுத்துண்டு வந்துட்ட ஓகே.
அதை வைத்து உன்னை என்ன தான் பண்ண சொன்னார்.
நீ என்ன தான் பண்ணின?”
“வி…
நானும் ப்ரொபசரோட அந்த ரோபோ ஆராய்ச்சில அவர் கூடவே தான் இருந்தேன்.
என்னைப் பொருத்தவரை…
அந்த ரோபோ பேடன்ட் பெறுவதற்கான எல்லா விஷயங்களும் பூர்த்தியாகி இருந்தது.
அது பக்கவா ரெடியா தான் இருந்தது.
ஆனாலும் ப்ரொபசர் சேவியர் அதுக்கான பிரத்யேக ஆல்காரிதம் ஒன்றை ரெடி செய்துட்டு இருக்கறதாகவும்,
அதுனால பேடன்ட் ப்ரொசீஜரை தள்ளி வைக்கலாம்ன்னும் சொன்னார்.
நானும் சரின்னுட்டேன்.
அதுக்கப்புறம் அவரும் என்னை அது சம்பந்தமான ஆராய்ச்சில கூப்பிடலை.
நானும் அவரை கடைசியா அந்த மயானத்துல பார்க்குற வரை…
அவர் கூட அது விஷயமா எதுவுமே பேசிக்கலை.”
“அது என்ன அந்த பிரத்யேக ஆல்காரிதம்?”
“அது…அது வந்து…”
“சொல்ல விருப்பமில்லன்னா சொல்ல வேண்டாம் தி.
பரவாயில்லை.”
“அப்படி எல்லாம் ஒண்ணும்மில்ல வி.
“நியூரல் ஓவர்ரைடு” அப்படீங்கற புரட்சிகரமான ஒரு ஏ.ஐ அல்காரிதத்தை ப்ளூக்குள்ள மறைச்சு வச்சிருந்தார்.
ப்ளூ வெறும் ஒரு ரோபோ மட்டுமில்ல…
உலகையே மாற்றக்கூடிய ஒரு செயற்கை நுண்ணறிவு ரகசியத்திற்கான கடைசி மீதமுள்ள சாவி அது”
தொடர்வாள்…