
2025 ல் வெளிவந்த “எமகாதகி” திரைப்படம் உண்மையில் கதையை பொருத்தவரை எமகாதகி தான். வெட்டு, குத்து, துப்பாக்கி சூடு, இரத்தம், போதை பொருள் அடிமை, கடத்தல், கற்பழிப்பு, கருத்து திணிப்பு, போன்ற சேற்றின் நடுவே முளைத்திருக்கும் செந்தாமரை எனலாம். ரசிக்கும்படி இருக்கிறது. சீன்கள் ஒவ்வொன்றையும் எழுதி காட்டி புரியவைக்க முயற்சிக்காமல், காட்சிகளாலும் வசனங்களாலும் (திரைப்படம் என்றால் அப்படி தான் இருந்தது, ஆனால் சமீப காலமாக வெளிவந்த திரைப்படங்கள் இதை கூட பிரத்யேகமாக குறிப்பிட வைக்கிறது!) தெளிவாக கதை பயணிக்கும் விதம், ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல கதையுள்ள தமிழ் திரைப்படம் பார்த்த திருப்தி அளிக்கிறது.
கலாச்சாரம், தெய்வாம்சம், போராடும் குணம், பொய், திருட்டு, புறம் பேசுவது, காதல், வைராக்கியம், ஜாதி வெறி, பொறாமை, கணவன் மனைவி பிரச்சனை, குடும்பப் பிரச்சினை என்று ஒரே திரைப்படத்தில் அத்தனையையும் சரியான விகிதத்தில் சரியான இடத்தில் சரியான திருப்பங்களோடு இந்த படைப்பை நமக்களித்த கதாசிரியர்களான பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் மற்றும் எஸ். ராஜேந்திரன் ஆகிய இருவரையும் பாராட்டாமல் இருக்க முடியாது. ஒரு நல்ல கதையை எங்களுக்கு தந்தமைக்கு, வாழ்த்துகள் சகோதரர்களே!
அத்தகைய கதையை மிக அழகாக எவ்வித குழப்பமும் இன்றி காட்சிப்படுத்தி இருக்கும் அறிமுக டைரெக்டர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
“பயம்” என்ற ஒரு உணர்வு மனிதனின் மனசாட்சியை தட்டி எழுப்பும் என்பதையும், உண்மையை வெளிக்கொணரும் என்பதையும், மேலும் எல்லாவற்றிற்கும் விதிவிலக்கு என்று ஒன்று இருப்பது போல் இதற்கும் இருக்கிறது என்பதையும், அதையும் நேரமும் காலமும் காட்டிக்கொடுத்து விடும் என்பதையும் அழுத்தம் திருத்தமாக சொல்கிறது இந்தக் கதை.
ஒன்றிரண்டு நடிகர்களை தவிர மீதமுள்ள அனைத்து நடிகர்களும் புதுமுகங்கள் என்பதால் இப்படம் பெரிதாக பேசப்படவில்லையோ என்பது எனது யூகம். (இல்லை வேறேதும் காரணம் உள்ளதோ என்னவோ!) ஆனால் அவர்கள் நிச்சயம் சிறந்த நடிகர்களாக வலம் வர முடியும் என்பது அவர்களின் நடிப்பு நமக்கு நம்பிக்கை தரும் அளவிற்கு இருக்கிறது. சில காட்சிகளில் மட்டும் வசனம் பேசிவிட்டு பின் மௌனம் காக்கும் (அதிலும் 💯 ) கீதா கைலாசம் அவர்கள் இறுதி காட்சியில் வெளுத்து வாங்கியுள்ளார். நடிப்பில் எமகாதகி ஆச்சே! சொல்லவா வேண்டும். ஹரிதாவும் அவர் கதாபாத்திரத்தை நன்றாக செய்துள்ளார்.
பாடை ஏற மறுக்கும் ஒரு கன்னிப் பெண்ணின் பிணம், விறுவிறுப்பான பல கதைகளை ஒன்றன் பின் ஒன்றாக சொல்லாமல் சொல்வது, நம்முள், அடுத்து என்ன கதை! யாருடையது! என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது. கடவுளிடம் பாவமன்னிப்பு கேட்பது போல் இந்த படத்தில் அவ்வூர் மக்கள், அந்த பெண்ணின் உற்றார் உறவினர் என வரிசைக் கட்டி முன்வந்து பாவமன்னிப்பு கேட்க… அவர்களின் கதைகள் திரையில் காட்சியாக விரிகிறது.
ஏன் அந்த கன்னிப் பெண் பாடை ஏற மறுக்கிறாள்? என்ன காரணம்? யாரிடம் ஊர் மக்களும், உற்றார் உறவினரும் பாவமன்னிப்பு கேட்கிறார்கள்? ஏன் கேட்கிறார்கள்? அப்பெண் பாடை ஏறுகிறாளா? எப்படி? எப்போது? யாரால்? போன்ற கேள்விகளுக்கான பதில்களை “எமகாதகி” திரைப்படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
“எமகாதகி” – உண்மையை பறைசாற்ற எமனையே காக்க வைத்து, நம் மனமெனும் குடிலில் குடிகொள்ளும் வைராக்கியக்காரி.