அத்தியாயம் 35: களவும் குறிப்பும்

சக்தி வீட்டின் பேஸ்மென்ட் சற்றே வித்தியாசமாக கட்டப்பட்டிருந்தது. அடுப்படி அருகில் இருக்கும் கதவை திறந்து கீழே இறங்கி சென்றால் அங்கு இருப்பது ஒரு ஸ்டோர் ரூம் போல் இருக்கும் ஒரு அறை. அதில் தான் ப்ளூவின் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டிருந்தது. அந்த அறைக்கு வலது புறம் இருப்பது மற்றொரு கதவு. அதாவது சமையலறையில் இருந்து கீழே வந்து முடியும் கடைசி படிக்கட்டில் இருந்து ஒரு ஐந்தடி தூரத்தில் இருந்தது‌ அந்த கதவு. அதைத் திறந்தால் கேரேஜ் என்று சொல்லக்கூடிய காரை  நிப்பாட்டி வைக்கும் ஒரு அறை.  அதற்கு ஒரு ஷட்டர் கதவு. அக்கதவு அங்கு நிப்பாட்டி வைத்திருந்த காருக்கு பின்னால் இருந்தது‌. ஆக அந்த பேஸ்மென்ட்டில் நுழைவதற்கான ஒரு கதவு அடுப்படிக்கு பக்கத்தில், இரண்டாவது அதனுள் இருந்து கேரேஜ் செல்வதற்காக ஸ்டோர் ரூம் மற்றும் கேரேஜ் இரண்டிற்கும் நடுவில் இருக்கும் ஒரு கதவு, மூன்றாவது காரை உள்ளே வைத்து பூட்டி வைப்பதற்கான கேரேஜின் ஷட்டர் கதவு. 

இவ்வாறாக அமைக்கப்பட்டிருந்த பேஸ்மென்ட்டில் அந்த கேரேஜ் மற்றும் ஸ்டோர் ரூம் நடுவே இருந்த கதவைப் பார்த்து தான் சக்தி அதிர்ச்சிக்கு உள்ளாகி வேகமாக படிக்கட்டுகளில் ஏறிச் சென்றாள். ஏனெனில் தரையில் ஆடிக்கொண்டிருந்த அந்த எமர்ஜென்சி லைட்டை சக்தி காலால் அழுத்தி நிறுத்தியதும் அதன்  வெளிச்சம் நேராக திறந்து மெல்ல அசைந்து கொண்டிருந்த அந்த கதவின் மேல் விழுந்தது. அந்த கதவு எப்படி திறந்திருந்தது? யார் திறந்திருப்பார்? அப்படியென்றால் வீட்டிற்குள் யாரோ இருக்கிறார்களா? என்று அவளுள் பல சந்தேகங்கள் எழுந்ததில், தான் அங்கு இருப்பது சரியில்லை என்ற உணர்வு உடனே அவளை அங்கிருந்து  வெளியேற செய்தது. 

வெளியே வந்து அடுப்படி அருகே இருந்த அந்த பேஸ்மென்ட் கதவை மூடி தாழிட்டாள்‌. பின் அந்த கதவில் சாய்ந்தபடி தனக்குத்தானே பல கேள்விகளை கேட்டுக்கொண்டு, முகத்தில் பதற்றமும், மனதில் படபடப்பும், கண்களில் கண்ணீரும் என அப்படியே அமர்ந்தாள். ப்ளூவை எண்ணி கலங்கினாள். யார்? யாராக இருக்கும்? என்ற கேள்வி அவளை மீண்டும் மீண்டும் சுற்றி வந்தது. சற்று நேரம் அப்படியே கதவில் சாய்ந்தபடி அமர்ந்து குழப்பத்தில் மூழ்கி இருந்தவள், திறந்து கிடந்த அந்த கதவில் ஏதோ எழுதி இருந்தது அவள் நினைவுக்கு வந்தது. ஆனால் பதற்றத்தில் அதை சரியாக படிக்காமல் படிகளில் ஏறி மேலே வந்ததும் அவள் நினைவுக்கு வந்தது.   சட்டென கண்களை துடைத்துக் கொண்டு மீண்டும் ஒரு முறை பேஸ்மென்ட் சென்று திறந்து கிடந்த கதவில் என்ன எழுதி இருந்தது என்று பார்க்க முடிவு செய்தாள்‌. ஆனால் அவள் உள்மனம் வேண்டாம் என்று சொன்னது அவளுக்கு கேட்டது. இருந்தாலும் ப்ளூவுக்காக சென்று பார்க்க முடிவு செய்தாள். 

மெல்ல அக்கதவின் தாழ்ப்பாளை திறந்தாள்‌. பயம் வேதாளம் போல் அவள் மனதில் தொற்றிக் கொண்டது‌. அதே நேரம் ப்ளூவின் குரல் கேட்பது போல் தோன்றியது. உடனே கதவை முழுவதுமாக திறந்து படிகளில் மெல்ல இறங்கினாள். ஒவ்வொரு 

    டி

        யி

              ல்

கால் வைத்ததும் ஏதாவது சப்தம் கேட்கிறதா என்று ஒரு நொடி நின்று கவனித்த பின் அடுத்த படியில் கால் வைத்து நிதானமாக இறங்கினாள். ஸ்டோர் ரூம் மற்றும் கேரேஜ் இரண்டையும் இணைக்கும் அந்த  கதவு, மெல்ல அசைந்து கொண்டிருந்த அந்த கதவு, இப்போது ஆடாமல் அசையாமல் இருந்தது. அதன் அருகே சென்றாள். முதலில் கதவை பிடித்து தலையை மட்டும்  கேரேஜ்க்குள் நீட்டி எட்டிப் பார்த்தாள். பூட்டப்பட்ட கேரேஜ் ஷட்டர் கதவு பாதியாக திறந்து இருந்ததைப் பார்த்ததும் வந்தவர் கேரேஜ் வழியாக தான் வந்திருக்க வேண்டுமென்று எண்ணினாள்.  ஆனால் காரை உள்ளே நிப்பாட்டி அந்த கேரேஜின் ஷட்டரை பூட்டியதாக தான் அவள்  நினைவில் இருந்தது. 

“பின்பு எப்படி? அது திறந்திருந்தது? ஒருவேளை வெளியே இருந்து உடைத்து திறந்திருப்பார்களா?”

என்றெல்லாம் எண்ணிக்கொண்டே கதவில் எழுதி இருந்ததைப் பார்க்க வந்தவள் நேராக பாதியாக திறந்திருந்த கேரேஜ் ஷட்டர் கதவு வழியாக வெளியே சென்று சுற்றிப் பார்த்தாள். ஏனெனில் அந்த ஷட்டரோ தானியங்கி கதவு. அது திறப்பதற்கான சுவிட்ச் சக்தி கார் சாவி கொத்தில் இணைக்கப்பட்டிருக்கும். மேலும் அதற்கு வேறெந்த பூட்டும் கிடையாது. அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த ஷட்டர் கதவை எப்படி திறந்திருப்பார்கள் என்று அதையே சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தவள் மீண்டும் வீட்டிற்குள் சென்று கார் சாவியை எடுத்து வந்து கேரேஜ் ஷட்டரை மூட அதன் சுவிட்சை அழுத்தினாள். ஆனால் ஷட்டர் மூடவில்லை. அதன் சென்சர்கள் பொருத்தப்பட்ட நான்கு இடங்களில் சென்று உன்னிப்பாக பார்த்தாள். அவை பழுதாகி இருந்ததையும் மேலும் அதை யாரோ ஏதோ ஒரு உபகரணம் கொண்டு செயலிழக்க செய்திருப்பதையும் புரிந்துக் கொண்டாள். உடனே அந்த  கேரேஜ் ஷட்டர் சர்வீஸ் சென்டரை அழைத்து விவரத்தை கூறி அவர்களை வந்து சரிசெய்ய சொல்லி அழைப்பை துண்டித்து விட்டு பெருமூச்சு விட்டாள். சட்டென கதவில் எழுதியதை பார்க்க வந்தது ஞாபகம் வர உடனே கேரேஜுக்குள் விரைந்து சென்று அங்கிருந்த கதவை பார்த்தாள். 

அதில் ஆங்கிலத்தில் இரண்டு வரிகள்,

“உன்னை கவனித்துக் கொண்டிருக்கிறேன். ப்ளூவை விட்டுவிடு, தேடாதே.”  

என்று எழுதப்பட்டிருந்ததைப் படித்ததும் அதிர்ந்து போனாள்‌. மேலும் அந்த வரிகளுக்கு கீழ் ஏதோ வரையப்பட்டிருந்ததை கவனித்தாள். அவற்றை தனது கைபேசியில் ஒரு புகைப்படமாக எடுத்துக் கொண்டாள். பின் அதை மூடி தாழிட்டு மீண்டும் பேஸ்மென்ட்டில் இருந்து மேல் தளத்திற்கு வந்து அந்த கதவையும் மூடி தாழிட்டு நேராக சென்று  சோஃபாவில் அமர்ந்தாள். அவளை ப்ளூ அழைப்பது போல் இருந்தது. உடனே நிமிர்ந்து பார்த்தாள். அது பிரமை என்று உணர்ந்ததும் அவளுக்கு அழுகை பொங்கி வந்தது. வாய்விட்டு அழுதாள். கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோட, கையில் இருந்த கைபேசியில் அவளும் ப்ளூவுமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருந்தாள். 

அவள் அம்மா மிருதுளாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்க உடனே கண்களை நன்றாக துடைத்துக் கொண்டாள்…ஆனால் அந்த அழைப்பை துண்டித்து விட்டாள்.  ஏனெனில் அவர்களை பதட்டப்படுத்த அவள் விரும்பலில்லை. இப்படி அழைப்பு ஏற்காது துண்டித்தாலும் அவர்கள் பதற்றப் படுவார்களே என்று எண்ணியவள் தான் ஒரு முக்கியமான வேலையின் நடுவே இருப்பதாகவும் நேரம் கிடைக்கும் போது அழைப்பதாகவும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அவர்களின் பதிலுக்காக காத்திருந்தாள். அவள் எதிர்பார்த்தது போலவே 

“டேக் கேர். ஓகே”

என்ற பதில் வந்தது. அப்போதிருந்த நிலைமையை கூறாமல் அவர்களிஞமிருந்து தற்காலிகமாக ஒத்தி வைத்தாள். ஆனால் அந்த அழைப்பை துண்டித்ததும் அவளுக்குள் பல குற்ற உணர்ச்சிகள் அவளை துளைத்தெடுத்தது. 

ப்ளூவை பற்றிய விஷயங்களை சக்தி விஷால் மற்றும் ஜேம்ஸிடம் பகிந்துக் கொள்ளாதது எவ்வளவு பெரிய தவறு என்பதை அப்போது உணர்ந்தாள். ஜேம்ஸ் அன்று காலை அவள் இல்லம் வந்து மீண்டும் மீண்டும் கேட்டும் அவனிடம் கூறாது மறைத்து தவறிழைத்துவிட்டதாக எண்ணினாள். அவள் பகிர்ந்துக் கொள்ளக் கூடியவர்களான மிருதுளா மற்றும் நவீனிடம் பகிர்ந்து அவர்களை கவலையில் ஆழ்த்த அவள் விரும்பவில்லை. எனவே தனது துக்கத்தையும், கவலையையும் பகிர்ந்துக் கொள்ள யாருமின்றி செய்வதறியாது சிலை போல சோஃபாவில் அமர்ந்திருந்தாள். யாரை சந்தேகப்படுவது என்ற யோசனையில் இருந்தாள். அப்போது அவளின் கைபேசி ஒலித்தது. இருமுறை ஒலித்தும் அவள் பதிலளிக்காது அமர்ந்திருந்தாள். ஏனெனில் ஆழ்ந்த சிந்தனை அவளின் செவிகளை செயலிழக்கச் செய்திருந்தது. சற்று நேரம் கழித்து மீண்டும் கைபேசி ஒலித்தது. 

இம்முறை அவளின் செவிகளில் கைப்பேசியின் அழைப்பு ஒலி  எங்கோ தூரத்தில் கேட்பது போல் இருக்க மெல்ல திரும்பி கைப்பேசியை பார்த்தாள். அவளின் கைப்பேசி தான் ஒலிக்கிறது என்பதை உணர்ந்ததும் சட்டென சுயநினைவுக்கு வந்தவள் அதை எடுத்து யார் என்று பார்த்தாள். வி என்று காண்பித்தது. மனதில் ஓர் சிறிய தயக்கத்துடனான மகிழ்ச்சி பிறந்தது. கைப்பேசியை எடுத்து அழைப்பை ஏற்றாள். 

“ஹாய் தி.

ஏன் ஃபோன் எடுக்க இவ்வளவு நேரமாச்சு?

எத்தனை தடவ ஃபோன் பண்ணினேன் தெரியுமா?

ஆர் யூ ஆல் ரைட்?

ஈஸ் எவ்ரித்திங் ஓகே தேர்?

தி…தி…

கால் ல இருக்கயா?”

“ஹாய் வி.”

“அப்பாடா. 

பதில் சொன்னயே!

ஏன் உன் குரல் ஒரு மாதிரி இருக்கு?”

“கொஞ்சம் உடம்புக்கு சரியில்லை வி”

“ஏன்? என்ன ஆச்சு?”

“தெரியலை. 

ஐ ஆம் ஃபீலிங் டல்.”

“நான் இன்னைக்கு லீவு போட்டுட்டேன். 

உடனே கிளம்பி அங்க வரேன். 

கவலைப் படாதே. 

டேக் ரெஸட்.”

“என்ன இன்னைக்கு இங்க வந்துண்டிருக்கயா?”

“ஆமாம்.

வீக் என்ட் நான் அங்க வர்றதா தானே நாம ப்ளான் பண்ணினோம்.

இப்போ ஏன் நீ என்னமோ தெரியாத மாதிரி கேக்கற?”

“இல்ல…

வீக் என்ட் தானே வற்தா இருந்த…

ஆனா இன்னைக்கே வரேன்னு சொல்லறயேன்னு கேட்டேன்.”

“இல்ல… இன்னைக்கு வர்க் அவ்வளவா இல்ல.

அது தான் சரின்னு கிளம்பிட்டேன். 

நேரா உன் வீட்டுக்கு தான் வரேன்.

உனக்கு ஓகே தானே?”

“ம்…ஓகே தான்…”

“என்னம்மா இழுக்கற? 

நான் வேணும்னா ஜேம்ஸ் கிட்ட ரூமுக்கு சொல்லணுமா?”

“இல்ல இல்ல வி.

நீ நேரா என் வீட்டுக்கே வா.

எனக்கும் உன் கிட்ட சில விவரங்களை சொல்லணும்.

இப்போ நான் ரொம்ப பெரிய குழப்பத்துல இருக்கேன்.”

“என்ன குழப்பம்?

எதப்பத்தின குழப்பம்?”

“நீ வாயேன். 

நான் நேருல சொல்லறேனே!”

“ம்…ஓகே.

டன். 

நான் இன்னும் ஒரு இரண்டு மணி நேரத்துல வந்துடுவேன்.

சரியா.

டேக் கேர். 

லவ் யூ தி.”

“ம்…யூ டூ டிரைவ் சேஃப்.

லவ் யூ டூ வி”

என்று விஷாலிடம் கொஞ்ச நேரம் பேசியதில் சற்று தெளிவுற்றாள். மேலும் நடந்த அனைத்து விவரங்களையும் விஷாலிடம் கூற முடிவு செய்தாள். அவள் எடுத்த முடிவு சரியா? தவறா? விஷாலின் வருகையில் தான் இருக்கிறது அதற்கான பதில்.

தொடர்வாள்…

Leave a comment