
தி வைல்டு ரோபோட் (The Wild Robot), திரைப்படம் 2024 ஆம் ஆண்டு ட்ரீம் வர்க்ஸ் தயாரிப்பில் வெளியான ஒரு அற்புதமான அனிமேஷன் படைப்பாகும். இத்திரைப்படம் திரு. பீட்டர் ப்ரௌன் என்பவர் எழுதிய கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளுக்கான படமென்று பலர் கூறி வருகின்றனர். ஆனால் இது அனைத்து வயதினருக்குமான திரைப்படமாகும். ஏனெனில் அது கற்றுத் தரும் பாடம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பொருந்தும்.
மனிதர்களுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட ரோபோட்களில் ஒன்று தான் ரோஸ் (Rozzum 7134), கதையின் நாயகி. ரோபோட்களை ஆர்டர் செய்தவருக்கு, அவைகளை கப்பலில் ஏற்றி அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் புயலில் சிக்கிய அந்த கப்பல் கவிழ்ந்து கடலில் மூழ்குகிறது. அதில் இருந்த நம்ம நாயகி ரோஸ் (Rozzum 7134) மட்டுமே பிழைத்து நீரில் மிதந்து ஆள் நடமாட்டம் இல்லாத ஓர் தீவை சென்றடைகிறாள். அந்த ரோபோட்டை அத்தீவில் இருந்த விலங்குகள் விசித்திரமாக பார்த்து, சுற்றி வந்து, அதன் மேல் ஏறி நின்று என்று விலங்குகளுக்கே உரித்தான சேஷ்டைகளை செய்து கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு பொத்தானை அழுத்த நம்ம நாயகி ரோஸ் விழித்துக் கொண்டு செயல்பட ஆரம்பிக்கும் அந்த நொடி முதல் படத்தின் இறுதி காட்சி வரை பார்வையாளர்களின் மனதை கவர்ந்திழுத்து தன்னுடனே பயணிக்க செய்திருப்பது சிறப்பு.
மக்களிடம் மட்டுமே பேச தெரிந்த ரோஸ் விலங்குகளுடன் பேசி பழக தன்னை தானே அப்டேட் செய்து கொள்வதும், வனவிலங்குகளின் சம்பாஷணைகளை மொழிபெயர்ப்பு செய்து புரிந்துக் கொள்வதும் என பலவற்றை கற்றுக் கொண்டு அங்கிருக்கும் மிருகங்களுக்கு தன் சேவை தேவையில்லை என்பதை புரிந்துகொண்டதும்… தன்னை ஏற்றுமதி செய்தவரிடமே திரும்பி சென்றுவிட முடிவெடுத்து அவளை மீட்பதற்கான ட்ரான்ஸ்மிட்டரை செயல்படுத்த முயலும் போது பலத்த இடியுடன் கூடிய மழை பெய்ததில் மின்னல் தாக்கி ட்ரான்ஸ்மிட்டர் பழுதாகிறது. வேறு வழியின்றி மீண்டும் மிருகங்களிடம் செல்ல, அவளை கண்டதும் அனைத்து விலங்குகளும் பூதமென்றெண்ணி தெறித்து ஓட, செய்வதறியாது மழையில் நனைந்தபடி நின்றிருந்தவளின் முன்னே ஏதோ பொத்தென வந்து விழுகிறது. அது என்னவென்று அதன் அருகே சென்று பார்க்கிறாள். அது ஒரு பறவையின் கூடு. அதில், இறந்து போன ஒரு பறவையும் ஒரு முட்டையும் இருக்கிறது. அந்த பறவையின் முட்டையை தன் கையில் எடுத்து பார்க்கும் ரோஸ் அக்கணம் முதல் அந்த முட்டையை பாதுகாப்பதையும் அதை வளர்த்து ஆளாக்குவதையும் தனது கடமையாக எடுத்துக் கொண்டு அதற்கான அனைத்து திட்டங்களையும் வகுத்து செயலில் இறங்குகிறாள். அன்று முதல் ரோஸ் (Rozzum 7134) ஒரு இயந்திர தாயாக மாறி அந்த முட்டைக்குள் இருந்து வெளிவரும் வாத்தை இயக்கத் துவங்குகிறாள்.
ரோஸ் எவ்வாறு அந்த வாத்தை வளர்க்கிறாள்? அதற்கு வேறு ஏதாவது விலங்கு உதவுகிறதா? அந்த தீவில் இருந்த மற்ற மிருகங்கள் எப்படி ரோஸுடன் பழகுகின்றன. ரோஸ் (Rozzum 7134) வளர்க்கும் வாத்து தன் இயந்திர தாய் போலவே இயந்திரமாகிறதா? அதன் குடும்பத்துடன் சேர்க்கப்படுகிறாதா? குடும்பத்தோடு சேர்கிறதா? அதன் குடும்பத்தாரால் அது சேர்த்துக் கொள்ளப்படுகிறதா? போன்ற கேள்விகளுக்கான விடையாக நம் கண் முன்னே திரையில் விரியும் காட்சிகள் ஒவ்வொன்றும் நம்மை பிரம்மிக்க வைக்கிறது.
ரோஸ் (Rozzum 7134) அந்த தீவில் சந்திக்கும் சவால்கள், அதை அவள் எதிர்கொள்ளும் விதங்கள் பற்றியும் மேலும் அவள் அந்த தீவை விட்டு வெளியேறுகிறாளா இல்லை அந்த தீவையே தன் வீடாக மாற்றிக்கொள்கிறாளா என்பதை எல்லாம் திரைப்படத்தை பார்த்து ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மித்து மூழ்கி, யான் பெற்ற இன்பம் என் சமூக ஊடக நட்பூக்களும் பெற வேண்டும்.
கப்பல் கவிழ்ந்து கரை சேர்ந்தது
காட்டு விலங்குகள் நிறைந்திருந்தது
இடிப்பட்டு அடிப்பட்டு உணர்கிறது
இயந்திரத்துக்கும் இதயம் இருப்பது
பறவை ஒன்றை கண்டெடுக்கிறது
பற்று அதன் மேல் வைக்கிறது
கதையின் கரு பழையது
கதையை அறிவியல் புனைவாக அளித்திருப்பது புதியது
மனிதனின் சேவைக்காக உருவாக்கப்பட்ட இயந்திரம்
மனிதனை காட்டிலும் மனிதநேயத்தை உணர்விக்கும் மந்திரம்
இந்த திரைப்படம் – தி வைல்டு ரோபோட்❤️