லப்பர் பந்து

சற்று தாமதமான விமர்சனம் தான். என்ன செய்ய? எனக்கு இந்த படத்தை பார்க்கும் நேரமும் காலமும் நேற்று தான் கூடி வந்தது.  எனது பார்வையில் லப்பர் பந்து, உங்களை நோக்கி வீசி இருக்கிறேன், அது பவுண்ட்ரியா இல்லை அவுட்டா என்பது வாசகர்களான உங்கள் கையில்.

லப்பர் பந்து பலரை பள்ளி /கல்லூரி பருவத்திற்கு அழைத்துச் செல்வது நிச்சயம். பொதுவாக மாப்பிள்ளை வீட்டாருக்கும் பெண் வீட்டாருக்கும் இடையே முளைக்கும் வழக்கமான பிரச்சினைகளை தவிர்த்து ஒரு லப்பர் பந்து அவர்கள் திருமணத்திற்கு இடையூறாக புனையப்பட்டிருக்கும் கதை சற்றே வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.  கதையில் எவ்வித தொய்வின்றி நகர்த்திய விதம் இதம். இரு ஆண்களின் ஈகோ, விளையாட்டில் மட்டுமின்றி இருவர் வாழ்க்கையிலும் வினையை கொண்டு வந்து சேர்க்க இருக்கும்  தருணத்தில், சம்பந்தப்பட்ட இருவரையும் அதே விளையாட்டு ஒன்று சேர்த்து அவர்கள் வாழ்க்கையையும் அழகாக்குகிறது. இது தான் கதை சுருக்கம். ஆனால் இந்த இரு சம்பவத்திற்கிடையே உலா வரும் வண்ணமயமான காதல், நட்பு, கிராமத்து சூழலில் கிரிக்கெட், விளையாட்டில் பெண்களின் பங்கேற்பு, மாமியார் மருமகள் உறவு, கணவன் மனைவி உறவு,  சமத்துவம், அரசியல் என்று  அட்டவணை நீண்டுக் கொண்டே போனாலும் அவை அனைத்தையும் விளையாட்டு என்ற ஒரு புள்ளியில் இணைக்கும் கதை அருமை. அத்தகைய கதையை எழுதி இயக்கியுள்ள  திரு. தமிழரசன் பச்சைமுத்து அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

நடிப்பு பொறுத்தவரை அனைவருமே அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். அன்பு, யசோதை, துர்கா, கருப்பையா, காத்தாடி, பூமாலையின் தாய், கொழந்த ஆகிய கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் நடிகைகளுக்கு பாராட்டுகள். அவர்கள் அனைவரும் அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர்.

அட்டக்கத்தி தினேஷ் இன்னும் கொஞ்சம் ஹோம் வர்க் செய்திருக்க வேண்டும் போல் படம் பார்க்கும்போது தோன்றுகிறது.  கெத்துக்கு கெத்து போதவில்லை. எனது பார்வையில் அன்பு தான் கெத்து.

சமீபத்தில் வெளிவந்த படங்கள் பலவற்றில் இசை பெரும் இரைச்சலாக இருந்து வரும் வேளையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள கதைக்கான இசையமைப்பு படம் முழுவதும் இதமாக ஒலிக்கிறது. இசையமைப்பாளர் திரு. ஷான் ரோல்டன் அவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

கதையில் வரும் திருப்பம் மற்றும் முடிவு பார்வையாளர்களால் யூகிக்க கூடியதாக இருந்தாலும் நம்மை எழுந்து செல்ல விடாது முழு படத்தையும் பார்க்க வைத்திருப்பது சிறப்பு. கிராமத்து குசும்பு என்பதை கமெண்ட்டேடர்களின் கமெண்ட்ரி நிரூபித்திருக்கிறது. வேர்ல்டு கப் கமெண்ட்டேடர்களை விட மிகவும் கலகலப்பாக கமெண்ட்ரி செய்த கமெண்டேட்டர்களுக்கு பாராட்டுகள்.

பாரதியார் அன்றே சாதிகள் இல்லையடி பாப்பா என்றொரு பாட்டை பாடி எழுதியிருக்கிறார். ஆனாலும் ஏன் இப்போது வரும் திரைப்படங்கள் அனைத்திலும் இந்த சாதியை கோர்க்கிறார்கள்?  இயக்குனர் நினைத்திருந்தால் அதை தவிர்த்திருக்கலாம். மேலும் ஒவ்வொருவர் பலவற்றை கற்றுத் தேர்ந்து கஷ்டப்பட்டு முன்னுக்கு வர  துடித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஒருவர் விட்டுக் கொடுத்தால் தான் முன்னேற முடியும் என்றிருப்போருக்கு அந்த வெற்றி கிடைத்தும் பலனிருக்காது என்பது ஏன் புரியவில்லை.  விட்டுக்கொடுப்போர் கெட்டுப் போவதில்லை ஆனால் எல்லாவற்றிலும் எல்லாரும் விட்டுக் கொடுத்தால் தான் முன்னேறுவோம் என்ற தவறான கருத்தை பரப்புவதை தவிர்த்து, இனி வரும் படங்களில் நன்றாக படித்து தன் உழைப்பில் முன்னேறுவது எப்படி என்றும் அவ்வாறான முன்னேற்றமே தனக்கான அடையாளத்தை தரக்கூடியதாக இருக்கும் என்றும் காட்சிகளும் வசனங்களும் அமைத்தல் நன்று. இட ஒதுக்கீடு வேண்டுமென்று உரிமை குரல் கொடுப்போர், இனி எங்களுக்கு அது  வேண்டாம் நாங்களே அவ்விடத்தை எட்டிப் பிடிப்போம்  என்ற குரலையும் ஒலிக்கச் செய்தால் கூடுதல் சிறப்பு.

லப்பர் பந்து – வீசப்பட்ட விதம், ஏற்படுத்தும்
கார்க் பந்தின் தாக்கம்.

Leave a comment