
வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போகலன்னு நீலாம்பரி ’99 ல சொன்னது 2024 ல கூட நம்ம சூப்பர் ஸ்டாருக்கு பொருந்துகிறது. அதுனால தான் அவர் இன்னமும் சூப்பர் ஸ்டார். இத் திரைப்படத்திலும் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அவர் கனகச்சிதமாக செய்துள்ளார். அவரின் வயதுக்குரிய கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பது சிறப்பு. நடிப்பில் நிதானம், முதிர்ச்சி இரண்டையுமே மிக அழகாகவும் அளவாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார் நம்ம சூப்பர் ஸ்டார்.
மஞ்சு வாரியர் ரஜினி காம்போ நன்று. பகத் பாசில் மிக அழகாக அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதாப்பாத்திரத்தில் பொருந்தி இருக்கும் விதம் பாராட்டுக்குரியது. ரஜினி பகத் காம்போவின் ஒரு காட்சியில் நம்மை இருவருமே கண்கலங்க வைக்கிறார்கள்.
ரோகிணி, ராணா, அபிராமி, கிஷோர், ரித்திகா, துஷாரா விஜயன், ரமேஷ் திலக் ஆகியோர் ஏற்று நடித்திருக்கும் கதாப்பாத்திரங்கள் மனதில் நிற்கும் வண்ணம் அமைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஏனோ அமிதாப் அவர்களின் கதாப்பாத்திரம் ஏற்புக்குரியதாக அமையவில்லை. அதற்கு டப்பிங் ஒரு முக்கிய/ பெரும் காரணம் என்றே படம் பார்த்த அனைவருக்கும் கூற தோன்றும் முதல் மற்றும் அப்பட்டமாக தெரியும் பெரிய குறை. அவர் திரைப்படத்தோடும் கதாப்பாத்திரத்தோடும் ஒட்டவில்லை. தனித்தே இருக்கிறார்.
அனிருத் இசையில் மாற்றம் ஏதுமின்றி அதே ஒரே இசை தான் ஒலிக்கிறது. மனதில் நிற்கும் படி பாடல்கள் ஏதும் சரியாக அமைக்கவில்லை. காட்சிக்கு தகுந்தாற் போல் இசையமைக்காது சூப்பர் ஸ்டாருக்காக மட்டுமே இசையமைத்திருப்பதால் திரைப்படத்தின் பின்னணி இசை வெறும் இரைச்சல்! பார்வையாளர்களுக்கு தரும் எரிச்சல்!. அனிருத் அவர்களின் அடுத்த படத்திலாவது இசையில் மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையுடன் இருப்பவர்களில் நானும் ஒருத்தி. மொத்தத்தில் இத்திரைப்படத்தின் இசை – இம்சை.
என்கவுண்டர் நல்லதா கெட்டதா! இருக்கலாமா! இருக்கக்கூடாதா! இது தான் கதைச் சுருக்கம். இதை விளக்கும் விதமாக மனிதாபிமானம், கார்ப்பரேட் மோசடி , தனி மனித உரிமை என பல விஷயங்களால் பின்னப்பட்டிருக்கும் கதை தான் “வேட்டையன்”. முதல் பாதியில் கதை நகர்ந்த விதம் நம்முள்… அட என்னடா மறுபடியும் கற்பழிப்பு தான் கதைக்கான மோட்டிவா என்ற அலுப்பு மனதில் எழும் தருணத்தில் சட்டென கதை களம் நம் நினைப்பை அப்படியே புரட்டிப்போடுகிறது.
போலீசுக்கு கொலைக்கான மோட்டிவ் வேணும் என்பதால் கற்பழிப்பு தான் சரியானதாக இருக்கும் என்று வில்லன் கூறும் போது, அட போலீசுக்கு மட்டுமில்லப்பா இப்போ வெளிவர பல படங்களின் கதைக்கான மோட்டிவே அதுவாகத்தான் இருக்கிறது என்ன செய்ய என்று நம்மை சொல்ல வைக்கும் விதம் அந்த வசனம் அமைந்திருக்கிறது. அது அமைந்ததா இல்லை அமைக்கப்பட்டதா! யாம் அறியோம் பராபரமே.
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.பி அதியன் (சூப்பர் ஸ்டார்) பல குற்றவாளிகளை குறிவைத்து குழியில் விழவைக்கிறார். அதற்காக அவரின் தேடல்கள் மற்றும் அவர் அமைக்கும் வியூகம் ஆகியவைகளை சுருக்கமாக சில காட்சிகளில் புரிய வைத்து சட்டென கதைக்குள் பார்வையாளர்களின் கவனத்தை திருப்பி இருக்கிறார் இயக்குனர். மேலும் கதை ஒரு கோணத்தில் சென்று கொண்டிருக்கும் வேளையில் சட்டென கதையில் பெரும் திருப்பம் ஒன்றை கொடுத்து கதையை அப்படியே வேறு கோணத்தில் கொண்டு சென்று விறுவிறுப்பு குறையாமல் காட்சிகளை அமைத்திருக்கும் இயக்குனர் திரு. ஞானவேல் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
நடிப்பு பாதி ஹீரோயிசம் மீதி என்று கலந்து செய்த கலவை தான் அதியன் கதாப்பாத்திரம். யானைக்கும் அடி சறுக்கும் என்பதற்கு ஏற்றார் போல் நேர்மைக்கு பெயர் போன எஸ்.பி. அதியன் ஓரிடத்தில் தவறிழைத்து விடுகிறார். அது என்ன தவறு? ஏன் தவறானது? அதை எப்போது! எப்படி! யாரால் உணர்கிறார்? தவற்றை திருத்திக் கொள்ள அவர் எடுக்கும் நடவடிக்கை என்ன? போன்ற கேள்விகளின் பதில்களை தேடும் வேட்டையில் இறங்கி திரையரங்கம் சென்று திரையில் “வேட்டையன்” வேட்டையை கண்டு களியுங்கள்.
“வேட்டையன்” – துப்பாக்கியால் குற்றவாளிகளையும் நடிப்பால் ரசிகர்களின் மனதையும் வேட்டையாடும் வேட்டையன் நம் டிக்கெட் பணத்திற்கு பங்கம் விளைவிக்காதவன்.