
எவ்வித ஆர்ப்பாட்டமும், விளம்பரமும், சமூக ஊடக சிபாரிசுகளும், காசுக்கு கூவும் கூட்டங்களும் இன்றி அமைதியாக வெளிவந்துள்ள அற்புதமான திரைப்படம். ரொம்ப நாள் கழித்து தமிழில் வெளிவந்துள்ள நல்ல திரைப்படம். இது எங்கள் சொந்த கதை, எங்கள் சோகக்கதை உண்மைக் கதை, முடக்கப்பட்டவர்கள் கதை, அந்த கதை, இந்த கதை என்ற சில பொய்களின் கூச்சல் மற்றும் அற்ப பரபரப்புகளுக்கிடையே ஜமா ஜொலிக்கிறது.
இதிலும் ஏற்றத்தாழ்வுகள் சம்மந்தப்பட்ட காட்சிகள் இருந்தாலும் அதற்கு பதிலடியாக திறமையை முன்னிறுத்தி, அதற்கு முதலுரிமை கொடுத்து மிக அழகாக கதை நம் மனதை தொடும் விதம் ஜமாவை படைத்துள்ளார் இயக்குனர் திரு பாரி இளவழகன்.
இக்கதையும் துரோகத்தை சார்ந்தது என்றாலும் அதற்காக அருவாள் அல்லது கத்தி கொண்டு சதக் சதக் என்று இரத்தம் தெறிக்கும் விதம் பழிவாங்கும் காட்சிகள் இன்றி, கலையை நன்கு பயின்று தன் திறமையால் ரத்தமின்றி, வீண் சத்தமின்றி தன் உரிமையை நிலைநிறுத்த கதாநாயகன் தேர்ந்தெடுக்கும் திறமை என்னும் ஆயுதம் அபாரம். அவ்வாறு நாம் நம் திறமையை வளர்த்துக் கொண்டு அதில் விஸ்வரூபம் எடுத்தால் அது நம்மை ஒடுக்குபவரை ஒதுங்கிக் கொள்ள வைக்கும் என்பதற்கு இப்படம் ஓர் சிறந்த உதாரணம்.
கல்யாணம் கதாப்பாத்திரத்தின் மூலம் நல்ல நடிப்பை மட்டுமின்றி இக்கால இளைஞர்களுக்கு நல்லதொரு பண்பை விதைத்து இருக்கிறார் இயக்குனர்.
நமக்கு ஒருவர் நம்பிக்கை துரோகம் செய்யும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்ற சாணக்கியர் நீதியை படமாக்கி உள்ளார் இயக்குனர். நமது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, நம் வளங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி, வஞ்சகத்தை விடுத்து நேர்மையைத் தேர்ந்தெடுத்து, மற்றவர்களை குறைத்து மதிப்பிடாது, துரோகத்தின் சவால்களை முறியடித்து வலிமையாகவும் புத்திசாலித்தனமாகவும், அதிலிருந்து வெளிவரலாம் (அது யாராக இருந்தாலும்) என்பதை ஜமா கதை நமக்கு உணர்த்துகிறது.
தாண்டவம் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள திரு சேத்தன் அவர்கள் அமைதியாய் காய்களை நகற்றி ஆராவாரம் மற்றும் தேவையற்ற அலப்பறை இல்லா வில்லத்தனத்தை முகபாவத்திலும் பார்வையிலும் வசனம் பேசும் விதத்திலும் தாண்டவம் ஆடியிருக்கிறார். கல்யாணத்தின் அம்மாவாக நடித்துள்ள நடிகையின் நடிப்பு பிரமாதம். ஜகாவாக திரையில் வலம் வந்த அம்மு அபிராமி நடிப்பும் நன்று.
வித்தை கற்றுக்கொடுத்தவரிடமே உன் வித்தையை காட்ட நினைத்தால் விடையின்றி இவ்வுலகிலிருந்து விடை பெறுவாய் என்பதையும் எடுத்துரைக்கிறது இந்த ஜமா.
இந்த படத்தின் இசை அதற்கு பலம் சேர்த்துள்ளது என்று எவராலும் சொல்லாமல் இருக்க முடியாது. இப்படத்திற்கு நம் இசைஞானியை தவிற வேறு யார் இசை அமைத்து இருந்தாலும் அது எடுபடாது போய் இருக்கும்.
மிதமான இசை, காட்சிக்கு ஏற்றார் போல் இசை, உணர்வுகளை வெளிப்படுத்தும் இசை. அதிலும் இப்படத்தில் சோக காட்சிகளின் பின்னணியில் நம் இசைஞானியின் இசையிலும் இழைந்தோடிய சோகம் நம் மனதை உருக்கும். அது போல் இசைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் படம் முழுவதும் அவர் இசையை நிறைத்திருக்கலாம். ஆனால் அவர் கதைக்கும் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் இசை கதையோடு கைக்கோர்த்து கதையை குலைக்காமல் கதைக்கும் வாசனத்திற்கும் வழிவிட்டு பார்வையாளர்களின் செவிகளுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மொத்தத்தில் அடிதடி, சண்டை, வெட்டு, குத்து, ஆசிட், இரத்தம், கற்பழிப்பு போன்ற வழக்கமான காட்சிகளையும், காரணங்களையும் புறம் தள்ளிவிட்டு முன்னே தலை நிமிர்ந்து நடை போடும் ஜமா திரைப்பட குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கூத்தில் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்வது போலவே திரைக்கதையிலும் அமைத்திருப்பது சிறப்பு.
கதை, திரைக்கதை, இசை, நடிக்கர்கள், நடிப்பு, ஒளிப்பதிவு என அனைத்திலும் ஜமாய்த்திருக்கிறார்கள்.
ஜமா – ஜாலம்.