
ஒரு காலத்தில் புது திரைப்படங்கள் வெளிவந்தால் ரசிகர்களிடம் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று அவர்களின் கருத்துகளையும் விமர்சன குழுவினரின் விமர்சனங்களையும் வைத்து எந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்றும், எது சிறந்தது என்றும் பத்திரிகைகள் அச்சிட்டு வந்தன. ஆனால் இப்போதோ ரிலீஸான மூன்றே நாட்களில் இப்படத்தின் வசூல், ரிலீஸான இரண்டாவது நாள் அப்படத்தின் வசூல் என்று நாட்கணக்கில் அப்போதும் வசூலை வைத்து திரைப்படத்தின் வெற்றியை நிர்ணயிக்கிறார்கள். ஏனெனில் மூன்று நாட்களுக்கு மேல் யாரும் எதுவும் கேட்க போவதில்லையே!
இதற்கான காரணம் என்னவாக இருக்கக்கூடும் என்று சற்றே யோசித்துப் பார்த்தோமேயானால், இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் வெளிவருவதற்குள்ளேயே படத்தைப் பற்றி ஆஹா ஓஹோ என்று அப்படக் குழுவினரே சிலாகித்து பேசிய நேர்காணல்கள் அல்லது பரபரப்புக்காக படத்தைப் பற்றி ஏதாவது ஒரு வதந்தியை கிளப்பிவிட்டு பல்வேறு பதிவுகளை சமூக ஊடகங்களில் உலாவரச் செய்து முதல் மூன்று நாட்களில் வசூல் பார்க்க எண்ணுவது நமக்கு புலப்படும். இல்லையெனில் மக்கள் யாரும் அவர்கள் படத்தை பார்க்க மாட்டார்கள் என்ற நினைப்பாகவும் இருக்கக்கூடும் .
ஏமாறுபவர்கள் உள்ள வரை இது போல் ஏமாற்றுபவர்கள் சிம்மாசனம் ஏறத் தான் செய்வார்கள்.
நூறு நாட்கள் ஓடிய திரைப்படங்களும், வருடக்கணக்கில் திரையிடப்பட்ட திரைப்படங்களும் தந்த தமிழ் திரையுலகம் இன்று பத்து நாட்கள் தாண்டுவதற்கே தத்தளிக்கிறது.
சமீப காலமாக தமிழகம் மற்றும் தமிழ் மக்களுக்கு ஏன் இவ்வளவு மோட்டிவேஷனல் மெஸேஜஸ்களும், பேச்சாளர்களும் தேவைப்படுகிறார்கள்! சிந்தியுங்கள். ஏன்? தமிழக மக்கள் மோட்டிவேடட்டாக இல்லை என்பதாலா இல்லை அந்த சாக்கில் மக்கள் மூளையை சலவை செய்வதற்காகவா? கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று எதிலும் கருத்து, எங்கும் கருத்து, எதற்கும் கருத்து! கருத்தோ கருத்து! என்று கருத்தை கூறு போட்டு விற்காத குறையாக பள்ளி மாறுவேட போட்டி தொடங்கி திரையுலகம் வரை ஏன் இப்படி கருத்து கந்தசாமிகள் நிரம்பி இருக்கின்றனர்! சிந்தியுங்கள்.
திரைப்படம் என்பது பொழுதுப்போக்கு அம்சமாக இருந்த வரை மேற்கூறியவாறு வருடக்கணக்கில் திரையிடப்பட்டு வந்தன. எப்போது திரைப்படத்தில் கருத்து திணிப்பு ஆரம்பித்ததோ அப்போதிலிருந்து அதன் முடிவை அதுவே தேட துவங்கிவிட்டது. கருத்து கதையோடு ஒன்றி பார்வையாளர்களின் மனதிற்குள் கடத்த வேண்டும் அல்லாமல் தனித்து /எடுத்து சொல்லப்படுமேயெனில் அது கதைக்கும் அத்திரைப்படத்திற்கும் பெரிய சறுக்கலாகும்.
கருத்து மிகுதியாக உட்புகுந்ததால்
கதை குலைந்து போனது
கதை குலைந்ததால்
திரைப்படம் குலைந்து போனது
திரைபடங்கள் அடுத்தடுத்து குலைந்து போவதால்
தமிழ் திரையுலகமே குலைந்து போய் கொண்டிருக்கிறது.
ஜாதி, மதம், இனம், பழிக்குப்பழி வாங்குதல் போன்ற திரைப்படங்கள் 80 /90 களிலும் நிறைய வந்துள்ளன ஆனால் அவை அனைத்தும் பார்வையாளர்கள் முகம் சுளிக்கும் வண்ணம் திரைப்படமாக்கவில்லை. அலுத்து போகவும் வைக்கவில்லை. ஆனால் இப்போதோ!
மாற்றம் ஒன்றே மாறாதது.
இதுவும் மாறும்.
திரையுலகம் மீட்டெடுக்கப்படும்.
நல்ல ஜனரஞ்சக திரைப்படங்கள் திரையிடப்படும்
என்ற நம்பிக்கையுடன் அக்காலத்திற்காக காத்திருப்போம்.
எதார்த்த சினிமாவை படைக்கிறோம் என்று
கற்பனை வளத்தை கொன்று நாள்தோறும் நடப்பதை சித்தரித்து காட்டுவதை விடுத்து,
எதிர்பாராத ஒர் கதை கொண்ட நல்ல சினிமாவை எதிர்பார்க்கும் ரசிகர்களில் ஒருத்தியாக நான்.
-நா. பார்வதி