
இத்திரைப்படத்தை என்னமோ தெரியவில்லை பார்க்க வேண்டுமென்ற எண்ணம் கூட தோன்றவில்லை. மேலும்… கஷ்டப்பட்டு உழைத்த காசை தியேட்டர் சென்று இப்படத்தை கண்டு வீணடிக்க என் மனம் ஏற்கவில்லை. ஓ.டி.டியில் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன். போன ஞாயிற்றுக்கிழமை மதியம் இப்படத்தை பார்க்கலாமென்று அமர்ந்தேன். படம் ஆரம்பம் முதலே கதை & திரைக்கதை இயக்கம் எல்லாம் திரையில் சரிவர ஒட்டாதது போலவே இருந்தது.
மிகவும் கஷ்டப்பட்டு ஒருவழியாக படத்தை பார்த்து விட்டேன். ஆனால் இப்படத்தைப் பற்றி என்ன எழுதுவது என்ற யோசனையில் மூழ்கினேன்.
எப்போதும் நல்ல திரைப்படங்களை தேர்வு செய்து பார்ப்பதும் அதிலிருக்கும் நல்லவற்றை எடுத்து காட்டி, குறைகளை மேலோட்டமாக விமர்சித்து எழுதுவதும் என்று இருந்த எனக்கு இப்படம் ஒரு சவாலாக இருந்தது. ஏனெனில் இப்படத்தை பற்றி எழுதுவதற்கு நல்லதா ஒரு விஷயம்…
எங்கே எங்கே எங்கே என்று தேடிப் பார்த்தேன்
அது எங்கேயும் இல்ல!
என்று நொந்து கொண்டது தான் மிச்சம். ஒரு திரைப்படம் எடுப்பது என்பது இமாலய சாதனை போன்றது என்று நமக்கு நன்றாக தெரிந்த விஷயம். ஆனால் அதற்கான எவ்வித முன்னேற்பாடுமின்றி ஏனோ தானோ என்று எடுத்தது போல் இருப்பது வருத்தம் தருகிறது.
சில படங்களை நன்றாக எடுத்து பெயர் வாங்கி விட்டால்… எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம் அதை ரசிகர்கள் ஆதரிப்பார்கள் என்ற மிதப்பில் இருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் இப்படம் பெரும் ஏமாற்றத்தை தவிர வேறெதுவும் தராது என்பது உறுதி. இனி வரும் கலைஞர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
பெரிய பட்ஜெட் படம், பெரிய நடிகர் பட்டாளம், ஆடம்பரம், விளம்பரம் என்று ஆர்ப்பாட்டம் செய்த படக்குழுவினர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்,
“தயவுசெய்து ரசிகர்களை முட்டாள்கள் என எண்ணி விட வேண்டாமென்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.”
நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் என்று சொல்ல தொடங்கி பல ஆண்டுகள் ஆன போதிலும் இந்த படத்தில் அப்பேர்ப்பட்ட இளைஞர்கள் ஒரு முதியவரை தேடி செல்வது நெருடல். வயதானால் தொணதொணவென பேசிக் கொண்டிருப்பார்கள் என்ற உலகறிந்த உண்மையை படம் போட்டு காண்பித்திருக்கிறார்கள்.
ஒரு படத்தில் கருடபுராணம் இதில் வர்மம்.
கருடபுராணம் கலக்கல்
வர்மம் வழுக்கல்
ஒரு படத்தில் “மே” இதில் “மியாவ்”
“மே” மாஸ்
“மியாவ்” மிஸ்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒலி மற்றும் ஒளிப்பதிவு, நடிப்பு, நடிகர்கள், ஒப்பனை, எடிட்டிங், பாடல்கள் என்று எடுத்துக் கொண்டோமேயானால்…
இசை வெறும் இரைச்சல்
தரும் பெரும் எரிச்சல்!
இயக்கத்தில் இல்லை இறுக்கம்
ஆதலால் பாதியில் எழுந்து போக வைக்கும்!
கதையும் திரைக்கதையும் பெரும் சொதப்பல்
மூழ்கியது இந்தியன் 2 கப்பல்!
நடிப்பிலும் நடிகர்களிடமும் ஏதோ ஒரு வகை குழப்பம்
புது முக நடிகர்கள் போல் இருக்கும்! (உலக நாயகன் உட்பட)
இந்தியன் தாத்தா ஒப்பனை
ஒப்பவில்லை
எதுவுமே சரியாக ஒட்டவில்லை!
கருத்து பெருத்துப்போச்சு
படம் சருகாச்சு
இந்தியா திரும்பும் இந்தியன் தாத்தா சென்ட்ரலை மட்டும் தான் தாக்குவாரோ! ஏன் ஸ்டேட்டை விட்டுவிட்டார்?
அவசரத்தில் சொல்லப்பட்ட கதை.
அரைகுறையான திரைக்கதை.
பாதி படம் எடுத்து முடித்து பார்த்ததும்… இந்தியன் கம் பேக் என்று வரவைத்து தவறு செய்துவிட்டோமோ என்று எண்ணினார்களோ என்னவோ தெரியவில்லை அவர்களே இந்தியன் கோ பேக் என்றும் கூறி தங்களின் திரைப்படத்தின் விமர்சனத்தை படத்திலேயே காட்டிவிடும் நேர்மை மற்றும் தைரியத்திற்கு சல்யூட்.
சண்டை காட்சி மற்றும் மோனோ சைக்கிளிங் சீக்குவன்ஸ் எல்லாமே நம்மை பத்து வருடம் பின்நோக்கி அழைத்து செல்வது உறுதி. இவ்வளவையும் பார்த்து முடித்ததும் கடைசியில் இந்தியன் தாத்தா “ஐ வில் பி பேக்” என்று சொல்லி முடித்த விதம்,
“என்னது மறுபடியும் மொதல்லேந்தா! ஐயா சாமி போதும்டா சாமி. உங்க படத்துல சொன்னா மாதிரியே… ப்ளீஸ் கோ பேக்… அன்ட் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் நெவர் எவர் கம் பேக்”
என்று படம் பார்ப்பவர்களை சொல்ல வைக்கும்.
இந்தியன் 2 – இம்மியளவும் ஏற்க முடியாத இம்சை அரசன்.
-நா. பார்வதி