
இத்திரைப்படத்தின் போஸ்டரில் ப்ரித்விராஜின் கெட்அப் பார்த்ததும் இப்படத்தை பார்த்தாக வேண்டுமென்ற எண்ணம் என்னுள் உதித்தது. அடுத்து வெளிவந்த டீசர் அதை மேலும் உறுதி செய்யும் விதம் அமைந்திருந்தது. நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் அப்பறம் வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்கும் இல்லையா! அதனால் தான் என்னவோ இப்படத்தை பார்க்க நேரமும் காலமும் நேற்று தான் கூடி வந்தது. பார்த்து விட்டேன், ஆனால் இன்னும் அந்த திரைப்படத்தில் இருந்து என் மனம் வெளிவரவில்லை. அத்தகைய ஓர் தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை பார்க்கும் அனைவர் உள்ளத்திலும் இந்த உணர்வு உதிப்பது நிச்சயம்.
மலையாள எழுத்தாளர் திரு பென்யாமின் அவர்களின் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில்
நஜீப் கதாப்பாத்திரத்திற்கு ப்ரித்விராஜை தேர்வு செய்த இயக்குனர் திரு. ப்ளெஸி அவர்களுக்கு எனது முதல் பாராட்டு. ஏனெனில் மனுஷன் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் திரைப்படம் பார்ப்போருக்கு சொல்ல தோன்றும்.
திருமணமாகி இன்னும் சில மாதங்களில் அப்பாவாக இருக்கும் நஜீப் தனது மனைவி மற்றும் பிறக்க இருக்கும் குழந்தைக்கு வசதி வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென்று அங்கும் இங்கும் பணத்தை புரட்டி தங்கள் ஊர்க்காரர் ஒருவர் மூலம் ஒரு ஏஜெண்டிடம் கொடுத்து மனதில் பல கனவுகளுடன் சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். நஜீப்பின் பக்கத்து ஊர் பையன் ஹக்கீமும் இவருடன் சேர்ந்து பயணிக்கிறார்.
மலையாள மொழியைத் தவிர வேறெந்த மொழியும் தெரியாத நஜீப், அறைகுறை ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்த ஹக்கீம் ஆகிய இருவரும் சவுதி அரேபிய மண்ணில் கால் வைத்ததும் திரைப்படம் நம்மை பாலைவனத்திற்கு அழைத்து சென்று அங்கேயே நம்மை இரண்டரை மணிநேரம் கட்டிப்போட்டு விடும் கதைக்கு எனது இரண்டாவது பாராட்டு.
அந்நாடு நஜீப்பையும் ஹக்கீமையும் பிரித்து விட தவித்துப் போகிறார் நஜீப். ஓரே வேலைக்காக சவுதி சென்று இறங்கும் இவர்களை ஏன் பிரிக்கின்றனர்? யார் பிரிக்கிறார்கள்? எதற்காக? என்பதை படம் பார்த்து தெரிந்துக் கொள்வதே நன்று. மொழியும் தெரியாது தனித்து விடப்பட்ட நஜீப்பை சவுதி நாட்டை சேர்ந்த ஒருவர் ஓர் இடத்துக்கு அழைத்து செல்கிறார். அவ்விடத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நஜீப், தான் யாரென்றும் எதற்காக சவுதி வந்திருப்பதாகவும் மலையாளத்தில் விளக்க முயற்சிக்கிறார். ஆனால் அவையனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கின் சப்தம் போல் ஒலிக்க…விதி இது தான் என்று மதி சொன்னாலும் மனம் அதை கேட்காது அங்கிருந்து தப்பித்து செல்ல பல முயற்சிகளை மேற்கொள்ள வைக்கிறது. கடைசியில் அனைத்து முயற்சிகளும் மணலோடு மணலாக…விதி வென்றது. அந்த வாழ்க்கையை ஏற்க விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு வழியின்றி மெல்ல ஏற்க துவங்கும் நேரத்தில் ஹக்கீமை காண நேர்கிறது. அதிலிருந்து திரைப்படம் நம்மை ஒரு வகையான பதற்றத்திலேயே பயணிக்க வைக்கிறது.
பாலைவனத்தில் ஓர் சோலை வனம் போல் அவ்வப்போது சரியான தருணத்தில் வந்து மறையும் ஃப்ளாஷ்பேக் நஜீப்புக்கும் பார்வையாளர்களுக்கும் அழகான ஓர் காட்சி விருந்து எனலாம்.
தண்ணீரிலேயே வாழ்ந்த ஒருவர் தண்ணீரின்றி தவிக்கும் காட்சியமைப்புகளும் கதையின் ஓட்டமும் அருமை.
இறுதியில் நஜீப்பும் ஹக்கீமும் தாய்நாட்டுக்கு திரும்பி வருகிறார்களா? பாலைவனத்தில் இருந்து வெளியேறுகிறார்களா? என்பதை விறுவிறுப்பாக விவரிக்கும் ஆடுஜீவிதம் எந்த ஒரு மனிதனும் கடந்து வரக்கூடாத ஓர் ஜீவிதம். ஆனால் கட்டாயம் அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டிய ஓர் மனிதரின் மறக்க முடியாத ஜீவிதம்.
ஆடுகளும், ஒட்டகங்களும் காட்டும் அன்பிலும் பாசத்திலும் பாதியாவது மனிதர்களுக்கு இருக்குமேயானால் மனிதம் பிழைத்திருக்க வாய்ப்பிருக்கும் என்பதை உணர்த்தும் திரைப்படம். நல்லுள்ளம் கொண்டர்களும், சுயநலவாதிகளும், தீயகுணமுடையவர்களும் கலந்திருப்பது தான் நாடும் வீடும் என்பதை காட்சிகளின் மூலம் உணர வைத்துள்ளனர்.
பணம், பொருள், வசதி வாய்ப்பு இவைகளை வெளிநாடு சென்று ஏற்படுத்திக்கொண்டு ஓரிரு ஆண்டுகளில் ஊருக்கு திரும்பி விடலாம் என்று எண்ணி பயணிக்கும் விட்டில் பூச்சிகளுக்கான எச்சரிக்கை அறிவிப்பு இந்த படம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
நஜீப் என்ற மனிதர் கடந்து வந்த கடினமான பாதையை காட்சிகளாக்கி நம்மையும் அவருடன் பயணிக்க செய்துள்ளனர் படக்குழுவினர்.
ப்ரித்விராஜ் சுகுமாரன் அவர்களின் நடிப்பு திறமை இத்திரைப்படம் முழுவதும் ஜொலிக்கிறது.
இக்கதையில் அமலா பால் அவ்வப்போது வந்து மறையும் அழகிய மின்மினி பூச்சி.
நஜீப்பின் அம்மா, ஹக்கீம், ஹக்கீமின் நண்பனாக வரும் இப்ராஹிம் கத்ரி மற்றும் சவுதி அரேபியர்கள் கஃபீல், ஜசர் ஆக நடித்துள்ளவர்கள், சிறிது நேரம் வலம் வந்தாலும் பெரிய தாக்கத்தை உருவாக்கும் ஹிந்தி காரர் என்று அனைவரும் அவரவர் பாத்திரத்தை சிறப்பாக செய்து படத்தில் நம்மோடு பயணிக்கின்றனர்.
ஜாதி, மதம், அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம், பழிக்குப்பழி என்று ரசிகர்களின் ரசனையை மாற்ற முயற்சிக்கும் விதம் சில காலங்களாக ஒரே பாதையில் பயணித்து வரும் இத்திரையுலகில்… நிறைய நிறை மற்றும் சில குறை என்று இரண்டையும் ஏந்தி திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் வலம் வரும் ஓர் திருப்புமுனை “ஆடு ஜீவிதம்”. இது போலும் படம் எடுக்கலாம், இதையும் ரசிகர்கள் ரசிப்பார்கள் /ஆதரிப்பார்கள் என்பதற்கு ஓர் சிறந்த உதாரணம் இத்திரைப்படம்.
“ஆடுஜீவிதம் – பார்வையாளர்கள் மனதை ஆட்டி வைக்கும் ஓர் மனிதனின் ஜீவிதம்.”
-நா. பார்வதி