
ஒருத்தருக்கு உடம்பு சரியில்லாமல் போனது. அப்போது அவருடன் அதே அறையில் தங்கியிருந்த நபர் தானாகவே முன் வந்து டீ போட்டு கொடுக்கிறார். உடம்பு சரியில்லாத நபரும் அந்த டீயை வாங்கி குடித்து விட்டு தனது நன்றியை தெரிவித்து கொள்கிறார். அத்துடன் மனதார வாழ்த்தவும் செய்கிறார். இவை அனைத்தும் இவர்கள் இருவருக்குள் நடந்த விஷயம் மற்றும் அவர்கள் இருவர் மட்டுமே அறிந்த விஷயம்.
அந்த டீ போட்டு கொடுத்த நபர் அத்துடன் விட்டிருந்தால் அது உதவி செய்தவருக்கும் உதவி பெற்றவருக்கும் மனநிறைவை கொடுத்திருக்கும்.
ஆனால் உதவி செய்த நபரின் மன நிறைவு… அதை ஒரு நாலாயிரம் நபர்களிடம், இன்னாருக்கு உடல்நலம் சரியில்லாமல் போன காரணத்தினால்… அடுப்பு பத்த வைத்து ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அது கொதித்ததும் அதில் இஞ்சி, ஏலக்காய், டீத்தூள் சேர்த்து அவையனைத்தும் நன்றாக கொதித்ததும் அதில் பால் மற்றும் சக்கரை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி வடிகட்டி ஒரு டம்பளரில் ஊற்றி அவருக்கு சூடான டீ போட்டுக் கொடுத்தேன் என்று சொல்லி கொள்வதில் தான் இருக்கிறது. இது தான் இந்த நவநாகரீக யுகத்தின் பெருந்தன்மை மிகுந்த செயல்!
இவ்வாறான செயல் உதவி பெற்றவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் மேலும் உதவி புரிந்தவரின் உண்மையான மனநிலையை சமுதாயத்துக்கு எடுத்துக்காட்டும்.
நாம் செய்யும் உதவி மற்றவருக்கு உதவியாக இருக்க வேண்டுமே அன்றி உறுத்தலாக ஒரு போதும் இருந்துவிடக்கூடாது.
வேறு சிலர் தண்டோரா ஏதும் போடாது பல உதவிகளை செய்வார்கள் ஆனால் அவர்கள் உதவிய நபர் அவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென்று எண்ணுவார்கள். உதவி பெற்றவர் நன்றியுடன் இருக்கா விட்டால் அவ்வளவு தான் உதவி புரிந்தவரின் உண்மையான சுயரூபம் வெளிவரும். நான் அவ்வளவு செய்தேன் ஆனால் அவன் நன்றிக் கெட்டவன் என்றெல்லாம் தூற்றுவார்கள். புலம்புவார்கள். இதுவும் தவறே.
உன்னால் மட்டுமே இந்த நிலையை சரி செய்ய முடியும் அல்லது உன்னால் மட்டுமே இன்னாருக்கு உதவ முடியும் என்று நம்மை இயக்குபவர் நம்மை படைத்த அந்த பகவான். நம்மை உதவும் நிலையில்/உதவி பெறும் நிலையில் வைத்திருப்பதும் அவர் தான். அவர் தான் நம்மில் சிலரை உதவி செய்ய வைக்கிறார். அவ்வளவே! என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்தோமேயானால் நம்முள் இது போன்ற குணங்கள் ஒரு போதும் தலைதூக்காது.
வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்று நம் முன்னோர் சொன்னதில் இருக்கும் தத்துவம் இந்த சமூக ஊடக காலத்தில் மூழ்கி இருப்பவர்களுக்கு புரியுமா? இல்லை புரிந்தும் புரியாதது போல் இதெல்லாம் “சகஜமப்பான்னு” இருக்கிறார்களா!
“உதவி” ஓர் உன்னதமான சொல் மற்றும் செயல்.
ஊடகங்களால் “உதவி”கே உதவி தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது என்று தான் சொல்ல தோன்றுகிறது.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
உண்மை, நீதி, நெறி, அறம் மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே..
“கடவுள்” இருக்கிறான் மறந்திடாதே.