
படத்தின் தலைப்பை படித்ததும் ஏதோ ஒரு பக்திப் படமா இருக்குமோ என்று நினைத்துவிட வேண்டாம். இது முழுக்க முழுக்க நகைச்சுவையில் நம்மை மூழ்க செய்து வாய் விட்டு சிரிக்க வைக்கும் நல்ல திரைப்படம்.
பல த்ரில்லர், சஸ்பென்ஸ், சீரியஸ் மற்றும் ஆக்ஷன் படங்களில் பார்த்த ப்ரித்விராஜை இந்த படத்தில் அப்படியே ஒளித்து வைத்து அவரின் நகைச்சுவை நடிப்பு பக்கத்தை வெளிச்சமிட்டு காட்டியுள்ளனர்.
முன் கோபியான கதாநாயகன் அனந்தன் (ப்ரித்விராஜ்) தன் மனைவி மற்றும் மகனை பிரிந்து தனித்து வாழ்ந்து வருகிறார் . அவர் பெற்றோர் அவரின் தங்கைக்கு திருமண ஏற்பாடுகளை செய்கின்றனர். துபாயில் பணிபுரியும் மாப்பிள்ளை விணுவுக்கும் (பாசில் ஜோசப்) மைத்துனர் அனந்தனுக்கும் இருக்கும் நட்பு மிக நெருக்கமானது! ஏனெனில் விணுவை அவனின் காதல் தோல்வியில் இருந்து வெளி கொண்டு வந்தவர் ஆனந்தன் ஆவார். அதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட பாசப் பிணைப்பு படிக்கட்டு போல் அவர்களை அந்த பந்தத்தில் உயர் நிலைக்கு கொண்டு செல்கிறது. அதை அடுக்கடுக்கான நகைச்சுவை காட்சிகளாலும் வசனங்களாலும் நம்மை சிரிக்க வைத்தே புரிந்துக் கொள்ள வைத்துள்ளனர்.
மேலும் தனக்கு உதவிய அனந்தனுக்கு தானும் ஏதாவது உதவி புரிய வேண்டுமென்று எண்ணிய விணு துபாயில் இருந்து கொண்டே அனந்தனிடம் பேசி பேசியே பிரிந்திருந்த கணவன் மனைவியை சேர்த்து வைக்கிறான். அதிலும் காமெடியை தெரிக்க விட்டிருக்கின்றனர். அதை தொடர்ந்து வரும் காட்சியில் ப்ரித்விராஜ் ஒரு நொடி மோகன்லாலை போல் பேசி நடித்திருப்பது அபாரம். இறுதி காட்சியில் குருவாயூரப்பன் டச் அற்புதம்.
திருமணத்திற்காக துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்து இறங்கும் விணு தன் முன்னாள் காதலியை தான் துளியும் நினைத்துப் பார்க்காத ஓர் இடத்தில், தருணத்தில் சந்திக்கிறான். எங்கே? ஏன்? எப்படி? அவன் திருமணம் நிச்சயித்த படி குருவாயூர் அம்பலநடையில் நடைபெறுகிறதா? அவர்கள் காதல் ஏன் முறிந்தது? முதல் பாதியில் ஹீரோவாக வலம் வரும் ப்ரித்விராஜ் இரண்டாம் பாதியில் தலைகீழாக மாறுவது ஏன்? எதற்காக? போன்ற கேள்விகளுக்கான விடையை பல முன்னணி நடிகர் பட்டாளத்தை கொண்டு மிக அழகாக கோர்க்கப்பட்ட நகைச்சுவை கதையை, அற்புதமான காட்சி அமைப்பில், மிக நேர்த்தியான மாலையாக்கி…குருவாயூர் அம்பலநடையில் மாலை சாற்றினான் விணு மாலை மாற்றினான் என்று பாட வைத்து இருக்கிறார்களா இல்லையா? என்பதை
திரைப்படம் பார்த்து,
வயிறு குலுங்க சிரித்து,
மகிழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.
“குருவாயூர் அம்பலநடையில்” – குதூகலம், கும்மாளம், கொண்டாட்டம்.
-நா. பார்வதி