
அமேசான் பிரைமில் ஏதாவது நல்ல படம் இருந்தால் பார்க்கலாமே என்று ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்ததில் “ரோஜர் பெடரர் – டுவல் பைனல் டேஸ்” என்ற ஆவணப்படம் ஒன்றின் போஸ்டரை பார்த்தேன். அட நம்ம ரோஜர் படத்தில் நடித்து இருக்கிறாரா! என்ற எண்ணம் தோன்றவே அந்த போஸ்டரை க்ளிக் செய்து அந்த ஆவணப்படம் எதைப்பற்றியது என்ற synopsis என்று சொல்லக்கூடிய ஆய்வு சுருக்கத்தை படித்துப் பார்த்தேன். பிடித்துப் போகவே அதை பார்க்கத் தொடங்கினேன். நான் பார்த்தது எனது பார்வையில்…இதோ உங்களுக்காக…
டென்னிஸ் கோர்ட்டில் ball boy என்றழைக்கப்படும் சிறுவனாக பந்துகளை எடுத்துக் போட்டுக் கொண்டிருந்த ரோஜர் பெடரர் ஜூனியர் சேம்பியன்ஷிப்பில் ஆரம்பித்து பின்னாளில் பெரிய டென்னிஸ் வீரராக உலகையே கலக்கி பல உள்ளங்களை வென்றவர், டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டனில் லேவர் கோப்பைக்கான போட்டியின் போது உலகிற்கு அறிவித்தார். அத்தகைய ஓர் அறிவிப்புக்கு பன்னிரண்டு நாட்கள் முன் அவரின், அவர் குடும்பத்தினரின் மற்றும் நண்பர்களின் உணர்ச்சி பிரவாகம் தான் இந்த 127 நிமிட ஆவணப்படம், “ரோஜர் பெடரர் – டுவல் பைனல் டேஸ்”
ஒரு விளையாட்டு, தொழில், பயிற்சி இப்படி எதுவாக இருந்தாலும் அதில் தனது முழு கவனம், ஆற்றல், மூச்சுப் பேச்சு, ஊண்உறக்கம் என்றனைத்தையும் அதற்காகவே தியாகம் செய்து அதையே தனதாக்கிக் கொண்டு வாழ்ந்தவர் ஓர் நாள் அதிலிருந்து விலக வேண்டி வரும்போது… அந்த நபருக்குள் ஏற்படும் உணர்வலைகளின் தொகுப்பு இந்த ஆவணப்படம் எனலாம்.
இந்த படத்தை பார்த்தால் ரோஜர் சிறந்த விளையாட்டு வீரர் மட்டுமல்ல நல்ல சிறந்த மனிதர் என்பதும் அறியாத பலரும் அறிவர்.
பிஜார்ன் போர்க், மெக்கன்ரோ, ரஃபேல் நடால், முரே, ஜோவிக், என்று பல டென்னிஸ் ஜாம்பவான்கள் இப்படத்தில் அவரவர்களின் நினைவலைகளை மிக அழகாக பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.
டாக்ஷிடோவுடன் போட வேண்டிய சட்டையை ரோஜர் சூட்டுடன் அணிந்து வருவதை பிஜார்ன் சுட்டிக்காட்ட, ரோஜர் உடனே சென்று சட்டையை மாற்றுவது போன்ற காட்சிகள் மிக எதார்த்தமாக காட்சியாக்கப்பட்டுள்ளது.
நடால் மற்றும் ரோஜர் என்ற இரு வீரர்கள், நட்பு வேறு விளையாட்டு வேறு என்ற வேறுபாட்டை உலகிற்கு எடுத்துரைத்த தோடு… விளையாட்டில் எதிராளியாக இருந்தாலும் சிறந்த நண்பர்களாகவும் இருக்க முடியும் என்பதை நிரூபித்து, அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியுள்ளனர். வாழ்ந்தும் வருகின்றனர்.
பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கையிலும், அவர்கள் இருவருமாக இணைந்து ஆடிய இறுதி ஆட்டமான லேவர் கோப்பை விளையாட்டு முடிந்தவுடனும் நடால் அழுகிறார். இருவரும் நட்புக்கு சிறந்த இலக்கணம் ஆவர்.
அவர் ஏன் டென்னிஸ் விளையாட்டை விட்டு வெளியேறினார் என்பது நாம் பத்திரிகைகளில் படித்து தெரிந்துக் கொண்டவை தான் ஆனால் அத்தகைய ஒரு முடிவை எடுப்பதற்கும், அதை கடந்து வருவதற்கும். மீண்டும் விளையாட அவர் எடுத்த முயற்சிகளையும். அதற்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினரையும், நண்பர்களையும் பற்றிய விரிவான மற்றும் சுவாரஸ்யமான படைப்பு தான் இந்த படம்.
ஆவணப்படம் என்று புறக்கணிகாது அனைவரும் காண வேண்டிய படம். ஏனெனில் அவ்வளவு அழகாக ரோஜரின் எண்ண ஓட்டங்களையும், அவரின் ஆரம்ப காலம் முதல் 2022 வரையிலான பல மேட்சுகளின் காட்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளனர். அவ்வாறு வழங்கிய விதம் பாராட்டுக்குரியதாகும்.
டென்னிஸ் என்றால் ரோஜர் பெடரர் என்றிருந்த உலகிற்கு இனி நான் இல்லை என்று கூறுவதற்கு அவர் எத்தனை நாட்கள் யோசித்து இருப்பார் என்பதை இந்த படம் பார்க்கும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் நிச்சயம் தோன்றும். அப்படி தோன்றிய சில மணித்துளிகளில் அவரின் அந்த செய்தியை அவர் வாசிக்க நாம் கேட்கும் போது நம் கண்களின் ஓரத்தில் கண்ணீர் உருண்டோடுவதை நம்மால் தவிர்க்க முடியாது.
இந்த படத்தில் ஒரு வரி வரும் “sportsman dies twice” அதாவது விளையாட்டு வீரர்களுக்கு இறப்பு என்பது இருமுறை வரக்கூடிய ஒன்று என்று. என்னைப் பொறுத்தவரை தான் விரும்பி ஏற்றுக்கொண்டு பயணிக்கும் எந்த துறையினருக்கும் இந்த வாசகம் பொருந்தும்.
ரோஜர் பெடரர் – டுவல் பைனல் டேஸ் – விளையாட்டில் இருந்து
விடை பெறுதல் விளையாடும்
விஷயமல்ல.
-நா. பார்வதி